Part 31
பாகம் 31
அர்ஜுனுடைய ஊடுருவும் பார்வை, அந்த மூன்று பெண்களின் வயிற்றை மத்தால் கடைந்து. தன் கைகளின் நடுக்கத்தை மறைக்க அவற்றை ஒன்றுடன் ஒன்றாய் பிணைத்துக் கொண்டாள் ஹீனா. இந்துவுக்கோ, அவள் தொண்டை வற்றி போனது போல் தோன்றியது. ஆனால் ரம்யாவிற்கு, அர்ஜுன் மேல் சிறிது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால், விஷம் கலந்த உணவை பற்றி, இந்துவிற்கு கூறியது ஹீனா தான் என்று அவள் தானே அவனிடம் கூறியது... இருந்தபோதிலும் அவள் தலை குனிந்து நின்றாள்.
மெல்ல மெல்ல, அர்ஜுனை நோக்கி அடி எடுத்து வைக்க துவங்கினாள் இந்து. அர்ஜுனும் அவள் கண்களிலிருந்து தன் கண்களை அகற்றாமல், அவளை நோக்கி முன்னேறினான். அவன் கையை மென்மையாய் பற்றிக்கொண்டாள் இந்து.
"என்னங்க..."
அவளுடைய சில்லிட்டுப் போன உள்ளங்கையும், நடுக்கமான குரலும், அவளுடைய நிலையை கூறியது. அவளுடைய மென்மையான கரங்களுக்கு, அர்ஜுனை வேரோடு சாய்க்கும் சக்தி இருந்தது... அதை அர்ஜுன் உணர்ந்தான்.
"எனக்கு ஹீனா தான், சாப்பாட்டில் விஷம் கலந்திருக்கிற விஷயத்தை ஃபோன் பண்ணி சொன்னா. அவ நீங்க நினைக்கிற மாதிரி இல்லங்க. அவங்க அம்மா செஞ்ச தப்புக்காக, அவ உண்மையிலேயே ரொம்ப வருத்தப்படுறா. நான் எப்படி இருக்கேன்னு பார்க்க தான் அவ இங்க வந்திருக்கா. நானும் கூட, உங்களை காப்பாத்துறதுக்காக, சரியான நேரத்துல அவ செஞ்ச உதவிக்காக அவளுக்கு நன்றி சொல்லணும்னு நினைச்சேன்ங்க..." தட்டுத்தடுமாறி அனைத்தையும் ஒப்பித்து முடித்தாள் இந்து, நடுங்கும் குரலில்.
தன் கையை பற்றியிருந்த அவள் கையை மெல்ல விடுவித்து, அவளுக்கு மேலும் பதற்றத்தை கூட்டினான் அர்ஜுன். ஒன்றும் சொல்லாமல் நடந்தான், ஹீனாவிடம் வந்த பொழுது, நின்று அவளை பார்த்தான். ஹீனா தன் துப்பட்டாவை, பயத்துடன் இருக்கமாய் பற்றிக்கொண்டாள்.
ஆனால் யாரும் எதிர் பார்க்காத வண்ணம், ஹீனாவை பார்த்து,
"தேங்க்ஸ்..." என்று கூறிவிட்டு, தன் அறையை நோக்கி சென்றான் எந்தவித குழப்பமும் இல்லாத முகத்துடன்.
அங்கிருந்த அந்த மூன்று பேரின் இதயங்களுக்கும் எதுவும் ஆகாமல் இருந்ததற்காக, நாம் கடவுளுக்கு நன்றி கூறலாம். அவர்கள் மூன்று பேரும், சிலை போல் நின்று கொண்டிருந்தார்கள். நடந்ததை புரிந்து கொள்ள, அவர்களுக்கு சில வினாடிகள் தேவைப்பட்டது.
அர்ஜுனாவது.... ஹீனாவிற்கு நன்றி கூறுவதாவது...!
அர்ஜுன் ஏறிச்சென்ற மாடி படிக்கட்டுகளை, வெறித்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள் அந்த பெண்கள்.
அதே வெறித்த பார்வையுடன், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். தன் கையால், வாயை மூடிக்கொண்டு சிரித்தாள் இந்து, நம்பமுடியாமல். ஹீனாவோ சந்தோஷக் கண்ணீர் வடித்தாள். அவளால் நம்பவே முடியவில்லை, அர்ஜுன் தனக்கு நன்றி கூறினான் என்பதை. ஓடிச்சென்று இந்துவை கட்டிக்கொண்டு அழுதாள். அவளது முதுகை அன்பாய் தட்டிக் கொடுத்தாள் இந்து.
"எனக்கு தெரியும் அவரைப் பத்தி. அவரை மாதிரி யாராலும் வர முடியாது" என்றாள் இந்து.
"அவருடைய மென்மையான, இன்னொரு பக்கத்தை நான் பார்ப்பேன்னு கனவுல கூட நினச்சதில்ல, அண்ணி. இது எல்லாமே உங்களால தான். ரொம்ப தேங்க்ஸ், அண்ணி"
"நீயும் எல்லா சந்தோஷத்தையும் அடைய தகுதியானவள் தான்"
"ஐ லவ் யூ சோ மச், அண்ணி"
"நீ எனக்கு செஞ்ச உதவிக்காக, ஐ லவ் யூ டூ"
"அது என்னோட கடமை. உண்மைய சொல்லப் போனா, நான் ஒரு சுயநலவாதி. எங்க அம்மாவை ஒரு கொலைகாரியா பார்க்க நான் விரும்பல. ஏற்கனவே அவங்க நிறைய பாவம் பண்ணிட்டாங்க" தன் கன்னங்களில் உருண்டு ஓடிய கண்ணீரை துடைத்த படி கூறினாள் ஹீனா.
"எல்லாம் சரியாயிடும்"
"அப்படி நடந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்"
"கவலை படாதே. கடவுள் நல்லவங்களை கைவிடமாட்டார்"
அதைக்கேட்டு புன்னகைத்தாள் ஹீனா.
"நான் கிளம்பட்டுமா?"
"முதல்ல தான் பயந்த... இப்ப தான் தன் தங்கச்சி இங்க இருக்கிறதைப் பத்தி உங்க அண்ணனுக்கு எந்த பிரச்சனையும் இல்ல போல இருக்கே..." என்றாள் சிரித்தபடி.
"அவர் எனக்கு கொடுத்த மரியாதையை, நான் எனக்கு சாதகமாக பயன்படுத்திக்க விரும்பல, அண்ணி"
"சரி. ஆனா, அடிக்கடி வந்து போகணும்..."
"கண்டிப்பா"
அவளிடமிருந்து விடைபெற்றுச் சென்றாள் ஹீனா.
தங்கள் அறையை நோக்கி ஓடினாள் இந்து. முகம் கழுவிக்கொண்டு குளியலறையிலிருந்து வெளியே வந்த அர்ஜுன், அவள் ஓடி வருவதைப் பார்த்து அப்படியே நின்றான். அவன் எதிர்பார்த்தபடியே, அவள் அவனை அணைத்துக்கொள்ள, மெலிதாய் புன்னகைத்தான் அர்ஜுன்.
"நீங்க ரொம்ப நல்லவரு"
அர்ஜுனுடைய புன்னகை மேலும் விரிவடைந்தது.
"நீங்க அவளை சத்தம் போடுவீங்களோன்னு நான் பயந்தேன்"
அர்ஜுன் முன்பு எப்போதும் செய்யாத எதையும் அவள் கூறிவிடவில்லை. இதற்கு முன்பு அவன் அப்படித் தானே செய்தான்? என்றால், அவள் அப்படித் தானே நினைப்பாள்...?
"அவ நல்ல பொண்ணு"
ஆமாம் என்று தலையசைத்தான் அர்ஜுன்.
"உங்களுக்கு அவ மேலே கோவம் இல்லயே?"
"உனக்கு விஷயத்தை சொல்லி எச்சரிச்சது அவ தான்னு எனக்கு தெரியும்"
"உங்களுக்கு எப்படி தெரியும்?"
"நீ என்ன நெனச்ச? நீ இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டதுக்கு அப்புறமும், இந்த விஷயத்தை நான் ரொம்ப லைட்டா எடுத்துகுவேன்னு நினைச்சியா?"
"இல்ல" என்று கூறி விட்டு மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள் இந்து.
"எனக்கு காபி கொண்டு வா" என்றான் அர்ஜுன்.
அவனை ஆச்சரியமாய் பார்த்தாள் இந்து. தன்னை அவனும் அணைத்துக் கொள்வான் என்று எதிர்பார்த்து இருந்தவளுக்கு, அவன் காபி கேட்டால் ஆச்சரியமாய் தானே இருக்கும்? அவன் சோர்வாக இருக்கிறானோ என்று நினைத்தாள் இந்து. அவனுக்கு காபி கொண்டு வர சமையல் அறைக்கு ஓடினாள்.
இதற்கிடையில், சங்கர் இல்லம்...
ஒரு புதிய எண்ணிலிருந்து தனக்கு அழைப்பு வருவதை பார்த்து எரிச்சலடைந்தார் சங்கர். அவருக்கு தெரியும் அந்த அழைப்பு மாஷாவிடமிருந்து தான் வருகிறது என்று. தன்னை தயார் படுத்திக் கொண்டு அந்த அழைப்பை ஏற்றார் சங்கர்.
"என்னை வெளியில் எடுக்க ஏன் எதுவுமே செய்யாம இருக்கீங்க?"
"நான் எதுவும் செய்யாம இருக்கேன்னு நினைக்கிறாயா?"
"பின்ன என்ன? என்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு மாத்திட்டாங்க. ஆனா, நீங்க என்னை வெளியில் எடுக்க எதுவுமே செய்யாம இருக்கீங்க... ஏன்?"
"அவங்க உன்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு மாத்த தான் செய்வாங்க. ஏன்னா, நீ பதினஞ்சு நாள் ரிமாண்ட்ல இருக்க. அடுத்த ஹியரிங் வரைக்கும் யாரும் எதுவும் செய்ய முடியாது"
"அப்படின்னா, அடுத்த பதினஞ்சு நாளைக்கு நான் ஜெயில்ல தான் இருக்கணும்னு சொல்றீங்களா?" என்றார் எரிச்சலுடன்.
"வேற வழியே இல்ல. நீ இருந்து தான் ஆகணும்"
அதற்கு மேல், அவரிடமிருந்து எதையும் கேட்க விரும்பாமல், அழைப்பைத் துண்டித்தார் மாஷா. சங்கர் ஆடும் ஆட்டம் என்னவென்று புரிந்தது மாஷாவுக்கு. அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சங்கர் தன்னைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்ப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. சங்கரை நம்பியது தவறு. ஆம் அவர் அர்ஜுனுக்கு எதிராக நிச்சயம் செயல்பட மாட்டார். அவருக்கு எப்பொழுதும் அர்ஜுன் தான் முக்கியம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அர்ஜுனுடன் அவர் உறவாட நினைதாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. தனக்குத் தானே ஒரு வழியை தேடியாக வேண்டும். அவருடைய பிரச்சனைக்கு அவர் தான் பொறுப்பு, என்ற முடிவுக்கு வந்தார் மாஷா.
சீதாராணி இல்லம்
இந்து காபியுடன் வந்த போது, தனது மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தான் அர்ஜுன். அவனிடம் காபியைக் கொடுத்து விட்டு, அவன் மடிக்கணினியை வைத்திருந்த டீப்பாயின் மீது, அவனுக்கு முன்னால் அமர்ந்து கொண்டாள். மெல்ல தன் விழிகளை அவள் முகத்தை நோக்கி உயர்த்தினான் அர்ஜுன்.
"வீட்டில கூட புடவை கட்டிக்கிட்டு தான் இருக்கணுமா?" என்றான் அந்த காபியை பருகியபடி.
"ஏன்? நான் புடவைல நல்லா இல்லயா?"
"நல்லா இருக்கன்னு சாதாரணமா சொல்ல முடியாத அளவுக்கு நல்லாயிருக்க... வீட்ல இருக்கும் போது, லைட்டான டிரஸ்ஸை தானே கேர்ள்ஸ் விரும்புவாங்க?"
"உங்களுக்கு கோட்டு சூட் போட சிரமமா இருக்கா? இல்ல தானே...? அப்படித் தான் இதுவும்"
"வேற ட்ரஸ் போட்டு, நீ பழகிட்டா, உனக்கு புடவை கட்ட பிடிக்காது"
"எதுக்கு நீங்க புடவை கட்டுறதை பத்தி இவ்வளவு விவாதம் பண்றீங்க?"
"நீ ஏன் புடவை கட்டணும்னு பிடிவாதமா இருக்க?"
"எல்லாம் உங்களால தான்"
"என்னாலயா?" என்றான் ஆச்சரியமாக.
"நீங்க தான சொன்னீங்க, நான் ரொம்ப சின்ன பொண்ணா இருக்கேன்னு... அதனால தான், புடவை கட்டினா நான் பெரியவளா தெரிவேன்ல...?" என்றாள் ஆர்வமாக.
"ஸ்கூல் ட்ராமாவுல, சின்ன குழந்தைங்க கூட தான் புடவை கட்டி நடிக்கிறாங்க. அவங்க எல்லாம் பெரியவங்களா?" என்றான் கிண்டலாக.
அதைக் கேட்டு வாயை பிளந்தாள் இந்து.
"போங்க... நீங்க ரொம்ப மோசம்" என்றாள்.
அவள் முகம் போன போக்கைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான் அர்ஜுன்.
இரவு
புடவையை மாற்றி கொண்டு, இரவு உடைக்குள் புகுந்து கொண்டாள் இந்து. அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து விட்டு, அவள் நெஞ்சில் காதை வைத்து அவளுடைய இதயத்துடிப்பை கேட்டபடி, அப்படியே உறங்கிப் போனான் அர்ஜுன், அவளை சோதனைக்கு உள்ளாக்கி விட்டு.
அர்ஜுன் தன்னை விரும்புகிறான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இந்துவுக்கு. ஆனால் அவளுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை, ஏன் அர்ஜுன் அவளிடமிருந்து தள்ளியே இருக்கிறான் என்பது தான் அது. ஆம், அர்ஜுன் அவளிடமிருந்து தள்ளித் தான் இருந்தான். அவளை கட்டி அணைக்கிறான், உடன் உறங்குகிறான், நெற்றியில் இதழ் பதிக்கிறான், சாப்பாடு ஊட்டி விடுகிறான், ஆனால், இதெல்லாம் அவர்களை முழுமையான தம்பதிகளாக ஆக்கிவிடாது.
அன்பு காட்டல், புரிந்துகொள்ளல், மரியாதை அளித்தல், இதெல்லாம் கூட காதல் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவையெல்லாம் ஒரு உறவை பலப்படுத்த மட்டும் தான் உதவும். ஆனால், ஒருவரிடமிருந்து மற்றொருவர் விலகிச் செல்லுதல் என்பது, அனைத்தையும் பாழாக்கிவிடும். அது அர்ஜுனுக்கு தெரியாதா என்ன? அவனுக்கு தெரியும். அப்படியிருந்தும் ஏன் அவன் விலகிச் செல்கிறான்? இந்துவுக்கு அது புரியவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top