50 நிஜ முகம்

50 நிஜ முகம்

"அப்படின்னா, நீங்க உங்க ரேணுவை தான் முதலில் தூக்கி எறியணும்" என்ற குரல் வந்த திசையை நோக்கி, அனைவரும் திடுக்கிட்டு திரும்பினார்கள் அதை சொன்னது யார் என்பதை தெரிந்துகொள்ள.

அவர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தார்கள், அங்கு மயூரியின் கணவன் சுரேஷ் நின்றிருந்ததை பார்த்த போது.

இந்திராணி, சுரேஷை பார்த்து,

"என்ன சொன்னீங்க நீங்க? வார்த்தையை அளந்து பேசுங்க மாப்பிள்ளை... என்ன பேசுறோம்னு யோசிச்சு பேசுங்க..." என்றார்.

"நான் நல்லா யோசிச்சு தான் பேசுறேன். உங்க ரேணு தான் இங்க மாஸ்டர் மைண்ட்..."

அவன் திடமாய் நின்று பேசியதைப் பார்த்து ஆடிப் போனார்கள் அனைவரும். ரேணுகாவின் பதட்டமோ அதிகரித்துக் கொண்டிருந்தது.

"ஆதி, அவனை நம்பாதே. அவன் பொய் சொல்றான். என்னை பத்தி உனக்கு தெரியாதா? அவன் உன் அக்கா மேல பழி சுமத்துறான், ஆதி..." என்று கூப்பாடு போட்டாள் ரேணுகா.

ரேணுகாவை குற்றம் சாட்டிய சுரேஷின் மீது ஆதித்யா கோபம் கொள்ளாததும், ரேணுகாவின் மீது அவன் வீசிய அருவருப்பான பார்வையும், சுரேஷ் கூறுவது பொய்யல்ல என்பதை நிரூபித்தது. அது அங்கிருந்தவர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்தது.

"நீங்களும் உங்க வீட்டுக்காரரும் பேசினதை எல்லாம் நாங்க ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கோம். என்னை அதை போட்டு கட்ட வச்சுடாதீங்க" என்றான் சுரேஷ்.

"ரெக்கார்ட் பண்ணிங்களா? என்ன நடக்குது இங்க? என்ன ரேணு இதெல்லாம்?" என்றார் பாட்டி.

"சுரேஷ் சொல்றது பொய்யில்ல, பாட்டி. கமலியோட போட்டோவை வேற ஒருத்தன் போட்டோ கூட மார்ஃபிங் பண்ணி அனுப்புனது வேற யாரும் இல்ல, அக்கா தான்..." என்றான் ஆதித்யா.

அதைக் கேட்ட அந்த வயதான பெண்மணி, நிற்கவே தடுமாறினார். அவருக்கு அருகில் நின்றிருந்த தீபக் அவரை கைத்தாங்கலாய் பற்றிக்கொண்டான், ரேணுகாவை கோபப் பார்வை பார்த்தபடி.

"அது மட்டுமில்ல. கமலியை கிட்னாப் பண்ணவும் அவங்க முயற்சி பண்ணாங்க. தன்னுடைய தைரியத்தையும், நம்பிக்கையையும் இழந்த கமலி, வீட்டுக்குள்ளேயே முடங்கிடுவாங்கன்னு அவங்க நினைச்சாங்க" என்றான் சுரேஷ்.

"ஆனா ஏன்?" என்றார் இந்திராணி

"சரவணன் கையாடல் பண்ண விஷயத்தை கமலி தான் கண்டுபிடிச்சாங்க. அதனால,  உங்க எல்லாரோட பார்வையிலும் அவங்களை தப்பானவங்களா காட்ட நினைச்சாங்க. அப்படி நடந்துட்டா, அதுக்கப்புறம் சரவணனை பத்தி அவங்க சொல்ற எதையும் நீங்க நம்ப மாட்டீங்க இல்லையா...?"

"இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள் மயூரி.

"நம்ம ரெண்டு பேரும் இந்த வீட்டுக்கு வந்த போது, என்னையும் அவங்களோட சேர்த்துக்க முயற்சி பண்ணாரு சரவணன். ஆதித்யாவுக்கு எதிரா அவர் செஞ்சுக்கிட்டிருந்த விஷயங்கள் எனக்கு பயத்தை கொடுத்துது. ஏன்னா, ஆதித்யாவையே ஏமாத்துற அளவுக்கு அவருக்கு தைரியம் இருந்தா, நானெல்லாம் அவருக்கு எம்மாத்திரம்? என் கதையை  சில நிமிஷத்திலேயே அவரால முடிச்சிட முடியுமே. அப்போதைக்கு, அவர் சொன்னதை ஏத்துகிட்டா மாதிரி நான் தலையாட்டினேன். ஆதித்யாவோட முதுகுக்கு பின்னாடி நடக்கிற விஷயங்களை அவர்கிட்ட சொல்லனும்னு நான் நினைச்சேன். ஆனா, ஆதித்யா தன் குடும்பத்து மேல வச்சிருந்த அட்டச்மெண்ட், என்னை அதை செய்ய விடாம தடுத்தது. ஆனா கமலியை கடத்த சரவணன் பிளான் பண்ண போது என்னால சும்மா இருக்க முடியல. ஆதித்யாவுக்கு போன் பண்ணி, கமலியை காப்பாத்த சொல்லி அவரை அலர்ட் பண்ணேன். அதுக்கப்புறம் நிச்சயமா ஆதித்யா சும்மா இருக்க மாட்டாருன்னு எனக்கு தெரியும். நான் நெனச்ச மாதிரியே, நான் கால் பண்ண நம்பரை வச்சி, என்னை கண்டுபிடிச்சிடாரு. அதுக்குப் பிறகு எனக்கு உண்மையை சொல்றதை தவிர வேறு வழி இருக்கல. பிரபாகரன், இவங்களுடைய ஃபோனை டிராக் பண்ண ஆரம்பிச்சி, எல்லாதையும் ரெக்கார்ட் பண்ணிட்டாரு"

"அப்போ தான், பெங்களூருக்கு ஆடிட்டிங்காக ஆதி போக வேண்டியிருந்தது. எங்களுடைய பாதுகாப்பில் அண்ணியை விட்டுட்டு போனான்" என்றான் ராகுல்.

ரேணுகாவும், சரவணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இதன் பிறகு அவர்களுடைய *அப்பாவி வேடம்* எடுபடாது என்பது அவர்களுக்குப் புரிந்து போனது. அவர்களுக்கு நிம்மதி அளித்த ஒரே விஷயம், அவர்கள் தான் கமலியை வீட்டை விட்டு துரத்தியது என்பது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.

அங்கு நின்றிருந்த ஒவ்வொருவரின் நிலையும் மயங்கி விழாத குறை தான். மனிதர்கள் தங்களுடைய நிஜ முகங்களை இவ்வளவு கச்சிதமாக திரையிட்டு மறைத்துக் கொள்ள முடியும் என்பதை அன்று அவர்கள் தெரிந்து கொண்டார்கள். ரேணுகாவும், சரவணனும் அதில் கைதேர்ந்தவர்கள் என்பதை தான் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

"ஏன் ரேணுகா? இப்படியா நான் உன்னை வளர்த்தேன்? நீ விளையாடினது யார்கிட்ட? உன்னோட தம்பிகிட்டயா? அவன் எப்படி நிற்கிறான்னு பாருடி... பாவி... நீ ஒரு ஏமாத்துக்காரி... நம்பிக்கை துரோகி... பணப் பிசாசு..." என்று உறுமினார் பாட்டி.

"நேர்மையா இருந்து நான் என்னத்தைக் கண்டேன்? ஒன்னுமில்ல... இன்னும் கூட என்னோட புருஷன் இந்த கம்பெனியில ஒரு வேலைக்காரன் மாதிரி தானே இருக்காரு...? எங்க பாத்தாலும் ஆதித்யாவோட பேரு தானே எதிரொலிக்கிது. என்னிக்காவது என்னோட புருஷனை முன்னாடி கொண்டு வந்து நிறுத்தணும்னு  அவன் நினைச்சிருக்கானா? நான் மட்டும் ஏன் எப்பவும் அவன் பின்னாடியே நிக்கணும்?"

சற்று நேரத்திற்கு முன்பு வரை நிற்கவே தடுமாறிய அந்த வயதான பெண்மணியின் கைகளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு சக்தி வந்ததோ... ரேணுகாவின் கன்னத்தில் ஓங்கி விட்டார் ஒரு அறை. அது ரேணுகாவை ஒரு அடி பின்னால் தள்ளியது.

"ச்சீ வாயை மூடு... ஒரு வார்த்தை பேசுன, உன்னை என் கையால நானே கொன்னுடுவேன். யாரோட உழைப்புக்கு யாருடி உரிமை கொண்டாடுறது? ராத்திரி, பகல் பார்க்காம, சோறு தண்ணி இல்லாம, ஆதித்யா ரத்தம் சிந்தி உருவாக்கின சாம்ராஜ்யம் இது. நீ யாருடி அதைப் பத்தி பேச? நீயெல்லாம் மனுஷியே இல்ல. அவன் முன்னாடி நின்னு பேசுற அருகதை கூட உனக்கு கிடையாது... மரியாதையா இந்த வீட்டை விட்டு வெளியே போ..." என்று கோபத்தில் கொப்பளித்தார் பாட்டி.

ஒரு வார்த்தை கூட கூறவில்லை ஆதித்யா. அவனுக்கு அவனுடைய அக்காவை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அவளிடம் எதுவுமே கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை அவனுக்கு. தெரிந்தே தவறு செய்த ஒருவரிடம், என்ன கேட்டு, என்ன பலன்?

தனது உடமைகளை எடுத்துக் கொள்ள தனது அறையை நோக்கி சென்றாள் ரேணுகா. அவளைப் பின் தொடர்ந்து சென்றான் சரவணன். அவர்கள் அங்கிருந்து செல்ல முக்கியமான காரணம் இருந்தது. கமலியை மிரட்டி அனுப்பியது அவர்கள் தான் என்று அங்கு இருப்பவர்களுக்கு தெரியும் முன், அவர்கள் அங்கிருந்து கிளம்ப நினைத்தார்கள். ஏனென்றால், அந்த விஷயம் தெரிந்துவிட்டால், இப்போது இருப்பது போல், ஆதித்யா சும்மா இருக்க மாட்டான் என்பது அவர்களுக்கு தெரியும். தங்களது பைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் வந்தார்கள். சரியாக அதே நேரம் தன்னுடைய, தனி வகுப்பை முடித்துக் கொண்டு வந்தாள் ஷாலினி. தன் பெற்றோர், பைகளுடன் நிற்பதைப் பார்த்து,

"நம்ம எங்கம்மா போறோம்?" என்றாள்.

"எங்க கூட வா"

"நம்ம பிக்னிக் போறோமா? நாளைக்கு எனக்கு டெஸ்ட் இருக்குமா"

"நம்ம பிக்னிக் போகல... வேற வீட்டுக்கு போறோம்"

"எப்போ திரும்பி வருவோம்? கமலி மாமி கூட சேர்ந்து படிக்க நிறைய இருக்கு"

"இனிமே திரும்பி வர மாட்டோம்"

"ஏம்மா...??? நம்ம திரும்பி வர மாட்டோமா?" என்றாள் அதிர்ச்சி நிறைந்த குரலில் சோகமாக.

"வர மாட்டோம்" என்றான் சரவணன்

"அம்மா, ப்ளீஸ் வேண்டாம் மா... நம்ம இங்கேயே இருக்கலாம்"

"வாயை மூடிக்கிட்டு வா"

பின் நோக்கி நகர்ந்தபடி,

"மாட்டேன்... நான் இங்கிருந்து வரமாட்டேன்..." என்று கத்தியபடி
ஓடிச்சென்று பாட்டியை கட்டிக்கொண்டு,

"பெரிய பாட்டி, என்னை கூட்டிக்கிட்டு போக வேண்டாம்னு சொல்லுங்க பாட்டி... ப்ளீஸ் என்னை இங்கிருந்து அனுப்பாதீங்க, பாட்டி... நீங்க தானே பாட்டி என்னை கவனிச்சிகுவீங்க... ப்ளீஸ் பாட்டி..."

அந்த மாசற்ற குழந்தையின் கெஞ்சலை ஏற்க முடியாத நிலையில் இருந்த பாட்டி, கண்களை மூடி கண்ணீர் சிந்தினார். அவளது அழுகையை பொருட்படுத்தாமல், அவளை வலுக்கட்டாயமாய் தன் தோளில் தூக்கிக் கொண்டான் சரவணன். கதறி அழுத ஷாலினியுடன் அவர்கள் நடந்தார்கள். அவர்களின் இதய மற்ற செயல், அங்கிருந்தவர்களின் மனதை மேலும் உடைத்தது.

"பெரிய பாட்டி... மாமா... ப்ளீஸ் என்னை போக வேண்டாம்னு சொல்லுங்க... நான் நல்ல பொண்ணா நடந்துக்குறேன். என்னை அனுப்பாதீங்க மாமா..." என்ற ஷாலினியின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

தனது கால்கள் வலுவிழந்து விட்டதைப் போல் உணர்ந்தான் ஆதித்யா. ஷாலினியின் மீது எப்போதும் அவனுக்கு தனி பிரியம் உண்டு. அவன் உயிராய் நேசித்த அக்காவின் மகள் ஆயிற்றே அவள். நல்ல குழந்தைகளுக்கு அமையும் மோசமான பெற்றோர்கள் ஒரு சாபக்கேடு. தங்கள் பெற்றோர் செய்த தவறுக்காக, தண்டனையை ஏற்க வேண்டிய தலையெழுத்து அவர்களுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது.

"உங்க எல்லாரையும் நான் எச்சரிக்கை பண்றேன். அந்த நன்றிகெட்டவளை நினைச்சு, இந்த வீட்ல யாரும் அழக்கூடாது. நம்ம கண்ணீருக்கு தகுதி இல்லாதவ அவ. நம்மள இழந்ததுக்காக அவ தான் அழனும்" என்று கூறினார் பாட்டி அழுதபடி.

ரேணுகாவின் நடத்தை அவரை எந்த அளவிற்கு உடைத்துப் போட்டு இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாய் புரிந்தது.

ஃப்ளாஷ் பேக் முடிந்தது

தன் கண்களிலிருந்து பொங்கி வழிந்துகொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் கமலி. ஷாலினியை நினைத்து தாளத வருத்தம் கொண்டாள் அவள். சென்னையில் கமலிக்கு கிடைத்த முதல் தோழியாயிற்றே ஷாலினி...! ஒன்றும் கூறாமல் காரை ஸ்டார்ட் செய்தான் ஆதித்யா. வழக்கம் போல் தன்னை சீட் பெல்ட்டால் பினைத்துக் கொண்டாள் கமலி. அமைதியகம் நோக்கி கார் பயணமானது.

அமைதியகம்

அமைதியகம் தன் மன அமைதியை மொத்தமாய் தொலைத்துவிட்டிருந்தது. அனைவரும் வழக்கம் போல வரவேற்பரையில் அமர்ந்திருந்தார்கள் தான்... ஆனால் இதற்கு முன்பு எப்போதும் இல்லத சோகம் அவர்கள் முகங்களில் குடிகொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் ரேணுகாவின் மீது சொல்ல முடியாத அளவிற்கு கோவத்தில் இருந்தார்கள்.

"ரேணுகா இவ்வளவு சுயநலக்காரியா இருப்பான்னு என்னால யோசிச்சு கூட பார்க்க முடியல" என்றார் இந்திராணி.

"அவளைப் பத்தி பேசாத இந்திரா. நம்முடைய நினைப்பில் வாழ கூட தகுதி இல்லாதவ அவ. அவளைப் பத்தி பேசி, நம்ம நாளை பாழாக்காதே" என்றார் பாட்டி.

"நீங்க எதுக்காக எங்ககிட்ட எதுவும் சொல்லாம இருந்தீங்க?" என்றாள் மயூரி சுரேஷிடம்.

"நம்ம, அப்ப தான் இந்த குடும்பத்துக்குள்ள வந்திருந்தோம். சரவணனோட மனசுல இருந்தது என்னன்னு தெரிஞ்சப்ப உண்மையிலேயே எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. ஆனா, இந்த விஷயம் இப்படியெல்லாம் திசை திரும்பும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல"

"அதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்ல. தேவையில்லாத மனசு கஷ்டம் தான். அதைப் பத்தி பேசுறதை விட்டுவிட்டு அவங்கவங்க வேலையை பாருங்க" என்றார் பாட்டி, கண்ணீரைத் துடைத்தபடி.

"நீங்க சொல்றதும் சரி தான் அத்தை. நல்லவேளை கமலி இங்க இல்ல. இதெல்லாம் அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப உடைஞ்சு போயிடுவா. அவகிட்ட யாரும் எதுவும் சொல்லாதீங்க. மயூரி, நீ எதையும் அவகிட்ட உளறி வைக்காதே" என்றார் இந்திராணி.

சரி என்று தலையசைத்தாள் மயூரி.

"ஆமாம்... வேற ஒரு குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், இந்த குடும்பம் சந்தோஷமா இருக்கணும்னு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செஞ்சா கமலி. ஆனா, இந்த குடும்பத்தில் பிறந்த ரேணுகா இப்படி பண்ணிட்டாளே..." என்றார் பாட்டி பொறுக்க முடியாமல்.

"எவ்வளவு சுலபமா நம்ம எல்லாரையும் தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டா அவ... " என்று மனம் வெதும்பினார் இந்திராணி.

அப்பொழுது அவர்கள் ஆதித்யா, கமலியுடன் வருவதைப் பார்த்தார்கள். அனைவரும், ஒருவருக்கு ஒருவர் சைகை செய்து கொண்டு, தங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டார்கள். கமலியை நோக்கி ஓடிச்சென்று அவளை ஆரத் தழுவிக்கொண்டாள் மயூரி.

"நான், நேஷனல் சாம்பியன்ஷிப்பில் செகண்ட் ப்ரைஸ் ஜெயிச்சுட்டேன் கமலி" என்றாள் சந்தோஷமாக.

அதைக் கேட்டவுடன் கமலியின் வாடியிருந்த முகம் மலர்ந்தது. இறுக்கமாய் மயூரியை தழுவிக்கொண்டு,

"நீ ஜெயிப்பேன்னு எனக்கு தெரியும்" என்றாள்.

அப்பொழுது வலிய புன்னகைத்துக் கொண்டிருந்த மற்றவர்களின் மீது அவளது பார்வை விழுந்தது. பாட்டியை நோக்கி ஓடிச் சென்ற கமலி, அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு அழத் துவங்கினாள்.

"என்னை மன்னிச்சிடுங்க பாட்டி. நான் உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன். நான் வேணுமுன்னு வீட்டை விட்டுப் போகல. என்னை கட்டாயப்படுத்தியதால எனக்கு வேற வழி தெரியல " என்றாள்.

அதைக் கேட்ட அனைவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. என்ன கூறுகிறாள் இவள்? என்பது போல் ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டார்கள். தன் அணைப்பிலிருந்து அவளை பின்னால் இழுத்த பாட்டி அவள் முகத்தை அதிர்ச்சியுடன் பார்த்து,

"என்ன சொல்ற கமலி? உன்னை யார் கட்டாயப்படுத்துனது?" என்றார்.

அவள் தயக்கத்துடன் ஆதித்யாவை பார்க்க,

"அக்காவும் சரவணனும்" என்றான் ஆதித்யா

அவர்கள் மேலும் அதிர்ந்தார்கள். இவ்வளவு கீழ்த்தரமாகவா நடந்து கொண்டாள் ரேணுகா?

"எதுக்காக நீ இதைப் பத்தி எங்ககிட்ட சொல்லல கமலி?" என்றார் பாட்டி.

"என்னை கொன்னுடுவோம்னு மிரட்டினாங்களாம்"

அவர்களுக்கு *ச்சி* என்றானது.

"என்னை விட்டு நிரந்தரமா பிரிஞ்சி போக சொன்னாங்களாம்" என்றான் ஆதித்யா வறண்ட குரலில்.

"அவங்க சொன்னாங்கன்னு நீ போயிட்டியா?" என்றார் இந்திராணி.

ஆதித்யா அங்கிருந்து கோபமாய் செல்வதை பார்த்தாள் கமலி. அவனைப் பார்க்கவே அவளுக்கு பயமாய் இருந்தது.

"ஆதிஜி என் மேல கோவமா இருக்காரு" என்றாள் கவலையாக.

"பின்ன, வேற எப்படி இருப்பான்? இதைப் பத்தி நீ அவன்கிட்ட சொல்லி இருக்கணும். இல்லன்னா எங்களுக்காவது க்ளூ குடுத்து இருக்கணும்."

"எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல அத்தை..."

"போ, கமலி. போய் ஆதியை சமாதானப்படுத்த பாரு. அவன் ரொம்ப உடைஞ்சு போயிருக்கான்" என்றார் பாட்டி.

சரி என்று தலையசைத்துவிட்டு தங்கள் அறைக்குச் சென்றாள் கமலி.

இதுவரை எப்போதும் இல்லாதது போல் அவளிடம் நடந்து கொண்டான் ஆதித்யா. அவளை திரும்பிக் கூட பார்க்கவில்லை அவன். அவனிடம் பேச அவள் எவ்வளவு முயன்ற போதும், அவளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை அவன்.

"ஆதிஜி, ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க"

அவன் அங்கிருந்து செல்ல முயன்ற போது அவன் கரத்தை பிடித்து நிறுத்தினாள்.

"ப்ளீஸ் என்கிட்ட பேசுங்க ஆதிஜி"

அவள் பற்றியிருந்த கரத்தை விடுவித்து, அறையை விட்டு வெளியேறினான் ஆதித்யா. கமலிக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

இரவு

நீச்சல் குளத்தின் தண்ணீரை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ஆதித்யா. சுயநலமான உள்நோக்கத்துடன் தான் ரேணுகா கமலியை அவனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறாள். கமலி, உலகம் அறியாத பெண், ஆண்களிடம் நெருங்கவே பயப்படுபவள், என்று தெரிந்து, அவளை அவனுக்கு திருமணம் செய்து வைத்தால், தங்களுடைய திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்க மாட்டாள் என்று நினைத்து இதை செய்திருக்கிறாள் ரேணுகா. இந்த வஞ்சக உலகம் தான் ஒரு அறியா பெண்ணின் வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறது...! பெரிதாய் எதற்குமே ஆசைப்படாத, சிறிய விஷயங்களில் கூட சந்தோஷத்தை காணும் எவ்வளவு பெரிய மனம் கமலியுடையது...! அந்தப் பெண்ணை எப்போதும் அழ விட கூடாது என்று நினைத்தான் ஆதித்யா. அவளை பொக்கிஷமாய் பாதுகாக்க நினைத்தான்... ஆனால் அவனுடைய அக்கா செய்யத் துணிந்தது என்ன? அவளை அழ வைத்தாள்... ஓட வைத்தாள்... அவள் பெயரை கெடுக்க முயன்றாள்... அவளை இந்த உலகத்தின் கண்ணில் நடத்தை கெட்டவளாக காட்ட நினைத்தாள்... எல்லாம் வெறும் பணத்திற்காக. அதை செய்ததற்காக அவளுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை.

தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்த கமலியை திரும்பிப் பார்த்தான் ஆதித்யா. அவள் கட்டிலை விட்டு இறங்குவதை பார்த்து மீண்டும் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அங்கு வந்த கமலி, மெல்ல அவன் தோளை தொட, மீண்டும் தன் முகத்தை இறுக்கமாக்கி கொண்டான்.

"ஆதிஜி... "

"ம்ம்ம்?"

அவன் இன்னும் கூட அவள் மீது கோபமாக தான் இருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது.

"நீங்க அப்செட்டா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும்..."

அவளைத் திரும்பிப் பார்க்காமல்,

"நான் அப்செட்டா தான் இருக்கேன். ஆனா, அதுக்கு காரணம் அக்காவும் சரவணனும் இல்ல. ஏன்னா, அவங்க எப்படிப்பட்டவங்கன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்"

அவன் கூற வருவது என்ன என்பதை புரிந்துகொண்டு தலைகுனிந்தாள் கமலி.

"நீ இங்கிருந்து போயிருக்க கூடாது கமலி" என்றான் தண்ணீரின் மீதிருந்த தன் பார்வையை அகற்றாமல்.

"ஆதிஜி, ப்ளீஸ் என்னை பாருங்களேன்... ஐ அம் சாரி..."

அவளை நோக்கி கோவமாய் திரும்பிய அவன்,

"சாரியா? அந்த சாரிங்குற வார்த்தை நாசமா போகட்டும்... எதை வேணா செஞ்சிட்டு அந்த ஒரு வார்த்தையை சொல்லிட வேண்டியது... அந்த ஒரு வார்த்தை எல்லாத்தையும் சரி பண்ணிடும்னு நினைக்கிறாயா?"

"எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியலையே... அதனால தான் சாரி சொன்னேன்" என்றாள் பாவமாக.

"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை விட்டுட்டு போகணும்னு நினைப்ப? நீ எப்படி அதை செய்யலாம்?"

"ஆதிஜி நீங்க இங்க இல்ல. அதனால தான் போனேன்... இல்லனா..."

"இல்லன்னா? இல்லைனா என்ன? நான் இந்த உலகத்துல தானே இருந்தேன்...? நான் எந்த அயல் கிரகத்துக்கும் போகலயே... பெங்களூர் தான் போயிருந்தேன். இங்க ராகுல் இருக்கான், லாவண்யா இருக்கா, அவங்ககிட்டயாவது சொல்லி இருக்கலாம். அவங்க உனக்கு ஹெல்ப் பண்ணி இருப்பாங்க இல்ல...? பிரபாகரனைப் பத்தி உனக்கு தெரியாதா? ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் அவன் தலைகீழா மாத்தியிருப்பான்"

"அவங்க உங்களை கொன்னுடுவேன்னு..."

அவள் பேச்சைத் துண்டித்து,

"கொன்னா கொள்ளட்டுமே... செத்தா சாகிறேன்... சாகுற வேதனையை விட, நீ இல்லாம இருக்கிறது எனக்கு அதிக வேதனையை தரும்னு கூட உனக்கு புரியல இல்ல கமலி?" என்றான் வலி நிறைந்த முக பாவத்தோடு.

"சத்தியமா எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல ஆதிஜி..." என்றாள் வேதனையோடு.

கதவை சாத்திக்கொண்டு உள்ளே வந்தான் ஆதித்யா. கமலி அமைதியாய் அவனை பின்தொடர்ந்தாள்.

கமலி செய்தது தவறு என்று அவன் முழுதாய் நினைக்காவிட்டாலும், அவள் செய்தது சரி என்பதை அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அவனை விட்டு செல்ல வேண்டும் என்று கமலி எடுத்த முடிவை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை, அது நிலையான முடிவாக இருந்திருக்காது என்று தெரிந்தும் கூட... எப்படி அவள் அப்படி ஒரு முடிவுக்கு வரலாம்? கமலியை அவ்வளவு எளிதில் மன்னிக்க அவன் தயாராக இல்லை. ஆனால், கமலியின் முயற்சிகளுக்கு முன் ஈடு கொடுப்பானா ஆதித்யா?

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top