28 எதார்த்தம்
28 எதார்த்தம்
தன் மென்மையான முகத்தை, மெல்லிய துண்டால் துடைத்துக்கொண்டு, குளியலறையிலிருந்து வெளியே வந்தாள் ஐஸ்வர்யா. வெளியே வந்தவள், வசீகரனை நினைத்து பார்த்தாள். வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அவனுடைய கண்கள்... ஏக்கம் நிறைந்த பார்வை... அவளை எப்பொழுதும் கட்டி அணைக்க துடிக்கும் கரங்கள்... முடிவில்லாத அவனுடைய உரையாடல்கள்...
அவன் இல்லாத இந்த வீடு, அழகாகவே தோன்றவில்லை.
படுத்தால் உறக்கம் வரவில்லை. ஆனால், விழித்திருக்கவும் பிடிக்கவில்லை. வசீகரனின் மந்திரத்தால் கட்டுண்டது போல அவள் காணப்பட்டாள். அவள் அவனுடைய காதலில் உருகி வழிந்து கொண்டிருந்தாள். ஆனால், அது பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது... என்ன ஒரு பரிதாபமான நிலை... அவள் சதா வசீகரனை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் எங்கு சென்றாலும், அவளுடன் யார் இருந்தாலும், அவள் நினைப்பு என்னவோ வசீகரனின் மீதே இருந்தது. சிலசமயங்களில் பிரமை பிடித்தவள் போல் காணப்பட்டாள். அவளை சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவளுக்கு புரியாமல் இருந்தது.
ஏஆர்வி கம்பெனி
தனது அறையில் அமர்ந்து மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அவள் மிகவும் பிஸியாக காணப்பட்டாள்... நேரத்தை பிடித்து தள்ளுவதில் பிஸியாக இருந்தாள். வசீகரன், லண்டனுக்கு சென்று இருபது நாள் ஆகி விட்டிருந்தது. அவன் திரும்பி வர இன்னும் பத்து நாட்களே மீதம் இருந்தன. அவளுக்கு நேரத்தை கடத்துவதற்குள், போதும் போதும் என்றாகிவிடுகிறது. தன்னை ஏதோ ஒரு வேலையில் ஆழ்த்தி கொண்டு, ஒவ்வொரு நிமிடத்தையும் அவள் கழித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய ஃபோன் ஒலிப்பது கூட அவளுக்கு கேட்கவில்லை. அது ஒலித்து அடங்கியது. ஐந்து நிமிடம் கழித்து, விஷால் அவளுடைய அறைக்கு வந்தான்.
"மேடம், நீங்க ஏன் வசீகரன் சார் ஃபோனை அட்டென்ட் பண்ணல?" என்றான்.
"என்ன??? எப்போ???" என்று அதிர்ச்சியாக கேட்டாள் ஐஸ்வர்யா.
"அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி"
தனது ஃபோனை எடுத்து அவசர அவசரமாக செக் செய்த போது, அதில் ஒரு வெளிநாட்டு எண் இருந்தது. அவள் மீதே அவளுக்கு கோபமாக வந்தது. அந்த கோபத்தை அவள் விஷாலின் மீது காட்டினாள்.
"ஒரு தடவை நான் ஃபோனை எடுக்கலைன்னா, மறுபடி அவரு ஃபோன் பண்ண மாட்டாரா? அப்படி என்ன பொல்லாத பிஸி?" என்று கத்தினாள்.
தனது ஃபோனை அவளை நோக்கி நீட்டியவாறு,
"வசீகரன் சார் லைன்ல இருக்காரு" என்றான்.
தனது ஃபோனை அவளிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டான் விஷால்.
ஐஸ்வர்யாவின் நெஞ்சில் இருப்பது இதயமா? அல்லது முரசா? அது அப்படி ஒலிக்கிறது? அவளையும் மீறி அவள் கைகள் நடுங்கின. மெல்ல தன் காதருகில் ஃபோனை எடுத்து சென்றாள்.
"ஐஷு..."
அவ்வளவு தான், ஐஸ்வர்யா கலகலத்து போனாள். உண்மையிலேயே வசீகரன் ஒரு மந்திரவாதி தான். இல்லாவிட்டால், அவன் குரலைக் கேட்டதும் ஐஸ்வர்யாவின் மனதில், இப்படி ஒரு தாக்கம் ஏற்படுமா என்ன?
"நேத்து நான் ஃபோன் பண்ணப்ப, நீ ஏன் என்கிட்ட பேசல?"
"ஏன்னா, அது எனக்கு வந்த ஃபோன் கால் இல்லை" என்றாள்.
"ஆனா, ஃபோன் பண்ணவன் உன்னுடையவன் தான். ஞாபகம் இருக்கா?"
"உங்களுக்கு ஞாபகம் இருக்கா?" என்றாள் ஏளனமாக.
"எனக்கு ஞாபகம் இருக்குமா இருக்காதான்னு, உனக்கே நல்லா தெரியும்."
"இத சொல்ல தான் இப்ப ஃபோன் பண்ணீங்களா?"
"சொல்றதுக்கு எனக்கு நிறைய இருக்கு. ஆனா, உனக்கு தான் அதெல்லாம் கேக்க பிடிக்கிறதில்ல"
ஏற்கனவே கண்களிலிருந்து வந்துவிட்ட கண்ணீரை, தன் உதட்டை கடித்துக் கொண்டு, அடக்க முற்பட்டாள் ஐஸ்வர்யா.
"நான் உன்னை ஒருவேளை டிஸ்டர்ப் பண்ணி இருந்தா, என்னை மன்னிச்சிடு"
*டிஸ்டர்ப்* என்னும் அந்த வார்த்தை, அவளை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியது. வசீகரனுக்கு எங்கிருந்து தெரியப் போகிறது, அவன் டிஸ்டர்ப் செய்ய மாட்டானா என்பது தான் அவளுடைய தற்போதைய எதிர்பார்ப்பு என்பது?
"உங்களுக்கு தைரியம் இருந்தா, என்னை நேர்ல பார்க்கும் போது, இந்த வார்த்தைய சொல்லி பாருங்க" என்று கோபத்துடன் கூறினாள்.
அவள் குரலில் இருந்த நடுக்கத்தை உணர்ந்தான் வசிகிரன்.
"நான் உன்னை நேர்ல பார்க்கிற நேரம், என்னுடைய தைரியம் எல்லாம் காத்தா பறந்து போயிடும். ஏன்னா, ஐஸ்வர்யா விஷயத்துல, வசீகரன் ஒரு தைரியம் இல்லாத கோழை."
கூறிவிட்டு ஃபோனை துண்டித்தான் வசீகரன்.
கோழையா? வசீகரனா? தான் ஒரு கோழை என்று ஒப்புக் கொள்ள எவ்வளவு துணிச்சல் வேண்டும்? எந்த ஒரு ஆண்மகனும் தான் கோழை என்பதை ஒப்புக்கொள்ள துணிய மாட்டான். அப்படி ஒப்புக் கொள்ள, ஒரு அதீத துணிச்சல் வேண்டுமடா வசீகரா...!
வசீகரனின் குரலில் தெரிந்த சோகம், அவள் உணரக் கூடியதாக தான் இருந்தது. ஏன் இருக்காது? இந்த திருமண பந்தமே வேண்டாம் என்று எண்ணியிருந்த ஐஸ்வர்யாவாலேயே இந்த பிரிவை தாங்க முடியாத பொழுது, ஒவ்வொரு நொடியையும் அவளுடன் எப்படியெல்லாம் செலவிட வேண்டும் என்று மனக்கோட்டை கட்டி கொண்டிருந்த வசீகரனை பற்றி கேட்கவா வேண்டும்? அவன் நொறுங்கித் தான் போயிருப்பான். ஐஸ்வர்யாவிற்கு தெரியும், அவன் வேண்டுமென்றே தான் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறான் என்று. வரட்டும் அவன், அப்போது அவன் தெரிந்து கொள்வான் ஐஸ்வர்யா யார் என்பதை.
ஒரு வாரத்திற்கு பின்...
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா, சிக்னலில் காத்திருந்தாள். அப்போது, அவள் இது வரை பார்த்திராத ஒரு காட்சி அவள் கண்ணில் பட்டது. அது அவளது மூலாதாரதையே அசைத்துப் பார்த்தது. நிலாவும் கதிரவனும் மிக நெருக்கமாக, மிக சந்தோஷமாக, ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து வெளியே வந்தார்கள், நிறைய பைகளுடன்.
ஐஸ்வர்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை... அவள் கண்களை திறந்து கொண்டே கனவு காண்கிறாளா என்ன? அவளால் நம்பவும் முடியவில்லை... நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
பின்னால் இருந்து எழுந்த, வாகனங்களின் ஹாரன் சத்தம் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. அவளது அதிர்ச்சிக்கு அளவே இல்லை. நிலாவிடமிருந்து எதையாவது பெறுவதற்காக, கதிரவன் இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறானா என்ன? அப்படி ஏதாவது இருக்கும் என்றால், அதை நடக்க இவள் விடப்போவதில்லை. தனது காரை யூ டர்ன் எடுத்து, இளவரசன் இல்லம் நோக்கி விரைந்தாள் ஐஸ்வர்யா.
இளவரசன் இல்லம்
ஐஸ்வர்யாவை பார்த்து மீனாட்சி ஆச்சரியப்பட்டார். எதுவும் சொல்லாமல் திடீரென அவள் இங்கு வந்திருப்பதன் காரணம் அவருக்கு புரியவில்லை.
வசீகரன் மற்றும் அவள் மாமனார் மாமியார் பற்றிய வழக்கமான விசாரணைகள் முடிவுற்றது.
நிலாவின் வரவுக்காக ஐஸ்வர்யா காத்திருந்தாள். அங்கு என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவள் தெரிந்து கொண்டாக வேண்டும். அவள் திடமாக எதுவும் பேசாமல் அமர்ந்திருந்ததை பார்த்து, மீனாட்சிக்கு பதட்டம் ஏற்பட்டது. மீனாட்சியின் பதட்டத்தை பார்த்து, ஐஸ்வர்யாவிற்கு சந்தேகம் வலுத்தது.
சிரித்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்த கதிரவனும், நிலாவும் ஐஸ்வர்யாவை பார்த்து, ஸ்தம்பித்து நின்றார்கள்.
"நீ எப்ப வந்த, ஐஸ்வர்யா?" என்று தட்டுத்தடுமாறி கேட்டாள் நிலா.
அவளுக்கு பதில் சொல்லாமல், கதிரவனையே கோபமாக பார்த்துக் கொண்டு நின்றாள் ஐஸ்வர்யா. கதிரவன், அங்கிருந்து அமைதியாக தன் அறைக்கு சென்றான். அவன் அங்கேயே நின்றிருந்தால், ஐஸ்வர்யாவின் கோபம் உயரும் என்பது அவனுக்குத் தெரியும்.
"நானும், உங்க அண்ணனும், ஷாப்பிங் போயிருந்தோம்" என்று உண்மையை சொன்னாள் நிலா.
"அவன் என் அண்ணன் இல்ல"
"அவர் நீ நினைக்கிற மாதிரி இல்ல" தயங்கிக்கொண்டே சொன்னாள் நிலா.
"நீங்க அவனை நம்புறீங்கங்குறத, என்னால நம்பவே முடியல"
"அவரை நம்புறதை தவிர எனக்கு வேற வழி இல்ல"
"ஆனா ஏன்?"
"ஏன்னா, அவர் என் புருஷன். அதை யாராலயும் மாத்த முடியாது. அப்புறம், அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்குறதுல என்ன தப்பு இருக்கு?"
"அவன் உங்களை மறுபடி ஏமாத்தினா என்ன செய்வீங்க? அந்த வேதனையை உங்களால தாங்க முடியுமா?"
"ஒருவேளை அவர் என்னை ஏமாத்தலன்னா? என்னுடைய வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் தானே?"
"ஏமாத்தலனா, சந்தோஷமா இருக்கும் தான். ஆனா அவன் ஏமாத்துவான். எனக்கு அவன பத்தி நல்லாத் தெரியும்."
"உனக்கு அவரை பத்தி தெரியாது. நீ எப்போ எங்க கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணியோ, அப்பவே அவர் எல்லாத்தையுமே நிறுத்திட்டார்"
"அப்படின்னு அவன் சொன்னானா?"
"இல்ல, அவர் உன்னைப் பத்தியும், எல்லாத்தை பத்தியும் பேசினதை, வசீகரன் தான் என்னை கேட்க வச்சாரு"
"என் ஹஸ்பண்டா?"
அன்று இரவு நடந்தவைகள் அனைத்தையும், ஒன்று விடாமல் ஐஸ்வர்யாவிடம் கூறினாள் நிலா. ஐஸ்வர்யாவிற்கு, அனைத்தும் கண்கட்டு வித்தை போல் இருந்தது. அவள் நிலாவை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு நின்றாள்.
"என்னை தப்பா நினைக்காத ஐஸ்வர்யா. நான் இதையெல்லாம் வேணும்னு உன்கிட்ட இருந்து மறைக்கல. எனக்கு தெரியும், அவர் என்னை ஏமாத்துறார்னு நீ உங்க அண்ணன் மேல கோபப்படுவ. ஆனா அவர் என்னை ஏமாத்தல. எங்களுடைய ரிலேஷன்ஷிப்புக்கு ஒரு சான்ஸ் கொடுக்கணும்னு நான் நினைக்கிறேன். நான், என்னுடைய வாழ்க்கையையும், புருஷனையும் இழக்கத் தயாரா இல்ல. அவர் எனக்கு வேணும். தயவு செய்து என்னை புரிஞ்சிக்கோ." நிலா கெஞ்சினாள்.
"நீங்க மனசு உடைஞ்சிட கூடாதுன்னு தான், நான் உங்களக் காப்பாத்த நினைச்சேன். ஆனா, நீங்க அவனோட சந்தோஷமா இருந்தீங்கன்னா, எனக்கும் சந்தோஷம் தான். ஆனா, தயவு செய்து ஜாக்கிரதையா இருங்க"
"அளவுக்கு அதிகமா ஜாக்கிரதையா இருக்கிறதும் நல்லது இல்ல மா. இதை நான் உனக்காகத் தான் சொல்றேன். உண்மையை சொல்லணும்னா, நான் என் புருஷனை விட அதிகமா, உன்னத் தான் நேசிக்கிறேன். ஏன்னா, சொந்த அண்ணன்னு கூட பாக்காம, நான் நல்லா இருக்கணும்னும், என்னோட சந்தோஷத்துக்காக, எங்க கல்யாணத்தையே நீ நிறுத்த நினைச்ச. அதே மாதிரி, நானும் உன்னை சந்தோஷமா பார்க்கணும்னு நினைக்கிறேன். உனக்கும் வசீகரனுக்கும் நடுவுல இருக்கிற உறவை பத்தி எனக்கு தெரியும்."
அவள் முகத்தைப் பார்க்க முடியாமல் இங்கும் அங்கும் ஐஸ்வர்யாவின் கண்கள் அலை பாய்ந்தது.
"வசீகரன் தங்கம். என்னையும் என் புருஷனையும் சேர்த்து வைச்சதிலிருந்து தெரியலையா, அவர் உறவுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறவர்னு? அவர் நிச்சயமாக உன்னையும் கடைசி வரைக்கும் நல்லா பாத்துக்குவார். நீயும் அவரை காதலிக்கிறேங்குறத புரிஞ்சுக்கோ"
அவளை பிரமிப்புடன் பார்த்தாள் ஐஸ்வர்யா.
"உன்னை என்னால புரிஞ்சுக்க முடியாதா? உன் மனச தொட்டு சொல்லு, வசீகரன் லண்டனுக்கு போனதுக்கப்புறம், அவரை பார்க்கணும்னு உன் மனசு துடிக்கல? அற்ப காரணங்களுக்காக, வேண்டாத கற்பனை பண்ணிக்கிட்டு வசீகரனை இழந்துடாதே."
கண்ணீர் கரைபுரண்டு ஓட, நின்றிருந்த ஐஸ்வர்யாவை, மீனாட்சி தன் பக்கம் திருப்பினார்.
"என் பொண்ணு புத்திசாலின்னு நான் நினைச்சிகிட்டிருக்கேன். தப்பான முடிவ எடுத்து, என்னுடைய எண்ணம் தப்புன்னு நிரூபிச்சிடாதே. உன்னை நீயே ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்கோ. வசீகரன், அவங்க அம்மா, அப்பாவுக்கு ஒரே பிள்ளை. நீ அவரை விட்டு விலகின பிறகு, அவருக்கு நிச்சயமா அவங்க அம்மா, அப்பா வேற ஒரு கல்யாணம் பண்ணி வைப்பாங்க. உன்னுடைய இடத்துல, வசீகரனோட, வேற ஒரு பெண்ணை உன்னால கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா?"
ஐஸ்வர்யாவின் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் இருந்தது. மீனாட்சிக்கு பதிலேதும் கூறாமல், அங்கிருந்து அமைதியாய் கிளம்பினாள் ஐஸ்வர்யா, ஏராளமான எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டு.
கதிரவனை பற்றி வசீகரனுக்குத் தெரிந்திருக்கிறது. அவன் நிலாவையும் கதிரவனையும் சேர்த்து வைத்திருக்கிறான். அவன் அதை செய்யாமல் கூட இருந்திருக்கலாம், யாரும் அவனை கேள்வி கேட்கப்போவதில்லை. அதேநேரம், அவன் கதிரவனை பற்றி தனக்கு புரிய வைக்கவும் முயற்சிக்கவில்லை. மாறாக, அவளுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அதை செய்யாமல் இருந்தான். நிலாவின் வார்த்தைகள் அவள் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தன. கதிரவனை போன்ற ஒரு ஆண், இரண்டாவது சந்தர்ப்பத்தை பெற தகுதியானவன் என்றால், வசீகரனிற்கு அவள் ஏன் முதல் சந்தர்ப்பத்தை வழங்க கூடாது? ஐஸ்வர்யாவை பொருத்தவரை, உலகத்திலுள்ள எந்த ஆண்மகனுடனும் ஒப்பிட முடியாதவன் வசீகரன்.
தன் அறைக்குள் நுழைந்து கட்டிலில் மீது விழுந்தாள் ஐஸ்வர்யா. தன்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி அழத் துவங்கினாள். மெத்தையின் முனையை அவள் இறுகப்பற்றிய போது, அங்கு அவள் கையில் ஏதோ தட்டு பட்டது. அது, வெகு சில பக்கங்களைக் கொண்ட கை குறிப்பேடு.
அதை எடுத்துப் பார்த்தவள், வசீகரன் அதில் எழுதியிருந்ததை படித்தாள்.
"அவள் முடிவு எடுக்கும் வரை, நீ பொறுத்து தான் ஆக வேண்டும்"
அடுத்த பக்கத்தை அவசரமாக திருப்பினாள்.
"நமக்கு வேறு வழியில்லை"
ஐஸ்வர்யாவின் இதயம், தாறுமாறாக ஓடத் தொடங்கியது. படபடப்புடன் அடுத்த பக்கத்தைத் திருப்பினாள்.
"ஆறுமாதத்திற்கு பிறகு தான் நான் எதையும் செய்ய முடியும்"
ஐஸ்வர்யாவிற்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது.
"உனக்கு நான் இருக்கிறேன் உன்னை அழ விட்டு விட மாட்டேன்"
ஐஸ்வர்யாவிற்கு தலையை சுற்றியது. இன்னும் மீதமிருப்பது ஒரே ஒரு பக்கம் தான். அவளுடைய கைகள் நடுங்கின. தன்னுடைய துப்பட்டாவை இறுக்கமாக பற்றினாள். ஏதாவது ஒரு பெண்ணின் பெயர் அடுத்த பக்கத்தில் இருந்து விடுமோ? தான் மனதார வணங்கும் மாரியம்மனை மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்த பக்கத்தைத் திருப்பினாள், கண்களை மூடிக்கொண்டு.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top