Part 19

பாகம் 19

மறுநாள் காலை

தூக்கம் கலைந்த அர்ஜுன், தான் படுத்திருக்கும் நிலையைப் பார்த்து, திடுக்கிட்டு எழுந்தான். இந்துவின் நெஞ்சில், அவளை அனைத்தபடி படுத்திருப்பதை பார்த்து, முதல் நாள் நடந்தவற்றை நினைத்து பார்த்தான். அவள், அவனுடைய கட்டிலில், அவனை நெஞ்சில் ஏந்தியபடி படுத்திருந்ததை பார்த்த போது, அவனுக்கு ஆனந்தமாய் இருந்தது. அவள் அவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விட்டாள். ஒருவேளை, அந்த சந்தர்ப்பத்தை அவன் பயன்படுத்திக் கொண்டு இருந்திருந்தால், இந்நேரம் அவர்களுடைய முதலிரவு முடிந்துவிட்டிருக்கும். புன்னகையுடன் அவளை போர்வையால் போர்த்தி விட்டு, குளியல் அறையை நோக்கி சென்றான்.

சிறிது நேரத்தில், புத்துணர்ச்சியுடன் வெளியே வந்தவன், முதல் நாள் தான் இந்துவிடம் பேசியவற்றை நினைத்து புன்னகைத்தான். அப்பொழுது, அவனுடைய மடிக்கணினியின் அடியில் வைக்கப்பட்டிருந்த பத்திரம் அவன் கண்களில் விழுந்தது. சோபாவில் அமர்ந்தபடி அதைப் படிக்கத் தொடங்கினான். சிறிது நேரத்தில், அவனுடைய முகம், கலிங்கத்துப்பரணியில், ஜெயம்கொண்டாரல் வர்ணிக்கப்பட்டிருந்த பேயை போல் மாறியது. கண்ணாடியால் ஆன அந்த டீப்பாயை ஓங்கி ஒரு குத்து குத்தியதில், அது உடைந்து நொறுங்கியது. அந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் இந்து.

தன் தலையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருந்தது அர்ஜுனுக்கு, அந்த பத்திரத்தின் இடையில், விவாகரத்து பத்திரத்தை பார்த்த பொழுது. இந்துவை நம்ப முடியாத பார்வை பார்த்தான் அர்ஜுன். அவனுடைய கோபம் கொந்தளிக்கும் முகத்தை பார்க்கவே பயந்தாள் இந்து. அவை அர்ஜுனின் மூச்சை நிறுத்தும் நிமிடங்கள் என்று தான் கூற வேண்டும். தன் பொறுமையை, கண்ணிமைக்கும் நேரத்தில், முழுதுமாய் இழந்தான் அர்ஜுன். நேரே கட்டிலின் அருகில் சென்று, இந்துவை கையை பிடித்து இழுத்தான். தன் கையில் இருந்த பத்திரத்தை அவளிடம் காட்ட, அது விவாகரத்து பத்திரம் என்பதை அறிந்து, அதிர்ந்தாள் இந்து.

"என்ன இது? என்ன இந்து, இது? எல்லாம் வெறும் நாடகமா...? என் கையெழுத்தை வாங்க நடத்தின நாடகமா? நீ இவ்வளவு கீழே இறங்கி போவியா...? நீ என்கூட படுக்குறேன்னு சொன்னது, என் கையெழுத்தை வாங்கத் தானா? நீ ரொம்ப உயர்வான கொள்கையுடைய பொண்ணுன்னு நினைச்சேன். நீ என்னை ஏத்துக்காம பிடிவாதமா இருந்திருந்தா கூட, நான் உன்னை நெனச்சி சந்தோஷப் பட்டிருப்பேன்... ஆனா, இப்ப நீ செஞ்சது இருக்கே... இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கல..."

என்ன நடக்கிறது என்பதே புரியாமல், கல்லைப் போல நின்றிருந்தாள் இந்து. அர்ஜுனுடைய புண்படுத்தும் வார்த்தைகள், அவள் கண்களை குளமாக்கியிருந்தது.

"பதில் சொல்லு டேமிட்..." என்று இடி என முழங்கினான்.

"எனக்கு எதுவும் தெரியாது... என்னை நம்புங்க"

"நம்புறதா? நம்பிக்கைங்குகிறது கற்பு மாதிரி... ஒரு தடவை இழந்தா, இழந்தது தான்... இப்போ நீ அதை இழந்துட்ட..."

"தயவுசெய்து அப்படி சொல்லாதீங்க"

"இங்கயிருந்து போ... நான் எதாவது செய்யறதுக்கு முன்னாடி தயவுசெஞ்சு இங்கிருந்து போய்டு" என்று உறுமினான்.

"நான் சொல்றதை தயவு செய்து கேளுங்க"

அர்ஜுனுடைய கோபம் நொடிக்கு நொடி உயர்ந்து கொண்டே இருந்தது. அவள் கையை பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு வந்து, தனது அறையிலிருந்து அவளை வெளியே தள்ளி கதவை சாத்திக் கொண்டு, கதவின் மேல் சாய்ந்து, கண்களை மூடிக் கொண்டான்.

"என்னங்க... ப்ளீஸ் கதவை திறங்க... ஒரே ஒரு தடவை நான் சொல்றதை கேளுங்க...." என்று கெஞ்சினாள்.

உள்ளிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. அவள் கதவைத் தட்டும் சத்தம் அதிகரித்துக்கொண்டே சென்றது. கோபத்தில் தன் பல்லை கடித்தான் அர்ஜுன்.

"என்னங்க கதவை திறங்க... இல்லன்னா நான் தற்கொலை பண்ணிக்குவேன்" என்று அவள் கூற,

திடுக்கிட்டு கதவை திறந்தான் அர்ஜுன். அவனுடைய கோபத்தை பார்த்து பின்வாங்கினாள் இந்து. ஒன்றும் கூறாமல், விறுவிறுவென வீட்டை விட்டு வெளியேறினான் அர்ஜுன்.

.....

நடந்ததை பார்த்து, வித்யாவும் வீணாவும் உஷார் ஆனார்கள். அர்ஜுன், விவாகரத்து பத்திரத்தை பற்றி தெரிந்து கொண்டுவிட்டதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். வித்யா, மாஷாவிற்கு ஃபோன் செய்தார்.

"அர்ஜுனுக்கு விவாகரத்து பத்திரத்தை பத்தி தெரிஞ்சிடுச்சி"

"அய்யய்யோ... இப்போ அவன் எங்க?"

"அவன் கோபமா வீட்டைவிட்டு கிளம்பி போயிட்டான். இப்போ நாங்க என்ன செய்யுறது?"

"ஒன்னு செய்யுங்க. எப்படியாவது இந்துவை அங்கிருந்து கூட்டிட்டு வந்துடுங்க"

"எதுக்குங்க?"

"அர்ஜுன் இந்து மேல கோவமா இருந்தாலும், அவனை விட்டுட்டு அவ போயிட்டா, அவன் ஒரேடியா ஒடஞ்சி போவான்"

"அவளை வெளியில கூட்டிக்கிட்டு வந்தா எனக்கு பணம் கொடுப்பீங்களா?" அப்பொழுதும் பணத்தின் மீதே குறியாக இருந்தார் வித்யா.

"நிச்சயமா தரேன். ஆனா, அவ எப்பவும் அர்ஜுன்கிட்ட திரும்ப போகவே கூடாது. அதுக்கு, நீங்க அவளை சந்தோஷமா வச்சுக்கணும். அப்ப தான், அவ அர்ஜுனை பத்தி நினைக்க மாட்டா. புரிஞ்சுதா...?"

மாஷா கூறியது பிடிக்காவிட்டாலும், வேறு வழி இல்லை வித்யாவிற்கு. பணத்திற்காக அவர் ஒப்புக்கொண்டார்.

"சரிங்க"

.......

எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் காரை ஓட்டிக்கொண்டு சென்றான் அர்ஜுன். கோபமும், ஏமாற்றமும் அவனைப் பிடுங்கித் தின்றன. அவனால் நம்பவே முடியவில்லை, அவனை இவ்வளவு தூரத்திற்கு ஏமாற்றும் அளவிற்கு, இந்துவுக்கு தைரியம் இருக்கிறது என்று. அவன் தனது எதிரிகளை கூட மன்னித்து விடுவான். ஆனால், துரோகிகளை ஒருபொழுதும் மன்னிப்பதில்லை. அந்தப் பட்டியலில் இந்து சேர்ந்து விட்டதை தான் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவனுடைய அம்மாவின் இதயத்தை பெற அவளுக்கு தகுதி இல்லை. அவனுடைய அம்மா, நற்குணங்களை தன்னகத்தே கொண்டவர். அவன் அம்மாவின் இதயம், தவறானவளிடத்தில் சென்று விட்டது. அவன் அம்மாவின் இதயத்தை கொண்டிருப்பதால், அவள் அவனுடைய அம்மாவை போல் இருப்பாள் என்று, எதிர்பார்த்தது தவறு என்று நினைத்தான்.

இதனால் தான் அவன் யாரையுமே நம்புவதில்லை... யாரையும் தன்னிடம் நெருங்க விடுவதுமில்லை... அப்படி செய்யும் போதெல்லாம் அவனுக்கு காயங்கள் தான் மிஞ்சுகிறது.

சீதாராணி இல்லம்

ஓயாமல் அழுது கொண்டிருந்தாள் இந்து. அவள் அர்ஜுனுடைய நம்பிக்கையை பரிபூரணமாய் இழந்துவிட்டாள். அவனுடைய நம்பிக்கையை மட்டுமல்ல, அவளுக்கு வாழ்க்கையில் இருந்த ஒரே ஒரு பிடிப்பையும் இழந்துவிட்டாள். வித்யாவும், வீணாவும், அவள் வாழ்க்கையில் இப்படி இரக்கமின்றி விளையாடுவார்கள் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அறைக்கு வந்து, அவர்களை கோபத்துடன் பார்த்துகொண்டு நின்றாள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"எதுக்காக என்னோட வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணிங்க? எதுக்காக வீட்டு பத்திரத்திற்கு நடுவுல, விவாகரத்து பத்திரத்தை வச்சிங்க? ஏன்????"

"அவன் உன்னை சந்தோஷமா வச்சிருப்பான்னு எனக்கு தோனல. அவன் சரியான பைத்தியம்னு நான் கேள்விப்பட்டேன். அவன் கூட, உன்னால நிச்சயமா சந்தோஷமா வாழவே முடியாது..."

"இல்ல... உங்களுக்கு அவரை பத்தி ஒன்னுமே தெரியாது"

"நீ ஒரு அப்பாவிப் பொண்ணு. அவனை நீ சரியா புரிஞ்சிக்கல. அவன் உன்னை என்ன வேணாலும் செய்யலாம். நான் எது செஞ்சாலும் உன்னோட நல்லதுக்காக தான் செய்வேன்..."

"எதுக்காக விவாகரத்து பத்திரத்தை வச்சீங்கன்னு, நான் கேட்டதுக்கு, நீங்க இன்னும் பதில் சொல்லல"

"நான் தான் சொன்னேனே..."

"இல்ல... நீங்க எனக்கு சொல்லல. நீங்க அதுல விவாகரத்து பத்திரத்தை வச்சிருக்கிங்கன்னு என்கிட்ட சொல்லவே இல்ல"

"அவன் உன்னை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டான். நீ அவன் கூட இருக்க வேண்டிய அவசியமில்ல. அந்த பத்திரத்தை எடுத்துக்கிட்டு, எங்க கூட வந்துடு"

"எங்க?"

"பாண்டிச்சேரிக்கு"

"நான் வரமாட்டேன்..."

"என்ன சொன்ன?"

"நான் என் புருஷனை விட்டுடு எங்கேயும் வரமாட்டேன்னு சொன்னேன்"

"அவன்கிட்ட இருக்கிற பணத்தை பார்த்து, அவ மயங்கிட்டா. அதனால தான், நம்ம கூட வர மாட்டேன்னு சொல்றா" என்றாள் வீணா

அவளுக்கு பதிலளிக்கவில்லை இந்து. எதற்காக அவள் அர்ஜுனுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள் என்று, வீணாவிடம் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றியது இந்துவுக்கு.

வித்யா, கண்ணில் கண்ணிரை வரவழைத்துக் கொண்டார்.

"அவ கோடிஸ்வரனுக்கு பொண்டாட்டி ஆயிட்டால்ல, நம்மள பத்தி அவ ஏன் யோசிக்க போறா?"

"போதும் நிறுத்துங்க. நான் உங்களை நம்பினேன். அதனால தான், படிச்சு பாக்காம பத்திரத்துல கையெழுத்து போட்டேன். நான் கையெழுத்து போட்டதால தான், அவரும் அதுல கையெழுத்து போட்டார். ஏன்னா, அவர் என்னை நம்பினார். அவர் என் மேல வச்சிருந்த நம்பிக்கையை நீங்க கெடுத்துட்டீங்க. என்னை அவரோட கண்ணுல தப்பானவளா காட்டிட்டீங்க..."

"உன் நல்லதுக்காக தான் நான் அதை செஞ்சேன். நீ என்னை நம்ப மாட்டியா?"

"மாட்டேன்... நான் உங்களை நம்ப மாட்டேன்... நீங்க அவரை என் மேல கோபப்பட வச்சீட்டீங்க... எங்க அப்பா, எனக்கு குடுத்த வீட்டை, நான் உங்களுக்கு கொடுக்க மாட்டேன். அது என்னோட வீடு..." என்று அவள் கத்த,

"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, எங்ககிட்ட இப்படி பேசவ...? மரியாதையா அந்த பாத்திரத்தை எங்ககிட்ட குடு. இல்லன்னா..." என்று வீணா சொல்ல,

"இல்லன்னா...? இல்லன்னா என்ன செய்வ?" என்று அவள் சீறியதை பார்த்து பின்வாங்கினாள் வீணா.

"உன்னால என்ன செய்யமுடியுமோ செஞ்சுக்கோ..." என்று கூறி விட்டு, அங்கிருந்து சென்றாள் இந்து.

குட்டி ஆட்டை போல் இருந்த இந்து, சிங்கத்தைப் போல் கர்ஜித்து விட்டு செல்வதை, அம்மாவும், மகளும், பார்த்து திட்டுகிட்டு நின்றார்கள்.

....

அர்ஜுனுடைய கோபத்தின் அளவு சொல்லில் அடங்காதது. அவனுடைய கார், டாப் கியரில் பறந்து கொண்டிருந்தது. அவன் இந்துவை சோதித்து, அதில் அவள் ஜெயித்த போது, அவனுக்கு தலை கால் புரியவில்லை. ஆனால் அவள் அவனை விவாகரத்து செய்யும் அளவிற்கு செல்வாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அவளுக்கு அவனைப் பிடிக்க வில்லையா? அப்படி இருந்தால், அவனை ஏன் அவளிடம் நெருங்க விட்டாள்? இப்படி ஏமாற்றியதற்கு பதிலாக, அவனை அவள் கொன்றிருக்கலாமே...!

அப்பொழுது அர்ஜுனின் ஃபோன் மணியடித்தது. ஆனால், அவன் அதை எடுத்து பேசவில்லை. மறுபடியும், ஃபோன் அடிக்க, அதில் கிரியின் பெயர் ஒலிர்ந்தது. அவன் மீண்டும் அதை தவிர்த்தான். ஆனால் கிரியும் மறுபடியும் அழைத்தான். இந்த முறை பேசினான் அர்ஜுன்.

"எதுக்காக டா என் உயிரை வாங்குற?"

"இந்து மேல எந்த தப்பும் இல்ல, அர்ஜுன்..."

"என்ன சொல்ற?"

"அவங்க சித்தி தான், வேணுமின்னே அவங்களை மாட்டி விட்டுட்டாங்க..."

பிரேக்கை அழுத்தி, கிரீச்சிடும் சத்தத்துடன் காரை நிறுத்தினான் அர்ஜுன்.

"வித்யாவா? ஆனா ஏன்?"

"என்ன காரணம்னு எனக்கு தெரியல"

"அப்புறம் உனக்கு எப்படி தெரியும்?"

"நான் உனக்கு ஒரு வீடியோவை அனுப்பியிருக்கேன். இந்துவுக்கு தெரியாம, ரம்யா தான் அதை எடுத்திருக்கா..."

உடனடியாக அந்த அழைப்பை துண்டித்து விட்டு, கிரி அனுப்பியிருந்த அந்த காணொளியை ஓடவிட்டான் அர்ஜுன். சற்று நேரத்திற்கு முன், இந்து வித்யாவிடம் பேசியதை தான் ரம்யா வீடியோவாக எடுத்திருந்தாள். அதை பார்த்த பொழுது, அர்ஜூனின் கண்கள் நிரம்பி வழிந்தன. அவை நிச்சயம் ஆனந்தத்தில் நிரம்பியவை தான். தனது கைபேசியின் மீது, தன் நெற்றியை பதித்துக்கொண்டு, கண்ணீருடன் புன்னகை புரிந்தான் அர்ஜுன்.

"நான் என் புருஷனை விட்டுடு எங்கேயும் வரமாட்டேன்" என்ற அவளது வார்த்தைகள், அவன் மீது பூமாரி பொழிவதை போல் உணர்ந்தான்.

இறுதியில், அவனுக்காக ஒருத்தி கிடைத்து விட்டாள்... அவனுக்காக போராட ஒருத்தி... அவன் மனைவி இந்து... அவள் தவறானவள் அல்ல... அவள் தவறானவளாக இருக்க முடியாது... அவனை விட்டு செல்ல வேண்டும் என்று அவள் விரும்பவில்லை. விவாகரத்து பத்திரங்களைப் பற்றி அவளுக்கு தெரிந்திருக்கவில்லை...அவள் மீது கோபபட்டத்திற்காக மிகவும் வருத்தப்பட்டான் அர்ஜுன்.

ஆனால்... படித்து பார்க்காமல் அந்த பத்திரங்களில் எப்படி அவள் கையெழுத்திட்டாள்? அவளுடைய கையெழுத்தை பார்த்ததற்கு பிறகு தானே, அந்த பத்திரதை படித்து பார்க்காமல் அவனும் கையெழுத்துப் போட்டான். ஒருவேளை அந்தப் பத்திரத்தை அவன் படித்து பார்க்காமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஒரு வேளை, அவர்கள் அந்த பத்திரங்களை, நீதி மன்றத்தில் ஒப்படைத்துவிட்டு இருந்தால் என்ன ஆகியிருக்கும்? அப்படி நடந்திருந்தால், அவன் அவளை எப்போதுமே நம்பி இருக்க மாட்டான்... அவன் அவளை மொத்தமாய் இழந்திருக்க கூடும்... அவர்கள் ஒரேடியாய் பிரிந்திருக்கக் கூடும்...!

அவன் வீட்டை விட்டு வந்து ஒரு மணி நேரம் தான் ஆகிறது. இந்த ஒரு மணி நேரத்தில், ஒவ்வொரு நொடியும் அவன் செத்திருக்கிறான். அந்த சித்திரவதை, அவன் வாழ்க்கை முழுவதற்கும் நிரந்தரமாகியிருந்தால் என்னாவது? ஒருவேளை, ரம்யா அவர்களுக்குள் நிகழ்ந்த வாக்கு வாதத்தை பார்க்காமல் போயிருந்தால் என்னாவது? அவர்களுடைய வாழ்க்கை, அடியோடு குலைந்து போயிருக்காதா...? கோபத்தில் ஸ்டீயரிங் வீலை ஓங்கி ஒரு குத்து குத்தினான் அர்ஜுன். ஒருவேளை, அப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால், இந்து என்ன செய்திருப்பாள்? அவனுடைய நம்பிக்கையைப் பெற போராடியிருப்பாளா...? அல்லது அவனை விட்டு சென்றிருப்பாளா?

நிதானமாய் சிந்தித்தான் அர்ஜுன். நீண்ட மூச்சை இழுத்து விட்டு கிரிக்கு ஃபோன் செய்தான். உடனடியாக அவனுடைய அழைப்பை ஏற்றான் கிரி. அவன் தான் அர்ஜுனுடைய அழைப்பிற்காக நகத்தை கடித்தபடி காத்திருந்தானே...

"அர்ஜுன்...."

"ரம்யாவை வார்ன் பண்ணி வை. எனக்கு எல்லா விஷயமும் தெரியும்னு இந்துவுக்கு தெரியக் கூடாது"

"என்னது...?"

"இந்துவைப் பொறுத்தவரை, எனக்கு எதுவும் தெரியாது. புரிஞ்சுதா?"

"ஆனா, அர்ஜுன்..."

"எனக்கு, ஆனா, ஆவன்னா வெல்லம் பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா...?" என்றான் கண்டிப்புடன்.

"இந்து ஒரு அப்பாவி பொண்ணு... அவங்க உன்னை உண்மையிலேயே காதலிக்கிறாங்க..."

"அவ என்னை காதலிக்கிறது உண்மைனா, அவ எனக்காக போராடட்டும்..."

"நீ என்ன சொல்ற, அர்ஜுன்?"

"கஷ்டப்பட்டு அடையிற அளவுக்கு, நான் தகுதியானவன் இல்லயா...?"

"சந்தேகம் இல்லாம, நீ தகுதியானவன் தான்..."

"அப்ப நான் சொன்னதை செய்..." அழைப்பை துண்டித்தான் அர்ஜுன்.

மென்று முழுங்கினான் கிரி. அர்ஜுனுக்கு என்ன தேவை என்பதை அவன் புரிந்து கொண்டான். இந்து எந்த அளவிற்கு அவனுக்கு முக்கியத்துவத்தை வழங்கி, அவனுக்கு தன்னை நிரூபித்து காட்ட போகிறாள் என்று அர்ஜுன் பார்க்க விரும்புகிறான். அவனுக்கு இந்துவை நினைத்த பொழுது பாவமாயிருந்தது. கடவுள் துணையோடு, அவள் அர்ஜுனை ஜெயித்து காட்டிவிட வேண்டும் என்று மனதார விரும்பினான் அவன். அர்ஜுனுடைய கடினமான சோதனைகளை கடந்து வந்தவனாயிற்றே அவன்.

ஆனால், கிரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அர்ஜுன், இந்துவை சோதித்தாலும் கூட, அர்ஜுனுடைய மறைமுக ஆதரவு இந்துவுக்கு இருக்கும். அவன் அவளை சோதிக்கும் அதே நேரத்தில், அவள் தோற்று விடக் கூடாது என்ற எண்ணமும் அவன் இதயத்தின் ஓரத்தில் துடித்துக் கொண்டு தான் இருக்கும்... அது தானே அர்ஜுன்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top