Part 40
பாகம் 40
பஞ்சரான டயரை பார்த்து எரிச்சலடைந்தான் அர்ஜுன். அந்த இடம், ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. யாராவது வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான் அர்ஜுன். காரை விட்டு கீழே இறங்கினாள் இந்து.
"அடக் கடவுளே... என்னால தான் நீங்க இந்த காட்டுல வந்து மாட்டிக்கிட்டிங்க"
"டயர் பஞ்சர் ஆகுறதெல்லாம் சாதாரணமா நடக்கிற விஷயம் தான். நானும் இந்தியா வந்ததிலிருந்து இங்க வரணும்னு தான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். அதனால உன்னை பிளேம் பண்ணிக்காத."
அப்பொழுது, ஒரு ஆள் சைக்கிளில் அந்தப் பக்கம் வந்தான். தன் கையைக் காட்டி அவனை நிறுத்தினான் அர்ஜுன். வந்த ஆள், அர்ஜுனுடைய காரை, வாயை பிளந்து கொண்டு பார்த்து நின்றான்.
"இங்க பக்கத்துல ஏதாவது மெக்கானிக் ஷாப் இருக்கா?"
"பக்கத்துல இல்லங்க... ஊருக்குள்ள தான் இருக்கு."
"இங்கிருந்து எவ்வளவு தூரம்?"
"அஞ்சு கிலோமீட்டர் போகணும்"
"உங்ககிட்ட அந்த மெக்கானிக் நம்பர் இருக்கா?"
"இல்ல, சார்"
"அவரை இங்க கூட்டிட்டு வர முடியுமா?"
"நானா?" என்று அவன் தயங்கினான்.
தனது மணி பஸ்ஸில் இருந்து 500 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினான் அர்ஜுன். அதைப் பார்த்து அந்த மனிதனின் முகம் மின்னியது. அர்ஜுனின் கையிலிருந்து அதைப் பறித்துக் கொண்டான்.
"மெக்கானிக்கை இங்க கூட்டிட்டு வந்தா, இன்னொரு 500 ரூபாய் தரேன்" என்றான் அர்ஜுன்.
"நான் போய் கூட்டிட்டு வரேன் சார்" என்று, தன் சைக்கிளை போட்டியில் கலந்து கொள்பவனை போல் அதிவேகமாய் ஓட்டிச் சென்றான்.
காரின் மீது சாய்ந்து கொண்டு நின்றான் அர்ஜுன். ஊருக்குள் சென்ற மனிதன், மெக்கானிக்கை அழைத்து வரும் வரை இங்கு தான் காத்திருந்தாக வேண்டும். வேறு வழி இல்லை. அந்த அமைதியான சூழ்நிலை அர்ஜுனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு, பக்கத்தில் இருந்த குளக்கரையில் இருந்து இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள், அர்ஜுனனையும், அவனுடைய பஞ்சராகி நின்ற காரையும் பார்த்துவிட்டு அவனிடம் வந்தார்கள்.
"ஏதாவது பிரச்சனையா, சார்?"
"கார் டயர் பஞ்சர் ஆயிடுச்சி"
"நாங்க ஹெல்ப் பண்ணட்டுமா?"
"மெக்கானிக்கை கூட்டிகிட்டு வர ஒருத்தர் ஊருக்குள்ள போயிருக்காரு"
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
"நாகு, இவரு நம்ம மாரிமுத்து அண்ணனை பத்தி சொல்றாருன்னு நினைக்கிறேன்" என்றான் ஒருவன்.
"அவர் குடிக்காம இருப்பாருன்னு எனக்கு தோனல, கனகு" என்றான் மற்றொருவன்.
"அப்படியே இருந்தாலும், அவருக்கு ட்யூப்லெஸ் டயரை பஞ்சர் போட தெரியுமாங்குறது சந்தேகம் தான் ..."
"அந்த மெக்கானிக்குக்கு இந்த டயரை மாத்த தெரியாதா?" என்றான் அர்ஜுன்
"உங்க கார்ல ஸ்டெப்னி இல்லயா, சார்?"
"ஒ இருக்கே..."
"நீங்க அதை மாத்திக்கலாமே"
அர்ஜுன் புருவத்தை உயர்த்தினான். அவனாவது டயரை மாற்றுவதாவது...
"மாத்த தெரியாதா, சார்?"
"அது, வந்து... நான் இந்த மாதிரி சிச்சுவேஷன் ஃபேஸ் பண்ணது இல்ல..."
"உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா நாங்க மாத்தி தறோம்"
"உங்களுக்கு மாத்த தெரியுமா?"
"தெரியும் சார். நாங்க இந்த மாதிரி சிச்சுவேஷன் ஃபேஸ் பண்ணி இருக்கோம்..."
அதைக் கேட்டு கலகலவென சிரித்தான் அர்ஜுன்.
கார் டிக்கியில் இருந்து ஸ்டெப்னியையும் ஜாக்கியையும் எடுத்து, அவர்கள் இருவரும் டயரை மாற்றத் தொடங்கினார்கள். அவர்கள் செய்வதை கவனமாய் கவனித்தான் அர்ஜுன். சில நிமிடங்களில் அவர்கள் டயரை மாற்றி விட்டார்கள். இந்த சாதாரண வேலையையா இவ்வளவு நாள் கற்றுக் கொள்ளாமல் இருந்து விட்டோம் என்று நினைத்தான் அர்ஜுன்.
அவர்கள் பஞ்சரான டயரை கார் டிக்கியில் வைத்து பூட்டினார்கள். அர்ஜுன் பணம் கொடுத்த போது, அதை வாங்க மறுத்தார்கள்.
"பணம் வேண்டாம், சார். நாங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ண தான் நினைச்சோம் "
அர்ஜுனுக்கு ஆச்சரியமாய் போனது. இப்படிப்பட்ட மனிதர்கள் இன்னும் இருக்கிறார்களே... இந்துவுக்கு கூட அவர்களை பிடித்து போனது.
"நாங்க, இதுக்கு முன்னாடி உங்களை இங்க பாத்ததே இல்லயே..."
"நாங்க கோவிலுக்கு வந்தோம்" என்றாள் இந்து.
"எந்த கோவிலுக்கு?"
கோவிலின் பெயர் தெரியாததால் அர்ஜுனை பார்த்தாள் அவள்.
"பாறைக் கோவில்"
"இந்த நேரம் நடை சாத்தி இருப்பாங்களே..."
"அய்யய்யோ" என்றாள் இந்து.
"மணி ஒன்னு ஆயிடுச்சி. இந்நேரம் பூசாரி கோவிலைப் பூட்டிட்டு போயிருப்பார்"
"மறுபடியும் எப்போ திறப்பாங்க?"
"சாயங்காலம் அஞ்சு மணிக்கு"
பெருமூச்சுவிட்டாள் இந்து.
"நம்ம பேசாம திரும்பிப் போயிடலாம்ங்க. இது வேலைக்கு ஆகும்னு தோணல"
"ஏற்கனவே பாதி நாள் போயிடுச்சி... இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணா ஒன்னும் ஆயிடாது" என்றான் அர்ஜுன்.
"நீங்க வெயிட் பண்றதா இருந்தா, நாங்க உங்களுக்கு லஞ்ச் அரேஞ்ச் பண்றோம்" என்றான் நாகு.
"இல்லங்க அண்ணா, நாங்க சாப்பாடு கொண்டு வந்திருக்கோம்" என்றாள் இந்து.
"அப்போ பிரச்சனை இல்ல. வேணும்னா நீங்க ரெஸ்ட் எடுக்க இடம் கொடுக்கிறோம்" என்றான் கனகு.
"நீங்களும் இந்த வில்லேஜ் தானா?" என்றான் அர்ஜுன்.
"ஆமாம் சார். எங்க பழைய வீடு ஒன்னு இருக்கு. அதைப் புதுப்பிக்கலாம்னு இருக்கோம். நீங்க சாயங்காலம் வரைக்கும் அங்க இருக்கலாம். யாரும் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க"
"சரி... நீங்களும் எங்க கூட கார்ல வங்களேன்"
"இல்ல, சார், நாங்க பைக்ல வந்திருக்கோம்"
குளக்கரையின் அருகிலிருந்த, புதருக்கு பின்னால் இருந்து, அவர்களுடைய இருசக்கர வாகனத்தை எடுத்து வந்தான் நாகு. அவர்கள் முன்னால் செல்ல அவர்களை பின் தொடர்ந்து சென்றது அர்ஜுனின் கார். அவர்கள் அந்த கிராமத்து வீட்டிற்கு சென்று சேரும் வரை, அவர்களை வேறு ஒரு காரும் தொடர்ந்து வந்தது.
அந்த கிராமவாசிகள், கப்பல் போன்ற ஒரு கார் தங்கள் கிராமத்திற்குள் நுழைவதை பார்த்து திகைத்து நின்றார்கள். இப்படிப்பட்ட விலை உயர்ந்த வாகனம், அந்த கிராமத்தில் காணப்படுவது இதுவே முதல் முறை. அந்த சைக்கிள் மனிதனும் அவர்களைப் பார்த்தும், அர்ஜுனனை நோக்கி ஓடிவந்தான்.
"சார், மெக்கானிக் தண்ணியடிச்சி இருக்காரு, சார்..." என்று தலையை சொறிந்தான்.
"பரவாயில்ல, விடுங்க" என்று கூறிவிட்டு, நாகு, கனகுவின் பின்னால் சென்றான் அர்ஜுன்.
அவர்கள் இல்லத்தில் நுழைந்தவுடன், இது வரை அறிந்திராத ஏதோ ஒரு உணர்வு அர்ஜுனுக்குள் உதித்தது. அவன் உள்ளம் பரிதவித்தது. தாங்க முடியாத ஏக்கம் அவனுள் எழுந்தது.
"அண்ணா, நீங்களும் எங்களோட சாப்பிடுங்களேன்" என்றாள் இந்து.
"இல்லம்மா, எங்க அம்மா எங்களுக்காக காத்திருப்பாங்க" கனகு.
"உங்க அம்மாவை நான் கேட்டேன்னு சொல்லுங்க..." என்றாள் இந்து.
"சொல்றேன்மா" இருவரும் விடை பெற்று சென்றார்கள்.
அந்த வீடு பெரியதாகவும் இல்லை, சிறியதாகவும் இல்லை. அதை புதுப்பிக்க போகிறோம் என்று அவர்கள் கூறியது அவசியம் என்றே தோன்றவில்லை. அதன் மரத்தூண்கள் அவ்வளவு உறுதியாய் இருந்தது. பழமை மாறாமல் இருந்தது அந்த வீடு. அருகில் இருந்த ஒரு தூணை மெல்ல வருடிக்கொடுத்தான் அர்ஜுன்.
"இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. ஏதோ ரொம்ப நெருக்கமான உணர்வு ஏற்படுது" என்று இந்து கூற அவன் திகைத்துப் போனான். அவனுக்கு தொண்டையை அடைப்பது போலிருந்தது. ஆனால், ஏன் என்று ஒன்றும் புரியவில்லை.
அந்த வீட்டின் பின்பக்க கதவை திறந்தாள் இந்து. அழகான பச்சை பசேலென்ற வயல் வெளி தோற்றம் கண் முன் விரிந்தது.
"எவ்வளவு அழகா இருக்கு பாருங்களேன்..." என்று குதூகலித்தாள் இந்து.
அங்கிருந்த மர நாற்காலியில் அமர்ந்து அமைதியாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவனருகில் ஓடிச் சென்றாள் இந்து.
"இந்த கிராமத்துல உங்க அம்மாவோட வீடு எங்க இருக்கு?" என்றாள்.
தெரியாது என்று தலையசைத்தான்.
"இங்க வந்தாங்களே அவங்களை கேட்கலாமா?"
சரி என்று தலை அசைத்தான் அர்ஜுன். அவன் முன் அமர்ந்து,
"வாங்க சாப்பிடலாம், எனக்கு பசிக்குது" என்றாள்.
"சரி சாப்பிடலாம்" என்று ஒரு டப்பாவை திறக்க போனவனை,
"இருங்க நான் உங்களுக்கு ஊட்டி விடுறேன்" என்றாள்.
"ஏன்?"
"உங்களுக்கு ஊட்டி விடணும்னு தோணுது"
அவனுக்கு ஊட்டிவிட தொடங்கினாள் இந்து. அவள் இன்னும் கூட தன்னை அதிகாரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அர்ஜுனுக்கு. அவள் எது சொன்னாலும் அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற வித்தியாசமாய் எண்ணம் ஏற்பட்டது அவனுக்கு.
சாப்பிட்டு முடித்து அவர்கள் எழுந்த போது, நாகுவும், கனகும் அவர்களுடைய அம்மாவுடன் வந்தார்கள்.
"எங்க அம்மா உங்களை பாக்கணும்னு சொன்னாங்க" என்றான் நாகு.
"வணக்கம்மா" என்றாள் இந்து.
"நீங்க கோவிலுக்கு வந்திருக்கிறதா என் பசங்க சொன்னாங்க. இந்தக் கோவிலைப் பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்? இது அவ்வளவு ஒன்னும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் இல்லயே..." என்றார் அவர்.
"இது என் மாமியார் ஊரு. இவர், அவங்க அம்மாவோட இங்க அடிக்கடி வந்திருக்கார்" என்றாள் அர்ஜுனை காட்டி.
"நீங்க யாரை சொல்றீங்க? உங்க அம்மா பெயர் என்ன?"
"சீதாராணி" என்றான் அர்ஜுன்.
"சீதாவோட பிள்ளையா நீ? நான் அவளோட சித்தி மக... இது அவங்க வீடு தான்" என்றார்.
விவரிக்க முடியாத நிலையில் இருந்த அர்ஜுனை பார்த்தாள் இந்து.
"நெஜமாவா சொல்றீங்க...?
இது அவங்க வாழ்ந்த வீடா?" என்றாள் நம்ப முடியாமல் இந்து.
"ஆமாம்மா. சீதா, கல்யாணம் முடிஞ்சு சென்னைக்கு போனப்போ, கூடவே அவங்க அம்மாவையும் கூட்டிக்கிட்டு போயிட்டா. அவங்க அம்மாவுக்கு அவ ஒரே மக. இந்த வீட்டை கவனிக்க, இங்க யாரும் இல்லங்குறதனால, இந்த வீட்டை வித்துட்டாங்க. சமீபத்துல தான், சீதா ஒரு ஆக்ஸிடெண்ட்ல இருந்துட்டான்னு கேள்விப்பட்டோம்"
ஆமாம் என்று தலையசைத்தாள் இந்து.
"இந்த வீட்டைப் புதுப்பிக்கணும்னு ரொம்ப நாளா நெனச்சுக்கிட்டு இருக்கோம்..."
"கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க... இந்த வீட்டை எனக்கு திருப்பி கொடுக்க முடியுமா?" என்றான் அர்ஜுன்
நாகுவும் கனகுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"நீங்க எவ்வளவு விலை கேட்டாலும் கொடுக்கிறேன்"
"ஆனா..." என்று தயங்கினார் அவர்.
"இல்லன்னா, வேற ஒரு இடம் வாங்கி, நீங்க கேட்கிற மாதிரி வீடு கட்டிக் கொடுக்கிறேன்... உங்க பசங்களுக்கு வேலையும் தரேன்..." என்ற அர்ஜுனை பார்த்து, அவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
*அதிர்ஷ்டம்* அவ்வளவு சுலபமாய் யார் கதவையும் கட்டுவதில்லை. இப்பொழுது அவர்களின் கதவை தட்டுகிறது... அதுவும் வெகு சத்தமாய்.
"சரிங்க... எங்களைப் பொறுத்த வரைக்கும், இது ஒரு சாதாரண வீடு. ஆனா உங்களுக்கு, இது எல்லாத்துக்கும் அப்பாற்பட்டதுன்னு தோணுது..."
அவருக்கு பதில் கூறாமல் மென்று முழுங்கினான் அர்ஜுன்.
"நீங்க நிஜமாவே எங்களுக்கு வேலை தர போறீங்க சார்?" என்றான் கனகு.
"உங்க ப்ரொஃபைலை குடுங்க... இல்லன்னா, பிசினஸ் தொடங்க பணம் வேணும்னாலும் வாங்கிக்கோங்க..."
"தொழில் தொடங்குற அளவுக்கு எங்களுக்கு அனுபவம் இல்ல, சார்."
"அப்படின்னா என் மேனேஜர் உங்களுக்கு ஃபோன் பண்ணுவார்"
"ரொம்ப நன்றி, சார்"
லேசாய் தலையசைத்தான் அர்ஜுன். இந்துவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவனுடைய அம்மாவின் வீடு அவனுக்கே திரும்ப கிடைத்துவிட்டது. அர்ஜுனுக்கு அது எவ்வளவு பெரிய விஷயம் என்பது அவளுக்கு தெரியாதா...?
"இந்த வீட்டு சாவியை நானே வச்சுக்கலாமா?" என்றான் அர்ஜுன்.
"தாராளமாக வச்சிக்கோங்க, சார்"
எதற்காக இப்பொழுதே அந்த வீட்டின் சாவியை கேட்கிறான் என்று புரியவில்லை இந்துவுக்கு. அவனுடைய அம்மாவின் மீது அவனுக்கு இருக்கும் பிரியம் என்பது அளவிட முடியாதாது என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் இந்து.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top