Last part
இறுதி பாகம்
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு,
அபிமன்யு, அம்மா பிள்ளை தான் என்றாலும், முழுக்க முழுக்க அப்பா பிள்ளையாகவும் இருந்தான். அவன் இந்துவுக்கு எதிராக அர்ஜுனுடன் சேர்ந்துகொள்ளவும் தவறவில்லை... இந்துவுடன் சேர்ந்து அர்ஜுனை கிண்டல், கேலி செய்யவும் தவறவில்லை.
பள்ளியில் இருந்து வீடு திரும்பினான் அபிமன்யு.
"மாம்... டாட் எங்க?" என்று கூச்சலிட்டபடி ஓடி வந்தான்.
"மணி நாலரை தான் ஆகுது. அவர் அஞ்சு மணிக்கு மேல தான் வருவாரு. போய் முகம், கை, கால் கழுவிட்டு வா..." என்று கூறியபடி சங்கரிடம் தேனீர் குவளையை நீட்டினாள் இந்து.
"என்ன விஷயம், அபி? வரும் போதே உங்க அப்பாவை தேடிக்கிட்டு வர...?" என்றார் சங்கர்
"நான் அதை டாட் கிட்ட தான் சொல்லுவேன்" என்று தன் அறையை நோக்கி ஓடினான்.
"இவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஓவராத் தான் போறாங்க" என்றாள் இந்து.
"அதுக்காக நீ சந்தோஷம் தான் படணும்... அபி மட்டும் உன்கிட்ட க்ளோசா இருந்திருந்தா, உன்னோட பொறாமைக்கார புருஷன், உன்னை பாடா படுத்தி இருப்பான்" என்று அவர் சிரிக்க, இந்துவும் சிரித்தாள்.
"அபி அவர்கிட்ட தான் க்ளோசா இருக்கான். அப்படி இருந்தும், சில நேரம் அவர் பொறாமைப்பட தான் செய்றார்..."
"அது தான் அர்ஜுன்" என்று சிரித்தார். சங்கர்.
அதே நேரம் பரபரப்பாய் உள்ளே நுழைந்தான் அர்ஜுன். சங்கரும் இந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"அபி வந்துட்டானா?" என்றான் அர்ஜுன்
"இப்ப தான் வந்தான்"
"அபிஇஇஇ.... " என்று அவன் உரத்த குரலில் அழைத்தான்.
"என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?" என்றார் சங்கர்.
"இன்னைக்கு காலிகிராஃபி காம்ப்படிஷன் ரிசல்ட் வரப் போகுதுன்னு அபி சொல்லியிருந்தான்..."
அதே நேரம், அர்ஜுனனை நோக்கி ஓடிவந்தான் அபிமன்யு.
"டாட்ட்ட்.... நான் காலிகிராஃப்ல ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வின் பண்ணிட்டேன்..." என்று சந்தோசமாய் கத்தியபடி, அர்ஜுனின் மீது தாவினான்.
அவனை சந்தோஷமாய் ஒரு சுற்று சுற்றி விட்டு கீழே விட்டான் அர்ஜுன்.
"கங்க்ராஜுலேஷன்ஸ்" என்று அவனை வாழ்த்தினான் அர்ஜுன்.
தான் பெற்ற சான்றிதழை அர்ஜுனிடம் நீட்டினான் அபிமன்யு.
"வெல்டன் மை பாய்..."
இருவரும் தங்கள் கை முஷ்டியை மடக்கி இடித்துக் கொண்டார்கள். தான் வாங்கி வந்த இரண்டு பெரிய சாக்லெட்டுகளை அவனிடம் நீட்டினான் அர்ஜுன்.
"தேங்க்ஸ் டாட்..." என்று அதை பெற்றுக்கொண்டான் அபி.
அப்பொழுது தான் அவர்கள், இந்து தன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவர்களை பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தார்கள். தன் புருவத்தை உயர்த்தி அபியை பார்த்தான் அர்ஜுன்.
"என்ன ஆச்சு, மாம்? உங்களுக்கு சந்தோஷமா இல்லயா?"
"இதை இப்ப தான் உனக்கு கேக்கணும்னு தோணுச்சா...? நீ ஸ்கூல்ல இருந்து வந்து எவ்வளவு நேரம் ஆச்சு...? எங்கிட்ட இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாம, உங்க அப்பா வர்ற வரைக்கும் காத்திருந்து சொல்லணும்னு தானே உனக்கு தோணியிருக்கு...? என்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல...?"
அவள் கூறுவது நிஜமா என்பது போல், தன் கண்களால் அபியிடம் கேட்டான் அர்ஜுன். ஆமாம் என்று பாவமாய் தலையசைத்தான் அபி.
"நான் இவ்வளவு தூரம் சொல்லிக்கிட்டு இருக்கேன், நான் உண்மையைத் தான் சொல்றேனான்னு உங்க பையன்கிட்ட கேக்குறீங்களா?"
"இல்ல... என்னால நம்பவே முடியல அதான்..." என்று சமாளித்தான் அர்ஜுன்.
"அப்படியா? உங்களால நம்ப முடியலயா? சரி, அப்படின்னா உங்க சீமந்த புத்திரனையே கேட்டு தெரிஞ்சுக்கோங்க..."
அபியின் பக்கம் திரும்பி,
"சொல்லுடா... உங்க அப்பா நீ சொன்னா தான் நம்புவாராம்..." என்று கூறி விட்டு தன் அறையை நோக்கி சென்றாள்.
அர்ஜுனும், அபியும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, களுக்கென்று சிரித்தார் சங்கர்.
"இன்னிக்கு ராத்திரி, நீங்க ரெண்டு பேரும் பட்டினி தான்னு நினைக்கிறேன்" என்று சிரித்தார்.
"நீ ஏன் வந்த உடனே அம்மாகிட்ட சொல்லல?"
"நான் காம்ப்படிஷன்ல வின் பண்ணதை, உங்ககிட்ட நானே சொல்லணும்னு நெனச்சேன். அம்மாகிட்ட சொல்லிட்டா, நான் உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி, அவங்களே உங்ககிட்ட சொல்லியிருப்பாங்க..."
அபி கூறுவது தவறல்ல. அதீத மகிழ்ச்சியில் அப்படித் தான் செய்திருப்பாள் இந்து. அர்ஜுன் வீட்டினுள் நுழையும் பொழுதே கத்தி கூப்பாடு போட்டிருப்பாள்...
"நேரத்தை வீணாக்காம, ராத்திரி சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்யுங்க" என்றார் சங்கர்.
அர்ஜுன் தன் அறையை நோக்கி விரைந்து செல்ல, அவனை பின்தொடர்ந்து சென்றான் அபி. கட்டிலில் அமர்ந்தபடி தனக்குத் தானே எதையோ பிதற்றிக் கொண்டிருந்தாள் இந்து. மென்று விழுங்கியபடி மெல்ல உள்ளே நுழைந்தான் அபி.
"சாருக்கு ஏதாவது வேணுமா? ஏன்னா, உனக்கு ஏதாவது வேணும்னா தானே என் ஞாபகம் வரும்...? ஆனா, இன்னைலயிருந்து, உனக்கு தேவையானதை எல்லாம் உங்க அப்பாகிட்ட கேளு. அவரே உனக்கு எல்லாத்தையும் செய்வாரு" என்றாள் எங்கோ பார்த்தபடி.
"மாம்... டாட் தான் எனக்கு எப்படி அழகா எழுதணும்னு சொல்லிக் கொடுத்தாரு. அவரால தான் நான் என்னோட ரைட்டிங் ஸ்டைலை மாத்த முடிஞ்சது. நீங்க தானே எனக்கு சொல்லிக் கொடுத்தீங்க, நம்ம யாரு செஞ்ச உதவியையும் மறக்கக் கூடாதுன்னு... அதனால தான், அவர்கிட்ட முதல்ல சொல்லணும்னு நினைச்சேன். உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு இல்ல, மாம்" என்றான் பெரிய மனிதனைப் போல.
"பாரு, நீ சொல்லிக் கொடுத்ததை தான் அவன் ஃபாலோ பண்ணி இருக்கான். அவன் எவ்வளவு தேங்க்ஃபுல்ன்னு காட்ட நெனச்சி இருக்கான். அப்படித் தானே அபி?"
ஆமாம் என்று தலையசைத்தான் அபி.
"நீ ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது அபி. நானும் அம்மாவும் வேற இல்ல. நாங்க உன் மேல காட்டுற அக்கறை, எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கும். அதுல எந்த வித்தியாசமும் இல்ல" என்றான் இந்துவின் தோளை சுற்றிவளைத்த படி.
சரி என்று தலை அசைத்தான் அபி.
"இன்னைக்கு இராத்திரி வெளியில சாப்பிடலாமா?" என்றான் அர்ஜுன்.
"சூப்பர்" என்று குதித்த அபி, நிறுத்திவிட்டு,
"மாம் டல்லா இருக்காங்களே..." என்றான்
"நீ எதுவும் சொல்ல மாட்டியா?" என்றான் அர்ஜுன் இந்துவிடம்.
"மாம், ப்ளீஸ் சிரிங்க..." என்றான் அபி கெஞ்சலாக.
லேசாய் புன்னகைத்தாள் இந்து.
"டாட்... மாம் என்னை மன்னிச்சிட்டாங்க" என்றான் சந்தோஷமாக
"போய் தாத்தாவை ரெடியாக சொல்லு" என்றான் அர்ஜுன்
"தேங்க்யூ, மாம்..." என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடினான் அபி.
"நீ அவன் மேல உண்மையிலேயே அப்செட்டா இருக்கியா?"
"ஏன் இப்படி கேக்குறீங்க? இப்ப எல்லாம் நீங்க என்னை ரொம்ப தான் சந்தேகப்படுறீங்க... எனக்கு ஹார்ட் ப்ளான்டேஷன் பண்ணி இருக்கிறதால இன்னொரு குழந்தை வேண்டாம்னு சொல்லிட்டீங்க... ஆனா, அபி என்னடான்னா என்னை கண்டுக்கவே மாட்டேங்கறான்... அவன் எப்பவும் உங்க சைடு தான்..."
"ஆனா, நான் உன் சைடு தானே? அது உனக்கு தெரியாதா?"
"ஆமாம்..." என்றாள் அலுப்புடன்
"ஏன்...?"
"நீங்க என் சைடு தான்... அவன் கூட சேர்ந்து எல்லாத்தையும் செஞ்சதுக்கப்புறம்..."
தன் கண்களை சுழற்றினான் அர்ஜுன்.
"ஒரு விஷயத்தை மறக்காதீங்க... என்னை விட வேற யாரும் உங்களை அதிகமாக நேசிக்க முடியாது..."
அதைக் கேட்டவுடன் புன்னகைத்தான் அர்ஜுன். இப்பொழுதெல்லாம், அவனுக்காக அவனிடம் இந்து சண்டையிடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கிறது. அனைத்தையும் விட அது தான் அவனை சந்தோஷமாக வைக்கிறது.
"உங்க பையன், பொண்டாட்டி வந்தவுடனே உங்களை விட்டுட்டு அவ கூட போயிடுவான். அப்போ உங்க கூட நான் தான் இருப்பேன்... பைத்தியக்காரத்தனமாக உங்களை காதலிச்சுகிட்டு..."
"எனக்கு தெரியாதா? இதெல்லாம் நீ எனக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்ல. நீ என்னை எவ்வளவு ஆழமா காதலிக்கிறேன்னு எனக்கு நல்லா தெரியும். அபி சின்ன பையன். அவன் எதையும் யோசிக்கிறதில்ல... ஆர்வத்தில் செய்யறது தான். அதுக்காக அவன்கிட்ட அப்ஸட் ஆகாத"
"அவன் செய்யறத எல்லாம் நான் பெரிசா எடுத்துக்குறதில்ல. நீங்க ஏதாவது செய்யப் போக, அது தான் என்னை பெருசா பாதிக்கும்... எல்லாத்தையும் விட நீங்க தான் எனக்கு முக்கியம்"
அவளை தன்னிடம் இழுத்து அன்பாய் அணைத்துக் கொண்டான்.
"எனக்கு தெரியும்... நீ இப்படி எனக்காக பேசும்போதெல்லாம் நான் ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்றேன். நீ என் மேல வச்சிருக்கிற அன்பு, நாளுக்கு நாள் அதிகமாகுற மாதிரி எனக்கு ஒரு உணர்வு ஏற்படுது"
"அப்படியா?"
"ஆமாம் ... அந்த விஷயத்துல நான் ரொம்ப லக்கி. பெத்த பிள்ளையை விட என்னை அதிகமாய் நேசிக்கிற மனைவி எனக்கு கிடைச்சிருக்கா..." என்று அவளை உச்சி முகர்ந்தான்.
புன்னகையுடன் அவன் நெஞ்சில் சாய்ந்தாள் இந்து. இதை அர்ஜுனுக்கு புரிய வைக்க தான் அவள் எவ்வளவு செய்ய வேண்டியிருக்கிறது... ஆரம்பத்தில் அபி அர்ஜுனை விட அவளிடம் நெருக்கம் காட்டிய பொழுது, அர்ஜுனை சமாளிக்க தடுமாறி போனாள் இந்து. தான் தனியாய் விடப்பட்டது போல் உணர்ந்தான் அர்ஜுன். அதனால், வேண்டுமென்றே சிறு சிறு சண்டைகளையும், அதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்க துவங்கினாள் இந்து. அபிக்கு தன்னைவிட அர்ஜுன் தான் முக்கியம் என்பதை அவனை நம்ப வைத்தாள். அர்ஜுன் எப்பொழுதெல்லாம் அபிக்கு துணையாய் நிற்கிறானோ, அப்பொழுதெல்லாம் நிம்மதியாய் இருந்தது அவளுக்கு. இப்படித் தான் தனது வண்டியை சமூகமாய் ஓட்டிக் கொண்டிருக்கிறாள் இந்து... மகனிடம் சண்டை பிடித்துக்கொண்டும்... கணவனை உயர்வாய் எண்ண வைத்துக்கொண்டும்... அர்ஜுனும் அதற்கெல்லாம் தகுதியானவன் தானே...?
முற்றும்
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top