Part 21
பாகம் 21
மறுநாள் காலை
லண்டனிலிருந்த தனது தொழில் ஸ்தாபானங்களை, இந்தியாவிற்கு மாற்றியமைக்க, சென்னையில் புதிதாய் துவங்கப்பட்ட அலுவலகத்தின் துவக்க விழாவிற்காக விடியற்காலையிலேயே சென்றுவிட்டான் அர்ஜுன். அவனுடைய அறை வெளியில் பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து, சமையல் அறைக்கு ஓடினாள் இந்து.
"வேலன் அண்ணா, அவர் எங்கே போனார்?"
"அவர் காலையிலேயே ஆஃபீஸுக்கு கிளம்பி போயிட்டாருமா"
"இவ்வளவு காலையில ஏன் போனாரு?"
"எனக்கு தெரியலம்மா"
"அவர் ஏதாவது சாப்பிட்டாரா?"
"இல்ல... காபி கூட குடிக்கல..."
சற்று யோசித்தவள், ஒரு ஹாட் பாக்ஸில், சிற்றுண்டியை அடைத்து, அதை ஒரு பையில் திணித்தாள்.
"அண்ணா, இதை அவர்கிட்ட கொண்டு போய் குடுத்துட்டு வரிங்களா?"
அவர் சரி என்று தலையசைக்க போக, வேண்டாம் என்று அவருக்கு சாமிஞ்சை செய்தாள் ரம்யா.
"எனக்கு சமைக்க வேண்டிய வேலை இருக்கு மா. மத்தியானம் சாப்பாட்டுக்கு அர்ஜுன் தம்பி வர்றதா இருந்தா, கோபப்படுவார்" என்றார்
"அப்போ நான் கொண்டு போய் குடுத்துட்டு வரட்டுமா?"
"தாராளமா போயிட்டு வாங்க"
அந்தப் பையை எடுத்துக் கொண்டு, வெளியே வந்து, டிரைவரிடம் தன்னை ஆஃபீசுக்கு அழைத்துப் போகச் சொல்லி பணித்தாள். முன்பிருந்த அத்தனை கட்டுப்பாடுகளையும் அர்ஜுன் ஏற்கனவே தளர்த்திவிட்டு இருந்ததால், அவர் இந்துவுடைய கட்டளையை ஏற்றார்.
எஸ் ஆர் கம்பெனி
சிற்றுண்டி பையுடன் அலுவலகத்துள் நுழைந்தாள் இந்து. அந்த அலுவலகத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து வியந்து போனாள் அவள். அவ்வளவு பெரிய அலுவலகத்தில் அர்ஜுன் எங்கு இருக்கிறான் என்று அவளால் கண்டுபிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால் வரவேற்பாளர் பெண்ணை கேட்டாள்.
"அர்ஜுன் சாரோட ரூம் எங்க இருக்கு?" என்றாள் மரியாதையுடன்.
அவளை ஏற இறங்க பார்த்தாள் அந்த பெண்.
"ரூமா...? அது ரூம் இல்ல... கேபின்..." என்று எகத்தாளமாய் கூறினாள், இந்துவின் எளிமை தன்மையை பார்த்து.
"சரி, அர்ஜுன் சாரோட கேபின் எங்க இருக்கு?"
"நீங்க யாரு? எதுக்காக அவரை பார்க்கணும்?"
"நான் அவருடைய வைஃப்... "
அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. அவளுடைய ஆள்காட்டி விரல், முதல் மாடியில் இருந்த, கண்ணாடி சுவர்களால் ஆன, அர்ஜுனுடைய அறையை நோக்கி அனிச்சையாய் உயர்ந்தது. அங்கு செல்ல இந்து எத்தனித்த போது அவளை அந்தப் பெண் தடுத்தாள்.
"சார், வீடியோ கான்ஃபரன்ஸ்ல இருக்காரு"
"வீடியோ கான்ஃபரன்ஸா?"
"ஆமாம்"
கீழ்தளத்தில் இருந்த ஒரு அறையை சுட்டிக்காட்டி,
"அங்க தான் இருக்காரு. கொஞ்சம் லேட் ஆகும். நீங்க அவர் கேபின்ல காத்திருங்க" என்றாள்.
"அவர் வர்ற வரைக்கும் நான் இங்க உட்காரலாமா?"
"நீங்க சாரோட கேபினுக்கு போகலாமே..."
"இல்ல, பரவாயில்ல... நான் இங்கயே காத்திருக்கேன்"
அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள் இந்து. அர்ஜுனுடைய அனுமதியின்றி அவனுடைய கேபினுக்கு செல்லும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை.
அரை மணி நேரம் கழித்து, சில பேர் பின்தொடர, அந்த அறையிலிருந்து வெளியே வந்தான் அர்ஜுன். எதிர்பாராத அந்த ஒரு நபரை... இந்துவை அங்கு பார்த்த பொழுது, தரையில் ஒட்டிக் கொண்ட அவனுடைய கால்கள், சந்தோஷத்தில் தரையிலிருந்து மேலே எழுவது போல் தோன்றியது அவனுக்கு. அவன் பறப்பதைப் போல் உணர்ந்தான். கிரியின் முகம் பளிச்சிட்டது.
அவளைப் பார்க்காதது போல், தன் கையில் இருந்த கோப்பை பிரித்து பார்த்துக் கொண்டு நடந்தான் அர்ஜுன். அவனைப் பார்த்து எழுந்து நின்றாள் இந்து. வரவேற்பறையை கடந்து, தன்னுடைய கேபினை நோக்கி நடந்தான் அர்ஜுன். அவன் அவளை பார்க்கததால், இந்துவின் முகம் தொங்கிப் போனது. மறுபடியும் அங்கேயே அமர்ந்து கொண்டாள். அவனை பார்க்காமல் போவதில்லை என்ற முடிவில் இருந்தாள் அவள்.
அர்ஜுனால் அமைதியாய் அமரவே முடியவில்லை. அவன் நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதை போல உணர்ந்தான். அவனைப் பின்தொடர்ந்து, இந்து அவனுடைய அறைக்கு வருவாள் என்று எதிர்பார்த்திருந்தான் அவன். அவள் வராதது அவனுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. அவள் திரும்பி சென்றுவிட்டாளோ என்று அவன் மனம் பதைபதைத்தது. கண்ணாடி சுவரின் வழியாக, மெல்ல எட்டிப் பார்த்தவன், அவள் அமர்ந்திருப்பதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.
வரவேற்பாளர்க்கு ஃபோன் செய்தான்.
"எஸ் சார்..."
"எனக்கு ஏதாவது கால்ஸ் வந்துதா?"
"இல்ல, சார். ஆனா, உங்க வைஃப் உங்களுக்காக காத்திருக்காங்க"
"வைஃபா? எப்போ வந்தா?"
"அரை மணி நேரம் இருக்கும் சார்"
"ஏன் அவளை என்னோட கேபினுக்கு அனுப்பல?"
"நீங்க அவங்களை பாத்திங்கன்னு நினைச்சேன் சார்"
"நீயா ஏதாவது நினைச்சுக்காதே... அவளை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? புது ஸ்டாஃப் எல்லாம் எவ்வளவு சின்சியரா இருக்காங்கன்னு பாக்க தான் அவ இங்க வந்திருக்கா"
அய்யய்யோ என்று நினைத்தாள் அந்தப் பெண்.
"நான் தான் உனக்கு கால் பண்ணி சொன்னேன்னு அவளுக்கு தெரிய வேண்டாம். நீயாவே அவளை இங்க கூட்டிட்டு வரா மாதிரி, அவளுக்கு மரியாதை குடுத்து கூட்டிட்டு வந்து விட்டுட்டு போ. அப்ப தான் அவ உன்னை வேலையிலிருந்து தூக்க மாட்டா"
"ஓகே சார்"
அழைப்பை துண்டித்து விட்டு இந்துவிடம் ஓடினாள் அந்தப்பெண்.
"மேடம், நீங்க ஏன் இன்னும் இங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? சார் வந்துட்டாரு... நீங்க அவரோட கேபினுக்கு போகலாம்"
"அவர் ஏதோ முக்கியமான வேலையா இருக்காரு போலயிருக்கு"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல, மேடம். அவர் ஃப்ரீயா தான் இருப்பாரு. நீங்க தயவுசெஞ்சு போங்க" என்று, இந்து கொண்டு வந்திருந்த பையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.
"இதை நான் கொண்டு வரேன், மேடம்"
"பரவாயில்ல...நான் கொண்டு போறேன் "
அந்த பையை அவள் கையிலிருந்து வாங்கிக் கொண்டு, அர்ஜுனின் அறையை நோக்கி சென்றாள் இந்து. அவன் அறையின் கதவை தட்ட, அவளுக்காகவே காத்திருந்த அர்ஜுன், ஏதோ ஒரு கோப்பை சரி பார்ப்பது போல் பாசாங்கு செய்துகொண்டு,
"கம் இன்" என்றான்.
சிறு நடை நடந்து உள்ளே சென்றாள் இந்து. தன் தலையை உயர்த்தி அவளைப் பார்த்தவன், அவளை அங்கு எதிர்பார்க்காதவன் போல முகத்தை சுளித்தான்.
"நீ இங்க என்ன பண்ற?"
"நீங்க எதுவுமே சாப்பிடலன்னு வேலன் அண்ணன் சொன்னாரு"
"அதனால?"
"அதனால, நான் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன்" என்றாள் தன் கையில் இருந்த பையை உயர்த்திக் காட்டி.
"நான் உன்னை கேட்டேனா?"
"நீங்க என்னை கேட்க வேண்டியதில்ல. இது என் கடமை"
"எப்படி? டைவர்ஸ் பேப்பர்ல என் கையெழுத்தை வாங்கினியே அந்த மாதிரியா?"
அவள் கண்கள் கலங்க, தன் முகத்தை தாழ்த்திக் கொண்டான். தன் நாற்காலியில் இருந்து எழுந்து, அங்கிருந்து செல்ல எத்தனிதவனை, கையை பிடித்து தடுத்து நிறுத்தினாள் இந்து. அவன் மேற் கையை சுற்றி வளைத்துக்கொண்டாள்.
"தயவுசெய்து நான் சொல்றதைக் கேளுங்க, அர்ஜுன்..."
தன் பெயரை, முதல் முறையாக அவளிடமிருந்து கேட்டு அவனுக்கு பரவசம் ஏற்பட்டது.
"என்ன சொல்ல போற?"
"நான் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு தான். ஆனா, அது நிச்சயமா தெரிஞ்சு செஞ்சது இல்ல. நான் எப்பவுமே உங்களை டைவர்ஸ் பண்ணணும்னு நெனச்சது இல்ல. என்னை நீங்க கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணப்போ கூட, எனக்கு அப்படி தோணல. நான் விவாகரத்தை பத்தி நினைச்சு கூட பாக்கல. என்னை நம்புங்க"
"ஒரு வேளை நான் அதைப் படிச்சி பார்க்காம விட்டிருந்தா என்ன நடந்திருக்கும்? ஒருவேளை அவங்க அதை கோர்ட்டில் ப்ரொடியூஸ் பண்ணி இருந்தா என்ன நடந்திருக்கும்?"
"நான் விவாகரத்து பண்ண விரும்பலன்னு ஜாட்ஜ்கிட்ட சொல்லியிருப்பேன். நான் எப்பவும் என் புருஷன் கூட தான் இருப்பேன்னு அவர்கிட்ட தீர்க்கமா சொல்லியிருப்பேன்"
அவளுடைய வார்த்தைகள், செவி வழியாய் அவன் இதயத்திற்குள் இறங்குவது போல் உணர்ந்தான் அர்ஜுன்.
"எனக்கு.... எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றான் தட்டுத்தடுமாறி.
"சாப்பிட்டுட்டு வேலை செய்யுங்க"
தனது சூழல் நாற்காலியை இழுத்து, அதில் அமர்ந்து, தனது மடிக்கணினியில் வேலை பார்க்கத் தொடங்கினான் அர்ஜுன். அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள் இந்து. தனது நாற்காலியில் இருந்து எழுந்து, அவள் அலுவலகத்தை விட்டு செல்லும் வரை அவளை பார்த்துக் கொண்டு நின்றான் அர்ஜுன்.
கீழே வந்த போது, வரவேற்பாளர் பெண்ணை பார்த்து புன்னகைத்தாள் இந்து. அந்தப் பெண், தனது முப்பதியிரண்டு பல்லும் தெரிய, பளிச்சென்று ஒரு சிரிப்பை உதிர்த்தாள், தனது வேலையை தக்க வைத்துக் கொண்டு விட்ட சந்தோஷத்தில். இந்து கொண்டுவந்த சிற்றுண்டியை, அடுத்து என்ன செய்வது என்று யோசித்த படி உண்டு முடித்தான் அர்ஜுன்.
சீதாராணி இல்லம்
வரவேற்பறையில் அமர்ந்து, யாரோ ஒருவருடன் அர்ஜுன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்தாள் இந்து. சமையலறைக்கு சென்று, காபியுடன் வந்து, அதை அந்த மனிதருக்கு கொடுத்தாள்.
"தேங்க்ஸ் மிஸஸ் அர்ஜுன்" அவர் கூற, புன்னகைத்தாள் இந்து.
"வேலன் அண்ணா" என்று அழைத்தான் அர்ஜுன்.
அங்கு ஓடிவந்த வேலன்,
"சொல்லுங்க தம்பி" என்றார்.
"இந்துவோட சித்தியை வர சொல்லுங்க"
"சரிங்க, தம்பி"
அர்ஜுனை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து. எதற்காக அவன் வித்யாவை அழைக்கிறான்?
வித்யாவும், வீணாவும் வரவேற்பறைக்கு வந்தார்கள்.
"இவர் என் லாயர் பாலகிருஷ்ணன். இந்து பேர்ல இருந்த வீட்டை நான் என் பேர்ல மாத்திக்கிட்டேன்"
என்று தன் கையில் வைத்திருந்த பத்திரத்தை, அவன் டீப்பாயின் மீது வைத்தான்.
மலைப்புடன் அவனைப் பார்த்தாள் இந்து. வித்யாவும் வீணாவும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
"இது தான் பத்திரம். இந்துவும், அவ புருஷனும், அந்த வீட்டை எனக்கு வித்துட்டாங்க. இந்து பேர்ல இருந்த வீடு, இனிமே என் பேர்ல இருக்கும். அவகிட்டயிருந்து இனிமேல அதை யாரும் வாங்க முடியாது." என்றான்.
"இது கொஞ்சம் கூட நியாயம் இல்ல. அந்த ஒரு வீடு தான் எங்களுக்கு இருந்தது" என்ற வித்யாவின் பேச்சை வெட்டி,
"அது இந்துவுக்குன்னு இருந்தது... அது அவ சொத்து. அவங்க அப்பாவோட உயில் படி, அது அவளுக்கும் அவ புருஷனுக்கும் தான் சேரணும். அவ புருஷன் விரும்பினா மட்டும் தான் அதுல உங்களுக்கு ஒரு ஷேர் கிடைக்கும்... அதாவது நான் விரும்பினா மட்டும் தான்..."
"எங்களுக்கு அதை விட்டா வேற எதுவுமே இல்ல. ஆனா, உங்க கதை அப்படி இல்லயே..."
"என்ன இப்படி சொல்லிட்டீங்க? ஒரு குடும்பத்தையே பிரிக்கிற அளவுக்கு புத்திசாலித்தனம் இருக்கு உங்களுக்கு... எவ்வளவு தைரியம் இருந்தா, உங்க ஆட்டத்தை என்கிட்ட ஆடுவீங்க? எவ்வளவு திறமையா என்னையே கையெழுத்து போட வச்சீங்க...? இந்து உங்க சொந்த பொண்ணா இருந்தா அப்படி செய்வீங்களா? என்னை பத்தி நீங்க என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க? என்னை மூளை இல்லாதவன்னு நினைச்சிங்களா?"
"தயவு செய்து எங்களை இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க. கொஞ்சம் கருணை காட்டுங்க"
"கருணையா...? அந்த வார்த்தைக்கு அர்த்தமாவது தெரியுமா உங்களுக்கு? நான் உங்களை எதுவும் செய்யாம அப்படியே விடுறேன்னு சந்தோஷபடுங்க. நான் நினைச்சா, வாழ்நாள் முழுக்க உங்களை கம்பி எண்ண வைக்க முடியும். அதை எப்பவும் ஞாபகத்துல வெச்சுக்கோங்க. நான் அப்படி ஏதாவது மோசமா செய்யுறதுக்கு முன்னாடி, இந்த வீட்டை விட்டு வெளியில போங்க"
என்ன கூறுவதென்று தெரியாமல் சிலைபோல் நின்றார் வித்யா.
"இந்த நிமிஷத்துல இருந்து, உங்களை நான் சென்னையில பார்க்கவே கூடாது... எப்பவும்...."
அவர்களை எச்சரித்து விட்டு, அங்கிருந்து அவன் செல்ல முயன்ற போது, வீணா கூறுவதைக் கேட்டு நின்றான்.
"இதையெல்லாம் செஞ்சது நாங்க இல்ல. உங்க சித்தி தான் இப்படி எல்லாம் செய்ய சொன்னாங்க. அப்படி செஞ்சா, எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன்னு சொன்னாங்க" என்றாள்.
பார்வையால் நெருப்பில் உமிழ்ந்தான் அர்ஜுன். அவனுடைய அந்த பார்வையை பார்த்து, வெலவெலத்துப் போனார்கள் அம்மாவும், மகளும்.
இதெல்லாம் மாஷாவின் வேலையா? அவனுடைய கோபம் விண்ணைத் தொட்டது. வீட்டுப் பத்திரத்தை தனது கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, புயலென அங்கிருந்து கிளம்பிச் சென்றான் அர்ஜுன். அவன் மாஷாவை சந்திக்க சங்கர் இல்லம் செல்கிறான் என்பது புரிந்து போனது இந்துவுக்கு.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top