Part 18
பாகம் 18
வீணாவின் பதற்றம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவள் கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தாள். ஏற்கனவே பத்து நிமிடங்கள் கடந்தாகிவிட்டது. இன்னும், இந்து அர்ஜுனின் அறையிலிருந்து வெளியே வரவில்லை. ஏன்? உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லையே. தன் கையைப் பிசைந்தபடி இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தாள்.
வேலன், அவளைப் பார்த்துவிட்டு, சமையலறையின் சுவற்றின் மீது சாய்ந்து கொண்டு, சிரித்தபடி நின்றிருந்த ரம்யாவையும் பார்த்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கோப்பையில் இருந்த காபியை, சமையலறையின் சிங்க்கில் ஊற்றிவிட்டு அந்த கோப்பையை கழுவி வைத்தார் வேலன்.
"அட... ஏன் அதை வேஸ்ட் பண்ணீங்க?" என்று கேட்ட அவளை விசித்திரமாய் பார்த்தார் வேலன்.
"அந்த காபியை நீங்க குடிச்சி இருந்தீங்கன்னா, எந்த தொந்தரவும் இல்லாம, நிம்மதியா தூங்கி இருக்கலாம் இல்ல...?" என்றாள் கேலியாக.
"எனக்கு அந்த காபி வேண்டாம்பா" என்றார் அவர்.
"நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்றீங்க. உங்களுக்கு ரெஸ்ட் வேணும். அந்த காபி, உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுத்திருக்கும்"
"ஆனா என்னால அப்படி நிம்மதியா தூங்க முடியாது. அர்ஜுன் தம்பி, எப்ப வேணும்னாலும் என்னை கூப்பிடுவாரு"
"இன்னைக்கு அவர் உங்களை கூப்பிட மாட்டார்" என்று மனதில் நினைத்து கொண்டாள் ரம்யா.
வீணா தூக்க மாத்திரை பொடியை கலந்த காபி தான் அது. அவர்கள் இருவரும் தான், வித்யா, வீணா மீது கண் வைத்திருக்கிறார்களே.
அவள் சமையலறையை விட்டு வெளியே வந்து, வீணாவிடம் சென்றாள்.
"ஏதாவது பிரச்சனையா? நீங்க ரொம்ப டென்ஷனா இருக்கீங்களே?"
இல்லை என்று தலை அசைத்தாள் வீணா.
"நெஜமாவா சொல்றீங்க? என்னால நம்ப முடியலயே..."
அவளைப் பார்த்து முகம் சுருக்கினாள் வீணா.
"இந்து, அர்ஜுன் சாருடைய ரூமுக்கு போறது இது தான் முதல் தடவை. புருஷனுடைய முக்கியத்துவத்தை, நீங்க தான் அவங்களுக்கு சொல்லி புரிய வச்சிருக்கணும்னு நினைக்கிறேன்... நான் சொல்றது சரி தானே?" என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாள்.
வராத சிரிப்பை வரவழைத்து, பல்லைக் காட்டினாள் வீணா.
"எனக்கு ரொம்ப தூக்கம் வருது. இன்னைக்கு இந்து, அர்ஜுன் சாரோட ரூம்ல தான் தூங்க போறாங்கன்னு நினைக்கிறேன்..." என்று, போகிற போக்கில், குண்டை தூக்கி போட்டு விட்டு சென்றாள்.
அவள் வீணாவின் முகத்தை பார்த்த பொழுது, அதில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவள் வயிற்றை கலக்கிவிட்ட சந்தோஷத்தில் தூங்கச் சென்றாள் ரம்யா.
அர்ஜுனின் அறை
இந்துவை கையில் ஏந்தியபடி, அவள் கண்களை பார்த்துக் கொண்டே கட்டிலை நோக்கி சென்றான் அர்ஜுன். அவள் முகத்தில், சிறிதளவு பதற்றத்தை தவிர வேறு எதையும் அவன் காணவில்லை. ஆம், இந்து பதட்டமாகத் தான் இருந்தாள். இது அவளுடைய முதலிரவு அல்லவா...? அவள் முழுமனதுடன் தான் அதற்கு சம்மதித்தாள் என்ற போதிலும், அர்ஜுனிடம் அவள் கண்ட திடீர் மாற்றம், அவளுக்கு சிறிது மனக் கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
அவளை கட்டிலில் கிடத்திவிட்டு, அவள் முக பாவத்தை படித்தபடி, அவள் பக்கத்தில், படுத்துக்கொண்டான் அர்ஜுன். அவள் அழகில் மயங்கி விடாமல் இருக்க முடிந்த அளவு முயற்சி செய்தான். அவன் மெல்ல அவள் கன்னத்தை தொட்டு, அவள் நெற்றியில் முத்தமிட்ட பொழுது, தன் கண்களை மூடிக்கொண்டாள் இந்து.
அவள் சேலைக்கு மேல் லேசாய் தெரிந்த, இருதய அறுவை சிகிச்சை செய்பட்ட தழும்பை, அவன் தொட்ட போது, அவளுக்குள் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. அவன் அந்தத் தழும்பில் முத்தமிட்ட பொழுது, அவளுடைய சப்த நாடியும் ஒடுங்கி போனது. அடுத்து நடக்க இருக்கும், மிகப் பெரிய விஷயத்திற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டாள் இந்து. ஆனால், அவள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அவள் நெஞ்சில் காதை வைத்து, அவளுடைய இதயத்துடிப்பை கேட்கலானான் அர்ஜுன். அவனுடைய ஒன்றுமே செய்யாத விந்தையான நடவடிக்கையை உணர்ந்து, தன் கண்ணைத் திறந்தாள் இந்து. அவன் நேரத்தை வீணாக்காமல், தன் உடைகளை உரித்தெடுத்துவிடுவான் என்று எதிர்பார்த்திருந்தாள் அவள். ஆனால், இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
"உன்னோட இதயம், ரொம்ப வேகமாக துடிக்கிது... உனக்கு ஏன்னு தெரியுமா?" என்றான் நேசம் நிறைந்த குரலில்.
அவள் இதயம் வேகமாய் துடிப்பது அவளுக்கு தெரியாதா என்ன? அவளுக்கு மட்டும் தான் தெரியும், அவள் எவ்வளவு பதட்டத்துடன் இருக்கிறாள் என்று. இந்து அமைதி காத்தாள்.
"ஏன்னா, நம்ம ரெண்டு பேரும் ஒன்னா இருக்குறதல எங்க அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க." என்ற போது, ஒன்றும் புரியாமல் குழம்பினாள் இந்து.
அவன் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான்? அவளுடைய இதயத்துடிப்பிற்கும் அவனுடைய அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?
"உங்க அம்மாவா?" என்றாள் மென்மையான குரலில்.
"ஆமாம்... எங்க அம்மா தான்..."
"ஆனா, அவங்க இறந்து போயிட்டாங்கன்னு கேள்விபட்டேனே..."
மேலும் அழுத்தமாய் அவள் நெஞ்சில் முகம் புதைத்து,
"இல்ல... இந்த உலகத்துக்கு வேணா, அவங்க இறந்து போயிருக்கலாம். ஆனா, என்னை பொருத்த வரைக்கும், அவங்க உனக்குள்ள வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க"
"எனக்குள்ளயா?" என்றாள் தாளாத குழப்பத்துடன்.
"உனக்குள்ள துடிச்சிக்கிட்டு இருக்குற இதயம், என் அம்மாவுடையது" என்ற அந்த வார்த்தைகள் இந்துவை அடியோடு அசைத்துப் பார்த்தது. என்ன கூறுகிறான் இவன்?
"எனக்காக மட்டுமே துடிச்சிக்கிட்டிருந்த எங்க அம்மாவோட இதயத்தை, அவங்க உனக்கு கொடுத்திருக்காங்க. எங்க அம்மா தான் எனக்கு எல்லாம்... என்னுடைய கடந்த காலம்... நிகழ்காலம்... வருங்காலம்... எல்லாம்... அவங்க எப்பவுமே சொல்லுவாங்க, அவங்களோட இதயம் எனக்காக மட்டும் தான் துடிக்கும்னு. அப்படி இருக்கும் போது, நான் அதை வேற ஒருத்தருக்காக எப்படி துடிக்க விட முடியும்? அதனால தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், இந்து. ஏன்னா, எங்க அம்மாவோட இதயத்தை வருத்தப்பட வைக்க என்னால முடியாது. அவங்க இதயம் சந்தோஷமா துடிக்கணும்னு... எப்பவும்...! பாரு, இப்போ எவ்வளவு சந்தோஷமா துடிக்குதுன்னு. அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, நீ என்னை உன்னுடைய புருஷனா ஏத்துக்கிட்ட... எல்லா விதத்திலும்... "
இந்து வாயடைத்துப் போனாள். அவளுக்குள் துடிப்பது அவனுடைய அம்மாவின் இதயமா? அவள் தானமாக பெற்றது, அவனுடைய அம்மாவின் இதயத்தைத் தானா? அதற்காகத் தான் அவன் வலுக்கட்டாயமாய் அவளை திருமணம் செய்து கொண்டானா?
"எனக்கு தெரியும், நீ என்கிட்ட ஒரு நாள் வருவேன்னு. எனக்கு தெரியும், எங்க அம்மா உன்னை என்கிட்ட சீக்கிரமே கூட்டிகிட்டு வந்துடுவாங்கன்னு. உன்னோட இதயத்தால என்னை நேசிக்காம இருக்க முடியாது. எங்க அம்மா உன்னை எனக்காக தேர்ந்தெடுத்து இருக்காங்க. அவங்களுக்கு தெரியும் நீ தான் என்னுடைய காயங்களுக்கு மருந்தா இருப்பேன்னு. எங்க அம்மாவை நான் ரொம்ப அளவுக்கு அதிகமா நேசிக்கிறேன்... அதே மாதிரி தான், இப்ப உன்னையும்...."
அர்ஜுன் அவளை காதலிக்கிறேன் என்று கூறியதை கேட்டு, அவள் உச்சி வியர்த்து போனாள். ரம்யா கூறியது சரி தான். அவன் அவளைக் காதலிக்கிறான். ஆனால், யாருமே எதிர்பார்க்க முடியாத ஒரு வித்தியாசமான கோணத்தில்...! அதுவும், அவன் மிகவும் நேசிக்கும் அவனுடைய அம்மாவுக்கு அடுத்ததாக அவன் அவளைக் காதலிக்கிறான். அவளுடைய நெஞ்சில் தலை வைத்து, அவளுடைய இதயத்துடிப்பை கேட்டுக் கொண்டிருக்கும் இந்த மனிதன், சிறிது நேரத்திற்கு முன் அவளிடம் பேசியவன் அல்ல. இவன் யாரும் அறிந்திராத வேறொருவன்... ஒரு தேவதையின் மகன்...! ஆம், அவனை பெற்றவள் ஒரு தேவதையாக தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவளுடைய இதயத்தில் இடம் பெற அவன் இப்படி எல்லாம் போராடி இருக்க மாட்டான். எத்தனையோ திரைப்படங்களில் அவள் அம்மாவின் அன்பை பார்த்திருக்கிறாள். ஆனால் இப்பொழுது அவள் பார்த்துக் கொண்டிருப்பது, ஒரு அம்மாவின் மீது தீராத பாசம் கொண்ட ஒரு மகனைப் பற்றியது. ஆனால், அவன் அவளிடமிருந்து, அவனுடைய அம்மாவின் அன்பை எதிர்பார்க்கிறான். அவளுடைய இதயம் அவனுக்காக கண்ணீர் சிந்தியது.
அர்ஜுனின் நிலையை வார்த்தைகளில் அடக்கிவிட முடியவில்லை. அவன் சேரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டான்... ஆம் அவன் சேர்ந்து தான் விட்டான். அவன் திடுக்கிட்டு கண்ணைத் திறந்தான். அவனுடைய முகபாவம் சட்டென்று மாறியது. அவன் கழுத்தை இடது கரத்தால் வளைத்துக் கொண்டு, அவன் தலையை மெல்ல, அன்பாய் வருடி கொடுத்தாள் இந்து. அவளுடைய அந்த உணர்வு பூர்வமான செய்கை, அவனை இந்த உலகத்தின் ஏகபோக சக்கரவர்த்தியை போல் உணர வைத்தது. அவன் கண்களும் கலங்கியது... அழுது கொண்டே சிரிக்க முடியும் என்பதையும், கண்ணீருக்கு இடையில் புன்னகை மலரும் என்பதையும் அவன் அன்று அறிந்து கொண்டான். கண்களை மூடிக்கொண்டு மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான்.
ஆம், இந்துவின் கைகள், அவனை அணைத்துக்கொள்ள அனிச்சையாய் மேலெழுந்தது, எதைப்பற்றியும் கவலைப்படமால், ஒரே ஒருவனைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டு அவள் கரங்கள் மேலெழுந்தது. அவனைத் தவிர வேறு எதைப் பற்றியும் அவள் யோசிக்கவில்லை. யோசிக்க நினைக்கவில்லை. அவளுடைய எண்ணத்தில் உழன்று கொண்டிருந்ததெல்லாம் அவன் மட்டும் தான்.
இந்துவின் பார்வையில் அனைத்தும் தெள்ளத் தெளிவாய் விளங்கியது. அவனை பற்றியும், அவனுடைய அம்மாவை பற்றியும், வேலன் கூற, ஏற்கனவே அவள் கேட்டிருந்தாள். வேறு ஒரு நாட்டில், கட்டாயப்படுத்தி தனியாக விடப்பட்டிருக்கிறான்... அவள் அவனுடைய அம்மாவின் இதயத்தைக் கொண்டிருக்கும் ஒரே காரணத்திற்காக, பாண்டிச்சேரிக்கு வந்து அவளை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறான் என்றால், அவன் தன் அம்மாவின் மீது கொண்டுள்ள பாசம் தான் எவ்வளவு மகத்தானது... திருமணத்திற்கு முன், தன்னுடைய நிலையை அவளிடம் விளக்கிச் சொல்ல, அவனுக்கு நேரம் இருந்திருக்காது. அதனால் தான் அப்படி, கட்டாயப்படுத்தி அவளை திருமணம் செய்து கொண்டிருக்கிறான்.
இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த இந்து, அவன் உறங்கி விட்டதை உணர்ந்தாள். அவள் நெஞ்சின் மீதே அப்படியே உறங்கிவிட்டான். அவன் உண்மையிலேயே உறங்கி தான் விட்டானா? ஆம், மிக நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான். பல வருடங்கள் கழித்து, நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறான். அவன் வாழ்வின் உன்னதமான உறக்கம். வாழ்க்கையில் அனைத்தையும் சாதித்துவிட்டவனை போன்ற சந்தோஷமான உறக்கம்...!
இந்துவால் அதை நம்பவே முடியவில்லை. அவன், அவளுடன் தூங்குவதை தவிர வேறு எதுவும் செய்யப் போவதில்லையா? அவன் அவளிடம் கேட்டது இதை தானா? அவனுடைய அம்மாவின் இதயத் துடிப்பை கேட்க வேண்டும் என்பது மட்டும் தானா? அவன் என்னுடன் தூங்கு என்று கேட்டது, வெறும் தூங்க மட்டும் தானா? வேறு எதுவுமே இல்லையா?
பார், எவ்வளவு நிம்மதியாய் உறங்குகிறான்...! இவன் தன்னுடைய சுய ரூபத்தையும், உணர்வுகளையும் உள்ளுக்குள் ஒளித்து வைத்து கொண்டு, யாரையும் அதை பார்க்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறான். அவன் தன்னை யார் என்று வெளியில் காட்டிக் கொண்டிருக்கும் அர்ஜுன், உண்மையில் அவனே அல்ல. உடல் தேவையைவிட, உணர்வுகளை மதிக்கும் மகத்தானவன் இவன். இப்படிப்பட்ட ஒருவன், அவளுக்கு கணவனாக வாய்க்க, அவள் எவ்வளவோ புண்ணியம் செய்தாளோ... யாருமற்ற தனக்கு, எல்லாம் கிடைத்து விட்டதைப் போல் உணர்ந்தாள் அவள். ஏனென்றே தெரியவில்லை, அவளுடைய கண்கள் கலங்கின. அவனை மெல்ல உச்சி முகர்ந்தாள்.
அப்பொழுது, அங்கு வைக்கப்பட்டிருந்த வீட்டுப் பத்திரத்தின் மீது அவளது பார்வை விழுந்தது. வித்யாவும் வீணாவும் அவளுக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் காத்திருக்கட்டும். இப்பொழுது அர்ஜுனை தவிர வேறு எதுவும் முக்கியமல்ல. அவனுடைய ஆழ்ந்த உறக்கத்தை கலைக்க அவள் விரும்பவில்லை. அவன் உறக்கத்திலும், அவளை இறுக்கமாய் பற்றி இருந்தான். அவளை அவ்வளவு சுலபத்தில் அவன் விட்டு விடுவான் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவளுக்கும் கூட, அவன் விட்டுவிட வேண்டாம் என்று தான் தோன்றியது. அவனை தன் கரங்களால் சுற்றி வளைத்து, தன் விரல்களை கோர்த்துக் கொண்டாள். விரைவிலேயே அவளும் உறங்கி போனாள்...வர இருப்பது என்னவென்று அறியாமல்...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top