15 நன்றி
15 நன்றி
தங்களுக்கு எதிரில் இருக்கும் பெண், அர்ஜுனையும் இந்துவையும் பற்றி கேட்டவுடன், வீணாவும் வித்யாவும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
"நீங்க அர்ஜுனுடைய அம்மாவா?" என்றார் வித்யா.
"ஒரு விதத்துல..."
"அப்படின்னா?" கண்களை சுருக்கினார் வித்யா.
"அர்ஜுனுடைய அப்பா தான் என்னுடைய புருஷன்"
"ஓஹோ..."
"நீங்க எதுக்காக இங்க வந்திருக்கீங்க?" மாஷா.
"என் பொண்ணை அவன் வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டான்"
"வலுக்கட்டாயமாவா?" என்றார் மாஷா, அவருக்கு ஏதும் தெரியாது என்பது போல்.
"ஆமாங்க... எங்க வீட்டை விற்க எங்களுக்கு அவனோட கையெழுத்து வேணும். எங்க வீடு, இந்து பேர்ல இருக்கு. அதனால தான் நாங்க இங்க வந்திருக்கோம்."
"உங்க வீட்டை விற்க, அவனோட கையெழுத்து உங்களுக்கு எதுக்கு?"
"இந்துவுடைய அப்பா, அப்படித் தான் உயில் எழுதி வச்சிருக்காரு. இந்துவுடைய கையெழுத்தும் அவ புருஷனோட கையெழுத்தும் இல்லாம வீட்டை விக்க முடியாது"
"இந்துவோட அப்பாவா?" என்று வித்யாவின் வார்த்தையில் இருந்த வித்யாசத்தை கோடிட்டார் மாஷா.
"நான் அவரோட ரெண்டாவது மனைவி"
"ஓஹோ..."
மாஷாவிற்கு விஷயம் புரிந்தது. இவர்கள் இந்துவின் நலம் விரும்பிகளாக இருக்க வாய்ப்பு குறைவு. அவள் நினைப்பது போல இருந்தால், இவர்களை அவள் நன்றாகவே உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.
'கல்லை வீசி தான் பார்ப்போமே... மாங்காய் விழிந்தால் லாபம். இல்லாவிட்டால், வேறு உபாயம் தேடிக்கொள்வது' என்று நினைத்தார் மாஷா.
"அர்ஜுன், எதுக்காக இந்துவை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு உங்களுக்கு தெரியுமா?" மாஷா
"அவன் யாருன்னு கூட எங்களுக்குத் தெரியாது. அவனோட சரியான அட்ரஸ் கூட என்கிட்ட இல்ல. அப்படி இருக்கும் போது, அவன் எதுக்காக அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு எங்களுக்கு எப்படிங்க தெரியும்?"
"உங்க வீட்டோட விலை மதிப்பு எவ்வளவு?"
"அம்பது லட்சம்"
"நான் சொல்றதை நீங்க செஞ்சா, நான் உங்களுக்கு ஒரு கோடி கொடுக்குறேன்"
"என்னது.....? ஒரு கோடியா...?" வாயை பிளந்தாள் வித்யா.
"நாங்க என்ன செய்யணும்?" என்றாள் வீணா.
அவர்கள் செய்ய வேண்டியதை விவரித்தார் மாஷா. வீணாவிற்கு அந்த திட்டம் பிடித்திருந்தது. ஏனென்றால், இப்படிப்பட்ட ஒரு பெரு வாழ்வு இந்துவிற்கு கிடைத்ததை அவளால் தாங்க முடியவில்லை. அதனால் அதை கெடுக்க அவள் தயாராய் இருந்தாள். வித்யாவோ கோடி ரூபாக்காக எதையும் செய்ய தயாராக இருந்தார்.
"இந்து அவனை விரும்புறாளா?" மாஷா.
"இல்ல. அவ தான் எங்களை இங்க வர வழச்சா. இங்கயிருந்து அவளை கூட்டிகிட்டு போக சொல்லி எங்ககிட்ட ஃபோன்ல அவ அழுதா" வித்யா.
மாஷாவின் முகம், அவளுடைய திட்டம் இப்போதே பலித்துவிட்டதை போல ஜோலித்தது.
"அப்படினா நம்மளுடைய திட்டத்தை நிறைவேத்த எந்த சிரமமும் இருக்காது" என்றார் மாஷா.
"நான் என்ன சொன்னாலும் இந்து கேப்பா" என்றார் வித்யா.
"அப்ப சரி. கார்ல ஏறி உட்காருங்க. நான் அவங்க வீட்ல உங்களை விடுறேன்"
அவர்கள் காரில் ஏறி அமர்ந்தார்கள். மாஷா காரை ஸ்டார்ட் செய்தார். ஒரு வழியாக அவர் இழந்த சொத்துக்கள், அவர் கைக்கு திரும்பி வரப் போகிறது. அர்ஜுனுடன் நேருக்கு நேர் நின்று சண்டை போடுவது மிகவும் கடினம். ஆனால், அவனை உணர்வுபூர்வமாக சுலபமாக வீழ்த்திவிட முடியும் என்பதை மாஷா தெரிந்து வைத்திருந்தார். அவருடைய திட்டம் மட்டும் பலித்து விட்டால், அர்ஜுன் நிச்சயம் வீழ்ந்து விடுவான் என்று கணக்கு போட்டார் மாஷா.
கோவிலில்
சாமி கும்பிட்டு முடித்துவிட்டு திரும்பினாள் இந்து. அவளுடைய பார்வை அங்கிருந்த ஒரு பெண்ணின் மீது விழுந்தது. அந்தப் பெண், அர்ஜுனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சோகமாக. யார் இந்த பெண்? எதற்காக அவள் அர்ஜுன் இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாள்? அந்தப் பெண்ணும் இந்துவை பார்க்க, அவளை நோக்கி, என்ன? என்று தன் புருவத்தை உயர்த்தினாள் இந்து. அந்த பெண் ஒன்றும் இல்லை என்று தலையசைக்க,
"அவர் என்னுடைய கணவர். ஜாக்கிரதை" என்று அவளைப் பார்த்து சைகை செய்தாள் இந்து. அந்தப் பெண்ணுக்கு சங்கடமாக போனது.
இந்து காற்றில் படம் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தான் அர்ஜுன். அவள் அருகில் வந்து, அவள் யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று பார்த்வன், அங்கு ஹீனா நின்றயிருப்பதை பார்த்து அதிர்ச்சியானான். அவனை பார்த்தவுடன் தலை குனிந்து கொண்டாள் ஹீனா. அர்ஜுனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
"என்ன ஆச்சு, இந்து? அவ ஏதாவது உங்கிட்ட சிலுமிஷம் செஞ்சாளா? சொல்லு..." என்றான் கோபமாக அர்ஜுன்
"அந்த பொண்ணு உங்கள சைட் அடிக்கிறா..." என்றாள்.
"என்னது...?" என்று முகம் சுளிதான்.
ஆமாம் என்று தலையசைத்தாள் இந்து.
"நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க"
"இல்லங்க... அவ உங்களையே பாத்துகிட்டிருந்ததை நான் பாத்தேன்"
அவள் கையைப் பிடித்து ஹீனாவிடம் இழுத்து வந்தான் அர்ஜுன்.
"நீ இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க? எங்களை உளவு பார்க்க சொல்லி உன்னை இங்க அனுப்பினாங்களா உங்க அம்மா?" என்றான் அனல் தெறிக்க.
ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் இந்து. இல்லை என்று தலையசைத்தாள் ஹீனா.
"நான் கோவிலுக்கு வந்தேன். இங்க வந்ததுக்கு அப்புறம் தான் இன்னைக்கு அண்ணியோட பர்த்டேன்னு தெரிஞ்சிது"
"அண்ணியா...? யாருங்க இந்த பொண்ணு? எதுக்கு இவ என்னை அண்ணின்னு கூப்பிடறா?"
"நீ அவளுக்கு அண்ணி இல்ல. நீ அவ கூட பேச வேண்டிய அவசியமும் இல்ல"
"அண்ணா..."
"என்னை அண்ணான்னு கூப்பிடற வேலையெல்லாம் வெச்சுகாத. நான் உன்னோட அண்ணன் இல்ல. நீ என்னுடைய தங்கச்சி ஆக முடியாது... புரிஞ்சுதா உனக்கு?"
"எங்க அம்மா இவ்வளவு தப்பானவங்கன்னு எனக்கு சாத்தியமா தெரியாதுண்ணா. என்னை தயவு செய்து மன்னிச்சிடுங்க. அவங்க செஞ்ச அத்தனை தப்புக்காகவும், நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்"
இப்பொழுது இந்துவுக்கு ஓரளவு புரிந்தது அந்த பெண் யார் என்று.
"உன்னோட மன்னிப்பைக் தூக்கிக் கொண்டு போய் குப்பையில் போடு. நீ கேக்குற மன்னிப்பு, எங்க அம்மாவை எனக்கு திருப்பிக் கொடுக்குமா? அந்த மன்னிப்பு, நான் இழந்த என்னோட சந்தோஷத்தையும் வாழ்க்கையையும் எனக்கு திரும்பி கொடுக்குமா? கொடுக்காது... உன்னுடைய பாவமன்னிப்பு எதையுமே மாத்தாது"
அவன் தொண்டை அடைத்த பொழுது, இந்துவிற்கு மனது கணத்தது.
"திடீர்னு உனக்கு என்ன ஆச்சு? எதுக்காக இப்ப வந்து என்கிட்ட மன்னிப்பு கேக்குற? உன்னை எது மாத்துச்சி? நடிக்காம இங்கயிருந்து போயிடு"
"உண்மை என்னை மாத்துச்சி..."
அவள் கூறியதற்கு எந்த முக்கியத்துவமும் வழங்காமல், இந்துவின் கையை பற்றிக்கொண்டு, அங்கிருந்து நடக்கத் தொடங்கினான் அர்ஜுன். கண்ணீருடன் நின்று கொண்டிருந்த ஹீனாவை திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டு சென்றாள் இந்து. அவளுக்கு அந்த பெண்ணை பார்க்கப் பாவமாய் இருந்தது.
அர்ஜுனின் முகத்தைப் பார்த்தாலே அவன் கோபமாய் இருக்கிறான் என்று புரிந்தது இந்துவுக்கு. அவனைப் பார்க்க அவளுக்கு பயமாய் இருந்தது. ஆனாலும், அவனை எப்படியாவது சந்தோஷப்படுத்த வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அதை எப்படி செய்வது என்று அவளுக்கு புரியவில்லை. கோவிலின் வாசலில் சில பிச்சைக்காரர்கள் அமர்ந்திருந்ததை பார்த்தாள் அவள்.
"என்னங்க, தர்மம் பண்ண எனக்கு கொஞ்சம் பணம் தறீங்களா?" என்றாள்.
தனது மணிபர்ஸை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு, சென்று காரில் அமர்ந்து கொண்டான் அர்ஜுன்.
அவனுடைய மணிபர்சை கையில் வைத்துக் கொண்டு, நம்பமுடியாமல் நின்றிருந்தாள் இந்து. அவனுடைய மணிபர்சை பயன்படுத்தும் அளவிற்கு அவளுக்கு உரிமையை கொடுத்திருக்கிறானா அவன்? அதைத் திறந்து பார்க்க கூட அவளுக்கு பயமாக இருந்தது. சுதாகரித்துக் கொண்டு, அதை திறந்து பார்த்த அவள், அதில் ஒரு பெண்மணியின் புகைப்படம் இருந்ததை பார்த்தாள். அவர் அர்ஜுனுடைய அம்மாவாகத் தான் இருக்க வேண்டும். அந்த பெண்மணிக்கும், அவளுக்கும் இடையில் ஏதோ ஒரு இணைப்பு இருப்பது போல் தோன்ற, அவள் தன்னை மறந்து அப்படியே நின்றாள்.
அந்த பர்ஸில் வெறும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்தன. பக்கத்தில் இருந்த கடைக்கு சென்று சில்லறை மாற்ற எண்ணினாள். கடைக்காரரிடம் இருந்து, பத்து ரூபாய் நோட்டுகளாக பெற்றுக்கொண்டு, அதை தானம் வழங்கினாள். அவள் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவன் ஹீனாவால் அமைதியிழந்துவிட்டான். அவள் வடித்தது முதலைக் கண்ணீர் என்று நினைத்தான். அம்மாவைப் போல தன் மகளும் இருப்பாள் என்பதை அவன் ஆணித்தரமாய் நம்பினான்.
இந்து அங்கு வந்து, காரில் ஏறி அமர்ந்து கொண்டு, தன்னை சீட் பெல்ட்டால் பிணைத்துக் கொண்டாள்.
"அவங்க உங்க அம்மாவா?" என்றாள் அவனிடம் பர்சை கொடுத்தபடி.
அவள் யாரைப் பற்றி கேட்கிறாள் என்பது புரியாமல், அவளைப் பார்த்து முகம் சுளித்தான் அர்ஜுன்.
"உங்க பர்ஸில் இருக்கிற போட்டோவுல இருக்காங்களே..."
ஆமாம் என்று தலையசைத்தான் அர்ஜுன்.
"அவங்க ரொம்ப அழகா இருக்காங்க" என்று அவள் கூறியதைக் கேட்டு புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை அர்ஜுனால்.
"உங்களுக்கு, உங்க அம்மாவோட கண்ணு" என்றாள்.
எதுவும் சொல்லாமல் புன்னகைத்தான். அவனுடைய அம்மாவை பற்றி பேசத் தொடங்கியதும், அவனுடைய மனநிலை சட்டென்று மாறியதை கவனித்தாள் அவள்.
"ஏன்னு தெரியல... அவங்களை பார்த்த உடனே, எனக்கும் அவங்களுக்கும் நடுவுல ஏதோ ஒரு இணைப்பு இருக்கிற மாதிரி எனக்கு தோணுது" என்றாள்.
அர்ஜுனுடைய புன்னகை மேலும் விரிவடைந்தது.
"ஆமாம். உனக்கும் அவங்களுக்கும் ஒரு இணைப்பு இருக்கு" என்றான்.
"ஆமாம். அவங்க என்னோட மாமியார் ஆச்சே" என்றாள்
அவள் அவனுடைய அம்மாவை உரிமையோடு முறை சொல்லி அழைத்த பொழுது, அவன் இதயம் படபடத்தது. அவர்களுக்கு இடையில் இருக்கும் இணைப்பு என்னவென்று கூற வேண்டும் என்று துடித்தது அவன் இதயம். ஆனால் அதை செய்ய, அவன் மிகப்பெரிய திட்டமிட்டு வைத்திருக்கிறான். அவன் வாழ்விலேயே மிக அற்புதமானவையாக இருக்க போகும் மணித்துளிகள் அல்லவா அவை...?
"இன்னைக்கு நீ ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பேன்னு நினைக்கிறேன்" என்றான்.
"நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு சொல்ல என்கிட்ட வார்த்தையே இல்ல"
அதைக்கேட்டு பெருமிதம் கொண்டான் அர்ஜுன்.
"என்னால சொல்ல முடியலனாலும், நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு நிச்சயம் உங்ககிட்ட வெளிப்படுத்துவேன்"
"எப்படி?" என்று அவன் கேட்டதற்கு அவள் பதில் கூறவில்லை.
ஒன்றும் புரியாமல் காரை ஸ்டார்ட் செய்தான் அர்ஜுன். அதன் பிறகு இந்து எதுவும் பேசவில்லை.
அவர்கள் சீதாராணி இல்லம் வந்தடைந்தார்கள். அவள் எப்படி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்த போகிறாள் என்று எண்ணிய படி நடந்து சென்றான் அர்ஜுன். கதவின் அருகே சென்று, அழைப்பு மணியை அழுத்த அவன் கையை உயர்திய போது, தன் கரத்தால் அவன் கரத்தைப் பற்றி தடுத்து நிறுத்திய அவளை ஆச்சரியமாய் பார்த்தான் அர்ஜுன்.
அடுத்த நொடி, அவனுக்கு வாழ்நாள் அதிர்ச்சியை அளித்து, அவனை கட்டி அணைத்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் அவள். ஒன்றும் புரியாமல் சிலை போல் நின்றான் அர்ஜுன். அவனுடைய இதயம் வேகமாய் துடித்தது. அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த இந்து, நிச்சயம் அதை கேட்டிருப்பாள். சில வினாடிகள் அப்படியே இருந்துவிட்டு, அவனை விட்டு சற்று விலகி நின்றாள் இந்து. அவன் அவளை கட்டி அணைக்கவில்லை. பாவம் அவன் தவறு அதில் என்ன இருக்கிறது? மீளாத அதிர்ச்சியில் அல்லவா இருந்தான் அவன்...! என்ன நடக்கிறது என்பதே அவனுக்கு புரியவில்லை.
மேலும் அவனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவள் அவன் முகத்தை கையால் ஏந்தி, அவன் நெற்றியில் இதழ் பதித்தாள். அவள் என்னவோ அவன் நெற்றியில் தான் முத்தமிட்டாள், ஆனால் அது, அவனுடைய உயிரையே தொட்டுப் பார்த்தது.
"நீங்க எனக்கு செஞ்ச எல்லாத்துக்கும் தேங்க்ஸ்" என்றாள்.
அழைப்பு மணியின் பொத்தானை அழுத்திவிட்டு தலை குனிந்து நின்றாள் அவள். அவளுக்கு தெரியும், தன் மனதில் ஏற்பட்ட திடீர் கலவரத்துடன், அர்ஜுன் அவளை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று. வேலன் கதவைத்திறந்த அடுத்த நொடி, அவள் உள்ளே ஓடிச் சென்றாள். அவளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றான் அர்ஜுன்.
அவர்களுக்கு தெரியாது, அவர்களை சில கண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன என்று. அங்கு நடந்தவற்றை பார்த்து, அந்த கண்கள் அதிர்ச்சியில் உறைந்தன. ஆம்... அவர்கள் சமீபத்தில், நமது காதல் தம்பதிகளுக்கு எதிராக கைகோர்த்துகொண்ட, பெண்கள் தான்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top