Part 33

பாகம் 33

அந்த ஆள் யார் என்பதை புரிந்து கொண்டாள் இந்து. அவன் தந்தையை தவிர வேறு யாரை பற்றி பேச போகிகிறான் அர்ஜுன்?

"நீ அவளுக்கு இன்விடேஷன் கொடுக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. ஃபோன் பண்ணி கூப்பிடு. இன்விடேஷன் கொடுத்தா, அந்த ஆள், அதை தனக்கு சாதகமா பயன்படுத்திக்குவாரு. நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்." என்ற அவன் குரலில் கண்டிப்பும், கனிவும் இணைந்திருந்தது.

"உங்களுக்கு விருப்பம் இல்லன்னா, நான் ஹீனாவை கூப்பிட மாட்டேன்" என்றாள் இந்து.

"பரவாயில்ல... அந்தப் பொண்ணு அவங்க அம்மா மாதிரி இல்லாத வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல" என்றான் அர்ஜுன்.

"அவ அவங்க அம்மா மாதிரி இல்லங்க"

"அதனால தான் அவளை உன்கிட்ட நெருங்க விடுறேன்... இல்லனா அவ நம்ம வீட்ல கால் வைக்க முடியாது. நான் மறுபடியும் சொல்றேன், அந்த ஆள்கிட்ட எந்த பேச்சும் வேண்டாம்..."

"நான் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. நம்ம வாழ்க்கையில இது ரொம்ப பெரிய நிகழ்ச்சி. உங்க அப்பாவுக்கு அதுல கலந்துகணும்னு ஆசை இருக்குறது நியாயம் தானே?" என்றாள் தைரியத்தை வரவழைத்து கொண்டு.

"எங்கம்மா, அவரைத் தன்னோட வாழ்க்கையாவே நினைச்சி மதிச்சாங்க. ஆனா அவர், அவங்களை தன் வாழ்க்கையில ஒரு பகுதியா கூட நினைக்கல. அப்படிப்பட்ட ஒரு மனுஷன், என் வாழ்க்கையில, ஒரு சின்ன பாகமா இருக்கவும் நான் விரும்பல..."

அவள் கையை இறுகப் பற்றிக்கொண்டான் அர்ஜுன்.

"எங்க அம்மாவுக்கு அப்புறம், நீ கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். அந்த ஆளுக்கு சப்போர்ட் பண்ணி, நீ என்னை வருத்தப்பட வைக்க மாட்டேன்னு நான் நம்புறேன். விஷயத்தோட ஆழத்தை புரிஞ்சுக்கோ, இந்து. என்னோட அடிமனசுல இருந்து நான் அந்த ஆளை வெறுக்கிறேன்..."

சரி என்று மெல்ல தலையசைத்தாள் இந்து. அந்த விஷயத்தின் ஆழம் அவளுக்குப் புரியாமல் இல்லை. அர்ஜுன் அவனுடைய அம்மாவை மிக அதிகமாய் நேசிக்கிறான். அதே நேரம், அவன் அம்மாவை எவ்வளவு நேசிக்கிறானோ, அந்த அளவிற்கு, அவனுடைய தந்தையை வெறுக்கிறான். அவனுடைய வாழ்க்கையில் இந்து வந்ததற்குக் காரணமே, அவன் அவனுடைய அம்மாவின் மீது கொண்டுள்ள அன்பு தானே...! அது இந்துவிற்கு தான் தெரியுமே... அவளுடைய எண்ண சங்கிலி அறுபட்டது, அர்ஜுன் அவள் கன்னத்தை தட்டியபோது.

"இந்து..."

"ம்ம்ம்...?"

"என்ன ஆச்சு?" என்றான்.

ரசிக்கத்தக்க புன்னகையுடன் ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள் இந்து.

"ரிசப்ஷனுக்கு, உன்னோட டிரஸ்சை நான் தான் செலக்ட் பண்ண போறேன்" என்றான் அர்ஜுன்.

"நீங்க எந்த புடவை எடுத்துக் கொடுத்தாலும் நான் கட்டிக்குவேன்" என்றாள் இந்து.

"புடவையா...? நான் யாருன்னு உனக்கு தெரியுமா?" என்றான் புன்னகையுடன்.

"என்னோட புருஷன்..." என்றாள் தயக்கத்துடன்.

அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தான் அர்ஜுன்.

"நான் உன் புருஷன் தான்... சந்தேகமே வேண்டாம்... உலகத்தைப் பொறுத்தவரை நான் வியாபார உலக சக்கரவர்த்தி..."

"வியாபார சக்கரவர்த்தியோட மனைவின்னா, அவங்க புடவை கட்ட மாட்டாங்களா?" என்றாள் குழப்பதுடன்.

"கட்டலாம்... ஆனா, நான் வியாபார சக்கரவர்த்தின்னா, என்னோட ஒய்ஃப் ஒரு மகாராணி... அதை மறந்துடாதே..."

பெயர் கூறமுடியாத ஒரு முகபாவத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து. மகாராணியா...? உண்மையாகவா...?

"புரிஞ்சுதா? புடவையை எல்லாம் மறந்துடு.... அவ்வளவு தான்..."
என்று கூறிவிட்டு குளியல் அறையை நோக்கி சென்றான், முகம் கை கால் அலம்ப.

கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள், இந்து. மகாராணி என்று அர்ஜுன் கூறியது அவள் காதுகளில் எதிரொலித்தது. அவள் ஒரு மகாராணியா?

எவ்வளவு நேரம் அவள் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் என்று தெரியவில்லை. அர்ஜுன் இரண்டு முறை அவளை அழைத்தும், அவள் பதில் கூறாமல் இருக்கவே, அவன் வந்து அவள் தோளை தட்டிய பொழுது தான் அவள் சுய நினைவு பெற்றாள்.

தன் உதடுகளை  அழுத்துக்கொண்டு புருவத்தை உயர்த்தினான் அர்ஜுன், இந்து கண் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து.

"உனக்கு என்ன ஆச்சு?"

அவள் பதில் கூறாமல், அப்போதும் அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"என்னோட கண்ணை பத்தி லெக்ச்சர் கொடுக்க போறியா?" என்று, பார்ப்பவர் மனதைக் கொல்ல கூடிய புன்னகை சிந்தினான்.

ஒரு நொடியில், அந்த புன்னகையை காணாமல் போகச் செய்தாள் இந்து. அவன் முகத்தைத் தன் கையில் ஏந்தி, அவன் இதழ் மீது தன் இதழை அழுத்தமாய் அவள் ஒற்றினால், அந்தப் புன்னகை காணாமல் தானே போகும்...! அவன் இதழ் மீது இருந்து தன் இதழ்களை பிரிக்கும் எண்ணமே இல்லை போலிருக்கிறது இந்துவுக்கு. இந்து அளித்த அதிர்ச்சியால்,  முதன்முறையாக தன் புத்தி, பேதலிப்பதை உணர்ந்தான் அர்ஜுன். அவள் ஏன் சட்டென்று உணர்ச்சி வசப்பட்டாள் என்று புரியாதா என்ன அர்ஜுனுக்கு...? அவள் இந்துவாயிற்றே... அவள் உணர்ச்சி வசப்படவில்லை என்றால் தான் அதிசயம்...

ஒருவழியாய் முத்தத்தை முடித்துக் கொண்டு, அர்ஜுனை தழுவிக் கொண்டாள். அர்ஜுனும் அவளை தன் கரங்களால் சுற்றி வளைத்துக் கொண்டான்.

"என் வாழ்க்கை முழுசும் நான் ஒரு வேலைக்காரி மாதிரி நடத்தப்பட்டேன். நீங்க என்னை மகாராணின்னு சொன்னதெல்லாம் ரொம்ப அதிகமா தெரியுது. வேலைக்காரி, மகாராணியா ஆகுறதெல்லாம் கதையில தான் நடக்கும்." என்றாள் மெல்லிதான புன்னகையுடன்.

"ஒரு பேராசைக்கார பொம்பளை உன்னை வேலைக்காரி மாதிரி நடத்தினா, நீ வேலைக்காரியாயிட மாட்ட... நான் உயிரோட இருக்கிற வரைக்கும், என்னுடைய சாம்ராஜ்ஜியத்தில் நீ  மகாராணியா தான் இருப்ப. அது எங்க அம்மா மேல சத்தியம்..." என்றான் அர்ஜுன்.

அவன் கூறுவதை அவள் நம்ப தானே செய்கிறாள்...? அப்படி இருக்கும் பொழுது, அவனுடைய அம்மாவின் மீது சத்தியம் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஒரு வேளை, அவன் அவனுடைய அப்பாவை போல் இல்லை என்ற உறுதிமொழியை வழங்குகிறானோ...?

"நீங்க வருத்தப்படாதீங்க. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு"

"நான்... "

அவன் பேச்சை துண்டித்து,

"எனக்கு ஒன்னுமில்ல... நான் நல்லா தான் இருக்கேன்னு பொய் சொல்லாதீங்க. எனக்கு தெரியும் உங்களைப் பத்தி"

அர்ஜுன் புன்னகைத்தான். இப்பொழுதெல்லாம் அவனால் தன் மனைவியிடம் பொய் கூட கூற முடியவில்லை. அவள் தான் சுலபமாய் கண்டு பிடித்து விடுகிறாளே. அவன் ஒரு விஷயத்தை இந்துவுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைத்திருந்தான். அதற்கான சந்தர்ப்பம், இது தான் என்று அவன் நினைத்தான். அவளை கட்டிலின் மீது அமர வைத்து, அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

"இந்து, எங்க அம்மாவை ஏமாத்துனதுக்காக, நான் எங்க அப்பாவை எந்த அளவுக்கு வெறுக்கிறேன்னு உனக்கு தெரியாது. அவரோட இனிஷியலை கூட நான் போட்டுகிறது இல்ல. அதுல இருந்தே உனக்கு புரிஞ்சிருக்கும் நான் அவருக்கு குடுக்குற மரியாதை என்னனு..."

மெல்ல தலையசைத்தாள் இந்து.

"அவரைப் பத்தியோ, உங்க சித்தி உன்னை எப்படி நடத்தினாங்க அப்படிங்கறதை பத்தியோ, நீ நினைக்க வேண்டிய அவசியமில்ல. உனக்கு அர்ஜுன் இருக்கான். அதைப் பத்தி மட்டும் நீ நெனச்சா போதும்" என்றான்.

தன் கைகளை நீட்டி, தன்னை அணைத்துக் கொள்ளுமாறு  சைகை செய்தாள் இந்து. அவளுக்கு ஆச்சரியம் தரும் வகையில், அவளை அணைத்துக்கொண்டான் அர்ஜுன். அவன் வழக்கமாய் செய்வது போல, இந்த முறை, அவள் இதயத்துடிப்பைக் கேட்க அவன் நினைக்கவில்லை. ஏனென்றால், அப்பொழுது, அவனுக்கு அவனுடைய அம்மாவைவிட அவன் மனைவியின் அரவணைப்பு தேவைப்பட்டது. அவனுக்கு புரிந்து போனது, அவன் அம்மா மட்டுமல்ல அவனுடைய மனைவியும் அவனுக்கு மன நிம்மதியைத் அளிக்க முடியும் என்று.

மறுநாள்

திருமண வரவேற்பிற்கு ஹீனாவை அழைக்க, அவர்களுடைய இல்லத்திற்கு ஃபோன் செய்தாள் இந்து. அந்தப் பக்கம் மணி அடித்தது. ஹீனா அந்த அழைப்பை ஏற்பாள் என்று காத்திருந்தாள் இந்து. ஆனால், ஹீனாவிற்கு பதிலாக வேறு யாரோ எடுத்து பேசினார்கள். ஆம், அது சங்கர் தான். ஆனால், இந்து அதை அறிந்திருக்க நியாயமில்லை. அவள் வேலைக்காரர் பேசுவதாக எண்ணி பேசினாள்.

"ஹீனாகிட்ட பேசணும். அவங்க இல்லயா?"

"அவங்க, ரூம்ல இருக்காங்க. நீங்க அவங்க மொபைலுக்கு ஃபோன் பண்ணுங்க"

"என்கிட்ட அவளுடைய மொபைல் நம்பர் இல்ல. அவளைக் கொஞ்சம் கூப்பிட முடியுமா?"

"சரி... நீங்க யார் பேசுறீங்க?" என்றார்.

"நான் அவளோட அண்ணி"

சங்கருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவருடன் பேசிக் கொண்டிருப்பது அவருடைய மருமகள். அவருடைய மகன், அவர் மீது கொண்டிருக்கும் வெறுப்பை பற்றி அவருக்கு தெரிந்திருந்த போதிலும், அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை.

"எப்படிடா அம்மா இருக்க?" என்றார்.

இந்த அளவிற்கு கரிசனத்துடன் பேசுவது நிச்சயம் அர்ஜுனுடைய அப்பாவாக தான் இருக்க வேண்டும் என்று புரிந்தது இந்துவுக்கு. அவளுடைய மாமனார்... இப்பொழுது அவள் என்ன செய்வது? ஒரு மருமகளாக, அவளுடைய மாமனாருக்கு மரியாதை செலுத்த வேண்டுமா? அல்லது, அர்ஜுனின் மனைவியாக, அவன் கூறிய வார்த்தைகளை அவள் பின்பற்ற வேண்டுமா?

அர்ஜுன் என்று வந்து விட்டால், மேலே யோசிக்க எதுவுமே இல்லை. அர்ஜுன் அவளுக்கு கணவன் மட்டுமல்ல... அவன் தான் அவளுக்கு எல்லாமும். அவளை மகாராணி ஆக்கிய மகராஜன் அவன்... அங்கு குழப்பத்திற்கு இடமே இல்லை.

அடுத்த நொடி, ஏதும் கூறாமல் அழைப்பை துண்டித்தாள் இந்து.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top