5 ஐஸ்வர்யாவின் மறுபக்கம்
5 ஐஸ்வர்யாவின் மறுபக்கம்
*மறுநாள் காலை*
தூக்கம் கலைந்த ஐஸ்வர்யா, சோம்பல் முறித்தாள். அப்போது அவளை யாரோ இறுக பற்றியிருப்பது தெரிந்தது. திடுக்கிட்டு கண் திறந்தவள், தான் தன் கணவனின் அனைப்பில் இருப்பதை பார்த்தாள். அவளைப் பார்த்தபடி, ஒரு கையால் தனது தலையை முட்டுக் கொடுத்துக் கொண்டு, மற்றொரு கரத்தால் அவளின் இடையை வளைத்து பிடித்திருந்தான் வசீகரன். அவனுடைய பார்வையில் குறும்பு நிறைந்திருந்தது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவள் முயற்சித்த போதும் அவனின் அணைப்பில் இருந்த அவளால் வெளிவர முடியவில்லை.
"குட் மார்னிங்" என்றான் வசீகரன்.
"என்னை விடுங்க" என்றாள் ஐஸ்வர்யா.
"விடுறதுக்காக உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கல" என்றான் வசிகரன்.
"ப்ளீஸ்" என்று கெஞ்சினாள் ஐஸ்வர்யா.
"ஏன்? நீ என்னோட வைஃப் தானே...?"
"நீங்க என்னை ரொம்ப சங்கட படுத்துறீங்க" என்றாள்.
"நீயும் தான். ஆனா, எனக்கு நேர் மாறா. நான் உன் கூடவே இருக்கணும்னு நினைக்கிறேன். நீ என்கிட்ட இருந்து ஓடிகிட்டே இருக்க. உண்மையில இது ரொம்ப சங்கடமா இருக்கு" அவன் அமைதியாக சொன்னான்.
"எனக்கு கொஞ்சம் டைம் வேணும்"
"சரி. அப்போ, அதை என்னை பாத்து சொல்லு"
"என்னை விடுங்க"
"முடியாது. நீ என்னை பாத்து சொல்ற வரைக்கும் உன்னை விடமாட்டேன்"
அவனை நோக்கி மெதுவாக அவள் முகத்தை திருப்பி,
"விடுங்க" என்றாள்.
"சிரிச்சிக்கிட்டே சொல்லணும்" என்றான்.
நீண்ட பெருமூச்சை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள்,
"என்னை விடுங்க" என்றாள் ஒரு செயற்கையான புன்னகையுடன்.
"நீ சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்க... அது செயற்கையா இருந்தாலும்"
சொல்லிவிட்டு அவன் கைகளை விடுவிக்க, குளியலறையை நோக்கி ஓடினாள் ஐஸ்வர்யா. அவள் குளியலறையில் இருந்து வெளிவந்த பின், வசீகரன் அவள் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து சென்றான். அது அவளை மிகவும் எரிச்சலூட்டியது.
"என்ன?" என்றாள் அவனைப் பார்த்து.
"ஒன்னும் இல்லையே" என்று தனது தோள்களை சர்வசாதாரணமாக குலுக்கினான், உண்மையிலேயே அவன் ஏதும் செய்யாததைப் போல.
"எதுக்காக என்னை ஃபாலோ பண்றீங்க?"
"நான் என்னோட ரூம்ல சுத்திகிட்டு இருக்கேன். சிம்பிள்" என்றான்.
"நீங்க என்னை டிஸ்டர்ப் பண்றீங்க"
"நான் உன்கிட்ட ஏதாவது கேட்டனா? உன்கிட்ட பேசினேனா? உன்னை தொட்டனா? இல்ல தானே? அப்புறம் எதுக்கு நீ ரொம்ப ஃபீல் பண்ற?"
வாயடைத்துப் போனாள் ஐஸ்வர்யா. என்ன கேள்வி இதெல்லாம்? அவள் அங்கிருந்து ஓடிச் செல்ல, அவளை மீண்டும் பின்தொடர்ந்தான் வசிகரன். சமையலறை வரை சென்றவன், அங்கு ரத்னாவை பார்த்ததும் பிரேக் அடித்தது போல நின்றான். அவரை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு, அங்கிருந்து செல்லும்படி சமிக்ஞை செய்தான். முதலில் அவனைப் பார்த்து முறைத்த ரத்னா, அவனுடைய கெஞ்சலான முகத்தை பார்த்து மனம் இறங்கினார்.
"நான் அங்கிளுக்கு காஃபி கொடுத்துடு வரேன்" என்று அங்கிருந்து சென்றார் ரத்னா.
சரி என்று ஐஸ்வர்யா தலையசைக்க, வசீகரனை நோக்கி தனது ஆள்காட்டி விரலை எச்சரிக்கையை வெளிப்படுத்துவது போல அசைத்துக் காட்டி விட்டு சென்றார் ரத்னா. ஆனால் வசீகரனோ, அவரை பார்த்து கண்ணடித்து குறும்பாக சிரித்தான்.
மெதுவாக ஐஸ்வர்யாவின் பின்னால் வந்தவன், அவளை தொடாமல், ஆனால் தொடுவது போல மிக நெருக்கமாக நின்றான். அவன் தன் அருகில் நிற்பதை உணர்ந்த ஐஸ்வர்யா, அசையாமல் சிலை போல் நின்றாள். மெதுவாக அவன், அவள் காதில் ஊத, கண்ணை இறுக மூடிக்கொண்டாள் ஐஸ்வர்யா. அவளின் நெற்றியில் விழுந்த குழல் கற்றையை மெதுவாக ஒதுக்கியவன், எதிர்பாராத வண்ணமாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவள் திடுக்கிட்டு திரும்ப,
"உன்னை என் பக்கம் திரும்ப வைக்கிறதுக்கு நான் என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கு" என்றான்.
"யாராவது வந்துடப் போறாங்க" என்று அவன் கைகளுக்குள் தவித்தாள் ஐஸ்வர்யா.
"ஓ அப்படியா? சரி வா நம்ம ரூமுக்கு போகலாம்" என்று அவளை இழுத்தபடி நடக்க தொடங்கினான் வசீகரன்.
"ப்ளீஸ், என்னை விடுங்க"
அவள் பக்கமாக திரும்பிய வசீகரன்,
"திரும்பத் திரும்ப அதையே சொல்லாதே. நான் உன்னை விட மாட்டேன். எப்பவுமே..." என்ற அவனது தொணியில் ஆத்மார்த்தமான ஆழம் தெரிந்தது.
அவனைப் பார்த்தபடி மென்று முழுங்கினாள் ஐஸ்வர்யா. அப்பொழுது அவர்கள், ரத்னா வேலைக்கார ராமுவை கூப்பிடுவது கேட்டது. ரத்னா, வேண்டுமென்றே அவர்கள் காதில் விழும்படி அவள் வரவை உறுதிப்படுத்தினார். இறுகப் பற்றியிருந்த அவளது கரத்தில் முத்தமிட்டு அங்கிருந்து சென்றான் வசீகரன். தனது கையை இழுத்துக் கொண்டவள், புடவை தலைப்பில் துடைத்துக்கொண்டாள். அவளைத் திரும்பிப் பார்த்த வசீகரனுக்கு அது சிரிப்பை வரவழைத்தது.
சமையலறையில் நுழைந்ததில் இருந்தே ஐஸ்வர்யாவை கவனித்துக் கொண்டு தான் இருந்தார் ரத்னா. அவருக்கு தெரியும் வசீகரனின் குறும்பு சேட்டைகளுக்கு முன், இந்தப் பெண் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறாள் என்று. ஐஸ்வர்யாவிடம் அது பற்றி பேச முற்பட்டார்.
"ஐஸ்வர்யா" என மெதுவாக அவள் பெயர் சொல்லி அழைத்தார்.
"சொல்லுங்க ஆன்ட்டி"
"நம்ம பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு, இன்னொரு குடும்பத்துக்குப் புதுசா வரும் போது, ஒரு பொண்ணோட மன நிலை எப்படி இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியும். எல்லாமே புதுசா இருக்கும். அது உண்மை தான். நம்ம அந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நம்மள மாத்தி தான் ஆகணும். எந்த ஒரு நேரத்திலும் மனம் தளராம தைரியமா இரு. நீ பயப்பட வேண்டிய அவசியமில்ல. உன்னை, வசி ரொம்ப காதலிக்கிறான். நீ உன்னுடைய மனசுல இருக்குற, ஆசாபாசங்களையும் உன்னோட விருப்பு, வெறுப்புகளையும், அவன்கிட்ட சரியான விதத்துல பகிர்ந்துகிட்டா, அவன் உன்னை நிச்சயம் புரிஞ்சிக்குவான். அவன்கிட்டயிருந்து ஓடி ஒளியரதுக்கு பதிலா, அவன்கிட்ட மனசுவிட்டு பேசு. எல்லாம் சரியாயிடும். நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறேன்" என்றார்.
அவருடைய பேச்சில் உண்மையிலேயே மகிழ்ந்து போனாள் ஐஸ்வர்யா. அவளுக்கு ஏதோ பெரிய பாரம் இறங்கியது போல் தோன்றியது. ரத்னாவின் எளிமையான அணுகுமுறை, அவளுக்கு மிகவும் பிடித்து போனது. எத்தனை பெண்கள் இப்படிப்பட்ட மாமியார் கிடைக்க கொடுத்து வைத்து இருக்கிறார்கள்? தன் மருமகள், தன் மகனுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மாமியார்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அப்படிப்பட்ட ஒரு மாமியார் தனக்கு கிடைத்ததை நினைத்து அவள் சந்தோஷப்பட்டாள்.
ஐஸ்வர்யாவின் முகத்தில் ஏற்பட்ட அமைதி, ரத்னாவின் மனதிற்கும் அமைதியை தந்தது. அவருக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவர் ஐஸ்வர்யாவிற்கு காட்டிய பாதை, அவளை ரத்னா நினைத்ததற்கு நேர் மாறான பாதையில் அழைத்துச் செல்ல போவதை ரத்னா அறிந்திருக்கவில்லை. ரத்னா காட்டிய வழி வகைகளை, அவள் வசீகரனுடன் சேர்ந்திருக்க பயன்படுத்தப் போவதில்லை. மாறாக அவனிடமிருந்து பிரிந்து செல்வே பயன்படுத்த இருக்கிறாள் என்பதை, ரத்னா அறிந்திருக்க வாய்ப்பில்லை தானே?
ஐஸ்வர்யா, வசீகரனுடன் பேசுவதற்காக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். எதுவும் கைமீறி போவதற்கு முன் அவள் பேசித் தான் ஆகவேண்டும்.
ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்வதில் விருப்பமே இல்லாதவளாக இருந்தாள். அவள் ஆண்களையும் திருமணத்தையும் வெறுத்தாள். அதற்கு காரணம் அவளுடைய அப்பாவும், அண்ணனும் தான். அவர்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கு உண்மையாக இல்லாமல் இருந்தது தான் ஐஸ்வர்யாவின் பெரும் மன மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது. அவர்கள் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, மீனாட்சியையும் நிலாவையும் கஷ்டப்படுத்தி கொண்டிருந்ததை ஐஸ்வர்யாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
தன்னுடைய அம்மா தன்னைத்தானே நொந்து கொள்வதும், கரித்துக் கொட்டிக் கொள்வதும், தன்னுடைய விதியை நொந்து கொள்வதும், கண்ணீருடனும் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்து வளர்ந்தாள் ஐஸ்வர்யா. அவள் கல்லூரி பருவத்தை அடைந்த போது, தனது அப்பாவுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள். தன்னுடைய அண்ணனும், அப்பாவின் வழியை பின்பற்றிய போது, அவள் முழுவதுமாக அவள் அப்பாவை வெறுத்து ஒதுக்கினாள். கதிரவனுக்கும் நிலாவுக்கும் திருமணம் நிச்சயமான போது, அவள் நேரடியாக நிலாவின் வீட்டிற்கு சென்று, தனது அண்ணனை பற்றி உண்மைகளை எடுத்துக் கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றாள். ஆனால், நிலாவின் பெற்றோர்களை பணத்தைக் கொடுத்து இளவரசன் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டார். ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த நிலா, வேறு வழியின்றி கதிரவனை மணந்து கொண்டாள். அது ஐஸ்வர்யாவின் கோபத்தை மேலும் அதிகமாக்கியது. அவளுக்கு ஆண்களின் மீது இருந்த நம்பிக்கை அற்றுப் போனது. ஆண்கள் மீதான அவளின் வெறுப்பு பன்மடங்கு அதிகரித்தது. தான் என்ற அகங்காரமும், தலைகணமும் கொண்ட ஆண்களை அவள் அறவே வெறுத்து ஒதுக்கினாள், முக்கியமாக, பார்ப்பதற்கு அழகாக இருந்த ஆண்களை...! சுமாரான தோற்றம் கொண்ட தனது தந்தையும், அண்ணனும் இவ்வாறெல்லாம் ஆட்டம் ஆடினால், அழகான ஆண்களின் ஆட்டத்திற்கு கேட்கவா வேண்டும்? என்பது அவளின் கருத்து.
அவள் சினிமா பார்ப்பதை கூட தவிர்த்துவிட்டாள். அவளுடைய தோழிகள், கதாநாயகர்களை பார்த்து வழிவது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கிட்டத்தட்ட அவள் சராசரி பெண்களை போல இல்லாமல், முழுவதுமாக மாறி போனாள். கைபேசி உபயோகிப்பதை கூட அவள் நிறுத்தி விட்டாள். ஏனெனில் அவளுடைய தோழிகளின் எல்லாப் பேச்சுகளும் ஆண்களிடமே வந்து முடிந்தன.
அரவிந்தனும், இளவரசனும், அவளுக்கும் வசீகரனுக்கும் திருமணம் பேசி நிச்சயித்தனர். ஐஸ்வர்யாவிற்கு ஆண்களின் மீது இருந்த வெறுப்பை இளவரசன் நன்றாக அறிந்திருந்தார். வசீகரனின் வசீகரமான தோற்றத்தால் அவள் நிச்சயம் ஈர்க்கப்படுவாள் என்று அவர் தவறாக கணக்குப் போட்டார். ஆனால், அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை, அவனுடைய வசீகரம் தான் அவள் வசீகரனை வெறுக்க முதல் காரணம் என்பது. ஏனெனில், அவள் தன் கண்களாலேயே நேரடியாக கண்டாள். அவளுடைய கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு வசீகரன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தான். அப்போது அவள் கல்லூரியில் பயின்ற சில மாணவிகள் அவனை தொடுவதற்காக *பெட்டு* கட்டி தொடமுயன்றார்கள். ஆனால் அப்போது, அவன் தனது தந்தையின் நண்பரின் மகன் என்பது ஐஸ்வர்யாவிற்கு தெரியாது. அவளுடைய திருமணத்திற்கு அவள் யாரையுமே அழைக்காத போது கூட, அவளுடன் பயின்ற மாணவிகள், தானாகவே வலிய வந்து வசீகரனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அது அவளை மேலும் வெறுப்படையச் செய்தது. ஒரு ஆணின் மனதை குலைப்பதில் இந்த பெண்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை என்பதையும் அவள் அன்று உணர்ந்தாள்.
வசீகரனை தான் திருமணம் செய்துகொள்ளப் போவதை அறிந்து கொண்ட போது, அவள் தன்னுடைய நிம்மதியை மொத்தமாக தொலைத்தாள். இளம் பெண்களின் மத்தியில், தனக்கென்று மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்த வசீகரனை திருமணம் செய்துகொள்ள அவளுக்கு சுத்தமாக விருப்பமே இல்லை.
அவள் கெஞ்சினாள், அழுதாள், ஆர்ப்பாட்டம் செய்தாள். ஆனால் இளவரசனின் மனம் இறங்கவில்லை. அவருக்கு தெரியும், எங்கு தேடினாலும் இப்படி ஒரு நல்ல குடும்பம் தனது மகளுக்கு வாய்க்காது என்பது. அதேநேரம் தன்னுடைய, மற்றும் தன் மகனுடைய திருவிளையாடல்கள் அவளுடைய மாமியார் வீட்டில் தெரிந்தால், அவளுடைய எதிர்காலம் பாதிக்க வாய்ப்பிருப்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். தனது நண்பன் தனக்கு சம்மந்தியானால், அந்த பிரச்சினை அவளுக்கு ஏற்படாது என்பதை அவர் முழு மனதுடன் நம்பினார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் முழுமையாக நம்பியது வசீகரனை. அவன் ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டால், அதை முடிக்காமல் விடமாட்டான் என்பது உலகறிந்த உண்மை.
ஒருபுறம் வசீகரனை வெறுக்க ஐஸ்வர்யாவிற்கு மிகப்பெரிய காரணம் இருந்தது. மறுபுறம், ஐஸ்வர்யாவின் மீது தனக்கிருந்த காதலை வளர்த்துக் கொண்டே இருந்தான் வசீகரன். ரத்னாவும், அரவிந்தனும் கூட எதிர்பார்த்திருக்கவில்லை, தனது மகன், தன்னுடைய மனைவி மீது இப்படி ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வான் என்று. அவன் ஒரு தனி உலகத்தையே நிர்மாணித்துக் கொண்டிருந்தான். அந்த உலகத்தில், அவனையும் ஐஸ்வர்யாவையும் தவிர வேறு யாருக்குமே இடமிருக்கவில்லை. அவன் அவளுடைய ஒவ்வொரு அசைவையும் அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்தான். ஏதோ அவன் பிறந்ததே அதை செய்வதற்காகத் தான் என்பதைப் போல.
ஆனால், அத்தனையும் உடைத்து தூள் தூளாக்குவதற்காக ஐஸ்வர்யா தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top