Part 30

பாகம் 30

இந்து சேலை உடுத்திக் கொண்டிருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டான் அர்ஜுன். அவள் எங்காவது வெளியே செல்கிறாளோ என்று நினைத்தபடி சாப்பிட அமர்ந்தான். இந்து அவனுக்கு பரிமாறினாள்.

"இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷலா?"

"பாயசம் பண்ணி இருக்கேன்"

"பாயசமா...? இன்னைக்கு என்ன?" என்று கேட்டுக்கொண்டு பாயசத்தை ருசித்தான்.

"நம்ம பிரச்சனை எல்லாம் தீந்துடுச்சில்ல? அதுக்காக செஞ்சேன்"

"சோ ஸ்வீட்" என்று சிரித்தான்.

"பாயசம் ரொம்ப ஸ்வீட்டா இருக்கா?" என்றாள்.

இல்லை என்று தலையசைத்தபடி,

"நான் உன்னை தான் ஸ்வீட்டுன்னு சொன்னேன்"

"பாத்துங்க, என்னை நிறைய சேர்த்துக்கிட்டா, உங்களுக்கு சர்க்கரை வியாதி வந்துட போகுது..." என்றாள் கிண்டலாக.

"வராது... நீ என்னோட எல்லா வித நோயையும் குணபடுத்துற சர்க்கரை..." என்று அவன் கூற, புன்னகை புரிந்தாள் இந்து.

"எதுக்காக ஸாரி கட்டியிருக்க? எங்கயாவது போறியா?"

இல்லை என்று தலை அசைத்தாள்.

"பின்ன?"

"காரணம் இல்லாம நான் புடவை கட்டக் கூடாதா?"

"ஓ... கட்டலாமே... ஸாரி உனக்கு ரொம்ப நல்லா இருக்கு" என்றான்.

உள்ளூர புன்னகைத்தாள் இந்து. அவள் நினைத்தது சரி தான். அர்ஜுனுக்கு புடவையை உடுத்தினால் பிடிக்கிறது. அதைத்தான் அவளுடைய பிறந்தநாளன்று அவள் பார்த்தாளே...

"காலையில எப்போ எழுந்த?"

"வழக்கம் போல ஆறு மணிக்கு"

"உனக்கு உடம்பு சரியில்லாதப்போ ஏன் இதெல்லாம் செய்ற? ரெஸ்ட் எடுத்துக்கலாம் இல்ல...?"

"நான் நல்லா இருக்கேன்"

"சரி வா, உட்கார்ந்து சாப்பிடு"

"நான் அப்புறமா சாப்பிடறேன்"

"ஏன்...? என் கூட சாப்பிட மாட்டியா?"

"அப்படி எல்லாம் இல்லன்னு உங்களுக்கு தெரியுமே"

"அப்ப சாப்பிடு"

அவளை இழுத்து அமர வைத்தான்.

"நீ சாப்பிடுறியா இல்ல நான் ஊட்டி விடணுமா?" என்று அவன் கேட்க, 'ஊட்டிவிடு' என்பது போல வாயை திறந்தாள்.

சிரித்துக்கொண்டே அவளுக்கு ஊட்டி விட்டான் அர்ஜுன். மேஜை மீது இருந்த பாயசத்தை எடுத்து, அர்ஜுனுக்கு ஊட்டிவிட்டாள் இந்து. சந்தோஷமாய் சாப்பிட்டான் அர்ஜுன். இப்படி, தனக்கென, தன் மீது அக்கறை கொண்ட  ஒரு உறவு கிடைப்பதெல்லாம் மிகப்பெரிய வரம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், சீதாவை ஊட்டி விடச் சொல்லி அடம்பிடிப்பான் அர்ஜுன். அப்படி சீதாவின் கையில் சாப்பிடும் போதெல்லாம், வழக்கத்தை விட அதிகமாகவே உண்பான். இன்றும் அப்படித் தான், அதிகமாக சாப்பிட்டான். அது அவனுக்கும் தெரியும்.

"ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. போயிட்டு கொஞ்ச நேரத்திலே திரும்பி வந்துடுவேன்"

"சரிங்க"

"ஏதாவது வேணும்னா எனக்கு ஃபோன் பண்ணு"

"பண்றேன்"

அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்துவிட்டு அங்கிருந்து சென்றான் அர்ஜுன்.

அவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள் ரம்யா. கிரியிடம் பேச எண்ணி ஃபோன் செய்தாள்.

"சொல்லு, ரம்யா"

"நான் இங்கிருந்து கிளம்பற நேரம் வந்துடுச்சின்னு நினைக்கிறேன்"

"ஏன்?"

"அர்ஜுனும் இந்துவும் அவங்க பிரச்சினைகளை எல்லாம் பேசி தீர்த்துக் கிட்டாங்க"

"நெஜமாவா சொல்ற?"

"ஆமாம்"

"அப்படியே இருந்தாலும், நீ அங்கிருந்து கிளம்பணும்னு என்ன அவசியம் இருக்கு?"

"இதுக்கு அப்புறம் நான் இந்து கூட இருக்க வேண்டிய அவசியமில்ல..."

"இன்னொரு முறை, நல்லா யோசிச்சிட்டு, அதுக்கப்புறம் முடிவை எடு"

"எப்படி இருந்தாலும் நான் என் வேலையில சேர்ந்து தானே ஆகணும்?"

"எனக்கும் கூட, இந்த ரகசியத்தை ரொம்ப நாள் நீட்டிக்கணும்னு தோணல. நீ இன்னும் கொஞ்ச நாள் அங்க தங்கினா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்..." என்று சில நொடி நிறுத்திவிட்டு,

"நீ யாருங்குற உண்மையை இந்துகிட்ட சொல்ல போறது இல்லயா?" என்றான்.

"அதை எப்படி அவங்ககிட்ட சொல்றதுன்னு எனக்கு புரியல. நான் உங்க ஆளுன்னு தெரிஞ்சா, அவங்க அதை எப்படி எடுத்துக்குவாங்களோன்னு எனக்கு பயமா இருக்கு"

"சாரிப்பா... இந்து, உன்னை தன் சிஸ்டர் மாதிரி நினைப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை."

"சிஸ்டர் மாதிரி மட்டும் இல்ல, அவங்க என்னை மனப்பூர்வமா நம்புறாங்க"

"அதனால தான் சொல்றேன். இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருந்து, அவங்களுக்கு புரிய வச்சுட்டு அதுக்கப்புறம் அங்கிருந்து கிளம்பு"

"ம்ம்ம்"

அழைப்பை துண்டித்த ரம்யா, தனக்கு பின்னால் யாரோ நிற்பதை உணர்ந்தாள். திடுக்கிட்டு திரும்பினாள். அங்கு இந்து நின்றிந்தாள்.

"இந்து.... நீங்களா...?" என்றான் அதிர்ச்சியுடன்.

"ஆமாம்... உன்னோட ஃப்ரண்ட்... சிஸ்டர்..."

அவளுக்கு நடுக்கம் ஏற்பட்டது. அவள் கிரியுடன் பேசியதை இந்து கேட்டு விட்டாளோ?

"நான் உங்ககிட்ட..."

"நீ யாருன்னு எனக்கு தெரியும்" என்றாள் இந்து.

"நானா?"

"எனக்கும் அர்ஜுனுக்கும் நடுவிலிருந்த பிரச்சனைகளை தீர்குறதுக்காக, கிரி அண்ணா தானே உன்னை இங்க அனுப்பினது?"

"இந்து, நான் என்ன சொல்றேன்னா..." என்று தடுமாறினாள் ரம்யா.

"நீ பதட்டப்பட வேண்டிய அவசியமில்ல. பதட்டப்படுற அளவுக்கு நீ எதுவும் செய்யலயே"

"என்னை மன்னிச்சிடுங்க, இந்து"

"எதுக்கு மன்னிப்பு? என்னை அர்ஜுனோட சேத்து வச்சதுக்காகவா?" என்றாள் கிண்டலாக.

"இல்ல... நான் உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன்"

"நீ சொன்ன பொய்யால எந்த கெடுதலும் நடக்கல. எங்களுக்கு உதவி தானே செஞ்ச...? எனக்கு தெரியும், நீ தான் என்னை பத்தி அர்ஜுன் கிட்ட சொல்லி இருக்கணும்..."

ஆமாம் என்று தலையசைத்தாள் ரம்யா. அவளை ஆரத் தழுவிக்கொண்டாள் இந்து.

"தேங்க்யூ சோ மச். நீ எனக்கு செஞ்ச உதவி எப்படிப்பட்டதுன்னு உனக்கு தெரியாது. நீ மட்டும் அர்ஜுன் கிட்ட அதை பத்தி சொல்லாம போயிருந்தா, அவர் எவ்வளவு உடைஞ்சி போயிருப்பார்னு உனக்கு தெரியுமா?"

"அது என்னோட கடமை"

"சீக்ரெட் ஏஜென்ட் செய்ற வேலை இது இல்லன்னு நான் நினைக்கிறேன்" என்று சிரித்தாள் இந்து.

களுக்கென்று சிரித்தாள் ரம்யா.

"நீ செஞ்ச எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி"

"உங்க ரெண்டு பேருக்காகவும் என்ன வேணா செய்யலாம். ஏன்னா, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. நல்லவங்க எப்பவும் சந்தோஷமா இருக்கணும்"

"உங்களை மாதிரி நல்லவங்க இருக்குற வரைக்கும், நாங்க சந்தோஷமா தான் இருப்போம்"

"நான் மறுபடி டூட்டியில் சேரணும். உங்க பர்மிஷனோட அதை நான் செய்ய நினைக்கிறேன்"

"தாராளமா செய். ஆனா, அதுக்கு முன்னாடி, என்னோட ஃபிரண்டா, என் கூட இரண்டு, மூன்று நாள் தங்கி இருந்துட்டு போ"

"சரிங்க, இந்து" என்றாள் சந்தோஷமாக.

"வாங்க போங்கன்னு கூப்பிடதெல்லாம் போதும்..."

"உண்மையை சொல்லப் போனா எனக்கு கூட அது அவ்வளவா பிடிக்கல" என்று சிரித்தாள் ரம்யா.

அப்பொழுது அழைப்பு மணியின் ஓசை கேட்டது. இந்து செல்வதற்கு எத்தனித்த பொழுது, அவளை நிறுத்தினாள் ரம்யா.

"நான் பாக்குறேன்"

கதவைத் திறந்த ரம்யா, ஒரு யுவதியை பார்த்து, முகத்தை சுருக்கினாள்.

"உங்களுக்கு என்ன வேணும்?"

"இந்து அண்ணியைப் பாக்கணும்"

"இந்து அண்ணியா?" ரம்யாவிற்கு புரிந்தது எதிரில் நிற்கும் பெண் யாராக இருக்கக் கூடும் என்று.

ஒரு அடி நகர்ந்து, அந்த பெண்ணை, இந்து பார்க்கும்படி, விலகி நின்றாள் ரம்யா.

"ஹீனா..." என்றாள் இந்து சந்தோஷமாக.

தயக்கத்துடன் அவளை பார்த்து புன்னகை புரிந்தாள் ஹீனா.

"உள்ள வா"

அதே தயக்கத்துடன் இங்கும் அங்கும் பார்த்தபடி உள்ளே நுழைந்தாள் ஹீனா.

"உங்க அண்ணன் வீட்ல இல்ல" என்றாள் இந்து

"எனக்கு தெரியும். அதனால தான் வந்தேன்"

"அப்புறம் எதுக்கு தயங்குற?"

"என்ன இருந்தாலும், இது அர்ஜுன் சீதாராணியுடைய வீடாச்சே..."

அவள் அருகில் வந்து, அவள் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் இந்து.

"எப்படி இருக்கீங்க, அண்ணி?"

ஹீனாவை சோபாவில் அமர வைத்தபடி,

"ரொம்ப நல்லா இருக்கேன்"

"அண்ணன்?"

"அவரும் நல்லா இருக்கார்"

"அவர் நிச்சயம் எங்க மேல கோவமா இருப்பார்"

"நீ எந்த தப்பும் செய்யலயே..."

"ஆனா, அது அண்ணனுக்கு தெரியாதே"

"இருக்கலாம்... ஆனா, உன்னால தான் நான் அவரை காப்பாத்தினேன்"

"எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்ல, அண்ணி"

"என்ன?"

"நான் தான் உங்களுக்கு ஃபோன் பண்ணி, அந்த சாப்பாட்ல விஷம் கலந்திருக்குன்னு சொன்னேனே... அப்படி இருக்கும் போது, அதை ஏன் அண்ணி சாப்பிட்டீங்க?"

இந்து எதுவும் கூறும் முன், ரம்யா முந்திக்கொண்டாள்.

"அதை பத்தி மட்டும் கேட்காதீங்க. அவங்க புருஷன்னு வந்துட்டா, அவங்களுடைய புத்தி பேதலிச்சி போயிடும்..." என்று கூறிய ரம்யாவை,

இவ்வளவு உரிமையை எடுத்துக் கொண்டு பேசும், நீ யார்? என்பதைப் போல் பார்த்தாள் ஹீனா.

"அவ என்னுடைய ஃப்ரண்ட், சிஸ்டர், வெல்விஷர்..." என்றாள் இந்து

அதைக் கேட்ட ஹீனாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. அர்ஜுனின் வீட்டில் இவ்வளவு செல்வாக்குடன் ஒரு பெண்ணா? ஒருவேளை இந்த பெண் நல்லவளாக இருக்கலாம். கெட்ட நோக்கம் கொண்ட யாரும் அர்ஜுனின் அருகில் நெருங்கி விட முடியாதல்லவா?

"ரம்யா சொல்றது சரி தான். உங்க அண்ணன்னு வந்துட்டா, என் மூளை வேலை செய்யாது. அதனால தான் அவர் கையில் இருந்த விஷ சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டுட்டேன்..." என்று சிரித்தாள் இந்து.

அதைக் கேட்டு புன்னகைத்தாள் ஹீனா. இந்துவின் இந்த அப்பாவித்தனம் தான் அர்ஜுனை வெகுவாய் கவர்ந்திருக்க வேண்டும்.

"ரம்யா, ஹீனாவுக்கு சாப்பிட ஏதாவது கொண்டுவாயேன்" என்றாள் இந்து.

சரி என்று தலையசைத்துவிட்டு சமையலறையை நோக்கி சென்றாள் ரம்யா.

இந்துவின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் ஹீனா.

"சாரி, அண்ணி. எங்க அம்மா இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்குவாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல. என்னை அவங்க பொண்ணுன்னு சொல்லவே எனக்கு வெட்கமா இருக்கு. எங்களால தான் அண்ணனோட வாழ்க்கை நாசமா போச்சி. அம்மாவால தான், அண்ணன் எல்லாத்தையும் இழந்தார். அவர் ரொம்ப வருஷம் தனியா லண்டன்ல இருந்தாரு தெரியுமா?"

தெரியும் என்று தலையசைத்தாள் இந்து.

"தயவுசெஞ்சு எல்லாத்துக்கும் என்னை மன்னிச்சுடுங்க, அண்ணி"

"அதுல உன்னோட தப்பு என்ன இருக்கு? உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு, அப்போ நீ சின்ன பொண்ணா இருந்திருப்ப"

"இருந்திருக்கலாம்... ஆனா, உண்மையை சரியா புரிஞ்சுக்காம, நான் எங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன். அர்ஜுன் அண்ணனுடைய அப்பா தான், எனக்கும் அப்பான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்"

அது இந்துவுக்கும் கூட புதிய செய்தி தான். அப்படி என்றால், ஹீனா சங்கருக்கு பிறந்த மகள் இல்லையா? அவளுடைய முகபாவத்தை பார்த்து,

"ஆமா, அண்ணி. நான் அவரோட சொந்த பொண்ணு இல்ல... அண்ணனுக்கு அது தெரியும்"

ஆம், அர்ஜுன் அதை பற்றி அறிந்து தான் இருக்க வேண்டும்.

இந்து அர்ஜுனுக்காக சமைத்திருந்த பாயசத்தை, ரம்யா ஹீனாவுக்கு கொண்டு வந்து கொடுத்தாள். அதை சாப்பிட்ட, ஹீனா,

"ரொம்ப நல்லா இருக்கு"

"உங்க அண்ணி ரொம்ப நல்லா சமைப்பாங்க" என்றாள் ரம்யா.

"இதை நீங்க தான் செஞ்சீங்களா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் இந்து.

"அண்ணன் ரொம்ப குடுத்து வச்சவரு"

"சந்தேகமில்லாம..." என்றாள் ரம்யா.

"அப்பா எப்படி இருக்கார்?"  என்றாள் இந்து.

"அவரு குற்றவுணர்ச்சியில்  செத்துகிட்டு இருக்காரு. ஆனா அது தவிர்க்க முடியாதது. யாரும் எதுவும் செய்ய முடியாது. எங்க அம்மாவை மாதிரி ஒரு பொம்பளைக்காக, சீதம்மா மாதிரி ஒரு நல்லவங்களை அவர் ஏமாத்தி இருக்கக் கூடாது. அண்ணன் நிச்சயம் அவரை மன்னிக்கவே மாட்டார்"

இந்துவும் ரம்யாவும் அசந்து போனார்கள். இந்த பெண் உண்மையை உள்ளபடி பேசுகிறாள். அவள் கூறுவது உண்மை தான்.  அர்ஜுன் நிச்சயம் சங்கரை மன்னிக்கவே மாட்டான்.

"நான் உங்களைப் பார்க்க தான் அண்ணி வந்தேன். நான் கிளம்புறேன்"

"என்ன அவசரம்? கொஞ்சம் நேரம் கழிச்சு போகலாம்"

"எனக்கு எந்த அவசரமும் இல்ல. ஆனா அண்ணன் வர்றதுக்கு முன்னாடி நான் போகணும்"

"அவர், இப்ப தான் ஆஃபீசுக்கு கிளம்பி போனார். அவர் வர கொஞ்சம் நேரம் ஆகும்" என்றாள் இந்து.

ஆனால், இந்துவின் வார்த்தைகளை பொய்யாக்கி, சீக்கிரம் வீடு வந்து சேர்ந்தான் அர்ஜுன். சிங்கம் போல அவன் உள்ளே நுழைவதை பார்த்த மூன்று பெண்களும் வெலவெலத்துப் போனார்கள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top