Part 28

பாகம் 28

இந்துவின் கண்கள், அர்ஜுனின் முகத்தில் வேரூன்றி இருந்தது. அவளிடம் அவன் தன் உரிமையை காட்டிய விதம், அவளுக்கு பிடித்து தான் இருந்தது. ஆனால், அவளுக்கு வேண்டியது அதுவல்ல. அவனுக்கு அவளிடமிருந்து என்ன வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவனை மேலும் பரீட்சித்துப் பார்க்க அவள் விரும்பவில்லை. அவள் மனதில் இருந்த காதலை, அவனிடம் கொட்டி தீர்க்க தான் அவளும் நினைத்தாள். அவன் மனதை குளிர்விக்க வேண்டும் என்று தான் அவளுக்கும் ஆசை.  ஆனால், அதற்குரிய வழிவகைகளையாவது அர்ஜுன் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். அதுவும் நியாயம் தானே...!

அவளை கட்டிலின் மீது கிடத்தினான் அர்ஜுன். எப்படியோ அவளைத் தன் அறைக்கு அழைத்து வந்து விட்டதில் அவனுக்கு மிகுந்த சந்தோஷம்.

"கம்ஃபர்டபிளா இரு. இல்லனா, மறுபடி உன் மாமியார் உன் கனவுல வந்து, உன்னை கேள்வி கேப்பாங்க" என்றான் மெல்லிய குரலில்.

"அவங்களுக்கு நான் புரியவைப்பேன். என்னை மாதிரி அவங்களும் ஒரு பெண்ணுங்கிறதால  என்னை அவங்க புரிஞ்சுக்குவாங்க" என்றாள் தலையை குனிந்தபடி.

தன் கைகளை கட்டிக் கொண்டு புன்னகைத்தான் அர்ஜுன்.

"ஓ, அப்படியா...? எங்க அம்மா எப்பவுமே எனக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதை நீ மறந்துடாத"

"ஆனா அவங்களுக்கு என்னை பத்தி நல்லாத் தெரியும். ஏன்னா, எங்க ரெண்டு பேருக்கும் ஒரே இதயம்" என்று அவள் கூறியதை கேட்டு பேச்சிழந்து  நின்றான் அர்ஜுன்.

தன்னை சுதாகரித்துக் கொண்டு, அவளை நோக்கி குனிந்தான்.

"அப்படின்னா, நீயும் எனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும்"

"நான் எப்பவுமே உங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்" என்று அவள் கூற நினைத்தாள்.

"நீ ஏதாவது சொன்னியா?" என்றான்.

"நான் எனக்குள்ளேயே பேசிக்கிட்டேன்"

"என்ன பேசின?"

அவள் ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.

"தலையை ஆட்டுறதை நிறுத்திட்டு, வாயை திறந்து பேசு"

அவள் அதற்கும் சரி என்று தலையசைக்க, அவன் தன் கண்களை சுழற்றினான்.

இன்டர்காமை எடுத்து, வேலனை அழைத்தான் அர்ஜுன்.

"ராத்திரிக்கு என்ன சமைக்க போறீங்க?" என்றான்.

"தோசையும் சாம்பாரும், தம்பி"

"வேண்டாம். தோசை முழுங்குறதுக்கு கஷ்டமா இருக்கும். சாதம் வடிச்சு, பருப்பு போட்டு, காரம் இல்லாத ரசம் ஊத்தி லேசாக மசிச்சி கொண்டு வாங்க"

இந்துவுக்கு புரிந்து போனது, தோசையை விழுங்க யாருக்கு கஷ்டமாக இருக்கும் என்று. உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள் இந்து.

"சரிங்க, தம்பி"

"சீக்கிரம்"

அவன் அழைப்பை துண்டித்தான்.

தன் மடிக்கணினியை எடுத்துக் கொண்டு, கட்டிலின் மறு பக்கத்தில் அமர்ந்து கொண்டான் அர்ஜுன். அவனைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க, இந்து எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவனை திருட்டு தனமாக ரசித்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து, சாதத்துடன் வந்து கதவை தட்டினார் வேலன்.

"உள்ள வாங்க" என்றான் அர்ஜுன்

உள்ளே வந்து, அந்த சாத கிண்ணத்தை அர்ஜுனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார் வேலன்.

"இந்து, வா. இதை சாப்பிடு"

"நான் அப்புறமா சாப்பிடறேன்"

"எப்போ...? நீ காலையிலிருந்து எதுவுமே சாப்பிடல. வந்து சாப்பிடு"

"எனக்கு சுத்தமா பசியே இல்ல"

அந்தக் கிண்ணத்துடன் வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ஏதும் புரியாமல் அவனை பார்த்தாள் இந்து.

"என்ன சொன்ன?" என்றான்

அவள் ஒன்றும் இல்லை என்று தலையசைக்க,

"வாயை திற" என்றான்.

அவன் தனக்கு ஊட்டி விடப் போகிறான் என்பதை எண்ணி, அவள் கண்கள் விரிவடைந்தன.

"நான் உன் வாயை தான் திறக்க சொன்னேன்... கண்ணை இல்ல..." என்றான்.

"எனக்கு வேண்டாம்னு சொன்னேன்..." என்று அவள் கூறி முடிப்பதற்கு முன் முதல் தேக்கரண்டி உணவை ஊட்டி விட்டான்.

அதை அப்படியே விழுங்கினாள் இந்து. அவன் இன்னும் ஒரு தேக்கரண்டி உணவை எடுக்க,

"நான் சாப்பிட்டுக்குறேன்" என்றாள்

தன் கையை, கிண்ணத்துடன் பின்னால் இழுத்தான் அர்ஜுன்.

"ஏன்...? நான் உனக்கு ஊட்டி விடக் கூடாதா?"

"நானே சாப்பிட்டுக்குறேன்" என்று அவள் கூற, அதை காதில் வாங்காமல் அடுத்த தேக்கரண்டி உணவை ஊட்டி விட்டான்.

"நாளையில இருந்து நீயே சாப்பிட்டுக்கலாம்"

"ஏன் திடீர்னு என் மேல அக்கறை காட்டுறீங்க?" என்றாள் தலையை குனிந்தபடி.

"எங்க அம்மா தான் உன்னை கவனிச்சுக்க சொன்னாங்க" என்றான்.

"அப்படின்னா, நீங்க இதையெல்லாம் உங்க அம்மாவுக்காக தான் செய்றீங்களா?"

"ஆமாம்... நீ எப்படி உன் மாமியாருக்காக செஞ்சியோ, அந்த மாதிரி..."

அவளுக்கு தெரியும், அவள் செய்கைகளை அவள் பக்கமே அவன் திருப்பி விடுகிறான் என்று. அவனுடன் நெருங்கிப் பழக, அவனுடைய அம்மாவை ஒரு சாக்காக அவள் பயன்படுத்தியதை அவன் இப்பொழுது அவளுக்கு திருப்பி செய்கிறான்.

"நான் பொய் சொன்னேன்" என்றாள்.

"என்னது?"

"உங்க அம்மா என் கனவுல வரல"

"எதுக்காக பொய் சொன்ன?"

"உங்க கூடவே இருக்கறதுக்காக"

அந்த பதில், அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

"அப்புறம் எதுக்கு மறுபடியும் கெஸ்ட் ரூமுக்கு போன?" என்றான் புன்னகை மாறாமல்.

"ஏன்னா, நான் உங்க கூட இருக்க வேண்டாம்னு, நீங்க நினைச்சீங்கல்ல..."

"அப்படின்னு நான் சொன்னேனா?"

"நீங்க உங்க ரூம்ல இருந்து என்னை வெளியில் தள்ளி விட்டிங்கல்ல?" என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

"நான்... அப்போ..." என்று தடுமாறினான்.

"அதனால தான், நான் இங்க இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன்"

கட்டிலை விட்டு கீழே இறங்கி, அங்கிருந்து செல்ல முயன்றாள். அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், அவள் எதிர்பாராத விதமாக, அவளை இறுக்கமாய் கட்டிப்பிடித்துக் கொண்டான்.

"என்னை விடுங்க"

"முடியாது... நீ இங்கேயே இருக்கேன்னு சொல்ற வரைக்கும் உன்னை விடமாட்டேன்"

"ஏன் இப்படி குழந்தை மாதிரி நடந்துக்குறீங்க?"

"நீயும் இப்படி தான் செஞ்சேன்னு மறந்துடாத"

"என்னை விடுங்க"

"நீ எங்க போனாலும், உன்னை நான் மறுபடி இங்க கூட்டிக்கிட்டு வருவேன்"

"நான் இங்க ஏன் தங்கணும்னு ஒரே ஒரு காரணம் சொல்லுங்க" என்றாள்.

"நீ என்னோட வைஃப். ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஒன்னா தான் இருக்கணும்னு உனக்கு தெரியாதா?"

"கல்யாணம் ஆனதிலிருந்து நான் தனியா தான் இருந்தேன்..."

"அப்போ நீ என் மேல கோவமா இருந்த"

"இப்பவும் நான் உங்க மேல கோவமா தான் இருக்கேன்"

"ஏன்?"

"ஏன்னா, நீங்க என்னை நம்பல. விவாகரத்து பத்திரத்தை பத்தி எனக்கு தெரியும்னு நினைச்சீங்க. உங்களை டைவர்ஸ் பண்ண எனக்கு விருப்பமில்லனு சொன்னதுக்கு அப்புறமும், நீங்க என்னை நம்பல"

"சூழ்நிலை என்னை உன் மேலயே சந்தேகப்பட வைச்சிது. நீ என்னை நம்ப வச்சிருக்கணும்"

"நான் செஞ்சுக்கிட்டு தான் இருந்தேன்"

"அதனால தான், நீ என் கூட இருக்கணும்னு நான் நினைக்கிறேன்"

"இல்ல... நான் உங்க கூட இருக்க மாட்டேன்"

அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு, அங்கிருந்து செல்ல, அவள் திரும்பி ஓரடி எடுத்து வைத்தாள். அப்பொழுது அர்ஜுன் உதிர்த்த வார்த்தைகள் அவளை திடுக்கிட்டு திரும்ப செய்தன.

"ஐ லவ் யூ, இந்து..."

ஆச்சரியம் தாங்காமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் இந்து.

"நீ என் கூட இருக்க, அந்த ஒரு காரணம் போதாதா?" என்றான் மென்று விழுங்கியபடி.

அவள் ஏதும் பேசாமல் சிலை போல் நிற்கவே, அவளை கட்டிலின் மீது அமர வைத்து, அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்தான்.

"நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு உனக்கு தெரியுமா? என் அம்மாவோட இதயம் உன்கிட்ட இருக்கிறதால மட்டும் நான் உன்னை காதலிக்கல. நான் உன்னை காதலிக்கிறேன். ஏன்னா, நீ தான் என்னை முதல் முதலா  காதலிக்க வச்ச. உன்னை பாத்துக்க சொல்லி, எங்க அம்மா என்கிட்ட சொல்லல. உன்னை எப்படிப் பார்த்துக்கணும்னு அவங்க சொல்ல வேண்டிய தேவையும் இல்ல. நான் பிறந்ததே அதை செய்யத் தான்னு நினைக்கிறேன். நீ எனக்கு வேணும் இந்து... என்கூட... எனக்காக..."

அவள் மடி மீது தலை சாய்த்து, அவள் இடையை சுற்றி வளைத்துக் கொண்டான்.

"நான் ஒரு சுயநலவாதி... ரொம்ப பெரிய சுயநலவாதி... என்னை திருப்தி படுத்துறது அவ்வளவு ஈஸி இல்ல. ஆனா, நீ அதை செஞ்ச... உன்னோட ஒவ்வொரு செயலாலும் நீ என்னை திருப்தி படுத்தின. உன் மேல எந்த தப்பும் இல்லன்னு எனக்கு தெரியும்.  டைவர்ஸ் பேப்பர்ஸ் பத்தி உனக்கு எதுவும் தெரியாதுன்னும் எனக்கு தெரியும். அப்படி இருந்த போதும், நீ என்னை அடைய கடுமையா முயற்சி பண்ணணும்னு நான் நெனச்சேன். ஏன் தெரியுமா? ஏன்னா, இது வரைக்கும் எனக்காக யாருமே அப்படி செஞ்சது இல்ல. உன்னை மாதிரி, வேற யாருமே என்னை ஸ்பெஷலா உணர வச்சதில்ல. எங்க அம்மா கூட என்னை தனியா விட்டுட்டாங்க, இந்து. யாருமே இல்லாத ஒரு அயல்நாட்ல நான் அனாதை மாதிரி இருந்தேன்."

மெல்ல அவள் மடியில் இருந்து தன் தலையை உயர்த்தினான் அர்ஜுன்.

"நீயும் என்னை விட்டுட்டு போகப் போறியா, இந்து?"

அவள் தான் அவன் கண்களை நன்றாக படிக்க கற்றவள் ஆயிற்றே... அன்று, அவன் கண்களில் அவள் பார்த்தது, உண்மை... ஏக்கம்... எதிர்பார்ப்பு...

தொடரும்...
 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top