Part 44
பாகம் 44
தன் முன்னால் சங்கர் வந்து நின்றவுடன், சட்டென்று எழுந்து நின்றான் கிரி. தான் காவல் நிலையத்தில் பதிந்த வழக்குக்கான எஃப் ஐ ஆர் நகலையும், மாஷாவின் ஆதார் மற்றும் பாஸ்போர்ட் நகலையும் கிரியிடம் வழங்கினார் சங்கர்.
"மாஷா எடுத்துகிட்டு போன நகைகளோட போட்டோஸ் எல்லாத்தையும் நாங்க போலீஸ்ல கொடுத்திருக்கோம். இது தான், அந்த போட்டோசோட காப்பி. நீங்களும் இதை பான் புரோக்கர்சுக்கு அனுப்புங்க"
"தேங்க்யூ"
"பான் புரோக்கர் நிறைய பேர் இருக்காங்களே, எல்லாருக்கும் இதை அனுப்பிட முடியுமா?"
"தேவையில்ல... அவங்களுக்கு ஒரு சங்கம் இருக்கு. அந்த சங்க தலைவருக்கு அனுப்பி வச்சுட்டா போதும். மீதியை அவங்க பாத்துக்குவாங்க"
"நல்ல ஐடியா"
"மாஷா எங்க இருப்பாங்கன்னு உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?"
"அவளோட பாஸ்போர்ட்டையும், ஆதார் கார்டையும் எடுத்துக்கிட்டு போயிட்டா. அவ ஏதோ ஒரு நாட்டுக்கு போக ப்ளான் பண்றான்னு நினைக்கிறேன்"
தீவிரமாய் யோசித்தான் கிரி.
"தயவுசெய்து அர்ஜுனனையும் இந்துவையும் ஜாக்கிரதையா இருக்க சொல்லு... அவங்களை சேவ் பண்ணு" என்று அவர் கூறிய போது, அவர் குரலில் குற்ற உணர்ச்சி மேலோங்கியது.
சரி என்று தலை அசைத்தான் கிரி. அங்கிருந்து கிளம்பிச் சென்றார் சங்கர்.
"அந்த பொம்பளைகிட்ட, இவர் அப்படி என்னத்தை தான் பாத்தாரோ தெரியல... சீதாம்மா மாதிரி அழகும் இல்ல... நல்ல மனசும் இல்ல... ஏன் தான் ஆம்பளைங்க தங்களோட நல்ல வாழ்க்கையை இபடியெல்லாம் கெடுத்துக்குறாங்களோ தெரியல..." என்று மனதில் நினைத்தான் கிரி.
அடுத்து செய்ய வேண்டிய காரியத்தில் இறங்கினான் கிரி. அடகு கடை முதலாளிகள் சங்க தலைவருக்கு ஃபோன் செய்தான்.
"யார் பேசுறீங்க?" என்றார் தலைவர்
"நான் எஸ்ஆர் கம்பெனி மேனேஜர் கிரி பேசுறேன்..."
"அர்ஜுன் சாரோட கம்பெனி மேனேஜரா?"
"ஆமாம்"
"நீங்களா சார்...! அர்ஜுன் சாரோட மேனேஜரான உங்களுக்கு, அடகு வைக்க வேண்டிய அவசியம் என்ன சார் வந்துச்சி?"
"நான் வேற ஒரு விஷயத்துக்காக உங்களுக்கு ஃபோன் பண்ணேன்"
"சொல்லுங்க, சார்"
"ரெண்டு கோடி மதிப்புள்ள நகைகள், அர்ஜுனோட அப்பா வீட்லயிருந்து திருடு போயிருக்கு"
"அடக்கடவுளே...! யார் சார் திருடினது?"
"தெரியல. அந்த நகைகளுடைய ஃபோட்டோஸை நான் உங்களுக்கு அனுப்புறேன். யாராவது அதை விற்கவோ, அடகு வைக்கவோ, வந்தா பிடிச்சி போலீசில் ஒப்படைச்சிடுங்க"
"ஆனா, இந்த மாதிரி திருட்டு நகைகளை வாங்குறதுக்குனே சில பேர் இருக்காங்க. நகைகள திருடினவங்க அவங்ககிட்ட தான் போவாங்க"
"அவங்க யாருன்னு உங்களுக்கு தெரியுமா?"
"ஏன் சார் தெரியாது? தங்க, வைர வியாபாரத் தொடர்புடைய எல்லாரையும் எங்களுக்கு தெரியும்"
"உங்களால அவங்களை அலர்ட் பண்ண முடியுமா?"
"நிச்சயமா முடியும்"
"இந்த உதவியை நீங்க எங்களுக்கு செஞ்சா, உங்களுக்கு எந்த உதவி வேணும்னாலும் எங்ககிட்ட கேட்கலாம்"
"ரொம்ப சந்தோஷம், சார்"
அவர்கள் அழைப்பைத் துண்டித்து கொண்டார்கள். அடகு சங்க தலைவர், தங்க, வைர நகைகள் சம்பந்தமுள்ள அனைவருக்கும் ஃபோன் செய்ய துவங்கினார்.
அதே நேரம் கிரியும் வேறு ஒருவருக்கு ஃபோன் செய்தான்.
"சொல்லுங்க, கிரி சார்"
"நான் உனக்கு ஒரு ஆதார் காப்பியும், பாஸ்போர்ட்டும் அனுப்பி இருக்கேன். அவங்க எந்த நாட்டுக்காவது போக முயற்சி பண்றாங்களான்னு எனக்கு பாத்து சொல்லு"
"ஒரு மணி நேரத்துல சொல்றேன், சார்"
"ஷ்யூர்..."
அழைப்பை துண்டித்து பெருமூச்சு விட்டான் கிரி.
.....
திருமண வரவேற்பு நடக்கப்போகும் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் இரண்டாம் தளத்தின் அறையில், ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தார் மாஷா.
"இது முடியும்னு எனக்கு தோனல..."
"ஆனா, நீ அவளைக் கொல்றேன்னு சொன்னியே, குமரா."
"அப்போ நம்ம திட்டத்தைப் பத்தி அர்ஜுனுக்கு தெரியாது. ஆனா, இப்போ அவனும் அவனோட மேனேஜரும், ரொம்ப மும்முரமா வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இப்போ அந்த இடத்தை நெருங்க கூட முடியாது..."
"உன்னால தான் இந்த விஷயத்தை முடிக்க முடியும்னு நான் நெனச்சேன்"
"இப்பவும் சொல்றேன், என்னால முடிக்க முடியும் தான். ஆனா இந்த தடவை முடியாது. வேற ஒரு நாள் நிச்சயம் செய்றேன்"
"இல்ல... அவங்க சந்தோஷமா இருக்க கூடாது. அவங்க வாழ்க்கையோட கருப்பு தினமா இந்த நாள் மாறணும்... "
அவனிடம் ஒரு வைர மோதிரத்தை கொடுத்தாள் மாஷா. அதைப் பார்த்தவுடன், அவனுடைய கண்கள் அந்த வைரத்தை விட அதிகமாய் மின்னியது.
"இந்த மோதிரத்தோட விலை, அஞ்சு லட்சம். அவளை முடி"
அந்த மோதிரத்தை பார்த்தபடி சரி என்று தலை அசைத்தான் குமரன்.
.....
திருமண வரவேற்பு நாள்
காலை முதற் கொண்டே மிகவும் பதட்டமாக இருந்தான் அர்ஜுன். அவனைவிட பதட்டமாக இருந்தான் கிரி. மாஷாவை பற்றி விபரம் அறிய, அவர்கள் மாறிமாறி ஃபோனில் பேசிக்கொண்டே இருந்தார்கள். சீதாராணி இல்லம், மற்றும் திருமண வரவேற்பு நடைபெறும் இடம் ஆகியவற்றில் மேலும் பாதுகாப்பை கூட்டினார்கள்.
ரம்யாவும் ரேவதியும் வரவேற்பிற்காக இந்துவை தயார் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் அழகு கலை நிபுணர்கள் இல்லை என்றாலும், அழகு கலை நிபுணர்களுக்கு சிறிதும் சளைத்தவர்களாக தெரியவில்லை. தங்களை அழகாக காட்டிக் கொள்வது என்று வந்துவிட்டால் பெண்களுக்கு நிகர் பெண்கள் தான்.
இந்து அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற உடை முற்றிலும் நவீன முறையில் இருந்தது. எப்பொழுதும் வெள்ளை நிற உடையில் தோன்றும் வானத்து தேவதைகள், இளம் சிவப்பு நிற உடையில் கூட வரக் கூடுமோ என்று சந்தேகிக்கும் அளவிற்கு அவள் அழகாக இருந்தாள். அவள் சாதாரணமாகவே அழகாகத் தான் இருப்பாள்... ஆனால், இன்று அவளை பார்க்கும் எவருக்கும் மாறுபட்ட எண்ணம் தோன்ற வாய்ப்பே இல்லை.
அவள் மீது அர்ஜுனின் கண்கள் விழுந்த பொழுது, அவர்களை சுற்றி இருந்த அனைத்து ஆபத்தையும் மறந்து போனான் அர்ஜுன். அவளுடைய களங்கமற்ற புன்னகை, அவளுக்கு மேலும் அழகூட்டியது. அர்ஜுனின் ஆழ்ந்த பார்வை அவளை சங்கடப்படுத்தியது. அவளைவிட வேறு யாருக்கு தெரியும் அவன் பார்வையின் பொருள்?
அர்ஜுனின் மனம் பதைபதைத்தது. இந்த பெண்ணை ஆபத்து சூழ்ந்து இருக்கிறது. ஆனால் அவளுக்கு அதை பற்றி தெரியாது. அவளை குறிவைத்து காத்திருக்கும் மிகப் பெரிய ஆபத்திலிருந்து அவளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருக்கிறது... அவளைப் பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது... இதில் அவன் உயிர் போனாலும் பரவாயில்லை...
அவள் அருகில் வந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான். இந்துவுக்கு ஏதோ வழக்கத்திற்கு மாறாய் பட்டது.
"என்ன ஆச்சிங்க?"
"எதுவும் ஆயிட கூடாதுன்னு நினைக்கிறேன்"
"எதுவும் ஆகாது"
அவளை கட்டி பிடித்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டான்.
"கவலைப்படாதீங்க. நான் வணங்குற மாரியம்மன் நம்மளை காப்பாத்துவாங்க"
அவள் கொண்டுள்ள கடவுள் நம்பிக்கை, எப்போதுமே ஆச்சரியம் அளிக்க கூடியது...
"இந்து..."
"ம்ம்ம்?"
"நீ எப்பவுமே கடவுளை ரொம்ப நம்புறீயே, நான் உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டப்போ உனக்கு கடவுள் மேல கோபம் வரலயா?"
"அதெல்லாம் நடக்கத் தான் செய்யும்... நீங்க கூட தான் கோபம் வந்தா கிரி அண்ணனை திட்டுறீங்க. அதுக்காக நீங்க அவர் மேல நம்பிக்கை இழந்துட்டிங்கன்னு அர்த்தமில்லயே... உங்களுக்கு அவர் மேல உரிமை இருக்கு... அதனால திட்டுறீங்க"
"கடவுள் இருக்காரா?"
"இருக்காரா இல்லயாங்குற கேள்வி அவசியமில்லாதது... நம்பிக்கை தான் விஷயம்... கடவுள் இருக்காருன்னு நம்புறவங்க, அவருடைய இருப்பை நிச்சயம் உணருவாங்க"
"பாக்கலாம்... நான் கேட்டதை உன்னோட கடவுள் செய்றாங்களான்னு..."
"அப்படி செஞ்சுட்டா, நீங்க செய்யறதா சொன்னதை செய்ய நீங்களும் மறக்காதீங்க"
"நிச்சயம் செய்வேன்... ப்ராமிஸ்"
"போலாமா?"
போகலாம் என்று அவன் தலையசைக்க, அவர்கள் அறையை விட்டு வெளியேறினார்கள். ரம்யாவும் ரேவதியும் அவர்களை தொந்தரவு செய்யாமல் ஏற்கெனவே கிளம்பி சென்று விட்டார்கள்.
பேண்ட் வாத்தியம் முழங்க, அவர்களை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தான் கிரி. நன்றாய் சோதிக்கப்பட்ட பின்னரே ஒவ்வொருவரும் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் அதைப்பற்றி யாரும் வருத்தப்படவில்லை ஏனென்றால், அவர்கள் ஏற்கனவே அதைப் பற்றி தெரிவிக்கப்பட்டு இருந்தார்கள்.
மெல்லிய பின்னணி இசையுடன் வரவேற்பு துவங்கியது. அவரவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அனைவரும் அமர்ந்தார்கள்.
வரவேற்பு கூடத்தின் உள்ளே நுழைந்த ஹீனாவை பார்த்து புன்னகைத்த இந்து, அவளுக்கு ரேவதியை அறிமுகம் செய்து வைத்தாள். ரம்யாவுடனும், ரேவதியுடனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் ஹீனா.
அப்பொழுது, அங்கு நுழைந்த எதிர்பாராத நபரை பார்த்து அர்ஜுனின் ரத்தம் கொதித்தது. ஆம், அவன் தன் தந்தையை அங்கு எதிர்பார்க்கவில்லை.
அவனுடைய முக மாற்றத்தை கவனித்த கிரி, அவனை நோக்கி ஓடிச் சென்று, மேடையிலிருந்து கீழே இறங்க எத்தனித்த அர்ஜுனைத் தடுத்தான்.
"அர்ஜுன், கோவப்படுறதுக்கு இது நேரமில்ல... அவர் மேல கவனம் செலுத்துறதை விட, நமக்கு நிறைய முக்கியமான வேலைகள் இருக்கு. இந்துவை பாரு... நீ ஏதாவது செஞ்சு அவங்கள மூட் அவுட் பண்ணாத. இது உங்களோட ஸ்பெஷல் டே... உன்னோட டைமை அவருக்காக வேஸ்ட் பண்ணாத..."
"அந்த ஆள்கிட்ட சொல்லி வை. இந்த சிச்சுவேஷனை அவர் அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு, எங்ககிட்ட நெருங்க நெனச்சா, நான் சும்மா இருக்க மாட்டேன்."
சரி என்று தலை அசைத்தான் கிரி.
"போய் சொல்லு" என்று அவனை கட்டாய படுத்தினான் அர்ஜுன்.
கிரி தன்னை நோக்கி வருவதை பார்த்து விஷயத்தைப் புரிந்து கொண்டார் சங்கர். அவன் ஏதும் கூறுவதற்கு முன், தன் கையை காட்டி அவனைத் தடுத்தார் அவர்.
"எனக்கு தெரியும், கிரி. நான் சூழ்நிலையை எனக்கு சாதகமா எடுத்துக்க மாட்டேன்" என்றார்.
"ஐ அம் சாரி, சார்" என்றான் கிரி.
"நீ சாரி சொல்ல வேண்டிய அவசியமில்ல. இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம். என் மகனோட உண்மையான அன்பை நான் இழந்துட்டேன்" என்று வருத்தப்பட்டார்.
வந்த விருந்தாளிகளை உபசரிக்க வேண்டியிருந்ததால் அவரிடமிருந்து விடைபெற்று அங்கிருந்து சென்றான் கிரி.
அப்பொழுது அந்த வரவேற்பு கூடத்தின் திரைச்சீலையின் பின்னால் இருந்து மெல்ல எட்டிப்பார்த்தாள் மாஷா, இந்து ரத்த வெள்ளத்தில் மிதப்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன்.
அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ந்தார்கள், யாரும் எதிர்பாராத வண்ணம், திடீரென்று வெடித்த துப்பாக்கி குண்டின் சத்தத்தால்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top