Part 23

பாகம் 23

இந்துவின் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான் அர்ஜுன். அவனுக்கு இந்துவை பற்றி சிந்திக்க சிறிது அவகாசம் தேவை. அதனால் காரில் ஏறி எங்கோ புறப்பட்டுச் சென்றான். ஏசியை போடாமல், வெளிக்காற்றை சுவாசித்தபடி சென்றான்.

வாழ்க்கைக்கு ரீவைண்ட் பட்டன் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, நம் மனதிற்கு இருக்கிறது...! நம் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்தையும் அது ரீவைண்ட் செய்து பார்க்க தவறுவதில்லை. சில நேரம், அது நம்மை சிரிக்க வைக்கிறது, அல்லது அழ வைக்கிறது. அது அவரவருடைய தலையெழுத்தை பொறுத்தே அமைகிறது.

அந்த விதத்தில் நமது கதாநாயகன் அதிர்ஷ்டசாலி தான். அவனுடைய நினைவுகள், அவனை புன்னகைக்க செய்தது. சற்று நேரத்திற்கு முன் நடைபெற்ற நிகழ்வை அவன் மறுபடி மறுபடி தன் மனதில் ரீவைண்ட் செய்து பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான். மனதிற்கு ஏற்றமளித்த இனிமையான நினைவு அது. அவனை கட்டி அணைக்க அவள் தயங்காதது, அவனுக்கு பிடித்திருந்தது. அதற்கும் மேலாக, அவள் அவனிடம் எடுத்துக்கொண்ட உரிமை, அவனுக்கு மிக பிடித்திருந்தது. அவன் அறையில் தங்கியே தீருவது என்று அவள் காட்டிய பிடிவாதம் மிக மிக பிடித்திருந்தது. அவனுடைய மனைவி நல்லிணக்கம் வாய்ந்தவள். யாருக்கும் எளிதில் கிடைக்காதவள். அவன் அம்மாவைப் போல்... இல்லை இல்லை... அவனுடைய அம்மாவைவிட அவள் சிறந்தவள். அவனுடைய அம்மா கூட, அவனை விட்டுவிட்டு சென்று விட்டாரே...! அது அவனுடைய நலத்திற்காக தான் என்ற போதிலும் அவர் அதை செய்திருக்க கூடாது. யாருமற்ற ஓர் அன்னிய தேசத்தில் அவனை தனியாய் தவிக்க விட்டிருக்கக்கூடாது... மாறாக, அவனுக்கு தோள் கொடுத்து ஆதரித்திருக்கவேண்டும். அர்ஜுன் அதைப் பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் இந்து அப்படி அல்ல. அவன் தன்னை வெறுக்கிறான் என்று தெரிந்தபோதிலும், அவள் அவனை விட்டு விலக தயாராக இல்லை. அப்படி என்றால், அவள் அவனது உணர்வுகளை மதிக்கிறாள் என்று தானே அர்த்தம்...! அப்படியே வண்டியை திருப்பிக் கொண்டு, வீட்டை நோக்கி பயணப்பட்டான் அர்ஜுன்.

சீதாராணி இல்லம்

தன் அறைக்குள் நுழைந்த அர்ஜூனின் கால்கள் நகர மறுத்தன, ஒற்றை சோபாவில், அமர்ந்தபடி இந்து உறங்கிக்கொண்டிருந்ததை பார்த்த போது. அவள் அங்கு தங்குவதற்கான அனுமதியை அவன் வழங்காமல் போனதை நினைத்த போது, அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவளது தூக்கம் கலைந்து விடாமல் கவனமாய் அவளை தூக்கி வந்து கட்டிலில் கிடத்தினான். அவள் தலையை அன்பாய் வருடிவிட்டு உச்சி முகர்ந்தான். அவள் கையை பற்றிக்கொண்டு, அவள் பக்கத்தில் படுத்து கொண்டான்.

சங்கர் இல்லம்

மாஷா வீணாவிற்கு ஃபோன் செய்தார்.

"என்ன நடந்துகிட்டிருக்கு அங்க?" என்று சீறினார்.

"உங்களால தான் எங்க வாழ்க்கையே நரகமாயிடுச்சி."

"உங்களால இந்துவை அங்கிருந்து கூட்டிகிட்டு வர முடியுமா முடியாதா?" என்று கோபத்தில் கத்தினார்.

"நாங்க முடிஞ்ச வரை முயற்சி பண்ணோம். ஆனா, இந்து இங்கிருந்து வர தயாரா இல்ல. அது எப்பவுமே நடக்கும்னு எங்களுக்கு தோணல. அர்ஜுன் எங்களுடைய வீட்டை அவன் பேர்ல மாத்தி எழுதிக்கிட்டான். எங்களையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லிட்டான்"

"இப்போ நீங்க என்ன செய்யப் போறீங்க?"

"அவங்க வீட்டை விட்டு வெளியே வர்றதைத் தவிர எங்களுக்கு வேற வழியில்ல. எப்படியும் அர்ஜுன் எங்களை வெளியில் துரத்திடுவான்..."

"சரி... நான் சொல்ற அட்ரஸ்ஸை எழுதிகிட்டு, அந்த இடத்துக்கு வந்துடுங்க"

"எங்க?"

"நீங்க அங்க நிம்மதியா இருக்கலாம்"

"சரி" என்று அழைப்பை துண்டித்தாள் வீணா.

அவள் தன் உடமைகளை எடுத்து வைக்கத் தொடங்கினாள். இயலாமையால் அவளைப் பார்த்தார் வித்யா.

"மாஷா நம்மள அவங்க இடத்துக்கு வரச் சொல்லி இருக்காங்க"

"நெஜமாவா சொல்ற?"

"ஆமாம்..."

"நம்ம அவளை நம்பலாமா?

"அவ நம்பிக்கைக்கு உகந்தவளா இல்லயாங்குறது ரெண்டாவது விஷயம். இப்போதைக்கு நமக்கு அவளை விட்டா வேற வழி இல்ல. அர்ஜுன் நம்மளை இங்க இருக்க நிச்சயமா விட மாட்டான். அவன் கோவத்துல வேற எதாவது செய்யறதுக்கு முன்னாடி, நம்ம இங்கிருந்து போறது தான் நல்லது"

ஆமாம் என்று தலையசைத்தார் வித்யா.

"இப்போ, இந்த ராத்திரி வேலையில, நம்மளால அந்த அட்ரஸை கண்டு பிடிக்க முடியாது. அதனால, நாளைக்கு காலையில இங்கிருந்து கிளம்பிடலாம்."

அவர்கள் அங்கேயே உறங்கினர்கள்.

.......

நடு இரவில் தூக்கத்தில் புரண்டு படுத்தாள் இந்து. அவள் கையில் இறுக்கத்தை உணர்ந்து, மெல்ல கண் விழித்தாள். அவளுடைய கையை அர்ஜுன் பற்றிக் கொண்டிருப்பதை பார்த்த பொழுது, அவளுடைய தூக்கம் காற்றில் பறந்தது. தான் கட்டிலில் படுத்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், அர்ஜுனும் அவள் அருகில் உறங்கிக் கொண்டு இருந்ததை பார்த்த பொழுது, அவளால் நம்பவே முடியவில்லை. அவன் தூக்கத்திற்கு பங்கம் விளைவிக்காமல் மெல்ல அவன் முகத்தை வருடி கொடுத்தாள். அவன் அவளை கட்டிலுக்கு கொண்டு வந்தான் என்பதற்காக அவன் அவளை மன்னித்து விட்டான் என்று அவள் நினைக்கவில்லை. ஒரு வேளை அவள் சோபாவில் இருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க, அவன் அவளைக் காட்டிலுக்கு கொண்டு வந்து இருக்கலாம்.

அவனுக்கு என்ன வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவனுக்கு அவள் மீது இருந்த கோபம் சற்று குறைந்து இருப்பதை அவளால் உணர முடிந்தது. ஏனென்றால், அவளை தன் அறையில் இருக்கவே அனுமதிக்காத அவன், அவளை தன் கட்டிலில் உறங்க விடுகிறான் என்றால் அவள் நினைப்பது சரி தானே? எது எப்படி இருந்தாலும், தான் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற்றாக வேண்டும் என்பதில் இந்து உறுதியாக இருந்தாள். இது அவள் வாழ்வில் ஒரு அழகான தருணம், என்று எண்ணியபடி அவன் பற்றியிருந்த கரத்தை இறுக்கிக்கொண்டாள் இந்து.

மறுநாள் காலை

தூக்கத்திலிருந்து கண் விழித்த அர்ஜுனின் பார்வை, தன் அருகில் உறங்கிக்கொண்டிருந்த இந்துவின் மீது விழுந்தது. இரவு அவள் சரியாக உறங்காததால் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். தன் அருகில் உறங்கிக்கொண்டிருந்த அர்ஜுனனை விட அவளுக்கு உறக்கம் பெரிதாய் தோன்றவில்லை. அதனால் அவனை பார்த்தபடி, அவன் அருகில் படுத்திருந்தாள்.

குளியலறையிலிருந்து வெளியே வந்த அர்ஜுன் தனது காலணிகளை மாற்றிக்கொண்டு, ஓட்டப் பயிற்சிக்கு சென்றான்.

சிறிது நேரம் கழித்து கண் விழித்தாள் இந்து. அறையில் அர்ஜுன் இல்லாததால் குளித்து முடித்து கீழ் தளம் வந்தாள். வழக்கத்திற்கு மாறாக வீடு மிகவும் அமைதியாய் காணப்பட்டது. எதையோ யோசித்தவள், வித்யாவை தேடி ஓடினாள். அவள் நினைத்தது சரி தான். அவர்கள் அங்கு இருக்கவில்லை. ரம்யாவைத் தேடி சமையல் அறைக்கு வந்தாள். ரம்யாவுக்கு அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரிந்து இருக்கலாம். அவள் சமையலறையில் இல்லாமல் போகவே, விருந்தினர் அறையை நோக்கி சென்றாள். அவள் உள்ளே நுழைய நினைத்த பொழுது, அவள் கால்கள் நகர மறுத்தன. ரம்யா யாருடனோ வித்யாவைப் பற்றியும், வீணாவை பற்றியும் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தாள். யாருடன் அவள் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறாள்?

"அவங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டு போயிட்டாங்க"

"...."

"அதுல சந்தோஷப்பட எதுவும் இல்ல"

"..."

"அவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஆபத்தானவாங்க. எதையுமே எதிர்பார்க்காம அவங்க இங்கிருந்து போயிருக்காங்கன்னா, அவங்க மனசுல ஏதோ ஒரு ஆபத்தான திட்டம் இருக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு. அவங்க அர்ஜுனுக்கும் இந்துவுக்கும் ஏதாவது பிரச்சினை செய்வாங்களோன்னு நான் பயப்படுறேன்"

"..."

"நீ இந்துவை பத்தி கவலைப்படாதே. அவங்களை நான் பார்த்துக்கிறேன், கிரி "

இந்துவிற்கு திக்கென்று ஆனது. கிரியா? ரம்யா கிரியுடனா இவ்வளவு சகஜமாக பேசிக் கொண்டிருக்கிறாள்...? இருவரும் நண்பர்கள் போல் அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார்கள்...? உண்மையிலேயே அவர்கள் யார்? இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது...? தன் காதுகளை மேலும் கூர்மையாக்கிக் கொண்டாள் இந்து.

"நான் சொல்றத கேளு கிரி, தயவுசெஞ்சு அர்ஜுன் கிட்ட சொல்லு, அவர் இந்துவை சோதிச்சதெல்லாம் போதும். அவங்க ரொம்ப அப்பாவி. அவங்க செஞ்சது ஏதோவொரு விதத்தில் தப்பு தான். ஆனா, நிச்சயமா அர்ஜுனை காயப்படுத்தணும்னு அவங்க அதை செய்யல. அவங்க அவரை பரிபூரணமா நேசிக்கிறாங்க. அதை விட அவருக்கு வேறு என்ன வேணும்...? அவங்க கஷ்டப்படக் கூடாதுன்னு தான், அவங்க சித்தியோட பேசினதை நான் வீடியோ எடுத்து அனுப்பினேன்... "

"...."

"ஆமாம்... எனக்கு அர்ஜுனை பத்தி தெரியும். அந்த வீடியோவை பார்த்துட்டு, அவர் வீட்டுக்கு வந்த போது அவர் முகத்தில் இருந்த சந்தோஷத்தை நான் கவனிச்சேன். அவரை அடைய இந்து எந்த அளவுக்கு போறாங்கன்னு பாக்கணும்னு அவர் நினைக்கிறார்... ஆனா, எனக்கு அது சுத்தமா பிடிக்கல. அவரு அவங்களை பரீட்சிக்கிறாருன்னு தெரிஞ்சா அவங்க வருத்தப்படுவாங்க..."

ரம்யா பேசிக்கொண்டே இருந்தாள்... ஆனால் இந்து அங்கிருந்து மெல்ல நகர்ந்து சென்றாள். வரவேற்பறையில் இருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்து கண்களை கொண்டாள்.

பாவம் அவள்... அவள் மனம் உடைந்து போயிருக்க வேண்டும். தான் பரீட்சிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று தெரிந்து, யாரால் தான் நிம்மதியாய் இருக்க முடியும்...? அதுவும் எந்த தவறும் செய்யாத போது...? எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா...? எப்படி அர்ஜுன் இவ்வாறு செய்யலாம்? சோதிக்கிறேன் என்ற பெயரில் எப்படி அவன் அவளை கஷ்டப்படுத்தலாம்?

கதவு திறக்கப்படும் சத்தம், அவள் கவனத்தை ஈர்த்தது. கண்களைத் திறந்த இந்து, அர்ஜுன் உள்ளே நுழைவதை பார்த்தாள். அவன் ஓட்டப்பயிற்சி உடையில், வியர்த்து கொட்டி கொண்டு உள்ளே நுழைந்தான். அவள் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்த பொழுது ஒரு கணம் நின்றான். தன் அறையை நோக்கி சென்ற அவனை, இந்துவின் கண்கள் பின் தொடர்ந்தன.

அவள் கண்களில், கோபம் பொறி பறக்கும் என்று எதிர்பார்த்திருந்த நாம், ஏமாற்றம் அடைகிறோம்... மாறாக அவள் சிரிக்கிறாள்... ஆம் கோபப்படுவதற்கு பதிலாக, கண்ணீருடன் சிரிக்கிறாள். இந்த பெண்ணுக்கு என்ன ஆனது? பைத்தியம் பிடித்து விட்டதோ? அவள் மனதில் ஓடிக் கொண்டிருப்பது என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"நான் தவறு செய்யவில்லை என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. அவருக்கு என் மீது கோபம் இல்லை என்று நான் நினைத்தது சரியாகிவிட்டது. அவருக்கு என் மீது கோபம் இல்லை... கோவமாய் இருப்பதைப் போல் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் என்னைச் சோதித்துப் பார்க்கிறார்... என்னை அவர் வெறுக்கவில்லை."

அவள் முகத்தில் தவழ்ந்த புன்னகை மேலும் ஒளிர்ந்தது.

"நான் அவருக்காக எந்த அளவிற்கு செல்வேன் என்பதை பார்க்க நினைக்கிறார்... அது சிறுபிள்ளைத்தனம் இல்லாமல் வேறு என்ன? நான் எந்த அளவிற்கு செல்வேன் என்று தானே பார்க்க வேண்டும் உங்களுக்கு? அதைத் தெரிந்து கொண்டு விட்டால் உங்கள் மனம் நிம்மதி அடைந்து விடும் அல்லவா? உங்களுக்கு வேண்டியது அவ்வளவு தானே...? அதை செய்வதில் எனக்கு எந்த சிரமமும் இருக்கப்போவதில்லை. உங்கள் மீது நான் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்துவது தான், எனக்கு இந்த உலகிலேயே மிகவும் சுலபமான விஷயம்" என்று மனதில் நினைத்தபடி புன்னகைத்தாள் இந்து.

அங்கிருந்து நேரே தன் அறையை நோக்கி ஓடினாள்.

குளித்து முடித்து உடை மாற்றிக் கொண்டிருந்த அர்ஜுனின் கைகள், சட்டை பொத்தானை பற்றி கொண்டு அப்படியே நின்றது, இந்து பாளீரென்ற சிரிப்புடன் உள்ளே நுழைந்ததை பார்த்த பொழுது. அவனுடைய கட்டிலில் படுத்து உறங்கியதை நினைத்து அவள் சந்தோஷப் படுகிறாள் என்று நினைத்த அவன் குழம்பினான், அவள் அவனை நோக்கி ஓடி வந்த போது. அவன் எதிர்பார்க்காத வண்ணம், அவன் முகத்தை பற்றி, நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டாள். வந்த வேகத்திலேயே, அங்கிருந்து ஓடி சென்றாள், அர்ஜுனை பொறி கலங்க வைத்து விட்டு...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top