28 கமலியின் இன்ப அதிர்ச்சி

28 கமலியின் இன்ப அதிர்ச்சி

தன்னிடம் ஏதோ சொல்வதற்காக தயங்கி நின்ற கமலியை நிமிர்ந்து பார்த்தார் செல்வி.

"என்ன ஆச்சி, கமலி? உனக்கு ஏதாவது வேணுமா?"

"அம்மா, நான் என் வீட்டுக்காரர்கிட்ட போக நினைக்கிறேன் மா..."

"ஏதாவது பிரச்சினையா கமலி?"

"நீங்க தானே என்னை ஆதிஜி கூட சேர்ந்து தான் சாப்பிடணும்னு சொன்னீங்க?"

ஆமாம் என்று தலையசைத்தார் செல்வி.

"ஆதிஜிக்கு என் கூட சேர்ந்து சாப்பிடறது பழகிடுச்சி மா. என்னை விட்டுட்டு அவரும் கூட இப்பல்லாம் சாப்பிடுறது இல்ல. நான் அங்க இல்லாததால அவர் தினமும் லேட்டா வராரு. லேட்டா சாப்பிடுறாரு. அது அவருக்கு நல்லதில்ல, இல்ல மா? அது தான் எனக்கு கவலையா இருக்கு"

"ஆனா, அவங்க வீட்ல அவரை பாத்துக்க நிறைய பேர் இருக்காங்க தானே?" வேண்டும் என்றே கூறினார் அவள் என்ன பதில் கூறுகிறாள் என்று பார்க்க.

"என்னை மாதிரி வேற யாராவது அவரை நல்லா பாத்துக்க முடியுமா?"

முடியாது என்று புன்னகையுடன் தலையசைத்த செல்வி,

"நிச்சயமா முடியாது" என்றார்.

"ஆமாம் தானே? அதனால தான், நான் திரும்பிப் போக நினைக்கிறேன். என்னை தப்பா எடுத்துக்காதீங்க மா. எனக்கு டைம் கிடைக்கும் போதெல்லாம் நான் நிச்சயம் வந்து உங்களை பார்க்குறேன். நான் போகட்டுமா மா?"

"தாராளமா போயிட்டு வா. உன் வீட்டுக்காரர் மேல நீ காட்டுற அக்கறையை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கும் அது தான் வேணும்."

"நான் சுமித்ரா வீட்லயிருந்து நேரா அங்க போறேன்..."

"சரி, அங்க போய் சேர்ந்த உடனே எனக்கு ஃபோன் பண்ணு"

"நிச்சயமா செய்றேன்" செல்வியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு தனது துணிமணிகளை எடுத்து வைக்க ஓடினாள் கமலி.

தனது மகளின் ஆர்வத்தைப் பார்த்து சந்தோஷம் அடைந்தார் செல்வி. முதல் நாள் தான், கமலி *பேட் டச்* பற்றி ஜானகியிடம் பேசியதைக் கேட்டு மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் அவர். ஆனால், தன் கணவனிடம் திரும்பி செல்ல வேண்டும் என்ற கமலியின் எண்ணம், அவருக்கு மன நிம்மதியை தந்தது. சீக்கிரமே தாம்பத்தியதை பற்றி கமலி புரிந்து கொண்டுவிடுவாள் என்று நம்பினார் செல்வி. கடவுள் அருளால் அதிசயங்கள் நிகழ்ந்து, கமலி, ஆதித்யாவிடம் நெருங்கிச் செல்ல வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் அவர்.

கமலியை சுமித்ரா வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தாள் லாவண்யா. தனது பையை எடுத்துக்கொண்டு அவளுடன் கிளம்பிச் சென்றாள் கமலி.

சுமித்ராவின் வீடு

தனது தோழிகளை சந்தோஷமாய் வரவேற்றாள் சுமித்ரா.

"நீ திரும்ப காலேஜுக்கு வரப் போறேன்னு என்னால நம்பவே முடியல" என்றாள்  லாவண்யா சந்தோஷமாக.

"என்னாலயும் நம்ப முடியல... கனவு மாதிரி இருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம் கமலி தான். ரொம்ப தேங்க்ஸ் கமலி" என்று அவளை அணைத்துக் கொண்டாள் சுமித்ரா.

"யாராலயும் செய்ய முடியாததை நீ செஞ்சிருக்க கமலி... அந்த சூனியக்காரி ஷில்பாவுக்கு உன்னுடைய பவர் என்னன்னு தெரிஞ்சா வெந்து செத்துடுவா..." என்றாள் லாவண்யா.

அவளைப் பார்த்து புன்னகை புரிந்த கமலியின் கண்கள், சுமித்ராவின் கழுத்தில் விழுந்தது. அங்கு ஏற்பட்டிருந்த லேசான சிவப்பு காயத்தை கண்டாள் அவள்.

"சுமி, உன்னோட கழுத்துல என்னது? ஏதாவது பூச்சி கடிச்சிடிச்சா?" என்று அவள் வெகுளித்தனமாய் கேட்க, மற்றவர்கள் களுக்கென்று சிரித்தார்கள்.

"அவளைக் கிண்டல் பண்ணாத கமலி. உனக்கு தெரியாதா அது என்னன்னு?" என்றாள் லாவண்யா.

அவள் என்ன பேசுகிறாள் என்பது சுத்தமாய் புரியவில்லை கமலிக்கு. அவள் அதைப் பற்றி மேலும் கேட்க நினைத்த போது, அவர்களை அமரச் சொல்லி விட்டு, அவர்களுக்கென்று தான் செய்து வைத்திருந்த தின்பண்டங்களை கொண்டுவர  உள்ளே சென்றாள் சுமித்ரா. கமலியும், அவளுக்கு உதவ, பின்தொடர்ந்து சென்றாள்.

"இது என்ன சுமி?" என்றாள் அவள் கழுத்தை சுட்டிக்காட்டி. அது என்ன என்று தெரிந்து கொண்டே தீரவேண்டும் அவளுக்கு.

"மறுபடி ஆரம்பிக்காத கமலி" என்றாள் வெட்கப் புன்னகையுடன் சுமித்ரா.

"சத்தியமா எனக்கு அது என்னன்னு தெரியல" என்றாள் கமலி.

அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள் சுமித்ரா.

"உனக்கு தெரியலைன்னா என்ன அர்த்தம்? உன்னோட ஹஸ்பண்ட்கிட்ட இருந்து, நீ *லவ் பைட்ஸ்* வாங்கினது இல்லையா?"

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் கமலி.

"லவ் பைட்ஸா? அப்படின்னா உன் வீட்டுக்காரர் உன்னை கடிச்சாரா?"

ஆமாம் என்று தலையசைத்த சுமித்ரா,

"உன் வீட்டுக்காரர் உன்னை ரொம்ப சாஃப்டா ஹேண்டில் பண்றாரு போல இருக்கு... என் ஆளு அப்படி இல்ல. அவர் கொஞ்சம் வைல்ட்..."

மென்று விழுங்கினாள் கமலி.

"வைல்ட்டா? இதெல்லாம் உனக்கு பரவாயில்லையா?"

"நம்ம விருப்பத்தை எல்லாம் யார் கேக்குறா?"

"நீ என்ன சொல்ற?"

"பெரும்பாலான பொண்ணுங்களோட வாழ்க்கையில இப்படித் தான் நடக்குது. பொண்ணுங்களை பூ மாதிரி கையாளுறது எல்லாம் சினிமாவில் தான் நடக்கும்"

"நீ தரையில படுத்து தூங்கலாம் இல்ல?" என்றாள் சோகமாக.

அதைக்கேட்டு சிரித்தாள் சுமித்ரா.

"தரையிலயா? *தரை* என்ன வேற கிரகத்துலயா இருக்கு? ஒரு நொடியில என்னை தரையில இருந்து பெட்டுக்கு இழுத்துக்கிட்டு போயிடுவாரு"

"உனக்கு விருப்பம் இல்லாம அவர் எப்படி இதை செய்யலாம்?"

"விருப்பமா? கல்யாணம் பண்ணிகிட்டதுக்கப்புறம் நம்ம விருப்பத்தைப் பத்தி எல்லாம் பேச முடியாது. நம்ம அதை விரும்பித் தான் ஆகணும். புருஷன், பொண்டாட்டினா அப்படித் தான். கல்யாணம் பண்ணிக்க நம்ம தயாரா இருந்தா, தாம்பத்தியதையும் நம்ம ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அதை தவிர்க்க முடியாது"

"ஆனா, நீ நிறைய பேரை தைரியமா செருப்பால அடிச்சிருக்கியே..."

"ஏய்... நீ என்ன பேசுற? எது கூட எதை சம்பந்தப்படுத்தி பேசுற? இவர் என்னோட புருஷன்...  அவர் என்னை ரொம்ப காதலிக்கிறார். அவர் விரும்பியதை கொடுக்க வேண்டியது என்னோட கடமை"

"நீ உண்மையிலேயே சந்தோஷமா தான் இருக்கியா?" என்றாள் கவலையாக கமலி.

"இது தான் வாழ்க்கை. இதை நம்ம சந்தோஷமா ஏத்துக்கணும். இதையெல்லாம் நம்ம சகிச்சி தான் ஆகணும். இல்லன்னா தேவையில்லாத மன வருத்தம் தான் மிஞ்சும்"

"அவர் இப்படியெல்லாம் உன்னை பேட் டச் பண்ணும் போது உனக்கு கம்ஃபர்டபுல்லா இருக்கா?"

"பேட் டச்சா? என்ன நீ, நர்சரி குழந்தை மாதிரி பேசுற? உனக்கு எப்படித் தான் ஆதித்யா அண்ணன் புரிய வைச்சார்னு எனக்கு தெரியல..."

"அவர் புரிய வைக்கல"

"என்ன சொன்ன?"

"அவர் எனக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய மாட்டார்னு சொன்னேன்" என்றாள் பெருமையும், வருத்தமும் கலந்த குரலில்.

"நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. ஆம்பளைங்க ரொம்ப சுயநலவாதிங்க. நமக்கு என்ன வேணும்னு அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க. ஆனா, நம்ம மட்டும் அவங்களை முழுசா புரிஞ்சுக்கணும் நினைப்பாங்க"

"இந்த தாம்பத்தியம் எல்லாம் அவசியம்னு நீ நினைக்கிறாயா?" என்றாள் தயக்கமாக கமலி.

"எல்லாருக்கும் பர்சனல் ஃபீலிங்ஸ் இருக்கு. அதை எல்லார்கிட்டயும் காட்டிட முடியாது. அப்படிப் செய்யுறவங்களுக்கு தப்பான பெயர் தான் கிடைக்கும். தங்களுடைய ரகசிய உணர்வுகளால் ஏற்படுற ஆசைய தீத்துக்க ஒவ்வொருத்தருக்கும் ஒருத்தர் தேவை. அது தான் கணவன்-மனைவி உறவு. அது ரொம்ப புனிதமானது. தனக்கு உரிமை இல்லாத யார்கிட்டயும் செய்யமுடியாத எதையும் கணவனும் மனைவியும் தங்களுக்குள்ள செய்யலாம். கல்யாணம் அவங்களுக்கு எல்லா உரிமையையும் கொடுக்குது. அது நம்ம சமுதாயத்தோட கட்டமைப்பு."

"இந்த உறவுல உனக்கு ஒரு பிடிப்பு ஏற்படுற வரைக்குமாவது அவர் உனக்காக காத்திருக்கலாம் இல்லையா?"

"நீ ஆம்பளைங்களை பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க? பெரும்பாலானவங்க, கல்யாணம் பண்ணிக்கிறதே தங்களுடைய ஆசையை தீத்துக்க தான். அவங்களுடைய காதல் எல்லாம் படுக்கையோட முடிஞ்சிடும். அவங்களைப் பொறுத்த வரைக்கும், அது தான் காதல். இங்க எந்த ஆம்பளையும் பொண்ணோட உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறதில்ல. அப்படி ஒருத்தன் இருந்தா, அவன் பக்கா ஜென்டில்மேனா இருப்பான்."

சற்றே நிறுத்தியவள்,

"கல்யாணம் ஆகாத பெண்ணை மாதிரி, நீ எதுக்கு என்னை இதையெல்லாம் கேட்டுகிட்டு இருக்க? எனக்கு சீனியரா இருந்துக்கிட்டு, நீ தானே எனக்கு இந்த உறவை பத்தி அட்வைஸ் பண்ணணும்...?"

"இல்ல... இதை பத்தி நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன்... இவ்வளவு சீக்கிரம் நீ எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டயே..." என்று சமாளித்தாள் கமலி.

சுமித்ரா பேசிய வார்த்தைகள் எல்லாம் கமலிக்கு அதிர்ச்சியை அளித்தது. அவளுக்கு ஓவென்று அழ வேண்டுமென்று தோன்றியது. அவளுடைய ஆதிஜி எவ்வளவு நல்லவர்...! அவளை எவ்வளவு அழகாய் நடத்திக் கொண்டிருக்கிறார்...! ஒருநாள் கூட அவளிடம் சுமித்ரா கூறியது போல்  நடக்க அவர் முயன்றதே இல்லை. அவ்வளவு ஏன், அப்படிப்பட்ட எண்ணம் தனக்கு இருப்பதாக கூட அவர் காட்டிக் கொண்டதில்லை. அவர்களது முதலிரவில், அவளை கட்டிலில் படுத்துக்கொள்ள செய்துவிட்டு அவர் சோபாவில் படுத்துக் கொண்டாரே...! சுமித்ரா கூறியது சரி தான், அவர் நினைத்தால், ஒரு நொடியில் தரையிலிருந்து படுக்கைக்கு இழுத்து வந்து விட முடியாதா? அவள் தான் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கிறாள்...! தரையில் படுத்துக்கொண்டால் அவரால் தன்னை தொட முடியாது என்று எப்படி நினைத்தாள்? என்னமோ *தரை* அடுத்த கிரகத்தில் இருப்பதைப் போல...!

முதல் நாள், ஜானகி அவளிடம் கூறியது அவள் நினைவுக்கு வந்தது. திருமணம் ஆகாத ஜானகியும், திருமணம் ஆன சுமித்ராவும், இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். இவள் ஒருத்தி மட்டும் தான் அதில் வேறுபட்டு நிற்கிறாள். அவள் நினைத்துக் கொண்டு இருப்பதெல்லாம் தவறா? ஆதித்யா அவளை மிகவும் நேசிக்கிறான் என்று அவளுக்கு தெரியும். அவளுக்காக, அவன் செய்யும் ஒவ்வொரு விஷயமும் கூட, அந்த காதலினால் தான் செய்கிறான் என்பதும் தெரியும். ஆனால் சுமித்ராவின் கணவனைப் போலவே ஆதித்யாவும் இருப்பான் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைப் பற்றி எப்படி ஆதித்யாவிடம் கேட்பது? உண்மையிலேயே அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால், ஜானகி கூறியதைப் போல், வெகு விரைவில் அவள் அதை அறிந்து கொள்வாள்.

.....

கமலியை சந்திக்க, தனது மாமியார் வீட்டை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான் ஆதித்யா. அவள் அம்மா வீட்டிற்கு சென்று இன்றோடு மூன்று நாள் ஆகிறது. அவளை ஒரு முறை பார்த்துவிட்டால் தேவலாம் என்று தோன்றியது அவனுக்கு. தன்னுடன் வீட்டிற்கு கிளம்பி வருமாறு அவளிடம் அவன் கேட்க முடியாது. அது சரியாக இருக்காது. அவளுக்கும் தனது அம்மாவுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லவா...! அவள் தன் அம்மாவை மிகவும் நேசிக்கும் பெண்... தன்னை விடவும், எல்லோரை விடவும் அதிகமாய், அவளுக்கு தன் அம்மாவைத் தான் பிடிக்கும். அவளுக்கு என்ன தெரியும், அவளைப் பார்க்கவேண்டும் என்று அவன் எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறான் என்று...? இன்னும் இரண்டு மூன்று நாட்களில், அவள் இன்ட்காம் அலுவலகம் வரத் துவங்கிவிட்டால், அதன் பிறகு  அவனுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, தினமும் அவளை பார்க்கலாம்.

தனது மாமியார் வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு தன் மனைவிக்காக வாங்கிக்கொண்டு வந்த இனிப்பு பலகாரங்களை எடுத்துக் கொண்டு இறங்கினான் ஆதித்யா. தனது மாப்பிள்ளையை பார்த்தவுடன் ஆச்சரியமடைந்தார் செல்வி.

"வாங்க தம்பி எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன் ஆன்ட்டி"

உள்ளே வந்த ஆதித்யாவின் கண்கள், தான் பார்க்க வந்த அந்த நபரை தேடி அந்த அறையைச் சலித்தது.

"கமலி எதையாவது இங்க மறந்துட்டு போயிட்டாளா?" என்று செல்வி கேட்க, ஒன்றும் புரியாமல் விழித்தான் ஆதித்யா.

"நீங்க என்ன சொல்றீங்க?"

"கமலி இங்கயிருந்து எதையாவது எடுக்க மறந்துட்டாளான்னு கேட்டேன்"

"அவ இங்க எதுக்காக எதையாவது மறக்கணும்?"

"அவ தான் உங்க வீட்டுக்கு திரும்பி வந்துட்டாளே"

"திரும்பி வந்துட்டாளா? ஏன்? எப்போ?" என்றான் நம்பமுடியாமல்.

"இன்னைக்கு சுமித்ராவை பார்க்க போயிருந்தா. அங்கிருந்து அப்படியே உங்க வீட்டுக்கு போறதா சொன்னா"

"அவ எல்லாரையும் பாக்க வர போறதா என்கிட்ட சொல்லவே இல்லையே..."

"அவ எல்லாரையும் பாக்க வரல... இங்கயிருந்து திரும்பிப் போயிட்டா"

அதைக்கேட்டு திகைத்தான் ஆதித்யா.

"ஆனா... ஏன்?"

"அவ வீட்ல இல்லன்னு, அவங்க வீட்டுக்காரர் தினமும் வீட்டுக்கு லேட்டா வராறாம்... ரொம்ப லேட்டா சாப்பிடுறாராம்... அதையெல்லாம் கேட்டு அவளால இங்கே இருக்க முடியல. அவ, அவர் கூட இருந்தா தான் அவரை கவனிச்சிக்க முடியுமாம். அதனால, அவங்க வீட்டுக்கு திரும்ப போயிட்டா" என்றார் புன்னகையுடன்.

தன் சந்தோஷத்தை முகத்தில் காட்டாமல் இருக்க முயன்றான் ஆதித்யா. அடுத்த நொடி, அங்கிருந்து பறந்து செல்ல வேண்டும் என்று நினைத்தான் அவன். அவன் சோபாவிலிருந்து எழ முயன்ற போது,

"ரொம்ப நன்றி தம்பி" என்ற செல்வியை புரியாமல் பார்த்தான் ஆதித்யா.

"என் மகளுக்குள்ள நான் ஒரு புது கமலியை பார்த்தேன்... அவ முழுக்க முழுக்க உங்க மனைவி. அவளை உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தப்போ நான் ரொம்ப பயந்தேன். ஆனா, இப்போ அவகிட்ட ஏற்பட்டிருக்கிற மாற்றத்தை பார்க்கும் போது என்னால நம்பவே முடியல. தானாவே உங்ககிட்ட கிளம்பி போறேன்னு அவ சொன்னா. அவ உங்ககிட்ட இந்த அளவுக்கு பிரியமா இருக்கான்னா,  நீங்க அவளை எப்படி நடத்துறீங்கன்னு புரிஞ்சுகிறது எனக்கு ஒன்றும் பிரமாதம் இல்ல. அவ கொஞ்சம் குழந்தை தனமா இருந்தாலும், சீக்கிரமே எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டு உங்களுக்கு நல்ல மனைவியா நடந்துக்குவா தம்பி..."

"நீங்க தேவையில்லாம எதையும் நெனசு வருத்தப்படாதீங்க. அவளை என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆமாம், அவ கொஞ்சம் குழந்தைத்தனமா தான் இருக்கா. அவகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே அது தான். அவளை நான் பார்த்துக்கிறேன்..."

"ரொம்ப நன்றி தம்பி"

சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

"ஏதாவது சாப்பிட்டு போங்களேன்..."

"இல்ல ஆன்ட்டி... என்னோட வைஃப் எனக்காக காத்திருப்பா" என்று புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான் ஆதித்யா, தனது மாமியாரின் மனதை நிம்மதி அடைய செய்துவிட்டு.

தாங்க முடியாத சந்தோஷத்துடன் வண்டியை கிளப்பினான் ஆதித்யா. ஏன் இருக்காது? அவனது மனைவி, அவளது அம்மாவையே விட்டுவிட்டு அவனுக்காக வந்திருக்கிறாள் என்றால் சும்மாவா? அவன் நேரத்திற்கு சாப்பிட வேண்டுமாம்... வீட்டிற்கு சீக்கிரம் வர வேண்டுமாம்... அவளுக்கு தனது அம்மாவுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும், தனக்காக அவள் அதையெல்லாம் விட்டுவிட்டு வந்துவிட்டாள். அதை நினைக்கும் போதே அவனுக்கு ஜில்லென்று இருந்தது. புன்னகையுடன் காரை செலுத்தினான் ஆதித்யா.

அமைதியகம்

கமலியை பார்த்த ஷாலினி,

"மாமி...." என்று அவளை நோக்கி ஓடிவந்தாள்.

தனது பையை கீழே போட்டு விட்டு, தன்னை நோக்கி ஓடிவந்த ஷாலினியை தூக்கி, சந்தோஷமாய் காற்றில் ஒரு வட்டமடித்தாள் கமலி.

அவர்களது சந்தோஷ கூச்சலைக் கேட்டு அனைவரும் வரவேற்பறைக்கு ஓடி வந்தார்கள். கமலி திரும்பி வந்ததை பார்த்த அனைவரும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.

"என்ன சர்ப்ரைஸ் இது கமலி?" என்றார் பாட்டி.

"அதானே... நீ இன்னைக்கு வரப் போறேன்னு எங்களுக்குத் தெரியாதே" என்றார் சித்தி இந்திராணி.

"நீ லீவு முழுக்க உங்க அம்மா வீட்டுல தான் இருக்கப் போறேன்னு நினைச்சேன்" என்றாள் சுசித்ரா.

"ஏன் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துட்ட?" என்றாள் ரேணுகா.

"அவ ஹஸ்பன்ட்டை மிஸ் பண்ணியிருப்பா" என்று சிரித்தார் இந்திராணி.

அதைக்கேட்டு அவள் வெட்கப்படுவாள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் கமலியோ, *ஆமாம்* என்று சோகமாய் தலையசைத்தாள்.

"சரி இரு, நான் ஆதிக்கு ஃபோன் செய்றேன்" என்றார் பாட்டி.

"வேண்டாம் பாட்டி... நான் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போறேன்..." என்றாள் கமலி.

"ஒஒஒ...." என்று கோரஸாய் அவளை கிண்டலடித்தார்கள் அனைவரும்.

அப்பொழுது காரின் ஹாரன் சத்தம் கேட்டது. சந்தேகமில்லாமல் அது ஆதித்யாவின் கார் தான்.

சில நொடிகளில், வழக்கம் போல், புயலென உள்ளே நுழைந்தான் ஆதித்யா, கமலியை தேடியவாறு. அவள் வரவேற்பறையில் இல்லை. ஒருவேளை, இன்னும் அவள் சுமித்ராவின் வீட்டிலிருந்து வரவில்லையோ...? அவனது குடும்பப் பெண்களும் வெகு சாதாரணமாய் இருந்தார்கள். அப்படி என்றால் கமலி இன்னும் வரவில்லை. தனது மாமியார் வீட்டிற்கு சென்று வந்ததை காட்டிக் கொள்ளாமல், தனது அறையை நோக்கி சென்றான் ஆதித்யா. கமலி வருவதற்கு முன் குளித்து முடித்து விட நினைத்தான் அவன்.

அவன் அறைக்குள் நுழைந்த போது, மென்மையான இரு கரங்கள், பின்னாலிருந்து அவன் கண்களை பொத்தி, அவனை புன்னகைக்க செய்தன. ஒன்றும் கூறாமல் அப்படியே நின்றான் ஆதித்யா. கமலி தனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. தான் உண்மையிலேயே இன்ப அதிர்ச்சி அடைந்துவிட்டதாக காட்டிக் கொள்ள நினைத்தான். அடுத்த நொடி அவன் முன்னால் குதித்தாள் கமலி,

"ஆதிஜி, நான் வந்துட்டேன்..." என்றபடி.

"கமலி, நீ எப்ப வந்த?" என்றான் தனக்கு எதுவும் தெரியாததைப் போல.

"சுமித்ரா வீட்லயிருந்து நேரா இங்க வந்துட்டேன்"

"நீ, இங்க இருக்குற எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணியிருக்க போலிருக்கு..."

"நான் உங்களை தான் ரொம்ப மிஸ் பண்ணேன் ஆதிஜி" என்றாள் சிறிதும் யோசிக்காமல்.

"நெஜமாவா?"

"ஆமாம்... நான் ஒழுங்கா தூங்கல... ஒழுங்கா சாப்பிடல... எப்ப பாத்தாலும் உங்களையே நெனச்சுக்கிட்டு இருந்தேன்"

பொங்கி வந்த புன்னகையை சிந்தியவாறு,

"நீ இப்படி கிளம்பி வந்ததுக்காக உங்க அம்மா வருத்தப்பட மாட்டாங்களா?" என்றான்.

"இல்ல, இல்ல அவங்க சந்தோஷம் தான் பட்டாங்க. ஏன்னா, உங்களை மாதிரியே அவங்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்"

"அப்படின்னா, நானும், உங்க அம்மாவும் ஈக்குவல்ன்னு  சொல்றியா?" என்றான்.

"இல்ல... நீங்களும் எங்க அம்மாவும் ஈக்குவல் இல்ல"

ஆதித்யாவின் முகம் வாடிப்போனது. அவன் கொஞ்சம் அதிகமாய் எதிர்பார்த்து விட்டானோ?

"நீங்க, எங்க அம்மாவைவிட ரொம்ப ஸ்பெஷல்" என்றாள் அவனை திக்குமுக்காட செய்து.

"ஏன்?"

"ஏன்னா, நல்லவங்களா இருக்கிறது தான் அம்மாவுடைய குணம். அம்மா தன் குழந்தை மேல பிரியமா இருக்கிறதுல எந்த ஆச்சரியமும் இல்ல. ஏன்னா, அம்மான்னா அப்படித் தான் இருப்பாங்க. ஆனா, எல்லா ஹஸ்பண்டும் உங்களை மாதிரி இல்ல ஆதிஜி. நீங்க எல்லாரையும் விட ரொம்ப நல்லவர். அதனால் தான், எங்க அம்மாவை விட நீங்க ரொம்ப ஸ்பெஷல்."

அமைதியாய் அவள் பேசுவதை ரசித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. அவனால் ஒன்றும் கூற முடியவில்லை. உண்மையில் இந்தப் பெண் எப்படிப்பட்டவள்? சில சமயங்களில் சின்னக் குழந்தை போல் நடந்து கொள்கிறாள்... சில சமயங்களில் தனது அறிவுத் திறனால் வாயடைக்கச் செய்து விடுகிறாள். ஒன்று மட்டும் ஆதித்யாவுக்கு தீர்க்கமாய் புரிந்து போனது. அவள் அவனிடம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள்... அவன் எதிர்பார்த்ததை விட வேகமாகவே...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top