Part 35
பாகம் 35
இதற்கிடையில், சங்கர் இல்லம்...
"நீங்க சொல்றது உண்மையா பா?" என்றாள் ஹீனா.
"ஆமாம். உங்க அம்மா, ஜெயிலில் இருந்து தப்பிச்சுட்டா"
"எப்படிப்பா அவங்க அதை செஞ்சாங்க?"
"அது தான் எனக்கும் தெரியல. உங்க அம்மாவுடைய அதிகப்படியான தைரியம் எனக்கு பயத்தை தான் தருது. அவ என்ன செய்ய போறாளோ தெரியல"
"நீங்க ஒன்னும் கவலப்படாதீங்க. அவங்களால எதுவும் செய்ய முடியாது"
"அவளை குறைச்சி எடை போடாதே. அவ அர்ஜுனை கொல்லவும் துணிவான்னு நான் எப்பவுமே நெனைச்சது கிடையாது. அர்ஜுன் அவளை ஜெயிலுக்கு அனுப்புனதுக்காக, இப்போ அவன் மேல அவ ரொம்ப கோவமா இருப்பா. ஏதோ ஒரு திட்டத்தோட தான் அவ ஜெயிலில் இருந்து தப்பி இருக்கணும்"
"என்ன திட்டம்?"
"யாருக்கு தெரியும்?"
சங்கர், ஹீனாவின் கரங்களைப் பற்றிக் கொண்டார்.
"எனக்கு ஒரு உதவி செய்யறியா, மா?"
"நிச்சயமா செய்றேன், பா"
"உங்க அண்ணனையும் அண்ணியையும் ஜாக்கிரதையா இருக்க சொல்லு. அர்ஜுன் மாஷாவை ரொம்ப சாதாரணமா எடுத்துக்க போறான்..."
"இல்ல, பா. அண்ணன் அவங்களை சாதாரணமா எடுத்துக்கவே மாட்டார். ஏன்னா, அண்ணியை அவர் ரொம்ப காதலிக்கிறார்"
"அதனால தான் அவன் ஜாக்கிரதையா இருக்கணும்னு சொல்றேன். இந்துவுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா, அவன் உடைஞ்சி போய்டுவான்"
"அவரு இந்த நேரம், அம்மா தப்பிச்சி போன விஷயத்தை பத்தி தெரிஞ்சிகிட்டிருப்பார்"
"இருக்கலாம்... ஆனா, அதை அவனுக்கு தெரியப்படுத்த வேண்டியது நம்ம கடமை"
"அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. இந்த விஷயம், அவர்க சந்தோஷத்தை கெடுக்குமேன்னு தான் யோசனையா இருக்கு"
"இது ரொம்ப முக்கியமான விஷயம் ஆச்சே... "
"அவங்ககிட்ட இத பத்தி சொல்றதை விட, வேற ஒரு சரியான ஆள்கிட்ட சொன்னா சரியா இருக்கும்னு எனக்கு தோணுது "
"சரியான ஆளா?"
ஆம் என்று தலையசைத்தாள் ஹீனா.
அதை பற்றி இந்துவிடம் ஹீனாவே கூற வேண்டும் என்று நினைத்தார் சங்கர். பெரிய போராட்டத்திற்கு பிறகு, இப்பொழுது தான் இந்துவும், ஹீனாவும் நன்றாக பேசத் துவங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய உறவு, நின்று நிலைக்க வேண்டுமென்று நினைத்தார் சங்கர். எக்காரணத்தைக் கொண்டும், அர்ஜுனுக்கு ஹீனாவின் மீது சந்தேகம் வரக்கூடாது என்று நினைத்தார் அவர்.
....
மாஷாவின் முன்பு உணவுத் தட்டை வைத்தார் ரஹீம். ஏதோ, உணவையே பார்த்திராதவரை போல அதைத் தின்றார் மாஷா.
"ஏன் இவ்வளவு லேட்?" என்றார் சாப்பிட்டுக்கொண்டே.
"ஐயாவும், ஹீனா பாப்பாவும் இப்ப தான் வெளியே போனாங்க" என்றார் ரஹீம்.
"நான் இங்க இருக்கறது அவங்களுக்கு தெரியவே கூடாது"
"நீங்க இங்க இருக்கறது தெரிஞ்சா ரொம்ப பெரிய பிரச்சனை ஆயிடும்" என்றார் ரஹீம் தயக்கத்துடன்.
"நீ உன் வாயை மூடிக்கிட்டு இருந்தா, நான் இங்கே இருக்கிறது யாருக்கும் தெரியாது. அவங்க ரெண்டு பேரும் எங்கே போயிருக்காங்க?"
"தெரியலம்மா"
"நான் இல்லாதப்போ இங்கே ஏதாவது நடந்துதா?"
"அர்ஜுன் தம்பிக்கு, வர்ற ஞாயிற்றுகிழமை கல்யாண வரவேற்பு ஏற்பாடு பண்ணியிருக்காங்க"
"என்னது ரிசப்ஷனா?"
"ஆமாம். ஹீனா பாப்பா, சார்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க"
"இப்போ வீட்ல யாரு இருக்கா?"
"யாரும் இல்ல. தோட்டக்கார ராஜு மட்டும் தோட்டத்துல இருக்காரு"
"அவனை தோட்டத்திலேயே நிறுத்தி வச்சுக்கோ"
"சரிங்க"
தன் அறைக்கு வந்து, கதவை தாழிட்டுக் கொண்டு, லேண்ட்லைன் ஃபோனிலிருந்து யாருக்கோ அழைப்பு விடுத்தார் மாஷா.
.......
தங்கள் கம்பெனியின் பார்க்கிங் லாட்டில் ஹீனாவை பார்த்து ஆச்சரியப்பட்டான் கிரி. அவள் அவனுக்காகத் தான் காத்திருக்கிறாள் போல் தெரிகிறது. ஏனென்றால், அவள் அவனுடைய இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்தாள். அவளைப் பார்க்காதவன் போல, இங்குமங்கும் தேடினான் கிரி.
"நீங்க என்ன தேடுறீங்க?" என்றாள் ஹீனா.
"என் பைக்கை இங்க நிறுத்தி இருந்தேன்"
"இது தானே உங்க பைக்?"
"என் வண்டியில நான் எந்த பெண்ணையும் உட்கார வச்சுட்டு போகலயே" என்றான் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல்.
அவனுடைய வண்டியிலிருந்து கீழே இறங்கினாள் ஹீனா.
"இப்போ?"
"இப்ப இது என்னோடது தான்" என்றான்.
வண்டியில் அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்தான்.
"நீங்க என்ன இங்க வந்திருக்கீங்க?"
"உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன்"
"நான் கேட்டுகிட்டு தான் இருக்கேன்"
"எங்க அம்மா ஜெயில்ல இருந்து தப்பிசுட்டாங்க"
"நிஜமாவா?" என்றான் தனக்கு எதுவுமே தெரியாது என்பதைப் போல.
"ஆமாம்"
"ஆனா, அதை ஏன் என்கிட்ட சொல்றீங்க?"
"அண்ணன்கிட்ட சொல்லி, அவரை ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க"
"நிச்சயமா சொல்றேன். ரொம்ப தேங்க்ஸ். ஆனா, நீங்க இதை பத்தி உங்க அண்ணிகிட்டயே சொல்லி இருக்கலாமே..."
"அவங்க சந்தோஷமா இருக்குறதை நான் கெடுக்க விரும்பல. நிறைய கஷ்டத்துக்கு அப்புறம் அவங்க இந்த நிலைக்கு வந்திருக்காங்க. அவங்க வாழ்க்கையோட ரொம்ப முக்கியமான நாளுக்காக அவங்க தயாராயிகிட்டு இருக்காங்க. இந்த சமயத்துல அவங்களை பதட்டப்பட வைக்க வேண்டாம்னு நினைக்கிறேன். அதனால தான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்"
"நான் பாத்துக்கறேன்"
"தேங்க்யூ. நான் போயிட்டு வரேன்"
சரி என்று தலை அசைத்தான் கிரி. அங்கிருந்து கிளம்பி சென்றாள் ஹீனா. அவள் கூறுவது சரி தான். அர்ஜுனின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் படர்வதை கிரியும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். அர்ஜுனுக்கு தெரியாத விஷயம் எதுவும் இல்லை. ஆனால் அதைப் பற்றி ஹீனாவுக்கு எப்படி தெரிந்தது? அவளைப் பார்த்தால் நல்ல பெண்ணாக தெரிகிறாள். அர்ஜுனும் ஹீனாவும் ஒரே எண்ண எழுச்சியை உடையவர்கள். அவர்களது பெற்றவர்கள் செய்த தவறுக்காக அவர்கள் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம் அவர்கள், என்று எண்ணினான் கிரி.
சீதாராணி இல்லம்
அர்ஜுனின் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது புரியவே இல்லை இந்துவுக்கு. அவன் அவளை மிகவும் காதலிக்கிறான் என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவன் ஒரு சிறந்த கணவன் என்பதிலும் அவளுக்கு சந்தேகம் இல்லை. ஒரு விஷயம் தான் அவளுக்கு பிடிபடவே மாட்டேன் என்கிறது. அவன் ஏன் அவளிடமிருந்து விலகிச் செல்கிறான் என்பது தான் அது. ஒரு கணவனாய் அவளிடம் நெருங்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு தோன்றுவதில்லை. ஏன் அது? அவளுக்கு தெரிந்து கொண்டே ஆக வேண்டும். அதற்கு மேல், அவன் தன்னை நெருங்க வேண்டும் என்று ஏன் அவள் காத்திருக்க வேண்டும்? அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துகொண்டதால் அவன் தயங்கலாம் அல்லவா?
தங்கள் அறைக்கு வந்த இந்து, அர்ஜுன் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து பெருமூச்சு விட்டாள். மெல்ல கட்டிலில் வந்து படுத்துக் கொண்டாள். தன் இடது கையை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன். எவ்வளவு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறான் இவன்...! அவன் தலைமுடியை மெல்ல கோதி விட்டாள். அவனுக்கு நெருக்கமாய் படுத்துக்கொண்டு, அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மெல்ல அவன் முகத்தை வருடிவிட்டு, அவன் இதழில் முத்தமிட்டாள்.
அவ்வளவு நேரம் தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த அர்ஜுனால் அதற்கு மேல் நடிக்க முடியவில்லை. கண்ணை திறந்து இந்துவை பார்த்தான். இந்து திடுக்கிட்டாள் என்று கூற வேண்டியதில்லை.
"என்ன செய்ற நீ?" என்றான்.
பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் இந்து. அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான் அர்ஜுன்.
"நான் உன்கிட்ட என்னமோ கேட்டேன்..."
அவள் கண்கள் படபடத்தன.
"தூங்காம என்ன செஞ்சுகிட்டு இருக்க நீ?"
அவனுக்கு பதில் சொல்லாமல், அமைதியாய் இருந்தாள் இந்து.
"நான் பேசுறது கேக்குதா...? சொல்லு உனக்கு என்ன தான் வேணும்?"
"சின்ன..." என்றாள் மெல்லிய குரலில்.
"என்ன....?" என்று முகம் சுருக்கினான்.
"சின்ன அர்ஜுன்..." என்று அவள் கூற, திடுக்கிட்டான் அர்ஜுன்.
"என்ன நான்சென்ஸ் இது...?"
அவன் திரும்பிப் படுக்க முயன்ற போது, அவனை தன் பக்கம் இழுத்து, அவன் சட்டையை கெட்டியாகப் பற்றிக் கொண்டாள் இந்து.
"இது ஒன்னும் நான்சென்ஸ் இல்ல... சென்சோட தான் சொல்றேன்"
"வாய மூடு, இந்து..."
"முடியாது... உங்களால என் வாயை மூட முடியாது"
"ஓ... அப்படியா?"
"நீங்க தானே சொன்னீங்க, நம்பிக்கைங்குறது கற்பு மாதிரின்னு... நம்ம மேல நம்பிக்கையா இருக்கிற புருஷனுக்கு தானே அந்த கற்பும் சொந்தம்...?"
வாயடைத்துப் போனான் அர்ஜுன். அவன் முகத்தை தன் கையில் ஏந்தினாள். அவள் என்ன செய்யப்போகிறாள் என்று பதறினான் அர்ஜுன். அடுத்த நொடி, அவன் இதழ் பற்றினாள். அர்ஜுன் வெலவெலத்துப் போனான். கண்களை இறுக்கமாய் மூடி, நிலையாய் இருக்க முயன்றான். அவன் கையை எடுத்து, தன் இடையை வளைத்து கொள்ளச் செய்தாள் இந்து. அவளுடைய வினைக்கு, அவனிடமிருந்து எதிர்வினையை எதிர்பார்த்தாள் அவள். அர்ஜுனோ தடுமாறினான். அவளுடைய மென்னிதழ்கள், அவனுக்கு காதலின் கதகதப்பை அறிமுகப்படுத்தியது. முத்தத்தை முடித்துக்கொண்டு அவன் முகத்தை ஏறிட்டாள். ஏராளமான உணர்வுகளின் கலவையாய் இருந்தது அவன் முகம். அவன் தன்னிலை உணரும் முன், அவன் கழுத்தில் முத்தமிட்டாள். அது உறங்கிக்கொண்டிருந்த அர்ஜுனின் ஹார்மோன்களை செவிட்டில் அறைந்து எழுப்பியது. அவை தங்கள் லீலையை துவங்க தயாராயின. ஆனால் உணர்வுகளே வடிவான அர்ஜுன், அவ்வளவு எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்பட கூடியவன் அல்ல. தன்னருகில் இருந்தது இந்து என்பதால் தான் அவன் கலகலத்துப் போனான்.
இந்துவை கட்டிலில் தள்ளி, அவள் கையை பற்றிக் கொண்டான்.
"இந்து... இதோட நிறுத்து... புரியுதா உனக்கு...?" என்றான் வெறித்த பார்வையுடன்.
அவன் பற்றியிருந்த பிடி, மிகவும் தளர்வாய் இருந்தது. இந்து அவனைப் பார்த்து முறுவலித்தாள்.
"இதெல்லாம் உனக்கு விளையாட்டா?"
"நிறுத்துன்னு உங்க வாய் தான் சொல்லுது. ஆனா உங்களோட கை, நான் தொடரணும்னு நினைக்குது..." என்றாள்.
தன் இயலாமையை உணர்ந்து கண்ணை மூடினான் அர்ஜுன். அவன் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டாள் இந்து. அவள் மேலும் ஏதாவது செய்வதற்கு முன், கட்டிலை விட்டு கீழே இறங்கினான்.
"என்னங்க..."
"உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? உனக்கு ஹார்ட் டிரான்ஸ்பளான்ட்டேஷன் பண்ணியிருக்கு... இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல... நீ என்னடான்னா அதுக்குள்ள... ( பல்லைக் கடித்தான்) உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன செய்யறது?"
இதற்காகத் தான் அவன் அவளிடமிருந்து ஓடிக்கொண்டிருக்கின்றானா?
"எனக்கு ஒண்ணும் ஆகாது"
"ஓ அப்படியா....? நீ எப்போ கார்டியாலஜி படிச்ச?"
"அம்மா, கோவிந்தன்கிட்ட தாம்பத்திய வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராதுன்னு சொன்னாங்க..."
அதைக் கேட்டு பல்லைக் கடித்தான் அர்ஜுன்.
"நீயும்.... உங்க வீணாப்போன அம்மாவும்... இதையெல்லாம் கூட அந்த கோவிந்தன்கிட்ட சொல்லிட்டாளா அவ?" கட்டிலில் இருந்து ஒரு தலையனையை எடுத்து, அதை எட்டி உதைத்தான் அர்ஜுன். அது அந்த அறையின் மூலையில் சென்று பாவமாய் விழுந்தது.
"அமைதியா படுத்து தூங்கு. நீ இன்னும் சின்ன பொண்ணு தான். அதை மறந்துடாத. பெரிய பேச்செல்லாம் பேசாம தூங்கு"
"நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல. எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு" என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.
தன் கண்களை சுழற்றி விட்டு, அங்கிருந்து வெளியே செல்ல, கதவை நோக்கி நடந்தான்.
"என்னங்க... போகாதீங்க... நான் உங்களை ஒண்ணும் பண்ண மாட்டேன்... நீங்க பயப்பட வேண்டாம்... வாங்க... " பின்னாலிருந்து அவள் கத்த,
திரும்பி நின்று, அவளைப் பார்த்து முறைத்தான் அர்ஜுன். உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள் இந்து.
அர்ஜுனை பற்றி யோசித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் இந்து. அவளைத் தொடவே அவன் பயப்படுகிறான் என்றால், அவளை தொடவே போவதிலையா அவன்? வாழ்நாள் முழுவதும் இப்படியே இருந்து விடுவானோ? அவனால் அப்படி இருக்க முடியுமா? என்ன மனிதன் இவன்? இந்து திகைத்துப் போனாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top