3 விளம்பரம்
3 விளம்பரம்
இந்துமதியின் புகைப்படத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவனுக்குள் புதிதாய் ஏற்பட்டிருக்கும் உணர்வுகளை அவனாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் எப்பொழுதும் இது போல் இருந்ததில்லை. அவன் அம்மாவின் இதயத்தை அவள் கொண்டிருக்கிறாள் என்பதற்காகத் தான் அவளைத் தேடிப் பிடிக்க நினைத்தான். ஆனால் இப்பொழுது, அந்த பெண்ணை பார்த்த பிறகு, அவன் மனதின் எண்ண ஓட்டத்தின் மீது அவனுக்கே சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
அவள் புகைப்படத்தை தன் கட்டை விரலால் மெல்ல வருடினான். அவள் அவனுக்கு வேண்டும். எப்பொழுதும் அவள் அவனுடன் இருக்க வேண்டும். அவளுக்கு அதில் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி அவன் கவலை படவில்லை. அவள் அவனுடன் இருந்து தான் தீர வேண்டும். அவளுக்கு வேறு வழியில்லை. ஏனென்றால், அவள் அவனுடைய அம்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவள்.
அவனுடைய அம்மா எப்போதும் கூறுவார், காரணம் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை என்று. அதைப் போலத் தான், இந்துமதி அவனுடைய அம்மாவின் இதயத்தை பெற்றதற்கும் ஏதோ ஒரு காரணம் நிச்சயம் இருக்கும் என்று அவன் நம்பினான்.
பாண்டிச்சேரி
கிரி மட்டுமல்ல, அவனுடைய ஆட்களும் பாண்டிச்சேரி முழுவதும் இந்துமதியின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, அலையோ அலையென்று அலைந்து கொண்டிருந்தார்கள். பாண்டிச்சேரியில் இருந்த மூலை முடுக்கெல்லாம் அவளைத் தேடி திரிந்தார்கள். பாண்டிச்சேரியில் வசிப்பது என்னவோ மூன்றறை லட்சம் பேர் தான் என்றாலும், பத்தொன்பதரை கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது பாண்டிச்சேரி. ராம் லாட்ஜின் பெண் கூறிய கீழுர் மொத்தமும் அலசியாகிவிட்டது. ஆனால், இந்துமதியைப் பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால் கிரிக்கு வேறு வழியும் இல்லை. அவன் எப்படியும் அவளை தேடிக் கண்டுபிடித்து தான் தீரவேண்டும். முடியவில்லை என்றோ, கிடைக்கவில்லை என்றோ, ஒரு பதிலை அவன் அர்ஜுனிடம் சொல்லிவிட முடியாது.
அவர்கள் தேடினார்கள்... தேடினார்கள்... தேடிக்கொண்டே இருந்தார்கள்.
ஒரு மாதத்திற்கு பிறகு...
அர்ஜுனின் பொறுமை எல்லை கடந்துவிட்டிருந்தது. அடிபட்ட சிங்கத்தைப் போல் தன் அறையில் இங்குமங்கும் உலவிக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவன் தன் மீது தான் அதிக கோபத்துடன் இருந்தான். இந்துமதியை கண்டுபிடிக்க வக்கற்றவனாக தன்னை நினைத்தான். தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்தவன், மேஜை மீது இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து கண்ணாடியில் விட்டெறிந்தான். அந்த விலை உயர்ந்த பெல்ஜியம் கண்ணாடி, சுக்கு நூறாய் சிதறியது. அந்த சிதறிய கண்ணாடி துகளின் மீது கோபத்துடன் முழங்காலிட்டு அமர்ந்தான். அந்தக் கண்ணாடி துகள்கள் ஏற்படுத்திய வலியை அவன் பொருட்படுத்தவில்லை. அவன் மனதிற்குள் ஏற்பட்டிருந்த வலியைவிட அது ஒன்றும் பெரிய வலியாக அவனுக்கு தெரியவில்லை. இந்துமதியை தேடி கண்டுபிடிக்கும் வரை, அவன் தன்னைத் தானே வருத்திக் கொள்வதை நிறுத்த போவதில்லை.
பாண்டிச்சேரி
இந்துமதி தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். இன்று அவளை பெண் பார்க்க வருகிறார்கள். ஆம். அவளுடைய சித்தி வித்யா, அவளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தார். இந்துவுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக அவர் அதை செய்யவில்லை. இந்துவுக்கு திருமணம் நடந்தால் தான், அவள் பெயரில் இருக்கும் சொத்து வித்யாவின் கைக்கு வரும். இந்துவின் தகப்பனார் சந்திரன், அப்படித் தான் உயில் எழுதி வைத்திருந்தார்.
இந்துவின் அம்மா வளர்மதி, இந்து மூன்று வயது குழந்தையாக இருக்கும் போதே இறந்துவிட்டார். சின்ன குழந்தையான இந்துவை கவனித்துக் கொள்வதற்காக ஒரு பெண் வேண்டும் என்று அவளுடைய அப்பா, வித்யாவை மறுமணம் செய்து கொண்டார். ஆனால், வித்யாவோ, கடைந்தெடுத்த மாற்றாந்தாயாக நடந்து கொண்டார்.
ஒரு கண்ணில் வெண்ணையும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்த வித்யாவின் குணம் தான், சந்திரனை அப்படி ஒரு உயில் எழுத வைத்தது. எனவே, வேறு வழியின்றி இந்துவை அவளுடைய திருமணம் வரை வித்யா கவனித்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.
அந்த உயிலின்படி,
"அவர்கள் வசிக்கும் வீடு இந்துவுக்கு சொந்தமானது. அவள் தன் விருப்பபடி அந்த சொத்தை விற்க முடியாது. அவளுக்கு திருமணம் முடிந்ததும், அவள் கணவனின் கையெழுத்தையும் பெற்றால் தான், அந்த சொத்தை அவர்களால் விற்க முடியும்."
இந்துவின் இதயத்தில் பிரச்சினை இருப்பதை தெரிந்து கொண்டார் வித்யா. தனக்கு இதயத்தில் பிரச்சனை இருந்ததால் திருமணம் செய்து கொள்ள மறுத்தாள் இந்து. எனவே, வேறு வழியின்றி, இந்துவிற்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய, லயன்ஸ் கிளப்பின் துணையை நாடினார் வித்யா. உண்மையிலேயே அவர்கள் துணையற்றவர்கள் தான் என்று தெரிந்து கொண்டு, லைன்ஸ் க்ளப் பிரசிடென்ட் அவர்களுக்கு உதவ முன்வந்தார்.
வித்யா தவறான முகவரியை கொடுத்ததற்கு காரணம், அறுவை சிகிச்சைக்கு பிறகு, எந்த காரணத்திற்காகவும், யாரும் இந்துவை நெருங்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான். இந்து அவருக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதே அவருடைய எண்ணம்.
இப்பொழுது, இந்துவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. அவளை, மனைவியை இழந்த, இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனுக்கு மணம் முடிக்க வித்யா பேசி முடித்துவிட்டாள். அப்படிப்பட்ட ஒருவன் தானே, அவளுடைய அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பான்...? வித்யா தேடி படித்த மாப்பிள்ளை கோவிந்தனும் அவள் கூறிய அனைத்திற்கும் ஒப்புக் கொண்டுவிட்டான். அந்த சொத்தில் தனக்கு எந்த பங்கும் வேண்டாம் என்றும் கூறிவிட்டான். லட்டு மாதிரி ஒரு பெண் கிடைத்தால் அவன் ஏன் ஒப்புக்கொள்ள மாட்டான்? தேதியை குறிப்பிடாமல், வித்யா நீட்டிய பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டான். ஆம், புத்திசாலித்தனமாய் அவனிடம் திருமணத்திற்கு முன்பே கையெழுத்து வாங்கிவிட்டாள் வித்யா. ஒருவேளை அவன் திருமணத்திற்கு பிறகு ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது? என்ற முன்னெச்சரிக்கை தான் அதற்கு காரணம்.
இந்து வித்யாவை ஒரு வார்த்தை கூட மறுத்துப் பேசவில்லை. பேராசைக்காரியான ஒரு பெண்ணிடம் அவள் வேறு என்ன எதிர்பார்த்துவிட முடியும்? வித்யா, எப்பொழுதும் இந்துவை அவளுடைய மகள் வீணாவிற்கு இணையாக நடத்தியதே கிடையாது. அதனால், வாழ்க்கை வெள்ளம் போகிற போக்கில் செல்வது என்று தீர்மானித்துவிட்டாள் இந்து.
இந்துவின் திருமணம் கோவிந்தனுடன் நிச்சயமானது. வித்யா, கனவில் மிதக்க தொடங்கினாள்.
ஆனால்... அவளுக்கு எப்படி தெரியும், அவளுடைய கனவை உடைத்தெறிய ஒருவன் ஏற்கனவே பாண்டிச்சேரி மண்ணில் வந்து இறங்கிவிட்டான் என்று?
இதற்க்கிடையில்...
தனது பொறுமையை முழுதும் இழந்தவனாய் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கினான் அர்ஜுன். அவன் பார்வையால் நெருப்பை உமிழ, அதை தாங்க இயலாமல் தலை குனிந்தான் கிரி.
"ஒரு பொண்ண கூட உன்னால தேடி கண்டுபிடிக்க முடியலயே, உனக்கு வெக்கமா இல்லயா? நீ என் மேனேஜர்னு சொல்லாத. உன் கையாலாகாத தனத்தை வச்சி, பாக்குறவங்க என்னையும் உன்னை மாதிரியே திறமையில்லாதவன்னு நினைச்சுக்க போறாங்க."
"ஐ அம் சாரி, அர்ஜுன்"
"உன் சாரியை தூக்கி குப்பையில போடு"
"நம்ம ஆளுங்க விடாம அவங்களை தேடிக்கிட்டே தான் இருக்காங்க. பாண்டிச்சேரியில நிறைய வில்லேஜஸ் இருக்கு. ஒவ்வொரு வில்லேஜூம் தூர தூரமா இருக்கு. அதோட மட்டும் இல்லாம, இந்து ஒரு ஹார்ட் பேஷன்ட். அவங்க வெளியில வருவாங்கன்னு நம்ம எதிர்பார்க்க முடியாது"
"எனக்கு உன் எக்ஸ்க்யூசஸ் வேண்டாம். எனக்கு அவ தான் வேணும்..."
"நாங்க முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்கோம்"
"முயற்சி பண்றீங்களா? அவ ஃபோட்டோவை வச்சி பூஜையா பண்ணிக்கிட்டு இருக்கீங்க? அந்த ஃபோட்டோவை பப்ளிஷ் பண்ணு... ஃபேஸ்புக்... ட்விட்டர்... இன்ஸ்டா... நியூஸ் பேப்பர்... எல்லாத்துலயும்..."
"நெஜமாத் தான் சொல்றியா, அர்ஜுன்?"
"அவளைக் கண்டுபிடிக்க, உன்கிட்ட வேற ஏதாவது ஐடியா இருக்கா?"
இல்லை என்று தலை அசைத்தான் கிரி.
"அப்போ, நான் சொன்னதை செய்"
எப்படி விளம்பரப்படுத்த வேண்டும் என்று அர்ஜுனன் கூறிய போது, கிரிக்கு தூக்கிவாரிப் போட்டது. அவன் தயக்கத்துடன் அங்கேயே நின்றிருந்தான். தன் புருவத்தை உயர்த்தி, அவனைப் பார்த்தான் அர்ஜுன்.
"என்ன?"
"இந்த மாதிரி நம்ம விளம்பரப் படுத்தினா, அது அவங்க எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும்" என்றான் தயங்கியபடி.
"நீ அதைப் பத்தி ஒன்னும் கவலைப்பட வேண்டாம். அவ எதிர்காலத்தை சரிப்படுத்த எனக்கு தெரியும்"
"ஒருவேளை, அது உன் கண்ட்ரோல்ல இல்லாம போனா, என்ன செய்வ?"
"இருக்கும்... எல்லாமே என் கண்ட்ரோல்ல தான் இருக்கும்... இந்துவும் இருப்பா"
"நீ என்ன சொல்ற?"
"அவ எதிர்காலம் என்கூட தான்னு சொல்றேன்"
"நீ அவங்களை கல்யாணம் பண்ணிக்க போறியா?" என்றான் நம்பமுடியாமல்.
"கல்யாணம் பண்ணிக்காம அவளை என்கூட நான் இருக்க வைக்க முடியுமா?"
முடியாது என்று தலையாசைதான்.
"அப்போ நான் சொன்னதை செய்"
"ஆனா.. அவங்க... ரொம்ப சின்ன பொண்ணா... தெரியிறாங்க..." இழுத்தான் கிரி.
தன் கண்களை சுருக்கினான் அர்ஜுன்.
"உன்னைவிட குறைஞ்சது பத்து வயசு சின்னவங்களா இருக்கலாம்"
"நீ என்ன சொல்ல வர?"
"வந்து..."
"நான் ஒன்னும் அவ மேல பாய போறதில்ல... என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்? என் அம்மா தான் என் வாழ்க்கையை வழி நடத்திக்கிட்டு போறாங்க... அவங்க இறந்ததுக்கு அப்புறமும் கூட...! அதனால தான், அவங்க இதயத்தை இந்துவுக்கு கொடுத்திருக்காங்க. ஏன்னா, அவ என் கூட இருக்கணும்ங்குறது தான் எங்க அம்மாவோட ஆசை"
அதைக் கேட்டு கிரி திடுக்கிட்டுப் போனான். அர்ஜுனுடைய அம்மாவின் இதயம், இந்துவிடம் இருக்கிறதா? அதற்காகத் தான் அவன் அவளை தீவிரமாக தேடி கொண்டிருக்கிறானா? அதனால் தான் அவள் தன் வாழ்வில் வர வேண்டும் என்று நினைக்கிறானா? அதனால் தான் அவள் கிடைக்கவில்லை என்று பரிதவித்து கொண்டிருக்கிறானா?
"எனக்கு பொண்ணுங்களை பத்தி நல்லாவே தெரியும். என் ஆடம்பரத்தையும் வசதியையும் பார்த்தா, அவ என்னையே சுத்தி சுத்தி வருவா" என்று மென்று முழுங்கினான். ஒருவித்தில், அப்படி நடப்பதில் அவனுக்கு விருப்பமில்லை.
அவன் பெண்ணினத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தான், அவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டால் திருப்தி அடைந்துவிடுவார்கள் என்று.
அர்ஜுன் கூறுவதும் உண்மை தான். இவனைப் போல பணக்காரனை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்? இந்து உண்மையை புரிந்துகொண்டு, வசதி வாய்ப்புகளை அனுபவிக்கத் துவங்கிவிடுவாள் என்று நினைத்தான் கிரி.
"ஏன் அமைதியாயிட்ட?" என்றான் அர்ஜுன்.
ஒன்றுமில்லை என்று தலையசைத்தான்.
"இல்லயே... உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுதே, உன் தலைக்குள்ள ஏதோ ஓடிக்கிட்டு இருக்குன்னு"
இது புதிதாய் தோன்றியது கிரிக்கு. ஏன் என்றால், எப்பொழுதும் அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி அர்ஜுன் கவலைப்பட்டதே இல்லை. ஆனால், இந்துவின் விஷயத்தில் அவன் எந்த ஒரு மூளை முடுக்கையும் விட்டுவிடத் தயாராக இல்லை. அதனால் கிரி சொல்வதையும் கேட்க தயாராக இருந்தான்.
"உங்க அம்மாவோட இதயம், இந்துவுக்கு கொடுக்கபடாம வேற யாருக்காவது கொடுத்திருந்தா என்ன செஞ்சிருப்ப? ஒரு கல்யாணமான பெண்ணுக்கோ, இல்ல ஒரு ஆம்பளைக்கோ... இல்ல ஒரு சின்ன குழந்தைக்கோ... கொடுத்திருந்தா...?"
அதைப் பற்றி தீவிரமாக சந்தித்தான் அர்ஜுன்.
"நீ சொல்றதும் சரி தான்... நான் எப்படி அதை பத்தி யோசிக்காம போனேன்?"
பெருமையுடன் சிரித்தான் கிரி.
"நீ சொன்ன மாதிரி நடந்திருக்க நிறைய சான்ஸ் இருக்கு. ஆனா, அப்படி எதுவுமே நடக்கல...! அப்படி நடக்க நிறைய சந்தர்ப்பங்கள் இருந்த போதும், இந்துகிட்ட தான் எங்க அம்மாவுடைய இதயம் போய் சேர்ந்திருக்கு. அதுக்கு என்ன அர்த்தம்? அது தான் எங்க அம்மாவோட விருப்பம்... புரிஞ்சுதா?"
அர்ஜுனுடைய விடாப்பிடியான பிடிவாதத்தை பார்த்து வாயடைத்துப் போனான் கிரி. இயல்பாகவே, அவன் எடுக்கும் எந்த முடிவிலும் அவன் பிடிவாதமாக தான் இருப்பான். அதிலும், அவன் அம்மா என்று வந்துவிட்டால், அவன் மனதை யாராலும் மாற்ற முடியாது.
"போய் நான் சொன்னத செய்"
"இந்த விளம்பரத்துல, நம்ம ஏன் உங்க அம்மாவோட இதயத்தைப் பத்தி எழுதக் கூடாது?"
"வேண்டாம்..." என்றான் அவசரமாக.
"ஏன்?"
"ஒருவேளை, அவ என் உணர்வுகளை தெரிஞ்சுக்குற தகுதி இல்லாதவளா இருந்தா, அவளுக்கு அந்த உண்மையை எப்பவும் நான் சொல்லமாட்டேன்"
"அப்படி இருக்கிற பட்சத்துல, அவங்களை கல்யாணம் பண்ணிக்குறதுல என்ன அர்த்தம் இருக்கு?"
"செஞ்சு தான் ஆகணும்... எது எப்படி இருந்தாலும், நான் அவளை கல்யாணம் பண்ணித் தான் ஆகணும்"
"ஒருவேளை அவங்க பணத்துல விருப்பம் இல்லாதவங்களா இருந்தா?"
"அப்படி இருந்தா ரொம்ப நல்லது. எப்போ... எப்படி... அவகிட்ட அந்த உண்மையை சொல்லணும்னு எனக்கு தெரியும்." என்றான் புன்னகை சிந்தியவாறு.
கிரிக்கு ஒரு விஷயம் புரிந்து போனது, அர்ஜுன் எல்லாவற்றிற்கும் தயார்.
அர்ஜுன் கூறியவாறு, இந்துவுடைய புகைப்படத்தை அனைத்திலும் வெளியிட்டான் கிரி.
"நீ எங்கே போனாய் இந்து? எதற்காக என்னை விட்டு சென்றாய்? எனக்கு நீ ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால், நமக்குள் இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் நான் சரி செய்துவிடுவேன். எனக்கு தெரியும் உன்னால் என்னை மறக்க முடியாது என்று. நான் உனக்காகத் தான் காத்திருக்கிறேன். தயவு செய்து என்னிடம் திரும்பி வந்துவிடு. நம்முடைய காதல் உண்மையானது. என்னிடம் வந்து விடுவாய் என்று நான் நம்புகிறேன்."
குறிப்பு: இந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு பத்து லட்சம் சன்மானமாக வழங்கப்படும்.
-அர்ஜுன் சீதாராணி
தனது அம்மாவின் பெயரைத் தான் தன் பெயருக்குப் பின்னால் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தான் அர்ஜுன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top