Part 27
பாகம் 27
சாய் மருத்துவமனை
எவ்வளவு முயன்ற போதிலும், இந்துவுக்கு தூக்கமே வரவில்லை. உண்மையில் சொல்ல போனால் அவளுக்கு தூங்க விருப்பமில்லை. அவள் கண்விழித்து பார்த்த பொழுது, அவள் கட்டிலின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி, ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவள் கண்விழித்ததை பார்த்து பதட்டமானான்.
"இந்து, என்ன செய்து உனக்கு? ஏதாவது கஷ்டமா ஃபீல் பண்றியா?"
இல்லை என்று தலை அசைத்தாள் இந்து.
"உனக்கு ஏதாவது வேணுமா?"
"ஒன்னும் வேண்டாம்" என்றாள் மெல்லிய குரலில்.
"ஏதாவது வேணும்னா என்னை கேளு"
சரி என்று தலை அசைத்தாள்.
ஏதும் பேசாமல், மேல் கூரையை பார்த்தபடி படுத்திருந்தாள். அவள் எதையோ யோசித்துக் கொண்டு இருக்கிறாள் என்று புரிந்து கொண்டான் அர்ஜுன். அவன் அவளை எப்படி எல்லாம் விரட்டி அடித்தான் என்று அவள் நினைத்துப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என்று அவன் பயந்தான்.
அப்பொழுது மருத்துவர் அந்த அறைக்குள் நுழைந்தார். நாற்காலியை விட்டு எழுந்து நின்றான் அர்ஜுன். இந்து எழ முயன்ற பொழுது, அவள் தோளை அழுத்தினான்.
"நீ எழுந்துக்க வேண்டியதில்ல. படுத்துக்கோ" அவனுடைய குரல் அவ்வளவு கனிவாய் ஒலித்தது.
ஒரு வேளை, நம் இந்துவின் காதுகளுக்கு சுவை மொட்டுக்கள் இருந்திருந்தால், அவனுடைய குரல் தேனாய் சுவைத்திருக்கும். ஆம், பேசுகிறேன் என்ற பெயரில், அவளுடைய காதில் தேனை வார்த்தான் அர்ஜுன்.
"இப்போ எப்படி இருக்கிங்க மிஸஸ். அர்ஜுன்?" என்றார் மருத்துவர்.
"நல்லா இருக்கேன், டாக்டர்"
"உங்களுக்கு பேசுறதுக்கு கஷ்டமா இருக்கா?"
"கொஞ்சம் இருக்கு"
"மருந்தை சரியா சாப்பிட்டீங்கன்னா, நாளைக்கு ஈவினிங்குள்ள க்யூர் ஆயிடும் "
"சரிங்க டாக்டர் " என்றாள் புன்னகையுடன்.
"நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாம்" என்றார் அர்ஜுனனிடம்.
"தேங்க்யூ, டாக்டர்"
"ரெண்டு மூணு நாளைக்கு காரமான சாப்பாடு சாப்பிட வேண்டாம். சூடா சாப்பிடாம இருந்தா சீக்கிரம் ஆறிடும்"
இந்து எதுவும் கூறும் முன்,
"நான் அவளை பார்த்துக்கிறேன் டாக்டர்" என்றான் அர்ஜுன், இந்துவைப் பார்த்தபடி.
தன் தலையை உயர்த்தி அவனை அதிசயமாக பார்த்தாள் இந்து.
"ஓகே, பாத்துக்கோங்க"
சரி என்று தலையசைத்துவிட்டு, இந்துவின் பக்கம் திரும்பினான் அர்ஜுன்.
"வீட்டுக்கு போலாமா?" என்றான்.
சரி என்று தலையசைத்தாள் இந்து.
"உன்னால நடக்க முடியுமா"
"முடியும்"
அவள் கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள். அவளுக்கு உதவ அர்ஜுன் ஒரு அடி எடுத்து வைக்க, அவள் தன் கையை உயர்த்தி அவனை தடுத்தாள். தன் விரல்களை மடித்துக்கொண்டு பல்லைக் கடித்தான் அர்ஜுன். அவள் உதவ வேண்டாம் என்று கூறி விட்ட போதிலும், அவள் அருகிலேயே, அவளைப் பார்த்தபடி கவனமாய் நடந்து வந்தான் அர்ஜுன்.
அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள்.
"நீ இங்க உட்காரு. நான் போய் காரை கொண்டு வரேன்"
சரி என்று வரவேற்பில் அமர்ந்து கொண்டாள் இந்து.
அர்ஜுன் காரைக் கொண்டு வந்து நிறுத்தியதை பார்த்து, காரை நோக்கி சென்றாள். காரை விட்டு கீழே இறங்கி, அவளுக்காக கதவை திறந்துவிட்டான் அர்ஜுன். காரில் ஏற முற்படும் முன், இந்து ஒரு நொடி தாமதித்தாள், ஹீனா மருத்துவமனையின் உள்ளே ஓடி வருவதைப் பார்த்து. அர்ஜுனை பார்த்து, ஒரு தூணுக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டாள் ஹீனா. விஷம் கலந்த உணவை பற்றி தனக்கு கூறி எச்சரித்ததற்காக ஹீனாவுக்கு நன்றி கூறவேண்டும் என்று நினைத்தாள் இந்து. ஆனால், அதை அர்ஜுனுக்கு முன் அவளால் செய்ய முடியாது. அதை செய்தது யார் என்று அர்ஜுனுக்கு தெரிந்துவிடும். அவளுக்கு தெரியாதல்லவா, ஏற்கனவே அர்ஜுனுக்கு அனைத்தும் தெரிந்து, மாஷாவை சிறையிலும் தள்ளி விட்டான் என்று. ஏதும் செய்ய முடியாமல், ஹீனாவை பார்த்தபடி காரில் அமர்ந்தாள் இந்து.
"நீங்க நல்லா இருக்கீங்களா?" என்று அவளை பார்த்து சைகையில் கேட்டாள் ஹீனா.
நன்றாக இருக்கிறேன் என்று தலையசைத்தாள் இந்து.
"நான் உங்களுக்கு பிறகு ஃபோன் செய்கிறேன்" என்று மீண்டும் சைகையால் கூறினாள்.
சரி என்று தலையசைத்து புன்னகைத்தாள் இந்து. அவர்களுடைய கார் மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற பின், தூணுக்கு பின்னால் இருந்து வெளியே வந்தாள் ஹீனா. இந்து நல்லபடியாக இருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
சங்கர் இல்லம்
ஒரு புதிய எண்ணிலிருந்து சங்கருக்கு அழைப்பு வந்தது.
"யார் பேசுறீங்க?" என்றார் சங்கர்.
"நான் தாங்க மாஷா பேசுறேன்"
"நீயா?"
"ஆமாம்... நான் தான்"
"உனக்கு ஃபோன் எப்படி கிடைச்சது?"
"நான் ஒரு உமன் கன்ஸ்டபிலை அட்ஜஸ்ட் பண்ணி வச்சிருக்கேன்"
"எப்படி?"
"எப்படியோ, அட்ஜஸ்ட் பண்ணி இருக்கேன்"
அவர் எப்படி அதை செய்திருப்பார் என்று புரிந்துகொள்ள சங்கருக்கு பெரிதாய் ஒன்றும் திறமை இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் பணத்தாசை காட்டி தான் இதை சாதித்திருப்பார். சிறைக்கே சென்றாலும் மாஷா திருந்தவே மாட்டார்... அவர் இப்படியே தான் இருப்பார்.
"எதுக்கு எனக்கு ஃபோன் பண்ண?"
"என்ன இப்படி கேக்குறீங்க? நான் ஜெயில்ல இருக்கேன். என்னை வெளியில எடுக்க நீங்க என்ன செஞ்சீங்க?"
"நான் ஏன் உன்னை வெளியில எடுக்கணும்? என்னை கேட்டா என் மகனை கொல்ல திட்டம் போட்ட?"
அதை கேட்டு ஓவென்று அழுதார் மாஷா.
"அதை நான் செய்யல... என்னை நம்புங்க. என் புள்ளைய நான் கொல்ல நினைப்பேனா? வித்யாவும், வீணாவும் தான் அவங்க வீடு அவங்களுக்கு திரும்ப கிடைக்க அதை செஞ்சாங்க. அவங்க தப்பிக்க, என்னை இதுல இழுத்து விட்டுட்டாங்க. என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா?"
"அதுக்கு என்ன ஆதாரம்?"
"என்கிட்டயா ஆதாரம் கேக்குறீங்க? என்னை நீங்க நம்பலியா?"
"எப்படி உன்னை நம்புறது? நீ அர்ஜுன்கிட்டயிருந்து இந்துவை பிரிக்க பாத்திருக்க..."
"அதையும் நான் செய்யல... இந்துவோட சித்தி ஒரு மோசமான பொம்பளை. இந்து சந்தோஷமா இருக்க கூடாதுன்னு நினைக்குறா. அதுவும் அவ தங்கை வீணா இருக்காளே, அர்ஜுனை இந்துகிட்டயிருந்து அபகரிக்க நினைச்சா. அதனால தான், டைவர்ஸ் பேப்பர்ஸை இந்துவுக்கே தெரியாம வீட்டு பத்திரத்துக்கு நடுவுல வச்சிட்டாளுங்க. பாவம் அர்ஜுன், அவளுங்களை பத்தி சரியா தெரியாம, இந்து கேட்டான்னு அந்த பாத்திரத்தில் கையெழுத்து போட்டுடான்."
மாஷா அர்ஜுன் மேல் காட்டிய திடீர் அன்பு, சங்கருக்கு எரிச்சலை தந்தது. ஏனென்றால் அது பொய் என்பது அவருக்கு தெரியும்.
"நீ கவலைபடாதே. நான் எப்படியாவது உன்னை வெளியே எடுக்குறேன்"
"நீங்க என்னை நம்புவீங்கன்னு எனக்கு தெரியும்..."
"உன்னை நம்பலான நான் வேற யாரை நம்ப முடியும்?"
அழைப்பை துண்டித்துவிட்டு, திரும்பியவர், ஹீனா அவரையே பார்த்துக்கொண்டு நிற்பதை பார்த்து அமைதியானார்.
"அவங்கள நீங்க வெளில கூட்டிகிட்டு வர போறீங்களா? ஒருவேளை நீங்க அப்படி செஞ்சிகன்னா, அண்ணன் எப்பவுமே உங்களை மன்னிக்க மாட்டார்"
எந்த பதிலும் கூறாமல் அமைதியாய் அங்கிருந்து சென்றார் சங்கர். அவளிடம் எதுவும் கூற வேண்டாம் என்று அவர் நினைக்கவில்லை. அவர் மாஷாவை மறுத்து பேசாததன் காரணம், அவர் உதவ மறுத்தால், மாஷா வேறொரு வழியில் சிறையிலிருந்து வெளிவர முயல்வார்... அவர் அதில் எப்படியும் வெற்றியும் காண்பார். அது நடக்க கூடாது. அதனால், அவரை வெளியில் கொண்டு வர ஒப்புக் கொள்வது போல் பாசாங்கு செய்தார். ஹீனா சொல்வது சரி தான். மாஷாவிற்கு அவர் உதவினால், நிச்சயம் அர்ஜுன் அவரை மன்னிக்கவே மாட்டான். அர்ஜுன் மீதும் தவறில்லை. மாஷா தண்டனை பெற வேண்டும் என்று அவன் நினைப்பதிலும் தவறில்லை, என்று நினைத்தார் சங்கர்.
சீதாராணி இல்லம்
அர்ஜுன் காரை நிறுத்தியவுடன் கீழிறங்கி வீட்டினுள் சென்றாள் இந்து. திருஷ்டி கழிக்க, ஆலம் சுற்றி அவளை வரவேற்றாள் ரம்யா. தன் வாழ்வின் புது அத்தியாயத்தை தொடங்க, வலது காலை வைத்து உள்ளே நுழைந்தாள் இந்து. உண்மை தானே... அவளுடைய வாழ்கை 360° திரும்பி விட்டது அல்லவா? இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்து அவள் விஷம் கலந்த உணவை உண்ணவில்லை. ஆனால், அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை அவளால் தடுத்து நிறுத்த முடியாது. ஏனென்றால், அந்த விளைவுகளை விளைவிக்க போவது அர்ஜுன்.
ரம்யாவை அணைத்துக் கொண்டாள் இந்து. தன் கண்ணை சுழற்றியபடி தன் அறையை நோக்கி சென்றான் அர்ஜுன். அவன் எதிர் பார்க்காத வண்ணம், இந்து விருந்தினர் அறையை நோக்கி சென்றாள். ரம்யாவே திகைத்து தான் போனாள். அர்ஜுன் என்ன செய்யப் போகிறானோ என்று பதட்டம் அடைந்தாள் ரம்யா.
"என்ன இந்து... நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?"
தன் கையை உயர்த்தி அவளை அமைதியாக இருக்கும்படி கண்ணிமைதாள்.
"நான் பாத்துக்குறேன்"
மென்று முழுங்கினாள் ரம்யா. இந்துவின் காதலை அர்ஜுன் உணர வேண்டும் என்று அவள் ஆரம்பித்த நாடகத்தை, இந்து தன் கையில் எடுத்துக்கொண்டு விட்டாள் என்று புரிந்தது அவளுக்கு. ஆனால் அவள் விருந்தினர் அறைக்கு வந்து விடுவாள் என்று அவள் எதிர் பார்க்கவில்லை.
.....
தன் அறைக்குச் சென்று திரும்பி பார்த்த அர்ஜுன், இந்து தன்னை பின் தொடரவில்லை என்று உணர்ந்து முகம் சுருக்கினான். அன்று காலை வரை, அவனுடன் அதே அறையில் இருக்க வேண்டும் என்று, எல்லா முயற்சிகளையும் எடுத்த அவள், இப்படி செய்வாள் என்று யார் தான் எதிர்பார்க்க முடியும்? அவளைத் தேடிக்கொண்டு வெளியே வந்தான் அர்ஜுன். அவள் விருந்தினர் அறையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் விழி விரித்தான்.
எப்போதும் அவனுடைய மூக்கில் தயாராய் அமர்ந்திருக்கும் கோபம், இந்துவின் மீது பாய தயாரானது. நிலைமையை உணர்ந்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டான் அர்ஜுன். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த அறையில் நுழைந்தான் அர்ஜுன். அவனைப் பார்த்தவுடன் இந்துவும் ரம்யாவும் அமைதியானார்கள். அவர்களுக்கு தெரியும் அவன் எந்த நிலையில் இருக்கிறான் என்று. தன் மீது அவன் ஒரு கோபப்பார்வை வீசும் முன், அங்கிருந்து நழுவி சென்றாள் ரம்யா.
"நீ இங்க என்ன செய்ற?" என்றான்.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஏதும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள் இந்து.
"உனக்கு ரம்யாகிட்ட பேசணும்னு தோணுச்சுன்னா, நான் வீட்டில் இல்லாதப்போ அதை செஞ்சுக்கோ"
அவனை வியப்புடன் பார்த்தாள் இந்து. அவன் கூறியதற்கு என்ன அர்த்தம்? அவன் வீட்டில் இருக்கும் பொழுது, அவள் அவனுடன் இருக்க வேண்டுமென்று கேட்கிறானோ...?
"வா, நம்ம ரூமுக்கு போகலாம்"
"இது தான் என்னோட ரூம்"
அதைக் கேட்டவுடன் அவன் காதுகள் கோபத்தில் சிவந்தது.
"இது உன்னோட ரூம்னு யார் சொன்னது? நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் இங்க வந்தது நீ தான்..."
"ஆனா, நான் உங்க ரூம்ல இருக்கிறதை நீங்க விரும்பலயே... இல்லன்னு சொல்லுங்க...?"
"ஆனா, நீ என்னோட ரூம்ல தான் இருக்கணும்னு நெனச்ச... இல்லன்னு சொல்லு?"
"நெனச்சேன்... ஆனா, இப்ப இல்ல. எனக்கு இந்த ரூம் வசதியா இருக்கு"
"இரண்டு நாளா என்னோட ரூம்ல நீ வசதியா தான் இருந்த"
"ஆனா எனக்கு தெரியும், நான் உங்க கூட இருந்தது உங்களுக்கு வசதியா இல்ல. நான் உங்களைத் தொல்லைப் படுத்த விரும்பல" என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.
"இந்து, என் பொறுமையை சோதிக்காதே... என் கூட வா..."
"இல்லங்க... நான் இங்க தான்..." அவள் பேசி முடிக்கும் முன், கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை தன் கையில் தூக்கிக் கொண்டான் அர்ஜுன்.
"என்னங்க, என்னை விடுங்க..."
"நீ உன் புருஷன் கூட தான் இருக்கணும்னு உன் மாமியார் உனக்கு சொல்லலயா?" என்று அவன் கேட்க, பேச்சிழந்து போனாள் இந்து.
அர்ஜுனை மடக்க, அவள் பேசிய வார்த்தைகளை, இன்று அவளிடமே பூமராங் போல அர்ஜுன் திரும்பிவிடுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவளை தன் கையில் ஏந்தியபடி, தன் அறையை நோக்கி, அசட்டையாக நடந்து சென்றான் அர்ஜுன். இந்துவின் கண்கள், அவன் மீது தான் இருந்தது என்று கூறவேண்டிய தேவையில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top