9 குறும்புகாரன்
9
வசீகரன், அவனுடைய அறையினுள் நுழைந்த பொழுது, ஐஸ்வர்யா, அவளுடைய கல்லூரி சான்றிதழ்களை எடுத்து மேஜை மீது வைத்துக் கொண்டிருந்தாள். அதை மறுநாள் அலுவலகம் எடுத்து செல்ல தீர்மானித்திருந்தாள். அதை தன்னுடைய கைப்பையில் எடுத்து வைத்துவிட்டு, கட்டிலுக்கு சென்று படுத்துக் கொண்டாள். வசீகரனும் கட்டிலின் அடுத்த பாகத்தை ஆக்கிரமித்தான்.
"நீ ஆஃபீசுக்கு வருவேன்னு எனக்கு தெரியும்" என்றான்.
"என்னை பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாது" என்றாள் சலனமற்ற முகத்துடன்.
"என்னை பத்தி உனக்கு கூடத் தான் எதுவும் தெரியாது"
"ரொம்ப சீக்கிரமே தெரிஞ்சிக்குவேன்"
"பரவாயில்லையே, புருஷனை பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்க போலிருக்கு." என்றான் கிண்டலாக.
அதே கிண்டலுடன்,
"ஆமாம்... ரொம்ப ஆர்வமா இருக்கேன்" என்றாள் ஐஸ்வர்யா.
அவனுக்கு எதிர்புறமாக திரும்பி படுத்துக்கொண்டாள், மேலும் அவனுடன் பேச்சை வளர்க்க விரும்பாமல். ஆனால் அவளை அப்படியெல்லாம் விட்டு விடுவானா என்ன வசீகரன்?
"நீ எப்பவுமே இப்படித் தான் தூங்குவியா?" என்றான்.
"எப்படி?" என்றாள் அவனை நோக்கி திரும்பிய வண்ணம்.
"யாரையாவது கட்டி பிடிச்சிக்கிட்டு.... காலைத் தூக்கி மேலே போட்டுகிட்டு... இப்படித் தான் தூங்குவியா? சரி, உங்க அம்மா வீட்ல யாரை கட்டி புடிச்சிகிட்டு தூங்குவ? அந்த பிங்க் கலர் டெடிபியரயா? போட்டோவுல நீ அதை கட்டிப்பிடிச்சிகிட்டு இருந்ததை நான் பார்த்தேன். நல்ல காலம், உனக்கு இப்படியாவது ஒரு பழக்கம் இருந்தது. வரப்போற என்னோட அடுத்த ஆறு மாசத்துல, உன்னோட அந்த பழக்கம் தான் என்ன சந்தோஷமாக வைக்க போகுது" என்றான் தன்னைத்தானே அணைத்துக் கொண்டு.
ஐஸ்வர்யாவிற்கு தர்மசங்கடமாகி போனது. அப்படியென்றால், முந்தைய தினம் அவள் தான் அவனை கட்டிப்பிடித்தாளா? நகம் கடித்தபடி பதட்டத்துடன், மறுபடியும் அவனுக்கு எதிர் திசையில் திரும்பி படுத்துக் கொண்டாள். ஏனென்றால், அவளுக்கு அப்படி ஒரு பழக்கம் இருந்தது உண்மை தான்.
ஆனால், அன்று கட்டியணைத்தது அவள் அல்ல. அவன் கூறியது அப்பட்டமான பொய் தான். ஏனென்றால், அப்போது தான், அடுத்த நாள் காலை அவள் கண் விழிக்கும் பொழுது, அவன் அவளை அணைத்துக் கொண்டிருப்பதை பார்த்து, தான் தான் அவனை அணைத்ததாக நினைத்துக் கொள்வாள் என்று அவன் அப்படி கூறினான். ஏனென்றால், இனி வரப்போகும் நாட்களில் அவன் செய்யப் போவது அதைத் தானே!
அதைக் கேட்ட பிறகு ஐஸ்வர்யாவிற்கு தூக்கமே வரவில்லை. வசீகரனும் வேண்டுமென்றே விழித்துக் கொண்டிருந்தான். ஐஸ்வர்யாவை பார்க்கும் போது அவனுக்கு சிரிப்பாக வந்தது. அவள் தூங்காமலிருக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்க, வசீகரனோ சிரிப்பை அடக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான். அவள் தூங்காமல் இருக்க, செய்துகொண்டிருந்த வேலைகளை எல்லாம் பார்த்த போது அவனுக்கு, *டாம் அண்ட் ஜெர்ரி* கார்ட்டூன் நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே இவள் ஒரு அப்பாவி பெண் தான் என்பதில் சந்தேகம் இல்லை.
கடைசியில், போனால் போகிறது என்று கண்ணை மூடிக்கொண்டான் வசீகரன். நடுராத்திரிக்கு பிறகு ஐஸ்வர்யாவாலும் தன்னுடைய தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளும் தூங்கிப் போனாள். அவள் தூங்கிய பிறகு, மெல்ல கண்விழித்த வசீகரன், சிரித்தபடி அவளை தன்புறமாக இழுத்து, அவள் கண்ணத்தில் ஒரு முத்தமிட்டு, அவளை அணைத்துக் கொண்டு உறங்கிப் போனான்.
மறுநாள் காலை
வசீகரன் தான் முதலில் கண்விழித்தான். அவன் ஐஸ்வர்யாவின் காலை மெல்ல இழுத்து தன் மீது போட்டுக்கொண்டு, அவள் கையை எடுத்து தன்னுடைய இடுப்பின் மீது வைத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டான், என்னவோ தான் ஒன்றுமே செய்யாதவன் போல. காலம் கடந்து தூங்கியதால், சிறிது தாமதமாக தான் கண் விழித்தாள் ஐஸ்வர்யா. அவள் கண்விழித்த போது, தான் வசீகரனுக்கு மிக அருகில் படுத்திருப்பதை பார்த்தாள். இல்லை இல்லை கிட்டத்தட்ட அவன் மீதே படுத்து கொண்டிருப்பதை பார்த்தாள். அவள் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டதை உணர்ந்த வசீகரனும், கண்ணைத் திறந்து அவளைப் பார்த்து சிரித்தான். சட்டென்று அவனிடமிருந்து விலகி கட்டிலில் அமர்ந்தாள் ஐஸ்வர்யா.
"ஐ அம் சாரி" என்றாள்.
"எதுக்கு சாரி? " என்றான் வசீகரன்.
"நான் உங்க தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேன்னு நினைக்கிறேன்" என்றாள்.
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே. நான் செமயா தூங்கினேன். வைஃப் கூட தூங்குறதை போய், யாராவது டிஸ்டர்பன்ஸ்னு நினைப்பாங்களா? அதுவும் வைஃப் கட்டிப்பிடிச்சிகிட்டு தூங்கும் போது அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்ல தெரியுமா...?" என்றான் கண்ணடித்தபடி.
அவனுக்கு பதில் ஏதும் கூறாமல் தலையை குனிந்து கொண்டாள் ஐஸ்வர்யா. அதன் பிறகு அங்கு இருக்க மனமின்றி, வேகவேகமாக தனது பணிகளைத் துவங்கினாள். இன்று அவள் அலுவலகம் செல்ல போகிறாள். குறைந்த நேரத்தை எடுத்துக் கொண்டு குளித்து முடித்து வெளியே வந்தவள், வசீகரனை பார்த்து ஆச்சரியமடைந்தாள். அவனும் குளித்துவிட்டு தயாராக இருந்தான். அவன் விருந்தினர் அறையில் குளித்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டாள். வசீகரன் தன் கையை கன்னத்தில் வைத்துக் கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான், வழக்கம் போல. அவனுடைய அந்த பார்வை அவளை மிகவும் சங்கடப் படுத்திவிட்டது. அடக்கமாட்டாமல் கேட்டே விட்டாள்.
"எதுக்காக என்னையே பார்த்துகிட்டு இருக்கீங்க?" என்றாள்.
"நான் உன்னையே பார்த்துகிட்டு இருக்கேன்னு யார் சொன்னது?" என்றான்.
"எனக்கு யார் சொல்லணும்? நான் தான் பாக்குறனே" என்றாள்.
"அப்ப என்னுடைய கேள்விக்கு நீ பதில் சொல்லு. நீ ஏன் என்னையே பார்த்துகிட்டிருக்க? நீ என்னை பாக்குறதால தானே நான் உன்னை பாக்கறது உனக்கு தெரியுது?" என்றான்.
"நான் ஒன்னும் உங்கள மாதிரி வேணும்னு செய்யலை" என்றாள்.
"அத ஒத்துக்குறேன். நான் செய்ற மாதிரி உன்னால் செய்ய முடியாது. ஏன்னா, நான் என் மனைவியை காதலிக்கிறேன்" என்றான்.
ஒரு நிமிடம் வாயடைத்து நின்றவள், தன்னை சுதாகரித்துக் கொண்டாள்.
"நம்ம விவாகரத்து செய்ய போறோம்" என்றாள்.
"நம்ம இல்ல... அத வேணும்னு கேட்டது நீ தான். அதுவும் கூட, நீ எனக்கு எதிரா ஆதாரங்களை கொடுக்குற வரைக்கும் நிச்சயம் இல்ல. அதனால நான் உன்னை காதலிக்கிறதை நீ தடுக்க முடியாது"
"ஆனா, நான் தான் சொல்லிட்டேனே... எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு... உங்களை என் புருஷனா ஏத்துக்க மாட்டேன்னு"
"அது இப்ப விஷயமில்ல. ஏன்னா, நான் ஏற்கனவே உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டேன்... ரொம்ப ஆழமா..."
"உங்களை யார் என்னை காதலிக்க சொன்னது?"
"பர்மிஷன் வாங்கி வந்தா அதுக்கு பேரு காதல் இல்ல. அது தானாவே நடக்கிறது. பிளான் பண்ணி... ப்ரோக்ராம் பண்ணியெல்லாம் நடக்காது"
"என்னை விட்டு விலகினா தான் நீங்க சந்தோஷமா இருப்பீங்க. அத முதல்ல புரிஞ்சுக்கங்க"
"என்னோட சந்தோஷத்தோட அளவுகளை நீ தீர்மானிக்க முடியாது. அது ஆம்பளைங்க சமாச்சாரம். உன்னால புரிஞ்சுக்க முடியாது. இந்த உலகத்தில் எந்த பெண்ணாலயும் ஒரு ஆம்பள மனசை புரிஞ்சுக்கவே முடியாது"
என்று அவள் ஆண்களை பற்றி கூறிய அதே வார்த்தைகளை மாற்றி கூறினான் வசீகரன்.
"நீங்க ஓவர் கான்ஃபிடன்ஸ்ல பேசுறீங்க"
"என் பக்கம் உண்மை இருக்கும் போது, நான் எதுக்கு பயப்படணும்?"
"ஒருவேளை உங்களுக்கு அது மனசு கஷ்டத்தை கொடுக்கலாம்"
"நீ விவாகரத்து வேணும்னு கேட்டது தான் என்னை கஷ்டப் படுத்தக் கூடிய விஷயத்துல உச்சகட்டமானது. அதுக்கு மேல என்னை வேற எதுவும் கஷ்டப்படுத்த முடியாது" என்றான்.
அப்போது வசீகரனின் கைபேசி சத்தமிட தொடங்கியது. அவன் அதை எடுத்து பார்த்தபோது, அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவளிடம் தனது ஃபோனை காட்டி,
"என் மாமியார் கூப்பிடுறாங்க" என்றான்.
உன்னுடைய அம்மா என்று சொல்லாமல் என் மாமியார் என்று அழுத்தமாக கூறினான். ஐஸ்வர்யாவின் முகம் மலர்ந்தது. அவள் தனது கையை உயர்த்தி அவனிடமிருந்து ஃபோனை வாங்க முற்பட்டாள்.
"கொடுங்க" என்றாள்.
"எதுக்கு?" என்று எதிர் கேள்வி கேட்டான் வசீகரன்.
"என்ன கேக்கிறீங்க நீங்க?" என்றாள் முகத்தை சுருக்கி.
"என்னை புருஷனா கூட நினைக்காத ஒருத்திக்கு, நான் ஏன் என் ஃபோனை குடுக்கணும்?" என்றான்.
ஒரு சில நொடிகள் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் ஃபோனையே பார்த்துக்கொண்டு நின்றவள், தன்னை சமாளித்துக் கொண்டு,
"ஆனா, நீங்க என்னை கதலிக்கிறீங்க தானே?" என்றாள்.
"உனக்கு அதைப் பத்தி ஏதாவது கவலை இருக்கா?" என்றான்.
அதற்குள் அவனுடைய ஃபோன் சத்தமிடுதலை நிறுத்தியது. தரையை தன் காலால் உதைத்து விட்டு, அவள் அங்கிருந்து செல்ல எத்தனித்த போது, மீண்டும் அவனுடைய ஃபோன் அடிக்கத் துவங்கியது. அவனை கெஞ்சலாக பார்த்தாள் ஐஸ்வர்யா.
"சரி. என் ஃபோனை உனக்கு கொடுக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு முத்தம் கொடு" என்றான்.
"என்னது? "என்றாள் அதிர்ச்சியுடன்.
தனது கன்னத்தை ஆள்காட்டி விரலால் தொட்டு காட்டி,
"கிவ் அண்ட் டேக் பாலிசி" என்றான்.
"முடியாது" என்று அவள் கூற,
"உன் இஷ்டம்" என்றான் புருவங்களை உயர்த்தி.
"இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்ல" என்றாள்.
"அப்படியா? வேணும்னா, என் மாமியார்கிட்ட நியாயத்தை கேட்கலாமா?" என்று கைபேசி திரையில் ஒளிர்ந்த பச்சை நிறத்தை அழுத்தி இழுக்க போனவனை தடுத்து நிறுத்தினாள் ஐஸ்வர்யா.
"வேண்டாம், ப்ளீஸ்"
பளிச்சென்று அவன் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டு, அவன் கையில் இருந்த ஃபோனை பிடுங்கிக் கொண்டு, பலகணி நோக்கி சென்றாள் ஐஸ்வர்யா. ஒரு வெற்றிப் புன்னகையுடன் தன் கன்னத்தை தொட்டு தடவினான் வசீகரன்.
"எப்படி இருக்கீங்கம்மா?" என்றாள் ஐஸ்வர்யா.
"நீ சந்தோஷமா இருக்கும் போது, நான் சந்தோஷமா தான்டா இருப்பேன்" என்றார் மீனாட்சி.
"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா" என்றாள் ஐஸ்வர்யா.
"எனக்கு தெரியும். உன் புருஷன் உன்னை நல்லா பார்த்துகுவேன்னு எனக்கு வாக்கு கொடுத்திருக்காரு. அதே நேரத்தில் உன் மாமனாரும், மாமியாரும் கூட ரொம்ப நல்லவங்க. அதனால நீ சந்தோஷமா தான் இருப்ப. அரவிந்தன் அண்ணன் சொன்னாரு, நீ இன்னைக்கு வேலையில சேர போறியாமே " என்றார்.
"ஆமாம்மா, அங்கிள் என்னை ஆஃபீஸ்ல சேர சொல்லி கேட்டாரு"
"கடைசியா, இண்டிபெண்டன்ட்டா வாழணும்ங்குற உன்னோட ஆசை நிறைவேற போகுது" என்றார் மீனாட்சி.
"நீங்க சொன்னது சரி தான் மா" என்றாள்.
"கடவுள் உனக்கு துணையிருப்பார். உனக்கு லேட் ஆகுது. வேலைக்கு சரியான நேரத்திற்கு போக பழகு" என்றார்.
"சரிங்கம்மா" என்று ஃபோனை துண்டித்த ஐஸ்வர்யா, வசீகரனின் குரல் கேட்டு திரும்பினாள்.
"உங்க அம்மாகிட்ட நீ சந்தோஷமா இருக்கிறதா ஏன் பொய் சொன்ன?" என்றான்.
"எங்கம்மாவ கஷ்டப்படுத்த நான் விரும்பல" என்றாள்.
"நெஜமாவா? அப்ப, ஆறு மாசம் கழிச்சு என்ன பண்ணுவ? நீ என்னை டைவர்ஸ் பண்ணிட்டு, உன் வீட்டுக்கு போகும் போது உங்கம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்களா?" என கிண்டலாக கேட்டான் வசீகரன்.
அவனுக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்றாள் ஐஸ்வர்யா. அவளுக்கு பதில் அளிக்கக் கூடாது என்றில்லை, உண்மையிலேயே அந்த கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை. அவன் சொல்வது சரி தான். மீனாட்சி நிச்சயம் வருத்தம் தான் படுவார். மீனாட்சியின் ஒரே ஆறுதல் ஐஸ்வர்யாவின் சந்தோஷம் தான் என்பது ஐஸ்வர்யாவிற்கு தெரிந்து தான் இருந்தது. அதை நினைத்த போது அவளுக்கு உடல் நடுங்கியது.
"என்னோட ஃபோன் எங்கே?" என்றான் வசீகரன்.
"டேபிள் மேல இருக்கு" என்றாள் ஐஸ்வர்யா.
"நான் என்ன டேபிளுக்கா கொடுத்தேன்? உன்கிட்ட தான கொடுத்தேன்? அப்போ அதை நீ தான் எனக்கு திருப்பிக் கொடுக்கணும்." என்றான்.
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவள், டேபிளின் மீது இருந்த அவனுடைய ஃபோனை எடுத்து, அவனிடம் நீட்டினாள். அவள் கன்னத்தில் முத்தமிட்டு, அவள் கையில் இருந்த ஃபோனை எடுத்துக் கொண்டான் வசீகரன்.
"எதுவா இருந்தாலும், திருப்பிக் கொடுத்துடுறது என்னோட பழக்கம். அன்பாக இருந்தாலும் முத்தமாக இருந்தாலும்." இயல்பாய் சிரித்தவனை நம்பமுடியாமல் பார்த்தாள் ஐஸ்வர்யா.
"இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நீ இந்த புடவையில ரொம்ப அழகா இருக்க" என்று கண்ணடித்துவிட்டு அங்கிருந்து சென்றான் வசீகரன்.
கையை மடக்கிக் கொண்டு பல்லை கடித்தாள் ஐஸ்வர்யா. அவனுடைய தொடர்ச்சியான தாக்குதல்களை சமாளிக்க அவள் திணறித்தான் போனாள். இந்த மனிதனுடன், அடுத்த ஆறு மாதங்கள் கழித்தாக வேண்டும் என்று நினைக்கும் போது, அவளுக்கு உதறல் எடுத்தது. அவள் கட்டியிருந்த புடவையை வேண்டுமென்றே மாற்றி கொண்டு வந்தாள், வசீகரனின் உற்சாகத்தை குறைப்பதற்காகவே. அவள் நீண்ட கூடத்தை கடக்க முற்பட்ட போது, தூணின் மறைவில் இருந்து யாரோ அவளை இழுக்க, அவள் கத்த முற்பட்ட போது, வசீகரன் அவள் வாயை பொத்தினான்.
"அம்மா பாத்துகிட்டு இருக்காங்க" என அவன் கூறியதை கேட்டு அமைதியானாள் ஐஸ்வர்யா.
"நல்ல வேலை, நீ உன் புடவையை மாத்திட்ட. உன்னை புடவையில் ஹாட்டா பார்த்த உடனே எனக்கு டென்ஷன் ஆயிடுச்சு. நான் உன்னை விட ரொம்ப பொஸசிவ். நான் யார் கூடயாவது இருந்தேன்னு கேட்டதுக்கு அப்புறமா தான் நீ கொல்லுவ. ஆனா நான், யவனாவது உன்னை பார்த்தாலே அவனை கொன்னுடுவேன். இப்போ தான் எனக்கு நிம்மதியாயிருக்கு."
என்றவன், அவளது நெற்றியின் மேல் தன் நெற்றியை செல்லமாக மூட்டிவிட்டு அங்கிருந்து சென்றான், குழம்பிய மனநிலையில் ஐஸ்வர்யாவை விட்டு.
பொஸஸிவா? நான் அவர் மேல பொஸஸிவா இருக்கிறதா அவர் நெனச்சுக்கிட்டு இருக்காரா? வேற யாரும் என்னை பார்க்க கூடாதுன்னு எவ்வளவு தந்திரமா என்ன புடவையை மாத்த வச்சுட்டார். அவள் மறுபடியும் புடவைக்கு மாற நினைத்த போது, இல்லை... மறுபடியும் அவர் , உண்மையிலேயே நீ புடவையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அப்படி சொன்னேன் என்று, மறுபடியும் மாற்றி போட்டு பேசினால் என்ன செய்வது? என்று யோசித்தாள். கடவுளே என்னுடைய வாழ்க்கையை யார்கிட்ட கொண்டு வந்து நீ சேர்த்திருக்க? இப்படிப்பட்ட ஒரு ஆள் கூடவா? என்று கடவுளை நொந்து கொண்டாள் ஐஸ்வர்யா.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top