Part 29
பாகம் 29
"என்னை விட்டுட்டு போகப் போறியா, இந்து?" என்ற கேள்விக்கு, அவளுடைய கண்களில் அவன் பதில் தேடினான்.
இந்துவுடைய பதில் என்னவாக இருந்திருக்கும்? வித்யா, வீணா போன்ற மோசமான பெண்களையே விட்டுவிட்டு வர அவள் நினைத்தது இல்லையே... அப்படியிருக்க, அர்ஜுனை அவள் உதறி தள்ளி விடுவாளா என்ன?
*இல்லை* என்று தலையசைத்தபடி அவன் கன்னம் தொட்டு, அவன் முன் அவளும் மண்டியிட்டு அமர்ந்தாள்.
"நான் உங்களை விட்டு போகமாட்டேன். நான் எப்பவும் உங்க கூட தான் இருப்பேன். ஏன்னா, நானும் உங்களை ரொம்ப காதலிக்கிறேன். நீங்க என் புருஷன்ங்குறதல மட்டும் இல்ல. நான் ஏன் உங்களை காதலிக்கிறேன்னா, என்னை நானே காதலிக்காதப்போ நீங்க என்னை காதலிச்சிங்க. உங்க அளவுக்கு என்னை யாருமே நேசிச்சது இல்ல. நீங்க என்னை ரொம்ப ஸ்பெஷலா மட்டும் உணர வைக்கல்ல, பாதுகாப்பாகவும் உணர வச்சிங்க. உங்களை அடைய நான் கடுமையா முயற்சி பண்ணது ஏன்னா, நீங்க எனக்கு கிடைச்ச பொக்கிஷம். நான் உங்களை ஸ்பெஷலா உணரவச்சது ஏன்னா, நீங்க ஸ்பெஷல் தான். நீங்க சுயநலவாதி இல்ல. நான் உங்களுடைய தூய்மையான அன்புக்கு தகுதியானவளான்னு தெரிஞ்சிக்க விரும்பினீங்க. அவ்வளவு தான்..."
அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.
"நான் உங்களை ரொம்ப காதலிக்கிறேன். நீங்க இல்லன்னா என் இதயம் துடிக்காது. நீங்க எனக்கு வேணும்... எப்பவும்..."
"உனக்கு என் மேல கோவம் இல்லயா?"
"எதுக்கு?"
"நான் உன்னை ரொம்ப டெஸ்ட் பண்ணிட்டேன்"
"படிக்காத பிள்ளைங்க தான் டெஸ்ட்ன்னா பயப்படுவாங்க. படிக்கிற பிள்ளைங்க, பரிட்சையை தன் திறமையை வளர்த்துக்க பயன்படுத்துவாங்க." என்று புன்னகைத்தாள்.
திருப்திகரமான புன்னகையுடன் அவளை அன்பாய் அணைத்துக் கொண்டான் அர்ஜுன். அவளும் அவன் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டாள்.
"ஐ அம் சாரி, இந்து. நான் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்"
"நானும் உங்ககிட்ட சாரி சொல்லணும். நீங்க எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு தெரிஞ்சுக்காம, நான் உங்களை ரொம்ப காயப்படுத்திட்டேன். நான் அதை பத்தி அன்னைக்கே உங்ககிட்ட பேச நினைச்சேன். ஆனா, அதுக்கு முன்னாடி எல்லாமே தலைகீழா மாறிப் போச்சு. எனக்கு இதயத்தை தானமா கொடுத்தது அம்மா தான்னு எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் உங்ககிட்ட அப்படி எல்லாம் நடந்திருக்கவே மாட்டேன்"
"அதுக்காக நீ சாரி சொல்ல வேண்டியதில்ல. நீ அப்படி நடந்துகிட்டதுக்கு நான் தான் காரணம். உன் இடத்தில் யார் இருந்தாலும் அப்படித் தான் செய்வாங்க"
அவன் கூறியதை ஏற்றுக் கொண்டு புன்னகைத்தாள் இந்து.
"நீ ரொம்ப சின்ன பொண்ணா இருந்தாலும், நீ நடந்துக்கிற விதம் ரொம்ப மெச்சுர்டா இருக்கு"
"சின்ன பொண்ணா? எனக்கு இருபத்தி ஒரு வயசு ஆகுது... நான் ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல..."
"இருக்கலாம்... ஆனா, என்னோட கம்பேர் பண்ணி பார்க்கும் போது நீ சின்ன பொண்ணு தான். நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, கிரி கூட அதை பத்தி சொல்லி ரொம்ப ஃபீல் பண்ணான்" என்று கூறி சிரித்தான் அர்ஜுன்.
"அதெல்லாம் சகஜமாக நடக்கிறது தானே... எங்க அம்மா, எங்க அப்பாவை விட பதினோரு வயசு சின்னவங்க"
"உங்க அம்மா, உங்க அப்பா பக்கத்துல எப்படி இருந்தாங்களோ எனக்கு தெரியாது. ஆனா, என் பக்கத்துல நீ குழந்தை மாதிரி இருக்க"
"என்னது...? குழந்தையா...? நான் ஒன்னும் குழந்தை இல்ல" என்றாள் சிணுங்களுடன்.
"நீ குழந்தை தான். எந்த சந்தேகமும் இல்ல..." என்று அவன் கூற,
அவள் முகம் அஷ்ட கோணலாக மாறியது.
"இந்தா இதை சாப்பிடு..." என்று அவன் அவளுக்கு ஊட்டி விட முயல,
"நான் ஒன்னும் குழந்தை இல்ல... நானே சாப்பிட்டுக்குவேன்"
"நீயும் தான் எனக்கு ஊட்டி விட்ட... நான் என்ன குழந்தையா?" என்று கேட்டுவிட்டு அவளுக்கு ஊட்டி விட்டான். இந்து அமைதியாக சாப்பிட்டாள்.
"விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிடணும்னு என்ன அவசியம், இந்து? எதுக்காக அப்படி பண்ண?"
"சுத்த பைத்தியக்காரத்தனம் இல்ல?" என்றாள் அப்பாவியாக.
ஆமாம் என்று தலையசைத்தான் அர்ஜுன், தன் மூக்கை சுறுக்கியபடி. அவள் களுக்கென்று சிரித்தாள்.
"எல்லாத்தையும் விடுங்க... உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?"
"என்ன உண்மை?"என்றான்.
"அந்த நேரம் எனக்கு மூளையே வேலை செய்யல. அப்படி எனக்கு அடிக்கடி நடக்கும். எப்போ அவசியமா தேவைப்படுதோ, அப்ப என் மூளை வேலை செய்யவே செய்யாது... பாவம் என் மூளை... " என்றாள் சிரிப்பை அடக்கியபடி.
அவனும் சிரித்துவிட்டு,
"சாப்பாட்டுல விஷம் கலந்திருக்குன்னு உனக்கு எப்படி தெரியும்?" என்றான்
இதோ வந்துவிட்டது அல்லவா வினை. இப்பொழுது அவள் எப்படியும் அவனிடம் உண்மையை சொல்லித் தான் ஆக வேண்டும். தப்பிக்கவே முடியாது.
"அது வந்துங்க..." கண்ணை மூடிக்கொண்டு பெருமூச்சு விட்டாள், மாஷாவின் பெயரை சொல்ல பயந்து.
"தயவு செய்து அதை மட்டும் கேட்காதீங்க. அதை பத்தி நீங்க தெரிஞ்சுக்காம இருக்குறது தான் நல்லது"
"ஏன்?"
"ஏன்னா, உங்க கோபம் கட்டுக்கடங்காம போயிடும்..." என்றாள் உதடு மடித்து.
"நான் என்ன செய்வேன்னு நீ நினைக்கிற?"
"நீங்க என்ன வேணா செய்வீங்க..." என்றாள் கவலையாக.
"நான் அவளை ஜெயில்ல போட்டுட்டேன்"
அவன் கூறியதை புரிந்து கொள்ளாமல்,
"ஆமாங்க.. அதனால தான்..." என்று கூறிவிட்டு, அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
ஜெயிலில் போட்டு விட்டானா? உண்மையிலேயே அவன் அதை செய்து விட்டானா? அவளை உற்று நோக்கினான் அர்ஜுன்.
"மாஷா ஜெயில்ல இருக்கா"
இந்துவுக்கு அது உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. அது மாஷா தான் என்று அர்ஜுனுக்கு எப்படி தெரிந்தது? அந்த விஷயம் அவளுக்கும் ஹீனாவுக்கும் மட்டும் தானே தெரியும்? அவளுக்கு அர்ஜுனை பற்றி முழுதாய் எதுவும் தெரியாதல்லவா? அவன் மட்டும் மனது வைத்துவிட்டால் அவனை மீறி எதுவுமே நடக்காதே...
"அவங்களை உண்மையிலேயே ஜெயில்ல போட்டுட்டிங்களா?" என்றாள் திக்கி திணறி.
"நான் வேற என்ன செய்ணும்னு நினைக்குற?"
"வேற ஏதாவது தண்டனை கொடுத்திருக்கலாம் இல்ல..."
"நான் அவளை கொன்னுருக்கணும்னு சொல்றியா?"
"அய்யையோ... இல்ல இல்ல..." என்று அதிர்ந்தாள்.
"போலீஸ் மட்டும் அவளை அரஸ்ட் பண்ணாம இருந்திருந்தா, நான் அவளை நிச்சயம் கொன்னுருப்பேன்"
இந்துவுக்கு ஐய்யய்யோ என்று இருந்தது. அவர்கள் மாஷாவை பற்றி பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு.
அதற்குள் அர்ஜுனும் அவளுக்கு சாப்பாடு ஊட்டி முடித்திருந்தான்.
"எனக்கு தூக்கம் வருது" என்றாள் அவனிடமிருந்து தப்பிக்க.
"சரி, நீ படுத்துக்கோ. நான் சாப்பிட்டுட்டு வரேன்" என்று கூறிவிட்டு தரைதளம் நோக்கி சென்றான்.
இந்து, ஹீனாவை பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நன்றி கூற வேண்டும். மறுநாள், அர்ஜுன் இல்லாத நேரம் பார்த்து ஃபோன் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டாள்.
அர்ஜுன் சாப்பிட்டுவிட்டு உள்ளே நுழைந்த பொழுது, கண்ணை மூடி தூங்குவது போல் பாசாங்கு செய்தாள். அவளுக்கு மாஷாவை பற்றி மீண்டும் பேச பயமாக இருந்தது.
அவள் உறங்கி விட்டாள் என்று நினைத்துக் கொண்டு, கட்டிலின் அடுத்த பக்கத்தில் படுத்து கொண்டான் அர்ஜுன். தூங்கிக் கொண்டிருந்த அவளை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இல்லாவிட்டாலும், அவள் இதயத்துடிப்பைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் அவன் உள்ளத்தில் மேலோங்கியது. அவளை நோக்கி மெல்ல நகர்ந்து வந்து, அவள் நெஞ்சில் காதை வைத்து அவளது இதயத்துடிப்பை கேட்கலானான். அவனுடைய இந்த எதிர்பாராத செயலினால், திடுக்கிட்டு கண் திறந்தாள் இந்து. அவளுடைய இதயத்துடிப்பு உயர்ந்தது. அதை அர்ஜுனும் கூட உணர்ந்தான். ஆனால் அவள் விழித்திருக்கிறாள் என்று அவனுக்கு தோன்றவில்லை.
இந்துவால் தன் மனதையே புரிந்து கொள்ள முடியவில்லை. இது முதல் முறையல்ல அவன் இப்படி செய்வது, அவன் அதை ஏற்கனவே செய்திருக்கிறான். அப்பொழுது கூட, அவளுக்கு ஒரு வித பதற்றம் இருக்கத் தான் செய்தது. அது ஒரு ஆண்மகனின் முதல் தொடுதல் என்ற காரணத்தால் ஏற்பட்டது. ஆனால் இன்று அது வித்தியாசமாய் தெரிகிறது. இது, அவளுடைய கணவனின் தொடுதல்...
அவள் அவனை மிகவும் காதலிக்கிறாள். அதே போல அவனும் அவள் மீது காதல் கொண்டுள்ளான். அப்படி இருக்கும் பொழுது, அவனுடைய செயல், ஏன் அவள் மனதில் கலவரத்தை ஏற்படுத்துகிறது? அவள் உடலும் மனமும் ஏன் கனத்துப் போகிறது? அவள் நெஞ்சத்தைத் அவன் முகத்தால் மெல்ல வருடிய போது, மெத்தை விரிப்பை இறுகப் பற்றிக்கொண்டாள் இந்து. அவள் உயிர் நடுங்கியது. அவள் கால் விரல்களை அழுத்தி மடக்கிக்கொண்டாள், அவளுடைய கால்கள் வலிமையை இழந்ததால்...! அவள் உடலில் மின்சாரம் பாய்வது போல் இருந்தது. அர்ஜுன் அவளிடம் இருந்து விலகி சென்று படுத்து கொண்ட போதிலும், அந்த மின்சாரம் அவள் உடலில் இருந்து கொண்டே இருந்தது.
சிறிது நேரத்தில் அர்ஜுன் உறங்கிப் போனான். அவன் அமைதியாக காணப்பட்டான். அவன் முகத்தில் எந்தவித கலவரமும் காணப்படவில்லை. எப்படி அவனால் இப்படி இருக்க முடிகிறது? அவளுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பதற்றம் ஏற்படுகிறது? எப்படி அவனால் எவ்வளவு வலிமையுடன் இருக்க முடிகிறது?
சென்ற முறை, இந்துவின் மனம், வீட்டு பத்திரத்தின் மீது இருந்தது. அதை தவிர்த்து வேறு எதையும் அவள் சிந்திக்கவில்லை. பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விட்ட நிம்மதியில் அவள் இருந்தாள். அர்ஜுன் அவனுடைய அம்மாவின் இதயத்தைப் பற்றி அவளிடம் கூறிய பிறகு, அதை பற்றிய எண்ணத்தில் அவள் மூழ்கிப் போனாள். அன்று, அவன் தொடுதலை விட, அவன் கூறிய விஷயம், அவளை அதிகமாய் பலவீனமடையச் செய்திருந்தது. அதனால், அன்று அவனுடைய தொடுதல் அவளுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஆனால் இன்று, அவள் பழைய இந்து அல்ல... அவளுடைய இதயமும், மனமும் கூட ஒட்டு மொத்தமாய் மாறிப் போயிருந்தது... இல்லை, இல்லை அர்ஜுனின் பக்கம் ஒட்டுமொத்தமாய் சாய்ந்து போயிருந்தது. இப்பொழுதெல்லாம், அவளுடைய கவனம் முழுவதும் அர்ஜுனின் மீதும், அவனுடைய காதல் மீதும் மட்டும் தான் இருக்கிறது. தன் காதலை நிரூபிக்க வேண்டும் என்பதில், அவள் மிகவும் மும்முரமாக இருந்ததில், எந்த அளவிற்கு அவள் அர்ஜுனின் காதலில் மூழ்கி கொண்டிருக்கிறாள் என்பதை அவள் உணரவே இல்லை. அவளுடைய இதயம், அர்ஜுனின் அருகாமைக்காக ஏங்கிக் கொண்டிருந்தது. அவள் ஏங்கிக் கொண்டிருந்தது, அவளுக்கு கிடைத்த பொழுது, அவளால் அதைத் தாங்க முடியவில்லை. ஏனென்றால் அவளை மட்டுமல்ல, அவள் இதயத்தையும், புத்தியையும் பலவீனமடையச் செய்யும் வல்லமை அர்ஜுனனுக்கு இருந்தது.
இப்பொழுது அது தான் நடந்து கொண்டிருக்கிறது. தன் நெஞ்சை கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டு அர்ஜுனை நோக்கி திரும்பினாள் இந்து. கண்ணாடி ஜன்னலின் திரை இடுக்கின் வழியாக உள்ளே பாய்ந்த நிலவொளியில் அர்ஜுனின் முகம் மின்னியது... ஒரு வேளை, இந்துவின் கண்களில் அவன் முகம் அப்படி ஜொலித்திருக்கலாம். அவள் தான் இப்பொழுது அனைத்தையும் புதிய கோணத்தில் பார்த்து கொண்டு இருக்கிறாளே...! அவளுக்குத் தான் எல்லாம் வித்தியாசமாகத் தெரிகிறதே...! அவள் கணவனின் ஜொலிக்கும் முகத்தை நோக்கி, மெல்ல அவள் கையை நீட்டினாள். மெல்ல அவன் கன்னத்தில் கையை வைத்தாள். அந்த உணர்வு மிகவும் நன்றாக இருந்தது அவளுக்கு. மெல்ல அவனை நோக்கி நகர்ந்து அவனை அணைத்துக் கொண்டு தூங்க முயன்றாள்.
மறுநாள் காலை, அர்ஜுன் கண் விழித்த போது, இந்து அவனை அணைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து, தூக்கம் கலையாத கண்களுடன் புன்னகைத்தான். அங்கிருந்து செல்ல அவனுக்கு மனமே வரவில்லை. அப்படியே படுத்திருந்தான். எத்தனை முறை அவள் நெற்றியில் முத்தமிட்டான் என்று தெரியவில்லை... அவனுக்கு அது அலுக்கவும் இல்லை. எதையோ யோசித்தவன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். மெல்ல அவளை படுக்க வைத்து விட்டு, அவன் தோளை சுற்றி வளைத்திருந்த அவள் கையை மெல்ல விடுவித்தான். சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பெருமூச்சு விட்டு கட்டிலை விட்டு கீழே இறங்கி சென்றான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top