Part 48

பாகம் 48

ஹீனா யாருடன் அழுதுகொண்டு பேசுகிறாள் என்று தெரிந்துகொள்ள, தூணின் பின்னால் மறைந்து நின்றாள் இந்து.

"ஏன் என் ஃபோனை எடுக்க மாட்டேங்குறீங்க?"

"...."

"பொய் சொல்லதீங்க... நீங்க வேணுமுன்னே என்னை அவாய்ட் பண்றிங்க..."

"...."

"இப்போ, நான் லேண்ட் லைனில் இருந்து பேசுறதால தான் நீங்க பேசுனீங்க..."

"...."

"உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னா சொல்லிடுங்க. நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன். ஆனா உங்களுக்கு என்னை பிடிக்கும். அது எனக்கு தெரியும் "

"....."

"என்னோட எதிர்காலத்தை நான் யாரோட கழிக்க போறேன்னு எப்பவுமே நான் நினைச்சி பார்த்ததே இல்ல. ஏன்னா, நான் யாரையும் நம்ப தயாரா இல்ல. ஆனா, நீங்க என் அண்ணனை மாதிரியே இருக்கீங்க. அதனால தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என்னை புரிஞ்சுக்கங்க..."

"...."

"நான் உங்களை கட்டாயப்படுத்துறதனால என்னை நீங்க ரொம்ப சீப்பா நிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்... "

"...."

"வேற எப்படி நான் நினைக்கிறது?"

"....."

"சரி, நான் ஃபோனை வைக்கிறேன். இனிமே நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்" அவள் அழைப்பை துண்டித்தாள்.

இந்துவுக்கு ஆச்சரியமாய் போனது. அவள் பேசிக்கொண்டிருந்தது ஒரு ஆண் மகனிடம் என்பது தெளிவு. அவள் அவனை விரும்புகிறாள் என்பது தெள்ளத் தெளிவு. யார் அவன்? அவன் அர்ஜுனை போல் போல் இருப்பதாக கூறுகிறாளே... அப்படிப்பட்டவன் யார்?

கார்டு லெஸ் ஃபோனை வைத்து விட்டு, தன் அறைக்கு சென்று விட்டாள் ஹீனா. அவள் வெளியே வரமாட்டாள் என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, அந்த ஃபோனை எடுத்து ரீடயல் செய்தாள் இந்து. ஆனால், மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படவில்லை. ஒருவேளை, அவன் ஹீனா தான் அவனுக்கு மறுபடியும் ஃபோன் செய்வதாக நினைத்து அழைப்பை ஏற்காமல் இருக்கிறான் போலிருக்கிறது. அந்த ஃபோன், காலர் ஐடியுடன் இருந்ததால், மீண்டும் ரீ டயல் செய்து, அந்த எண்ணை ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொண்டாள் இந்து. ஏதாவது ஒரு கைபேசி கிடைத்தால் அதன் மூலம் ஃபோன் செய்து அவன் யார் என்பதை தெரிந்துகொள்ள நினைத்தாள்.

ஹீனா மிகவும் தொய்வாக காணப்பட்டாள். அன்று முழுவதும் அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. இதை எப்படிக் கையாள்வது என்பது புரியவில்லை இந்துவுக்கு. அவள் காதலை அவன் ஏற்கவில்லை போல் தெரிகிறது. ஆனால் ஏன்? யார் அவன்? அர்ஜுனுக்கு மைத்துனன் ஆகும் விருப்பமில்லாமல் கூட யாராவது இருப்பார்களா? ஏன் அவன் இப்படி செய்கிறான்? ஹீனாவை ஏற்றுக் கொள்வதில் அவனுக்கு என்ன பிரச்சனை? ஒருவேளை, அவன் ஹீனாவை மாஷாவுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கிறானோ? இந்து பதட்டமானாள். ஹீனா நல்ல பெண் ஆயிற்றே... அவள் ஏமாற்றம் அடையக்கூடாது என்று நினைத்தாள் இந்து.

இந்த விஷயத்தை அவள் அர்ஜுனிடம் எடுத்து செல்ல வேண்டுமா? அவன் என்ன கூறுவான்? தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதைப் போல், அவனையும் அர்ஜுன் தரதரவென இழுத்து வந்து, ஹீனாவை திருமணம் செய்து கொள்ளச் சொன்னால் என்ன செய்வது? என்று யோசித்தாள் இந்து. அவன் அர்ஜுன் ஆயிற்றே... செய்தாலும் செய்வான். அர்ஜுனை யாரும் முன் மதிப்பீடு செய்யவே முடியாது. அவன் எப்பொழுது, எப்படி திரும்புவான் என்று கூற முடியாது. தான் துண்டு சீட்டில் எழுதி வைத்த எண்ணை மீண்டும் ஒரு முறை பார்த்தாள் இந்து.

மாலை

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினான் அர்ஜுன். அணிந்திருந்த கோட்டை வீசி எறிந்து விட்டு சோபாவில் சாய்ந்தான்.

"டயர்டா இருக்கீங்களா அஜ்ஜு?" என்றாள் இந்து.

அவள் தன்னை அழித்த விதத்தை கேட்டு புன்னகை புரிந்தான்.

"கொஞ்சம் டயர்டா தான் இருக்கேன். பிரஷ்-இன் பண்ணா சரியாயிடும்"

அவள் சரி என்று தலையசைக்க, அர்ஜுன் குளியலறை நோக்கி சென்றான். அப்போது, அவன் மேஜை மீது வைத்திருந்த அவனுடைய கைபேசியின் மீது இந்துவின் பார்வை சென்றது. ஓடிச் சென்று அவனுடைய கைப்பேசியை எடுத்து, அவள் எழுதி வைத்திருந்த எண்ணை டயல் செய்தாள். அவள் அனைத்து எண்களையும் அழுத்தி முடிக்க, அர்ஜுனின் கைபேசியின் திரையில் ஒளிர்ந்த பெயர், அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. நம்ப முடியாமல் கைபேசியை காதுக்கு கொடுத்தாள்.

"சொல்லு, அர்ஜுன்" என்றான் கிரி.

கிரியின் குரல் கேட்டு அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, அதிகரித்தது.

"அர்ஜுன்... ஆர் யூ தேர்?"

என்ன பேசுவது என்று புரியாமல் அழைப்பை துண்டித்தாள் இந்து. அப்படி என்றால், ஹீனா விரும்புவது கிரியை தானா? ஆனால், அவன் ஏன் அவள் காதலை ஏற்கவில்லை? அவன் அவளைத் தவிர்ப்பதற்கு நிச்சயம் அவளுடைய அம்மா காரணமல்ல. கிரி அப்படிப்பட்டவன் அல்ல. அப்படி இருக்கும் பொழுது, எது அவனை தடுக்கிறது.

குளியல் அறையின் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு, கைபேசியை எடுத்த இடத்திலேயே திரும்ப வைத்தாள் இந்து.

"உங்களுக்கு காபி கொண்டு வரவா?" என்றாள்.

"அப்புறமா குடிக்கிறேன்..."

அவள் அங்கிருந்து செல்ல நினைத்தபோது,

"எங்க போற?" என்றான்.

"அப்பா காபி குடிச்சாரான்னு இல்லயான்னு பாக்க போறேன்..."

"உன்கிட்ட நான் காப்பி வேண்டாம்ன்னு சொன்னது, நீ இங்க இருந்து போக கூடாதுன்னு தான் "

அவனை அதிசயமாய் பார்த்தாள் இந்து.

"வேலன் அண்ணனை கொண்டு வர சொல்லட்டுமா?"

"என்ன உனக்கு அவசரம்?"

"ஒன்னும் இல்லங்க..."

"என் கூட உட்காரு " அவளைத் தன் அருகில் இழுத்தான்.

"சொல்லுங்க"

"என்னது?"

"உங்க கூட உட்கார சொன்னீங்களே..."

"ஏதாவது பேசணும்னா தான் நீ என் கூட உட்காருவியா?"

"இல்லங்க, அப்படி இல்ல"

"நீ, உன் பையனுக்காக என்கிட்ட சண்டை போடுவியோன்னு எனக்கு பயமா இருக்கு..." என்றான் ஆழ்ந்த பார்வையுடன்.

"அடக்கடவுளே... இன்னும் நீங்க அதையே பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கீங்களா? தயவுசெய்து அதை விட்டுடுங்க..."

"நீ என்கிட்ட சண்டை போட மாட்ட இல்ல...?"

"போட மாட்டேங்க..."

"நீ அப்போ என்னை கூப்பிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அப்படியே கூப்பிடு..."

"எப்படி? என்னங்கன்னா?"

"இல்ல... அஜ்ஜுன்னு..."

"சரிங்க அஜ்ஜு..."

அழகாய் புன்னகைத்தான் அர்ஜுன்.

"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"

"பேசு... நான் கேக்குறேன்..."

"நீங்க கிரி அண்ணனை பத்தி என்ன நினைக்கிறீங்க?"

தன் புருவத்தை உயர்த்தினான் அர்ஜுன்.

"என்ன விஷயம்? திடீர்னு நீ கிரியை பத்தி பேசுற?"

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க"

"சிம்பிளா சொல்லணும்னா, என் வாழ்க்கையில, உனக்கு அடுத்த இடத்துல அவன் தான் இருக்கான்"

"ஏன்?"

"ரொம்ப நேர்மையானவன். எனக்கு பிடிக்காததை செய்ய, நினைக்கக் கூட மாட்டான். நான் அவனுக்கு எல்லா அதிகாரத்தையும் கொடுத்தாலும் கூட, அதை தவறான வழியில யூஸ் பண்ணவே மாட்டான். ரொம்ப கிரேட்"

"உங்களை சந்தோஷப்படுத்த அவர் எல்லாம் செய்வார் தானே?"

"சந்தேகமில்லாம..."

"அவருக்கு, நீங்க ( அந்த வார்த்தையை அழுத்தினாள்) பதிலுக்கு என்ன செஞ்சிருக்கீங்க?"

அதைக் கேட்டு வாயடைத்துப் போனான் அர்ஜுன். ஆம்... அவன் கிரிக்காக என்ன செய்திருக்கிறான்? ஒன்றுமே இல்லை.

"அவருக்கு ஏதாவது செய்யணும்னு உங்களுக்கு தோணலையா?"

"நான் தெரிஞ்சுக்க வேண்டியது ஏதாவது இருக்கா?"

"ஆமாம்... இருக்கு..."

அவள், ஹீனா பேசி கேட்ட அனைத்து விஷயத்தையும் கூறினாள்.

"அவ பேசின நம்பரை நான் எழுதி வச்சிருக்கேன். இது தான் அந்த நம்பர்" என்று அந்த சீட்டை அர்ஜுனிடம் நீட்டினாள்.

அந்த எண்ணை பார்த்தவுடன் அர்ஜுனின் விழிகள் விரிந்தன. அவனுக்குத் தான் கிரியின் எண் மனப்பாடம் ஆயிற்றே.

"உங்க ஃபோன்ல இருந்து நான் இந்த நம்பருக்கு ஃபோன் செஞ்சேன். அப்போ தான், அது வேற யாரும் இல்ல, கிரி அண்ணா தான்னு தெரிஞ்சுக்கிட்டேன். ஹீனா ரொம்ப நல்ல பொண்ணு. அவளுக்கு நம்மளை விட்டா வேற யாரும் இல்ல. அவ உங்களை மாதிரி ஒரு நேர்மையான பார்ட்னர் வேணும்னு நினைக்கிறா. கிரியண்ணா மாதிரி ஒருத்தரை நம்ம தேடி கண்டுபிடிக்கவே முடியாது"

"நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். இது அவங்க பர்சனல் விஷயம். கிரியோட வாழ்க்கையில என்னால தலையிட முடியாது. அவன் ஆசைப்பட்டது எதுவா இருந்தாலும் என்னால அவனுக்கு கொடுக்க முடியும். ஆனா, அவனுக்கு விருப்பம் இல்லனா, என்னால அவனை கட்டாயப்படுத்த முடியாது. அவனுக்கு ஹீனாவை பிடிக்கலன்னா, நம்ம எப்படி அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்ல முடியும்? கட்டாயப்படுத்தி யாரையும் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது" என்று அவன் சீரியசாக கூற, அவனை விசித்திரமாய் பார்த்தாள் இந்து.

அவள் பார்வையை புரிந்து கொண்டு,

"நம்ம கதை வேற... நீ அதைக் கொண்டு வந்து இதுல சேர்க்காத..." என்றான்.

முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள் இந்து.

"கிரியோட மனசுல என்ன இருக்குன்னு தெரியல. அவன் வேற யாரையாவது விரும்பினா என்ன செய்றது?"

பதட்டத்துடன் நகம் கடித்தாள் இந்து.

"நிச்சயம் கிரிக்கு தான் நான் சப்போர்ட் பண்ணுவேன். ஹீனாவோட சந்தோஷத்துக்காக பிடிக்காத ஒரு வாழ்க்கையில என்னால அவனை பிடிச்சு தள்ள முடியாது"

அர்ஜுன் கூறுவது சரி தான். கிரி வேறு யாரையாவது விரும்ப வாய்ப்பிருக்கிறது.

"பாவம், ஹீனா"

"நீ அதை விடு. போய் எனக்கு ஒரு காபி கொண்டு வா. நிச்சயம் எனக்கு இப்போ அது வேணும்" என்றான்.

அங்கிருந்து சமையலறை சென்றாள் இந்து. தீவிரமாய் யோசித்த அர்ஜுன் தனது கைபேசியை எடுத்து, கிரிக்கு ஃபோன் செய்தான்.

"சொல்லு, அர்ஜுன்"

"கிரி, நம்மளோட அடுத்த டீலுக்கான ஃபைலை நான் என் டேபில்லயே வச்சுட்டு வந்துட்டேன். கொஞ்சம் எடுத்துகிட்டு வந்து கொடுக்கிறியா?"

"ஆனா, நம்ம நாளைக்கு சாயங்காலம் தானே அதை பத்தி பேசுறதா சொல்லியிருந்தோம்..." என்றான் தயக்கத்துடன்.

"ஆமாம். அதனால தான் இப்ப கொண்டு வர சொல்றேன். ஃப்ரீயா இருக்கும் போது, பார்த்து வெச்சுக்கலாம்னு நினைக்கிறேன். உனக்கு ஏதாவது முக்கியமான வேலை இருந்தா, பரவாயில்ல. விடு, நான் வந்து எடுத்துகிட்டு வரேன்"

"இல்ல, அர்ஜுன். அதுக்காக நீ வர வேண்டாம். நான் இன்னும் ஆஃபீஸ்ல தான் இருக்கேன். நான் கொண்டு வந்து தரேன்"

"ஆர் யூ ஷ்யூர்?"

"எஸ்"

அர்ஜுன் அழைப்பைத் துண்டிக்க நினைக்க,

"ஒரு நிமிஷம் அர்ஜுன்..."

"சொல்லு, கிரி"

"உன்னோட நம்பர்ல இருந்து, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு பிளாங்க் கால் வந்தது. அது நீ தானா?"

அதை கேட்டு புன்னகைத்தான் அர்ஜுன்.

"ஆமாம்... தவறுதலா டயல் பண்ணிட்டேன்" என்று பொய் உரைத்தான்

"ஓ... ஓகே... நான் பைலை எடுத்துகிட்டு வரேன்"

"ஓகே" அவன் அழைப்பை துண்டித்தான்.

வழக்கத்திற்கு மாறாக, கிரியின் குரலில் இருந்த தயக்கத்தை உணர்ந்தான் அர்ஜுன். உண்மையிலேயே அவன் வேறு யாரையாவது காதலிக்கிறானா? எப்படி, இவ்வளவு நாள் கிரியை பற்றி யோசிக்காமல் போனோம் என்று நினைத்தான் அர்ஜுன். இந்து சொல்வது சரி. அர்ஜுன், லண்டனில் இருந்த காலம் தொட்டே அவனுடன் இருந்து வருகிறான் கிரி. அர்ஜுன் செய்வது, சரியோ, தவறோ, எதுவாயினும்  அவனுடன் இருந்திருக்கிறான். அவன் தனக்கென்று எதுவுமே கேட்டதில்லை. ஹீனாவை விட, கிரி தான் அர்ஜுனுக்கு முக்கியம். அவனுக்கு ஹீனாவை பிடிக்கவில்லை என்றால், அவனை நிச்சயம் வற்புறுத்தப் போவதில்லை அர்ஜுன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top