9 அர்ஜுனின் செயல்

9 அர்ஜுனின் செயல்

கோவிலின் முன் காரை கொண்டு வந்து நிறுத்தினான் அர்ஜுன். அவனுக்காக காத்திராமல் காரை விட்டு கீழே இறங்கி கோவிலுக்குள் சென்றாள் இந்து. அவள் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிய பிறகு, ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை அர்ஜுன். அது அவன் உயிரை நடுங்கச் செய்த நொடிகள்.

அவள் கூறிய வார்த்தைகள் அவனை வாட்டி வதைத்தது. அவன் அவ்வளவு மோசமானவனா...? ஒரு பெண், அவனை கணவனாக ஏற்றுக் கொள்வதற்கு பதில், சாவதே மேல் என்று நினைக்கும் அளவிற்கு அவ்வளவு கொடூரமானவனா? ஒரு வேளை அவள் கூறியதை போல அவள் ஏதாவது செய்துவிட்டால்? அவனுக்கு மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. அவனால் இந்துவை இழக்க முடியாது... இழக்கவும் கூடாது...

தனது கைப்பேசியை எடுத்து, கிரிக்கு ஃபோன் செய்தான். கிரி, அவனுடைய அழைப்பை உடனே ஏற்றான்.

"சொல்லு, அர்ஜுன்..."

"இந்துவை கவனிச்சுக்க எனக்கு ஒரு பொண்ணு வேலைக்கு வேணும்..."

"இந்துவை கவனிச்சுக்கவா?"

"ஆமாம்... அந்த பொண்ணு, இந்துகிட்ட ஃபிரண்டு மாதிரி பழகணும், அவளுக்கு வேண்டியதை கவனிக்கணும்... இருபத்திநாலு மணி நேரமும் அவ கூடவே இருக்கணும்... புரிஞ்சிதா?"

"சரி"

"இந்து கூட இருந்தாலும், அவள் எனக்கு உண்மையா இருக்கணும். இந்துவை பத்தி எல்லா விஷயத்தையும் எனக்கு அப்பப்போ அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். அவளோட மனநிலை மாற்றத்தை கவனிக்கணும். ஆனா,
இந்துவுக்கு அது தெரியக்கூடாது"

அர்ஜுனுக்கு என்ன தேவை என்று புரிந்து கொண்டான் கிரி.

"ஓகே, அர்ஜுன்"

அவர்கள் அழப்பை துண்டித்துக் கொண்டார்கள். கிரி, அவனுடைய பள்ளி தோழிக்கு அழைப்பு விடுத்தான்.

"ஹாய், கிரி"

"ஹாய், ரம்யா"

"லண்டன் எப்படி இருக்கு?"

"யாருக்கு தெரியும்?"

"அப்போ நீ லண்டன்ல இல்லயா?"

"இல்ல, நான் இந்தியாவில் தான் இருக்கேன்"

"எப்போ இந்தியா வந்த? அர்ஜுன் எப்படி உன்னை இந்தியாவுக்கு வர விட்டாரு?"

"அவன் என்னை அனுப்பி வைக்கல, கூட கூட்டிட்டு வந்துட்டான்"

"அர்ஜுனும் இங்க தான் இருக்காரா? ஆனா எப்படி? அவர் இந்தியாவுக்கு வரவே மாட்டார்னு சொன்னியே... அவங்க அம்மாகிட்டயிருந்து, அவருக்கு லெட்டர் வரல போல இருக்கு?"

"போன மாசம் அவங்க அம்மா இறந்துட்டாங்க"

"நிஜமாவா...? சாரிப்பா தெரியாம சொல்லிட்டேன்" என்றாள் வருத்ததுடன்.

"பரவாயில்ல விடு. நீ ஒரு வேலையில சேந்தா நல்லாயிருக்கும்னு நான் நினைக்கிறேன்"

"ஆனா, நான் ஏற்கனவே ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியில வேலை செஞ்சுக்கிட்டு தானே இருக்கேன்...?"

"அந்த வேலையை ரிசைன் பண்ணிடு. இல்லன்னா, லாங் லீவு எடுத்துக்கோ. இப்போ நான் உனக்கு குடுக்க போற வேலை, உனக்கு லைஃப்ல செட்டில் ஆக உதவியாக இருக்கும்"

"நிஜமாவா? என்ன வேலை? எனக்கு அதைப் பத்தி சொல்லு" என்றாள் ஆவலாக.

"நீ, அர்ஜுன் ஒய்ஃப் கூட இருக்கணும்"

"என்னது அர்ஜுன் ஒய்ஃபா? அர்ஜுனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

அர்ஜுனுடைய முழு கதையையும் கூறி முடித்தான் கிரி. ஏனென்றால், இந்துவுடன் இருக்க போகும் ரம்யா, அதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நினைத்தான் கிரி.

"சரி, நான் அவங்களை பாத்துக்குறேன்"

"ஒரு விஷயத்தை நீ நல்லா ஞாபகம் வெச்சுக்கணும். அர்ஜுன் தவறுகளை மன்னிக்கவே மாட்டான். அவனுக்கு நேர்மை ரொம்ப முக்கியம். அதனால தான், இந்த வேலையில நீ சேரணும்னு நான் ஆசைப்படறேன். அர்ஜுன் விஷயத்துல, நான் வேற யாரையும் நம்ப தயாரா இல்ல"

"உன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமா இருக்கறதுக்காக, நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்."

"உன் வேலைக்கு தேவைப்படுற எதை வேணாலும் நீ கேட்கலாம்... எதை வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம்..."

"சரி... நான் எப்போ வேலையில சேரணும்?"

"இன்னும் அரை மணி நேரத்துல"

அதைக் கேட்டு அதிர்ச்சியானாள் ரம்யா.

"என்னது....இன்னும்... அரை மணி நேரத்துலயா...?"

"ஆமாம்... சீதாராணி இல்லம் வந்துடு"

"எனக்கு மூச்சு விடவாவது கொஞ்சம் டைம் கொடுப்பா..."

"அதை நீ, சீதாராணி இல்லத்தில் வந்து செஞ்சுக்கலாம்"

அவள் பதிலை கேட்காமல் அழைப்பை துண்டித்தான் கிரி. தனது கைப்பேசியை பார்த்து பெருமூச்சுவிட்டாள் ரம்யா. கிரியின் அவசரம், அவளுக்கு அந்த வேலையின் முக்கியத்துவத்தை விளக்கியது.

இதற்கிடையில்...

இந்து கோவிலுக்குள் சென்றாள். எப்படியாவது வித்யாவிற்கு ஃபோன் செய்து, அவளுடைய நிலையை விளக்கியாக வேண்டும். அங்கு ஒருவர், யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரை நோக்கி ஓடினாள் இந்து.

"அண்ணா, எனக்கு கொஞ்சம் உங்க ஃபோனை கொடுக்கறீங்களா? ரொம்ப அர்ஜென்ட் அண்ணா, ப்ளீஸ்"

அவர் அவளுடைய பதட்டத்தை பார்த்து ஃபோனை அவளுக்கு கொடுத்தார். மகிழ்ச்சியுடன் அந்த ஃபோனை வாங்கி, அவளுடைய அப்பா வீட்டின் லேண்ட் லைன் நம்பருக்கு ஃபோன் செய்தாள். அதை வித்யாவே எடுத்து பேசினாள்.

"ஹலோ..."

"அம்மா..."

அவள் குரலைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தாள் வித்யா.

"இந்து, நீ எங்க இருக்க? அவன் உன்னை எங்க கூட்டிட்டு போனான்?"

"எனக்கு தெரியலம்மா. அவங்க வீடு எங்க இருக்குன்னு எனக்கு தெரியல. எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா. என்னை எப்படியாவது காப்பாத்துங்க"

"அவன் உன்னை என்ன செஞ்சான்? அவன் உன்னை ரேப் பண்ணிட்டானா?"

ஒரு நிமிடம் அசந்து நின்றாள் இந்து... ரேப்பா? முதலிரவு அன்று, அவன் அவளுடைய முந்தானையை எடுத்து அவள் மீது வீசியதையும், அவன் பேசியதையும் அவள் நினைத்து பார்த்தாள்.

"உன்னை பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? இதுக்காக தான் பாண்டிச்சேரி வந்தேன்னு நினைச்சியா? அப்படி இருந்திருந்தா, நான் அதை அங்கேயே முடிச்சிருப்பேன். என்னுடைய கட்டிலுக்கு பெண்களை கொண்டுவர நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியமில்ல. பணத்தை தூக்கி எறிஞ்சா, எத்தனை பொண்ணுங்க வேணும்னாலும் வருவாங்க. நீயே உன்னை தரம் தாழ்த்திக்காத"

"இல்லம்மா... அவன் அப்படி எதுவும் செய்யல"

"நீ இருக்கிற இடத்தோட அட்ரஸ் தெரியாம, நான் உன்னை காப்பாத்த முடியாது. ஏதாவது க்ளூ கொடுக்க பாரு. நான் எப்பாடு பட்டாவது உன்னை காப்பாத்துவேன்"

"நான் சென்னையில இருக்கேன். அதை தவிர, வேற எதுவும் எனக்கு தெரியல."

"நீ எப்படியாவது அவனோட வீட்டு அட்ரச்சை மட்டும் கண்டுபிடிச்சு சொல்லு. நான் நிச்சயம் சென்னைக்கு வறேன். அதுவரைக்கும், அவனை உன்கிட்ட நெருங்க விடாத. அவன் பொம்பளைங்கள விக்கிறவன்னு நினைக்கிறேன்"

"என்ன சொல்றீங்க மா?" என்றாள் அதிர்ச்சியாக.

"அப்புறம் எதுக்காக அவன் எனக்கு இரண்டு லட்சம் கொடுத்தான்? அவனோட தொழில், இதுவா தான் இருக்கணும். நீ ஜாக்கிரதையா இரு. அவனை, உன்னை தொடவிடாதே, அதை மட்டும் மறக்காம ஞாபகத்துல வச்சிக்கோ. அவன் உன்னை தொட்டுட்டா, நம்ம வீட்டு பத்திரத்துல கையெழுத்து போடமாட்டான்"

"எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா"

"நான் உன்னை எப்படியும் தேடி கண்டுபிடிச்சிடுவேன். நீ பயப்படாம இரு."

"சரிமா, நான் ஃபோனை கட் பண்றேன். அவன் வந்துட்டா நான் மாட்டிக்குவேன்"

அழைப்பை துண்டித்துவிட்டு, ஃபோனை அந்த மனிதனிடம் திருப்பிக் கொடுத்தாள்.

.......

தன்னை விழுங்கும்படி பார்த்துக் கொண்டிருந்த வீணாவை பார்த்து சிரித்தாள் வித்யா.

"எதுக்குடி என்னை அப்படி பாக்குற?"

"நீ சொன்னதுக்கு, இந்து ஒத்துகிட்டாளா?"

"ஆமாம்... ஏன்?"

"அவனோட பணத்தையும், வசதியையும் பார்த்ததுக்கு அப்புறம் கூடவா அவ அதுக்கு ஒத்துக்கிட்டா?"

"அவ இந்துமதி... சந்திரனுடைய பொண்ணு. அதை மறந்துடாதே"

"ஆனா, நீ என்னைக்குமே அவளை ஒழுங்கா நடத்தினதே கிடையாதே... அப்படி இருந்துமா அவ உன்னை நம்புறா?"

"அது உங்கப்பா சந்திரனுடைய வளர்ப்பு. நான் அவளுக்கு ஆபரேஷன் பண்ணி வச்சேங்குற ஒரே ஒரு காரணத்திற்காக, அவ எனக்கு நன்றியோட தான் இருப்பா. ஏன்னா, அவ நல்லதை மட்டும் தான் நினைப்பா. மத்தவங்ககிட்ட இருக்கிற குறையை பெரிசு பண்ணமாட்டா. உங்க அப்பா, அதை அவளுக்கு சொல்லிக் கொடுத்ததை, நானே நிறைய தடவை கேட்டிருக்கேன்."

"அவ புருஷனை நம்ம குறைசி எடை போட முடியாது. ஆனா, அவன் ஏன் அவ்வளவு பணம் செலவழிச்சி, அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்?"

"எனக்கும் ஒண்ணுமே புரியல. அவன்கிட்ட இருக்கிற நல்ல விஷயங்களை இந்து பாக்குறதுக்கு முன்னாடி, நம்ம சென்னைக்கு போயாகணும்."

"அவ்வளவு பெரிய சென்னையில, அவங்க வீட்டை, நம்ம எப்படி தேடி கண்டு பிடிக்கிறது?"

"எனக்காக, அதை இந்து செய்வா... சீக்கிரமே"

"ஒரு வேளை, அவன் அவளைக் மயக்கிட்டானா, என்ன செய்யிறது?"

"அப்படியெல்லாம் இந்துவை மயக்கிட முடியாது. முன்ன பின்ன தெரியாதவங்களை நம்ப கூடாதுங்குறது, அவங்க அப்பா அவளுக்கு கொடுத்த அறிவுரை. அவளுடைய நம்பிக்கையை சம்பாதிக்கிறது அவ்வளவு சுலபமில்ல,"

"நீ அவளை, குறைச்சி எடை போடுறேன்னு நினைக்கிறேன். நீ அவ புருஷனை பாக்கலயா? அவன் பாக்க ராஜா மாதிரி இருக்கான். அவ சீக்கிரமே, அவனோட வலைல விழ போறா... பாத்துக்கிட்டே இரு"

"அழகா இருந்தா மட்டும் அவ விழுந்திட மாட்டா. நான் எதுக்கு பயப்படுறேன்னா, அவன் அவகிட்ட, அன்பையும், பாசத்தையும் காட்டிடக் கூடாது... அது நிச்சயம் அவளை அசைச்சி பாக்கும்"

"அவனைப் பார்த்தா அன்பு காட்டுறவன் மாதிரி தெரியல. அடக்கி ஆள்றவன் மாதிரி தான் தெரியுது. அவன் எப்படி அவளை கல்யாணம் பண்ணிகிட்டான்னு தான் நம்ம பார்த்தோமே..."

"அப்போ, நம்ம பயப்பட வேண்டிய அவசியமே இல்ல" என்றாள் நிம்மதி பெருமூச்சுடன் வித்யா.

இதற்கிடையில் கோவிலில்...

வேப்பமரத்தின் அடியில் இருந்த, புற்றிற்கு எதிரே நின்று, சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள் இந்து. வெயில் காலம் என்பதால், கருங்கல் தரை கொதித்தது. அந்த வெப்பத்தை பொறுக்கமாட்டாமல் ஒரு காலை மாற்றி, ஒரு காலில் நின்று, அவள் சாமி கும்பிட்டாள். அவளைத் தேடிக்கொண்டு உள்ளே வந்த அர்ஜுன், அந்தக் காட்சியைக் கண்டு பதட்டம் அடைந்தான். எதைப்பற்றியும் யோசிக்காமல், அவளை நோக்கி ஓடிச் சென்று, அவளைத் தன் கையில் தூக்கிக் கொண்டான். திடுக்கிட்டு கண்விழித்தாள் இந்து.

"என்ன தூஷ்ட வேலை இது? என்னைக் கீழே விடுங்க"

"தரை, நெருப்பு மாதிரி கொதிக்குது. உன்னோட புருஷன் கையிலிருந்து கும்பிட்டா, உன்னோட கடவுள் ஒன்னும் கோவிச்சுக்க மாட்டாங்க."

அவர்களை சுற்றி இருந்த மக்கள், அவர்களை வேடிக்கை பார்த்தது, அவளுக்கு என்னவோ போலிருந்தது.

"இது கோவில்...உங்க வீடில்ல..."

"ஆனா, நீ என்னோட வைஃப். நீ கஷ்டபடுறதை என்னால பாக்க முடியாது"

அவன் அப்படி கூறியவுடன் விக்கித்துப் போனாள் இந்து. அந்த வாசகத்தை, அவள் அப்பா கூறி, அவள் கேட்டிருக்கிறாள். அடிக்கடி சந்திரன் அதை கூறுவதுண்டு. அந்த வாக்கியத்தை உண்மையாக்கும் வகையில் தான், அவருடைய சொத்தை, இந்துவின் பெயரில் அவர் எழுதி வைத்தார், தனக்கு பின்னால் அவள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக. அவள் அப்பா கூறியதை, அர்ஜுனிடமிருந்து கேட்டதை, அவளால் நம்ப முடியவில்லை.

"நீ சாமி கும்பிடு" என்று, அவளை கையில் தூக்கிக்கொண்டு நின்றவனை பார்த்து, என்ன கூறுவது என்று அவளுக்கு புரியவில்லை.

"நான் முடிச்சிட்டேன். என்னை கீழே விடுங்க"

"நிஜமா தான் சொல்றியா?"

"ஆமாம்"

அவள் கூறியவுடன், அங்கிருந்து அவளை தூக்கிக் கொண்டு காரை நோக்கி நடக்கத் துவங்கினான் அர்ஜுன். அனைவரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது, இந்துவை சங்கடத்திற்கு ஆளாக்கியது. ஆனால் அர்ஜுன், எதை பற்றியும் கவலை பட்டவனாக தெரியவில்லை.

"அவர் பொண்டாட்டிக்கு கால் சுட்டுடுச்சின்னு தூக்கிகிட்டு போறாரு... பொண்டாடி மேல எவ்வளவு அக்கறை பாரு..." என்று யாரோ ஒரு பெண்மணி கூறுவது அவள் காதில் விழுந்தது.

இவன் எப்படிப்பட்ட மனிதன்? உண்மையிலேயே அவள் மீது இருக்கும் அக்கறையில் தான் அவன் இதையெல்லாம் செய்கிறானா? அல்லது, அவனுடைய உரிமையை நிலை நிறுத்த இப்படி நடந்து கொள்கிறானா?

அவளை காரில் அமர வைத்துவிட்டு, காரை ஸ்டார்ட் செய்தான் அர்ஜுன். அர்ஜுன் அவளை ஒரு தடவை கூட திரும்பிப் பார்க்கவே இல்லை. *நான் தற்கொலை செய்து கொள்வேன்* என்று அவள் கூறியது, அவனை மிகவும் வேதனைப் படுத்தியிருந்தது. ஆனால், இந்து அவனை பார்க்கவில்லை என்று நம்மால் கூற முடியாது. அவன் அவளை தூக்கி வந்த விதம், அவளுக்கு வயிற்றைக் கலக்கியது.

"நீ கஷ்டப்படுவதை என்னால பாக்க முடியாது" என்ற அவனது வார்த்தைகள், அவள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அவளுடைய உதடுகள், *அப்பா* என்று மென்மையாய் அழைத்தது.

சீதாராணி இல்லம்

அவர்கள் கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்த பொழுது, அங்கு ரம்யாவும், கிரியும் இருந்தார்கள். அர்ஜுன் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்து விட்டு, ஏதும் கேட்கும் முன்,

"அர்ஜுன், இந்த பொண்ணுக்கு யாருமே இல்லயாம். ஏதாவது வேலை இருந்தா கிடைக்குமான்னு கேக்குறா. அதனால தான் இங்க கூட்டிகிட்டு வந்தேன்"

"எந்த பெண்ணும் வேலைக்கு வேணாம். அவளை திருப்பி அனுப்பு" என்றான் அர்ஜுன்.

"நீ வீட்ல இல்லாதப்போ, அவ இந்துவுக்கு ஹெல்பா இருப்பா இல்லயா?"

எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்த இந்துவை அவன் பார்த்தான்.

*இந்த பெண்ணுடைய நட்பு, தனக்கு கிடைத்துவிட்டால், இந்த வீட்டின் முகவரியை பெற்று, வித்யாவை இங்கு வரவழைத்துவிடலாம்* என்று திட்டமிட்டாள் இந்து.

"அவளுக்கு யாரும் தேவைன்னு எனக்கு தோணல" என்றான் அர்ஜுன், இந்துவை பார்த்தபடி.

"எதுக்கும் அவங்ககிட்ட ஒரு தடவை கேளேன்" என்றான் கிரி.

"இந்த பொண்ணை உன்னோட உதவிக்கு வச்சிக்கிறாயா?" என்றான் அர்ஜுன்.

சரி என்று தலையசைத்தாள் இந்து.

"உன் இஷ்டம்..." என்று கூறிவிட்டு, அவனுக்கு எந்த சம்பந்தமும் இல்லாததை போல், உள்ளே சென்றான் அர்ஜுன்.

"இங்க பாரு பொண்ணு, இது ரொம்ப மரியாதையான வீடு. இவங்க மிஸஸ் அர்ஜுன். அவங்களால தான் உனக்கு இந்த வேலை கிடைச்சிருக்கு. அவங்களுக்கு நீ உண்மையா இருக்கணும்... மரியாதையா நடந்துக்கணும்... சரியா?" என்றான் கிரி.

"சரிங்க சார்" என்றாள் ரம்யா.

கள்ளப் புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பி சென்றான் கிரி.

"உன்கிட்ட ஃபோன் இருக்கா?" என்றாள் இந்து.

இல்லை என்று சோகமாக தலையசைத்தாள் ரம்யா.

"இது எந்த இடம்னு உனக்கு தெரியுமா?"

"என்னை கிரி சார் தான் இங்க அழைச்சுக்கிட்டு வந்தாரு. உங்களுக்கு வேணும்னா, நான் யார்கிட்டையாவது கேட்டு சொல்லட்டுமா?"

"நிஜமா கேட்டு சொல்லுவியா?"

"நிச்சயமா சொல்லுவேன். நீங்க என்னுடைய முதலாளியாச்சே"

"நான் உன்கிட்ட கேட்டேன்னு யார்கிட்டயும் சொல்லிடாதே"

"நம்ம ரெண்டு பேரும் பேசுற எதையும், நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்"

இந்துவிற்கு சந்தோஷமாக இருந்தது. அவளுக்கு ஒரு துணை கிடைத்துவிட்டது என்று. ரம்யாவின் மூலமாக, அந்த முகவரியை தெரிந்து கொண்டு, வித்யாவை வரவழைத்து விட வேண்டும் என்று நினைத்தாள் இந்து. வித்யா வந்துவிட்டால், அர்ஜுனை சமாளிக்கும் வழியை அவள் நிச்சயம் கூறுவாள் என்று நம்பினாள் அவள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top