13 வேண்டுதல்

13 வேண்டுதல்

ஓயாமல் அழுது கொண்டே இருந்தாள் ஹீனா. அவள் வாழ்வின் மிக கசப்பான உண்மையை, அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவளுடைய அம்மா இப்படிப்பட்டவள் என்று அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இவ்வளவு நாளாக, அவள் யாரை தன் அப்பா என்று நினைத்திருந்தாளோ அவர் அவளுடைய அப்பா இல்லை. அவளைப் பெற்ற அப்பா யார் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. அவளுடைய அம்மா, அவளுடைய அப்பாவை உதறிவிட்டு, பணத்திற்காக வேறு ஒருவரிடம் வந்துவிட்டார் என்பது எவ்வளவு கேவலம்...! அவருடைய பணத்தாசையால் வேறொரு குடும்பத்தையும் சின்னாபின்னமாக்கிவிட்டார். அவளுடைய அந்த கீழ்தராமன செயலுக்காக மாஷா வருத்தப்பட்டு அவள் பார்த்ததே இல்லை. குற்றவுணர்ச்சி என்பது சிறுதும் இல்லை மாஷாவிற்கு. சீதா, மாஷாவின் மீது பொறாமைபடுவதாக அவள் நினைத்து கொண்டிருந்தாள். தன்னுடைய அம்மாவை அவமானப் படுத்துவதற்காக, அர்ஜுனின் மீது தீராத கோபத்தில் இருந்தாள் ஹீனா. எவ்வளவு தவறானவளாக அவள் இருந்திருக்கிறாள். தன்னை நினைத்து அவமானப்பட்டாள் ஹீனா.

தன் முதுகை யாரோ தொட அவள் எழுந்து அமர்ந்தாள். அது மாஷா என்பதை அவள் அறிவாள். பின்னால் திரும்பிப் பார்க்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

"நீ என் மேல வருத்தமா இருக்கேன்னு எனக்கு தெரியும்"

ஒன்றும் கூறாமல் அமைதியாய் இருந்தாள் ஹீனா.

"நீ உண்மையை ஏத்துக்கிட்டு தான் ஆகணும். இது தான் நம்ம வாழ்க்கை. இது தான் நம்ம குடும்பம்."

"இல்ல... இது நம்ம குடும்பம் இல்ல. அவர் என் அப்பா இல்ல. இது நம்ம வாழ்க்கை இல்ல. நீ இதை வேற ஒருத்தர்கிட்ட இருந்து பிடுங்கிட்டு, அவங்க வாழ்க்கையை நாசமாக்கிட்ட"

"அது நடந்து முடிஞ்சிடுச்சு. இப்ப அத பத்தி யோசிச்சு எந்த பிரயோஜனமும் இல்ல. நீ உன்னை தேத்திகிறது தான் சரி"

"அதுக்கு என்ன அர்த்தம்? வேறொருத்தரோட பணத்துல வெட்கமில்லாம என்னை வயிறு வளர்க்க சொல்றியா?"

"உன்னுடைய வெட்கத்தை எல்லாம் உனக்குள்ளேயே வச்சுக்கோ. பணத்துக்கு வெட்கம் எல்லாம் தெரியாது. உனக்கு வேண்டிய எல்லாத்தையும் அது தரும்"

"மன அமைதியை....? நிம்மதியை...? தூக்கத்தை..? உன்னோட பணம் கொடுக்குமா?"

"அது உன்னைப் பொறுத்த விஷயம். பிரச்சனையை நீ எப்படி கையாண்ட அப்படிங்கறத பொருத்து தான் அதெல்லாம் கிடைக்கும். எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு சந்தோஷமா இரு. அவர் எல்லா சொத்தையும் அவர் பையன் பேருக்கு எழுதி வச்சிட்டார். நீ அதைப் பத்தி கவலைப்படாதே. அதை நான் எப்படியும் வாங்கிடுவேன்"

"வாயை மூடு... இல்லன்னா உன்னை நான் அம்மானு கூப்பிடறதேயே நிறுத்திடுவேன்"

"நீ என்னை அம்மானு கூப்பிடாம போறதுனால நம்ம உறவுமுறை மாறிட போறதில்ல..."

"நீ ஏற்கனவே அர்ஜுனுடைய வாழ்க்கையை கெடுத்துட்ட... உன்னால தான் அர்ஜுன் எல்லாத்தையும் இழந்துட்டாரு. தயவு செய்து எல்லாத்தையும் இதோட நிறுத்திக்கோ "

"அவன் வாழ்க்கையை கெடுத்தது நான் இல்ல. அவனே தான் அவன் வாழ்க்கையை கெடுத்துகிட்டான். அவன் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு அவன் தான் காரணம். ஏன்னா, அவன் ஒரு சைக்கோ... மெண்டல்..."

அப்பொழுது அவர்கள், "நிறுத்து" என்று சங்கர் சொன்னதை கேட்டார்கள்.

தன் கண்களில் நெருப்பைக் கக்கிக் கொண்டு நின்றிருந்தார் சங்கர்.

"ஒரு வார்த்தை அர்ஜுனை பத்தி பேசினாலும், நான் உன்னை சும்மா விடமாட்டேன். அவனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? அவன் யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம். ஞாபகத்துல வச்சிக்கோ"

"அவன் உங்களுக்கு கொடுக்கிற மரியாதை தான் எனக்கு தெரியுமே" என்றார் ஏளனமாக.

"அவன் எனக்கு கொடுத்த மரியாதையை கொடுத்ததுக்கிட்டது நான் தான். ஆனா, அவன் சீதா மேல எவ்வளவு மரியாதை வச்சிருந்தான்னு உனக்கு தெரியுமா? தனக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத, ஒரு சாதாரண பெண்ணை அவன் ஏன் கல்யாணம் பண்ணிகிட்டான்னு உனக்கு தெரியுமா? ஏன்னா அந்த பொண்ணுக்கு சீதாவோட இதயத்தை பொறுத்தியிருக்காங்க. நீ பெத்த பொண்ணு உனக்கு அந்த மரியாதையை கொடுப்பாளா? அப்படிப்பட்ட மரியாதைக்கு நீ தகுதியானவளா? அந்த தகுதியும் மரியாதையும் சீதாவுக்கு கிடைச்சிருக்கு. ஏன்னா அவளும் நல்லவ, அவளோட மகனும் நல்லவன்"

அந்த விஷயம் பேரதிர்ச்சியாக இருந்தது மாஷாவிற்கு. அவனுடைய மனைவி கொண்டிருப்பது சீதாவின் இதயமா?

ஹீனாவை நோக்கிச் சென்றார் சங்கர்.

"உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. உன் முன்னாடி நின்னு பேசற தகுதி கூட எங்களுக்கு கிடையாது. இந்த ஜெனரேஷன் பசங்க, நல்லது கெட்டது தெரிஞ்சவங்களா இருக்கீங்க. நானும் அந்த மாதிரி இல்லாம போயிட்டேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு"

"நீங்க சீதாம்மாவையும் அர்ஜுன் அண்ணனையும் விட்டுட்டு வந்து இருக்கக் கூடாதுபா" என்று அவள் கூறியதைக் கேட்டு புன்னகை புரிந்தார் சங்கர். மாஷாவோ அதிர்ச்சியடைந்தார்.

அவள் சீதாவை அம்மா என்றும் அர்ஜுனை அண்ணன் என்றும் அழைத்தது அது முதல் முறை. அவள், அப்படி ஒரு திடீர் மரியாதையை அவர்களுக்கு கொடுப்பாள் என்று எதிர்பார்கவில்லை மாஷா.

"நான் செஞ்ச அந்த தப்புக்காக தான் ஒவ்வொரு நொடியும் வருத்தபட்டுக்கிட்டு இருக்கேன். ஆனா, இப்ப அதை பத்தி வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல. நான் செஞ்ச தப்புக்கு தான், ஒவ்வொரு நாளும் தண்டனையை அனுபவிச்சிகிட்டு இருக்கேன்" என்றார் வருத்தத்துடன்.

ஹீனா அவளுடைய கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"உன் முகத்தை கழுவிக்கோ. நம்ம வாழ்க்கையில என்ன நடந்தாலும் சரி, உனக்கு நான் எப்பவும் துணையா இருப்பேன். நான் உன்னோட அப்பா, நீ என்னோட மகள்... சரியா?"

சரி என்று தலையசைத்துவிட்டு அவளுடைய அறைக்கு சென்றாள் ஹீனா. மாஷாவிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல், சங்கரும் அவர் அறைக்கு சென்றார். மாஷாவும் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

மாஷாவின் எண்ணம் முழுவதும் சீதாவின் இதயத்தை சுற்றி வந்தது. சீதா அர்ஜுனுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை புரிந்து கொள்ள, அவளுக்கு எந்த சிரமமும் இல்லை. அர்ஜுன் அவனுடைய அம்மா என்று வரும் பொழுது, பணத்தையோ அவனுடைய தகுதியை பற்றியோ கவலை படாதவன் என்பது தெள்ளத் தெளிவாய் புரிந்தது அவருக்கு. அதனால் தான் ஒரு சாதாரண பெண்ணை, அவன் திருமணம் செய்து கொண்டானா? அப்படி என்றால், அது தான் அவனுடைய பலவீனம். அவனுடைய மனைவி அவனை விட்டு சென்றால், அவன் நடைபிணம் ஆகிவிடுவான். அவன் இறந்து போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. அவளுடைய கீழ்த்தரமான மூளை, கீழ்தரமாய் யோசித்தது. இந்து என்னும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி, அர்ஜுனின் வாழ்க்கையில் விளையாட தயாரானாள் மாஷா.

......

வித்யாவும், வீணாவும், தவறான முகவரியை கையில் வைத்துக்கொண்டு, அலையோ அலை என்று அலைந்து கொண்டிருந்தார்கள். ஆட்டோவில் அமர்ந்து கொண்டு, ராயபுரத்தின் ஒவ்வொரு தெருவிலும் நுழைந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.

அர்ஜுனின் வீட்டு முகவரியில் இருந்த ராயப்பேட்டையை, ராயபுரம் என்று மாற்றியிருந்தாள் ரம்யா.

அந்த முகவரி எங்கும் இல்லாமல் போகவே, அவர்கள் சோர்ந்து போனார்கள். ஒரு நாள் முழுக்க அலைந்து திரிந்தும், அந்த முகவரியை அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அப்படி ஒரு முகவரி இருந்தால் தானே கண்டிபிடிக்க முடியும்? அதனால், அவர்களுக்கு சென்னையில் தெரிந்த ஒரே இடமான, மண்ணடியில் இருக்கும் ராம் லாட்ஜுக்கு சென்றார்கள்.

அந்த லாட்ஜின் முதலாளியின் மகள், இந்துவும் அவர்களுடன் வந்திருப்பாள் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களை நோக்கி ஓடிச் வந்தாள்.

"உங்க கூட இந்து அக்கா வரலயா?" என்றாள் ஏமாற்றதுடன்.

"அவ சென்னையில தான் இருக்கா. அவளை தேடி கண்டுபிடிக்க தான் நாங்க வந்திருக்கோம்." வித்யா

"அவங்க சென்னையில இருக்காங்களா? அப்படின்னா அவங்க ஏன் என்னை பாக்க வரல?" என்றாள் சோகமாக.

"அவ எங்க இருக்கான்னு அவளுக்கே தெரியாது" வீணா

"அப்படின்னா?"

"ஒருத்தன் அவளை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி, இங்க கூட்டிட்டு வந்துட்டான்" வித்யா

"அடக்கடவுளே நெஜமாவா?" அதிர்ந்தாள் அவள்.

"ஆமாம். அவனுக்கு அவளைப் பத்தி எப்படித் தான் தெரிஞ்சிதோ தெரியல..." வித்யா

அந்தப் பெண்ணுக்கு பட்டென்று ஏதோ பற்றிக்கொண்டது.

"இங்க கூட ஒரு ஆளு வந்து இந்து அக்காவை பத்தி விசாரிச்சாரு."

"அப்படியா? எப்போ? யார் வந்தது? அவன் உன்கிட்ட என்ன கேட்டான்?" என்று கேள்விகளை அடுக்கினாள் வீணா

"ஆமாம். ஹார்ட் ட்ரான்ஸ்லேஷன் பண்ண பொண்ண பத்தி அவர் விசாரிச்சார்"

"ஹார்ட் ட்ரான்ஸ்லேஷன்னா?" வித்யாவின் முகம் திடமானது.

"ஆமாம்"

"வேற என்ன கேட்டான்?"

"எனக்கு தெரியாத நிறைய கேள்வி எல்லாம் அவர் இந்து அக்காவை பத்தி கேட்டார்"

"அப்படின்னா அவங்க இந்துவை ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்திருக்காங்க" வீணா

"ஆனா எதுக்காக? என்ன காரணமா இருக்கும்?" வித்யா

"அதை நம்ம தான் கண்டுபிடிக்கணும்" என்றாள் பல்லை கடித்துக்கொண்டு கோவம் கொப்பலிக்க வீணா.

"அவன் மட்டும் என் கையில கிடைக்கட்டும்... அவனை என்ன செய்றேன்னு பாரு..." என்று பல்லை கடித்தாள் வித்யா.

அந்த லாட்ஜ் முதலாளியின் மகள், அவள் தான் அவர்களுக்கு இந்துவின் புகைப்படத்தை கொடுத்தாள் என்ற உண்மையை கூறவில்லை. அவர்களுடைய கோபத்தைக் கண்டு அப்படியே அமைதியாகிவிட்டாள்.

சீதாராணி இல்லம்

இந்து மெல்ல அறையை விட்டு வெளியே வருவதை பார்த்தான் அர்ஜுன். அவளை நோக்கி ஓடிச் சென்று அவள் தோளை பற்றினான். திடுக்கிட்டு அவனை பார்த்தாள் இந்து. அவளுடைய மருண்ட பார்வை பார்த்து, அவனும் கூட ஒரு நொடி திகைத்துப் போனான். இருவரும் ஒருவரை ஒருவர் மிக அருகில் பார்த்து ஒரு நிமிடம் தங்களை மறந்தனர். அவளுடைய அப்பழுக்கற்ற முகம் அவனையும், அவனுடைய கவர்ந்திழுக்கும் கண்கள் அவளையும், அப்படி நிற்க வைத்தது. அவர்களுடைய கண்கள் சொல்லாத கதைகளை சொல்லிக் கொண்டிருந்தன. அர்ஜுனுடைய உள்ளுணர்வு இந்துவின் காயப்பட்ட காலை அவனுக்கு நினைவூட்டியது.

"ஏன் சுத்திகிட்டு இருக்க நீ? உன்னால கொஞ்ச நேரம் நிம்மதியா ரெஸ்ட் எடுக்க முடியாதா?"

"ரெண்டு நாளா சும்மாவே தானே உக்காந்துகிட்டு இருக்கேன்?"

"உட்கார்ந்து தான் ஆகணும்... நீ குணமாகுற வரைக்கும்"

"எனக்கு இப்போ எவ்வளவோ பரவாயில்ல"

"நீ நாளைக்கு நடக்க ஆரம்பிக்கலாம். இப்போ வந்து ரெஸ்ட் எடு"

அவளைத் தன் கையில் தூக்கிக் கொண்டு, அவளுடைய அறையை நோக்கி சென்றான் அர்ஜுன். இந்துவின் நிலையைப் பற்றிக் கூற வார்த்தைகளே போதவில்லை. அவளை ஏற்கனவே அர்ஜுன் சிலமுறை தூக்கியிருந்தாலும், இந்த முறை ஏனோ அவளுக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது. அவனுடைய ஆழ்ந்த பார்வை அவளின் உணர்வுக்கு மேலும் சுவை கூட்டியது.

அந்த சுவை அந்த இடம் முழுவதும் மணம் பரப்பியது. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை விட, அவர்கள் கண்களால் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று கூறுவதே பொருந்தும்.

அவளை கட்டிலில் படுக்க வைத்தான் அர்ஜுன்.

"உனக்கு ஏதாவது வேணுமா?"

"எதுவும் வேண்டாம்"

"அப்போ எதுக்காக வெளியில வந்த?"

"எனக்கு உள்ளேயே இருந்து போர் அடிச்சது..."

"இன்னிக்கு ஒரு நாளாவது நடக்காம இரு"

சரி என்று தலையசைத்துவிட்டு, அடிபட்ட தன் காலை மடக்கி, அதில் கட்டியிருந்த கட்டை அவிழ்க்க முயன்றாள்.

"என்ன செய்ற நீ?"

"இது எனக்கு சுத்தமா பிடிக்கல. ரொம்ப வெறுப்பா இருக்கு" என்றாள் முகத்தை சுளித்து.

நீண்ட பெருமூச்சு விட்டு, கட்டிலில் அமர்ந்து, அவள் காலை தன் மடியில் எடுத்து வைத்து, மெல்ல அந்த கட்டை அவிழ்க்கத் தொடங்கினான் அர்ஜுன். அதை செய்யும் பொழுது, வெந்நீர் கொண்டு வருமாறு வேலனை பணித்தான்.

வேலன் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்தார். அதை பயன்படுத்தி, அவளுடைய பாதத்தை மெல்ல துடைத்துவிட்டு, அவள் காலை பரிசோதித்து பார்த்தான். அவளுடைய காயம், நேற்று இருந்ததைவிட இன்று கொஞ்சம் தேவலாம் என்று இருந்தது. அந்த காயத்திற்கு மருந்திட்டான். அவன் தீவிரமாய் அவள் காலை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்த பொழுது, இந்து, தீவிரமாய் அவளுடைய கணவனை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தாள். அவள் அவனை பார்க்க மட்டும் தான் செய்தாள், ரசிக்கவில்லை என்று நம்மால் கூற முடியவில்லை. அவனுடைய கண்களால் அவள் வெகுவாக கவரபட்டாள். அவை அவனுடைய உள்ளக் கிளர்ச்சியை வெளிப்படுத்துவதில் திறமை வாய்ந்த வகையில் இருந்தன. அர்ஜுனுக்கு நன்றாகவே தெரியும், அவள் அவனை தான் படித்துக் கொண்டிருக்கிறாள் என்ற. ஆனால், அவள் படிப்பது அவனுக்கு தெரியாது என்பது போல் அவன் அமைதியாய் இருக்க முயன்றான். ஆனால், அது வெகு நேரதிற்கு சாத்தியப்படவில்லை.

"இப்ப கொஞ்சம் பரவாயில்ல தான்..." என்றான் அவளை பார்த்து.

ஆமாம் என்று தலையசைத்தாள் இந்து.

"அதுக்காக நீ நடக்கலாம்னு அர்த்தமில்ல"

அவள் காலை மெல்ல தலையணை மீது வைத்துவிட்டு எழுந்து நின்றான். அங்கிருந்து அவன் செல்ல நினைக்கும் முன்,

"நாளைக்கு என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்களா?" என்றாள்.

அர்ஜுனுடைய ஆச்சரியத்திற்கு அளவே இல்லை. அவள் அவனையா கோவிலுக்கு கூட்டி கொண்டு செல்லும்படி கேட்கிறாள்...?

"என்ன சொன்ன???" என்றான் கண்களை சுருக்கிக் கொண்டு.

அவன் கேட்டது உண்மை தானா என்று சரிவரத் தெரிந்து கொள்ள மறுபடியும் கேட்டான்.

"நாளைக்கு... கோவிலுக்கு...."

சில நொடி என்ன கூறுவதென்று தெரியவில்லை அவனுக்கு.

"உன்... காலை பாரு... இந்த காலோட கோவிலுக்கு போறது அவசியமா?" என்றான் திக்கி திணறி.

"நாளைக்குள்ள எனக்கு சரியாயிடும்"

"ஓ அப்படியா?" என்றான் தன் கைகளைக் கட்டிக்கொண்டு.

"எனக்கு வலிக்கல... நம்புங்க..." என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.

"கோவிலுக்கு போறது என்ன அவ்வளவு முக்கியமா?" என்றான்

"அப்படி ஒன்னும் இல்ல. நான் இந்த நாளை வழக்கமா கொண்டாட மாட்டேன். ஆனா இந்த தடவை கோவிலுக்கு போகணும் தோணுது"

"நாளைக்கு என்ன?"

ஒன்றும் இல்லை என்று அவள் தலையசைக்க, அவள் எதிரில் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

"நாளைக்கு என்னன்னு சொல்லு" முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இன்றி கேட்டான்.

ஆனால் நாளைக்கு என்ன என்று தெரிந்தவுடன், அவனால் உணர்ச்சியற்று இருக்க முடியவில்லை.

"நாளைக்கு என்னோட பிறந்த நாள்"

அவனுடைய முகத்தில் ஆர்வம் ததும்பியது.

"நாளைக்கு உன் பர்த்டேவா?"

அவள் ஆமாம் என்று தலையசைக்க, அவன் தன் முஷ்டியை இறுக்க மடித்துக் கொண்டான், ஆர்வதில் அவளை தொட்டு விடாமல் இருக்க.

"கூட்டிகிட்டு போறீங்களா?" என்று அவள் கேட்க, மடித்து வைத்திருந்த தனது முஷ்டியை திறந்து, மெல்ல அவள் தலையை தொட்டு,

"சரி" என்றான், அவள் முகத்தில் புன்னகையை வரவழைத்து.

அவள் புன்னகையை மனதில் சுமந்து கொண்டு அங்கிருந்து சென்றான் அர்ஜுன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top