1
பழனி.
ஒரு மே மாத இரவு.
எட்டு இருபது... ம்ஹூம்.. எட்டரை இருக்கலாம்.
'வெற்றிவேல் முருகனுக்கு!'
'அரோகரா!!'
குழல் ஒலிப்பெருக்கிகளில் கந்தனைப் போற்றும் பாடல்கள் மின்காந்த அதிர்வோடு வழிந்துகொண்டிருக்க, பச்சையும் மஞ்சளும் நீலமுமாய் விளக்குகள் மலையெங்கும் நவமணிகளாய் மின்னிக்கொண்டிருக்க, ஜனக் கூட்டம் பழனியாண்டவர் பாலதண்டாயுதபாணியைப் பாடிக் கொண்டாடிப் படியேறிக்கொண்டிருந்தது கோவிலுக்கு.
அடிவாரத்தின் பாதவிநாயகர் கோவிலுக்குத் தெற்கே செல்லும் கொடைக்கானல் ரோட்டில் பத்து நிமிடங்கள் நடந்து திரும்பினால் வரும் சங்கிலியாண்டவர் வீதி. திருமண மண்டபம் ஒன்றின் பின்னால் தீப்பெட்டி வீடுகளாய் அடக்கியிருந்த தெருவில், ஒரு கூட்டுக் குடித்தன வீட்டுக்குள்..
"சஞ்சனா!? எத்தனை தடவை கூப்புடறது? அந்த ஃபோனை ஒடைச்சு அடுப்புல போடப்போறேன் பாரு!"
"ப்ச்.. வரேன்மா.. அஞ்சு நிமிஷம்!"
"ஹ்ம்ம்.. காலேஜ் ரெண்டாம் வருஷம் படிக்கிற பொண்ணு, அடுத்த வருஷம் படிப்பு முடியப்போது... இன்னும் சின்னப் புள்ளையாட்டம் செல்லுல கேம் விளையாண்டுகிட்டு இருக்கறா.."
கேண்டி க்ரஷ் விளையாட்டில் தன் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்துக் கட்டிலில் குப்புறப் படுத்துக்கிடந்தவள், முனகிக்கொண்டே எழுந்து முன்னறைக்கு வந்து அம்மாவைத் தேடினாள். சமையலறையில் அவர் தன்னோடு சேர்ந்து கடுகையும் தாளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள், சமையலறை வாசலில் நின்றபடி, "கூப்டியாம்மா?" என்றாள்.
"ம்ம்.. அப்பா இன்னும் அரைமணியில வந்துடுவாரு, கிரைண்டர் வேலை செய்யலடி.. நீ முக்குல இருக்க முருகன் ஸ்டோர்ல ஒரு மாவுப் பாக்கெட்டும், மிளகாய்பொடி பாக்கெட்டும் வாங்கிட்டு வா. பாத்து கவனமா போயிட்டு வா. ஷால் எடுத்துப் போட்டுட்டுப் போ. நாய் எதும் வந்தா பயப்படாத.."
அவர்பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போக, "போதும்மா!! இன்னமும் என்னய சின்னக் குழந்தைனே நினைச்சிட்டு இருக்கியா? காலேஜ் போறேன்மா நானு.. இன்னமும் கவனமா போ, தைரியமா போ, பயப்படாம போன்னுகிட்டு.." என அலுத்துக்கொண்டே காசை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வெளியே நடந்தாள் அவள்.
தெருவிளக்குகள் அனைத்துமே எரிந்துகொண்டிருந்தன. அவ்வப்போது சைக்கிள்களும் பைக்குகளும்கூடத் தாண்டிச் சென்றன.
'இத்தனைபேர் இருக்கும்போது நமக்கென்ன பயம்' என உற்சாகமாய் நடந்தபடி, சாலைத் திருப்பத்தில் வைத்திருந்த பெரிய விளம்பரப்பலகையை நிமிர்ந்து பார்த்தாள் அவள். அவர்கள் தெருவும் பிரதான சாலையும் இணையும் இடம் அது. அங்கே முப்பதடி உயரத்தில் நாற்பதடி அகலத்தில் இருந்த அந்த நீலவண்ண விளம்பரப் பலகையில், வானத்தைக் கிழித்துக்கொண்டு பறக்கும் வெண்ணிற விமானமொன்று புகைப்படமாக நின்றது.
ட்ராவல்ஸ் கம்பெனி ஒன்றின் விளம்பரம் அது. அமெரிக்காவின் தங்கப்பாலம், இங்கிலாந்தின் பிக்பென், சிங்கப்பூரின் கடற்சிங்க சிலை, ஆஸ்திரேலியாவின் ஓபரா ஹவுஸ் எனப் பல்வேறு புகைப்படங்களைப் பின்னணியில் போட்டிருந்தனர். அண்ணாந்து அதைப்பார்த்து, ஆசையாகப் பெருமூச்சு விட்டாள் அவள். நாளொன்றுக்கு நான்குமுறை பார்த்தாலும், இன்னும் அலுக்காத காட்சி அது அவளுக்கு.
மனதில் அதை ஓடவிட்டவாறே கடைக்குச் சென்று அம்மா கேட்டவற்றை வாங்கிக்கொண்டு, அப்படியே தனக்கும் கடலைமிட்டாய் எடுத்துக்கொண்டு, அதைக் கடித்துக்கொண்டே வீடுதிரும்ப நடந்தாள் அவள். மீண்டும் ஒருமுறை அந்தப் பலகையை நோட்டமிட்டவள் சற்றே கவனிக்காமல் சாலையின் குறுக்கே வந்துவிட, எதிரில் நடந்துவந்த யார்மீதோ மோதிவிட்டாள்.
இயல்பாகவே வரும் அவசரப் பணிவில் "சாரி" என்றுவிட்டுத் திரும்பி நடந்தாள் அவள். இடித்த ஆளும் பெரிதாக எடுத்துக்கொள்ளாததுபோல் சத்தமின்றி விலகிவிட, அவளும் தன்பாட்டில் வாய்க்குள் ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே வீட்டை அடைந்தாள்.
"மாவு வாங்கப் போனவ எத்தனை நேரம் கழிச்சு வர்ற!? நானும் பக்குபக்குன்னு வாசலைப் பார்த்துட்டே நிக்கறேன், அடுப்புல ஒரு வேலை ஓடல. என்னதான் பொண்ணோ, பொறுப்பில்லாம!!"
வந்ததும் வராததுமாய்க் கையிலிருந்த பையைப் பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு பொரிந்து தள்ளினார் அவளைப் பெற்ற தாய். அவள் சலிப்பாக உச்சுக்கொட்டிக்கொண்டே மீதிக் கடலைமிட்டாயை வாயில் திணிக்க, அவளைத் திரும்பிப் பார்த்தவர் இன்னும் கொதித்தார்.
"ஷால் போட்டுட்டுத்தான போக சொன்னேன்?? இப்படியேவா வெளிய போயிட்டு வந்த? சொல்ற பேச்சைக் கேக்கவே மாட்டியா?"
அப்போதுதான் துப்பட்டாவை மறந்துவிட்டுக் கடைக்குச் சென்றுவந்தது தெரிந்தது அவளுக்கே.
"வேணும்னா பண்ணுவாங்க? மறந்துட்டேன்மா.. அதுக்குப் போயா இப்படிக் கத்துற?"
"ஆ..மா.. பேச்சைப் பாரு. வயசுப் பொண்ணு, துப்பட்டாவை மறந்துட்டு ரோடு வரைக்கும் போயிட்டு வர்ற! எனக்குத் தெரியாது, உங்கப்பா வந்ததும், அவருகிட்டயே நான் நியாயம் கேட்கறேன்.. நீயாச்சு, உங்கப்பாவாச்சு!!"
அவள் மறுப்பாக ஏதோ சொல்ல வாயெடுக்க, அதற்குள், "என்ன, என் பேரு விழுந்து அடிபடுது..? இன்னிக்கு என்ன சண்டை ரெண்டுபேருக்கும்?" என்று கேட்டபடியே உள்ளே வந்தார் பார்த்தசாரதி.
அப்பாவைப் பார்த்ததும் சிணுங்கிக்கொண்டு, "பாருங்கப்பா.. சொன்ன வேலையை செஞ்சாலும் விடாம அம்மா திட்டறாங்க!!" என முறையிட்டாள் சஞ்சனா. மகளின் இந்த அபார நடிப்பை முறைப்போடு பார்த்துவிட்டு, கணவனிடம் திரும்பி, "இது என் பொண்ணா என் மாமியாரான்னு தெரியல.. ஒருவேளை மாமியார்தான் மறுஜென்மமா வந்துருச்சோ என்னவோ, உங்ககிட்ட என்னைப் பத்தி கோள்மூட்டறதே வேலை!" என்று மோவாயைத் தோளில் இடித்துத் தன் கோபத்தைப் பதிவுசெய்தார் அவர்.
"ஏய்! எங்கம்மாவை எதுக்கு இழுக்கற?? அவங்க போயி இருபது வருஷம் ஆகுது! போனவங்களைத் திட்டிட்டு...! அப்படி என்ன பண்ணிட்டா எம் பொண்ணு?"
"உங்க பொண்ணு.. சீமையில்லாத சிங்காரி! நீங்களே வச்சு சீராட்டுங்க!! அடக்கவொடுக்கமா துப்பட்டாவை போட்டுட்டு கடைக்குப் போயிட்டு வாடின்னா, மறந்துட்டேன்னு வந்து சொல்றா! அப்பறம் எப்பப்பாரு ஃபோனு, ஃபோனு, ஃபோனு!! நீங்க வாங்கியாந்தாலும் வாங்கியாந்தீங்க, ராப்பகலா அதையே கட்டிட்டு அழறா! நானும் சரி, இருபது மணிநேர ஷிப்டு முடிச்சிட்டு களைப்பா வருவீங்களே, உங்ககிட்ட என்னத்துக்கு சொல்லி சங்கடப்படுத்தணும்னு சும்மா இருந்தா, இவ ஆட்டம் அட்டாளிக்குப் போகுது! இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும். என் பேச்சை இவ மதிப்பாளா மாட்டாளா? கேட்டு சொல்லுங்க உங்க மகளை!"
அம்மா மூச்சுவிடாமல் பேசிமுடிக்கும் இடைவேளையில் தன் வாயிலிருந்த கடலை மிட்டாயை மென்று சுவைத்து விழுங்கிவிட்டு, "சபாஷ்! சரியான கேள்வி. இதற்குத் தங்களின் பதில்?" என அப்பாவைப் பார்த்து இல்லாத மைக்கை நீட்ட, அவர் போலிக் கோபத்துடன் முறைத்தார்.
"அம்மா சொல்றதெல்லாம் உண்மையா?"
"இல்லைனு சொல்லல. கடைக்கு துப்பட்டாவை மறந்துட்டுப் போயிட்டேன். அதென்னப்பா, வேணும்னா பண்ணுவாங்க? அதுவும், நைட் ட்ரெஸ்ஸுக்கு மேல துப்பட்டாவைப் போட்டுட்டுப் போறதுக்கு, நாம என்ன இருபதாம் நூற்றாண்டிலயாப்பா வாழறோம்? மொபைல்ல விளையாடறேன்.. எப்ப? படிச்சு முடிச்சிட்டுதானே? இப்ப வரைக்கும் நான்தான் எங்க க்ளாஸ்ல தேர்ட் ராங்க்--"
"முன்னாடி இருக்க ரெண்டு ராங்க் எப்ப வாங்கறதுன்னு கேளுங்க!"
அம்மா கீதா எடுத்துக் கொடுப்பதுபோல் கேட்க, "ஆனாலும் உனக்கு இவ்ளோ பேராசை ஆகாதும்மா.. நீயெல்லாம் ஜாலியா பத்தாங்கிளாசோட நின்னுட்ட.. அப்பாவைக் கட்டிக்கிட்ட.. உன்னையும் காலேஜுக்கு அனுப்பி அந்த மரண ப்ளேடு லெக்சர்ல எல்லாம் உட்கார வச்சா தெரியும்.. மொதல் ரெண்டு ராங்க் ஏன் வரலைன்னு!" என்றாள் சஞ்சனா, வேகமாக.
"சஞ்சனா!" அப்பா அதட்டினார்.
"கூடக்கூட பேசாத, அம்மா சொன்னா சரிங்கம்மானு கேட்டுக்க. கீதா, நீயும் புள்ளைய ரொம்பத் திட்டாத, அவளும் முடிஞ்சளவு எல்லா வேலையும் செய்யறா தானே? சரி, சண்டை முடிஞ்சது. உள்ள போயி டிபனை ரெடி பண்ணுங்க. மனுசனை இப்படியா பட்டினி போட்டு பஞ்சாயத்து பண்ண வெக்கறது!"
இருவரும் ஓரளவு சமாதானமாகி தோசை வார்க்கச் சென்றுவிட, சாரதி தனது சீருடையைக் களைந்துவிட்டு, இளைப்பாற லுங்கி கட்டிக்கொண்டு, தோளில் ஒரு பருத்தித் துண்டைப் போர்த்திக்கொண்டு ஆயாசமாக வந்து முன்னறையில் சுவரோடு சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்தார்.
இரண்டு தட்டுக்களில் தனக்கும் அப்பாவுக்கு தோசை எடுத்துக்கொண்டு வந்து, அவரருகில் தரையில் அமர்ந்தாள் சஞ்சனா.
"டிவி போடட்டாப்பா?"
"வேணாம்.. அந்த இரைச்சல் வேற என்னத்துக்கு? சும்மா பேசிக்கிட்டே சாப்பிட்டா ஆகாதா?"
சரியெனத் தலையசைத்துவிட்டு, தோசையைப் பிய்க்கத் தொடங்கினாள் அவளும்.
"அடுத்த வருசத்தோட, உனக்கு படிப்பு முடியுதுல்ல?"
முதல் தோசையை முடிக்கும் நேரத்தில் கேட்டார் சாரதி.
ஒருகணம் தாமதித்து, "ம்ம்.. ஆமாப்பா" என்றாள் அவளும்.
"இன்னும் அதே உடும்புப் பிடிவாதத்தோட தான் இருக்கியா?"
அவர் எதைப் பற்றிக் கேட்கிறார் என நன்றாகத் தெரிந்தது அவளுக்கு. பெருமூச்செரிந்தாள் அவள்.
"ஆமாப்பா. மொதல் வேலை அமெரிக்காவுல தான் வேணும். நானே பத்துப் பதினைஞ்சு கம்பெனிகளை லிஸ்ட் பண்ணியிருக்கேன். நானே அதுக்கெல்லாம் அப்ளை பண்றேன். அடுத்த செமஸ்டர்ல இருந்து டோஃபல்(TOEFL) க்ளாசுக்குப் போறேன். வேற என்னென்ன எக்ஸாம் எழுதணுமோ எல்லாத்துக்கும் படிக்கறேன். உங்க ஃப்ரெண்டு கிட்ட சொல்லி, எனக்கு ஒரு ரெகமெண்டேஷன் லெட்டர் மட்டும் வாங்கிடுங்க, ப்ளீஸ். எனக்கு அமெரிக்காங்கறது கனவு, லட்சியம். என் முடிவு அதுதான்ப்பா."
சமையலறை வாசலில் நின்றிருந்த அன்னை கீதாவும் அனைத்தையும் கேட்டுக்கொண்டார். கணவனைத் திரும்பிப் பார்த்துக் கண்களைக் கேள்வியாக உயர்த்தினார்.
அவர் மனைவியையும் மகளையும் ஒருமுறை பார்த்துவிட்டு, "இந்த நாட்டு உப்பைத் தின்னுட்டு, வெள்ளைக்காரன்கிட்ட கைகட்டி வேலை பாக்கறதுக்கு எப்படித்தான் புத்தி போகுதோ.." என முனகிவிட்டு, சாப்பாட்டைத் தட்டை எடுத்துக்கொண்டு கைகழுவ எழுந்தார்.
செல்பவரை ஏக்கமும் ஏமாற்றமும் கலந்த பார்வையோடு பார்த்தபடி, கடைசி விள்ளல் தோசையை உண்டுவிட்டு அவளும் எழுந்தாள்.
சஞ்சனாவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், வீட்டிற்கு ஒரே மகள். அப்பாவின் செல்லம், அம்மாவின் மாமியார்!😅 கொஞ்சம் துறுதுறு, ஓரளவு படிப்பு, நிறைய வாய். முன்னெல்லாம் வகுப்பில் மூன்று ரேங்க்கில் ஒன்றாகவேனும் வந்துவிடுவாள், இப்போது கையில் மொபைல்போன் வந்துவிட்டதால் அதெல்லாம் நின்றுபோய்விட்டது.
டெம்பிள் ரன், கேண்டி கிரஷ் என்று திரையில் தெரியும் வண்ணமயமான கார்ட்டூன்களில் மூளையை அடகு வைத்திருந்தாலும், தேவைப்படும் நேரத்தில் அதைக்கொண்டு சில நல்ல யோசனைகளும் செய்வாள் நம்மவள். கைக்குக் கைபேசி வந்ததுமுதல் அவள் மனது வேறொரு மையலும் கொண்டிருந்தது. அதுதான் அமெரிக்கா. இக்கால இளைஞர்களுக்கு அமெரிக்க மோகம் வருவது இயல்புதானே? ஆனால் சஞ்சனாவினுடையது மோகம் போலத் தெரியவில்லை. அல்லும் பகலும் கனாக்கள் கண்டு, தனது எதிர்காலத்தையே அதனிடம் ஒப்படைக்கத் தயாராக இருக்குமளவு ஏக்கமும், ஆவலும் கொண்ட மையல் அது.
வானை முட்டும் கட்டிடங்களின் சித்திரங்களைக் கண்டு, அதிலொன்றில் தானும் நுழைந்துவிடக் கனவு கண்டுகொண்டிருந்தாள் அவள்.
பி.காம். இரண்டாமாண்டு இப்போது. நேற்றுதான் தேர்வுகள் அனைத்தையும் எழுதித் தள்ளிவிட்டு, அக்கடாவென சாய்ந்திருந்தாள். பதினைந்து நாட்களாக விரதம் போலக் கைபேசியை நோண்டாமல் படித்தவள், இன்று அதற்கெல்லாம் சேர்த்து கை தேயும் வரை அக்கண்ணாடித் திரையைத் தேய்த்துக்கொண்டிருந்தாள்.
தோசைக்காகப் பாதியில் விட்டுவந்த வீடியோ கேமை, மீண்டும் தொடர்வதற்காக அவள் படுக்கையறைக்குச் செல்ல, அவளது அம்மாவும் பின்தொடர்ந்து வந்தார்.
"ஏய், சாப்பிட்டவுடனே படுக்காதன்னு எத்தனை தடவ சொல்றது உனக்கு? வா, வந்து துவைச்ச துணியையெல்லாம் மடிச்சு வை. காலேஜுக்கெல்லாம் ஏன்தான் லீவு விடறாங்களோ!? வீட்டுல இருந்துமட்டும் என்னத்த கிழிக்க போறீங்க நீங்கள்லாம்?"
"ஆஹான், நீங்கள்லாம் டெய்லி வீட்டுல என்னத்த கிழிக்கறீங்களோ, அதையேதான்!!"
முகம் பத்திரகாளியாக மாறி அவளது காதைப் பிடித்துச் திருக கீதா முனைய, மின்னல் வேகத்தில் நழுவி அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள் அவள்.
"ஏய்! வெளிய வரலாமலா போயிடுவ! நாலு வேளை பட்டினிதான் உனக்கு! பருக்கை சோறு கெடையாது பாத்துக்க!! உனக்கெல்லாம் பசியில காதடைச்சுப் போனாத்தான் பெரியவங்க சொல்பேச்சு ஏறும்!!"
"அடைச்ச காதுல எது ஏறுனா என்ன, ஏறாட்டி எனக்கென்ன? ரொம்ப ஃபீல் பண்ணாத தாயே, அடுத்த வருஷம் இந்நேரம், அமெரிக்காவுல இருப்பா உன் பொண்ணு! முடிஞ்சா அங்க வந்து இப்டி குழாயடி சண்டை நடத்து, பாக்கலாம்!!"
கதவின் பின்னாலிருந்து பதில் வர, "ஆமா.. காத்துலயே கனவுக் கோட்டை கட்டுடீ! உன்னை எவன் தலையில நான் கட்டிவைக்கறேன்னு பாரு!!" என சத்தமாகவே கறுவினார் கீதா.
வீட்டில் சதா நடக்கும் சண்டைதான் என்பதால் சாரதி தன்பாட்டில் முற்றத்தில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கண்ணயர்ந்தார். கீதா இருபுறமும் பார்த்து கதவையும் கட்டிலையும் முறைத்துவிட்டு, சிறிதுநேரம் 'திருமதி செல்வம்' பார்த்தார் தொலைக்காட்சியில். நேரமானதும் கூடத்தில் பாய்விரித்துத் தனது இடத்தில் படுத்துக்கொண்டார் விளக்கை அமர்த்திவிட்டு.
எப்போதும் சாரம் குறையாத குருவிக்கூடாக அவர்களது குடும்பம் இருக்க, சஞ்சனாவின் கனவுகள் நனவானால் அந்தக் கூடு கலைந்துவிடுமெனத் தெரியாத மூவருமே, அன்றிரவு அமெரிக்காவைப் பற்றி நினைத்துக்கொண்டுதான் உறங்கிப்போயினர்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top