20 ஆதித்யாவின் பார்வை
20 ஆதித்யாவின் பார்வை
கமலியைப் பற்றி யோசித்தபடி சோபாவில் அமர்ந்திருந்தான் ஆதித்யா. அவள் வீட்டிற்கு வருவதற்கு முன் அவன் வந்து சிசிடிவி ஃபுட்டேஜை பார்த்தது நல்லதாய் போனது. காரணம் என்னவென்று அறியாமல் அவளிடம் எதுவும் கேட்க அவன் விரும்பவில்லை. அதே நேரம், இதை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து விடவேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.
அப்பொழுது, கமலி தங்கள் அறைக்குள் நுழைவதை பார்த்து மடிக்கணினியை மூடினான். ஆதித்யா வீட்டில் இருந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டாள் கமலி. இனிமேல் அவன் தாமதமாய் வருவான் என்று அவள் நினைத்திருந்தாள் அல்லவா...! ஆதித்யாவை பார்த்தவுடன், லாவண்யாவும், சுமித்ராவும் காதலைப் பற்றி கொடுத்த விளக்கங்கள் அவள் நினைவுக்கு வந்தது.
"நீங்க வந்துட்டீங்களா ஆதிஜி? நான் தான் என்னுடைய படிப்பை நானே கவனிச்சுக்கிறேன்னு சொன்னேனே..."
"ஆமாம், சொன்ன... அதே நேரம், என்னுடைய ஹெல்த்தையும் கவனிச்சிக்க சொல்லி நீ சொல்லலையா? 24 மணி நேரமும் வேலை செஞ்சுகிட்டு இருந்தா, நான் எப்படி என்னுடைய ஹெல்த்தை கவனிச்சிக்கிறது? உனக்கு பாடம் சொல்லிக் கொடுக்குற சாக்குல, தினமும் வீட்டுக்கு சீக்கிரமா வந்து கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு நெனச்சேன். நீ வேண்டாம்னு சொல்லிட்ட... சரி, பரவாயில்ல விடு..." என்றான் கவலையாக.
ஆதி கூறுவது சரி தான். அவன் தினமும் வீட்டிற்கு தாமதமாய் வந்து, தாமதமாய் உறங்கினால் அவனுடைய உடல் நிலை எப்படி நலமாய் இருக்க முடியும்? அவன் தினமும் சீக்கிரம் வருவது தானே அவனுக்கு நல்லது...!
"நீ என்னுடைய ஹெல்ப்பை கேட்டாலும், கேட்கலனாலும், நான் தினமும் சீக்கிரம் வரணும்னு முடிவு பண்ணி இருக்கேன்..."
"சாரி, ஆதிஜி. நீங்க யோசிக்கிற மாதிரி நான் யோசிக்கல. ஒருவேளை, உங்கள மாதிரி, என்னால எப்பவுமே யோசிக்க முடியாது போல இருக்கு..." என்றாள் கவலையாக.
"சரி விடு, போய் ஃபிரஷ் ஆயிட்டு வா..."
"எனக்கு ஒரு டவுட் இருக்கு. நீங்க சொல்லி தரீங்களா?" என்றாள் தயக்கத்துடன்.
"க்ளாட்லி..." என்றான் உதட்டோர புன்னகையுடன்.
அவள் சந்தோஷமாய் குளியலறை நோக்கி ஓடினாள். அது ஆதித்யாவை மேலும் குழப்பியது. அப்படி என்றால், அவன், அவளுக்கு சொல்லிக் கொடுப்பதில் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி இருக்கும் பொழுது, முதல் நாள் எதற்காக வேண்டாம் என்று கூற வேண்டும்?
குளியலறையில் இருந்து வெளியே வந்த கமலியின் முகத்தில் எப்பொழுதும் இருக்கும் ஆர்வம் இருந்தது. முகம் நிறைய புன்னகையுடன் புத்தகங்களை எடுத்து வந்தாள். அவர்கள் தங்களது வழக்கமான பணியை தொடங்கினார்கள்.
சிறிது நேரத்தில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. உள்ளே வந்தாள் ரேணுகா.
"ஆதி, இன்னைக்கும் நீ சீக்கிரம் வந்துட்டியா?" என்று அவள் கேட்க,
முதல் முறையாக, ரேணுகாவின் வார்த்தையால் சங்கடமாய் உணர்ந்தான் ஆதித்யா. இப்பொழுது தானே, அது சம்பந்தமாய் அவன் கமலியை சமாதானப்படுத்தி இருந்தான்...! ஆனால் கமலியின் முகத்தில் எந்த சங்கடமும் இல்லை. ஆதித்யா தான் அவளது குழப்பத்தை தீர்த்து விட்டானே...!
"ஆமாம் கா..."
"அவர் சொன்னாரு, நீ ஏதோ முக்கியமான மீட்டிங்கை பாதியில விட்டுவிட்டு வந்துட்டியாமே..."
"ஆனா, அடுத்த நாள் சீக்கிரமா போய், அந்த மீட்டிங்கை முடிச்சுட்டேன்"
"ஆமாம், அவரு சொன்னாரு... உடம்பை பார்த்துக்கோ ஆதி..."
சரி என்று ஆதித்யா தலையசைக்க,
"நீங்க கவலைப்படாதீங்க அக்கா. ஆதிஜி சீக்கிரம் வீட்டுக்கு வந்தா, அவருக்கு நல்லது தானே..?" என்றாள் கமலி.
ஆமாம் என்று புன்னகையுடன் தலையசைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள் ரேணுகா.
அப்பொழுது அவள் காதருகே சூடியிருந்த வெள்ளை ரோஜாவை கவனித்தான் ஆதி. அது கமலிக்கு வெகு அழகாய் இருந்தது.
"இந்த ரோஜா உனக்கு ரொம்ப நல்லா இருக்கு" என்று ஆதி கூற, அதற்கு கமலி அளித்த பதில் அவனுக்கு அதிர்ச்சியளித்தது.
"சமீர்கான் கொடுத்தாரு..."
"சமீர்கானா? யார் அவன்?" என்றான் முகம் சுளித்து.
"என்னோட கிளாஸ் மேட்... ( அண்ணனும் கூட என்று கூற போனவள், லாவண்யாவின் வார்த்தைகளை நினைத்து பார்த்து கூறாமல் நிறுத்தி ) ஃப்ரெண்டும் கூட" என்றாள்.
"ஓ..."
"அவர் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்ல சொன்னாரு"
"எனக்கு எதுக்கு தேங்க்ஸ்?" என்றான் புரியாமல்.
"நீங்க எனக்கு சொல்லிக் கொடுக்கிறதால தானே, அவர் கேக்குற டவுட்டை என்னால கிளியர் பண்ண முடியுது?"
"அவனுடைய டவுட்டை நீ( என்பதை அழுத்தி) கிளியர் பண்ணியா?" என்றான்.
ஆமாம் என்று தலையசைத்தாள் கமலி. எப்படி அவர்களுக்குள் இந்த நட்பு ஏற்பட்டது என்பது ஆதித்யாவுக்கு புரிந்தது.
"பாரு, நீ எங்கிட்ட கத்துக்குறதால, நீயும் வேற ஒருத்தருக்கு சொல்லிக் கொடுக்க முடியுது இல்லையா?" என்றான்.
ஆமாம் என்று உதடு சுளித்தாள் கமலி. அதைப் பார்த்து ஆதித்யா புன்னகை புரிந்தாலும், அவனது உள் மனம் சமீர்கானை சுற்றி வந்தது. யார் அவன்? அவன் உண்மையிலேயே நம்பத்தகுந்தவனா? அவனிடமிருந்து ரோஜாப்பூவை வாங்கிக் கொள்ளும் அளவிற்கு எப்படி அவன் கமலிக்கு நெருக்கமானான்? சமீர்கானை பற்றி முழுதாய் தெரிந்து கொள்ள நினைத்தான் ஆதித்யா.
இரவு உணவு வேலை வரை அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. வழக்கமாய் பாடத்தைக் கவனிக்கும் கமலி, அன்று வழக்கத்திற்கு மாறாய் ஆதித்யாவை கவனித்துக் கொண்டிருந்தாள். ஆதித்யா அவள் கண்களுக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தான். அவனது புன்னகை, அவனது முகபாவம், அவனது கண்கள், அவனது அழகிய முகம், எல்லாம் இன்று புதிதாய் தெரிந்தது. அப்போது கமலின் மனதில் அலாரம் அடித்தது. அவள் தன் கணவனை ரசித்துக் கொண்டிருப்பது அவளுக்கு புரிந்தது. அவளது இதயத்துடிப்பு தாறுமாறாய் அடித்தது. ஆதித்யாவின் குரல் அவள் காதில் விழவில்லை. அவளது இதயத்துடிப்பு மட்டும் தான் சத்தமாய் கேட்டுக்கொண்டிருந்தது. தன் கையை நெஞ்சில் வைத்து அழுத்திப் பிடித்து, மென்று முழுங்கினாள் கமலி.
ஆதித்யா தன் மீது காதல் கொண்டுள்ளான் என்ற எண்ணம் அவளது செய்கைகளை அடியோடு புரட்டிப் போட்டது. சாப்பிட்டு முடித்து படுக்கைக்கு வந்து, போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள். ஆனால் அவளுக்கு தூக்கமே வரவில்லை. அவள் உறங்கி விட்டதாய் நினைத்துக்கொண்டு, டீ-சர்ட்டைக்கு மாற, தனது சட்டையை கழட்டினான் ஆதித்யா. மெல்ல கண்ணைத் திறந்த கமலி, அவன் சட்டையில்லாமல் நிற்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்து கண்களை மீண்டும் இறுக்கமாய் மூடிக் கொண்டாள். அவளது இதயம் மீண்டும் தறிகெட்டு ஓட தொடங்கியது. தன் நெஞ்சை அழுத்தமாய் அழுத்திக்கொண்டாள் கமலி, அப்படி செய்தால், தன் இதயத்துடிப்பை கட்டுப்படுத்தி விடலாம் என்பதைப் போல...
தன் மனைவியின் மனதில், தான் ஏற்படுத்தி விட்ட கிளர்ச்சியை பற்றி ஒன்றும் அறியாமல், விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்தான் ஆதித்யா.
மறுநாள் காலை
தூக்கத்திலிருந்து கண் விழித்த கமலி, வழக்கம் போல் மந்திரம் சொல்ல தன் கைகளை ஒன்று சேர்க்க நினைத்தாள். ஆனால் அவளால் அது முடியவில்லை. தலையை திருப்பி பார்த்தவள், அவளது வலது கரம், ஆதித்யாவின் பிடியில் இருந்ததை பார்த்து திடுக்கிட்டாள். மீண்டும் அவள் இதயம் வேகமாய் துடித்தது. மெல்ல தன் கையை உருவி எடுத்துக்கொண்டு, பதட்டத்துடன் குளியலறை நோக்கி ஓடினாள். இது தான் முதல்முறை, ஆதித்யா அவள் கையைப் பற்றிக் கொண்டிருந்ததை அவள் பார்த்தது. ஆனால், அவன் அவள் கையை பற்றியது இது தான் முதல் முறையா என்று அவளுக்கு தெரியவில்லை.
அவள் முகத்தில் வெட்கப் புன்னகை மிளிர்ந்தது. ஆதித்யா பற்றியிருந்த தன் கரத்தை பார்த்து புன்னகை புரிந்தாள். உண்மையிலேயே ஆதித்யா தனக்காக செய்வது எல்லாம், அவள் மீது கொண்டுள்ள காதலால் தானா?
குளித்து முடித்து குளியலறையிலிருந்து வெளியில் எட்டிப் பார்த்தாள் கமலி. சோபாவில் அமர்ந்து, தனக்கு வந்த மின்னஞ்சலை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யா. சிறிது நேரம் அப்படியே நின்று, அவனை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி. அவள் வருவதை பார்த்து, அவசரமாய் எழுந்து குளிக்க சென்றான் ஆதித்யா. இன்று எது எப்படி இருந்தாலும், அவளை கல்லூரியில் விடுவது என்று முடிவு செய்திருந்தான் அவன்.
கல்லூரிக்கு செல்ல தயாரானாள் கமலி. அப்போது அவளது பையிலிருந்து ஒரு ரூபாய் நாணயம் கீழே விழுந்தது. அதை குனிந்து எடுத்த அவளுக்கு, ஒரு எண்ணம் உதித்தது. எப்போதெல்லாம் குழப்பமாய் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு நாணயத்தை சுண்டிப் பார்த்து முடிவெடுப்பது அவளது வழக்கம். அதை ஏன் இப்பொழுது செய்யக்கூடாது என்று அவளுக்கு தோன்றியது.
*தலை* விழுந்தால் ஆதித்யாவின் மனதில் அவள் மட்டும் தான் இருக்கிறாள். ஒருவேளை *பூ* விழுந்தால் அவன் ஷில்பாவை விரும்புகிறான்.
நாணயத்தை சுண்ட நினைத்தவள் ஒரு நொடி நிறுத்தினாள். ஒருவேளை பூ விழுந்துவிட்டால் என்ன செய்வது? என்று யோசித்தாள். உண்மையை ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்? என்று எண்ணிக்கொண்டு, மகமாயியை மனதில் வேண்டியபடி அந்த நாணயத்தை சுண்டினாள். அந்த நாணயம் கட்டிலுக்கு அடியில் சென்று விழுந்தது. கண்களை மூடியபடி, கட்டிலுக்கு அடியில் தவழ்ந்து சென்றாள். மெல்ல கண் திறந்து பார்த்தவளுக்கு, *தலை* விழுந்திருந்ததை பார்த்து சந்தோஷம் தாங்கவில்லை. பைத்தியக்காரியைப் போல் அந்த நாணயத்தை பார்த்து சிரித்தாள்.
ஆதித்யா அவளை விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, அந்த நாணயத்தை மறைத்துக் கொண்டாள்.
"என்ன செய்ற நீ?"
ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள்.
"நீ கட்டிலுக்கடியில தவழ்ந்து போய் இந்த காயினை எடுத்ததை தான் நான் பார்த்தேனே..."
*அய்யய்யோ இவர் பார்த்துட்டாரா?* என்று எண்ணினாள்.
"நான் குழப்பமா இருந்தா காயின் ட்விஸ்ட் பண்ணுவேன்..."
"இப்போ குழப்பமா இருக்கியா?"
"ஆமாம்... நான் ஃபர்ஸ்ட் ரேங்க் வருவேனா மாட்டேனான்னு..." என்று இழுத்தாள்.
தன் கைகளை கட்டிக் கொண்டு, தலைசாய்த்து அவளைப் பார்த்தான். அது அவளுக்கு பதட்டத்தை தந்தது.
"நான் நிச்சயமா என்னுடைய ரேங்க்கை நினைச்சி தான் குழப்பமா இருக்கேன்... நான் பொய் சொல்லல... "
"நீ பொய் சொல்றேன்னு நான் சொல்லலையே... "
அவன் கூறியது குற்ற உணர்ச்சிக்கு அவளை ஆளாக்கியது.
"என்னை மன்னிச்சிடுங்க ஆதிஜி"
"நான் சும்மா கிண்டல் தான் பண்ணேன்... காயினை ட்விஸ்ட் பண்றது எல்லாரும் சாதாரணமா செய்யறது தான். ஏன் எல்லாத்துக்கும் சீரியஸாகுற? காலேஜுக்கு கிளம்பு"
சரி என்று தலையசைத்தாள் கமலி.
.......
தனது கார் டயரில், காற்று இறங்கிப்போயிருந்ததை பார்த்து, எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை ஆதித்யாவுக்கு. கமலியின் முகம் சலனமற்று இருந்ததை கவனித்தான் அவன். வழக்கமாய் கூறுவதை கூறினாள் கமலி
"நானே காலேஜ்க்கு போய்க்கிறேன் ஆதிஜி"
அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது,
"ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் உன்னை காலேஜில் விடுறேன்... "
"எனக்கு லேட் ஆகுது..."
தனது கையை காட்டி அவளை நிறுத்திவிட்டு யாருக்கோ ஃபோன் செய்தான்.
"ராகுல் உன்னுடைய வண்டி சாவியை எடுத்துக்கிட்டு வா"
அதைக் கேட்டு கமலியின் விழிகள் அகல விரிந்தது. தன்னை அவன் இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு செல்ல போகிறானா? அதற்கு கார் எவ்வளவோ மேல் ஆயிற்றே...!
"ஆதிஜி நீங்க என்னை பைக்கில் கூட்டிகிட்டு போறதை பார்த்தா ஜனங்க என்ன நினைப்பாங்க?"
"அப்படி நினைக்கிறவங்க உன்னைக் கொண்டுபோய் காலேஜ்ல விடுவாங்களா?"
இல்லை என்று தலையசைத்தாள் கமலி.
"அப்போ என் கூட காலேஜுக்கு வா"
தனது இருசக்கர வாகன சாவியுடன் அங்கு வந்தான் ராகுல்.
"அண்ணி கூட பைக்ல போக போறியா? நீ ரொமான்டிக்கா மாறிக்கிட்டு போற பாதி..." என்றான் ராகுல் கிண்டலாக.
அதைக் கேட்டு கமலியின் பாவப்பட்ட இதயம் மீண்டும் துடித்தது. முதல் நாள், தான் ஆதித்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தாள். ஹெல்மெட்டை அணிந்து கொண்டு புன்னகையுடன் வண்டியில் அமர்ந்தான் ஆதித்யா. வேறுவழியின்றி, ஆதித்யாவை உரசாமல் அவன் பின்னால் அமர்ந்தாள் கமலி. ஆதித்யாவும் அவளை சங்கடப்படுத்த கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் வண்டியை ஓட்டிச் சென்றான்.
அவளது கல்லூரியின் முன் வண்டியை நிறுத்திய ஆதித்யா, ஹெல்மெட்டை கழட்டினான். கமலி இங்கும் அங்கும் பதட்டத்துடன் பார்த்ததை அவன் கவனித்தான்.
"ஆதிஜி நீங்க கிளம்புங்க"
"சரி நான் கிளம்பறேன். ஆனா நீ ஏன் பதட்டமா இருக்க?"
"இல்ல... ஒன்னும் இல்ல..." என்று கூறிவிட்டு அவனுக்கு டாட்டா காட்டினாள்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஆதித்யா. அவளுக்கு கல்லூரியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பது அவனுக்கு உறுதியாகி போனது. அதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்துவிட நினைத்தான் அவன்.
......
ஆயிரம் கண்கள் தன்னை உற்று நோக்குவதை போல் உணர்ந்தான் சமீர்கான். அது அவனுக்கு மிகவும் சங்கடத்தைத் தந்தது. திருமதி ஆதித்யாவுடன் நட்புறவு பாராட்டுவது என்றால் சும்மாவா?
கமலியை கல்லூரியில் விட்டு சென்றதிலிருந்து, சரியாய் ஒரு மணி நேரத்தில் சமீர்கானை பற்றிய விபரங்கள் அனைத்தும் ஒரு அங்குலம் விடாமல் சென்றடைந்தது ஆதித்யாவுக்கு.
அவனுக்கு கிடைத்த விவரங்களை பொறுத்தவரை, சமீர்கானின் மேல் சந்தேகப்படும்படி எதுவும் இல்லை. நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். ஸ்காலர்ஷிப்பில் கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருக்கிறார்கள். அவனது குடும்பம், அவன் தோள் கொடுத்து தங்களை முன்னேற்றவான் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவனைப் பற்றிய விவரங்கள் சுத்தமாய் இருந்தாலும், சமீர்கான் ஆதித்யாவின் கண் பார்வையில் தான் இருப்பான். ஆதித்யா யாரையும் எளிதில் நம்ப தயாராக இல்லை... அதுவும் கமலியின் விஷயத்தில் இல்லவே இல்லை...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top