30 எதிர்பார்ப்பு

30 எதிர்பார்ப்பு

மாமியாரும், மருமகளும், ஒரே மனநிலையில் அதிர்ச்சியோடு நின்றார்கள், வசீகரனின் வசீகரத்தை கெடுத்து, புதர் என வளர்ந்திருந்த தாடியை பார்த்து. வாழ்க்கையில் அனைத்தையும் தொலைத்து விட்ட சன்யாசி போல, காடென வளர்ந்த தாடி, மீசையும், ஒழுங்காக வெட்டப்படாத தலைமுடியும், ஆளே உருமாறி போய் நின்றிருந்தான் வசீகரன்.

தான் அணிந்திருந்த ரேபான் கண்ணாடியை கழற்றி விட்டு, அவர்களைப் பார்த்து சிரித்தான்.

"என்ன கண்றாவி கோலம் டா இது?"

இந்தக் கோலம் ஏன் என்பது ரத்னாவிற்கு புரிந்திருந்தாலும், அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

"ரிலாக்ஸ்ம்மா"

"உன்னை இந்த பிச்சைக்கார கோலத்தில பார்த்துட்டு, எப்படிடா நான் ரிலாக்சா இருக்கிறது?"

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தான் வசீகரன்.

"பிச்சைக்கார கோலமா? நிஜமாவா?"

"இதெல்லாம் உனக்கு கிண்டலா இருக்கா?" கூறிவிட்டு, அவனுக்கு ஆலம் சுற்றாமலேயே உள்ளே சென்றார் ரத்னா. அவன் முகத்தில் கழிக்கப்பட வேண்டிய திருஷ்டி எதுவும் இருப்பதாக அவருக்கு தோன்றாததால்.

"நிஜமாவே இதெல்லாம் கிண்டல் இல்லம்மா. என்னை பெத்த அம்மாவுக்கே என்னை பாக்க பிடிக்கலைன்னா, அப்ப, வேற யாருமே என்னை பாக்க விரும்பமாட்டாங்க தானே?" என்றான் சிரித்தபடி.

அவனை அதிர்ச்சியுடன் பார்த்த ஐஸ்வர்யாவால், அவனுடைய நிஜ உருவத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவள் கண்கள் சட்டென கலங்கியது.

தன் மனதில் அவனைப் பற்றி இருக்கும் எண்ணத்தை மாற்றுவதற்காக தான் இந்த *அழுக்கு அவதாரம்* என்பது அவளுக்கு தெரியாமல் இல்லை. அது அவளுக்கு மனதை உறுத்தியது.

தன் கையில் வைத்திருந்த ஆல தட்டை வசீகரனினை மூன்று சுற்று சுற்றிவிட்டு, அவன் நெற்றியில் திலகமிட்டாள். அவளது கலங்கிய கண்களை பார்த்த வசீகரனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. குறைந்தபட்சம், அவள் மனதில் ஏதோ உணர்கிறாளே...

அவன் ஓடிச்சென்று ரத்னாவை கட்டிக்கொண்டான்.

"என் மேல கோவமா இருக்கீங்களாமா?"

"அவ ஏன் உன் மேல கோபமா இருக்கணும்?" என்று கேட்ட அரவிந்தனை திரும்பி பார்த்தான் வசீகரன்.

அவனைப் பார்த்து அரவிந்தன் சிலையாகி போனார். அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியேற தடுமாறின. அவரை நோக்கி வந்த வசீகரன், அவரை கட்டித் தழுவினான்.

"என்னால இத நம்ப முடியல."

"நம்பாம இருக்குறதுக்கு என்னப்பா இருக்கு?"

"உன்ன பாக்க, கோட்டு சூட்டு போட்ட அகோரி மாதிரி இருக்க." அவர் குரலில் வருத்தம் தெரிந்தது.

"ஐஸ்வர்யா, அவன் தாடியை ஷேவ் பண்ற வரைக்கும், அவனை கிட்ட சேக்காதே" என்று கோபமாகக் கூறினார் ரத்னா.

"அதெல்லாம் நீங்க அவளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமே இல்ல மா. அவளுக்கு நல்லா தெரியும், தனக்கு பிடிக்காததை எல்லாம் எப்படி தூரமா வைக்கணும்னு"

தன் கண்களில் ஆயிரம் அர்த்தங்களை பதித்துக்கொண்டு, கூறியவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் ஐஸ்வர்யா. அவனுடைய மனதில் என்ன இருக்கிறது என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. அவனுடைய முகம் அந்த புதர் போன்ற தாடியின் பின் மறைந்து இருந்தாலும், அவன் கண்கள் தான் ஆயிரம் வார்த்தைகள் பேசுமே. அவனுடைய கண்கள் பேசுவதை உணராமல் அவள் இருக்கவில்லை.

ஒரு மாதமாக தன்னிடம் பேசாமல் இருந்ததர்காக, ஏற்கனவே ஐஸ்வர்யா, வசீகரனின் மீது கோபமாக இருந்தாள். அது போதாதென்று, இங்கு வந்த பிறகும், அவன் அவளிடம் இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. உச்சத்தில் இருந்த அவளது கோபம், விண்ணை தொட்டது.

பாதியில் விட்டு வந்த சமையலறை வேலையை கவனிக்க அவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ரத்னாவிற்கும் அரவிந்தனுக்கும் மிகவும் வருத்தமாகிப் போனது. அவர்கள் எதிர்பார்த்திருந்தது வேறு. மிகவும் உற்சாகமாக இருந்த ஐஸ்வர்யாவை பார்த்து, அவர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார்கள். அவர்களுடைய மக்கு பிள்ளை, எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டான். அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. வசீகரனின் தோளில் பட்டென்று அறைந்தார் ரத்னா.

"என்ன காரியம் பண்ணிட்ட நீ? நீ வரப் போறேன்னு தெரிஞ்சு, ஐஸ்வர்யா எவ்வளவு சந்தோஷமா இருந்தா தெரியுமா? நீ எல்லாத்தையும் கெடுத்துட்ட. என்னால நிச்சயமா சொல்ல முடியும், நீ அவள ரொம்ப வருத்தப்பட வச்சுட்டன்னு"

"அவளை நான் சமாதானப் படுத்திக்கிறேன் மா"

"எப்படி? ( அவன் தாடியை சுட்டிக்காட்டி) இந்த புதர் காட்டை வச்சா?"

"வருத்தப்படாதீங்கம்மா. உங்க மருமகளோட மனகாட்டில் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க தான் இந்த வேஷம் போட்டுட்டு வந்தேன்"

"ஆனா அவளுக்கு இது ஒரு துளியும் பிடிக்கல. தயவுசெய்து ஷேவ் பண்ணிடுடா"

அவளது கரங்களைப் பற்றிக் கொண்டான் வசீகரன்.

"அம்மா, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க. அவளா அதை செய்ய சொல்ற வரைக்கும், நான் அதை செய்ய முடியாது"

"இதெல்லாம் சரிப்பட்டு வரும்னு எனக்கு தோனல" என்று கூறிவிட்டு, சமையல் அறை நோக்கி சென்றார்.

ஐஸ்வர்யா, அடுப்பின் மீது இருந்த பாத்திரத்தில் இருந்த எதையோ கிளரிக்கொண்டு இருந்தாள். ஆனால், அவளுடைய எண்ணம், அவள் செய்து கொண்டிருந்த வேளையில் லயிக்கவில்லை என்பது அவளை பார்த்தவுடனேயே புரிந்து போனது.

ரத்னா அவள் தோளை தொட, அவரைப் பார்த்து மெலிதாய் புன்னகை புரிந்தாள் ஐஸ்வர்யா.

"உன் மனசு எனக்கு நல்லா புரியுது மா. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவன் மனசுல என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்கானோ. சில சமயம் இப்படித் தான் எதையாவது பைத்தியக்காரன் மாதிரி செய்வான். அவனுக்கு அவனை பத்தி ரொம்ப பெருமை. இந்த அழுக்கான கோலத்துல கூட, தான் ரொம்ப அழகா இருக்கிறதா நினைப்பு."

வேண்டுமென்றே வசீகரனை வசைபாடினார் ரத்னா.

"அப்படி இல்ல, ஆன்ட்டி. உங்களுக்கு தெரியாதா அவர் எவ்வளவு குறும்புக்காரன்னு? அவர் வேணும்னே நம்மகிட்ட விளையாடுறார்னு நினைக்கிறேன். நீங்க வேணும்னா பாருங்க, இன்னும் ரெண்டுடொரு நாள்ல அவர் பழைய மாதிரி மாறிடுவார். நீங்க தயவுசெஞ்சி வருத்தப்படாதீங்க, ஆன்ட்டி"
என்று, தனக்கு ஆறுதல் சொன்ன மருமகளை கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் ரத்னா. இப்படியெல்லாம் ஐஸ்வர்யா பேசியதே இல்லை. அவள் வாசிகரனுக்கு சாதகமாக பேசுவது இது தான் முதல் முறை.

"அவன் அவனுடைய தாடிக்கு அவ்வளவு சீக்கிரம் டாட்டா காட்டுவான்னு நான் நினைக்கல. அவன் தன்னோட மனசுல எதையோ மறச்சி வச்சிகிட்டு, வேணுமின்னே இதெல்லாம் செஞ்சுகிட்டு இருக்கான். அத செஞ்சு முடிக்கிற வரைக்கும், அவன் ஓய மாட்டான். அவனுக்கு பிடிவாதம் ஜாஸ்தி." முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, வருத்தத்துடன் சொன்னார் ரத்னா.

"கவலைப்படாதீங்க, ஆன்ட்டி. அவர் அப்படி எல்லாம் நம்மள கஷ்டப்படுத்துறவர் இல்ல. நீங்க சீக்கிரமே அவரை பழையபடி பார்க்கத் தான் போறீங்க"

"கடவுளே இது உண்மையிலேயே என் மருமக தானா?" ரத்னாவிற்கு ஆச்சரியமாய் இருந்தது.

"உனக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னா, எனக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. ஏன்னா, நீ தான் அந்த தாடி குத்தும் போது சகிச்சிக்க போற" என்று சிரிக்க, கன்னம் சிவந்தாள் ஐஸ்வர்யா.

அவளை அப்படி பார்ப்பதற்கே ரத்னாவிற்கு பரவசமாக இருந்தது. அவர் கடவுளுக்கு மானசீகமாக நன்றி கூறினார்.

"உன்னோட அழுக்கு புருஷனை நல்லா திட்டிட்டேன். அவனுக்கு இப்போ, உன்னோட *சைக்கலாஜிக்கல் ஹக்* நிச்சயம் தேவைப்படும். போ..." ஐஸ்வர்யாவின் முதுகில் செல்லமாக தட்டியபடி, ரகசியமாய் கூறினார் ரத்னா.

அங்கிருந்து, வெட்கத்துடன் தன் அறையை நோக்கி ஓடினாள் ஐஸ்வர்யா.

......
குளித்துமுடித்து, அமைதியாய் தன் கட்டிலில் அமர்ந்தான் வசீகரன், ஒரு மாதத்திற்கு பிறகு, அவனுக்கு பிடித்த, அவனுடைய அறையில்... அவனுடைய கட்டிலில்...

அறைக்குள் நுழைந்த ஐஸ்வர்யாவை பார்த்தவுடன், அவன் முகம் மலர்ந்தது. ஓடிச்சென்று, அவளை தூக்கி கொண்டு. சந்தோஷமாய் சுற்றினான். அவனது இந்த சின்னப்பிள்ளை விளையாட்டை எதிர்பார்க்காத ஐஸ்வர்யா, தன்னை சமாளித்துக் கொள்ள பெரும் பாடு பட்டாள்.

சிரித்துக்கொண்டே அவன் அவளை கீழே இறக்கி விட்டு, அவள் நெற்றியில் தன் இதழ்களை அழுத்தி பதித்து அப்படியே நின்றான். எவ்வளவு தான் திடமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், ஐஸ்வர்யாவால் அது முடியவே இல்லை. நீண்ட ஒரு மாதத்திற்குப் பின், அவன் அவளைத் தொட்ட பொழுது, ஆயிரம் வாட் மின்சாரம் அவள் உடலில் பாய்ந்தது போல் இருந்தது. அது, அவளை, உள்ளேயும் வெளியேயும் உருகச் செய்தது. அவள் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த தடுமாறினாள். அவள் நெற்றியில் பதித்த தன் இதழ்களை பிரிக்க மனமின்றி நின்றான் வசீகரன். அவர்களுக்குள்ளான உணர்வுகள் கொழுந்துவிட்டு எரிந்தன.

ஐஸ்வர்யா அப்படியே அசையாமல் நிற்பதை வசீகரன் கவனித்தான். அவள், அவனுக்கு எதிராக ஏதும் செய்யவில்லை. அவனை தடுத்து நிறுத்தவோ, பிடித்து தள்ளவோ முயற்சிக்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு, நிர்மலமாய் இருந்த அவளது முகம், அவன் எப்பொழுதுமே கண்டிராத ஒன்று. ஒன்றும் புரியாமல் மென்று விழுங்கினான். ஒரு விதத்தில் அவனுக்கு அதில் சந்தோஷம் தான். மெல்ல அவள் கண்ணம் தொட்டு, அவள் பெயர் சொல்லி அழைத்தான்.

"ஐஷு..."

கனவில் இருந்து வெளிவருவது போல, மெல்ல அவள் கண் திறந்தாள். வசீகரன், அவள் முன் புன்னகையுடன் நின்றிருந்தான். அப்பொழுது தான் அவள் கனவுலகத்தில் இருந்து நிஜ உலகிற்கு வந்தாள். நியாயப்படி, அவள் வசீகரன் மீது கோபமாக இருக்க வேண்டும் அல்லவா? அவள் கோபப்பட முயன்றாள், ஆனால், அது ஏனோ இன்று அவள் பக்கம் வர தயாராக இல்லை. அவள் கோபப்பட முயல்வதை பார்த்து வசிகரனுக்கு சிரிப்பு வந்தது.

"என் பொண்டாட்டி எப்படி இருக்கா?" என்று அவள் மூக்கை செல்லமாக தட்டினான்.

அவள் அவனை கோபமாக முறைத்தாள்.

"யாரோ என் மேல ரொம்ப கோவமா இருக்குறா மாதிரி தெரியுது?"

அவனுக்கு பதில் சொல்லாமல், கட்டிலில் சென்று அமர்ந்தாள் ஐஸ்வர்யா. அவனும் அவளை பின் தொடர்ந்து சென்று பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, நீ கோபப்படும் போது ரொம்ப அழகா இருக்க" என்றான்.

முகத்தில் எந்த சலனமும் இன்றி அவனை அமைதியாய் பார்த்தாள்.

"எதுக்காக உன்னை இப்படி கட்டுப்படுத்திக்கிட்டிருக்க?"

அப்பொழுதும் அவள் எந்த பதிலும் கூறவில்லை.

"என்ன ஆச்சு? என்கிட்ட பேச மாட்டியா? எனக்கு தைரியம் இருந்தா நேர்ல வந்து பேச சொன்ன, ஞாபகம் இருக்கா? இப்ப நான், உனக்கு எதிரில் நிக்கிறேன், உன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன், ஆனா நீ எதுவுமே சொல்ல மாட்டேங்கறியே? உன்ன பாக்கணும்னு நான் எவ்வளவு ஆசையா ஓடி வந்தேன் தெரியுமா? உன்கூட இருக்கப் போற நாளை எதிர்பார்த்து காத்திருந்தேன். என் மனசுல எவ்வளவு எதிர்பார்ப்புகள் இருக்குன்னு உனக்கு தெரியுமா?"

அவ்வளவு தான், ஐஸ்வர்யாவின் முகம் மாறியது. அவள், கோபாவேசமாக அவன் பக்கம் திரும்பினாள். கட்டிலிலிருந்து சட்டென்று எழுந்து நின்றாள். அவளுடைய, அந்த திடீரென்ற மாறுதலைக் கண்ட வசீகரனும் எழுந்தான். அதே கோபத்துடன் அவனைப் பிடித்துத் தள்ளினாள்.

"எதிர்பார்ப்பா? எதை பத்தி பேசுறீங்க நீங்க?"

என்று கூறிவிட்டு மறுபடியும் அவனை பிடித்து தள்ளினாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top