Part 20
பாகம் 20
கிரி சொன்னதைக் கேட்டு கவலை அடைந்தாள் ரம்யா.
"உன் ஜாபை ரிசைன் பண்ணிட்டு, சீதாராணி இல்லத்திலிருந்து நீ கிளம்பிடு"
"உனக்கு என்ன நட்டு கழண்டு போச்சா?"
"இல்ல... இனிமே நீ அங்க இருக்க விரும்ப மாட்ட..."
"ஆனா, ஏன்?"
"ஏன்னா, அர்ஜுன் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கான். அவனுக்கு எல்லா விஷயமும் தெரியும்ங்குற விஷயம், இந்துவுக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறான்"
"ஏன்?"
"நம்ம அவனை ஏன்னு கேள்வி கேட்க முடியாது"
"இந்து ஒரு அப்பாவி..."
"எனக்கு தெரியும். அதனால தான் உன்னை வேலையை ரிசைன் பண்ண சொல்றேன். நீ நிச்சயமா அவங்க கிட்ட உண்மைய உளறிடுவ"
"இந்த நிலைமையில என்னால இந்துவை தனியா விட முடியாது. அவங்களுக்கு யாராவது ஒருத்தர் துணையா இருக்கணும்..."
"ஆனா, அர்ஜுன் உன்னை வார்ன் பண்ணியிருக்கான்"
"சத்தியமா நான் இந்துகிட்ட எதையும் சொல்ல மாட்டேன்"
"நம்ம ரெண்டு பேரும், அர்ஜுனுக்கு கீழே வேலை செய்யுறோம்ங்குறதை மறந்துடாத. அவன் பேச்சை மீறினா, அவன் மன்னிக்கவே மாட்டான்"
"ம்ம்ம் "
"ஜாக்கிரதையா இரு. தயவுசெய்து இந்துவை சமாதானப்படுத்து"
"எனக்கு தெரியும்"
அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள்.
....
அர்ஜுன் வீட்டிற்கு வந்த பொழுது அங்கு மயான அமைதி நிலவியது. ஒரு நிமிடம் அவன் பயந்தான். இந்துவை அவளுடைய சித்தி அழைத்துக் கொண்டு சென்று விட்டார்களோ?இங்கும் அங்கும் அவன் கண்கள் அலை பாய்ந்தது. அப்பொழுது வித்யாவின் குரல் அவன் காதில் விழுந்தது. அவருடைய கத்தலை சிறிதும் பொருட்படுத்தாமல், அமைதியாய் நின்றிருந்தாள் இந்து, அவருக்கு பதிலளிக்க விருப்பமின்றி. தன் கையிலிருந்து இந்து முழுவதுமாய் நழுவி விட்ட நிதர்சனத்தை உணர்ந்தார் வித்யா.
"வாயை திறந்து ஏதாவது பேசுடி... எங்களுக்கு வீட்டை கொடுக்க மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்? உனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது?"
சிறிதும் அச்சமின்றி தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் இந்து. அந்த அலட்சியத்தை வித்யாவால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பொறுமையிழந்து அவளை அடிக்க அவர் கையை உயர்த்திய போது, அவர்களுக்கு இடையில் வந்து நின்றான் அர்ஜுன், அனல் தெறிக்கும் பார்வையுடன்.
"என் பொண்டாட்டி மேல கை வச்சுட்டு, இந்த வீட்ல இருந்து யாரும் உயிரோட வெளியே போக முடியாது" என்றான் சீற்றத்துடன்.
இந்துவிற்கு ஆனந்தக்கண்ணீர் பெருகிய நிலையில், வித்யா வெலவெலத்துப் போனார். அர்ஜுன் தான் கோபமாய் வெளியே சென்றானே, பிறகு எப்படி அவன் இந்துவை தன் மனைவியாக கருதுகிறான்? குழப்பத்தில் தள்ளாடினார் வித்யா. இந்துவின் கையை பற்றி, அவளை அங்கிருந்து அழைத்து வந்து, வரவேற்பு அறைக்கு வந்ததும் அவள் கையை விட்டான் அர்ஜுன். அங்கிருந்து அவன் தன் அறைக்கு செல்ல எத்தனித்த போது, இந்து அவன் கையை பற்றிக்கொண்டு,
"நீங்க என்னை நம்ப மாட்டிங்களா?" என்றாள்.
அவள் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு, தன் அறைக்கு சென்று கதவை தாளிட்டுக் கொண்டான் அர்ஜுன். ஒன்றும் செய்ய முடியாத இயலாமையால் அங்கு நின்று கொண்டிருந்தாள் இந்து. அர்ஜுனனுடைய மன்னிப்பை எப்படி பெறுவது என்று அவளுக்கு புரியவில்லை.
அர்ஜுன் தீவிரமான ஒரு முடிவு எடுத்தான். இந்தப் பெண்கள் தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம். அவர்கள் வரும் வரை, அவனும் இந்துவும் சந்தோஷமாக இருந்தார்கள். அவர்கள் இருவரையும் இங்கிருந்து அனுப்பியாக வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மிக பெரிய தலைவலியாய் இருப்பார்கள்.
....
ஓயாமல் அழுது கொண்டிருந்தாள் இந்து. அவள் கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீரை துடைத்து, துடைத்து அவள் கன்னங்கள் எரிச்சல் அடைந்தன. அவள் கண்கள் கனத்துப் போயின. கண்ணிமைக்கும் பொழுதெல்லாம் கண்கள் கொதித்தன.
அவள் தோளை மெல்ல தொட்டாள் ரம்யா. அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள் இந்து. இந்த விஷயத்தில் அர்ஜுனை பற்றி இந்து என்ன நினைக்கிறாள் என்று தெரிந்துகொள்ள விரும்பினாள் ரம்யா.
"நம்பிக்கையை விட்டுடாதீங்க. எல்லாம் சரியாயிடும்"
"இது எல்லாமே என்னோட தப்பு தான், ரம்யா. நான் படிச்சி பாக்காம கையெழுத்துப் போட்டிருக்க கூடாது. இதுல அவருடைய தப்பு எதுவுமே இல்ல. என் கையெழுத்தை பாத்ததுக்கு அப்புறமா தான் அவர் அதுல கையெழுத்து போட்டாரு. அப்படி இருக்கும் போது, அவர் எப்படி என்னை சந்தேகப் படாம இருப்பார்? நான் எப்படித் தான் என்னை நிரூபிக்க போறேன்னு எனக்கு ஒண்ணுமே புரியல"
"கவலைப்படாதீங்க. நிச்சயம் அவர் புரிஞ்சுக்குவார்"
"அவரோட கோபம் நியாயமானது தான். அவர் எல்லாரும் நினைக்கிற மாதிரி இல்ல"
"இருக்கலாம்... ஆனா உங்க மேலயும் தப்பில்லயே. நீங்க உங்களை நிரூபிச்சி காட்டலாம். ஆனா, அதுக்காக நீங்க ரொம்ப இறங்கிப் போக வேண்டிய அவசியமும் இல்ல"
"ஏன் கூடாது? அவருக்காக எவ்வளவு வேணும்னாலும் நான் சந்தோஷமா இறங்கி போவேன். அவர் எல்லாத்துக்கும் தகுதியானவர். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கிற இணைப்பு என்னன்னு உனக்கு தெரியாது. அவருக்காக, அவர் கூடவே இருக்க, நான் என்ன வேணும்னாலும் செய்வேன்"
நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் ரம்யா. கடவுள் புண்ணியத்தில் இந்து முன்பு போல் இல்லை. சுயமாக நிரம்பவே சிந்திக்கிறார்.
"நீங்க எந்த இணைப்பை பத்தி பேசுறீங்க?"
"எனக்கு ஹார்ட் டிரன்ஸ்பிலான்டேஷன் நடந்தது"
"அப்படியா...? சரி..."
"எனக்குள்ள துடிசிக்கிட்டிருக்குற இதயம், அவர் அம்மாவுடையது"
"என்ன்ன்னது....?" ரம்யாவின் ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
ஆமாம் என்று தலையசைத்தாள் இந்து.
"நேத்து ராத்திரி, அவரே அதை என்கிட்ட சொன்னார். அவர் எவ்வளவு சந்தோஷமா இருந்தார் தெரியுமா?அவர் எல்லாத்தையும் மனசு விட்டு என்கிட்ட பேசினார். அவருடைய மனசு பச்சை குழந்தை மாதிரி. அவர் தனக்கு அன்பு கிடைக்காதான்னு தான் தேடிக்கிட்டு இருக்காரு. என்கிட்ட அது கிடைச்சதாகவும் நம்பினார். ஆனா, நான் அவருடைய நம்பிக்கையை உடைச்சிட்டேன்"
மறுபடியும் தன் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள் இந்து. அவளை சமாதானப்படுத்தலாம் என்று ரம்யா நினைத்த பொழுது, சட்டென்று எழுந்து நின்றாள் இந்து.
"என்ன ஆச்சு?"
"காலையிலிருந்து அவர் எதுவுமே சாப்பிடலன்னு நினைக்கிறேன். போய் பார்த்துட்டு வரேன்"
அங்கிருந்து பரபரவென ஓடிச் சென்றாள் இந்து, ரம்யாவை தாளாத ஆச்சரியத்தில் விட்டுவிட்டு. அர்ஜுனுடைய அறையிலிருந்து கோபாலன் வருவதைப் பார்த்தாள் இந்து.
"அவர் டின்னர் சாப்பிட்டாரா?"
"அவரோட ரூம்ல வைச்சிட்டு வந்தேன். ஆனா அவர் சாப்பிட்டாரான்னு தெரியல"
அர்ஜுனின் அறையை நோக்கிச் சென்று, மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள். அவன் இன்னும் சாப்பிடவில்லை... உணவு தொடப் படாமல் அப்படியே இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நகத்தை கடித்தாள். அனைத்து தயக்கத்தையும் ஓரம்கட்டிவிட்டு மெல்ல உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்து அர்ஜுன் ஆச்சரியம் அடைந்தான். அவள் இவ்வளவு விரைவில் அவன் அறைக்கு வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஒன்றும் கூறாமல் அவளை பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றான். அவள் மீது கோபம் கொள்ளும் தைரியம் அவனுக்கு இருக்கவில்லை. உண்மை தெரிந்த பின் அவனுக்கு அந்த தைரியம் எப்படி வரும்?
"நீங்க இன்னும் சாப்பிடலயா?"
கைகளை கட்டிக் கொண்டு, கண்களை சுருக்கினான் அர்ஜுன்.
"உங்க கோபத்தை சாப்பாட்டு மேல காட்டாதீங்க"
"நீ வயிறு ஃபுல்லா சாப்பிட்ட போலருக்கு..."
அவள் இல்லை என்று தலை அசைத்தாள்.
"அப்புறம் எனக்கு எதுக்கு அட்வைஸ் பண்ற? மத்தவங்களை ஒரு விஷயத்தை செய்ய சொல்றதுக்கு முன்னாடி, முதல்ல நம்ம அந்த விஷயத்தை செய்யணும். முதல்ல நீ போய் சாப்பிட்டுட்டு அதுக்கு அப்புறம் வந்து என்ன சாப்பிட சொல்லு... போ" அவனுடைய குரல் கண்டிப்புடன் ஒலித்தது.
"எனக்கு சாப்பிட பிடிக்கல"
"உங்க அம்மாவையும், தங்கையையும் பார்த்தவுடனேயே உனக்கு சந்தோஷத்துல வயிறு நிறஞ்சிருக்கும்" என்றான் எகத்தாளமாக.
இல்லை என்று தலையசைத்துவிட்டு,
"நான் உங்களை காயப்படுத்திட்டேன். அப்படி இருக்கும் போது, எனக்கு எப்படி சாப்பிட பிடிக்கும்?"
"இப்பவும் நீ அதைத் தான் செய்யற"
"நான் என்ன செஞ்சேன்?"
"நான் உன்னை பட்டினி போடுறேன்னு ஊர் ஜனங்க சொல்லணுமா?"
இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள்.
"உங்க அம்மாவும், தங்கையும், மேடை போடாமலேயே, நான் உன்னை பட்டினி போட்டு கொடுமைப்படுத்துறேன்னு ஊரெல்லாம் சொல்லுவாங்க. அது தான் உனக்கு வேணும்னா சந்தோஷமா செய்."
"இல்ல... நான் சாப்பிடுறேன்"
கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிப் போனாள் இந்து. இரண்டு நிமிடம் கழித்து வெளியே வந்து பார்த்தான் அர்ஜுன். அவள் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை பார்த்து, மென்மையாய் புன்னகைத்தான். மீண்டும் தன் அறைக்குள் வந்து, கதவைத் தாழிட்டுக் கொண்டான்.
சிறிது நேரம் கழித்து, அவனுடைய அறையின் கதவை தட்டினாள் இந்து. கதவைத் திறந்து, *என்ன?* என்பது போல் அவளை பார்த்தான் அர்ஜுன்.
"நான் சாப்பிட்டுட்டேன்"
"அதனால?"
"நீங்களும் சாப்பிடுங்க. ப்ளீஸ்..."
"நீ ஏன் என்னை பத்தி கவலைப் படுற?"
"உங்க மேல எனக்கு அக்கறை இருக்கு"
"உனக்கு என் மேல எவ்வளவு அக்கறை இருக்குன்னு, விவாகரத்து பத்திரத்தை பார்த்தபோதே தெரிஞ்சுக்கிட்டேன்"
அவள் கண்கள் சட்டென்று கலங்கியது.
"அழுகையை நிறுத்து. உன்னோட அழுகை எதையும் மாத்தாது. எனக்கு அழறவங்களை பிடிக்காது. புரிஞ்சதா?"
புரிந்தது என்பது போல தலையசைத்தாள்.
"பாக்கலாம், நீ என் வார்த்தையை எவ்வளவு மதிக்கிறேன்னு. இப்ப போய் தூங்கு."
சரி என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள் இந்து. சோபாவில் அமர்ந்து புன்னகையுடன் சாப்பிட தொடங்கினான் அர்ஜுன்.
....
தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த இந்துவை பார்க்க, பாவமாய் இருந்தது ரம்யாவிற்கு.
"ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க?"
கட்டிலில் எழுந்து அமர்ந்தாள் இந்து.
"அவர் என் மேல கோவமா இருக்கும் போது, எனக்கு எப்படி தூக்கம் வரும்?"
"அவர் உங்க மேல கோவமா இல்ல..."
"கோவமா தான் இருக்கார்"
"இல்ல"
"இருக்கார்"
"கொஞ்சம் யோசிச்சு பாருங்க, காலையில அவர் கோவமா இருந்தப்போ, உங்க கிட்ட எப்படி பேசினாரு...? இப்போ எப்படி பேசினாரு? காலையில திட்டினா மாதிரி இப்போ உங்களை திட்டினாரா?"
நகத்தை கடித்தபடி யோசித்தாள் இந்து. ஆமாம், காலையில் அவன் அடிபட்ட சிங்கத்தைப் போல் கர்ஜித்தான். ஆனால் அவளை சாப்பிட சொன்ன பொழுது, அந்த கோபம் அவனிடம் இருக்கவில்லை. அவளிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் கூட, அவள் பேசுவதற்கு எல்லாம் அவன் பதிலளித்தான்.
அவளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த ரம்யாவை பார்த்தாள் இந்து.
"நீ சொல்றது ரொம்ப சரி ரம்யா. அவர் என்னை திட்டவே இல்ல"
"அதைத் தான் சொல்றேன். அவ்வளவு லேசுல விட்டுடாதீங்க. தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க. நீங்க நிச்சயம் ஜெயிப்பிங்க"
சந்தோஷமாய் தலையசைத்தாள் இந்து. ஆமாம், அவள் எளிதில் விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும். எதற்காக அவள் தயங்க வேண்டும்? அர்ஜுன் அவளுடைய கணவன். எவ்வளவு அழகாய் அவளை மட்டும் தான் அவன் காதலிப்பதாய் கூறினான்...! எவ்வளவு அழகாய் அவனுடைய அம்மாவை பற்றிய உணர்வுகளை அவளிடம் பகிர்ந்து கொண்டான்...! இதற்கு முன் அவள் இப்படிப்பட்ட இதயம் தொடும் வார்த்தைகளை யாரிடமிருந்தும் கேட்டதே இல்லை. இவ்வளவு அன்பை மனதில் தேக்கி இருக்கும் ஒருவன், தனக்கு மணாளனாக கிடைப்பான் என்று அவள் கனவு கூட கண்டதில்லை. அவள் வணங்கும் துர்க்கை அம்மனின், கருணையின் முழு வடிவம் அர்ஜுன். அவனை சந்தோஷ படுத்த வேண்டியது அவளுடைய கடமை. அதை அவள் செய்தே தீர வேண்டும், என்ற நினைப்புடன் நிம்மதியாய் உறங்கினாள் இந்து.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top