Part 25

பாகம் 25

தூக்கத்திலிருந்து கண் விழித்த அர்ஜுன், இந்து அவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பதை கண்டு எழுந்து அமர்ந்தான்.

"இனிய காலை வணக்கம்" என்றாள் இந்து.

ஒவ்வொரு நாளும் இப்படித் தான் துவங்க வேண்டுமென்று அவன் விரும்பினான். அவன் அமைதியாய் இருக்கவே,

"குட் மார்னிங் சொன்னேன்..."

"காலை வணக்கம்னா, குட்மார்னிங்னு எனக்கு தெரியும்" என்றான்.

"தெரியுமா...? லண்டன்ல வளர்ந்தவராச்சே... தெரியாதோன்னு நினைச்சேன்" என்று சிரித்தாள்.

கட்டிலை விட்டு கீழே இறங்கி, குளியலறை நோக்கி விரைந்தான். அலுவலகம் செல்ல தயாரான நிலையில், கீழ்தளம் வந்தான். அன்று இந்து சமைக்கவில்லை. அமைதியாய் அவன் அருகில் நின்றிருந்த வேலனை, நிமிர்ந்து பார்த்தான்.

"ஏன் இன்று இந்து சமைக்கவில்லை?" என்ற கேள்வி அவன் தொண்டையை அரித்தது.

எதுவும் கேட்காமல,  விருப்பம் இல்லாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்... திருத்தம்... பாதியில் விட்டு விட்டு எழுந்தான்.

அப்பொழுது, பூஜையை முடித்துக் கொண்டு வந்தாள் இந்து. அவளைப் பார்த்து நின்றான் அர்ஜுன்.

"இங்க பாரு..." என்றான்.

தனக்குப் பின்புறம் திரும்பிப் பார்த்தாள் இந்து. அவன் வேறு யாரிடமோ பேசுகிறான் என்பதை போல.

"நான் உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்"

ஓடி வந்து அவன் அருகில் நின்றாள் ஆர்வமாக.

"இன்னைக்கு மத்தியானம் எனக்கு சாப்பாடு கொண்டு வராத."

"ஏன்?" என்று அவள் கேட்க முற்படும் முன்,

"நான் ஆஃபீஸ்ல இருக்கமாட்டேன்" என்றான்.

"ஏன்? எங்க போறீங்க?"

"நான் ஏன் உனக்கு பதில் சொல்லணும்?" என்றான் தெனாவட்டாக.

அங்கிருந்து அவன் செல்ல ஓரடி எடுத்த போது, அவனை இறுக்கமாய் கட்டிப்பிடித்துக் கொண்டாள் இந்து.

சுற்றுமுற்றும் பார்த்தான் அர்ஜுன்.

"என்ன பண்ற நீ? என்னை விடு." என்றான்.

"முடியாது... நீங்க எங்க போறீங்கன்னு சொல்ற வரைக்கும் விட மாட்டேன்"

"நான் ஹோட்டல் ப்ளூ மௌண்ட்டேன்க்கு லஞ்ச்க்கு போறேன்" என்றான்.

தன் பிடியை தளர்த்தி விட்டு, தன் நெற்றியை, அவன் நெற்றியில் லேசாய் முட்டி, அவன் கன்னத்தை பிடித்து கிள்ளி,

"நல்ல பிள்ளை" என்று கூறிவிட்டு, கலகலவென சிரித்த படி உள்ளே ஓடினாள்.

தன் தலையை இடவலமாக அசைத்தபடி, சிரித்துக்கொண்டே சென்றான் அர்ஜுன்.

சிறிது நேரம் கழித்து,

சீதாராணி இல்லத்தின் லேண்ட் லைன் நம்பருக்கு அழைப்பு விடுத்தாள் ஹீனா. ரம்யா எடுத்து பேசினாள்.

"ஹலோ"

"யார் பேசுறது?" என்றாள் ஹீனா.

"நான் ரம்யா... கேர் டேக்கர்..."

"சீக்கிரமா ஃபோனை அண்ணிகிட்ட கொடுங்க"

"அண்ணியா....? நீங்க யார் பேசுறது?"

"ஹீனா. அர்ஜுனன் அண்ணனோட  தங்கச்சி"

"இதோ கொடுக்கிறேன்" என்று இந்துவின் அறையை நோக்கி ஓடினாள் ரம்யா.

அவள் அப்படி தலைதெறிக்க ஓடி வருவதை பார்த்து பதறினாள் இந்து.

"என்ன ஆச்சு உனக்கு?" என்றாள்

"அர்ஜுன் சாரோட தங்கச்சி லைன்ல இருக்காங்க. உங்ககிட்ட பேசணுமாம்"

அவளிடமிருந்து ரிசீவரை பெற்றுக் கொண்டாள் இந்து.

"ஹீனா..."

"அண்ணி, அண்ணனை காப்பாத்துங்க. அவர் சாப்பிட போற சாப்பாட்டுல விஷம் கலக்க போறாங்க"

"என்ன்ன்ன்னது...?"

"அவர் மத்தியானம் ஒரு ஸ்டார் ஹோட்டல்ல தானே சாப்பிட போறார்?"

"ஆமாம்... உனக்கு எப்படி தெரியும்? யார் அதை செஞ்சது?" என்றாள் நடுக்கத்துடன்.

"எங்க அம்மா தான். அதை செய்யச் சொல்லி அவங்க யாருக்கோ பணம் கொடுத்திருக்காங்க. அவங்க ஃபோன்ல பேசினதை நான் கேட்டேன்"

"ஆனா ஏன்?" என்ற போது அவள் தொண்டை அடைத்தது.

"அண்ணி, அதை எல்லாம் பேச இப்ப நமக்கு நேரம் இல்ல. தயவு செஞ்சு சீக்கிரமா அண்ணனுக்கு ஃபோன் பண்ணி, அந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டாம்னு சொல்லுங்க"

உடனடியாக அந்த அழைப்பை துண்டித்து, அர்ஜுனுக்கு ஃபோன் செய்தாள் இந்து. ஆனால் அவனுடைய கைபேசி எண் வழக்கம் போல வாய்ஸ் மெயிலில் இருந்தது. அவன் மீட்டிங்கில் கலந்துகொள்ளும் போது, அழைப்புகளை ஏற்பதில்லை.

அழுதபடி வெளியே ஓடினாள் இந்து, டிரைவரை அழைத்தபடி.

"அண்ணா, தயவு செஞ்சு என்னை அவர்கிட்ட கூட்டிகிட்டு போங்க. ரொம்ப அவசரம்"

"ஆனா, அவர் ஆஃபீஸ்ல இல்லயே மா... ஒரு லன்ச் பார்ட்டிக்காக ப்ளூ மவுண்டன் ஹோட்டலுக்கு போயிருக்காரு"

"தெரியும். தயவு செஞ்சு என்னை அங்க கூட்டிட்டு போங்க"

அவள் அழைத்துப் போகச் சொல்வது அர்ஜுனிடம் என்பதால், மேற்கொண்டு டிரைவர் எதையும் யோசிக்கவில்லை. அவர் உடனடியாக காரை ஸ்டார்ட் செய்தார். இந்து அழுவதைப் பார்த்து அவருடைய வேகம் அதிகரித்தது.

அந்த மிகப் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாசலில் காரை நிறுத்தினார் டிரைவர். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பை போல் உள்ளே நுழைந்தாள் இந்து. அந்த பிரம்மாண்டமான ஹோட்டலை பார்த்து அசந்து நின்றாள். நேரே வரவேற்பை நோக்கி சென்றாள்.

"மேடம், அர்ஜுன் எங்க இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா? அவர் இங்க ஒரு மீட்டிங்குக்காக வந்திருக்காரு" என்றாள்.

அவளை வினோதமாய் பார்த்தாள் அந்த வரவேற்பாளர் பெண்.  இப்படி மொட்டையாக கேட்டால் அவள் என்ன தான் கூறுவாள்? அங்கு தான் இரண்டு, மூன்று மீட்டிங்குகள் நடக்கின்றதே. ஆனால், அவள் அருகில் இருந்த வேறு ஒரு ஆள் அவளுக்கு பதில் கூறினார்.

"நீங்க பிசினஸ் கான்ஃபரன்ஸ் பத்தியா கேக்குறீங்க?"

"ஆமாங்க" என்று அவசரமாய் தலையசைத்தாள் இந்து.

"முதல் மாடியில, இடது கைப்பக்கம், ரெண்டாவது ஹால்..."

முதல் மாடியை நோக்கி வேகமாய் ஓடினாள் இந்து. அதன் நுழைவாயிலில் நின்று, மூச்சு வாங்க அர்ஜுனை தேடினாள். அப்போது, ஒருவர் அர்ஜுன் கையில் ஒரு தட்டு உணவை கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றார். அதைப் பார்த்து அவள் இதயம் துடிப்பதை நிறுத்தியது.

"அர்ஜுன்ன்ன்..."என்று கத்தினாள்.

அவள் குரலைக் கேட்டு திடுக்கிட்டான் அர்ஜுன். அவள் அங்கு மூச்சுவாங்க நிற்பதை பார்த்து குழம்பிப் போனான். அவனை நோக்கி ஓடிச் சென்று, அவன் கையில் இருந்த தட்டை பிடுங்கினாள் இந்து. அவன் அந்த உணவை தொடாதது குறித்து அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

"இந்த சாப்பாட்டை சாப்பிடாதிங்க. இதுல விஷம் கலந்திருக்கு"

"என்னது விஷமா?" என்றான் முகத்தை சுருக்கி.

 "ஆமாம்"

"நீ என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா? முதல்ல இங்க இருந்து போ"

"நான் சொல்றதை நம்புங்க"

"இது எப்படிப்பட்ட பார்ட்டின்னு தெரியுமா...? இது எவ்வளவு கவுரவமான இடம்னு தெரியுமா?"

"உங்களுக்கு எப்படி தெரியும், இந்து?" என்றான் கிரி.

சுற்றுமுற்றும் பார்க்க, அனைவரின் கண்களும் அவர்கள் மீது தான் இருந்தது. அவள் எப்படி அங்கு மாஷாவின் பெயரை கூறுவது?

"அதை என்னால சொல்ல முடியாது"

"இந்து, இது விளையாட்டு இல்ல" என்றான் அர்ஜுன்

"அர்ஜுன், கொஞ்சம் பொறுமையா  இரு" என்றான் கிரி.

"கிரி அண்ணா, நான் சொல்றத தயவுசெஞ்சு கேளுங்க. இந்த சாப்பாட்ல விஷம் கலந்திருக்கு. யாருக்கோ பணம் கொடுத்து, ஒருத்தர் அதை செய்ய சொல்லி இருக்காங்க"

"யாரு?" என்றான் அர்ஜுன்.

"தயவு செஞ்சு அதை மட்டும் கேட்காதீங்க, அர்ஜுன்"

"உன் மனசுல நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? சீன் போடுறதை நிறுத்திட்டு போ இங்கிருந்து"

"இல்ல, நான் சீன் போடல"

"எல்லாரும் நம்மள தான் பாத்துக்கிட்டு இருக்காங்க... வா என் கூட" என்று அவள் கையை பற்றினான்.

அவன் கையை தட்டி விட்டு, அந்த தட்டில் இருந்த உணவை அவள் உண்ணத் தொடங்கிய போது, அவன் திடுக்கிட்டான். அவள் கூறியதை அவன் நம்பாவிட்டாலும், நம்பாமலும் அவனால் இருக்க முடியவில்லை.

"இந்து, ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க. லேப்ல கொடுத்து டெஸ்ட் பண்ணலாம்"  என்று கெஞ்சினான் கிரி.

அவள் கையில் இருந்த தட்டை பிடுங்கினான் அர்ஜுன். கிரி தன் கைபேசியை எடுத்து, அருகில் இருந்த மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஃபோன் செய்தான்.

அவ்வளவு நேரம் மன்றாடிக் கொண்டிருந்த இந்து, ஏதும் செய்யாமல் அமைதியாய் அர்ஜுனை பார்த்துக் கொண்டு நின்றாள். அச்சம் அர்ஜுனை முழுமையாய் ஆட்கொண்டது.

அவள் கன்னத்தை பற்றி,

"இந்து, உனக்கு என்ன செய்து?" என்றான் பயத்துடன்.

அவனை வலி நிறைந்த பார்வை பார்த்தாள் இந்து. அந்தப் பார்வை அவன் வயிற்றில் ஏதோ செய்தது.

விஷத்தின் தீவிரத்தால் இந்துவின் நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டது. அவள் முகத்தைப் பார்த்தவுடனேயே, அவள் ஏதோ அவஸ்தையில் இருக்கிறாள் என்பது புரிந்தது அர்ஜுனுக்கு. அந்த எரிச்சலை தாங்க முடியாமல், அவள் கண்கள் கண்ணீரை சிந்தின.

"அர்ஜுன், நம்ம நேரத்தை வீணடிக்கிறோம்" என்று கத்தினான் கிரி.

"யாராவது சால்ட் வாட்டர் கொண்டு வாங்க" என்று கத்தினான் அர்ஜுன்.

அந்த ஹோட்டலின் பணியாள் ஒருவர் உப்பு நீரை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார். அந்த தண்ணீரை அவளை குடிக்க செய்தான் அர்ஜுன். மேலும் அங்கு தாமதிக்காமல் அவளை தூக்கி கொண்டு ஓடினான்.

"நான் பொய் சொல்லல, அர்ஜுன்" என்றாள் இந்து மெல்லிய குரலில்.

அடுத்த நிமிடம் உண்ட உணவை, வாயில் எடுத்து விட்டு மயங்கிப் போனாள்.

"இந்து... இந்து எழுந்திரு... கண்ணை திறந்து என்னை பாரு" என்று கதறினான் அர்ஜுன்.

அதே நேரம், அங்கு ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. ஆம்புலன்சில் அவளுடன் மருத்துவமனைக்கு விரைந்தான் அர்ஜுன். ஆம்புலன்சில் இருந்த மருத்துவர், அவளுக்கு முதலுதவி செய்ய  ஆரம்பித்தார். தனது இருசக்கர வாகனத்தில், அந்த ஆம்புலன்ஸை தொடர்ந்தான் கிரி.

சாய் மருத்துவமனை

சிவந்த கண்களுடன், அறுவை சிகிச்சை அறையின் வெளியே நின்றிருந்தான் அர்ஜுன். அங்கு வந்த கிரி, அவன் அருகில் நின்று கொண்டான்.

"இதை யாரு செஞ்சிருப்பாங்க, அர்ஜுன்?" என்றான்.

அவனுக்கு பதில் சொல்லவில்லை அர்ஜுன்.

"நம்ம வியாபார எதிரிங்க யாருக்கும் இவ்வளவு தைரியம் இருக்கும்னு நான் நினைக்கல" என்றான் கிரி.

கண்களை மூடி, சுவரில் சாய்ந்தான் அர்ஜுன். விஷம் கலந்த உணவை சாப்பிட்டு விட்டு, அவனை இந்து பார்த்த அந்த ஒரு பார்வை, அவனை முள் போல் குத்தியது. அவனுக்குள் கோபம் கொப்பளித்தது. இந்துவுக்கு அதைப் பற்றி எப்படி தெரிந்தது? அவளுக்கு யாரோ ஒருவர் தான் அதைப் பற்றி கூறியிருக்க வேண்டும். அது யாராக இருக்கும்? ஏன் அந்த நபரின் பெயரை சொல்ல அவள் தயங்கினாள்? அப்படி என்றால், அந்த நபர் அவளுக்கு தெரிந்தவராக தான் இருக்க வேண்டும். யார் அந்த நபர்? தனது கைப்பேசியை எடுத்து சீதாராணி இல்லத்திற்கு ஃபோன் செய்தான். ரம்யா எடுத்து பேசினாள்.

"இந்துவை பாக்க, வீட்டுக்கு யாராவது வந்தாங்களா?" என்றான்.

"இல்ல... யாரும் வரல"

"நீ வீட்ல தான் இருந்தியா?"

"ஆமாம்... வீட்டுக்கு யாரும் வரல... ஆனா..."

"ஆனா என்ன?"

"ஹீனா ஃபோன் பண்ணாங்க"

"ஹீனாவா? எப்போ? அவ என்ன சொன்னா?"

"முக்கால் மணி நேரத்துக்கு முன்னாடி இருக்கும்... அவங்க என்ன சொன்னாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா, அதுக்கு அப்புறம் தான், இந்து உங்கள பாக்க வந்தாங்க."

அழைப்பை துண்டித்தான் அர்ஜுன். விஷயத்தைப் புரிந்து கொள்வதில் அவனுக்கு எந்த சிரமமும் இல்லை. இது மாஷாவின் வேலை. பல்லை கடித்தான் அர்ஜுன். மாஷாவிற்கு கொடுத்ததெல்லாம் போதவில்லை. அவளை இப்படியே விடுவது தவறு. அவள் எழுந்திருக்கா வண்ணம் அவளை ஓங்கி அடிக்க வேண்டும். அங்கிருந்து அவன் செல்ல நினைத்த பொழுது, அவனை தடுத்தான் கிரி.

"அவசரப்பட்டு எதுவும் செஞ்சிடாத, அர்ஜுன். தயவுசெஞ்சு நிதானமாய் இரு"

அப்பொழுது அர்ஜுனுக்கு கமிஷனரிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றான் அர்ஜுன்.

"உங்க சாப்பாட்டுல விஷம் கலந்த ஆளை, ஹோட்டல்ல வேலை செய்யுறவங்களே கண்டு பிடிச்சிட்டாங்க. அந்த ஆள், மிஸஸ் மாஷாசங்கர் தான் அதை செய்ய சொன்னதா  சொல்லி இருக்கான். எந்த ஆக்ஷனும் எடுக்குறதுக்கு முன்னாடி, உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம்னு நினைச்சேன். ஏன்னா, அவங்க உங்களோட..." அம்மா என்று கூறுவதற்கு முன்,

"அவளை அரெஸ்ட் பண்ணுங்க..." என்றான் அர்ஜுன்.

"ஓகே, சார்" என்று அழைப்பைத் துண்டித்தார் கமிஷனர்.

பல்லைக் கடித்து தன் ஆத்திரத்தை அடக்கினான் அர்ஜுன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top