8 அபாயமான அணுகுமுறை
8 அபாயமான அணுகுமுறை
மறுநாள் காலை
தனது பொறுமையை இழந்து கொண்டிருந்தான் அர்ஜுன். அறையை விட்டு வெளியே வராமல் பிடிவாதமாய் இருந்தாள் இந்து. அவள் சாப்பிடாமல் பட்டினி கிடப்பதையும், தன்னை வருத்திக் கொள்வதையும் அர்ஜுனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அவன் வேலனை அழைத்தான்.
"சொல்லுங்க, தம்பி"
"இந்துவை டிஃபன் சாப்பிட வர சொல்லுங்க. நான் அவளுக்காக காத்திருக்கேன்னு சொல்லுங்க. பதினஞ்சு நிமிஷத்துல அவ இங்க வந்தாகணும்"
"சரிங்க, தம்பி"
அவள் என்ன சொல்லுகிறாள் என்று பார்த்துவிட்டு, அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க தயாராக இருந்தான் அர்ஜுன்.
சரியாக பதினைந்து நிமிடம் கழித்து, டைனிங் ஹாலுக்கு வந்தான் அர்ஜுன். ஆனால், அங்கு இந்துவை காணவில்லை.
"இந்து எங்க?" என்றான் வேலனிடம்.
"அவங்க கெஸ்ட் ரூம்ல இருக்காங்க"
"அவ சாப்பிட்டாளா?"
"இல்ல, தம்பி. அவங்களுக்கு எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அவங்க உங்க கூட சாப்பிட மாட்டாங்களாம்"
தான் அமர்ந்திருந்த நாற்காலியை தள்ளிவிட்டு, எழுந்து நின்றான் அர்ஜுன். விருந்தினர் அறையை நோக்கி ஓடிச் சென்று, அறைக் கதவைத் தட்டினான். அவன் கதவைத் தட்டிய சத்தம், இந்துவுக்கு எரிச்சலை தந்தது. தன் காதுகளை இறுக்கமாக மூடிக் கொண்டாள், அவன் முயற்சிக்கு எந்த மரியாதையும் தராமல்.
தன் முழு சக்தியையும் திரட்டி, அந்த கதவை எட்டி உதைத்தான் அர்ஜுன். அந்த முரட்டுத்தனமான உதையை பொறுக்க முடியாமல், அந்த கதவு தரையில் சாய்ந்தது. அந்த அறைக்குள் அனாயசமாக நுழைந்த அர்ஜுனை பார்த்து, அதிர்ச்சியடைந்தாள் இந்து. அவன் தன்னை நோக்கி வருவதை பார்த்து, பயத்துடன் பின்னோக்கி நகர்ந்தாள்.
ஒன்றுமே நடக்காதது போல், அவளைப் பார்த்து குளிர்ச்சியாக புன்னகைத்தான்.
"வந்து, என்கூட சாப்பிடு"
"நான்... நான்... உங்க கூட சாப்பிட மாட்டேன்"
"ஏன்?"
"ஏன்னா, நான் உங்களை வெறுக்கிறேன்"
வந்த கோபத்தை, தன் கைவிரல்களை மடக்கி, அடக்கிக் கொண்டான் அர்ஜுன்.
"உன் இதயம் என்னை நேசிக்கும்"
"அது உங்க கனவுல தான் நடக்கும்"
"என்னோட கனவுல நான் நிறைய விஷயத்தை செஞ்சுக்கிட்டு இருக்கேன்... உன் கூட..." அவன் கூறியதைக் கேட்டு, முகம் சுளித்து தலைகுனிந்தாள் இந்து.
"இப்போ, நீ சாப்பிட வரணும்"
"முடியாது"
"வந்து தான் ஆகணும். உனக்கு வேற வழி இல்ல. ஏன்னா, நீ என் வைஃப். சோ, நான் சொல்றதை நீ கேட்கணும்"
"நீங்க சொல்றத நான் ஏன் கேட்கணும்?"
"நான் சொல்றத நீ செய்யலன்னா, நான் உன்னை செய்ய வைப்பேன்"
அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் இந்து.
"நான் உனக்கு ரெண்டு சாய்ஸ் கொடுக்கிறேன். வழக்கமா நான் யாருக்கும் சாய்ஸ் கொடுக்கிறதில்ல. உனக்கு ஏன் கொடுக்கிறேன்னா, நீ என் வைஃப்... எல்லாரை விடவும் ரொம்ப ஸ்பெஷல்"
அவளுடைய முகபாவம், விசித்திரமாய் மாறியது.
"சாய்ஸ் நம்பர் ஒன், என்கூட சேந்து சாப்பிடு. இல்லன்னா, என் கட்டில்ல, என் கூட தூங்கு."
அதைக் கேட்டு அவள் உள்ளுணர்வு நடுங்கியது.
"உன்னை கட்டாயபடுத்தி என்னால சாப்பிட வைக்க முடியாதுன்னு ஒத்துக்குறேன். ஆனா..."
சொல்ல வந்ததை சொல்லாமல், அவளை நோக்கி முன்னேறினான். அவன் சொல்ல வந்தது என்ன என்று அவளுக்கு புரியாமல் இல்லை. பின்னால் நகர்ந்த இந்து, சுவரில் மோதி நிற்கவும், அவளைத் தன் கைகளுக்கிடையில் சிறை வைத்தான். இந்து அவனை அடிக்க துவங்கினாள். அவள் ஏதோ கொசுவை அடிப்பது போல அசட்டையாய் நின்றான் அர்ஜுன். அதே தோரணையில் அவள் கைகளை பற்றினான். அவன் அவளது கைகளை வேண்டுமென்றே இறுக்கமாக பற்றிவில்லை. அப்போது தான் அவள், அவன் பிடியிலிருந்து வெளிவர முழு முயற்சி செய்வாள். ஆனால், அது அவளால் இயலாது. அப்பொழுது தான் அவள் புரிந்து கொள்வாள், அர்ஜுனனை ஜெயிப்பது அவ்வளவு சுலபம் அல்ல என்று.
அவன் எதிர்பார்த்ததை போலவே அவளுடைய வேகம் குறைந்தது. அவள் தன் கைகளை விடுவித்துக் கொள்ள, அவளின் கைகளை இப்படியும் அப்படியும் முறுக்கிப் பார்த்தாள்.
அவளுடைய இரு கைகளையும் தன் கையால் பற்றிக் கொண்டு, மற்றொரு கரத்தால் அவள் முகத்தை மென்மையாய் பற்றினான். அவளை முத்தமிடுவது போல தன் தலையை லேசாய் சாய்த்து அவளை நெருங்கினான். தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள் இந்து. நேரம் கடந்து கொண்டிருந்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இந்து தன் கண்களை மெல்ல திறந்தது, தன்னிடமிருந்து ஒரு அங்குல இடைவெளியில், புன்னகையுடன் நின்றிருந்த அர்ஜுனை பார்த்து திடுக்கிட்டாள்.
"நான் உன்னை ஏதாவது செய்யணும்னு நினைச்சா, உன்னால ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு இப்ப உனக்கு புரிஞ்சிருக்கும். அதனால என்கூட சண்டை போடுறத நிறுத்திட்டு, என்கூட வா"
கண்களிலிருந்து கண்ணீர் பெருக, அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் இந்து. அவள் கண்களை மெல்ல துடைத்து விட்டான் அர்ஜுன்.
"நீ என் கூட சாப்பிடுவ தானே?"
ஒன்றும் சொல்லாமல் அழுது கொண்டிருந்தாள் இந்து.
"சரின்னு சொல்லு" என்று அவளது காதில் ரகசியம் உரைத்தான்.
"சரி" என்றாள் திடுக்கிட்டு.
"குட்... உன்னை கட்டாயப்படுத்த, என்னை கட்டாயப் படுத்தாத. சரியா? நல்ல பொண்ணுல... வா..."
தன் கையை அவளை நோக்கி நீட்டினான், அவளைப் பற்றிக் கொள்ளுமாறு சைகை செய்து. அழுது கொண்டே அவன் கையை பற்றிக்கொண்டாள்.
அவளை உணவு மேஜைக்கு அழைத்து வந்தான். ஒரு நாற்காலியை இழுத்து அமரும்படி ஜாடை காட்டினான். அமைதியாய் அமர்ந்து, சிற்றுண்டியை உண்ண துவங்கினாள் இந்து. அவள் சாப்பிடுவதைப் பார்த்து திருப்தி புன்னகை சிந்தினான் அர்ஜுன்.
சாப்பிட்டு முடித்துவிட்டு விருந்தினர் அறைக்கு வந்த இந்து, மனம் விட்டு அழுதாள். தன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று, அவள் எப்பொழுதும் நினைத்தது கிடையாது. ஏனென்றால், அவள் வாழ்க்கை, எப்போதும் அவள் கையில் இருந்ததில்லை. தன் மூன்றாவது வயதிலேயே பெற்ற தாயை இழந்தாள். அவளுக்கு வாய்த்த சித்தியோ வடிகட்டிய சித்தியாக இருந்தாள். வித்யாவிடம் இருந்து எதையுமே பெற்றதில்லை இந்து. அவள் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது, அவளுடைய தந்தையும் காலமானார். அவள் பெயரில் இருந்த வீட்டை, தனதாக்கிக் கொள்ளவே வித்யா அவளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தாள். அவற்றை அசைபோட்ட இந்து, வித்யாவை நினைத்தாள்.
இந்துவுக்கு உறவு என்று கூறிக்கொள்ள, வித்யாவும் வீணாவும் மட்டும் தானே இருந்தார்கள்...? வித்யா எப்பொழுதும் இந்துவை நம்பியது இல்லை. தன் மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்தவே அந்த வீட்டை விற்க நினைத்தாள் வித்யா. இந்த மனிதன் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டான். அவன் யார் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. அவன் அவளை முத்தமிட முயன்ற பொழுது, அவளுக்கு உடல் நடுங்கிப் போனது. நல்ல வேலை, அவன் அவளை முத்தமிடவில்லை. பிடிக்காத ஒரு மனிதனிடமிருந்து முத்தத்தை பெறுவது நரகத்திற்கு சமம்.
சீதாராணி இல்லத்திலிருந்து எப்படியாவது சென்று விட வேண்டுமென்று தீர்மானித்தாள் இந்து. அதற்குரிய வழியை தேட முயன்றாள். வித்யாவை தவிர வேறு யாரும் அவளுக்கு உதவ முடியாது. ஏனென்றால், வித்யாவிற்கு அவள் வேண்டும். வித்யாவுடன் தொடர்பு கொண்டு பேசினால், அவளுக்கு ஏதாவது ஒரு வழி நிச்சயம் கிடைக்கும்.
குளியலறைக்குச் சென்று குளித்து தயாரானாள். தன் பையிலிருந்து ஒரு புடவையை எடுத்து, அதை உடுத்திக் கொண்டாள். உடை உடுத்தும் போது என்ன செய்வது என்று தீர்மானித்தாள்.
ஆனால், அதை செய்வது அவ்வளவு சுலபமாக இல்லை. அவள் வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற போது, அவள் அனுமதிக்கப்படவில்லை. அர்ஜுனுடைய பாதுகாவலர்கள் அவளை உள்ளே போகச் சொல்லி பணித்தார்கள்.
"நான் கோயிலுக்கு போகணும். என்னைப் போக விடுங்க"
"மன்னிச்சிடுங்க மேடம். உங்களை வெளியே அனுப்ப எங்களுக்கு பவர் கிடையாது"
"என்னை சாமி கும்பிட கூட விட மாட்டீங்களா?"
"வீட்டுக்குள்ள இருக்கிற பூஜை அறையே ஒரு சின்ன கோவில் மாதிரி தான் இருக்கு. நீங்க அங்கேயே சாமி கும்பிடலாம்"
"நான் என்ன செய்யணும்னு நீங்க சொல்ல வேண்டாம். நீங்க சொல்றதை என்னால கேட்க முடியாது"
"நான் சொல்றத கேப்பியா?" என்று பின்னால் இருந்து ஒரு குரல் வந்ததை கேட்டவுடன், தன் காலுக்கு அடியில் வேர்விட்டது போல் நின்றாள் இந்து.
அவனை நோக்கி திரும்பாமல், தன் மூச்சை பிடித்துக்கொண்டு அப்படியே நின்றாள். அர்ஜுனுடைய காலடி ஓசை தன்னை நெருங்குவதை உணர்ந்தாள். தன் காதுக்கு வெகு அருகாமையில் அவன் குரலை கேட்டு திடுக்கிட்டாள்.
"நான் சொன்னா கேப்ப தானே?" என்றான்.
"நான்... நான்... கோவிலுக்கு..." என்று திணறினாள்.
"வீட்ல சாமி கும்பிட்டா, உன் கடவுள் உன்னை ஆசீர்வதிக்க மாட்டாரா?"
அவள் அமைதியானாள். இந்த மனிதனிடம் என்ன தான் பேச முடியும்? அவனிடம் பேசாமல் இருப்பது எவ்வளவோ மேல், என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அவள் ஒன்றும் கூறாமல் செல்வதைப் பார்த்து முகம் சுளித்தான் அர்ஜுன்.
"நில்லு"
அதே இடத்தில் அசையாமல் நின்றாள் இந்து.
"எந்த கோவிலுக்கு போகணும்?"
ஒன்றும் கூறாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றாள் இந்து. எந்த கோவில் என்று அவளுக்கு எப்படி தெரியும், அவள் தான் சென்னைக்கு புதியவள் ஆயிற்றே.
"சரி வா, நான் உன்னை கூட்டிட்டு போறேன்"
மென்று முழுங்கினாள் இந்து.
"இந்த மனிதனுடன் கோவிலுக்கு செல்வதா? தாயே துர்கா தேவி, என்னை காப்பாற்று" என்று வேண்டினாள்.
"இல்ல... வேண்டாம். நான் வீட்லயே சாமி கும்பிட்டுக்கிறேன்"
"ஏன்?"
அவன் அவளை நோக்கி நடக்க ஆரம்பிக்க, அவள் பின்னோக்கி நகர்ந்தாள்.
"ஏன்? என் கூட வர மாட்டியா?"
அவனை பயத்துடன் பார்த்தாள் இந்து.
"நீ வரியா, இல்லயா?"
"வரேன்..."
அர்ஜுனின் முகத்தில் புன்னகை பூத்தது.
"குட்... போகலாம்..."
அவளுக்காக கார் கதவைத் திறந்து விட்டான் அர்ஜுன். பின், கோவிலை நோக்கி காரை செலுத்தினான்.
"சீட் பெல்ட்டை போட்டுக்கோ"
"ம்ம்ம்...?"
"சீட் பெல்ட்..." என்றான் பெல்ட்டை காட்டியபடி.
அந்த பெல்ட்டை பார்த்துவிட்டு மறுபடியும்,
"என்ன?" என்றாள் ஒன்றும் புரியாமல்.
தன்னுடைய சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு, அவளுடைய சீட் பெல்ட்டை நோக்கி தன் கையை நீட்டினான் அர்ஜுன். சீட்டில் சாய்ந்து கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டாள் இந்து. சீட் பெல்ட்டை கையில் பிடித்தபடி, அவளை பார்த்து புன்னகைத்தான் அர்ஜுன். அவள் கன்னத்தில் மெல்ல ஊதினான். திடுக்கிட்டு கண்ணை திறந்தாள் இந்து.
"நான் என்ன அவ்வளவு பயங்கரமாவா இருக்கேன்...? நீ இப்படி இறுக்கமா கண்ணை மூடிக்கிற அளவுக்கு?"
பதில் சொல்லாமல் குனிந்து கொண்டாள்.
"நான் பேசும் போது நீ கீழே குனிஞ்சா என்ன அர்த்தம்?"
அப்பொழுதும் அவள் குனிந்து கொண்டு இருக்கவே,
"என்னை பாருன்னு சொன்னேன்" என்று கத்தினான்.
திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் இந்து.
"நான் பேசும் போது, என்னை பாக்கணும் சரியா?"
சரி என்று தலையசைத்தாள்.
"சரின்னு" சொல்லு
"சரி"
"நல்ல பொண்டாட்டியா, நான் சொல்றதை கேட்கணும்"
"கேக்கலன்னா என்ன செய்வீங்க?" என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.
"நீ என்னை பத்தி என்ன நினைக்கிற?" என்றான் வழக்கமான தொனியில்.
"ஒரு பொண்ணோட விருப்பமில்லாம, அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட நீங்க ஒரு காட்டுமிராண்டி... அவளை பிடிக்காத விஷயங்களை செய்யச் சொல்லி வற்புறுத்துற நீங்க ஒரு காட்டுமிராண்டின்னு நினைக்கிறேன்"
அதை கேட்டு அவன் புருவங்கள் மேலே உயர்ந்தது.
"காட்டுமிராண்டி என்ன செய்வான் தெரியுமா? நான் காட்டுமிராண்டியா இருந்திருந்தா, முதலிரவு ரூமை விட்டு உன்னை வெளிய போக விட்டிருக்க மாட்டேன். ஒரு அங்குல இடைவெளியில நின்னு, முத்தம் கொடுக்காம விட்டிருக்க மாட்டேன். நீ என்னை காட்டுமிராண்டின்னு சொன்னதுக்கு அப்புறமும், உனக்கு பதில் சொல்லிக்கிட்டிருக்க மாட்டேன்"
என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவனை பார்த்தாள் இந்து. ஏனென்றால் அவன் கூறுவது சரி தானே...!
"உனக்கு என்ன பிரச்சனை? அரண்மனை மாதிரி வீடு... அள்ள அள்ள குறையாத பணம்... ஃபஸ்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட். ஒரு பொண்ணுக்கு வேற என்ன வேணும்?"
"எனக்கு என்ன வேணுமுன்னு நீங்க எப்படி அளந்து பாக்க முடியும்?"
"ஓ... அப்படியா...? அப்படி உனக்கு என்ன தான் வேணும்?"
"எனக்கு ஏமாத்தாத, நேர்மையான ஒருத்தன் தான் வேணும். உங்கள மாதிரி இல்ல..."
"யார் நேர்மையானவங்க? நீ கல்யாணம் பண்ணிக்க இருந்தியே, அவன் நேர்மையானவன்னு உனக்கு தெரியுமா?"
நேர்மையாளன் பட்டத்தை யார் தான், யாருக்குத் தான் கொடுத்துவிட முடியும்? மனிதன் எப்போது எப்படி மாறுவான் என்று கணித்துவிட முடியுமா என்ன?
"அவன் நேர்மையானவனா இருந்திருந்தா, என்னை ஏன், உன்னை கல்யாணம் பண்ணிக்க விட்டான்?"
இந்து வாயடைத்து போனாள்.
"நான் ஏற்கனவே சொன்னேன், உன்னை கட்டாயப்படுத்த, என்னை கட்டாயப் படுத்தாத"
"நான் தற்கொலை பண்ணிக்கிட்டா என்ன செய்வீங்க?" என்று அபாயகரமான கேள்வியைக் கேட்டாள் இந்து.
அதிர்ச்சியில் பேச்சிழந்து நின்றான் அர்ஜுன். தற்கொலை செய்து கொள்வதா? அவனுடைய அம்மா தற்கொலை செய்து கொள்ள முயன்ற பொழுது, அவன் எப்படி பதறினானோ, அப்படி பதறினான். அவனுடைய முகத்தில் ஏற்பட்ட மாற்றம், புதிதாய் தெரிந்தது இந்துவுக்கு... அச்சம், பதற்றம், நடுக்கம், எல்லாம் கலந்த ஒரு உணர்வு. ஆனால் ஏன்? எதற்காக அவன் இப்படி பதட்டம் அடைந்தான்?
நேராக அமர்ந்து கொண்டு, கோவிலை நோக்கி, காரை செலுத்தினான் அர்ஜுன். அவன் உண்மையிலேயே பதட்டமடைந்து தான் இருந்தான்... சொல்ல முடியாத அளவிற்கு பதட்டம்...
கோவிலுக்கு செல்லும் வழியில், அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top