14 மகாராணி
14 மகாராணி
மறுநாள் காலை
குளித்து முடித்து, அறையை விட்டு வெளியே வந்தாள் இந்து. அந்த இல்லம் முழுவதும் பூக்களாலும், வண்ண கோலங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்ததை பார்த்து பிரமித்து போனாள் அவள். ரம்யா பூஜை அறையை சுத்தப்படுத்தி கொண்டிருந்ததை பார்த்து, அவளிடம் வந்தாள்.
"இன்னைக்கு ஏதாவது விசேஷமா, ரம்யா?" என்றாள்.
"இந்த அரண்மனையையோட மகாராணிக்கு இன்னைக்கு பிறந்தநாளாம்" என்றாள் ரம்யா புன்னகையுடன்.
ஒரு நிமிடம் யோசித்து நின்றவள்,
"அவரோட அம்மாவுக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாளா?" என்றாள்.
மகாராணி என்னும் அந்தஸ்தில் தன்னை வைத்து பார்க்கும் அளவிற்கு அவள் பேராசைக்காரி இல்லை அல்லவா....?
"யாரோட அம்மாவுக்கு?" என்றாள் ரம்யா.
"இப்போ நீ தானே சொன்ன, இந்த வீட்டோட மகாராணிக்கு பிறந்தநாளுன்னு...?"
"நான் சொன்னது உங்களைத் தான்"
அதைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றாள் இந்து. அளவில்லாத அதிர்ச்சியுடன் ரம்யாவை ஏறிட்டாள். இந்த அலங்காரம் எல்லாம் அவளுக்காக செய்யப்பட்டதா? இந்த வீட்டில், அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறதா?
"நீ இப்ப என்ன சொன்ன?" என்றாள் அதிர்ச்சியுடன்.
அவளுக்கு பதில் அளிக்காமல், அங்கிருந்து புன்னகையுடன் நகர்ந்து சென்றாள் ரம்யா.
"ரம்யா நில்லு... எனக்கு பதில் சொல்லிட்டு போ..."
அப்பொழுது அவள் பின்னால் இருந்து,
"ஹாப்பி பர்த்டே" என்ற ரம்மியமான குரலை கேட்டு, திரும்பினாள்.
அவளுக்கு மிக அருகில் அர்ஜுன் நின்று கொண்டிருப்பதை பார்த்து தடுமாறி, பின்நோக்கி நகர, கால் தடுக்கி விழப் போனவளின் தோள்களை கெட்டியாக பற்றிகொண்டான் அர்ஜுன்.
மீண்டும், அவனுடைய பேசும் கண்களில் காணாமல் போனாள் இந்து. அவள் தோள்களில் இருந்து தன் கரங்களை விடுவித்துக் கொண்டான் அர்ஜுன், தன்னை அவள் கண்களில் தொலைத்துவிடாமல் நிலைநிறுத்திக் கொள்ள.
"உனக்கு ஒன்னும் இல்லயே?" என்றான் கரிசனத்துடன்.
"இல்ல"
"உன் கால் வலிக்கலயே?"
"இல்ல... இப்ப பரவாயில்ல"
"சரி வா, பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடலாம்"
சரி என்று தலையசைத்துவிட்டு, உணவு மேசையை நோக்கி சென்றார்கள். ஒரு நாற்காலியை லேசாய் இழுத்து, அவளை அமரும்படி சைகை செய்தான். அதில் அமர்ந்த அவளுக்கு, அவனே பரிமாறுவதை பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது.
"நான் எடுத்துக்கிறேனே" என்று அவள் சொன்னதைக் கேட்காமல் அவனே பரிமாறினான்.
அவளுக்கு எதை சாப்பிடுவது என்றே புரியவில்லை. அங்கு ஏராளமான டப்பாக்கள் இருந்தன. அதிலிருந்த எல்லாமே அவளுக்கு புதிதாக இருந்தது. அவற்றை எல்லாம் இதற்கு முன் அவள் பார்த்ததே இல்லை. அந்த டப்பாக்களின் மீது, ஏதோ ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அங்கு இருந்த அனைத்து உணவு வகைகளிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அவள் தட்டில் அவன் வைக்க, அவள் மிரண்டு போனாள்.
"எல்லாத்தையும் டேஸ்ட் பண்ணிட்டு, உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை சாப்பிடு" என்றான்.
"இது எல்லாத்தையும் ருசி பாத்தாலே என்னுடைய வயிறு நிரம்பிடுமே..." என்ற அவளின் வர்த்தைகளை கேட்டு, களுக் என்று சிரித்தான்.
"அப்போ தினமும் ஒன்னொன்னா வரவழச்சி சாப்பிடலாம். இப்போ எது வேணுமோ சாப்பிடு"
"நீங்க சாப்பிடலயா?"
ஆமாம் என்று தலையசைத்துவிட்டு, அவனும் அவள் அருகில் அமர்ந்தான், ஏதோ, அவள் கேட்க வேண்டும் என்று காத்திருந்தவன் போல.
எல்லாவற்றையும், ஒவ்வொன்றாய் ருசி பார்த்தாள் இந்து. அதிலிருந்து ஏதாவது ஒன்றை மட்டும் அவளால் தேர்ந்தெடுக்கவே முடியவில்லை. ஏனென்றால், அனைத்து உணவு வகைகளும் நன்றாக இருந்தது. அவற்றை ருசி பார்த்ததிலேயே அவளுடைய வயிறு நிறைந்து போனது, அவள் கூறியது போலவே. அப்போது அர்ஜுன், அவளின் முன், மற்றும் ஒரு டப்பாவை வைத்தான்.
"இதை சாப்பிடு"
"ஏற்கனவே நான் ஃபுல்லா சாப்பிட்டுட்டேன்..."
"ஆனாலும், நீ இதை சாப்பிடுவ"
முகத்தை சுருக்கிக்கொண்டு அந்த டப்பாவை திறந்த அவளின் முகம், மின்னலென மின்னியது. அதில் அவளுக்கு மிகவும் பிடித்த மைசூர்பாகு இருந்தது. அதை எடுத்து அவள் தன்னை மறந்து ருசித்து சாப்பிட்டாள். அர்ஜுனும் அவள் முகத்தை பார்த்து தன்னை மறந்தான்.
ஒரு நிமிடம் சாப்பிடுவாதை நிறுத்திவிட்டு,
"இது எனக்கு பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள்.
"நான் உன்னை, அன்னைக்கு கோவிலிலிருந்து தூக்கிட்டு வந்தப்போ உன்னோட கண்ணு, அங்க இருந்த ஒரு கடையில, வச்சிருந்த இதை பார்த்து, ஒரு நொடி பளிச்சிட்டது..." என்றான் புன்னகையுடன்.
அதை கூடவா அவன் கவனித்து விட்டான்? என்பது போல அவனை ஆச்சரியமாய் பார்த்தாள் இந்து.
அவள் சாப்பிட்டு முடித்து, கை அலம்பும் வரை காத்திருந்தான் அர்ஜுன். அவளை நோக்கி வண்ண காகிதம் சுற்றப்பட்ட ஒரு டப்பாவை நீட்டி,
மறுபடியும்,
"ஹாப்பி பர்த்டே" என்றான்.
அதை அவனிடம் இருந்து எதுவும் சொல்லாமல் பெற்றுக் கொண்டாள். அங்கிருந்து செல்ல எத்தனித்தவள், ஒரு நிமிடம் நின்றாள். அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அவன் காத்திருக்க,
"ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் அவனை நோக்கி திரும்பாமல்.
அவள் குரலில் இருந்த வித்தியாசத்தை கவனித்தான் அர்ஜுன். அவள் முன்னால் வந்து, அவள் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து பதட்டம் அடைந்தான்.
"என்ன ஆச்சு?"
ஒன்றுமில்லை என்று அவள் தலையசைத்தாள்.
"இன்னைக்கு உன்னோட பர்த்டே. நீ அழக்கூடாது"
"இந்த மாதிரி நான் எப்பவுமே அழுததில்ல"
"என்ன சொல்ற?"
"சந்தோஷமா இருக்கும் போது கூட கண்ணீர் வரும்னு எனக்கு தெரியாது..." என்றாள் நா தழுதழுக்க.
அவள் கன்னத்தில் உருண்டோடிய சில கண்ணீர் துளிகளை அவசரமாய் துடைத்துவிட்டான் அர்ஜுன்.
"சீக்கிரமா போய் ரெடியாகு" என்று பரபரவென அங்கிருந்து நகர்ந்து சென்றான். பலவீனமாய் இருக்கும் அவள் முன், தானும் பலவீனமடைய வேண்டாம் என்று.
தன் அறைக்கு சென்று கட்டிலில் அமர்ந்தாள் இந்து. அவள் சந்தோஷமாக இருந்தாலும், அவளுடைய இதயம் கணப்பதை போல் உணர்ந்தாள். இதற்கு முன்பு கூட அவள் அப்படி உணர்ந்திருந்தாலும், இது வேறு விதமாய் தோன்றியது அவளுக்கு. தான் இப்படி எல்லாம் ஒருவரால், ஒருநாள் கொண்டாடப்படுவோம் என்று கனவிலும் நினைத்ததில்லை அவள். மனது விட்டு அழ வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு. அவளுடைய கண்களில், வானிலிருந்து இறங்கி வந்த தேவன் போல் தோன்றினான் அர்ஜுன்.
அர்ஜுன் அளித்த டப்பாவை திறந்து பார்த்ததில், அதில் அழகான தக்காளி சிவப்பு நிற டிசைனர் புடவை இருந்தது. அது மிகவும் விலை உயர்ந்தது என்று கூறத் தேவையில்லை. அந்த புடவையை மெல்ல வருடி கொடுத்தாள் இந்து.
அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல, அர்ஜுன் காத்திருக்கிறான் என்ற நினைப்பு வந்ததும், எழுந்து அவசரமாய் தயாரானாள். வரவேற்பறைக்கு வந்து, அர்ஜுனுகாக காத்திருந்தாள். அவன் வர நேரமாகவே, அவள் பொறுமை இழந்தாள். மீண்டும் தனது அறைக்கு சென்றுவிடலாம் என்று திரும்பிய அவளுக்கு, தனக்கு பின்னால் அர்ஜுன் சிலை போல் நின்றிருப்பதை பார்த்து குழப்பம் ஏற்பட்டது. எவ்வளவு நேரமாக அவன் அப்படி நின்றிருக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை. அவள் அவனைப் பார்த்து சிரித்தும் கூட, அவன் சிரிக்காமல் போகவே, அவள் மேலும் குழம்பி போனாள்.
அந்த புடவை அவளுக்கு பாந்தமாக பொருந்தியது. அவளுக்காகவே வடிவமைக்க பட்டது போல மிடுக்காய் இருந்தது.
குத்திட்ட பார்வையுடன், அவன் மெல்ல அவளை நெருங்கியதை பார்த்து, அவளுக்கு வயிற்றைப் பிசைந்தது. சதா எதையாவது பேசிக் கொண்டிருக்கும் அவன் கண்களைப் பார்க்க முடியாமல் அவள் தலைகுனிந்தாள். ஏனென்றால், அவை எப்போதும் இல்லாமல் ஏதோ புதிதாய் பேசின. அவளின் அருகில் வந்து நின்ற அவனைப் பார்த்து மெல்ல கண் இமைத்தாள் இந்து.
"கோவி...லுக்கு போ...கணும்..." என்று திக்கி திக்கி கூறினாள்.
"நான் ஏற்கனவே பூஜித்து கொண்டு தானே இருக்கிறேன்" என்று கூற வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. ஆனால், அது சற்று மிகையாக தெரியாது...?
அவசர அவசரமாய் தன்னுடைய காரை நோக்கி சென்றான் அர்ஜுன். அமைதியாய் அவனை பின்தொடர்ந்தாள் இந்து.
வழி நெடுக்க, ஒருவரை ஒருவர், கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டு, அவர்கள் கோவிலை வந்தடைந்தார்கள். கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
"இன்னைக்கு கோவில்ல ஏதோ விசேஷம் போலிருக்கே..." என்றாள் இந்து.
"ம்ம்ம்"
அவர்கள் வந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள், அவர்களுக்காக விலகி நின்று வழி கொடுத்தார்கள். அவர்களை வரவேற்றார் கோவில் குருக்கள். இந்துவின் பெயரில் பூஜை நடந்து கொண்டிருந்தது. அம்மனின் கழுத்தில் இருந்த மலர் மாலையை எடுத்து வந்து அர்ஜுனிடம் கொடுத்தார் குருக்கள்.
"என்ன செய்ய வேண்டும்?" என்பது போல் அவரை பார்த்தான் அர்ஜுன்.
"அவங்க கழுத்துல போடுங்கோ" என்றார் குருக்கள்.
இருவரும், ஒருவரை ஒருவர் பரவசத்துடன் பார்த்துக் கொண்டார்கள். அர்ஜுனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அதே நேரம், இந்துவோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டாள். அவள் அன்று ஒரு ராணியைப் போல் மதிக்கப்பட்டது தான் அதற்கு காரணம்.
அவள் கழுத்தில் அந்த மலர் மாலையை அணிவித்தான் அர்ஜுன். குருக்கள் அவனிடம் தட்டை நீட்ட, அதிலிருந்து குங்குமத்தை எடுத்து, அவள் நெற்றியில் இட்டான். அவர்களது திருமண நாளன்று, கண்களை மூடிக் கொண்டது போல, அன்று செய்யவில்லை இந்து. அவனுடைய பேசும் கண்களிலிருந்து எதையாவது தெரிந்து கொள்ள முடிகிறதா என்று முயன்று கொண்டிருந்தாள் அவள்.
"நீங்களும் அவருக்கு வச்சி விடலாமே..." என்று குருக்கள் கூற, அவள் அதை செய்ய தயங்கினாள்.
அவளை நோக்கி லேசாய் தலையை குனிந்து, அவளுடைய தயக்கத்தை விரட்டி அடித்தான் அர்ஜுன். புன்னகையுடன் அவன் நெற்றியில் குங்குமம் இட்டாள் இந்து. அவள் முகத்தில் அந்த புன்னகை வரவழைக்க, எதையும் செய்யலாம் என்று தோன்றியது அர்ஜுனுக்கு.
அவன் அங்கிருந்து நகர, அவனை அமைதியாய் பின்தொடர்ந்தாள் இந்து. இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் அவளுக்காக காத்திருக்கிறதோ தெரியவில்லை.
அங்கு இனிப்பு பண்டம் நிரம்பிய பெட்டிகளும், தாம்பூலமும் ஏராளமாய் வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்தவர்களுக்கு அவற்றை வழங்க சொல்லி அவளுக்கு சைகை செய்தான் அர்ஜுன்.
தனது ஆச்சரியத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அதை செய்ய, அவள் திணறிப் போனாள். சில பெண்கள் தாம்பூலத்தை பெற்றுக் கொண்டு,
"நீ நீண்ட ஆயுளோட சந்தோஷமா இருக்கணும்மா..." என்று அவளை வாழ்த்திய பொழுது, தன்னுடைய கண்ணிலிருந்து, உணர்ச்சி வேகத்தில் பெருக்கெடுத்த கண்ணீரை அடக்க படாத பாடுபட்டாள் அவள். அவளை திணறடித்து கொண்டிருந்த சந்தோஷத்திலேயே செத்து விடுவாள் போல் தோன்றியது அவளுக்கு.
அவனுக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஏற்க, சற்று தூரமாய் சென்ற போதிலும், அர்ஜுனுடைய பார்வை அவனுடைய இதய ராணியின் மீதே இருந்தது. இந்துவின் கரங்கள் இனிப்பையும், தாம்புலத்தையும் வழங்கிக் கொண்டிருந்த போதிலும், அவளுடைய கண்கள் அனிச்சையாய் அவளுடைய கணவனையே சுற்றி வந்தது.
அம்மன் சிலைக்கு முன், கலங்கிய கண்களுடன் கைகூப்பி நின்றாள் இந்து. கடவுளுக்கும், தனது கணவனுக்கு நன்றி கூற வேண்டும் என்று நினைத்தாள் அவள். ஆனால், அது அவளால் முடியாது. அவர்களுக்கு நன்றி கூற அவளிடம் வார்த்தைகளே இல்லை. எந்த ஒரு வார்த்தையும் அவளுடைய உணர்வுகளுக்கு ஈடாகவே முடியாது.
நீரென்றால் என்னவென்றே அறியாத பாலைவனத்தில், திடீரென்று ஒரு நீர்வீழ்ச்சி தோன்றினால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது அவளுடைய நிலை.
தன் உணர்வுகளை கூற அவளுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை என்பதற்காக அவள் அவற்றை வெளிப்படுத்தாமல் இருந்துவிடப் போவதில்லை. ஒரு வார்த்தையை கூட உதிர்க்காமல், அன்பையும், அக்கறையையும் இலகுவாய் வெளிப்படுத்தி விட்டான் அர்ஜுன். அதே போல், அவள் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறாள் என்பதை அவளால் கூறிவிட முடியாதா? அவளுடைய ஒரே ஒரு செயல் அவளுடைய சந்தோஷத்தை அவனிடம் வெளிப்படுத்திவிடுமே... வீட்டிற்கு சென்ற பின், அதை செயல்படுத்த திட்டமிட்டாள் இந்து.
இதற்கிடையில்...
காலை முதல், அர்ஜுனுடைய முகவரியை தேடி அலைந்து, களைத்துப் போனார்கள் வித்யாவும், வீணாவும். அதே நேரம், அவர்கள் பின்வாங்கவும் தயாராக இல்லை. அவர்கள், அர்ஜுனுடைய முகவரியை கண்டுபிடிக்க, ஒரு புது யுக்தியை கையாள முடிவெடுத்தார்கள்.
அது, சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகில் இருக்கும் மிக முக்கியமான சிக்னல். அங்கு நின்று கொண்டு, காரில் வருபவர், போகிறவர் எல்லோரிடத்திலும் அந்த முகவரியை பற்றியும், அர்ஜுனை பற்றியும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள் இருவரும். அர்ஜுன் பணக்காரன் என்பதால், காரில் வரும் பணக்காரர்களுக்கு அவனை பற்றி தெரிந்திருக்கும் என்று கணக்கு போட்டார்கள் அவர்கள். ஆனால், அர்ஜுன் சென்னைக்கு புதியவன் என்பதால், அவனைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
ஆனால், அர்ஜுன் மற்றும் இந்து என்ற பெயர்கள் ஒருவருடைய கவனத்தை வெகுவாய் ஈர்த்தது. அந்த நபர் அவர்களை நோக்கி வந்தார்.
"நீங்க யாரு? எதுக்காக அர்ஜுனனையும் இந்துவையும் பத்தி விசாரிக்கிறீங்க?" என்று அவர் கேட்க, அம்மாவுக்கும், மகளுக்கும், அப்பாடா என்றானது.
"உங்களுக்கு அவங்களை பத்தி தெரியுமா?" ஆவலுடன் கேட்டார் வித்யா.
"நல்லாவே தெரியும்"
"அவங்க வீடு உங்களுக்கு தெரியுமா?" வீணா அறிய முயன்றாள்.
"தெரியும்"
"எங்களை அவங்க வீட்ல கொண்டு போய் விடுறீங்களா?"
"நிச்சயமாக விடுறேன். ஆனா, நீங்க எதுக்கு அங்க போகணும்?"
நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தார் வித்யா. அந்த நபரின் முகம், மீனை கண்ட பூனையை போல் மாறியது. அந்த நபர் வேறு யாருமல்ல அர்ஜுனுடைய சித்தி மாஷா...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top