27 தனிமை... கொடுமை
27 தனிமை... கொடுமை
ஐஸ்வர்யா தூக்கத்திலிருந்து அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள். அவர்களின் அறையில் வசீகரன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. விளக்கை ஒளிர விட்டு, கடிகாரத்தைப் பார்த்த போது, மணி 4:20. அப்படி என்றால் வசீகரன் லண்டன் புறப்பட்டு விட்டானா? அவசர அவசரமாக குளியலறைக்குள் ஓடிச்சென்று, வெகு சொற்ப நிமிடங்களை எடுத்துக் கொண்டு, குளித்து முடித்து வெளியே வந்தாள். என்ன செய்ய வேண்டும் என்பதை அவள் ஏற்கனவே தீர்மானித்திருந்தாள்.
ரத்னாவும், அரவிந்தனும், வரவேற்பறையில் அமர்ந்து, தேநீர் பருகிக் கொண்டிருந்தார்கள். ஐஸ்வர்யா, அரக்கப்பரக்க ஓடி வருவதை பார்த்து, இருவரும் பொருள் நிறைந்த பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்.
"நீ எதுக்குமா இவ்வளவு சீக்கிரம் எழுந்த? வசீகரன் தான் ஏற்கனவே கிளம்பிட்டானே..." என்றார் ரத்னா.
"அவர் ஏன் என்னை எழுப்பல?" என்றாள் ஐஸ்வர்யா.
"அவன் எப்பவுமே இப்படித் தான்மா, யாரையுமே தொந்தரவு செய்ய மாட்டான்" என்றார் அரவிந்தன்.
"உன் கைல இருக்குறது என்ன ஃபைல்?" என்றார் ரத்னா.
"இது அவரோட ஃபைல் தான். மறந்துடார்னு நினைக்கிறேன்"
"அடக்கடவுளே...! இப்ப என்ன செய்றது?" என்று பதறினார் ரத்னா.
"அவரு ஃபிளைட்க்கு இன்னும் நேரம் இருக்கு. நான் போய்க் கொடுத்துட்டு வந்துடறேன்"
"ஒன்னும் பிரச்சனை இல்லமா, அதை நான் போய் குடுத்துட்டு வரேன்" என்றார் அரவிந்தன்.
"பரவால்ல அங்கிள்... நான் தான் எழுந்துட்டேனே. நான் வீட்ல இருந்து என்ன செய்யப் போறேன்? நான் போய்ட்டு வறேன்"
"ஆனா, டிரைவர், வசீகரனை ட்ராப் பண்ண போயிருக்காரு. நீ எப்படி போவ?"
"எனக்கு கார் ஓட்ட தெரியும். நான் இன்னொரு காரை எடுத்துக்கிட்டு போறேன்" கூறிவிட்டு விரைந்தாள், மேலும் அங்கு நின்று பேசிக் கொண்டிருக்காமல்.
சென்னை மாநகரின், விடியற்காலை சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. ஐஸ்வர்யாவிற்கு, அதிகபட்ச வேகத்தில் காரை விரட்டி செல்ல, அது போதுமானதாக இருந்தது. அவளுடைய கார், சாலையில் ஓடியதா, அல்லது பறந்து சென்றதா என்று கூறமுடியாத அளவிற்கு காரை வேகமாக ஓட்டி சென்றாள் ஐஸ்வர்யா, வசீகரன் கிளம்புவதற்கு முன் அவனைப் பார்த்துவிட வேண்டும் என்ற காரணத்தால்.
கார் ஓட்டுவதைத் தொழிலாக கொண்ட ஒருவர் கூட, அவ்வளவு சீக்கிரம் ஏர்போர்ட்டை சென்று அடைந்திருக்க முடியாது.
ஐஸ்வர்யா ஏர்போர்ட்டுக்கு வருவதை, வசீகரனுக்கு ஃபோன் செய்து, ரத்னா கூறிவிட்டிருந்ததால், அவன், அவளுக்காக வெளியிலேயே காத்திருந்தான். ஐஸ்வர்யா தன்னை தேடிக்கொண்டு உள்ளே வருவதை அவன் பார்த்தான். அவள் மூச்சிரைக்க அவன் முன் வந்து நின்றாள். எதுவும் பேசாமல், அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, சற்று நேரம் கொடுத்தான் வசீகரன்.
"எதுக்காக இப்படி ஓடி வந்த?"
தன் கையில் இருந்த ஃபைலை காட்டி,
"நீங்க இதை மறந்துட்டு வந்துட்டீங்க"
"அது வெறும் ஜெராக்ஸ் காப்பி தான். என்கிட்ட ஒரிஜினல் இருக்கு"
"இத முன்னாடியே ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா, நான் வந்திருக்க மாட்டேனே" பொய்க் கோபத்துடன் கூறினாள்.
"நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி, என்னை பாக்கணும்னு என் ஒய்ஃப் நினைக்கும் போது, நான் ஏன் அவளை தடுக்கணும்?"
"அதுக்காக தான், என்கிட்ட சொல்லிக்காமலே வந்துட்டீங்களா?" யோசிக்காமல் பேசினாள் ஐஸ்வர்யா.
"நான் சொல்லிக்காம போறதை, நீ இவ்வளவு சீரியஸா எடுத்துக்குவேன்னு நான் எதிர்பார்க்கல"
"நான் அதை சீரியஸா எல்லாம் எடுத்துக்கல. எப்படி இருந்தாலும் நீங்க இல்லாம ஒரு மாசம் இருக்க தானே போறேன்..."
"ஆமாம், நான் இல்லாம, நீ நிம்மதியா, சந்தோஷமா இருக்க போற"
"என்னமோ, நீங்க ஃபோன் பண்ணி, என்னை டார்ச்சர் பண்ண போறதில்லங்குற மாதிரி பேசுறீங்க?"
அவன் உண்மையிலேயே ஃபோன் செய்யாமல் இருந்து விடுவானோ என்று அவள் மனம் பதைபதைத்தது.
"நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேனே, நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு. நான் இல்லாத இந்த *பொன்னான நாட்களை* சந்தோஷமா என்ஜாய் பண்ணு."
அவன் அவளிடம் ஒரு மாதம் பேசாமல் இருக்கப் போகிறான் என்பதை நினைத்த பொழுது, அவள் இதயத்தை யாரோ அரிவது போல் இருந்தது. பொங்கிய கண்ணீரை அடக்கிக்கொண்டு, *உண்மையிலேயே என்னிடம் பேசமாட்டாயா?* என்பது போல், அவனை ஒரு பார்வை பார்த்தாள். ஆனால், அவள் இதயத்தின் ஏதோ ஒரு ஓரத்தில், அவளுக்கு நம்பிக்கை இருந்தது, அவளிடம் பேசாமல் வசீகரனால் இருக்க முடியாது என்று.
"பாக்கலாம்" என்றவளை பார்த்து புன்னகைத்து,
"காரை ஜாக்கிரதையா ஓட்டிக்கிட்டு போ. அதிக வேகம் நல்லதில்ல. நம்ம டிரைவரை விட வேகமா காரை ஓட்டிக்கிட்டு வந்திருக்க. மறுபடி அப்படி செய்யாத"
"உங்ககிட்ட இந்த ஃபைலை கொடுக்க தான் அவசர அவசரமா வந்தேன். நான் வேணுமுன்னே உங்களை பிரச்சனைல மாட்டிவிட்டதா நீங்க தப்பா நினைக்க கூடாதுல்ல?"
"நான் என்ன நினைப்பேனோ, அப்படிங்கறத பத்தி எல்லாம், எப்போதிலிருந்து கவலைப்பட ஆரம்பிச்ச?"
"அப்படியெல்லாம் நான் ஒன்னும் நினைக்கல. நான் கிளம்புறேன்." என்றாள் அவனுடைய முகத்தைப் பார்ப்பதை தவிர்த்து.
"சரி, பத்திரமா போ"
அவள் அங்கிருந்து கிளம்ப எத்தனித்த போது,
"ஐஷு..." என்று அவன் அழைக்க, சற்றே நின்றாள் ஐஸ்வர்யா. அவளை நெருங்கி வந்தவன், அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,
"ஐ லவ் யூ" என்றான்.
அவனை விட்டு விலகி, வேகமாக நடக்க ஆரம்பித்தாள் ஐஸ்வர்யா.
"கலங்கிய கண்ணோட காரை ஓட்டாதே" என்று பின்னாலிருந்து கத்தினான் வசீகரன், அடைத்த தன் தொண்டையை செறுமிவிட்டு.
காரினுள் அமர்ந்து, கதவை சாத்திவிட்டு. ஸ்டீயரிங்கில் சாய்ந்து கொண்டு, ஓவென்று அழுதாள் ஐஸ்வர்யா. அவள் இதயத்தை யாரோ பிசைவது போல் இருந்தது. அவளுக்கு மனமே இல்லை, வசீகரனை செல்லவிடுவதற்கு. அதேநேரம், அவளால் அவனை தடுத்து நிறுத்தவும் முடியாது. அவன் *ஏன்?* என்று காரணம் கேட்பான். அவள் என்ன கூறுவாள்?
அவள் அறிந்திராத ஒரு பயம் அவளை பேயைப் போல வாட்டி வதைத்தது. அது அவள் முன் தோன்றவும் தோன்றாது, அதே நேரம், அவளை நிம்மதியாக இருக்கவும் விடாது. அவளுக்குத் தன் மீதே கோபம் கோபமாக வந்தது. சற்று நேரத்திற்கு பிறகு, அன்பு இல்லம் நோக்கி காரை செலுத்தினாள் ஐஸ்வர்யா. இந்த முறை கார் நத்தையை போல ஊர்ந்து சென்றது. யாரை பார்க்க அவள் வேகமாய் செல்ல வேண்டும்?
அவள் வீடு வந்து சேரும் வரை, அரவிந்தனுக்கும் ரத்னாவிற்கும் நிம்மதியே இல்லை. அவர்களுக்கும், அவர்களின் மருமகளின் மனநிலை புரிந்து தான் இருந்தது. அவளை நினைத்தால் பாவமாக இருந்தது. அவர்களுக்கும், அவளுக்கு உதவ வேண்டும் என்று ஆசை தான். ஆனால், வசீகரன் கேட்டுக்கொண்டது போல, தங்களுக்கு எதுவும் தெரியாதது போல் நடக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் ஐஸ்வர்யா உள்ளே நுழைவதை பார்த்தார்கள். அவள் முகம் பொலிவிழந்து காணப்பட்டது. ஆம்... அவள் முகத்தின் பொலிவு, லண்டன் செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தது. வசீகரன் திரும்பி வரும் வரை அவளுடைய பொலிவும் திரும்பப் போவதில்லை. ஐஸ்வர்யா அவர்களைப் பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு, தனது அறையை நோக்கி சென்றாள். சற்று நேரம் தனிமையில் இருந்தால் தேவலாம் என்று தோன்றியது அவளுக்கு. இன்னும் சில நாட்களில், அவள் சபிக்கப் போகும் அதே தனிமையை தேடி சென்றாள் அவள்.
.........
*பொன்னான நாட்கள்* என்று வசீகரனால் குறிப்பிடப்பட்ட, தனிமை சூழ்ந்த, ஐஸ்வர்யாவின் நாட்கள், அவளுக்கு *இருண்ட நாட்கள்* ஆகிப் போனது.
வசீகரனின் *இன்மை* அவளை அனைவரிடமிருந்தும் தனிமைப்படுத்தி விடும் என்பதை ஐஸ்வர்யா அறிந்திருக்கவில்லை. அவளை சுற்றி அனைவரும் இருந்த பொழுதும், தனக்கென யாருமே இல்லாதது போல் உணர்ந்தாள் ஐஸ்வர்யா.
அவள் மிகப்பெரிய தொந்தரவுக்கு ஆளானால், தன்னை தொந்தரவு செய்ய வசீகரன் இல்லாததால். இந்த சித்திரவதையை விட, அவன் உடன் இருந்து செய்யும் தொல்லைகள் எவ்வளவோ மேல்.
வசீகரன் விட்டுச்சென்ற *வெற்றிடம்* அவளுக்கு உணர்த்தியது, அவள் மனதில் அவனுக்கு இருக்கும் *இடம்* எப்படிப்பட்டது என்பதை.
இருபது நாட்களுக்கு பிறகு...
வசீகரன் கூறியது போலவே, அவன் ஒரு முறை கூட ஐஸ்வர்யாவிற்கு ஃபோன் செய்யவே இல்லை. ஆனால் அவன், தினந்தோறும் ரத்னாவிடமும், அரவிந்தனிடமும் பேசிக்கொண்டிருந்தான். அது, ஐஸ்வர்யாவை, கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
ஒரு முறை, ரத்தனா வலுக்கட்டாயமாக போனை ஐஸ்வர்யாவிடம் கொடுக்க முயன்ற போது, *நான் அவளிடம் தனிமையில் பேசிக் கொள்கிறேன்* என்று கூறிவிட்டான். ஆனால் அவன் அப்படிச் செய்யவே இல்லை.
தொட்டதற்கெல்லாம் கோவப்பட தொடங்கினாள் ஐஸ்வர்யா. எப்பொழுது பார்த்தாலும், எதையோ இழந்து விட்டதைப் போல காணப்பட்டாள். அவளுடைய பரிதவிப்பை ரத்னா கவனித்துக் கொண்டிருந்தார்.
"நீ நல்லா இருக்கல்ல?" என்றார் ஐஸ்வர்யாவிடம்.
"நல்லா இருக்கேன் ஆண்ட்டி"
"நீ வசியை மிஸ் பண்றியா?" என்ற ரத்னாவின் கேள்விக்கு, புன்னகையை பதிலாக தந்தாள் ஐஸ்வர்யா.
"ஃபோன் பண்ணி பேசேன்" என்றார்.
"அவரு வேலையா இருக்கும் போது, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன், ஆன்ட்டி. அவருக்கு டைம் கிடைக்கும் போது அவரே பேசுவார்."
சரி என்று தலையசைத்துவிட்டு, தன் அறையை நோக்கி சென்றார் ரத்னா. ஃபோனை எடுத்து வசீகரனின் எண்களை சுழற்றினார். உடனடியாக போனை எடுத்து பேசினாள் வசீகரன்.
"என்னம்மா? ஏதும் பிரச்சனை இல்லையே?" என்றான். தன் கழுத்தை சுற்றியிருந்த ஐஸ்வர்யாவின் துப்பட்டாவை கன்னத்தில் வைத்துகொண்டு.
"பிரச்சனை எதுவும் இல்ல. ஆனா, என் மருமகளை இப்படி பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அவள் முகமே களையிழந்து போயிருக்குடா. ஏன்டா, நீ இப்படி பண்ற? ஒரு தடவை அவகிட்ட பேசேன்" கெஞ்சினார் ரத்னா.
"நான் மட்டும் இங்க சந்தோஷமா இருக்கேன்னு நினைக்கிறீங்களா? அவ நம்ம கூடவே கடைசி வரை இருக்கணும் தானே?"
"ம்ம்ம்"
"அப்போ எனக்கு வேற வழி இல்லம்மா. அவ எதையெல்லாம் இழந்திருக்கான்னு அவ உணர வேண்டியது அவசியம்."
"உனக்கு அவ குரலை கேட்கணும்னு தோணவே இல்லையா?"
"நான் தினம் தினம் அவ குரலைக் கேட்டுகிட்டு தான் இருக்கேன். விஷால் அவகிட்ட பேசும்போதெல்லாம், என்னையும் கான்ஃபரன்ஸ் காலில் கனெக்ட் பண்ணுவான்."
"அதானே பார்த்தேன்... நான் என்னமோ, நீ ரொம்ப கட்டுப்பாட்டோட இருக்கிறதா நினைச்சு, ஆச்சரியப்பட்டு போயிட்டேன்"
"கட்டுப்பாடா? அதுவும் ஐஸ்வர்யா விஷயத்துலயா? வாய்ப்பே இல்ல." சொல்லிவிட்டு கலகலவென சிரித்தான் வசீகரன்.
"அப்படியே இருந்தாக்கூட, நீ என் மருமகளை பார்க்கிற நிமிஷம், அத்தனையும் காத்துல் பறந்து போகும்"
"அதுக்கு நான் எதுவுமே செய்ய முடியாது" மறுபடி சிரித்தான்.
"ஒரு தடவை அவகிட்டே பேசுடா"
"அத பத்தி நான் யோசிக்கிறேன் மா"
வசீகரன் அவளிடம் பேசுவது பற்றி யோசிக்கிறானோ, இல்லையோ, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை ரத்னா தீர்மானித்து விட்டார். வசீகரனிடம் பேசினால் ஐஸ்வர்யா சிறிது நிம்மதியடைவாள் என்று அவர் எதிர்பார்த்தார்.
அது, வசீகரன் வழக்கமாய் ரத்னாவிற்கு ஃபோன் செய்யும் நேரம். ஐஸ்வர்யாவிற்கும் அது தெரியும். ரத்னாவும், அரவிந்தனும் தங்கள் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு, தங்கள் அறையில் இருந்து கொண்டார்கள். இப்பொழுது, ரத்னா எதிர்பார்த்ததை போலவே, வேறு வழி இல்லாமல் வசீகரன் லேண்ட் லைன் நம்பருக்கு ஃபோன் செய்தான்.
அந்த ஃபோனின் *நீண்ட அழைப்பு மணி* கூறியது அது ஒரு வெளிநாட்டு அழைப்பு என்று. சமையலறைக்கு சென்று கொண்டிருந்த ஐஸ்வர்யா, அந்த மணியின் ஒலியைக் கேட்டு அப்படியே மரம் போல் நின்றாள். அந்த அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பதை யூகிக்க, பெரிய சிரமம் ஏதும் அவளுக்கு இருக்கவில்லை. இது, வசீகரன் அவன் பெற்றோருடன் பேசும், வழக்கமான நேரம்.
ஓடிச்சென்று ஃபோனை எடுத்தாள் ஐஸ்வர்யா. ஆனால், அவள் எதுவும் பேசவில்லை. அவள் எதுவும் பேச வேண்டியதில்லை. அந்த பக்கம் பேச காத்திருந்தவனுக்கு புரிந்து போயிற்று, ஃபோனை எடுத்தது யார் என்று. அதற்கு மேல், அவளிடம் பேசாமல் இருந்து விடுவானா என்ன வசீகரன்? அவ்வளவு நாள், அவன் கட்டி வைத்திருந்த பிடிவாதம் காற்றாய் பறந்து.
"ஐஷு... "
அவன் குரலைக் கேட்டவுடன், ஐஸ்வர்யாவிற்கு தொண்டையை அடைத்தது. அவளின் மெல்லிய விசும்பலை, நன்றாகவே கேட்டான் வசீகரன்.
"ஐஷு... ஐ அம் சாரி. நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணணும்னு நினைக்கல"
அவன் கூற, அடுத்த நிமிடம் ஃபோன் துண்டிக்கும் சத்தம் கேட்டது. அழுது கொண்டே, தனது அறையை நோக்கி ஓடினாள் ஐஸ்வர்யா.
உடனடியாக அவனுக்கு ரத்னாவிடம் இருந்து ஃபோன் வந்தது.
"என்ன சொல்லிடா அவள நீ அழ வைச்ச?" காட்டமாக கேட்டார் ரத்னா.
"நான் எதுவுமே சொல்லலாமா".
"இது எனக்கு சுத்தமா பிடிக்கல"
"எனக்கும் தான்"
"நீ எப்ப திரும்ப வரப்போற?"
"சீக்கிரமே"
வருத்தத்துடன் போனை துண்டித்தான் வசீகரன்.
ஐஸ்வர்யாவுக்கு தன் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவனுடைய குரல் அப்படி ஒரு அதிர்வலையை ஏன் அவள் மனதில் ஏற்படுத்தியது? அவனை பார்க்க வேண்டும் என்று, ஏன் அவள் மனம் தவியாய் தவிக்கிறது? ஏன் அவளுக்கு செத்துவிடலாம் போல் தோன்றுகிறது?
அவள் கணவன் அவளை சுற்றி சுற்றி வந்த போது அவளுக்குப் பிடிக்கவில்லை. இப்பொழுது, அவன் அருகில் இல்லாத பொழுதில், அவளுக்கு அவளை சுற்றி இருக்கும் எதுவுமே பிடிக்கவில்லை. அவள் மனம் அவள் கணவனை நோக்கி சாய்ந்துகொண்டு இருக்கிறதா? இல்லை... சாய்ந்துவிட்டது... மொத்தமாய்... வேரோடு...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top