7 அர்ஜுன் வீட்டில் இந்து
7 அர்ஜுன் வீட்டில் இந்து
இந்துவை தன் கையில் ஏந்திகொண்டு அனாயாசமாக நடந்து சென்றான் அர்ஜுன். செய்வதறியாமல், அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து.
வித்யா தொண்டை கிழிய கத்தத் துவங்கினாள்.
"அவன் என் பொண்ணை தூக்கிக்கிட்டு போறான்... என்கிட்ட இருந்து எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போறான்... யாராவது அவனை தடுத்து நிறுத்துங்க... என் பொண்ணை காப்பாத்துங்க..."
"அம்...மா..." என்று அழுதாள் இந்து.
கிரியை ஒரு பார்வை பார்த்தான் அர்ஜுன். ஐநூறு ரூபாய் நோட்டு கட்டுகள் நான்கை எடுத்து, வித்யாவை நோக்கி நீட்டினான் கிரி. அதை பார்த்தவுடன் பேச்சிழந்து நின்றாள் வித்யா. அவள் கையில் அந்த ரூபாய் கட்டுகளை திணித்துவிட்டு, அர்ஜுனை பின்தொடர்ந்தான் கிரி. வித்யா அமைதியாகிவிட்டதை பார்த்து கிட்டத்தட்ட மயக்கம் அடையும் நிலைக்கு சென்ற இந்துவை பார்த்து, புன்னகை பூத்தான் அர்ஜுன்.
இந்துவின் பையை, ஒரு பாதுகாவலனிடம் கொடுத்தாள் விமலா. அதை அவன், அர்ஜுனின் காரில் வைத்தான். கோவிந்தன் அர்ஜுனுக்கு காரின் கதவை திறந்துவிட்டான். இந்துவை அமர வைத்து, அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்ட பின், காரை ஸ்டார்ட் செய்ய கிரிக்கு உத்தரவிட்டான் அர்ஜுன்.
காரின் கண்ணாடி ஜன்னலின் வழியாக வித்யாவை நோக்கினாள் இந்து. அவளோ, கிரி கொடுத்த ரூபாய் நோட்டுக் கட்டுகளை விழி விரிய பார்த்துக் கொண்டு நின்றாள். தன் கைகளால் தன் முகத்தை மூடிகொண்டு அழுதாள் இந்து. கார் அங்கிருந்து நகர்ந்தது.
வித்யாவின் தோளை பிடித்து உலுக்கினாள் வீணா.
"என்ன செஞ்சுகிட்டு இருக்க நீ? என்ன நடக்குது இங்க? இந்துவை வேற எவனோ கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டான். அவளை அவன் எங்கேயோ கூட்டிட்டு போறான். யார் அவன்? இதுக்கப்புறம் எப்படி வீட்டை விக்க போற? நமக்கு அவன் கையெழுத்து வேணும். இப்போ, அவன் தான் இந்துவோட புருஷன்" என்று எரிந்து விழுந்தாள் வீணா.
அப்பொழுது தான், அந்த நோட்டு கட்டிலிருந்து தன் கண்களை நகர்த்தினாள் வித்யா. ஓடிச் சென்று, கோவிந்தனின் சட்டை காலரை பிடித்து, அவனை கோபமாய் அறைந்தாள்.
"என்னடா இதெல்லாம்? நாயே... எதுக்குடா என்னை ஏமாத்தின? ஏன்...? இப்போ நான் வீட்டை எப்படிடா விப்பேன்?" என்று பைத்தியம் பிடித்தவள் போல கத்தினாள்.
அவளை தள்ளி விட்டான் கோவிந்தன்.
"போய் உன் மருமக பிள்ளைகிட்ட கையெழுத்து வாங்கிக்கோ. உன்னோட வீடு மாதிரி நூறு வீட்டை வாங்க முடியும் அவனால..."
அவனை முகம் சுளித்து பார்த்தாள் வித்யா.
"உன்னால யோசிச்சி கூட பார்க்க முடியாத அளவுக்கு, குவியல் குவியலா பணம் வச்சிருக்கான். அவன் கோடிஸ்வரன். உன் அதிர்ஷ்டம், அவன் உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான். போய் அவன் கால்ல விழு.. பணத்தால, பூமியிலேயே சொர்க்கத்தை உருவாக்க முடியும் அவனால."
"அவன் எங்கிருந்து வந்தான்?" என்றாள் வீணா.
"எனக்கு தெரியாது. அவன் பேர் அர்ஜுன். அவ்வளவு தான் தெரியும்"
"அவன் உனக்கு பணம் கொடுத்தானா?" என்றாள் வீணா.
"பின்ன...? வேறே எதுக்காக நான் அவனை இந்துவை கல்யாணம் பண்ணிக்க விட்டேன்?"
"எவ்வளவு கொடுத்தான்?" என்றாள் வித்யா.
"அம்பது லட்சம்"
"என்ன....? அம்பது லட்சமா?" என்று வாயை பிளந்தாள் வித்யா.
"எதுக்காக?" என்றாள் வீணா.
"உன்னோட அக்காவை கல்யாணம் பண்ணிக்க"
வீணா குழப்பம் அடைந்தாள். இந்துவை திருமணம் செய்து கொள்ள அவன் ஐம்பது லட்சம் கொடுத்தானா? எதற்காக? அவன் ஐம்பது லட்சம் கொடுக்கும் அளவிற்கு இந்துவிடம் அப்படி என்ன இருக்கிறது? அவளுடைய மூளைக்கு எதுவும் எட்டவில்லை. அவர்களை குழப்பத்தில் விட்டு அங்கிருந்து சென்றான் கோவிந்தன்.
.......
இந்துவுடன் விமான நிலையம் வந்தடைந்தான் அர்ஜுன். அங்கு அவர்களுக்காக ஒரு ஹெலிகாப்டர் காத்திருந்தது. அதைப் பார்த்து இந்து திகைப்படைந்தாள். அர்ஜுனை கொள்ளைக்கூட்டத் தலைவனோ என்பது போல அதிர்ச்சியாய் பார்த்தாள் இந்து.
அவளை மறுபடி தூக்கிக் கொள்ள முயன்றான் அர்ஜுன். அவள் விலகி பின்னால் சென்றதை பார்த்து புருவம் உயர்த்தினான் அர்ஜுன்.
"யார் நீங்க?"
"நான் உன் கழுத்துல தாலி கட்டி இருக்கேன். உன் நெத்தியில குங்குமம் வச்சிருக்கேன். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பிரமாணம் எடுத்தோம். அப்ப நான் உனக்கு யாரு?" என்று அவளையே கேள்வி கேட்டான் அர்ஜுன்.
அவள் வெறுப்பில் பெருமூச்சுவிட்டாள்.
"உங்க வீட்டை விக்கணும்னா, என் கூட வா" என்று கூறி விட்டு நடக்கத் துவங்கினான்.
தன் இயலாமையை உணர்ந்தாள் இந்து. அவளால் அந்த மனிதனை ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, வேறு வழியில்லாமல் அவனை பின்தொடர்ந்தாள், கண்ணீர் சிந்தியபடி...!
சங்கர் இல்லம், சென்னை
மாஷாவின் மகள், ஹீனாவின் கண்கள் அகல விரிந்தன, அர்ஜுன் கொடுத்திருந்த விளம்பரத்தை முகநூலில் பார்த்த போது. மாஷாவிடம் அதை பற்றி கூற அறையை விட்டு அவள் வெளியே ஓடினாள். அவள் மாஷாவின் அறைக்கு வந்த பொழுது, ஒரு அழகு கலை நிபுணர், அவருடைய கால்களுக்கு ஃபிரென்ச் பெடிக்யூர் செய்து விட்டுக் கொண்டிருந்தார்.
"அம்மா..."
"சொல்லு, பேபி"
"உனக்கு ஒரு நியூஸ் கொண்டு வந்திருக்கேன்"
"அப்படியா?"
"அதைக் கேட்டா, நீங்க எனக்கு ட்ரீட் கொடுப்ப"
"உனக்கு ட்ரீட் வேணும்னா நேரா கேளு" என்றாள் மாஷா.
"ஐயோ, இத பாரு"
அவளுடைய கைபேசியை மாஷாவிடம் நீட்டினாள் ஹீனா. மாஷாவின் முகம், பெயர் கூறமுடியாத பாவத்துடன் மாறியது.
"யாரிந்த பொண்ணு?"
"யாருக்கு தெரியும்? ஆனா, அர்ஜுன் எப்போ பாண்டிச்சேரிக்கு போனான்? அவன் ரொம்ப வருஷமா இந்தியாவிலேயே இல்லயே... சின்ன வயசுலேயே அவங்க ரெண்டு பேரும் காதலிச்சு இருப்பாங்களோ?"
"வாய்ப்பே இல்ல... அர்ஜுன் பாண்டிச்சேரிக்கு போனதே இல்ல. சங்கருக்கும், சீதாவுக்கும் நேட்டிவ் சென்னை தான்."
"அப்போ இந்த விளம்பரத்துக்கு என்ன அர்த்தம்?"
"எனக்கும் ஒன்னும் புரியல"
அவர்கள் சங்கர் வருவதை பார்த்தார்கள். அவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்றார்கள். அவர்களுடைய வித்தியாசமான பார்வையை பார்த்தவுடன் புரிந்துகொண்ட அவர்,
"என்ன ஆச்சு?" என்றார்.
"பாருங்க, உங்க சீமந்த புத்திரன் என்ன செஞ்சிருக்கான்னு..."
அவரிடம் அந்த விளம்பரத்தை காட்டினாள். அதை பார்த்து ஆடிப்போனார் சங்கர். இந்தப் பெண் யார்? அர்ஜுனுக்கு அவளை எப்படி தெரியும்? இந்தப் பெண் பார்க்க மிக எளிமையாக, அர்ஜுனுடைய வாழ்க்கை முறைக்கு, முற்றிலும் மாறாக இருக்கிறாளே! அவன் கடந்த பத்து வருடங்களாக லண்டனில் தானே தங்கி இருந்தான்? அப்படி இருக்கும் பொழுது, பாண்டிச்சேரியை சேர்ந்த இந்தப் பெண்ணுடன் அவனுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது? அர்ஜுனுடைய வாழ்க்கையில் என்ன நடக்கிறது? அவன், மீண்டும் லண்டன் செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்ததைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார் சங்கர். அப்படி இருக்கும் பொழுது, இது என்ன குழப்பம்?
சற்றே தூரமாய் வந்து, அவர் தன் கைப்பேசியை எடுத்து, சீதாராணி இல்லத்தின் லேண்ட் லைனுக்கு ஃபோன் செய்தார். வேலன் எடுத்து பேசினான்.
"சங்கர் பேசுறேன்"
"சொல்லுங்கய்யா"
"அர்ஜுன் எங்க?"
"அவர் வீட்ல இல்லைங்களே"
"எங்க போயிருக்கான்?"
வேலன் அமைதியானான். அர்ஜுனின் திருமணத்தை பற்றி அவரிடம் கூறுவதா வேண்டாமா என்று அவனுக்கு குழப்பமாய் இருந்தது. ஆனால், எவ்வளவு நாள் அவரிடமிருந்து மறைத்து வைத்துவிட முடியும்?
"நான் கேட்டது காதுல விழலயா?" என்றார் சங்கர்.
"ரெண்டு நாளைக்கு முன்னாடி, தம்பி பாண்டிச்சேரி போனாரு"
"பாண்டிச்சேரிக்கா? எதுக்கு?"
"அவர் அங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாரு"
"கல்யாணமா?" என்றார் அதிர்ச்சியாக.
"ஆமாங்கய்யா"
"அவன் யாரை கல்யாணம் பண்ணிகிட்டான்?"
"அவங்க யாருன்னு எனக்கு தெரியல. ஆனா, அவங்க பேரு இந்துமதி"
"அவங்க பேரு உனக்கு எப்படி தெரியும்?"
"புது மருமகளை வரவேற்க, வீட்டை அலங்காரம் பண்ண சொல்லி உத்தரவு. வரவேற்பு பலகைல, அர்ஜுன் தம்பியோட பேர் கூட, அந்த அம்மாவுடைய பெயரையும் எழுதி இருக்காங்க"
"அவங்க எப்ப வராங்க?"
"அவங்க ஏற்கனவே சென்னைக்கு வந்து சேந்துட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துடுவாங்க"
அவர் கண்ணலிருந்து வெளி வர துடித்த கண்ணீரை விழுங்கினார் சங்கர். அவருடைய ஒரே மகனுக்கு திருமணம் நடந்துவிட்டது. ஆனால் அவருக்கு அதை பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர் செய்த பாவத்திற்காக, இன்னும் எத்தனை தண்டனைகளை தான் அவர் அனுபவிக்க வேண்டி வருமோ... அழைப்பைத் துண்டித்தார் சங்கர்.
இந்துவின் புகைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தார். அவருக்கு தெரியும், அர்ஜுன் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்தான் என்று. இப்பொழுது, அவன் இந்தப் பெண்ணை மணந்து கொண்டிருக்கிறான். அவனை கவர முயன்ற சில பெண்களை அவன் விரட்டி அடித்ததாக அவர் கேள்விப் பட்டிருந்தார். அவனை திடீரென்று மாற்றியது எது? இந்தப் பெண்ணை தேடிப்பிடித்து அவன் திருமணம் செய்து கொள்ள ஏதாவது ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். இல்லாவிட்டால் அவனுடைய வாழ்க்கை முறைக்கு சிறிதும் பொருத்தமில்லாத இந்த பெண்ணை அவன் மணந்து கொண்டிருக்க மாட்டான்.
"என்ன ஆச்சு? உங்க முகம் தொங்கிப் போச்சி...?" என்றாள் மாஷா.
அவளுக்கு பதில் கூறாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் சங்கர்.
சீதாராணி இல்லம்
சீதா ராணி இல்லம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னியது. தனது அரண்மனை போன்ற வீட்டை பார்த்து, அசந்து போய்விடுவாள் இந்து, என்ற எதிர்பார்ப்புடன் அவளை பார்த்தான் அர்ஜுன். அவள் முகத்தில் எந்த மாற்றமும் இன்றி, கண்ணீர் பெருக நின்றிருந்தாள். அந்த மிகப்பெரிய வீட்டை, ஏறெடுத்துப் பார்க்கவும் அவள் விரும்பவில்லை. அதைப் பார்த்து அர்ஜுன் அசந்து தான் போனான். ஒரு வயதான பெண்மணி, ஆலம் சுற்றி இந்துவை வரவேற்றார். கிரியின் கட்டளையின் பேரில், இந்துவை வரவேற்க, வேலன், தன் அம்மாவை வரவழைத்து இருந்தான்.
வேலனின் அம்மா இந்துவை அர்ஜுனின் அறைக்கு அழைத்துச் சென்றார். அர்ஜுனும் அவர்களைப் பின்தொடர்ந்தான். இந்துவை அர்ஜுனின் அறையில் விட்டுவிட்டு, வேலனின் அம்மா அந்த அறையைவிட்டு வெளியேறினார்.
"இது தான் நம்ம ரூம். இங்க தான், நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா வாழ போறோம். நீ இங்க என்ன வேணா செய்யலாம்" என்ற அர்ஜுனை, பல்லை கடித்துக்கொண்டு, ஆத்திரத்துடன் பார்த்தாள் இந்து. அவள் முகத்தில் கொப்பளித்த கோபத்தை பார்த்து, தன் புருவத்தை உயர்த்தினான் அர்ஜுன். அவனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வண்ணம், அவனுடைய சட்டையின் காலரை பற்றினாள் இந்து.
"யார் நீ? என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த? உனக்கு என்ன தான் வேணும்?" என்று அவனை அடிக்கத் துவங்கினாள்.
அசைவின்றி அப்படியே நின்றான் அர்ஜுன். அவன் அப்படி உணர்ச்சியற்று நின்றதைப் பார்த்து, அவளுடைய கோபம் அதிகமானது. உதடுகள் துடிக்க அவனை பிடித்து தள்ளிவிட்டாள் இந்து.
"முடிஞ்சுதா...? போய் உன் டிரஸை மாத்திக்கோ. ரொம்ப நேரமா இந்த பட்டு புடவையில இருக்க..." என்றான் அர்ஜுன் சர்வ சகஜமாக.
பின் நோக்கி நகர்ந்தாள் இந்து.
"முடியாது... நான் எதுவும் செய்ய மாட்டேன். நீ செஞ்ச காரியத்துக்காக நான் உன்னை வெறுக்கிறேன்" என்ற அவளுடைய வேதனை குரல், அவனை அடித்து நொறுக்கியது.
"உன்னால என்னை வெறுக்க முடியாது. உன்னை மாதிரி பண்புள்ள பொண்ணு, அவ புருஷனை வெறுக்க மாட்டா"
"நீ என் புருஷன் இல்ல. நீ என் புருஷனா இருக்க முடியாது"
"நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு"
"என்னை மிரட்டி தான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட"
"அதெல்லாம் முடிஞ்சு போன கதை. இப்போ நான் உன் புருஷன். நீ ஒத்துக்கிட்டாலும், ஒத்துக்கலனாலும்..."
இந்துவினால் அவள் கோபத்தை கட்டுப் படுத்தவே முடியவில்லை. அவள் முன் அமைதியாய் நின்று பேசிக் கொண்டிருந்த அந்த மனிதனைப் பார்த்த பொழுது அவளுடைய கோபம் அதிகரித்தது. தன் சேலை மாராப்பை எடுத்து கீழே எறிந்தாள். அது அர்ஜுனை முகம் சுளிக்க வைத்தது.
"இதுக்காக தானே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட? வா... வந்து என்ன செய்யணுமோ செய்" என்று சீறினாள் இந்து.
கீழே கிடந்த அவள் முந்தானையை எடுத்து அவள் மீது கோபமாய் வீசினான் அர்ஜுன். அவள் அவனை அவ்வளவு கீழ்த்தரமாக நினைப்பாள் என்று அவன் நினைத்து பார்க்கவே இல்லை. அவளுடைய மேற்கைகளை இறுகப் பற்றினான்.
"உன்னை பத்தி நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? இதுக்காக தான் நான் பாண்டிச்சேரி வந்தேன்னு நினைக்கிறியா? அப்படி இருந்தா, நான் அதை பாண்டிச்சேரியிலேயே முடிச்சிருப்பேன். என் படுக்கைக்கு பொண்ணுங்கள வரவழைக்க நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியமில்ல. பணத்தை விட்டெறிஞ்சா ஆயிரம் பொண்ணுங்க வருவாங்க. உன் வார்த்தையால உன்னை நீயே தரம் தாழ்த்திக்காத." என்றவன்,
அவன் பிடியிலிருந்து அவள் வெளிவர முயன்றதை கவனித்தான். அது வெறுப்பினால் அல்ல. அவன் இறுக்கி பிடித்த பிடி, அவளுக்கு வலியை தந்ததால். அவளுடைய வலி நிறைந்த முகத்தையும், அவன் பிடித்திருந்த அவள் கரங்களையும் மாறி மாறி பார்த்த அர்ஜுன், தன் கைகளை எடுத்து பார்த்த பொழுது, அவனுடைய கைரேகைகள் அவள் கையில் அழுத்தமாய் பதிந்திருந்தன. அவனுக்கு அவன் மீதே கோபம் வந்தது. இதுவரை பெண்களை தொட்டே அறியாத அவன், ஒரு பெண், இவ்வளவு மென்மையாக இருக்ககூடும் என்று எப்படி அறிவான்?
அவளை விட்டு விலகிச் சென்று, தன் மீது இருந்த வெறுப்பில், கண்ணாடியாலான பால்கனி கதவை ஓங்கி குத்தினான். அந்த குத்தை தாங்காமல், நொறுங்கி விழுந்தது அது. அவன் கையில் வழிந்த இரத்தத்தை பார்த்து அவள் வெலவெலத்துப் போனாள். பயத்தால் அங்கிருந்து ஓடத் துவங்கினாள். கீழ்த் தளத்திற்கு வந்து இங்கும் அங்கும் பார்த்து, அருகில் இருந்த அறைக்குள் ஓடி சென்று, கதவை தாழிட்டுக் கொண்டு, அழத்தொடங்கினாள்.
யார் இந்த மனிதன்? எதற்காக அவன் அவளை திருமணம் செய்து கொண்டான்? அவன் பணக்காரன்... நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பணக்காரன்...! அவன் கூறியது போல அவனுக்கு ஆயிரம் பெண்கள் கிடைப்பார்கள். அப்படியிருக்க, எதற்காக அவன் இங்கிருந்த பெண்களை எல்லாம் விட்டுவிட்டு, பாண்டிச்சேரிக்கு வந்து அவளைத் திருமணம் செய்து கொண்டான்? அவளுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. திடீரென, தடம்புரண்டுவிட்ட அவளுடைய வாழ்க்கை, அவளை தடுமாற வைத்தது.
.....
கட்டிலில் அமர்ந்து கொண்டு, ரத்தம் ஒழுகும் தன் கையை, ரத்தம் தோய்ந்த தன் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவனுக்கு தெரியும், அவன் செய்தது சரி அல்லவென்று. அதே நேரம், அவன் செய்தது தவறும் அல்ல. அவனைப் பொறுத்தவரை, ஏற்கனவே திருமணம் நிச்சயமான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. அவன் திருமணத்திற்கு வந்த மக்களை தடுத்து நிறுத்தினான். ஏனென்றால், கூட்டத்தின் முன் இந்து சங்கடப்பட கூடாது என்பதற்காக. அவன் கொடுத்த விளம்பரத்தை பயன்படுத்தி அந்த திருமணத்தை நிறுத்தவும் அவன் நினைக்க வில்லை. ஏனென்றால், அதை அவள் அவமானமாக கருதக் கூடும் என்பதற்காக. சரியோ, தவறோ, அவள் அவனுக்கு சொந்தமானவள். அவள் அவனுக்கு சொந்தமானவளாகத் தான் இருந்தாக வேண்டும்... இருப்பாள்... எப்போதும்...!
தன்னை சுதாகரித்துக் கொண்டு, இந்துவை தேடி கீழ்தளம் வந்தான் அர்ஜுன். தன் கையில் ஏற்பட்ட காயத்தை பற்றி அவன் கவலைப்படவில்லை. விருந்திருந்தினர் அறையின் கதவு சாத்தப்பட்டு இருப்பதை அவன் கவனித்தான். லேசாக தள்ளி பார்த்து, அது உள்ளிருந்து பூட்டப் பட்டிருப்பதை நிச்சயித்துக் கொண்டான். மீண்டும் தன் அறைக்கு வந்தான். அவள் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளட்டும். எல்லாம் சரியாகிவிடும்.
மறுநாள் காலை
அர்ஜுன் நினைத்தது போல, எல்லாவற்றையும் சரிப்படுத்துவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை அவனுக்கு.
அந்த நாள் முழுவதும், இந்து அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அவள் எதுவும் சாப்பிட மறுத்துவிட்டாள். வேலன் எவ்வளவோ முயற்சித்தும், அவனால் அவளை வெளியே கொண்டு வரவும் முடியவில்லை, எதையும் சாப்பிட வைக்கவும் முடியவில்லை. அவள் அப்படி சாப்பிடாமல் பட்டினி கிடப்பதை பார்த்து, நொந்து போனான் அர்ஜுன். எப்படியாவது அவளை சாப்பிட வைத்தாக வேண்டும்... உடனடியாக... அதற்காக அவன் எந்த அளவிற்கும் செல்ல தயார். அவனால் அப்படி அவளை பட்டினி கிடக்கவிட முடியாது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top