Part 47

பாகம் 47

மறுநாள்

தனது வங்கிக் கணக்கில் ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் ரம்யா. சிறிதும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கிரிக்கு ஃபோன் செய்தாள்.

"சொல்லு ரம்யா"

"என்னோட அக்கவுண்டுக்கு ஒரு கோடி ரூபா வந்திருக்கு"

"வந்துடுச்சா? ஓகே..."

"ஒரு கோடி ரூபா பா..."

"ஆமாம், அர்ஜுன் தான் போட சொன்னான்"

"இது ரொம்ப அதிகம், கிரி"

"நீ எங்களுக்காக செஞ்ச உதவிக்கு இது ரொம்ப கம்மி" என்ற அர்ஜுனின் குரல் கேட்டு பின்னால் திரும்பினாள் ரம்யா.

இந்துவுடன் நின்றிருந்தான் அர்ஜுன்.

"என் டியுட்டியை தானே நான் செஞ்சேன்..."

"நீ செஞ்சது வெறும் டியூட்டி மட்டும் இல்ல... அதுக்கும் மேல நிறைய செஞ்சிருக்க"

"என் ஃபிரண்ட்ஸ்க்கு நான் செய்வேன் தானே...?"

"என் ஃபிரெண்டோட லைஃப் நல்லா இருக்கணும்னு தான் நானும் நினைப்பேன்" என்றான் அர்ஜுன்.

"ரம்யா, உன்னால இவர்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. அதனால வாங்கிக்கோ"

"இல்ல, இந்து..."

"நீ மட்டும் சரியான நேரத்துல எங்களுக்கு ஹெல்ப் பண்ணலன்னா, இந்த நேரம் நான் என்ன ஆகியிருப்பேன்னு எனக்கு தெரியல. எங்க திருப்திக்காக இதை ஏத்துக்கோ" என்றாள் இந்து.

சரி என்று தலையசைத்தாள் ரம்யா.

"இது மட்டும் இல்ல. நீ எது வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் என்னை கேட்கலாம்" என்றான் அர்ஜுன் ஸ்னேகத்துடன்.

"ரொம்ப தேங்க்ஸ். நான் பாண்டிச்சேரி போய் ரேவதியை விட்டுட்டு வரேன்"

"சரி "

"ரேவதியோட அம்மாவை நான் கேட்டேன்னு சொல்லு" என்றாள் இந்து.

"கண்டிப்பா சொல்றேன்"

ரேவதி தனது பைகளுடன் வந்தாள். அவளுக்கு நிறைய பரிசுப் பொருட்களை கொடுத்து அனுப்பினாள் இந்து.

மூன்று மாதங்களுக்குப் பிறகு

சங்கருக்காக வாதாட ஒரு நல்ல கிரிமினல் வக்கீலை நியமித்து இருந்தான் அர்ஜுன். வழக்கு முடியும் வரை, அவர் பெயிலில் இருக்க அனுமதி பெற்றிருந்தார்கள். அவர் அர்ஜுனுடனும் இந்துவுடனும் தான் இருந்தார். அர்ஜுனிடம் மன்றாடி, இந்து தான் அதைச் செய்திருந்தாள். தனக்கு தண்டனை கிடைக்கப் போகும் கவலை இல்லாமல், அவர்களுடன் சந்தோஷமாக இருந்தார் சங்கர்.

இந்துவிடம் சீதாவின் சாயலை கண்டார் சங்கர். அதே எளிமை... அதே மரியாதை... அதே அன்பு... அனைத்தும் அவருக்கு சீதாவை நினைவூட்டியது. அர்ஜுன், இந்துவின் மீது அளவில்லா அன்பு வைத்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவன் சீதாவின் மீதும் அப்படித் தான் அளவில்லா அன்பு வைத்திருந்தான். அப்படி இருக்க, அவன் எப்படி இந்துவிடம் அன்பு வைக்காமல் போவான்?

சங்கருக்கும் ஹீனாவுக்கும் காலை உணவை பரிமாறினாள் இந்து.

"நீங்க ரொம்ப நல்லா சமைக்கிறீங்க, அண்ணி" என்றாள் ஹீனா.

"இந்த மாதிரி நல்ல சாப்பாடு சாப்பிட்டு பதினைந்து வருஷம் ஆச்சு" என்றார் சங்கர்.

அவர் யாருடைய சாப்பாட்டை,  பற்றிப் பேசுகிறார் என்பது அவர்கள் இருவருக்கும் புரிந்தது.

"நிஜமாவா பா? அம்மா கூட அண்ணி மாதிரி நல்லா சமைப்பாங்களா?"

"ஆமாம். அருமையா சமைப்பா. அவளோட எண்ணம் எல்லாம், தன் மகனையும் புருஷனையும் சந்தோஷமா வச்சுக்கணும்... அவ்வளவு தான். எப்பவும் எங்களை பத்தி தான் நினைச்சிகிட்டே இருப்பா. அவ கடவுள் மாதிரி. நான் அவளை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். அதனால தான்,  நரகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கேன். கடவுள் நமக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்து ஆசீர்வதிக்கிறார். ஆனா, என்னை மாதிரி முட்டாள் மனுஷங்க அதை புரிஞ்சுக்காம கெடுத்துக்குறோம்..." அவர் கண்கள் குளமாயின.

இந்து, ஹீனாவை பார்த்து சைகை செய்தாள்.

"அப்பா, அண்ணனை பத்தி சொல்லுங்களேன்... "

அதை கேட்டவுடன், இந்துவும் ஆர்வமானாள். சங்கரும் கூட புன்னகை புரிந்தார். அவரும் சீதாவும் அர்ஜுனை பற்றி ஓயாமல் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

"அவன் பண்ண சேட்டை எல்லாம் சொன்னா, நீங்க நம்பவே மாட்டீங்க. அவ்வளவு சேட்டை செய்வான்..."

"நெஜமாவா சொல்றீங்க? அண்ணனா சேட்டை செய்வாரு?" என்றாள் நம்ப முடியாமல்.

"இப்ப அவனை பாத்துட்டு ஏமாந்துடாதீங்க... அதெல்லாம் எங்க வாழ்க்கையோட அழகான நாட்கள். எவ்வளவு சேட்டை செய்றானோ, அவ்வளவு பொஸஸிவ்வும் கூட. ஒரு நிமிஷம் கூட அமைதியா உட்காரவே மாட்டான். ஆனா அவங்க அம்மா ஏதாவது சொல்லிட்டா மட்டும், மூஞ்சிய தொங்க போட்டுக்கிட்டு, அதே இடத்தில உம்முனு உட்கார்ந்து இருப்பான்"

அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.

"எனக்கு சக்கரை வியாதி இருக்கிறதால, வேணுமின்னே என் முன்னால வந்து ஸ்வீட் சாப்பிட்டு என்னை வெறுப்பேத்துவான். சில சமையம் அவன்கிட்டயிருந்து நான் பிடுங்கி சாப்பிடுவேன். மெதுவா போயி அவங்க அம்மாகிட்ட போட்டு கொடுத்துடுவான். அவ்வளவு தான், என்னை பிடி பிடின்னு பிடிச்சிடுவா சீதா. நாங்க ரெண்டு பேரும் எப்பவுமே சண்டை போட்டுக்கிட்டு தான் இருப்போம். எங்களுக்கு மத்தியஸ்தம் பண்றது தான் சீதாவுக்கு வேலையே. என்னை சீண்டலன்னா அவனக்கு தூக்கமே வராது... எங்க வீடு கலகலன்னு இருக்கும்... அவ்வளவு சேட்டை செய்வான்..."

சிரித்துக் கொண்டிருந்த அவர்கள் மூவரும், அர்ஜுன் கீழே இறங்கி வருவதைப் பார்த்து தங்கள் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் சட்டென்று அமைதியானதை வினோதமாய் பார்த்தான் அர்ஜுன். அவன் இந்துவை பார்க்க, அவள் தன் உதடை கடித்து சிரிப்பை அடக்கியபடி உணவு பரிமாறினாள்.

அர்ஜுன் வந்த பின் அங்கு அமைதி நிலவியது. அதை கவனித்தான் அர்ஜுன். சற்று நேரத்திற்கு முன்பு அவர்கள் சிரித்துக் கொண்டே இருந்தது அவனுக்கு கேட்டுக்கொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்தான்.

"இந்து, என்னுடைய ஃபோன் சார்ஜர் எங்க?"

"நம்ம ரூம்ல தாங்க இருந்தது"

"தேடிப் பார்த்துட்டேன்... இல்ல..."

"போய் எடுத்து கொடும்மா" என்றார் சங்கர்.

சரி என்று தலையசைத்துவிட்டு அவர்களுடைய அறைக்கு சென்றாள் இந்து. அங்கு அர்ஜுனுடைய ஃபோன், சார்ஜில் போடப்பட்டு  இருந்தது. அவள் அவனை புரியாமல் பார்க்க, அவன் கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

"எதுக்கு பொய் சொல்லி என்னை கூட்டிக்கிட்டு வந்தீங்க?"

"டைனிங் ஹாலில் என்ன புகைஞ்சிகிட்டிருந்துது?"

வேண்டுமென்றே தன் வாயை கையால் மூடி சிரிப்பை அடக்கினாள் இந்து.

"ஏன் சிரிக்குற?"

"நீங்க என்னென்ன வேலை எல்லாம் செஞ்சிங்கன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு"

"என்ன வேலை?"

"நீங்க செஞ்ச சேட்டை எல்லாத்தையும் அப்பா சொல்லிட்டாரு..."

"என்னது...? எல்லாத்தையும் சொல்லிட்டாரா...?" என்றான் அதிர்ச்சியாக.

"ஆமாம்... நீங்க இப்படி எல்லாம் இருப்பீங்கன்னு நான் நினச்சி கூட பாத்ததில்ல. உங்க முகத்தைப் பார்த்தா நீங்க இப்படிப்பட்டவர்னு யாராவது சொல்லுவாங்களா?" என்றாள்.

"அப்போ நான் சின்ன பையனா இருந்தேன். நான் என்ன செய்யறது... அவர் எங்க அம்மா கூட தூங்குறது எனக்கு பிடிக்காது. அதனால எப்பவும் அவங்களுக்கு நடுவுல படுத்துகிட்டு அவரை கீழே தள்ளி விட்டுடுவேன். என்னை அந்தப் பக்கம் இழுக்க அவர் ட்ரை பண்ணா, கத்தி ஊரைக் கூட்டி, எங்க அம்மாகிட்ட அவரை திட்டுவாங்க வைப்பேன். எங்க அம்மா பக்கத்துல அவரை நான் உட்கார கூட விட்டதில்ல..." அனைத்தையும் உளறிக் கொட்டிவிட்டு சிரித்தான் அர்ஜுன்.

அவனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து.

"ஏன் என்னை அப்படி பார்த்துகிட்டு இருக்க?"

"நீங்க இந்த வேலையெல்லாம் வேற செஞ்சிருக்கீங்களா?"

"அவர் இதெல்லாம் தானே சொன்னாரு?"

"நீங்க எப்படி அவர் முன்னால  ஸ்வீட் சாப்பிட்டு வெறுப்பேத்துனிங்கன்னு மட்டும் தான் சொன்னாரு. பாக்கப்போனா, நீங்க செஞ்ச வேலை எல்லாம் நிறைய இருக்கும் போல இருக்கே..."

"நான் தான் உளறிட்டேனா...?" என்றான் அதிர்ச்சியாக.

ஆமாம் என்று கிண்டலாய் தலையசைத்தாள் இந்து. தன் தலையில் அடித்துக்கொண்டான் அர்ஜுன்.

"உங்களை மாதிரியே சேட்டை செய்ற குழந்தை தான் உங்களுக்கு வந்து பிறக்க போகுது..." என்று அவன் காலை வாரினாள் இந்து.

"என் பொண்ணு எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவா. எனக்கு தான் ஹெல்ப் பண்ணுவா..." என்றான்.

"பொண்ணு பொறந்தா உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவா... ஒருவேளை பையனா இருந்தா?"

"எனக்கு பையன் வேணாம்" என்றான் சுருக்கென்று.

"ஏன் உங்களுக்கு பையன் வேண்டாம்?"

"ஒருவேளை அவன் என்னை மாதிரி இருந்துட்டா என்ன செய்யறது?" என்றான் மெல்லிய குரலில்.

"அப்படின்னா அவன் நல்ல பிள்ளையா இருப்பான். அம்மா மேல உயிரா இருப்பான்... அம்மாவை மாதிரி மனைவியையும் நேசிப்பான்"

"ஆனா அப்பாவை விரும்பமாட்டான்... என்னை அவனுக்கு பிடிக்காது"

"நிச்சயமா பிடிக்கும். ஏன்னா, நீங்க உங்க அப்பா மாதிரி கிடையாது. நீங்க ஒரு பெஸ்ட் அப்பாவா இருப்பீங்க. அவனும் அப்பா பிள்ளையா தான் இருப்பான். அம்மாவை விட அப்பாவை ரொம்ப நேசிப்பான். அப்பா கூட சேர்ந்துகிட்டு அம்மாவை கிண்டல் செய்வான்" என்றாள்.

முகமலர்ச்சியுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். ஒருவேளை இந்து சொல்வது அனைத்தும் நடந்து விட்டால், அவர்களுடைய குடும்பம் எவ்வளவு அழகானதாக இருக்கும்...!

"இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கு தோனல..."

"நீங்க வேணா பாருங்க..."

"ஆனா, எனக்கு பெண் குழந்தை தான் வேணும். எங்க அம்மாவை மாதிரி... உன்னை மாதிரி..."

"அப்போ நான் என்ன செய்யறது? எனக்கு மட்டும் என் புருஷனை மாதிரி குழந்தை வேணும்னு ஆசை இருக்காதா?"

"என்னை மாதிரியா? எதுக்கு?" என்றான் புன்னகையுடன்.

"எனக்கும் என் புருஷனுக்கும் நடுவுல தூங்க..." என்றாள் கிண்டலாக.

"ஓ... நான் ஒன்னும் சங்கர் இல்ல... அர்ஜுன்... அதை ஞாபகத்துல வச்சிக்கோ"

"என்ன செய்வீங்களாம்?"

"அவன் வாயில பிளாஸ்டரை ஓடிடுவேன்"

"என்னனனனது என் பையன் வாயில நீங்க பிளாஸ்டர் ஒட்டுவீங்களா?"

 அவனை பிடித்து தள்ளினாள்.

"அந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சீங்க... அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்"

அவனை மறுபடி அவள் தள்ளிவிட கையை உயர்த்திய போது அவள் கைகளைப் பற்றினான் அர்ஜுன்.

"உன் பையனுக்காக நீ என்கிட்ட சண்டை போடுவியா?" என்று அவன் கேட்டதன் உள்ளர்த்ததை சரியாய் புரிந்து கொள்ளாமல்,

"பின்ன என்ன? அந்த மாதிரி ஏதாவது செஞ்சீங்கன்னா நிச்சயமா சண்டை போடுவேன்"

"அப்போ எனக்காக யார் சண்டை போடுவா?" என்றான் விரக்தியாக.

அவனுடைய வறண்ட குரல் இந்துவை தடுமாற்றம் அடையச் செய்தது.

"நான் அப்படி சொல்லலங்க"

"அப்போ, என்னை விட உனக்கு உன் பையனை தான் ரொம்ப பிடிக்குமா?"

"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால, உங்க அம்மா மேல நீங்க வச்சிருந்த பாசம் குறைஞ்சி போச்சா?"

அவளுக்கு பதில் சொல்லவில்லை அர்ஜுன்.

"அதே மாதிரி தான் இதுவும்..."

வேறு பக்கம் தன் பார்வையை திருப்பிக்கொண்டான் அர்ஜுன்.

"நான் அந்த அர்த்தத்துல சொல்லலைங்க... ஒரு சின்ன குழந்தையோட வாயில பிளாஸ்டர் ஒட்டினா, அந்த குழந்தைக்கு எப்படி இருக்கும் தெரியுமா? நான் சின்ன பொண்ணா இருக்கும் போது, நான் அழுதா, வித்யா அம்மா அப்படித் தான் செய்வாங்க. அதனால தான் சட்டுன்னு கோவப்பட்டுட்டேன்." என்றாள் பரிதாபமாக.

அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் அர்ஜுன்.

"உண்மையிலேயே அவங்க அப்படி செஞ்சாங்களா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் இந்து. சட்டென்று அவளை அணைத்துக் கொண்டான்.

"சத்தியமா நான் எப்பவும் அப்படி செய்ய மாட்டேன்..." என்றான்.

சரி என்று அழகாய் புன்னகைத்தாள் இந்து.

"நீங்க ஆஃபீஸ்க்கு போகலயா?"

"கிளம்பணும்"

தனது மடிக்கணினி பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான் அர்ஜுன். அவனை வழியனுப்பிவிட்டு கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்தாள் இந்து.

அப்பொழுது, ஹீனா யாருடனோ அழுதபடி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு குழம்பினாள். யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள அங்கே சற்று தாமதித்தாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top