Part 24
பாகம் 24
சிலைபோல் நின்றிருந்தான் அர்ஜுன். இந்து அவனை முத்தமிட்டுவிட்டாள்... எதற்காக? தன் நெற்றியை தொட்டுப் பார்த்து புன்னகைத்தான் அர்ஜுன். அவளை அவன் கட்டிலில் படுக்க வைத்ததற்காக இருக்கலாம்... அவள் சந்தோஷமாக இருக்கும் போதெல்லாம் முத்தமிடுவாளோ...? பைத்தியக்காரி... என்றெண்ணி சிரித்தான்.
முழுதும் தயாரான நிலையில், உணவு மேஜைக்கு வந்தான் அர்ஜுன். வாழ்வில் என்றும் கண்டிராத ஒரு நறுமணம், சமையலறையிலிருந்து வந்து அவன் மூக்கை துளைத்தது. அவனுக்கு மிகவும் பிடித்த, பூரியும், பட்டாணி குருமாவும் தயாராவது போல் தெரிகிறது. ஆனால், அது வேலனின் வழக்கமான கைவண்ணத்தின் மணமாக தெரியவில்லை. சமைப்பது யார்? இந்துவா...? வேலனுக்கு பதிலாக, இந்து உணவு கொண்டு வருவதை பார்த்து ஆச்சரியம் அடைந்தான் அர்ஜுன். ஏனென்றால், அவனுக்கு முத்தமிட்ட பின் அவள் அவன் முன் வரமாட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்தான் அவன். ஒன்றுமே நடக்காதது போல், அவனுக்கு சகஜமாய் உணவு பரிமாறினாள் இந்து. முதல் வாய் உணவை எடுத்து வைத்த உடனேயே அவனுக்கு புரிந்து போனது, அது வேலன் சமைத்த உணவு அல்ல என்பது. அதன் தனிச்சுவைத்திறம் அலாதியாய் இருந்தது.
"யார் சமைச்சது?" என்றான் முகத்தில் எந்த பாவமும் இன்றி.
"மிஸஸ் இந்துமதி அர்ஜுன்" என்று அவள் கூற,
புன்னகைத்து விடாமல் இருக்க படாத பாடு பட்டான் அர்ஜுன். அவனுக்குப் பூரியும், பட்டாணி குருமாவும் பிடிக்கும் என்று தெரிந்து தான் அவள் செய்தாளா? ஆனால், அவளுக்கு எப்படி தெரிந்தது?
"நீ ஏன் சமைச்ச? உன்னை யாரு சமைக்க சொன்னது?"
"என்னோட மாமியார் தான்..." என்று அவள் கூற திகைத்துப் போனான் அர்ஜுன்.
"நேத்து ராத்திரி என் கனவுல வந்து, அவங்க தான் சொன்னாங்க"
புளுகு மூட்டை என்பது போல் அவளை நோக்கி ஒரு பார்வையை வீசினான் அர்ஜுன்.
"நெஜமாத் தான் சொல்றேன். அவங்க உங்களைப் பத்தி நிறைய சொன்னாங்க. என் பையன பத்திரமா பாத்துக்கோ. அவன் எதுவுமே பிடிக்காத மாதிரி ரொம்ப நடிப்பான்... கோவக்காரன் மாதிரி காட்டிக்குவான்... ஆனா, நீ அதையெல்லாம் நம்பாத. அவன் வெளியில பார்க்க எப்படி இருக்கானோ அது உண்மையில்ல. எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் ஒத்துக்க மாட்டான்... சரியா சாப்பிட மாட்டான்... அவனை விட்டுடாத... அவனை இறுக்கமாக கட்டிப் பிடிச்சு, அவனுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுடு அப்படின்னு சொன்னாங்க..."
"எனக்கு ஊட்டி விடுற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கா?" என்றான் தனது ஆர்வத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல்.
"தைரியமா? நான் என்ன போருக்காக போறேன்..? புருஷனுக்கு சாப்பாடு ஊட்டி விட தைரியம் எதுக்கு? அன்பு இருந்தா போதாதா...?"
அர்ஜூனின் மனதில் சந்தோசம் கொப்பளித்தது. நீண்ட பெரு மூச்சை இழுத்து அதை அடக்கிக் கொண்டான்.
"பூரியும் பட்டாணி குருமாவும் எப்படி இருக்கு? உங்களுக்கு பிடிக்கலயா?"
சாப்பிடுவதை நிறுத்தினான் அர்ஜுன். பிடிக்கவில்லையாவது...? எவ்வளவு அருமையாய் இருக்கிறது...! அதே மாவு, அதே தேங்காய், அதே பட்டாணி, ஆனால், இந்த பெண்ணின் கைப்பக்குவம் தான் எவ்வளவு சுவை கூட்டுகிறது...! ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டான். இந்தப் பெண்ணின் மனதில் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அவளுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்தால், அவள் பேசியே அவனை மயங்கச் செய்து விடுவாள். சாப்பிட்டு முடித்து அலுவலகம் சென்றான் அர்ஜுன், நிறைந்த மனதோடு.
சங்கர் இல்லம்
மாஷாவிற்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அவர் தலைக்குள் பெரு வெடிப்பு நிகழ்ந்ததை போல் உணர்ந்தார் மாஷா. அவருடைய நீண்ட கால சேமிப்புகள் வருமானவரி துறை அதிகாரிகளால் சோதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அவருக்கு முன்னால் தன் கைகளை கட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார் சங்கர். அவரிடம் தான் எல்லாவற்றிற்கும் கனகச்சிதமான கணக்கு இருக்கிறதே... ஆனால், மாஷாவிடம் அவருடைய தனிப்பட்ட எந்த சேமிப்பிற்கும் எந்த கணக்கும் இல்லை. அவருடைய ஊட்டி டீ எஸ்டேட், சொகுசு பங்களா, பத்து கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், எதற்கும் கணக்கில்லை. அவர் அவற்றையெல்லாம் சங்கருக்கு தெரியாமல் அல்லவா சேர்த்து வைத்தார்...? அவர் சங்கரின் நேரடி உதவியாளராக பணியாற்றிய பொழுது, அவருக்கு தெரியாமல், பொய் கணக்கு காட்டி, அவற்றையெல்லாம் சேர்த்திருந்தார். மாஷாவின் வேலை தெரிய வந்த பொழுது, அவரை அந்த பணியில் இருந்து நீக்கினார் சங்கர். அன்று அவர் செய்த வேலை தான், இன்று அர்ஜுனின் ரூபத்தில் அவரை தாக்கிக் கொண்டிருக்கிறது. தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார் மாஷா.
"சரியா கணக்கு காட்டப்படாத எல்லாத்தையும் நாங்க எடுத்துக்கிட்டு போகிறோம். அதுக்கு சரியான கணக்கை கொடுத்துட்டு நீங்க வாங்கிக்கலாம். நாங்க கூப்பிடும் போது நீங்க எங்க ஆஃபீசுக்கு வர வேண்டியிருக்கும்" என்றார் தலைமை அதிகாரி.
சரி என்று தலையசைத்தார் மாஷா. அவர் உள்ளுக்குள் வெந்து கொண்டு இருந்தார். அர்ஜுன் அவரை இப்படி தரைமட்டமாக்குவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் சிறிது எச்சரிக்கை உணர்வுடன் இருந்திருக்க வேண்டும். அவன் சொன்னபடியே செய்து விட்டான். தான் சேர்த்து வைத்திருந்த அனைத்து சேமிப்பையும் இழந்துவிட்டார் மாஷா. இப்பொழுது அவர் கையில் ஏதும் இல்லை. அவருக்கு தெரியும், சங்கர் அவருக்கு நிச்சயம் உதவ மாட்டார். ஏனென்றால், இந்த விஷயம் அர்ஜுனை பற்றியது. அவர் நிச்சயம் அர்ஜுனுக்கு பிடிக்காத ஒன்றை செய்யவே மாட்டார். இந்த விஷயத்தை மாஷா தனியாக தான் எதிர்கொள்ள வேண்டும். அதே நேரம், அர்ஜுன் இதோடு நிறுத்தி விடுவான் என்பதையும் அவர் நம்பவில்லை. அவன் தான் நரகத்தை காட்டுகிறேன் என்று கூறினானே... அவன் அடுத்த அடியை அடிப்பதற்கு முன், அவர் ஏதாவது செய்தாக வேண்டும்.
எஸ் ஆர் கம்பெனி
மதிய உணவை கொண்டு வந்திருந்த இந்துவை பார்த்து மலைத்தான் அர்ஜுன். சிரிப்பை அடக்கிக்கொண்டு தன் கண்களை சுழற்றினான். அப்படியே தன் பணியைத் தொடர்ந்தான்.
"சாப்பிட வாங்க, அர்ஜுன்"
"எனக்கு நிறைய வேலை இருக்கு"
அவன் கூறிய வார்த்தைக்கு செவி சாய்க்காமல், அவள் டப்பாவை திறக்க துவங்கினாள்.
"நான் சொன்னது உன் காதுல விழலயா?" என்றான்.
மேலும் அவன் ஏதும் பேசும் முன், ஒரு தேக்கரண்டி உணவை அவனுக்கு ஊட்டி விட்டாள். அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் அர்ஜுன்.
"நீங்க வேலை செய்யுங்க. நான் உங்களுக்கு ஊட்டி விடுறேன்"
அவளை ஏதோ அதிசய பிறவி போல் பார்த்தான் அவன். அவள் உண்மையிலேயே ஊட்டிவிட போகிறாளா?
"என்னை பாக்குறதுல ஏன் நேரத்தை வீணாக்குரிங்க? வீட்டுக்கு வந்து, ஆற அமர என்னை பார்த்துக்கோங்க"
"என்னோட பெட்ல தூங்கினத மனசுல வச்சுக்கிட்டு நீ இதெல்லாம் செய்யறதா இருந்தா, இதோட நிறுத்திக்கோ. நீ சோபாவுல இருந்து கீழே விழுந்துட போறேன்னு தான் உன்னை நான் கட்டிலுக்கு தூக்கிட்டு போனேன்"
"இன்னைக்கு கூட சோபாவில தூங்கினா நான் கீழே விழுவேன். அதனால, நானே இன்னைக்கு கட்டில்ல படுத்துக்குறேன்" என்று அடுத்த வாய் உணவை ஊட்டி விட்டாள்.
சகஜமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள பேச்சை மாற்றினாள்.
"நேத்து ராத்திரி, நான் உங்க மேலே காலை தூக்கிப்போட்டேனா?" என்றாள் ரகசியமாக.
அர்ஜுன் தன் கண்களை சுருக்க,
"எனக்கு அந்த பழக்கம் இருக்கு" என்றாள் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு.
அவளை எது இவ்வளவு சகஜமாய் பேச வைத்தது என்று புரியவில்லை அர்ஜுனுக்கு. அவன் அதை மிகவும் விரும்பினான் தான், ஆனால் ஏதோ வித்தியாசமாக பட்டது.
"எதுக்காக இப்படி எல்லாம் பண்ற?"
"எதுக்காகவா? நீங்க என் புருஷன். நான் உங்களை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப காதலிக்கிறேன்... அதுக்காகத் தான்"
அர்ஜுனின் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை.காதல்... அவன் எப்பொழுதும் ஏயங்கிய விஷயம்... இந்துவிடம் இருந்து பெற...!
"எதுக்காக என்னை ராத்திரி கட்டிலுக்கு தூக்கிட்டு வந்தீங்க? என்னை நீங்க விழ வீட்டிருக்கலாமே...?"
மென்று முழுங்கினான் அர்ஜுன்.
"அது தான் காதல்...நீங்க என்னை காதலிக்கிறிங்கன்னு எனக்கு தெரியும்."
அவன் அதை மறுக்கிறானா இல்லையா என்று பார்க்க, வேண்டும் என்றே கூறினாள். அவளிடம் பேசுவதை நிறுத்திவிட்டு, வேலையைத் தொடர்ந்தான் அர்ஜுன். ஆனால் இந்து அவனை விடுவதாக இல்லை. அவனுக்கு தொடர்ந்து ஊட்டி விட்டுக் கொண்டே இருந்தாள். வழக்கமான அளவை விட, அவன் அதிகமாகவே சாப்பிட்டான். ஏன் சாப்பிட மாட்டான்...? இந்துவின் கையால் சாப்பிடும் போது, பாகற்காய் கூட இனிப்பாய் இருந்தது அவனுக்கு. ஊட்டி முடித்துவிட்டு, அவனது உதடுகளை துடைத்து, அவனை மேலும் சோதித்தாள் இந்து.
"பை, அர்ஜுன்..." புன்னகைத்தபடி அவள் அங்கிருந்து செல்ல, அர்ஜுனும் புன்னகைத்தான், அவள் சென்ற பிறகு...!
சீதாராணி இல்லம்.
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய அர்ஜுன், இந்து தனது செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருப்பதை பார்த்தான்.
"என்ன பண்ற நீ?"
"என் புருஷனோட காதலை தண்ணீ ஊத்தி வளர்கிறேன்"
"அப்படியா...?" என்றான் கிண்டலாக.
"இந்த செடிகளை நீங்க காதலிக்கிறீங்கல்ல? அதை தான் சொன்னேன்" என்றாள்
"என் காதலை வளக்குறது அவ்வளவு ஒன்றும் சுலபமில்ல"
"சுலபம் இல்ல தான்... ஆனா, முடியாததும் இல்லயே..."
தனது உடையை எடுத்துக் கொண்டு, குளியலறை நோக்கி சென்றான் அர்ஜுன். அவன் அவளிடமிருந்து தப்பிச் செல்வதை பார்த்து சிரித்தாள் இந்து.
இரவு
அவ்வளவு சுலபத்தில் கட்டிலுக்கு வந்து விடவில்லை அர்ஜுன். வேண்டுமென்றே தனது மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அவன். இந்து அவனையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள். சிறிது நேரம் கழித்து, கட்டிலுக்கு சென்று படுத்துக்கொண்டு, மேற் கூரையை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள், இந்துவின் பக்கம் திரும்பவில்லை என்று நம்மால் கூற முடியாது.
"அர்ஜுன், நீங்க என் நெஞ்சில் படுத்துக்கிட்டா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல" என்றாள் தன் சிரிப்பை அடக்கியபடி.
அவளைப் பார்த்து முறைத்தான் அர்ஜுன்.
"உங்க அம்மா என்ன சொல்றாங்கன்னு கேட்க வேண்டாமா உங்களுக்கு?" என்று அவள் கூறியதை கேட்டு, கண்களை சுழற்றினான்.
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டள் இந்து. சிறிது நேரத்தில் தூங்கிப் போனான் அர்ஜுன். அவன் கன்னத்தை மெல்ல வருடி பார்த்தாள் இந்து. அவனிடம் எந்த அசைவும் தென்படாமல் போகவே, அவன் முகத்தைப் பற்றி, அவன் மூக்கில் முத்தமிட்டாள்.
"மூக்கை பாரு... எப்ப பார்த்தாலும் அது மேல கோபம், நாற்காலி போட்டு உட்கார்ந்திருக்கு. ஒரு நாள் நறுக்குன்னு கடிக்கப் போறேன்" என்று கூறிவிட்டு சிரித்தாள்.
சிறிது நேரத்தில் அவளும் தூங்கிப் போனாள். கண்களை திறந்த அர்ஜுன், அவள் அமைதியாய் உறங்குவதை பார்த்தான். அவள் கூறியதையும், அன்று முழுவதும் அவள் அவனுக்காக செய்ததையும் நினைத்து பார்த்து சிரித்தான். பைத்தியக்காரி... அவள், அவனது அணைப்பில் இருக்க வேண்டியவள். அன்பாய் அவள் கண்ணத்தை தொட்டான். நாளை என்னவெல்லாம் செய்யப் போகிறாளோ தெரியவில்லை. அவனும் பைத்தியக்காரன் தானே... அதனால் தான், அவனுக்கு ஆர்வம் தாங்கவில்லை... அவள் மீது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டிருந்தது அர்ஜுனுக்கு.
ஆனால், நாளை ஒட்டுமொத்த காட்சியும் தலைகீழாய் மாறப்போகிறது என்பதை அவன் எப்படி அறிவான்? நாளையோடு அவனுடைய சோதனைகள் முடிவுக்கு வரப்போகிறது. ஏனென்றால், அவனுக்காக இந்து எந்த அளவிற்கு செல்வாள் என்பதை அவன் நாளை பார்க்கப் போகிறான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top