47 பணம் பத்தும் செய்யும்

47 பணம் பத்தும் செய்யும்

தூக்கத்திலிருந்து பதறியடித்துக் கொண்டு எழுந்தாள் கமலி. யாருமற்ற வனாந்தரத்தில், பேய் என வீசும் புயல் காற்றுக்கு நடுவே, தன்னந்தனியே கண்ணீர் சிந்தியபடி *ஆதிஜி* என்று அலறியடித்துக் கொண்டு ஓடுவது போல் வந்த கனவினால் பயந்து நடுங்கினாள் கமலி.

தலையைப் பிடித்துகொண்டு மூச்சுவாங்கிய படி அமர்ந்திருந்தாள். அவளுக்கு உடனடியாக ஆதித்யாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால், கடிகாரம்  மணி 12 என்று காட்டியதால், தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டாள். தூக்கம் வராமல் வெகு நேரம் கட்டிலில் புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் கமலி. தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்ற, எழுந்து அமர்ந்து தண்ணீர் ஜக்கை எடுத்தாள். அது காலியாக இருந்தது. கட்டிலை விட்டு இறங்கி, தண்ணிர் கொண்டு வர சமையலறையை நோக்கி சென்றாள்.

அவள் ரேணுகாவின் அறையைக் கடந்து பொழுது, அங்கு மெல்லிய பேச்சு குரல் கேட்டது. தனக்கு ஏற்பட்ட கனவைப் பற்றி ரேணுகாவிடம் சொன்னால் என்ன என்று தோன்றியது அவளுக்கு. ஆனால், சரவணன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அவள் கால்கள் அசையாமல்  நின்றன.

"இப்போ வருத்தப்பட்டு என்ன செய்யிறது?" என்றான் அவன்.

"சரவணன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்? ஒருவேளை அது ரேணுகாவாக இருந்தால், அவர் எதற்காக வருத்தப்பட வேண்டும்? வருத்தப்படும் அளவிற்கு அப்படி அவர் என்ன செய்தார்?" என்று யோசித்தாள் கமலி.

"இப்படி எல்லாமே தலைகீழா மாறிப்போகும்னு யார் எதிர்பார்த்தது?" என்று சிடுசிடுத்தாள் ரேணுகா.

"ஆதிக்கு கல்யாணம் பண்ணி வைக்காதேன்னு நான் உன்னை அப்பவே எச்சரிக்கை பண்ணேன். நீ தான் கேக்கல"

அந்த வார்த்தைகளைக் கேட்டு முகத்தை சுருக்கினாள் கமலி. சற்று நெருங்கி வந்து அவர்கள் பேசுவதை கேட்கலானாள்.

"என்னை வேற என்ன செய்ய சொல்றீங்க? ஷில்பாவும் அவங்க அப்பாவும் ஆதியை வளைச்சு போட, எப்படி எல்லாம் முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க...? ஷில்பா மட்டும் ஆதிக்கு பொண்டாட்டியா வந்தா, ஆதியோட வாழ்க்கைல அவளோட கை ஓங்கும், அவ நம்மளை ஆதிக்கம் செய்ய ஆரம்பிச்சிடுவான்னு தான், படிப்பறிவு இல்லாத, வெகுளியான பட்டிக்காட்டு பொண்ணா பாத்து அவனுக்கு பொண்டாட்டியா கொண்டு வந்தேன். அவன் எப்பவும் என்னோட கண்ட்ரோல்ல இருப்பான்னு நினச்சேன். ஆனா, அவன் என்னடான்னா, அவளை காலேஜுக்கு அனுப்பி எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து பெரிய ஆளாகிட்டன். நம்ம கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விதமா, அந்த பட்டிக்காட்டு பொண்ணு எல்லாத்தையும் சுலபமா கத்துக்கிட்டு, ஆஃபீஸ் கணக்கிலிருந்த வித்தியாசத்தை எல்லாம் கண்டு பிடிச்சிட்டா." என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாக.

"அதோட நிறுத்தினானா உன் தம்பி? என்னமோ இந்த உலகத்துலேயே அவளை விட்டா வேற பொண்ணே இல்ல அப்படிங்கிற மாதிரி, அவளை தலையில தூக்கி வச்சுகிட்டு ஆடுறான். அப்படி அவன் அவகிட்ட என்னத்த பார்த்துட்டான்னு இப்படி அவளுக்காக சாகுறான்னு தெரியல..." என்றான் சரவணன் எரிச்சலுடன்.

"இங்க பாருங்க, நடந்தது எதையும் நம்மால மாத்த முடியாது. அடுத்து என்ன செய்யறதுன்னு சொல்லுங்க"

"இப்ப வந்து  என்ன செய்றதுன்னு என்னை கேளு... அவளை அடிச்சு உட்கார வைக்க நம்ம எடுத்த எல்லா முயற்சியும் வீணாப் போச்சு. உன்னோட தம்பி, அவளை கவசமா இருந்து பாதுகாக்குறான். உன்னோட தம்பி ரொம்ப பொசசிவானவன் என்கிறதால, அவள் வேற ஒருத்தன் கூட இருக்கிற போட்டோவை பார்த்தா அவனோட வாழ்க்கையிலிருந்து தூக்கி ஏறிஞ்சிடுவான்னு சொல்லி, ஒரு போட்டோவையும் மார்ஃபிங் பண்ணி அனுப்பி வச்ச... ஆனா அவன், அவளை கடவுள் மாதிரி நம்பி, அன்னைக்கே அந்த விஷயத்தை ஒடச்சி, ஒன்னும் இல்லாம ஆக்கிட்டான். கல்கத்தாவிலிருந்து ஒரு ரவுடியை வரவச்சி அவளை கிட்னாப் பண்றதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணோம். அப்படி பண்ணா, அவ தன்னுடைய நம்பிக்கையை மொத்தமா இழுந்து அறைக்குள்ள முடங்கிடுவான்னு நினைச்சோம். ஆனா, திருக்கழுகுன்றம் கழுகு மாதிரி உன் தம்பிக்கு மூக்கு வேர்த்து எப்படி மோப்பம் பிடிச்சு கரெக்டா அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்னு புரியல. இந்த நிலைமை நீடிச்சிதுன்னு வச்சுக்கோ, நம்ம நடுத்தெருவில தான் நிக்கணும். அதுவும், ஆதிக்கு குழந்தை பிறந்துட்டா, நம்மளோட கதி அதோ கதி தான்."

"அப்படி நிச்சயம் நடக்காது. நான் நடக்க விடமாட்டேன். இந்த தடவை நான் அடிக்கிற அடி, அவ தலையில் இறங்க போகுது."

பயத்தில் வாயைப் பொத்திக் கொண்டாள் கமலி. இவர்கள் இப்படிப்பட்டவர்களா? ஆதித்யா இந்த திருமண பந்தத்தில் மனமுவந்து கலக்க மாட்டான் என்ற எண்ணத்தில் தான் தன்னை அவனுக்கு திருமணம் செய்து வைத்தாளா ரேணுகா? அப்பொழுது தான் ஆதித்யாவின் வாழ்வில்  எப்பொழுதும் தனது கை ஓங்கி இருக்கும் என்ற எண்ணத்தில் இதை செய்தாளா? அந்த நொடி, கமலியின் உணர்வு எப்படி இருந்தது என்பதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அவள் கதி கலங்கிப் போனாள். யார் தான் எதிர்பார்க்க முடியும், தங்களில் ஒருவர் என்று அவள் எண்ணி இருந்தவர்கள் தான், அவர்கள் வாழ்வில் நடந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்று...? அழுவதைத் தவிர வேறு என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை. இந்த உண்மை தெரிந்தால், ஆதித்யா சுக்கு நூறாய் உடைந்து போவான். இந்த திடீரென்ற அதிர்ச்சியால் அவள் தலை சுற்றியது. தடுமாறி விழ போனவள், தன் கையிலிருந்த தண்ணீர் ஜக்கை தவற விட்டாள்.

அந்த சப்தம், அறைக்கு உள்ளே இருந்தவர்களுக்கும் கேட்டது. இருவரும் வெளியே ஓடிவந்து பார்த்த பொழுது, கமலி அதிர்ச்சியான முகபாவத்துடன் நின்றிருப்பதை கண்டார்கள். அவள் அனைத்தையும் கேட்டு விட்டாள் என்று அவளது முக பாவமே கூறியது. அங்கிருந்து தனது அறையை நோக்கி ஓடினாள் கமலி. அவள் உள்ளே சென்று கதவை சாத்தி தாழிடும் முன், கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான் சரவணன்.

பதறியபடி ஓடிச் சென்று, தனது கைப்பேசியை எடுத்து ஆதித்யாவுக்கு ஃபோன் செய்ய முயன்றாள் கமலி. அவள் கையில் இருந்து கைப்பேசியை பிடுங்கி, அழைப்பைத் துண்டித்து, கட்டிலில் விட்டெறிந்தான் சரவணன். பயத்துடன் பின் நோக்கி நகர்ந்தாள் கமலி.  அறைக்குள் வந்து, கதவை சாத்தி தாளிட்டாள் ரேணுகா.

"நீங்க எல்லாத்தையும் கேட்டுட்டீங்க இல்லையா?" என்றான் சரவணன்.

ஒன்றும் கூறாமல், அவர்களை பார்த்து அழுது கொண்டு நின்றாள் கமலி.

"இதையெல்லாம் நீங்க ஆதித்யாகிட்ட சொல்ல போறீங்களா?"

அதற்கு பதில் கூறவில்லை கமலி.

"ஆதித்யா உயிரோட இருக்க வேண்டாமா, கமலி?" என்றான் சாதாரணமாக சரவணன்.

அதைக் கேட்ட கமலிக்கு பகீரென்றது. அந்த வார்த்தைகளைக் கேட்டு ரேணுகா கோபம் அடைவாள் என்று எதிர்பார்த்திருந்த கமலிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கமலியை முறைத்துப் பார்த்தபடி திடமாய் நின்றிருந்தாள் ரேணுகா.

"என்ன சொல்றீங்க நீங்க?" என்றாள் கண்ணீர் சிந்தியபடி கமலி.

"என்னால என்ன செய்ய முடியுமோ, அதை தான் நான் சொல்றேன்" என்றான் சரவணன்.

"இதெல்லாம் கொஞ்சம்கூட நியாயமே இல்ல..." என்றவள் ரேணுகாவின் பக்கம் திரும்பி,

"உங்க மேல ஆதிஜி உயிரையே வச்சிருக்காரு. உங்களைப் பத்தி தெரிஞ்சா, அவர் தூள் தூளா நொறுங்கிடுவாரு..."

"ஆதி மேல உங்களுக்கு அவ்வளவு அக்கறை  இருந்தா, உங்க ஆதிஜி உயிரோடு இருக்கணும்னு நீங்க நெனச்சா, அவரோட வாழ்க்கையிலிருந்து போயிடுங்க..." என்று குண்டை தூக்கி போட்டான் சரவணன்.

"என்னது....? முடியாது... நான் போக மாட்டேன்..." என்று அலறினாள் கமலி.

"அப்படின்னா ஆதிக்கு ஏதாவது நடந்தா, அதுக்கு என்னை குறை சொல்லாதீங்க"

"உங்களால என்னோட ஆதிஜியை  எதுவும் செய்ய முடியாது..." என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

இரண்டு எட்டில் அவளை நெருங்கிய ரேணுகா, அவள் கழுத்தை பிடித்தாள்.

"இன்னொரு தடவை அவனை *என்னோட ஆதிஜின்னு* சொன்ன, உன்னை சாகடிச்சிடுவேன். அவன் என்னோட தம்பி டீ... என்னோட சொத்து. அவனை சொந்தம் கொண்டாட நினைச்சா, உன்னை உயிரோட விடமாட்டேன்" சென்ற போது ரேணுகாவின் முகம் பேய் போல் மாறியது.

"விடு ரேணு... இவளை கொன்னா நமக்கு என்ன கிடைக்கப் போகுது? ஆதியை கொன்னாலாவது அத்தனை சொத்தும் நமக்கு கிடைக்கும்..." என்றான் சரவணன்.

அவள் கழுத்திலிருந்து கையை எடுத்தாள் ரேணுகா.

"நீங்க உண்மையிலேயே உங்க தம்பி மேல அன்பு வைச்சிருந்தா, அவரை கொல்லனும்னு நினைக்க மாட்டீங்க" என்று தனது கழுத்தை வருடிய படி தேம்பினாள் கமலி.

"அவன் மேல நான் அன்பு வச்சிருக்கேன்னு எப்போ சொன்னேன்? எனக்கு தேவை அவனோட பணம் மட்டும் தான்"

"உங்களுக்கு இதயமே கிடையாதா?"

"அந்த இதயம், பணத்தைக் கொண்டு வந்து சேக்காது"

"நீங்க இவ்வளவு சுயநலவாதியா இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல"

"யார் இங்க சுயநலவாதி இல்ல? எல்லாரும் சுயநலவாதிங்க தான்... இங்க யாருக்கும் யாரை பத்தியும் கவலை இல்ல. அக்கா, அக்கான்னு என் பின்னாடியே சுத்திகிட்டு இருந்த என் தம்பி, நீ அவனோட வாழ்க்கையில் வந்த உடனே, என்னை அடியோட மறந்துட்டான். உன்னோட முதிர்ச்சி இல்லாத தன்மையை பார்த்து, அவன் எரிச்சல் அடைவான்னு நினைச்சேன். ஆனா, அவன் அதை தான் விரும்பினான். உன் கூட கலந்து பழக விரும்பாம, வீட்டுக்கு வருவதையே அவன் நிறுத்திடுவான்னு நினைச்சேன். ஆனா நாய்க்குட்டி மாதிரி உன் காலையே சுத்தி சுத்தி வந்தான். எவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்ற ஒருத்தன், உன்னை மாதிரி ஒரு விவஸ்தை கெட்டவகிட்ட உருகிப் போனதைத் தான் டீ என்னால தாங்கவே முடியல. அப்படி என்ன அவன் உன்கிட்ட கண்டான்? ஆறு மணியானா, டான்னு வீட்டுக்குள்ள நுழையுற அளவுக்கு அப்படி என்ன அவனுக்கு உன் மேல கிறக்கம்? ( சற்றே நிறுத்தியவள்) உன்னையும் சும்மா சொல்லக் கூடாது... பாக்குறதுக்கு பத்தாம் பசலி மாதிரி இருந்தாலும், புருஷனை கைக்குள்ள போட்டுக்குற முக்கியமான *அந்த* விஷயத்துல நீ பெரிய கில்லாடி தான்" என்றாள் கட்டிலின் மீது தனது பார்வையை ஒட்டி.

தன் கண்ணில் குளம் போல் தேங்கி நின்ற கண்ணீரை, கண்ணை மூடி வழிய விட்டாள் கமலி. அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்று தெரிந்த பிறகு, இவர்களிடம் பேசுவதில் பிரயோஜனம் இல்லை என்பது கமலிக்கு புரிந்து போனது.

"எங்களை குறைச்சு எடை போடாதீங்க கமலி. எல்லா உண்மையையும் ஆதிகிட்ட சொல்லி, எங்களை இங்க இருந்து வெளிய அனுப்பிட உங்களால முடியும். ஆனா, அதுக்கு பிறகு என்ன?" என்று அவளை மிரட்டுவது போல ஒரு சிரிப்பு சிரித்தான் சரவணன்.

"ஆதியோட கார்ல பிரேக் இல்லாம போகலாம்... அவரோட லேப்டாப் பேகில் பாம் இருக்கலாம்... ஒரே நேரத்தில் இருபது முப்பது பேர் சேர்ந்து அவரை கண்டம் துண்டமாக வெட்டிப் போடலாம்... இதெல்லாம், இன்னைக்கோ, நாளைக்கோ நடக்கலாம். வாழ்க்கை பூராவும், ஆதி ஜாக்கிரதையா இருக்க முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா?" என்று மனதை பதறவைக்கும் வார்த்தைகளை உதிர்த்தான் சரவணன்.

தன் முகத்தை கைகளால் மூடி ஓவென்று கதறி அழுதாள் கமலி.

"யோசிச்சி, நல்ல முடிவா எடுங்க கமலி. எப்பவும் போல, ஸ்மார்ட்டா நடக்கிறதா நினைச்சு, ஆதியோட உயிருக்கு உலை வச்சிடாதீங்க..." என்றான் சிரிப்போடு.

"தயவு செய்து ஆதிஜியை ஒன்னும் செஞ்சிடாதீங்க... நான் இங்கிருந்து போயிடுறேன்... அவரை விட்டுடுங்க ப்ளீஸ்..." என்று கரம் கூப்பி கெஞ்சினாள் கமலி.

"உன்னோட துணிமணி எல்லாம் எடுத்துக்கிட்டு இங்கிருந்து போ... ஒரேடியா... அது *உன்னோட ஆதிஜி* உயிரை காப்பாத்தும்" என்ற ரேணுகாவின் குரலில் எகத்தாளம் எதிரொலித்தது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top