45 யார் அது?

45 யார் அது?

ஆள் அரவமற்ற கிழக்கு கடற்கரை சாலையில் இலக்கில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள் கமலி. திடீரென்று, யாரோ அவளை இரு சக்கர வாகனத்தில் துரத்துவதை அவள் உணர்ந்தாள். அடுத்த சில நொடிகளில், அந்த இருசக்கரவாகனம், அவளை நெருங்கி வந்தது. தலைக்கவசம் அணிந்து, அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவன், அவள் அருகில் வண்டியை நிறுத்தி, அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்துக் கொண்டு வண்டியை கிளப்பினான். அவன் பிடியிலிருந்து வெளிவர போராடிய கமலி, தன் போராட்டத்தை நிறுத்தினாள், அந்த மனிதனின் மீது வீசிய வாசம், அவளுக்கு பரிச்சயமானது என்பதால். அவனை கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள்.

"ஆதிஜி..."

வண்டியை நிறுத்திவிட்டு, தன் தலைக்கவசத்தை கழட்டினான் ஆதித்யா. கமலியின் உடல் பயத்தில் நடுங்கியது.

"என்ன ஆச்சி கமலி? ஏன் அழற?"

தலையை உயர்த்தி அவனைப் பார்த்து, அவன் தோளில் பட்டென்று ஒரு அடி போட்டாள் கமலி.

"நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?"

"ஆனா ஏன்?"

"அந்த டிரைவர் என்கிட்ட எதுவுமே சொல்லல"

"அவனுக்கு எதுவும் தெரியாது. உன்கிட்ட எதுவும் சொல்லாம தான் உன்னை கூட்டிகிட்டு வர சொன்னேன்"

"எதுக்காக நீங்க என்கிட்ட எதுவுமே சொல்லல?"

"நான் உனக்கு போன் பண்ணப்போ, நீ என்னோட காலை அட்டென்ட் பண்ணவே இல்ல. உன் போன்ல நீ மிஸ்டு காலை பார்க்கலையா?"

"நான் உங்களுக்கு கால் பண்ணும் போது, உங்க ஃபோன் அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியாவில் இருந்தது"

அவள் கண்ணீரை துடைத்துவிட்டான் ஆதித்யா.

"ரொம்ப பயந்துட்டியா?"

அவள் ஆமாம் என்று தலையசைத்தாள்.

"ஐ அம் சாரி... உன்னை மடியில வச்சு பைக் ஓட்டனும்ங்குற ஆசையை நிறைவேத்தலாம்னு நினைச்சேன்..."

ஒன்றும் கூறாமல் அவனை மீண்டும் அணைத்துக் கொண்டாள் கமலி. சற்று தொலைவில் இருந்த பூங்காவிற்குள் வண்டியை செலுத்தினான் ஆதித்யா. கமலியை மடியில் வைத்தபடி பதினைந்து  நிமிடங்கள் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.

"போதுமா?"

போதாது என்று அவள் தலையசைத்தாள்.

"இப்படியே வீட்டுக்கு போகலாமா?" என்றான் புன்னகையுடன்.

அவன் தோளிலிருந்து தலையை உயர்த்திய கமலி, வேண்டாம் என்று அவசரமாய் தலையசைத்தாள்.

"ஏன்? "

"நான் பின்னால உட்காந்துக்கறேன்"

"நான் சொன்னபடி உன்னை என் மடியில் வைச்சு வண்டி ஓட்டினதுக்கு எனக்கு என்ன கொடுக்கப் போற?"

"ஒன்னும் கிடையாது... நீங்க என்னை பயமுறுத்திட்டிங்க..." என்றாள் முகத்தை சுள் என்று வைத்துக் கொண்டு.

"சாரி டா"

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு, மீண்டும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் கமலி. மேலும் சிறிது நேரம், வண்டியை பூங்காவில் ஓட்டிக் கொண்டு இருந்துவிட்டு, வண்டியை நிறுத்தினான் ஆதித்யா. கமலி, அவனுக்கு பின்னால் அமர்ந்து, அவனை கட்டிக்கொண்டு, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அமைதியகம் நோக்கி வண்டியை செலுத்தினான் ஆதித்யா.

கமலி சாந்தமடைந்துவிட்டாள். ஆனால் ஆதித்யாவோ உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். இது அவனுடைய திட்டம் என்று அவன் கமலியிடம் கூறியது உண்மையல்ல. ஏற்கனவே பயந்திருக்கும் கமலியை, மேலும் பயமுறுத்த விரும்பாமல் அவன் கூறிய பொய் அது.

அப்படியென்றால் உண்மையில் நடந்தது என்ன?

அரைமணி நேரத்திற்கு முன்,

இன்ட்காம் அலுவலகம்

பிரபாகரனுடன் தங்களது அடுத்த பிராஜக்ட்டை பற்றி கலந்தாலோசித்துவிட்டு, வீட்டுக்கு செல்ல எழுந்தான் ஆதித்யா. அப்பொழுது அவனுடைய கைப்பேசி அலற, தெரியாத எண்ணில் இருந்து வந்த அழைப்பு என்பதால், அந்த அழைப்பை ஏற்காமல் துண்டித்து, கைபேசியை தன் பாக்கெட்டுக்குள் திணித்து கொண்டான் ஆதித்யா. ஆனால் மறுபடியும் அவனுடைய கைபேசி சத்தமிட்டது. அதே எண்ணிலிருந்து அழைப்பு வருவதை பார்த்து, தன் கண்களை சுழற்றினான் அவன்.

"யாருன்னு தான் கேளேன் ஆதி" என்றான் பிரபாகரன்.

"ஹலோ..."

"ஆதித்யா தானே?"

"யா..."

"போய் உங்க ஒய்ஃபை காப்பாத்துங்க"

"என்னது...?" என்று முகத்தை சுருக்கினான் ஆதித்யா.

"உங்க ஒய்ஃப் ஆபத்தில் இருக்காங்க. போய் அவங்கள காப்பாத்துங்க"

"யார் பேசுறது?" என்றான் பதட்டத்துடன்.

"அது இப்ப விஷயமில்ல. நீங்க தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும், கமலிக்கு மோசமான விளைவை ஏற்படுத்தலாம்... சீக்கிரம்"

அழைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக கமலிக்கு போன் செய்தான் ஆதித்யா. ஆனால், அவள் அழைப்பை ஏற்கவில்லை. மறுபடியும் அவளுக்கு போன் செய்தபடி விஷயத்தை பிரபாகரனிடம் கூறினான் ஆதித்யா. தனது கார் சாவியை ஆதித்யா எடுத்த போது,

"ஆதி, கார்ல போனா டிராபிக்கில் மாட்ட வாய்ப்பிருக்கு. என்னோட பைக்கை எடுத்துக்கிட்டு போ. உன்னுடைய ப்ளூடூத்தை ஆனில் வை. கமலியோட ஃபோன் சிக்னல் எங்க இருக்குன்னு நான் கண்டுபிடிச்சு சொல்றேன்." என்று தனது இருசக்கர வாகனத்தின் சாவியை அவனிடம் கொடுத்தான் பிரபாகரன்.

அதைப் பெற்றுக் கொண்டு, வெளியில் ஓடினான், தனது ப்ளூடூத்தை ஆன் செய்தபடி ஆதித்யா.

கமலியின் கைப்பேசி சிக்னல், கிழக்கு கடற்கரை சாலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்ததை கண்டுபிடித்து ஆதித்யாவிடம் கூறினான் பிரபாகரன். தான் ஓட்டிக் கொண்டிருந்த காரை, ஒருவன் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வருவதை கண்டான் கமலி அழைத்துச் சென்றவன். கோட்டும் சூட்டும் அணிந்து, ஒருவன் இருசக்கர வாகனத்தை ஓடி வருவதைப் பார்த்து, அது ஆதித்யாவாக
இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது அவனுக்கு. அதே நேரம், கமலியும் காரை நிறுத்த சொல்லி ஓலமிட்டதால்,  தான் மாட்டிக் கொண்டு விடாமல் இருக்க, காரை நிறுத்தினான் அவன். அந்த காரிலிருந்து கமலி கீழே இறங்கி ஓடத் துவங்கினாள். அது தான் சந்தர்ப்பம் என்று, காரை வேகமாய் செலுத்தி கொண்டு சென்றான் அந்த மனிதன். முதலில், அந்த காரை பின்தொடரத் தான் நினைத்தான் ஆதித்யா. ஆனால், ஒருவேளை, கமலியை தாக்க அங்கு யாராவது காத்திருந்தால் என்ன செய்வது? இப்போதைக்கு, மற்ற எல்லாவற்றையும் விட, அவளுடைய பாதுகாப்பு தான் முக்கியமாக பட்டது அவனுக்கு. அதனால், அந்த காரை பின்தொடரும் எண்ணத்தைக் கைவிட்டு, கமலியை பின்தொடர்ந்தான் ஆதித்யா. அவனுக்கு தெரியும், அவள் நிச்சயம் பயந்திருப்பாள் என்று. அதனால், அது, அவனுடைய திட்டம் என்று கூறி, அவளை சமாதானப்படுத்தி விட்டான் ஆதித்யா.

இது தான் நடந்தது.
...............

கமலியை பயமுறுத்தக் கூடாது என்று தான் அவன் உண்மையை கூறாமல் மறைத்து வைத்தான். அவன் பிரபாகரனின் இருசக்கர வாகனத்தில் வந்தது நல்லதாய் போனது. அதனால் தான் அவளை அவனால் சமாதானப்படுத்த முடிந்தது.

கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது ஆதித்யாவின் மனதில். ஆனால், அதை அவன் கமலியிடம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவனது மனம் சுழலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்தது. யாரது? கமலியை குறி வைக்க என்ன காரணம்? அவளை தாக்குவது அவர்களின் திட்டமாக இருக்குமோ? எல்லாவற்றிற்கும் மேலாக, அவனுக்கு கைபேசியில் விஷயத்தைக் கூறி, உதவியது யார்? அவர்களை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது? முதன் முறையாக, பதட்டத்துடன் காணப்பட்டான் அதித்யா. ஒருவேளை அவன் சரியான நேரத்திற்கு வராமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும்? கமலிக்கு ஏதாவது விபரீதம் நேர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? எப்பொழுதும் தன்னைத் தானே மன்னித்து இருக்க மாட்டான் ஆதித்யா. இதன் பிறகு எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொண்டான் அவன்.

அவர்கள் அமைதியகம் திரும்பினார்கள். பார்ட்டிக்கு சென்றவர்கள் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. அவர்கள் தங்களின் அறைக்கு வந்த பொழுது, அவனை இறுக்கமாய் அணைத்து கொண்டாள் கமலி.  அவனே இவ்வளவு பதட்டத்துடன் இருந்தால், கமலியின் பதட்டத்தை பற்றிக் கேட்கவா வேண்டும்?

"தயவுசெய்து இந்த மாதிரி மறுபடியும் செய்யாதீங்க ஆதிஜி. எனக்கு இது சுத்தமா பிடிக்கல. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சி" என்றவளை இருக்கமாய் தழுவிக்கொண்டான் ஆதித்யா.

"ஐ ப்ராமிஸ்... நிச்சயம் இப்படி நடக்காது... ஐ அம் சாரி"

"ம்ம்ம்"

"என்னோட ஃபோனை நீ அட்டென்ட் பண்ணி இருந்தா, இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை நம்ம தவிர்த்திருக்கலாம்"

"இனிமே என்னை கூப்பிட யாரையும் அனுப்பாதீங்க. நான் உங்களைத் தவிர  வேற யார் கூடவும் இனிமே போகவே மாட்டேன்."

"அப்படின்னா பிரச்சனை தீர்ந்தது. நீ இனிமே யார் கூடவும் போக வேண்டாம். இனிமே நானும் யாரையும் அனுப்ப மாட்டேன். நான் சொல்லாம, வேற யாரா இருந்தாலும் போகாதே... அது யாரா இருந்தாலும் சரி..."

"ம்ம்ம்"

"ஆர் யூ ஆல்ரைட்?"

அமைதியாய் இருந்தாள் கமலி.

"பதில் சொல்லு கமலி "

"நான் உங்ககிட்ட பொய் சொல்ல விரும்பல"

"அப்படின்னா? "

"நான் நல்லா இருக்கேன்னு சொன்னா அது பொய் தானே?"

மீண்டும் அவனை அணைத்துக் கொண்டாள்.

"நீ சரியாகுறதுக்கு இது போதுமா?" என்றான்.

மேலும் இருக்கமாய்அவனை தழுவிக்கொண்டாள்.

"எனக்கு பனிஷ்மென்ட் எதுவும் இல்லையா?"

இல்லை என்று தலையசைத்தாள்.

"ஏதாவது பெரிய பனிஷ்மென்ட் கொடேன்... ராத்திரி ஃபுல்லா தூங்காம உன்னை கொஞ்சணும்னு..."

"இது ஒரு பனிஷ்மென்டா?"

"நிச்சயமா இல்ல... ஆனா, அந்த மாதிரி பனிஷ்மென்ட் தினமும் கிடைச்சா, நான் சந்தோஷமா இருப்பேன்"

அவன் நெஞ்சில் முகம் புதைத்து சிரித்தாள் கமலி.

வலிய சென்று தனக்கு உரிய தண்டனையை கேட்டு வாங்கிக் கொண்டான் ஆதித்யா. அந்த தண்டனையில் தானும் திளைத்தாள் கமலி. முன்பு தனக்கு நேர்ந்த ஆபத்தை பற்றிய நினைவிலிருந்து அது அவளை முழுமையாய் வெளியே கொண்டு வந்தது.

கமலி உறங்கும் வரை காத்திருந்தான் ஆதித்யா. கட்டிலை விட்டு மெதுவாய் கீழே இறங்கி, சத்தம் இல்லாமல் கதவை சாத்திக் கொண்டு வெளியே வந்தான். ஆதித்யாவை பார்த்தவுடன் அவர்கள் இல்லத்தின் பாதுகாவலர் எழுந்து நின்றார்.

"கமலியை கூட்டிக்கிட்டு போக யார் வந்தது? எப்படி முன்னப்பின்ன தெரியாதவங்களை வீட்டுக்குள்ள விட்டீங்க?"

"நம்ம இன்ட்காம் கம்பெனியோட *லெட்டர் பேட்* அவர் கையில் இருந்தது சார். அதனால தான் அவரை உள்ளே விட்டேன்"

"இன்ட்காம்ல வேலை செய்யுற யார்கிட்ட வேணும்னாலும் அந்த லெட்டர் பேட் இருக்க முடியும். அதுல என்னுடைய சிக்னேச்சர் இருந்தா மட்டும் தான் நீங்க அதை கன்சிடர் பண்ணனும். இல்லன்னா உடனே எனக்கு தெரியப்படுத்தியிருக்கனும்."

"சாரி சார்"

"அடுத்த முறை, நீங்க சொல்ற சாரிக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது. யாராவது சந்தேகத்துக்கு இடமாக வந்தா, உடனே எனக்கு ஃபோன் பண்ணுங்க"

"சரிங்க சார்"

"சிசிடிவி புட்டேஜ் கொண்டு வாங்க"

"இதோ கொண்டு வரேன் சார் "

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அதை பார்வையிட்டான் ஆதித்யா. அடர்த்தியான தாடியுடன் கூடிய ஒருவன் காரை விட்டு கீழே இறங்கினான். அவன் யாரென்று ஆதித்யாவிற்கு தெரியவில்லை. இதற்கு முன் அவனை அவன் பார்த்ததே இல்லை.

"இந்தக் க்ளிப்பை ஒரு சிடியில் காப்பி பண்ணி குடுங்க"

"சரிங்க சார்"

பிரபாகரனுக்கு ஃபோன் செய்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ஆதித்யா.

"ஏதாவது தெரிஞ்சுதா ஆதி?"

"கமலியை வீட்டிலிருந்து கூட்டிக்கிட்டு போனவனை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்ல"

"அவன் போட்டோவை எனக்கு அனுப்பு அதை நான் பார்த்துக்கிறேன்"

"சரி"

"கமலி எப்படி இருக்காங்க?"

"தூங்கிட்டு இருக்கா... ரொம்ப பயந்து போயிட்டா... நல்லவேளை சரியான நேரத்துக்கு நான் போய் சேர்ந்தேன்..." என்று மென்று முழுங்கினான் ஆதித்யா.

"அவங்களை கவனமா பாத்துக்கணும் ஆதி"

"நான் பாத்துக்குறேன் "

அழைப்பைத் துண்டித்து விட்டு, தன் அறைக்கு வந்த ஆதித்யா, கமலி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, தானும் நிம்மதி அடைந்தான்.

இதற்கிடையில்,

மீனம்பாக்கம் விமான நிலையம்

அடர்ந்த தாடியுடன், டாக்சியை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதன், தனது கைப்பேசியை எடுத்து யாருக்கோ ஃபோன் செய்தான்.

"நான் ஏர்போர்ட்டுக்கு வந்துட்டேன்"

"....."

"இதுக்கு அப்புறம் நான் சென்னைக்கு வரமாட்டேன். நிச்சயமா தாடியோட வரமாட்டேன்"

"......"

"நீங்க சொன்ன மாதிரி, என்னோட அக்கவுண்ட்ல பணம் போட்டுடுவீங்கன்னு நினைக்கிறேன்"

"........"

"அது என்னோட பிரச்சனை இல்ல. நீங்க சொன்னதை நான் செஞ்சிட்டேன். அவன் என்னை பிடிக்காம விட்டதுக்காக நீங்க சந்தோஷ படனும். இல்லனா, இந்த நேரம் நீங்க கம்பி எண்ணிக்கிட்டு இருந்திருப்பீங்க. அந்த மாதிரி என்னை எதுவும் செய்ய வச்சிடாதீங்க. சொன்ன மாதிரி பணத்தை போடுங்க" என்று அழைப்பை துண்டித்த அந்த மனிதன், தான் ஒட்டியிருந்த தாடியை எடுத்து வீசி எறிந்துவிட்டு, விமான நிலையத்தின் உள்ளே நடந்தான், கொல்கத்தா செல்லும் விமானத்தை நோக்கி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top