Part 32

பாகம் 32

இந்துவுக்கு தூக்கமே வரவில்லை. அர்ஜுனை நெஞ்சிலும், குழப்பத்தை மனதிலும் கொண்டிருந்தாள் அவள். அர்ஜுன் பிரண்டு படுத்த பின், நடு இரவில் தான் அவளுக்கு தூக்கமே வந்தது. அடுத்த நாள் காலையும் அர்ஜுனிடம் எந்தவித வித்தியாசமும் தென்படவில்லை. அவன் வெகு சகஜமாய் இருந்தான். இதற்கு மேல் இந்துவால் பொறுமையாய் இருக்க முடியவில்லை. அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு பின்னால் சென்று நின்றாள். அன்றும் அவள் புடவை தான் உடுத்திக்கொண்டிருந்தாள். அவள் பின்னால் நிற்பதை உணர்ந்து திரும்பினான் அர்ஜுன்.

"ஏதாவது சொல்லணுமா?" என்றான் டை கட்டியபடி.

"நீங்க என் மேல கோவமா இருக்கீங்களா?"

அவனுடைய கைகள், டை கட்டுவதை நிறுத்தியது.

"நான் ஏன் உன் மேல கோவமா இருக்க போறேன்?"

"ஏன்னா, நீங்க என்கிட்ட பேச மாட்டேங்கிறீங்க..."

"இப்போ நான் யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்?" என்றான் புருவத்தை உயர்த்தியபடி.

"நான் அந்த பேச்சை பத்தி சொல்லல"

"வேற எந்த பேச்சை பத்தி சொல்ற?"

"அது வந்து..."

"நீ ஏன் இப்படி குழம்பிப் போயிருக்க?"

"ஏன்னா நான் குழம்பிப் போயிருக்கேன்..." என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

"ஏன்?"

"எனக்கு தெரியல..."

"நேத்து ராத்திரி நீ சரியா தூங்கலன்னு  நினைக்கிறேன்..."

"ஆமா, ஆமா நான் சரியா தூங்கல"

"வா" என்று அவள் கையை பிடித்து, கட்டிலை நோக்கி  இழுத்து சென்றான்.

"படு"

"இல்லங்க..."

"ஷ்ஷ்... சொல்றத செய்"

அவளை படுக்க வைத்து, போர்வையால் போர்த்தி விட்டான்.

"நிம்மதியா தூங்கு. எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. சீ யூ"

தன் மடிக்கணினியையும், கோட்டையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான் அர்ஜுன். போர்வையை எறிந்து விட்டு, கட்டிலில் அமர்ந்து தன் தலையில் கை வைத்துக் கொண்டாள் இந்து.

எஸ் ஆர் கம்பெனி

அங்கு வந்திருந்த ஒரு பங்குதாரருக்கு எதையோ புரியவைக்க போராடிக் கொண்டிருந்தான் கிரி.

"அர்ஜுனை விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட விடாம தடுத்தாளே, அந்த பொண்ணு யாரு?" என்றான் மகேஷ் என்ற ஒரு பங்குதாரர்.

"அவங்க மிஸஸ் அர்ஜுன்"

"மிஸஸ் அர்ஜுனா? ஆனா, நாங்க யாருமே அவங்களை பார்த்ததே இல்லயே? அவங்களைப் பத்தி யாருக்குமே தெரியலயே...?"

"அவங்க கல்யாணம் பாண்டிச்சேரியில நடந்தது. ரொம்ப அவசரமா நடந்ததால, எங்களால யாரையும் கூப்பிட முடியல"

"அவ்வளவு அவசரமா கல்யாணம் செஞ்சுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?"

அவரிடம் காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றியது கிரிக்கு.

"அந்த பொண்ணுக்கும் அர்ஜுனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லயே. அர்ஜுன், ஃபாரின் ரிட்டன்... அந்த பொண்ணு லோக்கலா இருக்காளே"

"அவங்களை அர்ஜுனுக்கு பிடிச்சிருக்கு அது தான் முக்கியம்..." என்றான் கிரி.

"என்னை தப்பா எடுத்துக்காத கிரி. அவங்க உண்மையிலேயே அர்ஜுனுடைய வைஃப் தானான்னு எல்லாருக்கும் சந்தேகம் இருக்கு"

அப்பொழுது அவர்கள், அர்ஜுனுடைய காட்டமான குரலைக் கேட்டார்கள்.

"என் ஒய்ஃபை பத்தி கேவலமான சந்தேகம், மத்தவங்களுக்கு இருக்கா...? உனக்கு இருக்கா?"

மகேஷைவிட கிரி பதற்றமானான்.

"நீ கோபப்பட வேண்டிய அவசியமில்ல, அர்ஜுன்"

"நீ பேசிக்கிட்டு இருக்கிறது என்னோட ஒய்ஃபை பத்தி"

"இது இந்தியா... லண்டன் இல்ல... ஜனங்க இப்படித் தான் நினைப்பாங்க. லிவ்-இன் வாழ்க்கை முறையெல்லாம் இந்தியாவுல விமர்சனத்துக்கு உள்ளாகத் தான் செய்யும். அவங்க உண்மையிலேயே உன்னுடைய ஒய்ஃபா இருந்தா, ஏன் அவங்கள யாருக்குமே காட்டாம வீட்டுக்குள்ளேயே வச்சிருக்க? அப்போ எல்லாரும் உன்னை கேள்வி கேட்கத் தான் செய்வாங்க"

"ஐ டோன்ட் கேர் அபவுட் த ப்ளடி கொஸ்டின்ஸ்..."

"ஜனங்க ஒரு பொண்ண பத்தி என்ன நினைப்பாங்கன்னு நான் உன்கிட்ட சொல்லிட்டேன்... அதுக்கு மேல உன் இஷ்டம்" என்று அங்கிருந்து நகர்ந்து சென்றான் மகேஷ்.

ஆத்திரத்துடன் தன்னுடைய அறைக்குச் சென்றான் அர்ஜுன். அவனுக்கு, மகேஷின் முகத்தை அடித்து உடைக்க வேண்டும் என்னும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்....! அப்பொழுது அவனுடைய அறைக்கு கிரி வந்தான்.

"அர்ஜுன்..."

"வாட் த பிளடி ஹெல்...?" என்று கத்தினான்.

"நம்ம ஜனங்க வாயை மூடித் தான் ஆகணும்"

"எதுக்காக நான் மத்தவங்களை பத்தி கவலைப் படணும்?"

"நீ கவலைப்பட்டு தான் ஆகணும். ஏன்னா, இது இந்து சம்பந்தப்பட்ட விஷயம்"

ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான் அர்ஜுன். அவன் கூறுவது சரி தான். மகேஷ் கூறியதை அவன் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது தான். தன்னிடம் பேசியது போல், வேறு யாராவது ஒருவர் இந்துவிடம் பேசினால் என்ன ஆவது? அவள் நிச்சயம் காயமடைவாள். அவளுடைய மரியாதையை காக்க வேண்டியது அவனது கடமை. அவளை தலைகுனிய விடக்கூடாது... எப்பொழுதும்... எதற்காகவும்...

ஊர் வாயை மூட, அவன் உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்.  அதைப்பற்றி யோசிக்க அவனுக்கு சில வினாடிகள் தான் தேவைப்பட்டது. செய்ய வேண்டியது என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திடமாய் கிரியை பார்த்தான் அர்ஜுன்.

"கிரி..."

"சொல்லு, அர்ஜுன்..."

"வர்ற சண்டே, ரிஸப்ஷன் பார்ட்டி அரேஞ்ச் பண்ணு. எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்குற அளவுக்கு, பார்ட்டி கிராண்டா இருக்கணும். இஸ் தட் க்ளியர்?"

"எஸ், அர்ஜுன்... " என்றான் குதுகலமாய் கிரி.

"நம்மளோட எல்லா ஷேர் ஹோல்டர்ஸ், அன்ட் களயன்ட்ஸையும் கூப்பிடு. நம்ம கம்பெனி ஸ்டாஃபுக்கு ரெண்டு மாசம் போனஸ் அனோன்ஸ் பண்ணு"

"ஓகே"

"இந்து விஷம் சாப்பிட்டாளே, அதே ஹாலை பார்டிக்கு புக் பண்ணு"

"டன்"

"ஏதாவது ஐடியாஸ் வேணும்னா இந்துகிட்டயும் கேட்டுக்கோ. அவ கம்ஃபர்டபிளா இருக்கணும்"

"ஓகே "

"இப்போ நடக்கப் போற மீட்டிங் முடியறதுக்கு முன்னாடி இன்விடேஷன்ஸ் பிரின்ட் பண்ணி கொண்டு வா"

சரி என்று புன்னகையுடன் தலையசைத்தான் கிரி, அர்ஜுனின் மனதில் இருப்பது என்னவென்று புரிந்து கொண்டு.

அர்ஜுன் மீட்டிங்கிற்கு செல்ல, கிரி திருமண வரவேற்பிற்கான ஏற்பாடுகளைச் செய்யச் துவங்கினான். அதை செய்ய அவன் பெரிதாய் எதுவும் சிரமப்படவில்லை. சில தொலைபேசி அழைப்புகளின் மூலமே அனைத்தையும் செய்து முடித்தான். பத்திரிக்கையில் எழுத வேண்டிய விஷயத்தை, வாட்ஸ்ஆப்பில் அனுப்பினான். இரண்டு மணிநேரத்திற்குள் அதைப் பெற, மூன்று பங்கு பணம் கொடுத்தான்.

கூட்டம் முடிந்த போது, சரியாய் பத்திரிகையுடன் மீட்டிங் நடைபெற்ற அறைக்குள் நுழைந்தான் கிரி. அதை அவன் அர்ஜுனின் முன்வைக்க, அதிலிருந்து ஒன்றை எடுத்து, மகேஷிடம் நீட்டினான் அர்ஜுன். அதைக் குழப்பத்துடன் வாங்கிப் பார்த்தான் மகேஷ். அதை பிரித்துப் பார்த்தவனின் முகத்தில் அதிர்ச்சி தாண்டவமாடியது. தன் பார்வையை, அவன் அர்ஜுனின் முகத்தை நோக்கி திருப்ப, அர்ஜுன் அலட்சிய புன்னகையுடன் நின்றிருந்தான்.

"என்னோட மேரேஜ் ரிசப்ஷனுக்கு மறக்காம வந்துடுங்க, மிஸ்டர் மகேஷ்..." என்றான் புன்னகை மாறாமல்.

மகேஷால் நம்பவே முடியவில்லை, இரண்டு மணி நேரத்தில் ஒரு திருமண வரவேற்பை திட்டமிட முடியும் என்று. இல்லை... இரண்டு மணி நேரத்தில் அல்ல... அதை அவன் சில நிமிடத்தில் செய்திருக்க வேண்டும். பத்திரிகையுடன் அழைப்பு விடுக்க தான் அவனுக்கு இரண்டு மணிநேரம் தேவைப்பட்டிருக்கிறது. எப்படி அவனால் இதெல்லாம் முடிகிறதோ...! இவன் என்ன ரகமோ...! என்பதைப் போல அர்ஜுனை விசித்திரமாய்  பார்த்தான் மகேஷ்.

"இதுக்கு அப்புறம் என் வைஃபை பத்தி பேசுர தைரியம், எவனுக்கும் வராதுன்னு நினைக்கிறேன்..." என்றான்.

தன் முகத்தில் அரும்பிய வியர்வை முத்துக்களை துடைத்துக்கொண்டான் மகேஷ்.

"கிரி..."

"எஸ், அர்ஜுன்"

"இதுக்கு மேல என் ஒய்ஃபை பத்தி பேசினா நான் என்ன செய்வேன்னு எல்லாருக்கும் எடுத்து சொல்லு" என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு கிளம்பினான். கிளம்பும் முன் மகேஷின் மீது தன் பார்வையால் நெருப்பை உமிழ தவறவில்லை அவன்.

சீதாராணி இல்லம்

தன் கையில் இருந்த, பாட்டாடோபமாக ஜோலித்த, திருமண வரவேற்பு  பத்திரிகையை ஆச்சரியமாய் பார்த்தாள் இந்து. அப்படிப்பட்ட ஒரு பத்திரிக்கையை அவள் இதற்கு முன் பார்த்ததே இல்லை.

"நமக்கு ரிசப்ஷனா?" என்று, அந்த பத்திரிக்கையை விட அழகாய் சிரித்தாள் இந்து.

"இல்ல, யாரோ அர்ஜுனுக்கும் இந்துவுக்குமாம்..." என்று சிரித்தான் அர்ஜுன்.

"இந்த பத்திரிக்கை ரொம்ப அழகா இருக்குங்க. நான் இதுக்கு முன்னாடி இப்படி பார்த்ததே இல்ல"

பத்திரிக்கைக்கே இப்படியா? என்று நினைத்தான் அர்ஜுன்.

"நீ யாரையாவது ரிசப்ஷனுக்கு கூப்பிட போறியா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் யோசிக்காமல்.

"எத்தனை இன்விடேஷன்ஸ்  வேணுமோ எடுத்துக்கோ"

இரண்டு பத்திரிக்கைகளை எடுத்தவள், ஒன்றை சோகமாய் திரும்பி வைத்தாள்.

"என்ன ஆச்சு?"

"என்னோட ஃப்ரண்ட் ரேவதியை கூப்பிடலாம் நினைச்சேன்... "

"கூப்பிடு..."

"நம்ம ரிசப்ஷன் ஞாயிற்றுக்கிழமை. இன்னும் ஒரு வாரம் கூட இல்ல. அதுக்கு முன்னால அவளால எப்படி பாண்டிச்சேரியில இருந்து வர முடியும்?"

"ஏன் வர முடியாது? பாண்டிச்சேரி இங்க இருந்து நாலு மணி நேரம் தானே?"

"உங்ககிட்ட பெரிய பெரிய கார் இருக்கு. நீங்க எங்க வேணா ஈஸியா போவீங்க. அந்த மாதிரி எல்லாரும் போக முடியுமா?"

"அந்த பெரிய பெரிய கார்ல இருந்து, ஒரு காரை உன் ஃபிரண்டை கூட்டிட்டு வர என்னால அனுப்ப முடியும் தானே?"

"என் ஃபிரண்டை கூட்டிகிட்டு வர, நீங்க காரை அனுப்ப போறீங்களா?" என்றாள் நம்ப முடியாமல்.

ஆமாம் என்று தலையசைத்தான் அர்ஜுன்.

"நீங்க ரொம்ப நல்லவரு..." என்று சந்தோஷமாய்  அவனை கட்டிக்கொண்டாள்.

"இன்னொரு இன்விடேஷன் யாருக்கு?"  என்று அவன் கேட்டவுடன், அவளுடைய பிடி தளர்ந்தது. அதை உணர்ந்த அர்ஜுன் அவள் கையை பற்றிக்கொண்டு அவள் முகத்தை கவனித்தான்.

"நான் அதைப் பத்தி இன்னும் முடிவு செய்யலங்க. ஏன்னா, நீங்க என்ன சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியல"

"நீ எதுவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லலாம்"

"ஹீனா..."

அவள் கையை தன் கரத்தில் இருந்து விடுவித்தான்.

"என்னங்க..."

"ஓகே, ஃபைன். ஆனா, ஒரு விஷயம்..."

"என்னது...?"

"அந்த ஆளு வரக் கூடாது..." என்றான் காட்டமாக.

அந்த ஆளு யார் என்பதைப் புரிந்துகொள்ள, இந்துவிற்கு என்ன கடினமாக இருந்திருக்க போகிறது...?

 தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top