Part 42

பாகம் 42

மறுநாள் காலை

இந்து, தலையணையின் மீது கவிழ்ந்து படுத்து உறங்கி கொண்டிருந்தாள். தூக்கத்திலிருந்து கண் விழித்த அர்ஜுன், அவள் தன்னிடமிருந்து விலகி சென்று படுத்திருப்பதை பார்த்தான். உருண்டு சென்று, அவள் முதுகில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவனுடைய அந்த செயல், அவள் தூக்கத்தை கலைத்தது. தன் முதுகின் மீது படுத்திருப்பது யார் என்பதை உணர்ந்து,  அழகிய சிரிப்பை அவள் இதழ்கள் சிந்தின. அர்ஜுனுடைய கூர்மையான காதுகளில் அந்த மெல்லிய சப்தம் விழுந்தது.

"எதுக்காக என்னை விட்டு தள்ளிப் போய் படுத்திருக்க?" என்றான்.

"தூக்கத்துல விலகிப் போயிட்டேன்னு நினைக்கிறேன்" என்றாள் கண்ணை திறக்காமல்.

"அப்படின்னா இன்னிக்கு ராத்திரியில இருந்து, உன்னை என்னோட சேர்த்து இறுக்கமா கயிறால கட்டிக்கிட்டு தூங்க போறேன்" என்றான்.

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தாள் இந்து.

"நான் எப்பவும் உன் கூட  இப்படியே இருக்கணும்..."

"அது நடக்காது" என்றாள் சாதாரணமாக.

அதைக் கேட்டு அர்ஜூனின் கண்கள் அகல விரிந்தன.

"இந்த மாதிரி நான் உங்க கூட இருக்க மாட்டேன்"

தன் தலையை உயர்த்தி அவளை பார்த்தான் அர்ஜுன்.

"அப்படி நடக்க வாய்ப்பே இல்ல" என்றாள் இந்து.

கவிழ்ந்து படுத்திருந்த அவளை, தன்னை நோக்கி திருப்பினான்.

"என்ன பேசுற நீ?" என்றான் கோபமாக.

"நம்ம வீட்டுக்கு போனதுக்கு அப்புறம், நான் உங்களுக்கு முன்னாடி எழுந்து வேலை செய்ய ஆரம்பிச்சிடுவேன்னு சொல்ல வந்தேன்..."

"நீ ஒன்னும் எனக்கு முன்னாடி எழுந்துக்க வேண்டாம். எத்தனை ஆளுங்களை வேணும்னாலும் வேலைக்கு வச்சுக்கோ... எனக்கு முன்னாடி எழுந்து போற வேலை வச்சுகாதே" என்றான் உறுதியாக.

"இல்லங்க..."

"அதை, ஆர்டர்... இல்ல ரெக்வெஸ்ட்... எப்படி வேணாலும் எடுத்துக்கோ... நான் கண் விழிக்கும் போது, நீ என் கூட இருக்கணும் அவ்வளவு தான். புரிஞ்சுதா உனக்கு?"

"இது நிச்சயம் ஆர்டர் தான்..." என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு

"ஆமாம்... அதனால என்ன?"

"ஏன் இவ்வளவு சீரியஸா இருக்கீங்க?"

"இந்து, நான் என் வாழ்க்கையில பெரும்பாலும் தனியாவே இருந்துட்டேன்... உலகத்திலேயே பெஸ்ட்டான அம்மா இருந்தும் கூட நான் தனியா விடப்பட்டேன்... ஒரு பெஸ்ட் வைஃப் கிடைச்சதுக்கு அப்புறம், நான் தனியா இருக்க விரும்பல..."

"நீங்க ஏன் தனியா இருக்கணும்? நான் ஒன்னும் உங்களை விட்டு போக போறது இல்லயே..."

அவன் தோளில் முகம் புதைத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

"என்ன ஆச்சுங்க? ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?"

"இந்து, நம்ம ஒரு மோசமான கால கட்டத்தில் இருக்கோம். நான் எவ்வளவு தான் தைரியமான ஆளா இருந்தாலும், நீன்னு வரும் போது, நான் ரொம்ப பலவீனமாயிடுறேன்..."

"எனக்கு ஒன்னும் ஆகாது. என் கையில இருக்கிற ஆயுள்ரேகை ரொம்ப கெட்டியா இருக்கு, பாருங்க..."  என்று தன் கையை அவனிடம் காட்டி சிரித்தாள்.

அவள் கையைப் பற்றி அவன் முத்தமிட, அவன் ஏதோ குழப்பத்தில் இருக்கிறான் என்று புரிந்தது இந்துவுக்கு.

"ஏதாவது பிரச்சனையா?"

"மாஷா ஏதோ பெருசா ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கா"

"என்னை கொல்றதுக்கா?"

தன் முகத்தில் தோன்றிய அதிர்ச்சி ரேகையை அவனால் மறக்க முடியவில்லை.

"இதுல ஷாக் ஆகுறதுக்கு எதுவும் இல்ல. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல அழுத்தமான பந்தம் இல்லாதப்போ, அவங்க உங்களை கொல்ல நெனச்சாங்க. இப்போ நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கோம்னு அவங்களுக்கு தெரிஞ்சதால, அவங்க என்னை தான் கொல்ல நினைப்பாங்க. ஏன்னா, அது தான் உங்களை அடிச்சி நொறுக்கும்னு அவங்களுக்கு தெரியும்"

அவளை விட்டு விலகி, மெத்தையில் படுத்து கண்ணை மூடிக் கொண்டான் அர்ஜுன். இந்தமுறை இந்து அவனிடம் நெருங்கி வந்து அணைத்துக் கொண்டாள்.

"பயப்படாதீங்க அர்ஜுன்"

"எப்படி என்னால பயப்படாம இருக்க முடியும்?" என்றான் அவளைத் தன் கைகளால் சுற்றி வளைத்துக்கொண்டு.

"நான் கடவுளை நம்புறவ... நமக்கு கடவுள் துணை இருந்தா, எந்த கெட்ட சக்தியும் நம்மை எதுவும் செய்யாது. எனக்கு எதுவும் நடக்க நீங்க விட மாட்டீங்க... அதுக்கான சக்தியை நிச்சயம் நான் வணங்குற கடவுள் உங்களுக்கு கொடுப்பாங்க."

"அப்படி நடந்தா, நான்..."

"நிச்சயம் நடக்கும்" என்றாள் அவனது பேச்சை வெட்டி.

சற்றே நிறுத்தியவள்,

"அப்படி இந்த பிரச்சனைல நீங்க ஜெயிச்சிட்டா... கடவுளுக்கு என்ன செய்வீங்க?"

"என்ன வேணும்னாலும் செய்றேன்"

"நான் கோவிலுக்கு போகும் போதெல்லாம் என் கூட வரணும்..."

"நிச்சயம் வரேன்" என்றான் நிச்சயமாக.

"நிஜமாவா?"

"உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்... உனக்கு தெரியாதா...?"

"அம்மா தாயே, உங்களுக்கு *ஆல் இன் ஒன்* பக்தர் கிடைக்க போறாரு. இந்த சான்சை விட்டுடாதீங்க. என்னை காப்பாத்தி, அவரை பிடிச்சு வச்சுக்கோங்க..." என்றாள் மேலே பார்த்தபடி.

"இரு, இரு... நீ என்ன சொன்ன? ஆல் இன் ஒன்னா? அப்படின்னா?" என்றான்.

"அழகான, வசதியான, கவர்ச்சியான, வல்லமையான, பிரபலமான..." என்று கலகலவென சிரித்தாள்.

அவள் சிரிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவள் அவனைப் பற்றி கூறும் போது தான், உண்மையிலேயே தான் அழகாய் இருப்பதாய் தோன்றியது அவனுக்கு.

"நீங்க கோவிலுக்கு வர ஆரம்பிச்சா, உங்களுக்காக ஒரு நாலு பேர் வர மாட்டாங்களா...?"

"கடவுளுக்கு ஐஸ் வைக்கிறதை நிறுத்து" என்று சிரித்தான்.

"நான் ஒன்னும் ஐஸ் வைக்கல... நீங்க வேணா பாருங்க,  நான் கோவிலுக்கு போகும் போதெல்லாம் நிச்சயம் நீங்க என்கூட வரத் தான் போறீங்க"

அது நடக்க வேண்டும் என்று தான் அவனும் மனதார ஆசைப்பட்டான்.

......

வீட்டை பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு கிராமத்திற்கு வந்து சேர்ந்தான் கிரி. தன்னுடைய அம்மாவின் வீட்டை வாங்க, அர்ஜுன் இரண்டு பங்கு பணம் கொடுத்தது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. அதை விட மிகவும்  ஆச்சரியத்தை அளித்த விஷயம் என்னவென்றால், அவன் அந்த வீட்டை இந்துவின் பெயரில் பதிவு செய்தது தான்... முக்கியமாக இந்துவுக்கு அது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்தது... இந்து தாறுமாறாய் உணர்ச்சி வசப்பட்டாள். அவள் தனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்பதை காட்ட அர்ஜுன் தவறுவதே இல்லை. இது அனைத்திற்கும் சிகரம் வைத்தது போன்ற விஷயம். தன் வாழ்க்கையில் இந்துவின் இடம் எப்படிப்பட்டது என்பதை அவன் மீண்டும் நிரூபித்தான். சீதாவும், சீதாவின் இல்லமும், அர்ஜுனின் உணர்வில் கலந்த விஷயமல்லவா! அந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பொழுது இந்துவின் கைகள் நடுங்கின.

அவள் நிலையை புரிந்து கொண்ட அவன், அவளை பக்கவாட்டில் லேசாய் அணைத்துக் கொண்டான். அவளுடைய கண்ணீர் ததும்பிய கண்களை பார்த்த பின்பு அவன் சும்மாயிருக்க முடியாது அல்லவா...

"எல்லாத்துக்கும் அழறது அவசியமா?" அவள் கன்னத்தை துடைத்து விட்டான்.

"இது உங்க அம்மா வீடு"

"எங்க அம்மாவுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. என்னை பொறுத்தவரை, நீங்க ரெண்டு பேரும் ஒன்னு தான். உன் அப்பா வீடு என் பேர்ல இருக்கும் போது, என் அம்மா வீடு, உன் பேர்ல இருக்குறதுல எந்த தப்பும் இல்ல..."

அதற்குப் பின், இந்து அர்ஜுனிடம் விவாதிக்கவில்லை. அவனிடம் அனைத்திற்கும் பதில் இருக்கும். அவனிடம் பேசி ஜெயிப்பது என்பது ஆகாத காரியம்.

அர்ஜுன் வாக்களித்தது போலவே  நாகுவும், கனகுவும், அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற வேலையை அர்ஜுனுடைய நிறுவனத்தில் பெற்றார்கள்.

தன் அம்மாவின் வீட்டை, பழமை மாறாமலும் அதன் உண்மைத் தன்மை மாறாமலும் புதுப்பிக்க நினைத்தான் அர்ஜுன். அந்த நுட்பமான வேலையை கிரியிடம் ஒப்படைத்தான். கிரி அதை சிரமேற்கொண்டான்.

அனைத்தையும் செவ்வனே செய்து முடித்து விட்டு, அவர்கள் சென்னையை நோக்கி கிளம்பினார்கள். அதே நேரம், பாண்டிச்சேரியிலிருந்து இந்துவின் தோழி ரேவதியை அழைத்துக் கொண்டு, ரம்யாவும் சென்னை வந்து சேர்ந்தாள்.

 சங்கர் இல்லம்

பதற்றத்துடன் சங்கரை நோக்கி ஓடிவந்தார் ரஹீம்.

"என்ன ஆச்சு?"

"மாஷா மேடம் ஸ்டோர் ரூம்ல இல்ல, சார்"

"என்ன சொல்றீங்க...? நல்லா தேடிப் பாத்தீங்களா?"

"வீட்டில் யாரும் இல்லன்னு, நான் அவங்ககிட்ட சொன்னா மட்டும் தான் சார் அவங்க ரூமை விட்டு வெளிய வருவாங்க..."

"ஹீனா எங்க?"

"ஷாப்பிங் போயிருக்காங்க"

"ஆமாம்... இந்துவுக்கு கிஃப்ட் வாங்க போக போறேன்னு சொன்னா"

சங்கர் ஹீனாவுக்கு ஃபோன் செய்தார். மிகப்பெரிய ஷாப்பிங் மாலின் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, அப்போது தான் மாலின் உள்ளே நுழைந்தாள் ஹீனா, சங்கரின் அழைப்பை ஏற்றவாரு.

"சொல்லுங்கப்பா"

"மாஷா வீட்ல இல்ல..."

"ஐயையோ... என்னப்பா சொல்றீங்க நீங்க?" என்று பதறினாள்.

"நல்லா தேடிப் பார்த்துட்டோம்"

"இது எப்படிபா நடந்தது?"

"ஒண்ணுமே புரியல"

"சிசிடிவி கேமரா ஃபுட்டேஜை செக் பண்ணுங்க பா... சீக்கிரம்..."

"ஓகே"

"நான் உடனே வரேன்"

ஷாப்பிங்கை செய்யாமலேயே அவள் வீடு திரும்ப முடிவு செய்தாள். மறுபடியும் காரின் உள்ளே அமர்ந்து, வண்டியை ஸ்டார்ட் செய்து, வீட்டை நோக்கி  செலுத்தினாள்.

ஏழு பேர் இருக்கைகளை கொண்ட அந்த காரின் பின்புறத்தில் ஹீனாவுக்கு தெரியாமல் பதுங்கி  இருந்து, அந்த ஷாப்பிங் மாலில் இறங்கிய மாஷா, ஹீனா திரும்பி வருவதைப் பார்த்து, அவள் கண்ணில் படாமல், அங்கிருந்த ஒரு தூணுக்கு பின்னால் மறைந்து நின்றார்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top