11 திருமதி ஆதித்யா

11 திருமதி ஆதித்யா

சென்னையில் இருக்கும் ஆதித்யாவின் வீடு பிரம்மாண்ட பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு திருமணத்திற்குப் பிறகும், அது அங்கு நடப்பது வழக்கம் தான். கையில் ஒரு பையுடன் கமலியின் அறைக்கு வந்தாள் ரேணுகா.

"கமலி இந்த ட்ரஸ் உங்களுக்குத் தான். எங்க குடும்ப வழக்கப்படி பூஜை முடியுற வரைக்கும் நாங்க கொடுக்கிற டிரசை தான் நீங்க போடணும். உங்க அம்மா வீட்டுல இருந்து கொண்டு வந்த டிரஸ்சை போட வேண்டாம். குளிச்சிட்டு இதைப் போட்டுக்கோங்க"

சரி என்று தலையசைத்துவிட்டு அதை வாங்கிக் கொண்டாள் கமலி. அந்த பையில் இருப்பது புடவையாக இருக்குமோ என்று எண்ணிய அவளுக்கு, ஒரு லெஹங்காவைப் பார்த்து சந்தோஷமாய் போனது. இப்படி சினிமாவில் வருவது போன்ற உடை அணிய வேண்டும் என்பதெல்லாம் அவளது கனவு. குளியலறைக்கு சென்று, குளித்து முடித்துவிட்டு வந்தாள். அப்பொழுது அங்கு வேலையாள் முத்து, ஒரு ஜக்கில் மாம்பழரசம் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றான். அதைப் பார்த்தவுடன் அவள் முகம் பிரகாசித்தது. தனது வீட்டின் பக்கத்தில் இருக்கும் கடையில், அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்ட மாம்பழ ரசத்தை வாங்கி பருகுவது அவளுக்கு பிடித்த ஒன்று. அந்த பழரசத்தை ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றி ரசித்து பருக துவங்கினாள். கடையில் வாங்கும் பழரசத்தை விட அது மிக அருமையாய் இருந்தது.

அப்பொழுது அந்த அறைக்குள் பரபரவென ஓடிவந்த ஷாலினி, *மாமி...* என்று கத்தியபடி அவளை கட்டிக் கொண்டாள். அவள் கட்டிப்பிடித்த வேகத்தில், கமலியின் கையில் இருந்த பழச்சாறு, அவள் அணிந்திருந்த சோலியின் மீது கொட்டி, சோலி மொத்தமாய் நனைந்து போனது

"அடக்கடவுளே..." என்றாள் கமலி.

"ஐ அம் சாரி, மாமி" என்றாள் ஷாலினி பதட்டமாக.

"பரவாயில்ல... ஆனா, நான் இப்ப என்ன செய்றது?" என்றாள்.

"வாஷ் பண்ணிடலாம். நான் முத்து அங்கிள் கிட்ட சொல்லி வாஷிங் மெஷினில் போட்டு ட்ரை பண்ண சொல்றேன். அப்புறம் அயர்ன் பண்ணிடலாம்"

"ஆனா, அதுவரைக்கும் நான் என்ன போட்டுகிறது?"

"வேற ஏதாவது போட்டுக்கோங்க"

"ரேணுகா அக்கா சொன்னாங்க, பூஜை முடியிற வரைக்கும் நான் எங்க வீட்டிலிருந்து கொண்டு வந்த டிரசை போடக்கூடாதாம். இந்த வீட்டு டிரசை தான் போடணுமாம்"

"அப்போ நான் அம்மாகிட்ட போயி என்ன செய்யறதுன்னு கேட்கவா?"

"வேணாம். அக்கா தப்பா நினைச்சுக்க போறாங்க... "

"ம்ம்ம்" என்று யோசித்த, ஷாலினி,

"ஐடியா... " என்றாள்.

"என்ன ஐடியா?"

"நீங்க இந்த வீட்டு டிரஸ்சை போடலாம் தானே? "

"ஆமாம். இந்த வீட்டு டிரஸை மட்டும் தான் போடணும்"

பரபரவென அலமாரியை நோக்கி ஓடினாள் ஷாலினி. அதை திறந்து,

"பாருங்க, இந்த வீட்டுல எவ்வளவு டிரஸ் இருக்கு..." என்றாள் ஆதித்யாவின் உடைகளை காட்டி.

"என்னது ஆதிஜியோட டிரஸா?"

"இந்த ட்ரஸ் எல்லாம் இந்த வீட்டோடது தான்... யோசிக்காதீங்க மாமி... நமக்கு நேரமில்ல. சீக்கிரம்..."

ஆதித்யாவின் சட்டையை எடுத்து அதை கமலியின் கையில் கொடுத்தாள் ஷாலினி. வேறு வழியின்றி அதை எடுத்து கொண்டு குளியலறை நோக்கி ஓடினாள் கமலி. தான் அணிந்திருந்த சோலியை துவைத்து எடுத்துக்கொண்டு, ஆதித்யாவின் சட்டையை அணிந்து கொண்டு வெளியே வந்தாள் கமலி. அவள் கையிலிருந்து அதை வாங்கிக் கொண்டாள் ஷாலினி.

"கொஞ்ச நேரம் இருங்க. நான் உடனே வந்துடறேன்" என்று கூறிவிட்டு வெளியே ஓடினாள்.

தலையில் கை வைத்து கொண்டு, கட்டிலில் அமர்ந்தாள் கமலி. அங்கு, தான் குடித்து மீதம் வைத்திருந்த பழச்சாற்றை மீண்டும் எடுத்து பருக துவங்கினாள். அப்பொழுது ஒரு காலடி சத்தம், அவள் அறையை நோக்கி வருவதை அவள் கேட்டாள். அந்த காலடி சத்தம் யாருடையது என்பது அவளுக்கு தெரியும். ஆதித்யா தான் வருகிறான். அவனுடைய சட்டையை அவள் அணிந்திருப்பதை பார்த்தால், அவன் என்ன நினைப்பான்? நிச்சயம் திட்டுவான். ஓடிச்சென்று, நீச்சல் குளத்திற்கு செல்லும் ஃபிரெஞ்சு கதவிற்கு போடப்பட்டிருந்த திரைசீலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். ஆனால், ஆதித்யாவின் பார்வை அவளது ஓட்டத்தை விட வேகமாய் இருந்தது. அவன் அவளை பார்த்துவிட்டான். அவள் ஏன் ஒளிந்து கொண்டாள் என்று அவனுக்கு புரியவில்லை. அவன் அவளை *பேட்டச்* செய்வான் என்று மீண்டும் அவள் நினைத்துவிட்டாளோ?

மெல்ல அந்த திரைசீலையின் பக்கத்தில் வந்து, அதை மெல்ல விலக்கினான். அவள், தனது சட்டையை அணிந்து கொண்டிருந்ததை பார்த்து வாயடைத்துப் போனான். இவளது சேட்டைகளுக்கு ஒரு எல்லையே இருக்கப் போவதில்லையோ...? கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டு, கைகளை கூப்பி, சாமி கும்பிட்டபடி நின்றிருந்தாள். அந்தக் காட்சி கொள்ளை அழகாய் இருந்தது அவனுக்கு. ஒரு விசித்திர எண்ணம் அவன் மனதில் உதயமானது. அந்த அழகு செல்லத்தை தன்னை நோக்கி இழுத்து, இறுக்கமாய் அனைத்துகொள்ள முடியாதா என்று தோன்றியது அவனுக்கு.

"இன்னைக்கு பூஜைக்கு இந்த ட்ரெசை தான் போட்டுக்கப் போறியா?" என்றான் அவளை ரசித்தபடி.

இல்லை என்று அவசரமாய் தலையாசைத்தாள்.

"என்னுடைய ட்ரெஸ்ல மேங்கோ ஜூஸ் கொட்டிடுச்சி. அதைக் காய வைச்சுக் கொண்டு வறேன்னு ஷாலினி எடுத்துக்கிட்டு போனா"

"சரி, எதுக்காக என்னுடைய ஷர்ட்டை போட்டுக்கிட்டிருக்க?"

"ரேணுகா அக்கா சொன்னாங்க, நான் இன்னைக்கு எங்க வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்த டிரஸ்ஸை போட கூடாதாம். அதனால, ஷாலினி தான் உங்க ஷார்ட்டை போட்டுக்க சொன்னா"

"அப்படியா? சரி, வெளியில வா"

"நீங்க என் மேல கோவமா இருக்கீங்களா?"

"நான் ஏன் உன் மேல கோவமா இருக்கணும்?"

"உங்களைக் கேட்காம, உங்க சட்டையை எடுத்துப் போட்டுக்கிட்டேனே..."

"நீ என்னோட எல்லா திங்சையும் எடுத்து யூஸ் பண்ணலாம்... உனக்கு உரிமை இருக்கு."

"ம்ம்ம்" என்று தலையசைத்தாள்.

"அக்கா உன்கிட்ட ஒன்னு கொடுக்க சொன்னாங்க. வந்து உட்காரு"

"என்னது?" என்றபடி சோபாவில் அமர்ந்தாள்.

அவள் அருகில் அமர்ந்து கொண்ட ஆதித்யா, அவனது கோட் பாக்கெட்டில் இருந்து ஒரு டப்பாவை எடுத்தான். அதில் ஒரு ஜோடி வளையல்கள் இருந்தன.

"இந்த வளையல், இந்த வீட்டு மருமகளுக்கு சொந்தமானது... அதாவது உனக்கு. இன்னையில இருந்து, இது உன்னோடது..."

சில நொடி நிறுத்திவிட்டு,

"உன்னோட கையை தொடுறது பேட் டச் இல்லையே...?" என்றான்.

அவள் இல்லை என்று தலை அசைத்தாள்.

"நான் உனக்கு இதை போட்டு விடலாமா?"

அதைக்கேட்டு நகம் கடித்தாள் கமலி.

"அக்கா தான் போட்டு விட சொன்னாங்க"

தலையை குனிந்தபடி சரி என்று தலை அசைத்தாள்.

தன் கையை அவளை நோக்கி நீட்ட, மெல்ல தன் கையை அவன் கை மீது வைத்தாள் கமலி. அவள் கரத்தை பற்றி, அவர்களுக்கிடையிலான தொடுதலை, அவள் அனுமதியுடன் தொடங்கி வைத்தான் ஆதித்யா. அந்த வளையல்களை அவளுக்கு போட்டுவிட்டான் ஆதித்யா. தன் கையை இப்படியும் அப்படியும் திருப்பி புன்னகை புரிந்தாள் கமலி.

"இது ரொம்ப அழகா இருக்கு" என்றாள்.

*உன்னைவிட ஒன்றுமில்லை* என்று கூற வேண்டும் என்று தோன்றியது ஆதித்யாவிற்கு. ஆனால் அந்த வார்த்தையை அப்படியே விழுங்கி விட்டான். அவன் கூறுவதை கேட்டு, அவள் முகத்தில் இருக்கும் புன்னகை மறைந்து போகலாம்...! எதற்கு வம்பு?

மறுநாள்

தன் கணவன் சரவணனுடன் ஏதோ வெகு தீவிரமாய் உரையாடி கொண்டிருந்தாள் ரேணுகா. அப்போது அவளது அறைக்குள் வேகமாய் நுழைந்தான் ஆதித்யா.

"அக்கா, நான் கமலியை காலேஜ் அட்மிஷனுக்கு கூட்டிகிட்டு போறேன்" என்றான்.

"நாங்க அதைப் பத்தி தான் பேசிக்கிட்டிருக்கோம்" என்றான் சரவணன்.

"என்ன பேசினீங்க?"

"நீ கமலியை காலேஜுக்கு அனுப்பணும்னு சொல்றியே, அதை பத்தி தான்..." என்றாள் ரேணுகா.

"அதுல யோசிக்க என்ன இருக்கு?" என்றான் ஆதித்யா.

"நீ உன்னுடைய முடிவை மறுபரிசீலனை செஞ்சா நல்லதுன்னு எனக்கு தோணுது"

"ஏன் கா?"

"ஏன்னா, இவ்வளவு கடுமையான சவாலை எதிர்த்து கமலியால நிக்க முடியும்னு எனக்கு தோனல. எதுக்காக அவளை இவ்வளவு கஷ்டப் படுத்தணும்? அவ நிம்மதியா, சந்தோஷமா, இருக்கட்டுமே..."

"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, கமலிக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பமே இல்லையாம். அவ படிக்கணும்னு தான் ஆசை பட்டாளாம்"

ரேணுகாவும், சரவணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நான் அவளை காலேஜுக்கு அனுப்புறேன்னு அவளுக்கு ரொம்ப சந்தோஷம். அவ விருப்பத்தோட காலேஜுக்கு போறதால,  நிச்சயமா நம்ம எதிர்பாக்குறதை விட நிறைய விஷயங்களை கத்துக்குவா."

"எனக்கு ஏதாவது பிரச்சனை வருமோன்னு பயமா இருக்கு" - ரேணுகா.

"எந்த பிரச்சனையும் வராது. நான் தான் இருக்கேனே..."

ஆமாம் என்று தலையசைத்தாள் ரேணுகா.

"நாங்க கிளம்புறோம் கா"

"எப்ப வருவீங்க?"

"லஞ்சுக்கு முன்னாடி வந்துடுவோம்"

"சரி"

கமலி கட்டுக்கடங்காத ஆவலுடன் இருந்ததை உணரமுடிந்தது ஆதித்யாவினால். நல்லவேளை, அவளை கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவை அவன் மேற்கொண்டான். பாவம்... அவளுக்குத் தான் படிக்க வேண்டும் என்று எவ்வளவு ஆர்வம்...!

"நீ ரெடியா?"

"ரெடி "

"சரி, வா போகலாம்"

பாட்டியிடமும், சித்தி இந்திராணியிடமும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டு கிளம்பினாள் கமலி.

கல்லூரியில் லாவண்யாவும், பிரபாகரனும் அவர்களுக்காக காத்திருந்தார்கள். ஆதித்யாவை பார்த்தவுடன் பிரபாகரன் தன் கண்களால் ஏதோ சமிக்ஞை செய்தான். ஆதித்யாவும் சரி என்று தலை அசைத்தான். அவர்கள் வருவதற்கு முன்பே, கமலியை கல்லுரியில் சேர்க்க தேவையான அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து வைத்திருந்தான் பிரபாகரன்.

"ஹாய் கமலி..." என்றாள் லாவன்யா.

"வணக்கம்" என்று அவள் கூற தன் கண்களை சுழற்றினாள் லாவண்யா.

தன் கை விரல்களை, கமலியின் கை விரல்களோடு கோர்த்துக்கொண்டு, கல்லூரி முதல்வரின் அறையை நோக்கி நடந்தாள் லாவண்யா. ஆதித்யாவை பின்தொடர்ந்து, அவர்களும் கல்லூரி முதல்வரின் அறைக்குள் நுழைந்தார்கள்.

"வாங்க ஆதித்யா" என்றார் கல்லூரி முதல்வர்.

"இவங்க என்னோட வைஃப், மிஸஸ் கமலி ஆதித்யா" என்று கமலியை, கல்லூரி முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தான் ஆதித்யா.

தனது பெயரை புதிய பரிணாமத்தில் கேட்டு, கமலியின் கண்கள் அகல விரிந்தது. மிஸஸ் ஆதித்யாவா?

"உங்களுடைய வைஃப், எங்க காலேஜ் ஸ்டூடண்டா இருக்கிறது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்"

"டுவெல்த் ஸ்டாண்டர்ட்ல அவங்க டிஸ்டிங்ஷன் வாங்கியிருக்காங்க" அவன் கமலியைப் பார்க்க, அவள் தன் கையிலிருந்த சான்றிதழ்களும், மதிப்பெண் பட்டியலும் கூடிய கோப்பை முதல்வரிடம் கொடுத்தாள்.

"ரொம்ப நல்லது... இந்த காலேஜ்ல இருக்கிற ப்ரோஃபசர்ஸ் எல்லாரும் ரொம்ப பொறுப்பானவங்க. நீங்க எந்த சந்தேகம் வேணும்னாலும் தாராளமா கேட்கலாம்... தயங்க வேண்டியதே இல்ல"

"அப்படின்னா, என்னை நீங்க இந்த காலேஜ்ல சேர்த்துகிட்டிங்களா?" என்றாள் கமலி ஆவலாக.

"அஃப் கோர்ஸ், உங்களை சேத்துக்க மாட்டேன்னு கூட என்னால சொல்ல முடியுமா? நீங்க..."

*நீங்க ஆதித்யாவின் மனைவி ஆயிற்றே* என்று அவர் கூறுவதற்கு முன், அவரை தடுத்து நிறுத்தினான் ஆதித்யா,

"நிறைய மார்க் எடுத்திருக்க இல்ல...?" என்று கூறி.

அவனை புரியாமல் பார்த்த கல்லூரி முதல்வரை, *ஆம்* என்று கூறுங்கள் என்று சைகை செய்தான் ஆதித்யா.

"ஆமாம். உங்களை மாதிரி ஒரு நல்ல ஸ்டூடன்ட்டை நாங்க எப்படி மிஸ் பண்றது?" என்றார் முதல்வர்.

"நாங்க கிளம்பலாமா?" என்றான் ஆதித்யா.

"அடுத்த வாரத்திலிருந்து ரெகுளர் கிளாசஸ் ஆரம்பிக்குது" என்றார் முதல்வர்.

"எனக்கு புக்ஸ் எப்போ கிடைக்கும்?" என்றாள் கமலி ஆர்வமாக.

"நீங்க கவலைப்படாதீங்க. நான் உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்றார் முதல்வர்.

"வீட்டுக்கா?" என்றாள் கமலி குழப்பமாக.
 
"வேண்டாம் சார். எல்லா  ஸ்டூடண்ட்சை போலவே, நாங்களும் காலேஜ் ஆஃபீஸ்லேயே வாங்குகிறோம்" என்றான் ஆதித்யா, பொருள் பொதிந்த பார்வை பார்த்தபடி.

"அதாவது, வந்த ஸ்டாக் எல்லாம் காலி ஆயிடுச்சு. எங்களுடைய கிளர்க் வீடு, உங்க ஏரியாவுல தான் இருக்கு.  புது ஸ்டாக் வந்தா, அவர்கிட்ட கொடுத்து அனுப்பலாம்னு நினைச்சேன்" என்று சமாளித்தார் முதல்வர்.

"தேங்க்யூ சார்" என்றாள் கமலி.

"கமலி, நீ லாவண்யா கூட வெளியில் இரு. நான் வரேன்" என்றான் ஆதித்யா.

சரி என்று தலையசைத்துவிட்டு சந்தோஷமாய் வெளியில் ஓடினாள் கமலி.

"நான் ஏதாவது தப்பா பேசிட்டேனோ?" என்றார் முதல்வர்.

"நீங்க கமலியை நல்லா பாத்துக்கணும். ஆனா, அது அவளுக்கு தெரிய கூடாது. அவளோட சீட்டுக்காக, நான் ஒரு பெரிய அமௌன்ட்டை டொனேஷனா கொடுத்திருக்கேன்னு அவளுக்கு தெரியவே கூடாது"

"எனக்கு புரியுது சார். நீங்க எங்க காலேஜ்க்கு ஒரு கோடி ரூபா கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் சார்"

"என்னோட வைஃப், இங்க சேஃபா இருக்கணும். அதுக்கு நீங்க தான் பொறுப்பு."

"நீங்க மிஸஸ் ஆதித்யாவை பத்தி கவலைப்பட வேண்டியதில்ல. நான் அவங்க டிபார்ட்மென்ட் ஆளுங்களை மட்டும் இல்ல, எல்லாரையும் இன்ஸ்ட்ரக்ட் பண்ணி இருக்கேன்."

"தட்ஸ் கிரேட். நான் கிளம்பறேன்"

முதல்வர் அறையிலிருந்து வெளியே வந்த ஆதித்யா, அங்கு பிரபாகரன் நின்றிருந்ததை பார்த்து,

"கமலி எங்கே?" என்றான்.

"அவங்க லாவண்யா கூட காலேஜை சுத்தி பாக்க போயிருக்காங்க"

"ஓ..."

"அவங்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க போலயிருக்கு...!"

"ஆமாம். எது எப்படி இருந்தாலும் அவளுக்காக நான் இருப்பேன்..."

"ஏன் திடீர்னு இப்படி சொல்ற?"

"அக்காவும், மாமாவும் கமலியை பத்தி ரொம்ப பயப்படுறாங்க"

"கொஞ்ச நாள்ல, அவங்களுக்கு பயம் போயிடும்"

"போனா சரி..."

இதற்கிடையில்...

"நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும், கமலி" என்றாள் லாவண்யா.

"சொல்லுங்க..."

"இதைத் தான் சொல்ல வந்தேன்"

"என்னது?"

"நீ யாரையும் வாங்க, போங்கன்னு பேச கூடாது..."

"ஆனா... ஏன் ?"

"இது உன்னோட கிராமம் இல்ல. சென்னை பழக்கவழக்கங்கள் வேற... உன்னை நினைச்சு ரேணுகா எவ்வளவு கவலை படுறாங்கன்னு உனக்கு தெரியுமா?"

"ஏன்?"

"ஏன்னா, எல்லாரும் உன்னை கிண்டல் பண்ணுவாங்கன்னு அவங்க பயப்படுறாங்க... நீ உன்னை நிரூபிச்சி காட்ட வேண்டாமா?"

ஆமாம் என்று தலையசைத்தாள் கமலி.

"அப்படின்னா, நம்ம காலேஜ்ல அடியெடுத்து வைக்கிறதுக்கு முன்னாடி, சில விஷயங்களை நீ கத்துக்கணும். கத்துக்குவியா?"

"கண்டிப்பா கத்துக்குவேன். ஆனா, எப்படி?"

"நான் உனக்கு சொல்லி தரேன். ஆனா, அதுக்கு முன்னாடி, நீ என்னை உன்னோட ஃபிரண்டா ஏத்துக்கணும்"

"சரிங்க... இல்ல, இல்ல... சரி லா..."

"ஆங்... அப்படி தான். அதே மாதிரி, யாரையும் அண்ணா, அக்கான்னு கூப்பிட கூடாது."

"அப்போ எப்படி கூப்பிடுறது?"

"பேர் சொல்லி கூப்பிடு..."

"ஒருவேளை அவங்க என்னை விட பெரியவங்களா இருந்தா...?"

"அப்படியே இருந்தாலும் பேர் சொல்லி தான் கூப்பிடணும்."

"அவங்க கோவப்பட மாட்டாங்களா?"

"நீ, அக்கா, அண்ணான்னு கூப்பிட்டா தான் அவங்களுக்கு கோவம் வரும்."

"நிஜமாவா?"

"ஆமாம்..."

"விசித்திரமா இருக்கு..."

"அதை தான் நீ தெரிஞ்சிக்கணும். இங்க எல்லாமே விசித்திரம் தான். நீ ஜாக்கிரதையா இருக்கணும். ஏன்னா, நீ மிஸஸ் ஆதித்யா... சரியா?"

"சரி"

ஆதித்யாவும், பிரபாகரும் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தார்கள். லாவண்யாவை நோக்கித் தன் புருவத்தை கேள்விக்குறியாய் உயர்த்தினான் பிரபாகரன். தன் கண்களை இமைத்து, *முடிந்தது* என்று சைகை செய்தாள் லாவண்யா. நிம்மதி புன்னகை பூத்தான் பிரபாகரன். அவர்களது முதல் முயற்சி வெற்றியடைந்து விட்டது அல்லவா...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top