11 திடீர் மாற்றம்
11 திடீர் மாற்றம்
சங்கர் இல்லம்
மாஷாவின் முகம், கடுகை போட்டால் பொரிந்து விடும் போல அவ்வளவு உஷ்ணமாக மாறியது, சங்கரின் உயிலை பார்த்த போது. அந்த உயிலின் படி, சங்கரின் மரணத்திற்கு பிறகு, அவருடைய சொத்துக்கள் அனைத்தும் அவருடைய ஒரே மகனான அர்ஜுன் ஒருவனையே சேரும்.
மாஷாவிற்கு ஆத்திரம் தாங்கவில்லை. அவள் அதே ஆத்திரத்துடன் கீழ்தளம் வந்தாள். அங்கு அமர்ந்திருந்த சங்கர் மீது, அந்த உயிலை வீசி எறிந்தாள். அவருக்கு கோபம் தலைக்கேறியது.
"எவ்வளவு திமிரு உனக்கு?" என்று எழுந்து நின்றார் கோவமாக.
"நானும் அதையே தான் கேக்குறேன். என்ன இது?"
"பாத்தா தெரியல? இது என்னோட உயில்..."
"எல்லாத்தையும் உங்க புள்ள பேருக்கு எழுதி வச்சிருக்கீங்க... அப்ப, நானும் என் பொண்ணும் என்ன ஆகுறது?"
"உன்னோட எதிர்காலத்திற்கு தேவையானதை தான் நீ வச்சிருக்கியே..."
"என்ன உளர்றீங்க...?"
"ஊட்டியில் ஒரு டீ எஸ்டேட்... கோயம்புத்தூர்ல சொகுசு பங்களா... தங்க வைர நகை மட்டும் 10 கோடிக்கு நீ வச்சிருக்குறது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா..."
"அதெல்லாம் என்னுடைய சேமிப்பு நீங்க எனக்கு என்ன கொடுப்பீங்க?"
"என்னது... உன்னுடைய சேமிப்பா? நான் கொடுக்காம இதையெல்லாம் நீ எப்படி சேர்த்து வச்ச? எனக்கு தெரியாம வேற யாரையாவது வச்சிருக்கியா?" என்றார் கிண்டல் தெறிக்க.
"வாயை மூடுங்க" என்ற மாஷா,
ஹீனா அதிர்ச்சியுடன் நிற்பதை பார்த்து, அதிர்ச்சியானார். அவள் சங்கர் கூறியதைக் கேட்டிருக்க வேண்டும். அவள் நிற்பதை பார்த்து சங்கரும் தர்ம சங்கடத்திற்கு ஆளானார். அவர் அங்கிருந்து செல்ல எத்தனித்த போது, ஹீனாவின் குரல் அவரை தடுத்தது.
"இதை உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல... நீங்க அம்மாவை அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அவங்க உங்களுடைய வைஃப். நீங்க எப்படி அவங்களை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொல்லலாம்?"
"பேபி, நீ சும்மா இரு" என்று அவளை அமைதியடைய செய்ய முயன்றார் மாஷா.
ஹீனா தன் கையை அவரை நோக்கி நீட்டி அவரைப் பேச விடாமல் செய்துவிட்டு, சங்கரை நோக்கி ஓடி சென்றாள்.
"ஏம்பா...? எப்பவும் ஏன் ஒரு கண்ல வெண்ணையும் ஒரு கண்ல சுண்ணாம்பும் வைக்கிறீங்க? எங்க கூடவே இருந்தாலும், உங்க மனசு எப்ப பார்த்தாலும் உங்க பையனையும் முதல் மனைவியையுமே தான் சுத்தி சுத்தி வருது. நாங்க உங்களுடைய சொந்தம் இல்லயாப்பா? நீங்க தானேப்பா, அம்மாவை விரும்பி ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிகிட்டீங்க...? அவங்க தப்பு இதுல என்ன இருக்கு? நீங்க ஒரு சுயநலவாதி. முதல் மனைவியையும், மகனையும் விட்டுட்டு வந்த சுயநலவாதி நீங்க. அம்மா உங்க மேல அளவுக்கு அதிகமா அன்பையும், நம்பிக்கையும் வச்சதனால தான் உங்களை கல்யாணம் பண்ணிட்டாங்க..."
அவர் ஏதும் சொல்லாமல் மென்று முழுங்கியதை பார்த்து, அவளுக்கு கோபம் தலைக்கேறியது. அவருடைய காலரை பற்றி உலுக்கினாள்.
"ஏம்ப்பா...? எதுக்காக உங்களுக்கு இவ்வளவு ஓரவஞ்சனை? நாங்க உங்க வாரிசு இல்லயா? நான் உங்க மக இல்லயா?"
"இல்ல... நீ என் மக இல்ல..." என்றார் அமைதியாக.
ஹீனாவின் கண்கள் அதிர்ச்சியில் அகலமாக விரிந்தது. அவளுடைய கைகளை, தன் காலரில் இருந்து விடுவித்தார் சங்கர்.
"நீ என்னோட மகளில்ல. உன் அம்மா எனக்கு மனைவியும் இல்ல. நீ அவ புருஷனுடைய மகள். நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கவும் இல்ல, அவளுக்கு அது தேவைப்படவும் இல்ல. நாங்க ஒன்னா இருக்கோம் அவ்வளவு தான். என் மனைவியையும் மகனையும் விட்டுட்டு நான் ஏன் வந்தேன்னா, உங்கம்மா அவ புருஷனை விட்டுட்டு வந்துட்டா. பொம்பள குழந்தையோட, அவளை நடுத்தெருவுல விட எனக்கு மனசு வரல. அதனால தான் நான் என் மனைவியையும் மகனையும் விட்டுட்டு வந்தேன். எல்லாத்துக்கும் மேல, என்னை மாதிரி ஒரு நம்பிக்கை துரோகியை ஏத்துக்க, என் மனைவியும் மகனும் தயாரா இல்ல. வேற வழி இல்லாம தான், நான் உங்க அம்மாவோட இருக்கேன்."
அதை சிறிதும் எதிர்பாக்காத அவள், அதிர்ந்து நின்றாள். தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு, கதறி அழுதாள். அவளால் அந்த உண்மையை தாங்க முடியவில்லை. அவள் அவளுடைய அம்மாவை போல் இல்லை போலிருக்கிறது. சிறிதும் குற்றவுணர்ச்சி இல்லாமல் நின்றார் மாஷா.
"உன்னை கஷ்டப்படுத்துறதுக்காக இதை நான் சொல்லல டா. இன்னைக்கு இந்த உண்மை உனக்கு தெரியலன்னா, வேற ஒரு நாள், வேற ஒரு சந்தர்ப்பதுல நிச்சயம் தெரிய வரும். அப்போ, நீ இதை விட ரொம்ப வருத்தப்படுவ..."
"நான் உங்க பொண்ணு இல்லயாப்பா? நான் உங்களை அப்பான்னு கூப்பிட கூடாதாப்பா? உங்க சொத்து எதுவும் எனக்கு வேணாம். ஆனா, நான் உங்க மக இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்க. உங்களை அப்பான்னு கூப்பிட கூடாதுன்னு சொல்லிடாதீங்கப்பா" மன்றாடினாள் அந்த சின்ன பெண்.
"ஏன் நீ என்னை அப்படி கூப்பிடக் கூடாது? நிச்சயமா கூப்பிடலாம். நீ உங்க அம்மா மாதிரி இருக்கக் கூடாதுன்னு நான் நெனச்சேன். அவ்வளவு தான்."
"தேங்க்யூ பா" என்று அவர் தோளில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள் ஹீனா.
அவள் தலையை வருடி கொடுத்தார் சங்கர். அங்கிருந்து செல்ல நினைத்தார் மாஷா.
அப்போது, அழைப்பு மணியின் ஓசையை கேட்டார்கள் அவர்கள். முகத்தை துடைத்துக் கொண்டு, கதவை திறக்க ஓடினாள் ஹீனா. அங்கு திருமதி யமுனாதிருமலை நின்றிருப்பதை பார்த்து முகம் சுளித்தாள். மாஷாவின் லேடிஸ் கிளப்பில் அவரும் ஒரு உறுப்பினர். அவருக்கு மாஷாவை அடியோடு பிடிக்காது. அது எல்லோருக்கும் தெரியும். அவருக்கு இங்கு என்ன வேலை? இங்கு ஏன் வந்தார்? அவர் நிச்சயம் மாஷாவிற்கு தொல்லை கொடுக்கத் தான் வந்திருக்கிறார் என்று நினைத்தாள் ஹீனா. அவள் யூகம் சரி தான். சிரித்தபடி உள்ளே நுழைந்தார் திருமதி யமுனா திருமலை.
"ஹலோ சங்கர் சார், எப்படி இருக்கீங்க?" என்றார்.
மெலிதாய் புன்னகை பூத்தார் சங்கர்.
"நீ இங்க என்ன பண்ற?" என்றார் மாஷா வெறுப்புடன்.
"உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லத் தான் நான் இங்க வந்தேன். இன்னைக்கு காலையில நான் அர்ஜுனை பார்த்தேன்."
"அது என்ன அவ்வளவு முக்கியமா?"
"அவனை நான் கோவில்ல பார்த்தேன். அது முக்கியமில்லயா?"
"அர்ஜுன்... கோவில்லயா?" என்றார் மாஷா.
"அவன் என்ன செஞ்சான்னு மட்டும் என்னை கேட்காத" என்றார், ஏதோ கேட்டால் கூட, அவர் கூற மாட்டார் என்பது போல.
"அவன் என்ன செஞ்சான்னு நெனைக்கும் போதே, வெக்கத்தால என் கன்னமெல்லாம் கொதிக்குது..."
மாஷாவும், சங்கரும் முகம் சுளித்தார்கள். யமுனா வெட்கப்படும் அளவிற்கு அப்படி என்ன செய்துவிட்டான் அர்ஜுன்?
"அவனை கோவில்ல பார்த்த உடனேயே எனக்கு ஆச்சரியம் தாங்கல. நான் அவன்கிட்ட போயி பேசலாம்னு நினைச்சேன். அவன் என்னடான்னா, மரத்தடியில நின்னு சாமி கும்பிட்டுக்கிட்டிருந்த ஒரு பொண்ணுகிட்ட போனான்."
மாஷா ஆர்வமானாள்.
"அவன் என்ன செஞ்சாங்கிறது தான் அங்க ஹைலைட்டே. அந்த பொண்ணை, பொம்மை மாதிரி அழகா கையில தூக்கிக்கிட்டான்" என்றார் உணர்வுபூர்வமாக.
"என்னனனனனது...?" என்றார் மாஷா நம்பமுடியாமல்.
"அந்த பொண்ணு, அவன் அப்படி தூக்குவான்னு எதிர்பார்க்கவே இல்ல. அவ அவனை கீழே இறக்கிவிடச் சொல்லி கேட்டா. அவன் அவளை எதுக்காக தூக்கிகிட்டான்னு தெரியுமா?"
இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்ததால், மாஷா அவளுக்கு பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
"தரை சூடா இருந்ததுதுன்னு தூக்கிகிட்டானாம். ஹவ் ஸ்வீட்..."
"அவ யாரு?" என்றாள் மாஷா.
"அது தான் அங்க மேட்டரே... அந்த பொண்ணு சொன்னா, என்னை கீழே விடுங்க... இது ஒன்னும் உங்க வீடு இல்லன்னு. அதுக்கு அர்ஜுன் சொன்ன பதில், என்னை அப்படியே உறைய வச்சிடுச்சு"
"அவன் என்ன சொன்னான்?" மாஷா.
"ஆனா, நீ என்னோட வைஃப். நீ கஷ்டப்படுறத என்னால பாக்க முடியாதுன்னு சொன்னான். பொண்டாட்டி மேல எவ்வளவு அக்கறை பாரு..."
ஆழமாய் சிந்தித்தவாறே தன் கண்களை சுருக்கினாள் மாஷா.
"இது ஒன்னும் உங்க வீடு இல்ல அப்படின்னு அந்த பொண்ணு சொன்னதுக்கு என்ன அர்த்தம்? வீட்ல அவன் அவளை சதா தூக்கிக்கிட்டு சுத்திகிட்டு இருப்பான் போல இருக்கு. நான் சொல்றது சரி தானே சங்கர் சார்?"
அமைதியாய் நின்றிருந்தார் சங்கர். அவருக்கும் கூட இது ஒரு பேரதிர்ச்சி தான். ஆனால், மாஷாவிற்கு ஏற்பட்டது போல் அல்லாமல், வித்தியாசமான அதிர்ச்சி.
"எவ்வளவு ரொமான்டிக்கா இருந்துது தெரியுமா...! சுத்தி இருந்த ஜனங்க எல்லாம் அசந்து போயிட்டாங்க... சினிமா பார்த்த மாதிரி இருந்தது. அர்ஜுன் அவனுடைய வைஃபை எவ்வளவு காதலிக்கிறான்னு பார்த்தவுடனே தெரிஞ்சிடுச்சு. அவன் இவ்வளவு ரொமான்டிக்கானவன்னு தெரிஞ்சிருந்தா, நான் என்னோட பொண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்திருப்பேன். நான் மிஸ் பண்ணிட்டேன்" என்று பெருமூச்சு விட்டார் யமுனா.
மாஷாவின் பேயறைந்தது போலிருந்த முகத்தை பார்த்து, உள்ளார துள்ளிக் குதித்தார் யமுனா.
"அவனுடைய வைஃப், ரொம்ப அழகா, ரொம்ப சிம்பிளா இருக்கா தெரியுமா....? பாவம் அந்தப் பையன், இவ்வளவு நாளா ஃபாரின்ல தனியா இருந்துட்டு வந்திருக்கான். அவனோட அம்மாவையும் இழந்துட்டான்."
ஓரக்கண்ணால் சங்கரின் முகத்தை கவனித்தார் யமுனா.
"அவன் வாழ்க்கையில தவறவிட்ட அன்பு, அவன் மனைவிகிட்ட இருந்தாவது அவனுக்கு கிடைக்கட்டும். சரி, எனக்கு ரொம்ப நேரமாச்சி. நான் கிளம்புறேன்" என்று கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார் யமுனா. வந்த வேலையை செவ்வனே செய்து முடித்துவிட்டு.
மாஷா குழப்பம் அடைந்தார். யார் அந்த பெண்? அவளுக்கு கால் சுடக்கூடாது என்பதற்காக, சுற்றி இருந்த மக்களை பற்றிக் கூட கவலைப்படாமல், அவளை தூக்கி கொள்ளும் அளவிற்கா அவன் அவளை காதலிக்கிறான்? ஒரு சாதாரண பெண்ணின் மீது, அவனுக்கு திடீரென எப்படி இவ்வளவு ஆழ்ந்த காதல் ஏற்பட்டது? அவர்களுக்கிடையில் அப்படி என்ன யாராலும் உகிக்க முடியாத ஒரு தொடர்பு? ஒரு வேளை, இறப்பதற்கு முன், சீதா அந்த பெண்ணை அர்ஜுனுக்காக தேர்ந்தெடுத்து வைத்திருந்தாளோ? அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
சங்கரும் கூட ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை பார்த்தார் மாஷா. அவருக்கும் ஒன்றும் தெரியாது போலிருக்கிறது அப்படியே தெரிந்தாலும், அவர் ஒரு வார்த்தையையும் உதிர்க்க மாட்டார் என்று மாஷாவிற்கு தெரியும். அவர் முகத்தைப் பார்த்து, அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதை நிச்சயத்துக் கொண்டார் மாஷா. அர்ஜுன் தான் அவரை என்றும் மதித்ததே இல்லையே. ஆனால், அவர் நிச்சயம் அவனை பற்றி விசாரித்து தெரிந்து கொள்வார் என்று நினைத்தார் மாஷா.
சீதாராணி இல்லம்
அன்று இரவு முழுதும், இந்து தூங்கவே இல்லை. கட்டிலின் மீது புரண்டு கொண்டிருந்தாள். தன்னையும் ஒருவன் காதலிக்கிறான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால், அவளுடைய தந்தையை தவிர, வேறு யாரும் அவள் மீது அன்பு செலுத்தியதில்லை. அவள் அர்ஜுனிடம் காண்பது காதல் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.
அவளைப் பொறுத்தவரை, பூ கொடுப்பது, கடிதம் எழுதுவது, காதல் ரசம் சொட்டசொட்ட வார்த்தைகள் பேசுவது, மோதிரம் அணிவிப்பது, இவற்றையெல்லாம் தான் காதல் என்று நினைத்திருந்தாள். அர்ஜுனுடைய முரட்டுத்தனமான நடவடிக்கைகளில் கூட காதல் ஒளிந்திருக்கிறது என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சி அளிக்கும் விதத்தில், அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான்... முதல் இரவில் அவள் மீது கோபம் கொண்டான்... மிரட்டி சாப்பிட வைத்தான்... யாரைப்பற்றியும் கவலைப்படாமல், கோவிலிலிருந்து அவளைத் தூக்கிக் கொண்டு வந்தான்... இதெல்லாம் காதலா?
ரம்யா சொன்னது போல், ஒரு வேளை அவன் அவளை மணந்து கொண்டதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்குமேயானால், அந்த காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது இந்துவிற்கு. ஆனால், அப்படி என்ன காரணம் இருந்து விட முடியும்? பார்க்கலாம்... அவன் யார்? அவனுடைய பின்புலம் என்ன? அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்... அப்போது ஏதாவது புரிகிறதா பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டாள் இந்து.
மறுநாள் காலை
நேரம் கழித்து தூங்கியதால், ஏழு மணியாகியும் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள் இந்து. அவள் முகத்தில் சூரியக்கதிர்கள் விழுந்த பொழுது தான், அவளுக்கு தூக்கம் கலைந்தது. அவள் மெல்ல தன் கண்களைத் திறந்தாள். அவளுடைய கண்கள் அகல விரிந்தன, அவள் கண் முன்னே அர்ஜுன் நிற்பதை பார்த்த பொழுது. சட்டென்று எழுந்து அமர்ந்தாள். அவன் ரம்யாவிடம், இந்து சாப்பிட வேண்டிய மாத்திரையை கொடுத்துக் கொண்டிருந்தான்.
"இந்த மாத்திரையை, அவ சாப்பிடறதுக்கு முன்னாடி எடுத்துக்கணும்"
சரி என்று தலையசைத்தாள் ரம்யா.
கண் இமைக்காமல், அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து. அவளை பார்த்துவிட்டு, அவள் காலைப் பார்த்தான் அவன். அவள் காலுக்கடியில் கலைந்திருந்த தலையணைகளை, சரி செய்தான். அதை, மெதுவாகவும் எச்சரிக்கை உணர்வுடனும் செய்தான் அர்ஜுன்.
அன்று அவனுடைய தொடுதல், புதுமையாய் இருந்தது இந்துவுக்கு. தன் கண்களை அவன் மீதிருந்து அகற்றவே இல்லை அவள். ஏதோ ஒரு உள்ளுணர்வு அவனுக்கு அதை உணர்த்த, மெல்ல தன் தலையைத் திருப்பி அவளைப் பார்த்த அவன், அவளின் கண்களில் தெரிந்த மென்மையில் தன்னை மறந்தான். ஏன் அவள் அப்படி அவனை புதுவிதமாய் பார்த்துக் கொண்டிருக்கிறாள்? வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பதை பற்றி அவன் கேள்விபட்டு இருக்கிறான். இப்பொழுது அது போன்ற ஒரு உணர்வில் தான், அவன் திக்குமுக்காடி கொண்டிருந்தான்.
இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இமைக்க மறந்து. அவனுடைய கைபேசி ஒலிக்க, அவன் சுய நிலையை அடைந்தான். அவன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த பொழுதும், அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பொழுது, அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவளிடம் இந்த திடீர் மாற்றம் எப்படி ஏற்பட்டது? தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். பேசி முடித்து விட்டு அழைப்பை துண்டித்தான்.
"அவளுக்கு வேண்டியதை உன்னால தனியா செய்ய முடியுமா?" என்றான் ரம்யாவிடம்.
முடியும் என்று தலையசைத்தாள் ரம்யா.
"உனக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டா என்னை கூப்பிடு"
"சரி"
அங்கிருந்து கிளம்பிச் சென்றான் அர்ஜுன், ஒரு முறை இந்துவைப் பார்த்துவிட்டு. மீண்டும் அவன், அவளை திரும்பி பார்ப்பானா என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் இந்து. அவள் எதிர்பார்த்தது போல், அவன் அவளைப் பார்க்க, மெல்ல தன் கண்களை இமைத்தாள் இந்து.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top