20 பொல்லாத உணர்வு
20 பொல்லாத உணர்வு
அன்று முழுவதும் வசீகரனுக்கு தூக்கமே வரவில்லை. அன்று நடந்த நிகழ்வுகள், அவனை தூங்க விடவில்லை. ஐஸ்வர்யாவின் பிங்க் டெடிபியரை அவள் அருகில் வைத்துவிட்டு, அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, கட்டிலை விட்டு எழுந்தான் வசீகரன். கைபேசியின் டார்ச் லைட்டை உயிரூட்டி, அதன் வெளிச்சத்தின் வழி காட்டுதலில், சற்று காற்று வாங்கலாம் என்று மாடிக்கு சென்றவன், அங்கு கதிரவன் நின்று கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தான். கதிரவன் அவனைப் பார்த்துவிட்டு, ஏதும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட எத்தனித்தான். அவனைத் தடுத்து நிறுத்தினான் வசீகரன்.
"நீங்க என்கிட்ட பேசுறதை பாத்தா, உங்க ஒய்ஃப்க்கு கோபம் வரும். என்கிட்ட இருந்து விலகி நில்லுங்க" என்றான் கதிரவன்.
"என்னமோ இன்னைக்கு தான் உங்க தங்கச்சியை பத்தி உங்களுக்கு தெரிய வந்த மாதிரி பேசுறீங்க? அவளை பத்தி உங்களுக்கு முன்னாடியே தெரியாது? அப்படி இருக்கும் போது, எதுக்காக இன்னைக்கு என்கிட்ட அந்த மாதிரி பேசுனீங்க?"
அங்கிருந்து சென்றுவிட கதிரவன் முயன்றான், ஆனால் வசீகரன் விடவில்லை.
"நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கிங்க? நான் உங்க தங்கச்சிக்கு உண்மையா இருக்கேனா, இல்லையான்னு, என்னை டெஸ்ட் பண்ணி பாக்க நினைச்சிங்களா?"
"நீங்க உண்மையானவன்னு, உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு தெரியும்."
"என்னை பத்தி உங்களுக்கு முன்னாடியே தெரியும்னா, எதுக்காக அந்த மாதிரி நடந்துகிட்டிங்க? எதுக்காக என்னை அந்த மாதிரியான பார்ட்டிக்கு கூப்பிட்டிங்க?"
"எனக்கு உங்கள பத்தி தெரியுமா இல்லையாங்கிறது விஷயமே இல்ல. என் தங்கச்சிக்கு உங்கள பத்தி தெரியறது தான் முக்கியம்"
அவனை நம்ப முடியாமல் பார்த்தான் வசீகரன்.
"இன்னைக்கு மட்டுமில்ல, நம்ம பேசுறத, அவ ஒவ்வொரு நாளும் ஒளிஞ்சிருந்து கேட்டுக்கிட்டே இருந்தா, நான் உங்களை மாத்திடுவேனோங்குற பயத்துல"
"அவ பார்த்துக்கிட்டு இருக்கான்னு தெரிஞ்சு, எதுக்காக அவளை கோபப்படுத்தினீங்க?"
"அவ என் மேல கோவமா இருக்கிறது ஒன்னும் புதுசு இல்ல. அவ ரொம்ப நாளாவே என் மேல கோவமா தான் இருக்கா. அதை யாராலயும் மாத்த முடியாது. அது எனக்கு நல்லாவே தெரியும். அவ, தன்னைத்தானே புரிஞ்சுக்கணும்... உங்களுக்கு அவ மனசுல என்ன இடத்தை கொடுத்து இருக்கான்னு அவ புரிஞ்சுக்கணும்னு நான் நெனச்சேன். அவள பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். அவளுக்கு ஆம்பளைங்கன்னாலே பிடிக்காது. உங்களுக்கு, அவளை பிடிச்சு போச்சுன்னு தெரிஞ்சப்போ நான் ரொம்ப சந்தோஷபட்டேன். நான் முழு நம்பிக்கை வச்சிருந்தேன், ஒரு நாள் நிச்சயமா அவளுக்கும் உங்கள பிடிக்கும்னு. இன்னிக்கு நான் அத கண் கூடா பார்த்தேன். என் தங்கச்சியோட வாழ்க்கைக்காக உங்களுடைய வாழ்க்கைல நாங்க விளையாடிட்டதா, நீங்க தப்பா நினைக்காதீங்க. உண்மையிலேயே, அவ ரொம்ப நல்ல பொண்ணு. உங்களை அவளுக்குப் பிடிச்சிடுச்சினா, யாருக்காகவும் எதுக்காகவும் உங்களை விட்டுக் கொடுக்கவே மாட்டா. இன்னிக்கு நீங்க பார்த்தது, அதோட சாம்பிள் தான்."
"நீங்க சொல்றதெல்லாம் பாத்தா, உங்க தங்கச்சியை நீங்க ரொம்ப நல்லாவே புரிஞ்சி வச்சிருக்கிங்கன்னு தெரியுது. அப்புறம் எதுக்காக நீங்க, உங்க அப்பாவோட வழியில போனீங்க?"
"கெட்ட சகவாசம்... வயசு... வேற என்ன சொல்ல? ஆனா, எப்போ என் தங்கச்சி என்னோட கல்யாணத்தை நிறுத்த முயற்சி பண்ணான்னு தெரிஞ்சதோ, அன்னைக்கு என்னை பத்தி நானே ரொம்ப கேவலமா உணர்ந்தேன். அன்னையோட, நான் எல்லாத்தையுமே விட்டுட்டேன். எனக்கு தெரியும், அவ எப்படியும் உங்க கல்யாணத்தையும் நிறுத்த முயற்சி செய்வான்னு. அதனால, நான் தான் எங்க அப்பாகிட்ட, உங்களுக்கு அவளைப் பத்தி எல்லாமே தெரியும்னு பொய் சொல்ல சொன்னேன். அதனால, கல்யாணத்தை நிறுத்த, அவ மேற்கொண்டு எந்த முயற்சியும் எடுக்க மாட்டான்னு நினைச்சேன். அதே மாதிரி நடந்தது. ஒரு வேளை, நாங்க அப்படி சொல்லாம இருந்திருந்தா, இந்த கல்யாணத்த நிச்சயமாக நடக்கவே விட்டிருக்க மாட்டா"
"நீங்க ஏன் அவகிட்ட பேச முயற்சி பண்ணலை?"
"அவ என்னை நம்ப மாட்டா. ஒரு தடவை அவ நம்பிக்கையை இழந்துடான்னா, மறுபடியும் அவளை நம்ப வைக்கிறது நடக்காத காரியம். அதனால, நீங்களும் ஜாக்கிரதையா இருங்க. பொண்ணுங்க விஷயத்துல மட்டும் இல்ல, எல்லாத்துலயுமே. அவளுடைய இதயம் ரொம்ப மென்மையானது. அதனால தான் அவ வெறுப்புங்குற இரும்புக் கோட்டைக்குள்ள அதை பூட்டி வச்சிருக்கா"
"நான் அவகிட்ட பேசுறேன்... "
"வேண்டாம்... தயவு செய்து அந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க. என்னை மாதிரி மோசமான ஒருத்தனுக்கு நீங்க சப்போர்ட் பண்றத அவன் விரும்பமாட்டா. அதை எப்பவுமே செய்ய நினைக்காதீங்க. அது கடல் தண்ணியோட கரிப்பை மாத்த நினைக்கிறதுக்கு சமம். டோட்டல் வேஸ்ட் ஆஃப் டைம். அவ உங்களை காதலிக்கிறான்னு என்னால சொல்ல முடியாது. ஆனா, உங்க மேல ரொம்ப ரொம்ப அதிகமா மரியாதை வச்சிருக்கா. தயவுசெய்து, அந்த நம்பிக்கையை மட்டும் கெடுத்துடாதீங்க. நீங்க மேற்பார்வைக்கு பார்க்கிற சாதாரண ஐஸ்வர்யா இல்ல அவ. ரொம்ப சீக்கிரமாவே உணர்ச்சிவசப்படக் கூடிய, எல்லாரையும் மனசார நேசிக்கிற, ரொம்ப நேர்மையான, ரொம்ப ஆழமான மனசுக்கு சொந்தக்காரி. என்ன ஒரு பிரச்சனைன்னா, அதையே அவ எல்லார்கிட்டயும் எதிர்பார்ப்பா."
அதைக் கேட்டு மெலிதாய் புன்முறுவலித்தான் வசீகரன்.
"அவ இந்த உறவுல நீடிச்சி இருப்பான்னு நீங்க நினைக்கிறீங்களா?" என்றான் கதிரவனின் எண்ணத்தை அறிந்து கொள்ள.
"இந்த உறவுல நீடிச்சி இருக்கக் கூடாதுங்குற எண்ணம் அவளுக்கு இருந்திருந்தா, எப்பவோ அவ இதிலிருந்து வெளியே வந்திருப்பா. இன்னும் அவ இதுலயிருந்து வெளியில வராம இருக்கான்னா, அவ இந்த உறவுக்கு சான்ஸ் கொடுக்க நினைக்கிறா. உங்கள அவ நம்பலன்னா, உங்க கூட அவ இருக்க மாட்டா. அவ்வளவு சுலபமா அவ எந்த ஒரு பெரிய முடிவையும் எடுக்க மாட்டா. அவசர அவசரமா முடிவு எடுத்துட்டு அதுக்கப்புறம் வருத்தப்படுற பொண்ணு இல்ல அவ. முடிவெடுக்க கொஞ்ச நாள் எடுத்துக்கிட்டாலும், காரணம் இல்லாம அவ உங்கள வெறுக்கவும் மாட்டா. அவ்வளவு ஏன், சில சமயம் அவ வாயை திறந்து பேச வேண்டிய அவசியமே இல்ல. அவளுடைய *ஒரே ஒரு பார்வை* அவ மனசுல என்ன நினைக்கிறான்னு சொல்லிடும். அவ வார்த்தையால பேசுறதைவிட செயலால நிறைய பேசுவா."
வசீகரன் ஸ்தம்பித்துப் போனான். அவன் ஐஸ்வர்யாவிற்காகவும் கதிரவனுக்காகவும் வருத்தப்பட்டான். இருவரும் ஒரே மாதிரி தான். மனதில் இருக்கும் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாதவர்கள். மனதில் ஏராளமான அன்பை தேக்கி வைத்துக்கொண்டு, அதற்கு உரியவர்களிடம் அதை காட்டாமல் மௌனம் காக்கிறார்கள், அப்படி இருப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதைக் கூட புரிந்து கொள்ளாமல்.
"இவ்வளவு சொல்றீங்க, அப்புறம் ஏன் அவ இன்னும் என்னை ஏத்துக்காம இருக்கா?"
"நான் தான் சொன்னேனே, அவளுடைய ஒரே ஒரு பார்வை எல்லாத்தையும் சொல்லிடும்னு. யோசிச்சி பாருங்க, உங்களை நிரூபிச்சிக்காட்ட, அவ உங்களுக்கு ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருப்பா."
அதைக் கேட்டு வாயடைத்து போனான் வசீகரன்.
"உங்க ரெண்டு பேரையும் நெனச்சா, எனக்கு ரொம்ப பாவமா இருக்கு. என் மனைவி ஒரு நல்ல அண்ணனை இழந்துட்டா".
"எனக்கு, என்னை எப்படி நிரூபிக்கிறதுன்னே தெரியல. அவளை பொறுத்தவரைக்கும், நான் மோசமானவன், என் மனைவியை நான் அழவச்சிருக்கேன். அது தான் அவளுக்கு தெரியும். ஆனா, நான் திருந்திட்டேன்னு எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல"
"நீங்க உங்க ஒய்ஃபுக்கு கூட உங்கள பத்தி சொல்ல முயற்சி செய்யலயா?"
"அவ என்னை நம்பலங்குறது அவ தப்பு இல்ல. நான் அப்படிபட்ட மோசமானவனா தான் இருந்தேன். ஆனா ஒரு நாள் அவ என்னை புரிஞ்சுக்குவா"
கதிரவன் திடுக்கிட்டு திரும்பினான், அவனது தோளை யாரோ தொட்டதை உணர்ந்த போது. கண்ணீர் மல்க அங்கு நிலா நின்று கொண்டிருந்தாள். அவர்களைப் பார்த்து புன்னகைதான் வசீகரன்.
"தேங்க்யூ வசீகரன்" என்றாள் நிலா.
சிரித்துக்கொண்டே தலையசைத்தான் வசீகரன். கதிரவனோ, ஏதும் புரியாமல் நின்றான்.
"வசீகரன்... என்ன இதெல்லாம்?" என்றான் கதிரவன்.
"வசீகரன் எனக்கு ஃபோன் பண்ணி, நீங்க பேசினத எல்லாம் கேட்க வச்சாரு. அதனால தான் நான் இங்க வந்தேன்" என்றாள் நிலா.
"உங்களால எனக்கு உதவி செய்ய முடியும்னா, என்னாலயும் உங்களுக்கு உதவி செய்ய முடியும்" என்று சிரித்தபடி அங்கிருந்து சென்றான் வசீகரன்.
"தயவுசெஞ்சி என்னை மன்னிச்சிடு" என்றான் கதிரவன்.
"நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்ல. இப்பவாவது உங்களை பத்தி நான் தெரிஞ்சுக்கிட்டேன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்"
"வசீகரனுக்கு தான் நன்றி சொல்லணும்" என்றான் கதிரவன்.
"சந்தேகமில்லாம... ஐஸ்வர்யாவுக்கு நாங்க பார்த்த மாப்பிள்ளை, உண்மையிலேயே சூப்பர் தான்" என்றான் கதிரவன் பெருமையாக. ஆமாம் என்று தலையசைத்தாள் நிலா.
.......
அவர்களுடைய அறைக்கு வசீகரன் திரும்பி வந்த பொழுது, பிங்க் டெடி பியரை கட்டிக்கொண்டு, ஐஸ்வர்யா உறங்கிக்கொண்டிருந்தாள். அவள் கையில் இருந்து அதை மெதுவாக உருவி எடுத்து விட்டு, அந்த இடத்தை தான் ஆக்கிரமித்துக் கொண்டான். அவள் இடையை சுற்றி வளைத்து தன்னருகில் இழுத்து கொண்டவன், அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
யாருமே நம்ப மாட்டார்கள், இந்த மெல்லிய பூவுடலினுள் இவ்வளவு கோபமும், வேகமும் இருக்கிறது என்பதை. "நீ என்னை காதலிக்கிறங்கிறதை , கூடிய சீக்கிரம் உன்னை ஒத்துக்க வைப்பேன்" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
அப்போது, தூக்கத்தில் பிரண்டு படுத்த ஐஸ்வர்யா, தனது இடையை பற்றி இருந்த வசீகரனின் காரத்தை உணர்ந்து, லேசாக கண் விழித்தாள். வசீகரன், தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பொழுது, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"நீங்க இன்னும் தூங்கலையா?" என்றாள் தூக்கம் கலையாத குரலில்.
"என் பொண்டாட்டியை ரசிக்கிற, பெரிய வேலை இருக்கும் போது, நான் எப்படி தூங்குறது?" என்றான்.
"என்னமோ, நீங்க இப்ப தான் முதன் முதலா என்னை பாக்குற மாதிரி பேசுறீங்க?" என்றாள்.
"எத்தனை வருஷம் ஆனாலும், நான் அதை செஞ்சுகிட்டு தான் இருப்பேன்" என்றான்.
அதை கேட்டு, ஐஸ்வர்யாவிற்கு தூக்கம் முழுமையாக கலைந்து விட்டது. அவள் எழுந்து, தன் கைகளை கட்டிக்கொண்டு, கட்டிலின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டாள். அது தான் சந்தர்ப்பம் என்பது போல, அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான் வசிகரன்.
"என்னது இது...? எழுந்திருங்க" என்றாள் ஐஸ்வர்யா.
"முடியாது... என்னோட ஒய்ஃப்... நான் இப்படி தான் தூங்குவேன்"
"சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்காதீங்க. தயவுசெய்து எழுந்திருங்க, ப்ளீஸ்" கெஞ்சினாள்.
"ஏன்...? உன்னுடைய மனசு உன்கிட்ட இல்லயா?" என்றான்.
ஐஸ்வர்யாவிற்கு அப்படியெல்லாம் இல்லை என்று கூற வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், அவளால் அப்படி சொல்ல இயலவில்லை. உண்மையிலேயே அவள் மனம் அவளிடம் இல்லை தான்.
அவள், அவனை பிடித்து தள்ள முயன்ற பொழுது, அதற்கு இடம் கொடுக்காமல், அவள் இடையை கெட்டியாக அணைத்துக் கொண்டு அவள் வயிற்றில் தன் முகம் புதைத்தான். *மயிர்க்கூச்செறியும் உணர்வு* என்பது என்ன என்று, அன்று அறிந்தாள் ஐஸ்வர்யா. தனது கரங்களை இறுக்கமாக மூடிக் கொண்ட அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை இந்த உணர்வு எப்படிப்பட்டது என்று. இது சொர்கம் மற்றும் நரகம் இணைந்த ஒரு நடுநிலை. வசீகரனின் நிலையும் அவளிடம் இருந்து மாறுபட்டு இருக்கவில்லை. இதற்கு முன் எத்தனையோ முறை அவளை சீண்டி விளையாடுவதற்காக அவளை அணைத்தும், முத்தமிட்டும் இருக்கிறான். இன்றும் அப்படித் தான் விளையாட நினைத்தான். ஆனால், இன்று அது அவனுக்கே வினையாய் முடிந்தது. இதற்கு முன், அவன் அப்படி விளையாடிய போதெல்லாம் அவன் தன்னுடைய நிலையை எப்போதுமே இழந்ததில்லை. ஆனால் இன்று, அவன் கட்டுப்பாடு அவனிடம் இருக்கவில்லை. அவன் மனதில் *இனம் புரியாத...* இல்லை, இல்லை, *இனம் புரிந்த* ஆசை துளிர்விட்டது. ஐஸ்வர்யா என்ற ஜில்லென்ற நெருப்பில் எரிந்து கொண்டிருந்த வசீகரன், தன்னிலையை முழுவதுமாக மறந்தான். அவள் வயிற்றில் தன் முகத்தை லேசாக வருடியவாறு, தலையை நிமிர்ந்து பார்த்தவன், ஐஸ்வர்யா கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டும், படுக்கை விரிப்பை இறுக்கமாக பற்றிக்கொண்டும் தவித்துக் கொண்டிருப்பதை பார்த்து பயந்துவிட்டான். உடனே கட்டிலில் அமர்ந்து அவளை மென்மையாக தழுவிக் கொண்டான்.
"ஐஸ்வர்யா, ஐ அம் சாரி. நான், அப்படி பண்ணியிருக்க கூடாது. நான்.... "
திடீரென்று, அவள் கைகளை அவன் தோளின் மீது உணர்ந்தான். அவளும் அவனை அணைத்துக் கொண்டிருந்தாள். அதன் பிறகு வசீகரன் எதுவும் பேசவில்லை. அவள் நடுக்கம் சற்று தணியட்டும் என்று காத்திருந்தான், அவள் தலையை வருடியபடி. அவளை கட்டிலில் படுக்க வைத்து, போர்வையால் போர்த்தி விட்டான்.
தன்னுடைய நிலை என்னவென்றே புரிந்து கொள்ள முடியாமல், தனக்குள் போராடிக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அவன், அவளை அணைத்த பொழுது, அவளுக்கு அது பிடிக்கவில்லை என்று நினைத்திருந்தாள். ஆனால், அதே நேரம், அவன் அவளிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பொழுதும் அவளுக்கு பிடிக்கவில்லை. என்ன கண்றாவி உணர்வு இது? அவளுக்கு என்ன தான் வேண்டும்? எதற்கு தான் வசீகரன் அவளை இப்படி பாடாய் படுத்தி வைக்கிறானோ? அவள் மெதுவாக ஒரு கண்ணை மட்டும் திறந்து வசீகரனை பார்த்தாள். அவள் முகத்தில் இருந்த அதே குழப்பம், வசீகரன் முகத்திலும் காணப்பட்டது. அவள் மறுபடியும் இறுக்கமாக அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஒருவேளை, இன்னும் ஒரு நிமிடம், அவள் கணவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால், ஒருவேளை அவளே அவனை கட்டிப் பிடித்து விடுவாள் என்ற பயம் வந்து விட்டதோ என்னவோ...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top