4 விபரம்
4 விபரம்
அர்ஜுன் அளித்த விளம்பரத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஏகப்பட்ட தொலைப்பேசி அழைப்புகளை பெற்றான் கிரி. இடைவிடாத அழைப்புகளால் அவன் திக்குமுக்காடிப் போனான். ஏனெனில், அவன் பெற்ற பெரும்பாலான தகவல்கள் பொய்யானவை. பணத்திற்கு ஆசைப்பட்டு, பலர் ஏதேதோ புளுகி தள்ளினார்கள். அனைவரையும் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் வந்து அவனை சந்திக்குமாறு கூறினான். சிலர் உண்மையாகவே சரியான ஆதாரங்களுடன் அவனை சந்தித்தார்கள். இந்து படித்த பள்ளியின் காவலாளி, அவள் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடைக்காரர், அவள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் உதவியாளர், மற்றும் அவளுடைய அண்டை வீட்டுக்காரியான விமலா.
கிரி, அர்ஜுனுக்கு தகவல் தெரிவிப்பதற்கு அவனை கைபேசி மூலம் அழைத்தான். அனலாய் தகித்துக் கொண்டிருந்த தன் மனதை குளிர்விக்க, நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தான் அர்ஜுன். கிரி கூறியதைக் கேட்டு அவன் ஆர்வமானான்.
"நான் இந்துவை பத்தி எல்லா தகவலையும் சேகரிச்சிட்டேன்"
"தகவல் கொடுத்தவங்களை திருப்பி அனுப்பிட்டியா?"
"இல்ல. அவங்க இன்னும் இங்க தான் இருக்காங்க"
"நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரேன்"
"அர்ஜுன்..." என்று இழுத்தான் பதட்டமாய்.
"எஸ்...?"
"நம்ம கொஞ்சம் ஃபாஸ்டா ஆக்ட் பண்ணணும்"
"எனிதிங் சீரியஸ்?"
"ஆமாம். நாளைக்கு இந்துவுக்கு கல்யாணமாம்"
"வாட்....?" என்றான் அதிர்ச்சியாக.
"அவங்க சித்தி, மனைவியை இழந்து, இரண்டு குழந்தைங்களோட இருக்கிற ஒருத்தருக்கு அவங்களை கல்யாணம் பண்ணி கொடுக்க போறாங்களாம்"
"வாட் த ஹெல்..." என்று உறுமினான்.
"நான் எல்லா டீடைல்சையும் கலெக்ட் பண்ணி இருந்தாலும், உனக்கு தேவைப்பட்டா, நீ அவங்களை என்கொயரி பண்ணிக்கலாம்"
"பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன்"
அழைப்பை துண்டித்தான் அர்ஜுன். கிரிக்கு தெரியும் அவன் ஏன் அந்த பத்து நிமிடத்தை கேட்டான் என்று. இந்துவிற்கு நாளை கல்யாணம். அதுவும் இரண்டாம் தாரமாக, என்ற செய்தியைக் கேட்டு கொதிக்கும் அவன் ரத்தத்தை குளிர்விக்கத் தான் அந்த பத்து நிமிடம். அவன் நினைத்தது சரி தான்.
நீச்சல் குளத்தின் பக்கத்தில் இருந்த, இரும்பு நாற்காலியில் அமர்ந்து, கண்களை மூடி, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் அர்ஜுன். இந்துவின் புகைப்படத்தை பார்த்த நாளிலிருந்து, அவன் எந்த அளவிற்கு நிம்மதி இழந்திருந்தான் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். மந்திரத்தால் அவனைக் கட்டிப்போட்டது அவளா, அல்லது அவளுடைய புன்னகையா, என்பது அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு நிம்மதியும் இல்லை, தூக்கமும் இல்லை. இந்துவால் பல இரவுகளை தூக்கமின்றியும், பல பகல்களை நிம்மதியின்றியும் கடந்தான் அர்ஜுன். அந்த பெண் தான் அவனுடைய தூக்கத்தை களவாடிவிட்டாள். நிம்மதியின்மை அவனை வாட்டி வதைத்தது. இந்துவைப் பற்றிய எண்ணம், அவன் மனதிற்கு ஒரு வித வலியைத் தந்தது.
அந்தப் பெண்ணை காதலித்து விடுவோமோ என்ற பயமும் அவனுக்கு இருந்தது. அவளை அவன் காதலிக்க துவங்கிவிட்டதை ஒப்புக் கொள்ள அவன் பயந்தான். அவள் அவனை நேசிக்க தொடங்கும் வரை, அவளை காதலித்துவிடக் கூடாது என்று அவன் உறுதியாக இருந்தான். ஏனென்றால், ஒரு தலைக்காதல் எப்பொழுதும் வலியை தான் தரும் என்பதை அவன் அம்மாவின் கதையிலிருந்து தெரிந்து கொண்டிருந்தான். அவன் அம்மா செய்த அதே தவறை செய்ய அவன் விரும்பவில்லை.
அதே நேரம், அவன் காரணம் இல்லாத கோபம் கொண்டான். அவள் எப்படி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கலாம்? எப்படி அவன் அம்மாவின் இதயம் அதற்கு ஒப்புக் கொண்டது...?
சற்று ஆஸ்வாசபடுத்திக் கொண்டு, உண்மையை உணர்ந்து, தன் கண்களை திறந்தான். இந்துவை தன் வாழ்க்கையில் கொண்டு வர வேண்டியது அவனுடைய பொறுப்பு, அவன் அம்மாவின் பொறுப்பல்ல. அவன் அம்மா, தன் இதயத்தை இந்துவிற்கு வழங்கியதன் மூலம், ஏற்கனவே அவன் சென்று சேர வேண்டிய இடத்தை காட்டிவிட்டார். அதோடு அவருடைய வேலை முடிந்தாகிவிட்டது. அவன் அம்மா காட்டிய இடத்திற்கு சென்று சேர வேண்டிய பாதையை வகுக்க வேண்டியது இவனுடைய வேலை.
அவனை சந்திக்க காத்திருக்கும் அந்த சில நபர்களை, சந்திக்க சென்றான் அர்ஜுன். அவன் வந்ததும் அவனருகில் ஓடிச் சென்றான் கிரி. அவனை தெனாவெட்டான ஒரு பார்வை பார்த்து நின்றான் அர்ஜுன்.
"நீ, எனக்கும் இந்துவுக்கும் இருக்கிற வயசு வித்தியாசத்த பத்தி ரொம்ப கவலை பட்ட இல்ல...?"
அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாமல் விழித்தான் கிரி. ஏனென்றால், அவன் இந்துவிற்கு திருமணம் என்ற செய்தியை கேட்டு பதட்டத்தில் இருந்தான்.
"இப்போ அவ, ரெண்டு புள்ளை பெத்த அரைக் கிழவனை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கா. அதுக்கு நீ என்ன சொல்ற?" என்று அவன் மீது பாய்ந்தான்.
அவனுக்கு பதில் கூறும் திராணியில்லாமல் தலை குனிந்தான் கிரி.
"என்ன கண்றாவி டா இது?"
"அவங்க சித்தி... அவங்க அப்பாவோட இரண்டாவது சம்சாரம் தான் இதுக்கு காரணமாம். ஏன்னா, இந்துவோட அப்பா, இந்துவுக்கு சாதகமா உயில் எழுதி வைச்சிட்டாராம்"
"எனக்கு புரியற மாதிரி சொல்லு"
"இந்துவுக்கு அம்மா அப்பா இல்ல. அவங்க வீடு இந்து பேரில் இருக்கு. அந்த வீட்ல இருந்து வர்ற வாடகை தான் அவங்களுடைய மெயின் இன்கம். அவங்க அந்த வீட்டை, அவங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம், அவங்க புருஷன் கையெழுத்தோட தான் விற்க முடியும். அதனால் தான், அவங்க சித்தி, அவங்க கண்டிஷனுக்கு ஓகே சொன்ன ஒருத்தனோட அவசர அவசரமா அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க"
"இந்த இன்ஃபர்மேஷனை கொடுத்தது யாரு?"
"இந்துவோட பக்கத்து வீட்டுக்காரங்க... விமலா"
"அவங்க இங்க இருக்காங்களா?"
"இருக்காங்க"
"அவங்களை கூப்பிடு"
அங்கு நின்றிருந்த அர்ஜுனின் பாதுகாவலன் ஒருவனிடம், விமலாவை அழைத்து வரும்படி சைகை செய்தான் கிரி. சில விநாடிகளில் அர்ஜுனின் முன் வந்து நின்றார் விமலா.
"வணக்கம், தம்பி"
"இந்துவை பத்தியும், அவங்க குடும்பத்தை பத்தியும் எனக்கு சொல்லுங்க"
"இந்துவுக்கு மூணு வயசு இருக்கும் போதே அவ அம்மா இறந்துட்டாங்க. அவ அப்பாவும் அவ ஹை-ஸ்கூல் படிச்சிக்கிட்டிருக்கும் போது தவறிட்டாரு. இந்து ரொம்ப நல்ல பொண்ணு. பெரியவங்கள ரொம்ப மதிப்பா. முக்கியமா அவளோட சித்தி வித்தியாவோட வார்த்தையை மீறவே மாட்டா. வித்யா, அவளை அன்பா நடத்தினதே கிடையாது. ஆனா, அவளை பத்தி எந்தக் குறையுமே இந்து சொன்னதில்ல. இந்துவோட அப்பா, வித்யாவை பத்தி நல்லா புரிஞ்சுகிட்டார். அதனால தான், அந்த வீட்டை இந்து பேர்ல மாத்தி எழுதிட்டாரு. அப்ப தான், இந்துவுக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும், வித்யா அவளை நல்லா கவனிச்சுக்குவான்னு அவர் நினைச்சார். எதிர்பாராத விதமா, இந்துவுக்கு இதயத்துல பிரச்சனை வந்தது. அதை சரி பண்ணாமலேயே இந்துவுக்கு கல்யாணம் பண்ணி வச்சு, அவ சாகறதுக்கு முன்னாடி, அந்த சொத்தை தன் பேர்ல மாத்தி எழுதணும்னு வித்யா நெனச்சா. ஆனா இந்து, கல்யாணம் என்ற பேர்ல ஏற்பட இருந்த உறவை ஏமாத்த விரும்பல. (அதைக் கேட்ட பொழுது அர்ஜுனின் இதழ்கள் புன்னகையால் விரிந்தன) தனக்கு கல்யாணம் வேண்டாம்னு வித்யாகிட்ட அழுதா. வேற வழி இல்லாம, அவளுக்கு ஆபரேஷன் பண்ணா வித்யா. ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதால, இப்போ வித்யா அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கபோறா"
கிரியை பார்த்தான் அர்ஜுன். அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட கிரி,
"இந்த கல்யாணத்துல இந்துவுக்கு விருப்பமா?"
"அந்த பாவப்பட்ட பொண்ணோட விருப்பத்தை யார் தம்பி கேட்டா? வித்யா சொல்றதை, இந்து செஞ்சு தான் ஆகணும். அவளுக்கு வேற
வழி இல்ல"
இந்துவை நினைத்து பரிதாபப்பட்டான் கிரி. அர்ஜுனின் முகமோ, பாறை என இறுகிப் போயிருந்தது.
விமலா மேலும் ஏதோ கூற போக, தன் கையை உயர்த்தி, கிரி அவளை தடுத்து நிறுத்தினான். சில நொடிகளை எடுத்துக் கொண்டு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்தான் அர்ஜுன். கண்களை மூடிக் கொண்டு, ஆழமாய் மூச்சை இழுத்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் கண்களைத் திறந்தான்.
"நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க"
"கேளுங்க தம்பி"
"இந்து எங்க படிச்சா?"
"கஸ்தூரிபாய் கேர்ள்ஸ் ஸ்கூல்"
"அவளுடைய க்ளோஸ் ஃப்ரெண்ட் யாரு?"
"ரேவதி"
"அவளுடைய கார்டியாலஜிஸ்ட் யாரு?"
"டாக்டர் மகேந்திரன்"
அர்ஜுன் கிரியை பார்த்து ஏதோ சைகை செய்ய, விமலாவின் கையில் இருபது லட்சத்தை கொடுத்தான் கிரி. விமலாவின் முகம் பளீரென்று ஒளிர்ந்தது.
"நீங்க பத்து லட்சம்னு தானே சொன்னீங்க?" என்றாள் விமலா.
"இது, நீங்க இனிமே செய்யப்போற வேலைக்காக" என்றான் அர்ஜுன்.
"நீங்க நல்லா இருக்கணும், தம்பி"
"நான் சொல்றதை நீங்க செய்யணும்"
"என்ன வேணாலும் செய்றேன்"
அவள் செய்ய வேண்டிய காரியத்தை விளக்கிக் கூறினான் அர்ஜுன். சரி என்று அனைத்திற்கும் ஒப்புக் கொண்டு அங்கிருந்து சென்றார் விமலா, தனக்கு கிடைத்த திடீர் அதிர்ஷ்டத்திற்காக கடவுளுக்கு நன்றி கூறி கொண்டு.
அர்ஜுனுடைய அடுத்த கட்டளைக்காக காத்திருந்தான் கிரி. சில நொடிகள் இட வலமாக நடந்தான் அர்ஜுன். நின்று உறுதியாய் கிரிகை பார்த்தான்.
"வேற யாரெல்லாம் இருக்காங்க?"
"இந்து படிச்ச ஸ்கூல் வாட்ச்மேன்... மளிகை கடைக்காரர்... கார்டியாலஜி ஹாஸ்பிடலுடைய கம்பவுண்டர்"
"அவங்களை வரச் சொல்லு"
அவர்களையும் உள்ளே அழைக்க, அவர்களிடம் சில தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டான் அர்ஜுன். அவர்கள் செய்ய வேண்டியதை அவர்களிடம் கூறினான். மறுபடியும் அவன் கிரியை பார்த்து சைகை செய்ய, அவர்களுக்கும் தலா பத்து லட்சம் கொடுத்து சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்தானான் அர்ஜுன்.
"நீங்க எல்லாரும் சரியா கல்யாண மண்டபத்துக்கு வந்துடணும்"
"நேரத்துக்கு முன்னாடியே வந்துடுவோம்" என்றார்கள் மூவரும்.
"நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்"
சரி என்று கூறிவிட்டு, அர்ஜுனை வாழ்த்திவிட்டு சென்றார்கள் மூவரும். அவர்கள் செல்லும் வரை காத்திருந்துவிட்டு,
"எந்த பிரச்சனையும் பண்ணாமலே நம்மால கல்யாணத்தை நிறுத்த முடியும் அர்ஜுன்" என்றான் கிரி.
"எப்படி?"
"இந்துவோட சித்தி, ஒரு பேராசைக்காரி. பணம் கொடுத்தா அவங்களே இந்த கல்யாணத்தை சந்தோஷமா நிறுத்திடுவாங்க"
"அந்த பொம்பளையை சந்தோஷப் படுத்த நான் விரும்பல. கொஞ்சம் கூட இதயமே இல்லாம, இந்துவை ஒரு கிழவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவங்க நெனச்சிருக்காங்க..."
"ஆனா இந்துவும் ஒத்துக்கிட்டாங்களே"
"இங்க வந்தவங்க என்ன சொன்னாங்கன்னு நீ கேட்கலயா? இந்து ரொம்ப நல்ல பொண்ணு. அவ சித்தி சொல்றதுக்கு மறு பேச்சே பேச மாட்டாளாம்..."
"அதனால தான் சொல்றேன்... வித்யா சொன்னா இந்து கேப்பாங்க... உன்னையும் ஏத்துக்குவாங்க"
"எப்படி...? அந்த அரைக் கிழவனை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாளே, அந்த மாதிரியா? அவ சித்தி சொன்னா, அவ பிச்சைக்காரனை கூட கல்யாணம் பண்ணிக்குவா. அந்த கேவலமான லிஸ்டுல சேர நான் விரும்பல. வித்யாவுக்காக அவ என்னை ஏத்துக்க வேண்டியதில்ல. அவ எனக்காக என்னை ஏத்துக்கணும். வித்யாவுடைய பேராசையை, எப்போ, எங்க யூஸ் பண்ணிக்கணும்னு எனக்கு தெரியும். அது தான் எனக்கு இருக்கிற ஒரே ஒரு துருப்புச் சீட்டு"
"துருப்புச்சீட்டா?" என்றான் கிரி குழப்பமாக.
"அதை விடு. நான் சொன்னத செய்" என்றான் அர்ஜுன்
அவன் கூறியதை அமைதியாக கேட்டுக் கொண்டு நின்றான் கிரி.
"காட் இட்?"
ஆம் என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து செல்ல நினைத்தவனை,
"என்னோட பிளான்ல, உனக்கு எந்த பிரச்சனையும் இல்லயா?" என்றான் அர்ஜுன்.
"இந்த கல்யாணத்துல இருந்து இந்து தப்பிச்சா போதும். பாவம் அவங்க. ஹார்ட் டிரான்ஸ்பிளாண்டேஷன் ஆன கொஞ்ச நாள்ளயே, அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஒரு பொம்பளை எப்படி இவ்வளவு தைரியமா முடிவெடுக்கிறான்னு எனக்கு புரியல." என்றான் வேதனையுடன்.
அதைக் கேட்டு மென்று முழுங்கினான் அர்ஜுன்.
"ஆனா அர்ஜுன்..."
தன் புருவத்தை உயர்த்தி என்ன என்று அர்ஜுன் கேட்க, ஒன்றுமில்லை என்று தலையசைத்தான் கிரி. அவன் அங்கிருந்து செல்ல முயன்ற பொழுது,
"நீ என்ன சொல்ல நெனச்ச?" என்றான்.
"எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு, அர்ஜுன்"
"டென்ஷனா...? உனக்கா...? நீ தான் எப்பவும் கூலா இருப்பியே....?"
"இந்த விஷயம், நீ சம்பந்தப்பட்டதா இல்லன்னா நான் கூலா தான் இருந்திருப்பேன் "
"நிஜமாவா?" என்றான் புன்னகையுடன்.
"இந்துவை, உன்னை புரிஞ்சுக்க வைக்கிறது அவ்வளவு சுலபமா இருக்காது. நீ ரொம்ப கஷ்டப்பட்டு தான் அதை செய்ய வேண்டியிருக்கும்"
"உண்மை தான்... இவங்க சொல்றதையெல்லாம் வச்சி பார்த்தா, இந்த நேரம் அவள் அந்த கிழவனை வணங்க ஆரம்பிச்சிருப்பா. பாக்கலாம்... இந்துமதி என்ன செய்யப் போறான்னு..." என்றான் லேசான கோபத்துடன்.
அது கிரிக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. அர்ஜுன், அவனை சோதித்து பார்த்ததை போல, இந்துவையும் சோதிப்பானோ? அவன் தான், சோதித்துப் பார்க்காமல் யாரையும் எளிதில் நம்ப மாட்டானே. கிரியும் அவனுடைய சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவன் தானே! அவனிடம் பணிபுரியும் ஒரு மேலாளருக்கே அந்த நிலைமை என்றால், அவனுடன் வாழ்நாள் முழுவதும் வாழப்போகும், அவனுடைய மனைவியை சும்மாவா நம்பி விடுவான்? அந்த எண்ணமே கிரிக்கு நடுக்கத்தை தந்தது.
இந்துவை மணமுடிக்க, அர்ஜுன் செய்திருக்கும் திட்டம் நிச்சயம் இந்துவிற்கு மன வருத்தத்தை அளிக்கும். அவள் எப்படி அர்ஜுனை புரிந்துகொள்ள போகிறாளோ தெரியவில்லை. அது மட்டுமல்லாது, அர்ஜுனுடைய வித்தியாசமான அணுகுமுறைகளை எப்படி அவள் எதிர்கொள்ள போகிறாளோ தெரியவில்லை. ஏனென்றால், அர்ஜுனை யாராலும் கணிக்க முடியாது. அவனுக்கு என்ன வேண்டும், அவன் எதிர்பார்ப்பது என்ன, என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top