12 மாற்றம் தந்த மயக்கம்

12 மாற்றம் தந்த மயக்கம்

தன் முன்னால் சங்கர் நிற்பதைப் பார்த்து, சில நொடிகள் திகைத்து நின்றான் கிரி. அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவனுக்கு எதிரில் நிற்கும் மனிதரை அவனுக்கு பிடிக்காவிட்டாலும், அவரை அவன் வரவேற்றான்.

"வாங்க, சார்..."

"நீ என்னை வரவேற்க மாட்டேன்னு நினைச்சேன்... நீ வரவேற்குறதை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுறேன்"

"நான் அர்ஜுனுடைய மேனேஜர். எப்போ, எப்படி நடந்துக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்" அவர் வாயை அடைத்தான் கிரி.

சங்கர் அங்கிருந்த சோபாவில் அமர, அவர் முன் நின்று கொண்டான் கிரி. அவர் ஏன் இங்கு வந்திருக்கிறார் என்பதை ஓரளவு ஊகித்துவிட்டான் கிரி.

"அர்ஜுனுக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு கேள்விப்பட்டேன்..."

அவன் யூகம் சரியாக இருந்தாலும், அமைதியாக நின்றான் கிரி.

"என்னோட வாழ்க்கையில விதி எப்படி விளையாடுது பாத்தியா? என்னோட ஒரே மகனுடைய கல்யாணத்தை என்னால பாக்க முடியல"

அவர் அர்ஜுனுக்கும் சீதம்மாவிற்கும் செய்த துரோகத்தை எடுத்துக்கூறி, ஈவு இரக்கமின்றி, அவரை சாட வேண்டும் என்று துடித்தான் கிரி. ஆனால், அடுத்தவருடைய சொந்த விஷயத்தில் தலையிடுவது சரியல்ல என்று அமைதி காத்தான்.

"அர்ஜுனுக்குன்னு ஒருத்தர் கிடைச்சிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம். ஆனா, என் மருமகளை வாழ்த்த கூட நான் அனுமதிக்க படல. நான் என்ன அவ்வளவு மோசமானவனா?" என்றார் நா தழுதழுக்க.

"அந்த விஷயத்துல நான் எதுவுமே பண்ண முடியாது, சார். நீங்க உங்க மருமகளை வாழ்த்த நினைச்சா, அர்ஜுன்கிட்ட பர்மிஷன் வாங்கிகிட்டு அதை தாராளமா செய்யுங்க"

"நீ என்ன நினைக்கிற...? அர்ஜுன் என்னை அதை செய்யவிடுவான்னு நினைக்கிறாயா?"

பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான் கிரி. அவனுக்கு நன்றாகவே தெரியும், நிச்சயம் அர்ஜுன் அதற்கு சம்மதிக்க மாட்டான்.

"இந்த விஷயத்துல உன்னால எதுவும் செய்ய முடியாதுன்னு எனக்கு தெரியும். ஆனா, ஒரு அப்பாவா எனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. என் மருமகள் யாருன்னு கூட எனக்கு தெரியல. யாராவது அர்ஜுனை பத்தியும், அவனோட திடீர் கல்யாணத்தை பத்தியும் கேக்கும் போது, ரொம்ப சங்கடமா இருக்கு. அந்த பொண்ணு யாரு? அவனோட வாழ்க்கை முறைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத அந்த பெண்ணை, ஏன் அர்ஜுன் கல்யாணம் பண்ணிகிட்டான்? எனக்கு நல்லா தெரியும், அர்ஜுன் பாண்டிச்சேரிக்கு போனதே இல்ல... அப்படி இருக்கும் போது, இந்துவை அவனுக்கு எப்படி தெரியும்? எது அவனை அவளை கல்யாணம் பண்ணிக்க வச்சது?"

உண்மையை சொல்ல தயங்கினான் கிரி. அவனுடைய கரங்களைப் பற்றிக் கொண்டார் சங்கர்.

"ப்ளீஸ் கிரி... தயவுசெஞ்சி சொல்லு. இந்து யாரு? அர்ஜுனுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? ஏன் அவன் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான்?"

கிரி சொல்லிவிடுவது என்று தீர்மானித்தான். அவருக்கு தெரியட்டும், அர்ஜுன் எவ்வளவு உன்னதமானவன் என்று. எப்படிபட்ட உறவையும், மரியாதையையும் இழந்திருகிறார் என்று அவர் புரிந்துகொள்ளட்டும்.

"சீதம்மா உயிரோட இருக்கும் போது, உடல் உறுப்பு தானம் செஞ்சிருந்தாங்க. அவங்க இறந்ததுக்கு அப்புறம், அவங்களுடைய இதயம் , ஹார்ட் டிரான்ஸ்ப்லாண்டேஷனுக்காக, சென்னைக்கு வந்த இந்துவுக்கு கிடைச்சுது. சீதாம்மாவோட இதயம், இந்துகிட்ட இருக்குறதல தான் அர்ஜுன் அவங்களை கல்யாணம் பண்ணிகிட்டான்" என்று உண்மையைக் கூறினான் கிரி.

அதைக் கேட்டு திகைத்து நின்றார் சங்கர்.

"சீதா இறந்தப்போ அர்ஜுன் இந்தியாவிலேயே இல்லயே...? அப்படி இருக்கும் போது, அவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சது?"

"லயன்ஸ் கிளப் மெம்பர்ஸ் அவனுக்கு சொன்னாங்க"

"அப்புறம்?"

அர்ஜுன் இந்துவை திருமணம் செய்த கதையை, முழுதாய் கூறி முடித்தான் கிரி. அதைக்கேட்டு சங்கர் அதிர்ச்சி அடையவில்லை. அவருக்கு அவருடைய மகனை பற்றி நன்றாகவே தெரியும். அம்மா, பிள்ளை என்பதை தாண்டி, சீதாவும், அர்ஜுனும் எவ்வளவு மனமொத்து இருந்தார்கள் என்று அவருக்கு தெரியும். அர்ஜுனுக்கு சீதா தான் எல்லாமும். அர்ஜுனை பற்றி அவர் எண்ணி இருந்ததை விட, அவன் தன் அம்மாவின் மீது கொண்டிருந்த அன்பு, மிக ஆழமாக இருக்கிறது. அவன் இந்துவுடன் உணர்வுகளால் கட்டுண்டு இருக்கிறான். அவன் அவளிடம் கொண்டிருக்கும் காதல், ஆழமாய் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அர்ஜுனுடைய மனதில் இடம் பிடிப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. சீதாவின் இதயத்தின் வாயிலாக அவன் இந்துவுக்கு தன் மனதில் இடம் கொடுத்திருக்கிறான் என்றால், அவன் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்க தான் செய்வான்.

"சீதாவுடைய இதயத்தைப் பத்தி, அர்ஜுன் இந்துகிட்ட சொல்லலயா?"

"சொல்லல"

"நான் சொல்லட்டுமா?"

"வேண்டாம் சார். சரியான தருணத்துல, அதை செய்யணும்னு அர்ஜுன் காத்துகிட்டு இருக்கான்"

"நேரத்தை விரயமாக்க வேண்டாம்னு அவன்கிட்ட சொல்லு. எவ்வளவு சீக்கிரம் இந்த உண்மையை அவகிட்ட சொல்றானோ அவ்வளவு நல்லது"

"எதை, எப்போ செய்யணும்னு அர்ஜுனுக்கு தெரியும், சார்" என்றான் திடமாக.

"அந்தப் பொண்ணு, அவனோட வாழ்க்கைக்கு வீடியலா இருந்தா நல்லாயிருக்கும்..." என்றார் பெருமூச்சுடன்.

ஆமாம், என்று மெல்ல தலையசைத்தான் கிரி.

"நீ ஒன்னும் கவலைப்படாதே. அர்ஜுன் முரட்டுதனமா இருந்தாலும், அவன் இந்து மேல வச்சிருக்குற காதல், இந்துவுக்கு சீக்கிரமே புரியும்."

அவரை ஆச்சரியமாய் பார்த்தான் கிரி.

"ஆமாம்... அர்ஜுன் அவளை ரொம்ப காதலிக்கிறான். அவனோட உண்மையான காதல், அவங்களை சந்தோஷமா வைக்கும்" என்று கூறிவிட்டு, முழுமனதுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் சங்கர்.

சீதாராணி இல்லம்

இந்துவிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கவனித்தாள் ரம்யா. அது அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளித்தது.

"இப்ப எப்படி இருக்கீங்க?"

"ம்ம்ம்"

"நீங்க சோகமா இருக்குற மாதிரி தெரியுதே..."

"நான் சோகமா இல்ல"

"உங்களுக்கு ஏதாவது வேணுமா?"

"அவர் பேர் என்ன?"

"யாரை கேக்கறீங்க?"

"என் வீட்டுக்காரர் பேரை"

*என் வீட்டுக்காரர்* என்று அவள் கூறியதைக் கேட்டு உள்ளூர புன்னகைத்தாள் ரம்யா.

"உங்களுக்கு அவர் பெயர் தெரியாதா?"

தெரியாது என்று தலையசைத்தாள் இந்து.

"அர்ஜுன்"

"ஆமாம்ல.... அவருடைய ஃபிரண்டு கூப்பிட்டப்போ கேட்டேன்" என்றாள்
புத்துணர்ச்சியுடன்.

"ஓ..."

"அப்போ நான் சரியா கவனிக்கல"

ஓஹோ... "

"அர்ஜுன்" என்று முணுமுணுத்து பார்த்துக்கொண்டாள் இந்து

"வேற என்ன வேணும் உங்களுக்கு?"

"எனக்கு அவரைப் பத்தி ஒண்ணுமே தெரியல. பாரு, அவரோட பேர் கூட எனக்கு சரியா தெரியல..."
என்று சில நொடி நிறுத்திவிட்டு,

"உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்றாள்.

"உங்க அம்மாவ இங்க கூட்டிட்டு வரணுமா?" என்று முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு கேட்டாள் ரம்யா, வேண்டுமென்றே.

இல்லை என்று அவசரமாய் தலையசைத்தாள் இந்து.

"வேற என்ன வேணும்?"

"நான் அவரைப் பத்தி தெரிஞ்சிக்க விரும்புறேன்"

"நான் நிச்சயம் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்"

இந்துவின் முகம் சந்தோஷ வெளிச்சம் பெற்றது.

"நீங்க தப்பா நினைச்சுக்கலனா நான் உங்களை ஒன்னு கேட்கலாமா?"

"நான் உன்னை தப்பா நினைச்சிக்க மாட்டேன்... கேளு..."

"உங்க குடும்பத்தை பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா?"

அமைதியாய் இருந்தாள் இந்து.

"உங்களுக்கு விருப்பம் இல்லன்னா வேணாம்..."

"அப்படியெல்லாம் எதுவுமில்லை"

அவளுடைய வாழ்க்கை வரலாற்றை ரம்யாவிடம் ஒப்பித்து முடித்தாள் இந்து.

"என்னை தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க சித்தி எப்பவும் உங்கள நல்லபடியா நடத்தவே இல்லயே... அப்படி இருந்துமா, உங்க புருஷனுக்கு மேல அவங்களை நம்புறீங்க?"

"நான் வேற என்ன செய்யுறது? நீயே சொல்லு... எங்க அப்பாவுக்கு பிறகு, வித்யா அம்மாவை விட்டா எனக்கு வேற யாருமே இல்ல. அவங்க நல்லவங்களாவே இல்லனாலும், எனக்கு வேற யாரும் இல்ல. நான் அப்படியே பழகிட்டேன். நான் அவருக்கு (அர்ஜுன்) மேல எங்கம்மாவை ஏன் நம்புறேன்னா, தெரியாத தேவதையை விட, தெரிஞ்ச பிசாசு மேலுன்னு சொல்லுவாங்கல்ல, அப்படித் தான். உண்மையை சொல்லணும்னா, அவரு தேவதையா, பிசாசானு கூட எனக்கு தெரியல. எனக்கு யாரையும் நம்பவே பயமாயிருக்கு. அதுல என்னோட தப்பு என்ன இருக்கு? என்னோட இடத்துல யாராயிருந்தாலும் அப்படி தானே நடந்துக்குவாங்க?" பரிதாபமாய் அவள் கேட்க, பாவமாய் இருந்தது ரம்யாவிற்கு.

அவள் கூறுவதும் சரி தானே. அவளுடைய வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் தானே தெரியும், அவளுடைய நிலை...

அவர்கள் இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டு, வேலன் வருவதைப் பார்த்தார்கள். இந்துவிற்கு காலை உணவை எடுத்து வந்து மேசை மீது வைத்துவிட்டு, அவர் அங்கிருந்து செல்ல திரும்பினார்.

"ஒரு நிமிஷம்" என்றாள் ரம்யா

"சொல்லுங்கம்மா"

"சில விஷயங்களை தெரிஞ்சுக்கணும்னு இந்து நினைக்கிறாங்க"

"கேளுங்க. எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்"

"அர்ஜுன் சாருக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரியா?"

"இல்லம்மா, அவர் சென்னையை சேர்ந்தவர்"

"அவர் எப்பவாவது பாண்டிச்சேரிக்கு போய் இருக்காரா?"

"அவர் கடந்த பத்து வருஷமா லண்டனில் தான் இருந்தாரு. அவர் லண்டனுக்கு போனதுக்கப்புறம் இந்தியாவுக்கு வரவே இல்ல. போன மாசம் தான், அவங்க அம்மாவுடைய இறுதி சடங்குக்காக இந்தியா வந்தார்"

"அவங்க அம்மா எப்படி இறந்தாங்க?"

"ஒரு ஆக்ஸிடெண்ட்ல"

"அவங்க அப்பா?"

சற்று தயங்கினார் வேலன். சொல்லுங்கள் என்று ரம்யா சைகை செய்ய, அவர் கூற துவங்கினார்.

"அர்ஜுன் தம்பிக்கு அவங்க அப்பாவை பிடிக்காது... அவர் வேற ஒரு பொம்பளைக்காக அவங்க அம்மாவுக்கு துரோகம் பண்ணிட்டாரு. அதனால அர்ஜுன் தம்பி அவங்க அப்பவை அடியோட வெறுத்துட்டாரு. அவங்க அப்பவை பாக்கும் போதெல்லாம், அவரோட கோவம் காட்டுக்கடங்காம போகும். அதனால, சீதாம்மா அவரை லண்டனுக்கு அனுப்பிட்டாங்க. ஆனா, தம்பிக்கு அவங்க அம்மாவோட இருக்கணும்னு ரொம்ப ஆசை. அவரோட கோவத்தை பத்தி நல்லா தெரிஞ்சதால, சீதாம்மா அவர் இந்தியா வர ஒத்துக்கவேயில்ல. அவங்க அம்மா இறந்த பிறகு தான் அவரால இந்தியா வர முடிஞ்சிது."

"அவரோட அப்பா எங்க இருக்காரு?"

"அவரோட ரெண்டாவது சம்சாரத்தோட இருக்கார். அர்ஜுன் தம்பியோட கோவத்துக்கு பயந்து அவர் இங்க வர்றதில்ல"

"அவர் ஏன் இந்துவை கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு உங்களுக்கு தெரியுமா?"

"எனக்கு தெரியாது..."

ஒரு நொடி தாமதித்து விட்டு,

"ஆனா, நிச்சயமா அதுக்கு ஒரு நியாயமான காரணம் இருக்கும்"

"எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?"

"அர்ஜுன் தம்பிக்கு பொம்பளைங்கள பிடிக்காது. அவர் பொண்ணுங்களை வெறுக்குறவர்"

இந்த விஷயம், ரம்யாவிற்கு கூட புதிது. அவளும் ஆச்சரியப்பட்டாள்.

"நிஜமாவா...? உங்களுக்கு எப்படி தெரியும்?"

"அவர் எல்லாத்தையும் சீதாம்மாவுக்கு லெட்டர்ல எழுவார். சீதாம்மா ஃபோன்ல அடிக்கடி அவர்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பாங்க, பொம்பள பசங்கள வெறுக்கக் கூடாதுன்னு. அவரை தன்னோட வலையில விழ வைக்க நினைச்ச ஒரு பொண்ணை, அர்ஜுன் தம்பி அடிச்சிட்டார். அப்போ சீதம்மா, இனிமே எந்த பெண்ணையும் கைநீட்டி அடிக்க கூடாதுன்னு அவர்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க. அதுக்கப்புறம் அர்ஜுன் தம்பி எந்த பெண்ணையும் அடிக்கவேயில்ல."

கைதட்டி ஆரவாரம் செய்தாள் ரம்யா. அவளைப் பார்த்து சிரித்தார் வேலன். இந்துவின் மனதில் மிகப் பெரிய மரியாதையை பெற்றான் அர்ஜுன். அவளுடைய இதழில் தவழ்ந்த புன்னகையே அதற்கு அத்தாட்சி.

"அவருக்கு, அவங்க அம்மாவை ரொம்ப பிடிக்கும் போல இருக்கு..."

"எல்லாத்தையும் விட அதிகமா..." என்றார் வேலன்.

"அவருடைய வைஃப் கிட்ட அவர பத்தி சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் ரம்யா, எல்லா கேள்விகளையும் அவள் கேட்டுவிட்டு.

சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் வேலன். நம்பமுடியாமல் அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து.

"என்ன யோசிக்கிறீங்க?" என்றாள் ரம்யா

"அவர் ரொம்ப பாவம்ல...?" என்றாள் பாவமாக.

ஆமாம் என்று தலையசைத்தாள் ரம்யா.

"இவரை விட ஒரு நல்ல மனுஷன் யாருக்கும் புருஷனா கிடைக்க முடியாது. ஆம்பளைங்க ரொம்ப சுயநலவாதிங்க. நேரத்துக்கு தகுந்தா மாதிரி அவங்களுடைய நிறத்தை மாத்திக்கிட்டே இருப்பாங்க. ஆனா, உங்களைத் தவிர வேற எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காத ஒரு புருஷன் உங்களுக்கு கிடைச்சிருக்காரு. இப்படி ஒரு புருஷன் கிடைச்சதுக்கு நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும். அவர் உங்களை நிச்சயமா ஏமாத்த மாட்டார். அவரே நேரடியா பாதிக்கப்பட்டு இருக்கும் போது, அதுக்கு வாய்ப்பே இல்ல."

"ஆனா, அவரு ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு?"

"நீங்களும் அவர மாதிரியே நடந்துக்காதீங்க... நீங்க நீங்களா இருங்க... " என்று ரம்யா கூற இருவரும் சிரித்தார்கள்.

"அப்போ அவர் காரணத்தை நிச்சயம் சொல்வார். அவர் எப்படிப்பட்டவர்னு நீங்க முதல்ல யோசிச்சிங்களோ, அதே மாதிரி யோசிக்காதீங்க. வேற மாதிரி யோசிச்சி பாருங்களேன். உங்க கால் சுட கூடாதுன்னு உங்கள தூக்கிட்டு வந்தவரு, உங்கள தப்பான காரணத்துக்காக கல்யாணம் பண்ணியிருக்க மாட்டார்னு எனக்கு தோணுது. தயவுசெய்து உங்க வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க. உங்க காயத்துக்கு அவர் எப்படி மருந்து போட்டாருன்னு யோசிச்சு பாருங்க... (சற்றே நிறுத்தியவள்) அவரு உங்ககிட்ட நடிக்கிறார்னு நினைக்கிறீங்களா?"

இல்லை என்று தலை அசைத்தாள் இந்து.

"நிஜமாவா...? ஏன் அப்படி நினைக்கிறீங்க?"

"அவரு நடிக்கிறதா இருந்தா, நல்லவர் மாதிரியில்ல நடிச்சிருப்பாரு...?" என்றாள் இந்து.

அப்பாடா என்றிருந்தது ரம்யாவிற்கு. இந்து சரியான பாதையில் யோசிக்கத் தொடங்கி இருக்கிறாள்.

ஆமாம் என்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள் ரம்யா, இந்துவிற்கு யோசிக்க சந்தர்ப்பம் அளித்து. அது அவளுக்கு நிச்சயம் தேவை.

அர்ஜுனை நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள் இந்து. இந்த உலகத்திலேயே அவள் மட்டும் தான் அதிர்ஷ்டம் அற்றவள் என்று நினைத்திருந்தாள். ஆனால், அர்ஜுனின் கதை, அவளை விட மோசமானதாக இருக்கிறது. அவனுக்கும் அவளைப் போலவே யாரும் இல்லை. அவன் தன் அம்மாவை அளவுக்கு அதிகமாய் நேசித்த போதும், அவருடன் இருக்க அனுமதிக்கப் படவில்லை. பாவம் அவன்... அவளை ஏன் மணந்து கொண்டான் என்ற காரணத்தை கேட்டால் அவன் கூறுவானா...?

அதே நேரம், அர்ஜுன் அவளுடைய அறைக்கு வந்தான், அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள. இந்து அவனை இறக்கத்துடன் பார்த்தாள். அவன் ரம்யாவை தேடினான். அவள் அங்கு இல்லாததால், இந்துவின் பக்கம் திரும்ப, அவளுடைய கூர்ந்த பார்வை அவன் மீது இருப்பதை பார்த்து, ஒரு நிமிடம் திகைத்து நின்றான். அவளுடைய முகம் மென்மையாக, தெளிவுடன் இருந்தது.

"அந்த பொண்ணு எங்க?"

தெரியாது என்பது போல் தலையசைத்தாள் இந்து.

"நீ பிரேக்ஃபாஸ்ட் சாப்டியா?"

சாப்பிட்டேன் என்று தலையசைத்தாள்.

"மாத்திரை சாப்பிட்டியா?"

சாப்பிட்டேன் என்று மறுபடியும் தலையசைத்தாள். இந்த முறை, வாயை திறந்து பேசு என்று கூற அவனுக்கு தோன்றவில்லை.

அவளுடைய அந்த மென்மையான பார்வை, அவனை அங்கேயே அவள் பக்கத்தில் இருந்துவிட முடியாதா என்று நினைக்க செய்தது. ஆனால், அப்படிச் செய்ய அவனுக்கு எந்த காரணமும் இல்லை. அந்த கருணை பார்வையின் முன் திக்கு முக்காடினான் அர்ஜுன். அங்கிருந்து சென்றுவிடலாம் என்று அவன் நினைத்து திரும்பிய போது, இது வரை அவன் கேட்டிராத, புதுமையான ஒரு வார்த்தையை கேட்டு நின்றான்.

"என்னங்க..."

நம்ப முடியாத பார்வையுடன் அவளை நோக்கி திரும்பினான். அவன் முகத்தில் ஆழ்ந்த அதிர்ச்சி தெரிந்தது. உண்மையிலேயே அவள் தான் அவனை கூப்பிட்டாளா, அல்லது அது அவனுடைய கற்பனையா? இல்லை... அவள் ஏன் அவனை அப்படி கூப்பிட போகிறாள்? என்று தன்னை சமாளித்துக் கொண்டு, மீண்டும் அங்கிருந்து அவன் செல்ல நினைத்த பொழுது,

"என்னங்க..." என்று மறுபடியும் அவள் அழைத்தாள்.

மென்று விழுங்கியபடி அவளை பார்த்தான் அர்ஜுன்.

"கொஞ்சம் தண்ணி எடுத்துக் குடுங்களேன்" என்றாள் தண்ணீர் குவளையை காட்டியபடி.

அந்த குவளையை எடுத்து, ஒரு டம்ளரில் தண்ணீர் நிரப்பி, அதை அவளை நோக்கி நீட்டினான் அர்ஜுன். அந்த நீரை அருந்தும் பொழுது, அவன் முகத்தில் எதையோ தேடிக் கொண்டே இருந்தாள் இந்து, அர்ஜுனுக்கு தர்மசங்கடத்தை அளித்து. அவளுடைய கோபாவேசத்தை சாதாரணமாகக் கையாண்டுவிட்ட அவன், அந்த பெண்ணின் மென்மையான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திணறினான்.

அவன் மீது இருந்த தன் கண்களை அகற்றாமல், பொறுமையாய் அந்த தண்ணீரை குடித்தாள் இந்து. இது வரை அவளுக்கு புரியாத சில விஷயங்கள், அப்பொழுது புரிந்தது. அர்ஜுன் மிக அழகாக இருக்கிறான். கருகருவென்று இருந்த தலைமுடி... அவனுடைய கவர்ச்சிகரமான கண்கள்... அவனுடைய இதழ்கள்... தன்னுடைய நினைப்பை எண்ணி அதிர்ந்து, அவளுக்கு புரையேறியது. அவள் பக்கத்தில் அமர்ந்து, மெல்ல அவள் முதுகைத் தட்டிக் கொடுத்த அர்ஜுன்,

"மெதுவா..." என்றான்.

மெதுவாய் தன் இமைகளை அவனை நோக்கி உயர்த்தி, சரி என்று தலை அசைத்தாள்.

இந்தப் பெண்ணுக்கு என்ன ஆகிவிட்டது? எதற்காக அவள் இப்படி மாறிவிட்டாள்? கட்டிலிலிருந்து எழுந்து நின்றான் அர்ஜுன்.

"ரொம்ப வலிக்குதா?" என்றான் அவளுடைய காலை சுட்டிக்காட்டி.

இல்லை என்று தலையசைத்தாள் இந்து.

"உனக்கு ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடு..."

"சரி" என்று அவள் புன்னகைக்க,

அந்த புன்னகையால், அவன் இதயம் துடிப்பதை சில நொடிகள் நிறுத்தியது. அவள் சிரிக்கும் போது தான் எவ்வளவு அழகாய் இருக்கிறாள்...! அதுவும், அவள் அவனைப் பார்த்து சிரித்து விட்டாள்...! அவனால் நம்பவே முடியவில்லை. என்ன தான் நடக்கிறது? மீண்டும் அவன் வயிற்றில் சில பட்டாம்பூச்சிகள் பறந்தன. அழகான புன்னகையுடன் அங்கிருந்து சென்றான் அர்ஜுன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top