6 திருமணம்
6 திருமணம்
ஒரு சிறிய கோவிலில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோவிந்தனோ, வித்யாவோ திருமணத்திற்காக பணத்தை செலவிட விரும்பவில்லை.
இந்து ஆட்டோவிலிருந்து இறங்கினாள். வித்யாவும், வீணாவும், அவளுடன் இறங்கினார்கள். அனைவருக்கும் முன்னாதாக, அங்கு விமலா காத்திருப்பதை பார்த்து முகம் சுளித்தாள் வித்யா.
'ஊருக்கு முன் வந்து இவள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாள்?' என்பது போல் அவளை பார்த்தார்கள் வித்யாவும், வீணாவும். அவர்களைப் பார்த்துப் பல்லை காட்டி சிரித்த விமலா, இந்துவின் கையில் இருந்த அவளுடைய பையை, பெற்றுக் கொண்டாள்.
"கல்யாண பெண்ணா இருந்துகிட்டு, நீ போய் இதெல்லாம் தூக்கலாமா?" என்றாள்.
அவள் சொன்னதை கேட்டு, புன்னகைத்தாள் இந்து. ஆனால், வித்யாவும், வீணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இன்று விமலா, அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டுவது போல் தெரிகிறதே...
அவர்கள் அனைவரும் கோவிலுக்குள் வந்தார்கள். அவர்களை கோவிந்தன் கைகூப்பி வரவேற்றான்.
இந்துவை கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்று அவளை அங்கு அமர வைத்தாள் விமலா.
"ஐயர் கூப்பிடும் போது வந்தா போதும். அது வரைக்கும் நீ இங்கேயே இரு"
"சரி" என்றாள் இந்து.
"ஏம்மா இந்து, இரண்டு பிள்ளை பெத்த அப்பனை கல்யாணம் பண்ணிக்க, உண்மையிலேயே உனக்கு விருப்பம் தானா?" என்றாள் விமலா.
அதை கேட்டு திடுக்கிட்டாள் இந்து.
"எது சரி, எது தப்புன்னு அம்மாவுக்கு தெரியும் இல்லயா?" என்றாள்
"நீ ரொம்ப நல்ல பொண்ணு. அதனால தான், மத்தவங்க கிட்ட இருக்கிற நல்லதை மட்டுமே பாக்குற. வருங்காலத்திலும், நீ அப்படியே செய்யணும்னு நான் ஆசைபடுறேன்" என்ற அவளை குழப்பமாக பார்த்தாள் இந்து.
திருமணத்திற்கு யாரும் வராததைக் கண்டு, வித்யாவும், வீணாவும் குழம்பிப் போனார்கள். முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்த போதும், கோயில் காலியாகவே கிடந்தது. கோவிந்தனுடைய குடும்பத்திலிருந்து கூட யாரும் வராதது அவர்களை மேலும் குழப்பத்திற்கு ஆளாக்கியது. கோவிந்தன் தனி ஆளாய் வந்திருந்தான்.
"உன்னுடைய சொந்தக்காரங்க எல்லாம் எங்க?" என்றாள் வித்யா.
"என்னோட சின்ன பொண்ணு, ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருக்கு"
"ஏன்? அவளுக்கு என்ன ஆச்சு?"
"ஃபுட் பாய்சன்... கல்யாணத்துக்காக செஞ்சு வச்சிருந்த ஸ்வீட் எல்லாம் நிறைய சாப்பிட்டிருப்பான்னு நினைக்கிறேன்"
"ஓஹோ"
"எங்க அம்மாவும், பெரிய பொண்ணும், அவ கூட ஹாஸ்பிடல்ல இருக்காங்க"
"சரி, மத்தவங்க எல்லாம் எங்க?"
"அவங்க எல்லாம் வந்துக்கிட்டு இருக்காங்க. நம்ம அவங்களுக்காக காத்திருக்க வேண்டாம். நம்ம ஆரம்பிக்கலாம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென்று நடந்தான்.
கோவிலுக்கு வெளியே சில பேர், கோவிலுக்கு வரும் மக்களை, இரு பக்கங்களில் இருந்தும் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை அளித்து, திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
பண்டிதர், மந்திர உச்சாடனங்களை செய்ய ஆரம்பித்தார். மேடையில் சென்று அமராமல், வாசலில் நின்று யாருக்காகவோ காத்திருந்தான் கோவிந்தன்.
அடுத்த சில நொடிகளில், சில பேர் கோவிலுக்குள் பிரவேசித்தார்கள். அவர்களுக்கு தலைவன் போல் தோற்றம் அளித்த ஒருவனை நோக்கி ஓடிச் சென்று, அவனை வரவேற்றான் கோவிந்தன். பட்டாடோபதுடன் உள்ளே வந்த அவனைப் பார்த்து முகம் சுளித்தாள் வித்யா. ஆனால் வீணாவின் கண்களில் மின்னல் மின்னின. இவ்வளவு அழகான, வசீகரம் நிறைந்த ஒரு ஆண்மகனை அவள் இதுவரை பார்த்ததே இல்லை. யார் இவன்? கோட்டும் சூட்டுமாய் இப்படி கலக்குகிறானே...! அவன் நிச்சயம் பெரிய பணக்காரனாக தான் இருப்பான். வீணாவிற்கு அவன் யாரென்று தெரியாது தான். ஆனால், நமது வாசகர்கள் இந்நேரம் அவன் யார் என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். அவன் சாக்ஷாத் நமது அர்ஜுன் தான்.
அர்ஜுனிடமிருந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்ட பிறகு, மேடையை நோக்கிச் சென்றான் கோவிந்தன்.
அப்பொழுது கிரியின் கைபேசி ஒலித்தது. அது கோவிலுக்கு வெளியே பாதுகாப்பில் இருந்த ஒரு பாதுகாவலனிடம் இருந்து வந்ததால், உடனே எடுத்து பேசினான் கிரி.
"சொல்லு, முகேஷ்"
"ஒரு பொண்ணு, கல்யாணத்துக்கு வந்தே தீருவேன்னு தகராறு பண்ணிக்கிட்டு இருக்கு சார்"
"பொண்ணா?"
"ஆமாம், சார்"
"அவளுக்கு ரெண்டு கிஃப்டா குடுத்து அனுப்புங்க"
"முயற்சி பண்ணி பாத்துட்டேன் சார். ஆனா, அவ எதையும் வாங்கிக்க மாட்டேங்கிறா"
"ஓஹோ..." என்றான் ஆச்சரியமாக.
"அந்த பொண்ணு, கல்யாண பொண்ணோட ஃப்ரண்டுன்னு நினைக்கிறேன், சார்"
"அவ பேர் என்னன்னு கேட்டியா?"
"ரேவதி"
இந்துவின் நெருங்கிய தோழியின் பெயர், ரேவதி என்று விமலா கூறியது கிரியின் நினைவுக்கு வந்தது.
"சரி, லைனிலேயே காத்திரு. நான் சொல்லும் போது அவளை உள்ளே விடு."
"எவ்வளவு நேரம், சார்?"
"ஐயர் , மணப்பெண்ணை கூப்பிடுற வரைக்கும்"
"ஓகே சார்"
ஐயரின் மீது கவனத்தையும், காதில் கைப்பேசியையும் வைத்துக்கொண்டு காத்திருந்தான் கிரி. ரேவதி, பாதுகாவலர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தது அவன் காதுகளில் விழுந்தது.
"நீங்க யாரு என்னை தடுத்து நிறுத்த? இந்து என்னுடைய ஃப்ரெண்டு. என்னை உள்ளே போக விடுங்க. என்னை உள்ள விடலன்னா நடக்குறதே வேற..."
"மேடம், கொஞ்சம் அங்க பாருங்க. ஜனங்க நாங்க கொடுக்குற கிஃப்டை வாங்கிகிட்டு எவ்வளவு சந்தோஷமா போறாங்கன்னு. நீங்க வேணும்னா, இன்னும் கூட ஒரு வெள்ளிக் கிண்ணம் எக்ஸ்ட்ராவா வாங்கிக்கோங்க"
"உங்க வெள்ளிக் கிண்ணத்தை தூக்கி குப்பையில போடுங்க. நான் என்னோட ஃபிரண்ட் கல்யாணத்தை பாக்கணும். அது தான் எனக்கு சந்தோஷம்"
தன் கைப்பேசியை காதில் வைத்துக்கொண்டு, கிரியின் கட்டளைக்காக காத்திருந்தான் முகேஷ். கிரியோ பண்டிதரை பார்த்துக்கொண்டு காத்திருந்தான்.
"கல்யாண பெண்ணை அழைசிண்டு வாங்கோ" என்றார் பண்டிதர்.
"அவளை உள்ளே விடு" என்றான் கிரி.
"ஓகே சார்" என்று அழைப்பை துண்டித்து விட்டு,
"மேடம் நீங்க போகலாம்" என்று ரேவதியிடம் கூறினான்.
அவள், விட்டால் போதும் என்று தலை தெறிக்க கோவிலுக்குள் ஓடி வந்தாள்.
அதே நேரம், இந்துவை மேடைக்கு அழைத்து வந்தார் விமலா.
அவளை பார்த்ததும், அந்த ஒரு குறிப்பிட்ட மனிதனின் கண்கள், இயங்க மறந்து, அப்படியே அவள் மீது பதிந்து நின்றது. மெல்லிய தங்க நிற கோடு போட்ட, அரக்கு நிற பட்டுப்புடவையில், காண்பவரை வசீகரிக்கும் வண்ணம், எழிலோவியமாய் காட்சி தந்தாள் இந்து. புகைப்படத்தில் பார்த்ததை விட, நேரில் அவள் மிக அழகாக இருந்தாள். கிரி கூறியது போல, மிகவும் சின்ன பெண்ணாக தான் இருந்தாள். அவளுடைய மருண்ட பார்வை, அவனை எதோ செய்தது.
இந்து மேடையை நோக்கி செல்வதை பார்த்த ரேவதி, அவளை நோக்கி ஓடி சென்று அவள் முன் மூச்சுவாங்க நின்றாள். அவளை பார்த்தவுடன், சந்தோஷமாய் அவளை அணைத்துக் கொண்டாள் இந்து.
அர்ஜுன் கிரியை நோக்கி, அவள் யார்? என்பது போல ஒரு கேள்வி பார்வையை வீசினான்.
"ரேவதி" என்றான் கிரி.
தன் புருவத்தை உயர்த்தி, லேசாய் தலையசைத்தான் அர்ஜுன்.
"எதுகாக இவ்வளவு லேட்டா வர?" என்றாள் இந்து.
"அதை ஏன் கேக்குற? என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியுமா?" என்று அவள் கூற,
"அட, இது கதை சொல்ற நேரமா? அவளை போக விடு. நீ அப்புறமா அவகிட்ட பேசிக்கோ" என்றாள் விமலா.
அங்கிருந்து சென்று, முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் ரேவதி.
இந்து, கோவிந்தனின் பக்கத்தில் அமர, அவன் லேசாய் தள்ளி அமர்ந்து கொண்டான். அவனுடைய அந்த செயல், வித்யாவை குழப்பியது. அவன் எப்பொழுதும் இந்துவை பார்த்து வழிந்து கொண்டிருந்ததை அவள் கண்கூடாய் பார்த்திருக்கிறாள். அவளை சந்திக்க காரணங்களை தேடுவான் அவன்.
வீணாவின் கண்கள், அர்ஜுனின் மீதிருந்து அகலவே இல்லை. அந்த அழகான வாலிபன், மேடையை நோக்கி சென்ற போது அவள் புரியாமல் முகம் சுளித்தாள்.
புரோகிதர், தாலியை எடுத்து கோவிந்தனை நோக்கி நீட்டிய பொழுது, அதை வாங்காமல் அவன் பின்னோக்கி நகர, அவர் கையில் இருந்து அந்த தாலியை பெற்று, இந்துவின் கழுத்தில் கட்டினான் அர்ஜுன். இவை அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.
வித்யா, குய்யோ முய்யோ என்று கத்த ஆரம்பிக்க, தன் தலையை உயர்த்தி, நிகழ்ந்தது என்ன என்று புரியாமல் பார்த்தாள் இந்து. தன் வலப்பக்கம் அவள் தலையை திருப்ப, கோவிந்தனுக்கு பதிலாக அங்கு வேறு யாரோ அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அவளைப் பார்த்து குளிர்ச்சியாய் புன்னகைத்த அர்ஜுன்,
"ஹாய்" என்றான்.
"யார் நீங்க?"
"உன்னோட புருஷன்"
அதிர்ச்சியுடன் வித்யாவை நோக்கி தன் கண்களை திருப்பிய இந்துவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. துப்பாக்கி ஏந்திய இருவர், அவளை நகர விடாமல் நிறுத்தி வைத்திருந்தார்கள். வீணாவின் நிலையும் அதே தான். அதைப் பார்த்து இந்து மட்டுமல்ல, அவளுடைய தோழி ரேவதியும், பண்டிதரும் கூட வெலவெலத்துப் போனார்கள்.
கை நடுங்க அவர் குங்குமத்தை அர்ஜுனனை நோக்கி நீட்டினார்.
"அவா நெத்தி வகிட்டுல வச்சி விடுங்கோ" என்றார் நடுக்கத்துடன் பண்டிதர்.
அதிலிருந்து ஒரு சிட்டிகை குங்குமத்தை எடுத்து, அதிச்சியடைந்திருந்த அவள் வகிட்டை நிரப்பினான் அர்ஜுன்.
"நெக்ஸ்ட்?" என்றான் அர்ஜுன்.
"அக்னியை மூணு முறை வலம் வரணும்"
"அது எதுக்கு?"
"அது கணவனும் மனைவியும் பிரமாணம் எடுத்துண்டதுக்கு சமம்"
"என்ன பிரமாணம்?"
"நான் அதை விளக்கமா சொல்லணும்னு நினைக்கிறேளா?"
அனாயாசமாக தன் தோளை குலுக்கினான் அர்ஜுன்.
"அக்கினி சாட்சியா, நான் எப்பவும் உனக்கு உறுதுணையா இருப்பேன். கஷ்ட காலங்களில் உனக்கு பக்க பலமா நிப்பேன். உன்னை மனசார காதலிப்பேன்."
காதல் என்ற வார்த்தையை கேட்டு, பயத்துடன் தன் சேலையைப் பற்றிக் கொண்டு, தலை குனிந்து கொண்டிருந்த இந்துவை பார்த்து புன்னகைத்தான் அர்ஜுன்.
"நல்லதோ கெட்டதோ, கஷ்டமோ நஷ்டமோ, வாழ்வோ தாழ்வோ, உன்னையே முதன்மையாய் நிறுத்தி, வாழும் காலம் வரை, அன்பு என்ற வார்த்தையை, சொல்லிலும் செயலிலும் நிறுத்தி உனக்காக வாழ்வேன்" என்று கூறி முடித்தார்.
"பிரமாணங்கள் எல்லாம் பிரமாதம்... இல்லயா, இந்து?" என்றான் உதட்டோர புன்னகையுடன் அர்ஜுன்.
அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை இந்து. அக்னியை வலம் வரும் நோக்கில், எழுந்து நின்றான் அர்ஜுன். இந்துவோ, நகரவும் மறுத்து அமர்ந்திருந்தாள். முன்பின் தெரியாத இந்த மனிதனுடன், புனித பிரமானங்களை எடுக்க அவள் தயாராக இல்லை.
"மூணு ரவுண்டு தானே?" என்றான் அர்ஜுன்.
"ஆமாம்" என்றார் பண்டிதர்.
யாரும் எதிர்பாராத வண்ணம், அவளைத் தன் கையில் அள்ளிக்கொண்டு அக்னியை வலம் வரத் துவங்கினான் அர்ஜுன். இந்து மட்டும் அல்ல அங்கிருந்த அனைவரும் விக்கித்து நின்றார்கள். அவன் வித்தியாசமான விதத்தில் அக்னியை வலம் வந்ததை பார்த்து, கிரியே கூட பிரமித்துப் போனான். இதற்கே இப்படி என்றால், அவள், அவனை காதலிக்காமல் போனால் என்ன செய்ய போகிறானோ அர்ஜுன் என்று நினைத்தான் கிரி.
மூன்று முறை வலம் வந்த பின், தன் கையிலிருந்த, யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல், பயத்துடன் கீழே குனிந்து கொண்டிருந்த இந்துவை பார்த்தான் அர்ஜுன்.
"அப்புறம் என்ன?" என்றான் பண்டிதரிடம்.
"பெரியவா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்கோ..." என்றார்.
பெரியவள் என்று அங்கிருந்த வித்யாவிடம் ஆசிர்வாதம் வாங்க அவனுக்கு விருப்பமில்லை. தன்னிடமிருந்து மரியாதையை பெரும் தகுதி அவளுக்கு இருப்பதாக அவன் நினைக்கவில்லை.
"அப்புறம்?"
"அவ்வளவு தான்"
"அப்படின்னா, நான் இந்துவை கூட்டிக்கிட்டு போகலாமா?"
என்ற அவனை பேரதிர்ச்சியுடன் பார்த்தாள் இந்து. அவனுடன் செல்வதா?
"அழைச்சுண்டு போகலாம்... அவா, இப்போ உங்க ஆத்துக்காரி ஆயிட்டா. அதனால நீங்க அவாளை பேஷா அழைச்சிண்டு போங்கோ"
"நீ நடந்து வரியா? இல்ல, நான் தூக்கிகிட்டு போகணுமா?" என்றான் மிக அமைதியாய்.
"நான் எங்கயும் வரமாட்டேன்" என்றாள் இந்து.
அவன் கையில் இருந்து கீழே இறங்க அவள் முற்பட, அவளைப் பிடித்திருந்த அர்ஜுனின் பிடி மேலும் இறுகியது.
"உங்க வீட்டு பத்திரத்துல, நான் கையெழுத்துப் போட வேண்டாமா?" என்றான் இரகசியமாக.
தாங்காத திகைப்புடன் அவனை பார்த்தாள் இந்து. அதைப் பற்றி இவனுக்கு எப்படி தெரியும்? அதைப் பற்றி பேச இவன் யார்? அப்போது தான் அவளுக்கு ஒரு உண்மை உறைத்தது. அவனுடைய அப்பா எழுதிய உயிலின் படி, அவளுடைய கணவன் அந்த பத்திரத்தில் கையொப்பமிட்டாக வேண்டும். அப்படியென்றால், இந்த மனிதன் தானே அவளுடைய கணவன்? மேற்கொண்டு எதுவும் செய்ய இவனுடைய கையெழுத்து அவசியம் ஆயிற்றே...
அவளுடைய அதிர்ச்சி நிறைந்த முகத்தை நோட்டம் விட்டான் அவன். இதற்கு மேல் அவள் ஏதும் பேச மாட்டாள் என்று புரிந்துகொண்டு, இந்துவை தன் கைகளிலும், புன்னகையை தன் இதழ்களிலும் சுமந்து கொண்டு அங்கிருந்து நடக்கத் துவங்கினான் அர்ஜுன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top