Part 22

பாகம் 22

தன் தலையில் அடித்துக் கொண்டார் வித்யா.

"இப்ப நான் என்ன பண்ணுவேன்?" என்று புலம்பினார்.

"நம்ம மாஷாவோட பேச்சை கேட்டிருக்க கூடாது. அவங்களால தான் நம்ம வீடு, நம்ம கைய விட்டு போயிருச்சு." என்றாள் வீணா.

"நீ சொல்றது சரி தான். அர்ஜுன் டாகுமென்ட்ல கையெழுத்து போட்டுட்டதால, நமக்கு நம்ம வீடு நிச்சயம் கிடைச்சிருக்கும். அந்த பொம்பளை பேச்சைக் கேட்டு நம்ம வீணா போயிட்டோம். "

ஆமாம் என்று தலையசைத்தாள் வீணா.

"அவன் அவ்வளவு கோவமா வீட்டை விட்டு வெளியே போனதால, அவன் எப்படியும் இந்துவை வீட்டை விட்டு வெளியில் துரத்திடுவான், நம்ம மாஷாகிட்ட இருந்து ஒரு கோடி ரூபாய் வாங்கிக்கலாம்னு நெனச்சேன்.  ஆனா, அவன் இந்துவை போக விடமாட்டான் போலிருக்கே."

"நானும் அதைப் பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன். அவன் சரியான பைத்தியக்காரனா இருக்கான். அவன் என்ன முடிவெடுப்பான்னே தெரியல" என்று அலுத்துக்கொண்டாள் வீணா.

"நமக்கு இந்துவோட உதவிய கேட்கிறத தவிர வேற வழியே இல்ல. அவகிட்டயிருந்து நம்ம வீட்டை வாங்கியாகணும்" என்றார் வித்யா.

"அது நடக்கும்னு எனக்கு தோணல. ஏன்னா, ஏற்கனவே அர்ஜுன் நம்ம வீட்டை அவன் பேர்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டான்"

"ஆமாம்ல..." என்று பெருமூச்சு விட்டார் வித்யா.

"இந்து என்ன செய்ய போறான்னு நம்ம கொஞ்சம் பொறுத்து பார்க்கலாம்..."

சரி என்று தலையசைத்தார் வித்யா.

சங்கர் இல்லம்

வரவேற்பறையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த மாஷா, அர்ஜுனின்

"மாஷாஆஆஆ..." என்ற கர்ஜனையைக் கேட்டு திடுக்கிட்டார், அப்பொழுது அவர் கையில் இருந்த காபி அவர் மீது கொட்டி கொண்டது.

சங்கரும் ஹீனாவும் கூட அவன் கர்ஜனையை கேட்டு, அவர்களது அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்கள். அவர்கள் அர்ஜுன் மாஷாவை நோக்கி முன்னேறுவதை பார்த்தார்கள். மாஷா எதோ ஏடாகூடமாக செய்து வைத்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள அவர்களுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. அர்ஜுனுடைய கோபாவேசத்தை பார்த்து, மாஷாவின் முகம் வெளிறிப் போனது. அவருடைய கை, கால்கள் உதறல் எடுத்தது. நடுங்கியபடி எழுந்து நின்றார். அர்ஜுனுக்கு பத்திரத்தை பற்றிய விபரம் தெரிந்து விட்டது என்பதை வித்யா அவருக்கு ஏற்கனவே கூறியிருந்தார் அல்லவா? மாஷாவை அர்ஜுன் நேருக்கு நேர் எதிர் கொள்வது இது தான் முதல் முறை. இதுவரை, அவன் மாஷாவை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை.

அங்கிருந்த யாரும் எதிர்பாராத வண்ணம், மாஷாவின் கழுத்தை இறுக்கப்பற்றினான் அர்ஜுன். சங்கரின் பதற்றம் உச்சத்தை தொட்டது. அவர்களை நோக்கி அவர் செல்ல நினைத்த பொழுது ஹீனா அவர் கையை பற்றி, அவரை தடுத்து நிறுத்தினாள். அவர் அவளை அதிர்ச்சியுடன் பார்க்க, அவள் போக வேண்டாம் என்று தலையசைத்தாள்.

"பொம்பளைங்கள அடிக்க மாட்டேன்னு நான் எங்க அம்மாவுக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன்... ஆனா, பொம்பளைங்கள கொல்லமாட்டேன்னு நான் சத்தியம் பண்ணல. என்னை கொலைகாரனா மாத்தாதே. என்கிட்ட இருந்து, என்னோட இந்துவை பிரிக்க நினைச்ச, உன்னை கொல்ல கூட நான் தயங்க மாட்டேன்."

அதைக் கேட்டு சங்கரும் ஹீனாவும் அதிர்ச்சியடைந்தார்கள். மாஷாவின் கழுத்து இறுக, அவர் இரும்ப ஆரம்பித்தார். கோபத்தில் பல்லைக் கடித்தான் அர்ஜுன்.

"அர்ஜுன், இவளைக் கொன்னு உன் வாழ்க்கையை நாசமாக்கிக்காத. உன்னை நம்பி  இந்து இருக்கா. இவளை விடு..."

அப்படியே அவள் கழுத்தைப் பிடித்து சோபாவில் தள்ளினான் அர்ஜுன். இருமியபடியே தன் கழுத்தைத் தடவி கொடுத்தார் மாஷா.

"நான் உன்னை எச்சரிக்கிறேன். என் வாழ்க்கையில நீ தலையிட்டா, உன்னை அடியோடு அழிச்சிடுவேன்" என்றான் மாஷாவை பார்த்து.

"என்ன ஆச்சு, அர்ஜுன்?"

"எங்களுக்கு தெரியாம, என்கிட்டயும், என் வைஃப்கிட்டயும் டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டா இவ. நீங்க என்னை அனாதையாகினீங்க. எங்க அம்மாவுக்காக நான் பொறுத்துக்கிட்டேன். உங்களால தான் எங்க அம்மாவும் செத்து போனாங்க" என்று அவன் சீற, தலைகுனிந்தார் சங்கர்.

"எங்கம்மா பேச்சுக்கு மரியாதை கொடுத்து தான், உங்க வாழ்க்கையில நான் எப்பவுமே குறுக்க வரல. ஆனா, எனக்குள்ள இருந்த மிருகத்தை இவ சீண்டி விட்டுட்டா"

மாஷாவை நோக்கி, தன் விரலை சொடுக்கினான் அர்ஜுன்.

"உன்னோட நாளை எண்ண ஆரம்பிச்சுடு. நீ என்ன பாடுபடப் போறேன்னு பாரு..." மாஷாவின் மீது நெருப்பை உமிழ்ந்துவிட்டு, தன் கண்ணில் படும் அனைத்தையும் எட்டி உதைத்துக் கொண்டு, அங்கிருந்து வெளியே வந்தான் அர்ஜுன்.

மாஷாவின் தோளை பற்றி தூக்கினார் சங்கர். அவள் உடல் மொத்தமும் அதிரும் வண்ணம் ஒரு அறை அவர் கன்னத்தை தாக்க, மீண்டும் மாஷா சோபாவில் விழுந்தார்.

"என்னை பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? எதுக்காக ஓயாம அவனுக்கு தொல்லை கொடுத்துக்கிட்டிருக்க? அவனை கஷ்டப்படுத்தி பாக்குறதுல உனக்கு அப்படி என்னடி சந்தோஷம்?"

"இது எல்லாம் உங்களால தான். உங்க சொத்து வேணும்னு அவன் கேட்டானா?  அவன் உங்களை மதிக்க கூட மாட்டேங்கிறான்... அப்புறம் எந்த எழவுக்கு நீங்க அவனுக்கு சொத்தை கொடுத்தீங்க?"

"அவன் என் புள்ளை... என் சொத்தை பத்தி பேச நீ யாரு? என் சொத்து வேணுமுன்னு தானே அலைஞ்ச? என் பிள்ளை உனக்கு கொடுக்க போறான் பாரு... குடுக்குறத தின்ன ரெடியாயிரு" என்றார்.

பயத்தின் சாயல், மாஷாவின் முகத்தை இருள செய்தது. மாஷா தன் தலையை மெல்ல உயர்த்த, ஹீனா அவரை அருவருப்புடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

சீதாராணி இல்லம்

கலங்கிய கண்களுடன் இந்துவை கெஞ்சிக் கொண்டிருந்தார் வித்யா.

"அம்மா இந்து, நாங்க செஞ்சது தப்பு தான். தயவு செஞ்சு எங்களை மன்னிச்சிடு. நாங்க எங்க போவோம்? எப்படி சாப்பிடுவோம்?"

"நீங்க ஏம்மா கவலைப்படுறீங்க? இங்க வந்த கொஞ்ச நாள்லயே, உங்களுக்கு தான் நிறைய ஃபிரண்ட்ஸ் கிடைச்சுடாங்களே...?"

அவள் மாஷாவை பற்றித் தான் பேசுகிறாள் என்று புரிந்துகொண்டார் வித்யா.

"அவர்(அர்ஜுன்) சொன்னது சரி தான். நீங்க ரொம்ப திறமைசாலி. உங்களால யார்கிட்டயிருந்து வேணும்னாலும் வேண்டிய உதவியை வாங்கிக்க முடியும். உங்க அளவுக்கு எனக்கு திறமை இல்ல. நிஜத்தை சொல்லணும்னா, எல்லாத்தையும் இழந்தது நான் தான். அவரை என்னை வெறுக்கும்படி செஞ்சுட்டீங்க. நான் அவரோட நம்பிக்கையை இழந்துட்டேன். அவர்கிட்ட பேசுற உரிமை கூட எனக்கு இல்லாம போச்சு. அவருக்கு கோவம் வந்து எதாவது செய்யறதுக்கு முன்னாடி, எங்க வீட்டை விட்டு போயிடுங்க" என்று கூறிவிட்டு, அவர்கள் பேச சந்தர்ப்பம் வழங்காமல், அங்கிருந்து தன் அறையை நோக்கி சென்றாள் இந்து.

.....

தன் அப்பாவின் வீட்டை, அர்ஜுன் தன் பெயரை எழுதிக் கொண்டதை நினைத்து இந்து மிகவும் சந்தோஷம் அடைந்தாள். அப்படியென்றால் அவன் என்றும் அவளை விட்டு போக மாட்டான் என்று தானே அர்த்தம்...! அவன் தன் அப்பாவின் மருமகனாக இருக்க விரும்புகிறான் என்று தானே அர்த்தம்...! அவனுடைய நம்பிக்கையைப் பெற, அவளுக்கு இன்னும் சந்தர்ப்பம் இருப்பதை எண்ணி மகிழ்ந்தாள் இந்து.

அர்ஜுன் வீட்டினுள் நுழைவதை பார்த்தாள் இந்து. அவனுள் கோபம் கொப்பளித்துக் கொண்டிருப்பதை அவன் கண்களே கூறின. தன்னை பார்த்து இந்து புன்னகைப்பதை பார்த்தவுடன் அவன் கோபம் காற்றில் சிட்டாய் பறந்தது. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, தன் அறையை நோக்கி சென்றான் அர்ஜுன். சத்தமில்லாமல் அவனை பித்தொடர்ந்தாள் இந்து. அவன் கதவை சாத்தி தாளிடும் முன், அவன் அறைக்குள் நுழைந்து, ஓடிச்சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.  அவளுடைய அந்த செயல், அவனை திணறடித்தது. அவள் மனதில் ஏதோ ஓடிக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். அதை எதிர்கொள்ள தயாரானான்.

"நீ இங்க என்ன பண்ற?"

இந்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள்.

"நான் இனிமே இங்க தான் இருக்க போறேன்"

"என்ன...?" என்றான் முகத்தை சுருக்கி.

"இது என் புருஷனோட ரூம்"

"இது என்ன நாடகம்?" என்றான் தன் கையை கட்டிக்கொண்டு.

"இது நாடகம் இல்ல"

"என்னை கோவபடுத்தாம இங்கிருந்து போ"

"நான் போகமாட்டேன்"

"இந்த ரூம்ல இருந்து உன்னை வெளியே தள்ள என்னை ஃபோர்ஸ் பண்ணாத"

அவன் கூறியதை கேட்டு அவள் அழுவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால், அவள் கூறிய பதிலைக் கேட்டு அவன் அதிர்ந்தான்.

"முடிஞ்சா என்னை தள்ளி பாருங்க..." என்று அவனுக்கு அவள் சவால்விட்டாள்.

"ஓ அப்படியா...?" என்பதைப் போல், தன் புருவத்தை உயர்த்தினான் அர்ஜுன், பொய்க் கோபத்துடன். அவள் கரத்தை பற்ற, அவன் அவளை நோக்கி குனிந்தான்.

"நீ என்ன நெனச்சிட்டு இருக்க?"

"உங்களுக்கு பேசுற கண்ணு..." என்று அவன் வாயை அடைத்தாள்.

இவளுக்கு என்ன ஆகிவிட்டது என்பது போல் அவளைப் பார்த்தான் அர்ஜுன்.

"உங்க மனசுல இருக்கறத சொல்ல, நீங்க பேச வேண்டியதில்ல. உங்க கண்ணே போதும். உங்களுடைய கோபம், சோகம், பயம், எல்லாத்தையுமே அது வெளிப்படையாக காட்டிடும். இப்ப கூட, என் மேல கோவ பட நீங்க ரொம்ப முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஆனா, அது உங்களால முடியல" அவள் கூற,

மென்று முழுங்கினான் அர்ஜுன். உண்மையிலேயே அவனுக்கு தான் அவள் மீது கோபம் இல்லையே.

"நீ எதை நிரூபிக்க இதையெல்லாம் செய்ற?"

"நான் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல. நான், நானா இருந்தாலே உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரும்..."

அர்ஜுன் நிமிர்ந்து நின்றான், அவன் கையைப் பற்றினாள் இந்து.

"என்னை இங்கேயே இருக்க விடுங்க. நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். பிராமிஸ்... "

"நீ தான சொன்ன, நீ நீயாவே இருந்தாலே நான் உன்னை நம்புவேன்னு...? அதே மாதிரி நீ நீயாவே இரு... இந்துமதி... "

அவன் பேச்சை வெட்டி,

"மிஸஸ் இந்துமதி அர்ஜுன்" என்றாள்.

அர்ஜுன் வாயடைத்துப் போனான்.

"இப்போ, அது தான் நான்... நான் அப்படி இருக்கத் தான் விரும்புகிறேன். உங்களுக்கு மனைவியா... "

அவளுடைய தைரியமும் தன்னம்பிக்கையும் அவனுக்கு புது நம்பிக்கையை கொடுத்தது. அந்த தைரியத்தின் உச்சத்தை காணும் பேராசை தோன்றியது அவனுக்கு.

அவள் கையைப் பற்றி அவளை வெளியே இழுத்து செல்ல அவன் முயன்ற பொழுது, அவன் பிடித்திருந்த தன் கையை உதறிவிட்டு, அவனை இறுக்கமாய் கட்டி பிடித்துக் கொண்டாள் இந்து. அவன் இரத்த ஓட்டம் முழுவதுமாய் நின்று போனது. அவளிடமிருந்து அவன் இப்படிப்பட்ட ஒரு எதிர்வினையை எதிர்பார்க்காததால், சிலை போல் நின்றான் அர்ஜுன். தன்னை சுதாகரித்துக் கொள்ள அவனுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. அவனை சுற்றி வளைத்திருந்த அவள் கரத்தை அவன் விலக்க முயன்றான்.

"சின்ன குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்காத"

தலையை அவனை நோக்கி உயர்த்தி,

"நான் சின்ன குழந்தை மாதிரி நடந்துக்கல..."

"என்னை விடு"

"முடியாது"

"இப்படியே எவ்வளவு நேரம் இருப்ப?"

"என் வாழ்நாள் முழுக்க... சாகுற வரைக்கும்..." என்று அவள் கூற, அவனுக்கு தொண்டை அடைத்தது.

எதுவும் கூறாமல், அவள் கையை விலக்க முயன்றான் அர்ஜுன். ஆனால், அவனால் அது முடியவில்லை. உண்மையிலேயே அவள் அவனை விட்டு விலக வேண்டும் என்று நினைத்திருந்தால், அவனால் விலக்கி இருக்க முடியும்... அர்ஜுன் அப்படி நினைத்து விடுவானா என்ன...! இந்து தன்னிடமிருந்து செல்ல வேண்டும் என்று அவன் எப்படி நினைப்பான்?

"எதுக்காக இப்படி எல்லாம் செய்ற?"

"என்னை இங்கே இருக்க விடுங்க அர்ஜுன்..."

அவன் பெயரை, அவளிடமிருந்து கேட்கவே அவனுக்கு ஆனந்தமாய் இருந்தது.

"ஏன்...? ஏன் இந்து....? இன்னும் என்னை காயப்படுத்த ஏதாவது பாக்கி இருக்கா?"

"நான் உங்களை காயப்படுத்தினது உண்மை தான். ஆனா, அது எனக்கு தெரியாம நடந்தது..."

அவன் முகத்தை தன் கையால் ஏந்திக் கொண்டாள்.

"எனக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்க... அர்ஜுன்..."

அவளுடைய கெஞ்சலை பொறுக்க முடியாமல் கண்ணை மூடினான் அர்ஜுன். அவன் தோளை மெல்ல அழுத்தி அவனை அமர வைத்தாள்.

"நான் உங்களை ஏமாத்த மாட்டேன்... உங்க அம்மாவோட இதயத்தை கூட நீங்க நம்ப மாட்டீங்களா?"

அவன் எதிர்பாராத வண்ணம், அவனை தன் நெஞ்சின் மீது சாய்த்துக் கொண்டாள். அவளின் இதயத்துடிப்பு, அவன் கண்களை மட்டும் அல்ல, அவன் மனதையும் கலங்க செய்தது. கண்களை மூடி, கண்ணீரை தன் கன்னத்தில் உருண்டோட விட்டான். இந்துவை இறுக்கமாய் அணைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. தன் கைகளை இறுக்க மூடி தன்னை கட்டுபடுத்திக் கொண்டான். அவனுக்கு இந்து வேண்டும்... அவள் அவனிடம் தன்னை நிரூபித்தாக வேண்டும். இந்துவின் வாழ்வில், அவன் முக்கியத்துவம் பெற்றவனாக விளங்க வேண்டும்... எல்லாரையும்விட...
எல்லாவற்றையும்விட... அவன் மட்டும் தான் முக்கியத்துவம் பெற்றவனாக இருக்க வேண்டும்...!

 தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top