Part 26

பாகம் 26

மாஷாவின் கையிலிருந்த கைபேசி நழுவியது. அவர் அர்ஜுனை கொல்ல தீட்டியிருந்த திட்டம் படுத்துவிட்டது. அவனுக்கு பதிலாக இந்து அந்த உணவை சாப்பிட்டு விட்டாள். அவளை அவனிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்த பொழுதே கழுத்தை நெறித்தான். இப்பொழுது அவள் விஷத்தை வேறு தின்று தொலைத்து விட்டாள். இப்போது அந்த ராட்சஸன் என்ன செய்யப் போகிறானோ. அவர் ராட்சஸன் என்று நினைத்தது, சாட்சாத் அர்ஜுனை தான்.

ஒரு பையில் தனது துணிமணிகளை திணித்துக் கொண்டு, தனது காரை நோக்கி ஓடினார். அந்தப் பையை அங்கிருந்த காரின் உள்ளே போட்டுவிட்டு, அந்த காரில் கிளம்பிச் சென்றார். 

சில நிமிடங்களில் ஒரு போலீஸ் ஜீப் சங்கர் இல்லத்தில் நுழைந்தது. தன் வீட்டிற்குள் போலீஸ் நுழைவதை பார்த்து குழம்பினார் சங்கர். அவர் தலைக்குள் அலாரம் அடித்தது. அவர் மாஷாவை அழைத்தார்.

"மாஷாஷாஷா..."

"அவங்க இங்க இல்ல" என்றாள் ஹீனா.

சங்கர் போலீசை பார்த்தார்.

"இது மாஷாவுக்கான அரெஸ்ட் வாரண்ட். அர்ஜுன் சாருடைய சாப்பாட்டில் விஷம் கலந்த குற்றத்திற்காக அவங்களை நாங்க அரஸ்ட் பண்ண வந்திருக்கோம். அந்த சாப்பாட்டை சாப்பிட்ட மிஸஸ் அர்ஜுன், ரொம்ப கிரிட்டிக்கல் கண்டிஷன்ல  ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்காங்க..." என்றார் இன்ஸ்பெக்டர்.

அதைக் கேட்டு, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, கடும் அதிர்ச்சியடைந்தார் சங்கர்.

"என்னது...? அண்ணி விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டாங்களா? ஆனா ஏன்? நான் தான் அவங்ககிட்ட அதை பத்தி சொல்லி இருந்தேனே...?" என்று பாதறினாள் ஹீனா.

"ஆமா மேடம்... அவங்க அந்த சாப்பாட்டை சாப்பிட்டுட்டுடாங்க.  தயவுசெஞ்சு மாஷா சங்கரை கூப்பிடுங்க"

"அவங்க ஃபார்ம் ஹவுஸ்க்கு போயிட்டாங்க. நீங்க அவங்களை அங்கே பார்க்கலாம்"

மாஷாவை பிடிக்க, போலீஸ் ஃபார்ம் ஹவுசுக்கு  விரைந்தார்கள்.

"என்ன நடக்குது இங்க?" என்றார் சங்கர்.

"இந்து அண்ணியோட சித்திகிட்ட அம்மா பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டேன். அண்ணனோட சாப்பாட்டில் விஷம் கலந்திருக்கிறத பத்தி அவங்க சொன்னாங்க. நான் அண்ணிக்கு ஃபோன் பண்ணி, அண்ணை தடுத்து நிறுத்த சொன்னேன். ஆனா, அவங்க ஏன் அந்த சாப்பாட்டை சாப்பிட்டாங்கன்னு எனக்கு புரியல" என்றாள் ஹீனா குழப்பத்துடன்.

"உங்க அம்மா ஏன் இப்படி எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கா? ஏற்கனவே அவ மேல கடுமையான கோவத்துல இருக்கான் அர்ஜுன்..." என்று நொந்து கொண்ட சங்கர்,

"அவ ஃபார்ம் ஹவுஸ்க்கு தான் போறான்னு உனக்கு எப்படி தெரியும்?" என்றார்.

"இந்து அண்ணியோட சித்தியையும் தங்கச்சியையும், அவங்க அங்க தான் ரெண்டு நாளா தங்க  வச்சிருக்காங்க. அதனால, அவங்க அங்க தான் போவாங்க"

"நான் எப்படி அர்ஜுன் முகத்துல முழிப்பேன்?"

"இதெல்லாம் உங்க தலையெழுத்து"
என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் ஹீனா.

மருத்துவமனைக்குச் சென்று இந்துவை பார்க்க.வேண்டும் என்று நினைத்தாள் அவள். ஆனால், அங்கு அர்ஜுன் இருப்பான். ஏற்கனவே அவன் கோபமாக இருக்கிறான். இப்பொழுது சென்று இந்துவை பார்ப்பது புத்திசாலித்தனம் ஆகாது. அது, அடிப்பட்ட சிங்கத்தின் குகைக்குள் நுழைவதற்கு சமமானது.

சாய் மருத்துவமனை

இந்து நலமுடன் இருக்கிறாள் என்று கேட்டு, நிம்மதிப் பெருமூச்சுவிட்டான் அர்ஜுன். அவள் தனி அறைக்கு மாற்றப்பட்டாள். ஆனால் இன்னும் அவள் சுயநினைவு பெறவில்லை. அவளைப் பார்த்தபடி  அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான் அர்ஜுன். இந்துவை அந்த நிலையில் பார்த்த பொழுது அவனால் தாங்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அவள் விஷம் வைத்த உணவை சாப்பிட்டு விட்டாள். அதை சாப்பிட வேண்டியது அவசியமில்லை என்றாலும், இந்துவைப் போன்ற ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு வேறு என்ன தான் தோன்றும்? எதற்காக அவள் இப்படி உயிரை பணயம் வைத்தாள்? அவனுடைய மனமே அவனை வைதது.

"உன்னை சாப்பிட விடாமல் தடுக்க தானடா மடையா..." என்று ஓலமிட்டது.

பட்டாம்பூச்சி ஊசியின் மூலம், அவள் உடலில் குளுகோஸ் ஏற்றிக் கொண்டிருந்தது. அந்தக் கையை பற்றி, தன் கன்னத்தில் ஒற்றிக் கொண்டான்.

"என்னை மன்னிச்சுடு இந்து... எல்லாத்துக்காகவும் நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்... சீக்கிரமா குணமாகி வா. நான் உனக்காக காத்திருக்கேன்" என்று அவள் கையில் முத்தமிட்டான்.

ஃபார்ம் ஹவுஸ்

மாஷா தலைதெறிக்க ஓடி வருவதை பார்த்து, வித்யாவும் வீணாவும் குழம்பிப் போனார்கள்.

"என்ன ஆச்சிங்க?" என்றார் வித்யா.

"அர்ஜுனுக்கு பதிலா, இந்து விஷத்தை சாப்பிட்டுடா..."

"அவ செத்துட்டாளா?" என்றார் வித்யா

"இன்னும் இல்ல. அவளை ஹாஸ்பிடல்ல சேத்திருக்காங்க"

"இப்ப என்ன செய்யுறது?" என்றாள் வீணா.

"இந்த விஷயம் கொஞ்சம் ஆறட்டும். அது வரைக்கும் நாம இங்கேயே இருக்கலாம்" என்றார் மாஷா.

திடீரென்று கேட்ட காலடி ஓசை, அவர்களைத் தடுமாறச் செய்தது.  காவல்துறையினர் அங்கு வருவதை பார்த்து அவர்களின் முகம் வெளிறிப்போனது.

"உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்" என்றார் இன்ஸ்பெக்டர்.

"என்னை அரெஸ்ட் பண்ண போறீங்களா...? எதுக்கு?" என்றார் மாஷா, அவருக்கு எதுவும் தெரியாதது போல.

"நீங்க பணம் கொடுத்து ஏற்பாடு செஞ்சிருந்த ஆள், நீங்க தான் அர்ஜுனுடைய சாப்பாட்டில் விஷம் கலக்க சொன்ன உண்மையை சொல்லிட்டான். "

"எங்க மூனு பேரையும் மன்னிச்சிடுங்க" என்றார் மாஷா, வித்யாவையும் வீணாவையும் சுட்டிக்காட்டி.

"எங்களை ஏன் சேத்துகிறீங்க?" என்றார் வித்யா

"நீங்க தானே இதை செய்ய சொன்னீங்க?" என்றார் மாஷா.

"ஏன் இப்படி அபாண்டமா பொய் சொல்றீங்க?" பரிதாவித்தார் வித்யா.

"அவங்க யாரு?" என்றார் இன்ஸ்பெக்டர்.

"இந்துவோட சித்தி. அவங்க சொல்லி தான், நான் இதெல்லாம் செஞ்சேன்"

அவர்களையும் இந்த விஷயத்தில் இழுத்துவிட்டார் மாஷா. வித்யாவும் வீணாவும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

"ஏன் இப்படி பொய் சொல்றீங்க? நீங்க தானே சொத்துக்காக  அர்ஜுனனை கொல்ல நினைச்சீங்க...?"

"வாயை மூடு. நான் எதுக்கு என் மகனைக் கொல்ல நினைக்கணும்? நீங்க தான் அவன் எழுதி வாங்கின வீட்டுக்காக அதை செஞ்சிங்க..."

"நீங்க எது சொல்றதா இருந்தாலும் ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க" என்று அவர்களுக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றார் ஆய்வாளர்.

சாய் மருத்துவமனை

மெல்ல கண் திறந்தாள் இந்து. அவள் தொண்டையில் அதீத எரிச்சல் இருந்தது. விஷம் கலந்த உணவை அவள் வயிற்றில் இருந்து வெளியேற்ற, உள்ளே செலுத்தப்பட்ட குழாயின் மூலம், அவள் தொண்டை புண்ணாகி போயிருந்தது. அவளுக்கு வயிற்றில் ஏதோ செய்தது.

அப்போது கண்ணீருடன் ரம்யா மருத்துவமனைக்குள் நுழைந்தாள். மருத்துவமனையின் மருந்தகத்தில், மருந்துகளை வாங்கிக் கொண்டிருந்த அர்ஜுன், அவளை கவனித்தான். அவன் ஏதும் கூறுவதற்கு முன், அவள் அவனை கடந்து சென்று விட்டாள்.

இந்துவின் அறைக்குள் நுழைந்த ரம்யா, இந்து எழுந்து அமர முயன்று கொண்டு இருந்ததை பார்த்து, ஓடிச் சென்று அவள் உட்கார உதவினாள்.

"கடவுள் புண்ணியத்துல உங்களுக்கு ஒன்னும் ஆகல... எதுக்காக அந்த சாப்பாட்டை நீங்க சாப்பிட்டீங்க? ஏன் இப்படி எல்லாம் செய்றீங்க, இந்து?" என்றாள் வேதனையுடன்.

ஒன்றும் கூறாமல் அவளை பார்த்தாள் இந்து.

"ஏன் அப்படி பாக்குறீங்க?"

தன் தொண்டையை லேசாய் தடவி விட்டுக் கொண்டாள் இந்து.

"தொண்டை ரொம்ப வலிக்குதா?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"அர்ஜுனை சாப்பிடாம தடுக்க தான் அப்படி செஞ்சேன்" என்று மெல்லிய குரலில் கூறினாள்.

"அதுக்கு பதில், சாப்பாடு தட்டை தட்டி விட்டிருக்கலாமே?"

"செஞ்சிருக்கலாம்... ஆனா, எனக்கு அப்போ ஒண்ணுமே தோணல. என்னுடைய மூளை வேலை செய்யல"

"நீங்க ஒரு அப்பாவி"

"நான் அப்படி இருக்கிறதால எதையுமே இழக்கல. அதுக்கு பதில், நல்ல இதயம் உள்ள மனுஷங்களை தான் சம்பாதிச்சிருக்கேன்... அர்ஜுன், கிரி அண்ணா, நீ..."

"என்னை நீங்க நம்புறீங்களா?"

"என்னோட கூட பிறந்தவளை மாதிரி..."

"அப்படின்னா நான் சொல்றதை செய்வீங்களா?"

"நிச்சயமா செய்வேன்"

"அப்படின்னா, கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. நான் எது சொன்னாலும் எதுவும் பேசாதீங்க"

சரி என்று தலையசைத்தாள் இந்து. அவளுக்குத் தான் ரம்யா யார் என்று தெரியுமே... அவள் என்ன தான் செய்கிறாள் என்று பார்ப்போம் என்று நினைத்தாள் இந்து.

கதவருகே ஓடிச்சென்று அர்ஜுன் வருகிறானா என்று பார்த்தாள் ரம்யா. மருந்துகளை வாங்கிக்கொண்டு இந்துவின் அறையை நோக்கி வந்தான் அர்ஜுன். இந்துவை நோக்கித் திரும்பி, தன் ஆள்காட்டி விரலை வாயின் மீது வைத்து, பேசாதே என்று அவளுக்கு சைகை செய்தாள். சரி என்று தலையசைத்தாள் இந்து.

அர்ஜுன் கதவை திறக்க கைப்பிடியை தொட்டான்.

"உங்க வேதனை எனக்கு நல்லாவே புரியுது, இந்து..." என்று ரம்யா கூறியதைக் கேட்டு, கதவை திறக்காமல் அப்படியே நின்றான் அர்ஜுன்.

"இந்த மாதிரி ஒரு ஆழமான காதலை நான் பார்த்ததே இல்ல. உங்க காதலை, உங்க புருஷனுக்கு புரிய வைக்க எவ்வளவோ போராடினிங்க. கடைசியில, அவரோட உயிரை காப்பாத்த  விஷம் சாப்பிடுற அளவுக்கு போயிட்டீங்க... நீங்க கவலைப்படாதீங்க. நிச்சயமா உங்க புருஷன், உங்க காதலை புரிஞ்சிக்குவாரு. தயவு செஞ்சு எந்த தப்பான முடிவுக்கும் போயிடாதீங்க."

அர்ஜுனின் கண்கள் விரிவடைந்தன.

"தயவுசெஞ்சு நிதானமா யோசிச்சு பாருங்க. நீங்க எவ்வளவு உடைஞ்சு போயிருக்கீங்கன்னு எனக்கு தெரியும். மனசை தளர விடாதீங்க. எல்லாம் சரியாயிடும்னு நம்புங்க "

தன் உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள் இந்து. ரம்யா என்ன செய்ய முயல்கிறாள் என்று அவளுக்கு புரிந்தது. அவளும் அதையே செய்வது என்று முடிவெடுத்தாள்.

தான் கேட்டுக்கொண்டபடி, இந்து எதுவும் பேசாமல், அவளுக்கு துணை நின்றதால் நிம்மதி அடைந்தாள் ரம்யா.

"தயவு செஞ்சு அழாதீங்க, இந்து ப்ளீஸ்"

அதற்கு மேல் அர்ஜுனால் வெளியே காத்திருக்க முடியவில்லை. அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் வருவதை உணர்ந்து, தன் முகத்தை கையால் மூடிக்கொண்டாள் இந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள. அவன் அங்கு வந்ததும், அங்கிருந்து வெளியே சென்றாள் ரம்யா. இந்துவின் அருகில் வந்து, அவள் எதிரில், கட்டிலில் அமர்ந்து கொண்டான் அர்ஜுன்.

"இப்போ உனக்கு எப்படி இருக்கு?"

பரவாயில்லை என்பது போல் தலையை அசைத்தாள் இந்து, கீழே குனிந்த படி.

"தொண்டை வலிக்குதா?"

மீண்டும் ஆமாம் என்று தலையசைத்தாள்.

"இந்த மாதிரி, நீ தைரியமா விஷம் சாப்பிடுவன்னு நான் நெனச்சே பாக்கல..."

அவள் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தாள். அவளுடைய அமைதி, அவன் மனதை ஏதோ செய்தது. வண்ணத்துப் பூச்சியைப் போல், சதா அவன் பின் அழகாய் சுற்றிக் கொண்டிருந்த பெண்ணை காயப்படுத்தி விட்டு, இப்பொழுதும் அதையே எதிர்பார்பது என்ன நியாயம்?

"இந்த சலைன் பாட்டில் காலியான உடனே நம்ம வீட்டுக்கு போகலாம்"

அவள் சரி என்று தலையசைத்தாள்.

"உன்னால மெதுவா கூட பேச முடியலயா?"

"முடியலங்க" என்றாள் சிரமத்துடன்.

"ஓகே ஓகே... ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணாத"

அப்பொழுது, கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த வேலனின் மீது அவர்கள் கவனம் சென்றது. வேலனுடன் ரம்யாவும் உள்ளே வந்தாள்.

"எப்படி இருக்கீங்க, மா?" என்றார்

நன்றாக இருக்கிறேன் என்று புன்னகையுடன் தலையசைத்தாள். சொல்ல வேண்டிய அவசியமே இல்லை, அவளது புன்னகை, அர்ஜுனின் நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டியது. அவனை அவள் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை... ஆனால், வேலனை பார்த்து புன்னகைக்கிறாளே...?

"நீங்க அதைக் கொண்டு வந்தீங்களா?" என்றான் அர்ஜுன்.

"கொண்டு வந்திருக்கேன், தம்பி"

ஒரு பழச்சாறு நிரம்பிய பாட்டிலை அவனிடம் கொடுத்தார் வேலன். அதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, இந்துவிடம் நீட்டினான் அர்ஜுன்.

"உன் தொண்டைக்கு கொஞ்சம் இதமா இருக்கும். இதை குடி"

வேண்டாம் என்று தலையசைத்தாள் இந்து, அவனைப் பார்க்காமல்.

"நீங்க எதுவுமே சாப்பிடாம இருக்கீங்க, இந்து. உங்க வயிறு காலியா இருக்கு. கொஞ்சம் குடிங்களேன்" என்றாள் ரம்யா.

ரம்யாவை பார்த்து, சரி என்று புன்னகையுடன் தலையசைத்து, அவனை மேலும் எரிச்சலடைய செய்தாள் இந்து. அவனிடமிருந்து அந்த பழச்சாறை பெற்று, மெல்ல குடிக்கத் தொடங்கினாள். அர்ஜுன் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வான். ஆனால், தான் தவிர்க்கப்படுவதை மட்டும் அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியாது. அதுவும் இந்து என்று வந்து விட்டால், அவள் விஷயத்தில் அவன் ஒரு ராட்சசன். அவள் அவனை தவிர்த்தால் அதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அவனுக்கென்று இந்த உலகத்தில் இருப்பது அவள் மட்டும் தானே... அவனை முழு மனதாய் நேசிப்பது அவள் ஒருத்தி தானே... அவளுடைய காதல், அவனுக்கு மட்டுமே சொந்தம்... அவன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்...

"நீங்க ரெண்டு பேரும் கிளம்பலாம். ராத்திரி சாப்பாடு, காரம் இல்லாம சமைச்சி வையுங்க. நாங்க வறோம்" என்று அவர்களை கிளப்பினான்.

இந்துவும் ரம்யாவும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்கள். வேலனுடன் அங்கிருந்து வெளியேறினாள் ரம்யா. 

அர்ஜுனனைத் தவிர, அந்த அறையில் இருந்த  மற்ற அனைத்தையும் பார்த்தபடி, அந்த பழச்சாறை குடித்து முடித்தாள் இந்து.

"உனக்கு டயர்டா இருந்தா கொஞ்ச நேரம் தூங்கு" என்றான்.

ஒன்றும் கூறாமல், கட்டிலில் படுத்து தன் கண்களை மூடிக்கொண்டாள் இந்து. அவள் அவன் மீது வருத்தத்தில் இருக்கிறாள் என்று தெள்ளத் தெளிவாய் புரிந்தது அர்ஜுனுக்கு. அப்படி அவள் இருப்பதில் தவறில்லையே. அவன் மீது, தன் காதலை அவள் பொழிந்த பொழுது, அவன் அதற்கு உரிய மரியாதையை வழங்கவில்லை. அப்படியென்றால் அவள் அவன் மீது வருத்தத்தில் தானே இருப்பாள்...? எப்படியாவது அவளை சமாதானப்படுத்தியாக வேண்டும். குற்ற உணர்ச்சியில் தவித்தான் அர்ஜுன். இந்துவோ, மனதிற்குள் கடவுளுக்கு நன்றி கூறினாள். அவளுடைய வேண்டுதல் நிறைவேறி விட்டது அல்லவா? அர்ஜுன், அவள் அருகில் இருந்து, அவளை கவனித்துக் கொண்டிருக்கிறான். இது அவள் வாழ்வில் ஒரு அருமையான தருணம். சந்தோஷ வெள்ளத்தில் மிதந்தாள் இந்து.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top