2 கணவனின் எதிர்பார்ப்பு

2 கணவனின் எதிர்பார்ப்பு

மறுநாள் காலை

ஐஸ்வர்யா தனது கண்களை கசக்கியவாறு தூக்கத்திலிருந்து எழுந்து, அமர்ந்தாள். அவளை பதற்றம் முழுமையாக ஆட்கொண்டது, அவளுடைய கணவன், எதிரில் அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த போது...! அவளுக்கு என்ன செய்வது என்பதே புரியவில்லை. கட்டிலிலிருந்து சட்டென்று இறங்கியவள்,

"குட்மார்னிங்" என்று வசீகரன் உரைக்க சற்றே நின்று,

"குட்மார்னிங்" என்றாள் தயக்கத்துடன்.

"நல்ல தூக்கம் போல இருக்கு?" என்று அவன் எகத்தாளமாய் கேட்ட போது, அவன், நேற்று இரவு அவள் உறங்கிப் போனதை இடித்துக் கூறுவதை அவளால் உணர முடிந்தது. அவனுக்கு பதில் ஏதும் கூறாமல், அவளுடைய பையிலிருந்து துணிகளை எடுத்துக் கொண்டு, குளியலறை நோக்கி விரைந்தாள் ஐஸ்வர்யா. அவள் அப்படி ஓடியதைப் பார்த்து, உதடு கடித்து சிரித்தான் வசீகரன்.

குளித்து முடித்து, ஐஸ்வர்யா மெதுவாக குளியலறையிலிருந்து எட்டிப்பார்த்தாள். அவர்களுடைய அறை காலியாக இருக்கவே, நீண்ட நிம்மதிப் பெருமூச்சுடன் மெல்ல வெளியே வந்தாள். திடீரென, யாரோ அவள் கை பற்றி இழுக்க, அடுத்த நிமிடம் அவள் வசீகரனின் கரங்களுக்குள் பிடிபட்டிருந்தாள். இந்த எதிர்பாராத, அவனது திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்தவள், அவன் கரங்களுக்குள் இருந்து வெளிவர முயற்சித்தாள். அந்த சிறிய பெண்ணின், மருண்ட விழிகளும், நடுங்கும் இதழ்களும், இறுக்க மூடிய விரல்களும், வசீகரனின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. இவையெல்லாம் அவனுக்கு ஒரு மயக்கத்தை தந்தது. ஐஸ்வர்யா அவனை தள்ளி விட முயன்றும் ஒன்றும் பலிக்கவில்லை. பாவம்... அந்தப் பெண்ணால், அவனின் இரும்புக் கரங்களை அசைக்கக் கூட முடியவில்லை. அவளது கன்னங்களை நோக்கி குனிந்தவன், யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க, அவனின் இறுகிய பிடி லேசாக தளர்ந்தது. அந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதவளாய், அவனை பிடித்து தள்ளி விட்டு, கதவை திறக்க ஓடினாள் ஐஸ்வர்யா. சுவற்றில் மோதி, அவன் அப்படியே கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

ஐஸ்வர்யா கதவை திறக்க, ரத்னா நின்று கொண்டிருந்தார். மூச்சு வாங்கிக் கொண்டு, பதட்டமாக தெரிந்த ஐஸ்வர்யாவும், ஏமாற்றம் நிறைந்த வசீகரனின் முகமும் அவருக்கு சொல்லாத கதைகளைச் சொல்லின.

"நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணலன்னு நினைக்கிறேன்"
என ரத்னா கேட்க, இல்லை என்று தலையசைத்தாள் ஐஸ்வர்யா. ஆனால் வசீகரனோ, தனது கட்டை விரலை கீழ்பக்கமாக காட்ட, தனது சிரிப்பை அடக்க படாதபாடு பட்டார் ரத்னா.

"எங்க வீட்டு வழக்கப்படி, இன்னைக்கு, எங்க வீட்ல நீ அடுப்பை பத்த வச்சி, ஏதாவது சமைக்கணும். உங்க அம்மா ஃபோன் பண்ணியிருந்தாங்க. உன்னை, அங்க வர சொல்லியிருக்காங்க இன்னைக்கு."

சரி என்று தலையசைத்து, இது தான் சந்தர்ப்பம் என்று சமையலறையை நோக்கி ஓடினாள் ஐஸ்வர்யா.

"நேத்து தானே மா எங்களுக்கு கல்யாணம் ஆச்சு? இன்னைக்கு எதுக்காக அவங்க அம்மா வீட்டுக்கு போகணும்?" என்றான் வசீகரன்.

"நானும் தெரியாம தான் கேட்கிறேன், நேத்து தான் கல்யாணம் ஆச்சு. என்னமோ ரொம்ப நாள் ஆனா மாதிரியும், நீ இன்னும் ஒரு வருஷம் பிரிஞ்சு இருக்க போற மாதிரியும், ரொம்ப சீன் போடுற?" என கிண்டலடித்தார் ரத்னா.

"அதெல்லாம் ஒரு கணக்காமா?"

"அவங்க வீட்ல ஏதோ கன்னி பூஜை பண்றது வழக்கமாம். அதுக்காக அவளை வர சொல்லியிருக்காங்க"

"என்ன பூஜையோ" என்றான்.

"உன்னோட தூரத்தல் விளையாட்டுலயிருந்து, அவ கொஞ்சம் ரிலாக்ஸா இருந்துட்டு வரட்டும். நான் தான் பார்த்தேனே, இதுக்குள்ள நீ அந்த பொண்ண படுத்தி வச்ச பாட்டை. பாவம்... எப்படி பயந்து போயிருந்தா. நான் வரலனா, அழுதிருப்பா போல இருக்கு"

"என்னமா நீங்க, அவளை எங்கிட்ட இருந்து காப்பாத்தின ஹீரோயின் மாதிரி பேசுறீங்க?" என்றான் சிரிப்புடன்.

"நீ அவகிட்ட வில்லன் மாதிரி நடந்துக்காதன்னு சொல்றேன். அவ ஓடுறத பாத்தா, அவ நம்ம வீட்டுக்கு திரும்பி வர்றது சந்தேகம் தான்" என்றார் கிண்டலாக.

"அவ வராம போனா, யார் அவளை விட போறது?" என்றவன், சற்றே நிறுத்தி,

"வந்துடுவா இல்ல?" என்றான்.

களுக்கென்று சிரித்தவர்,

"கவலைப் படாத. சாயங்காலம் வந்துடுவா"

"தேங்க் காட்"

"உண்மையாவே , உன்னை இப்படி பாக்க, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஐஸ்வர்யாவுக்கு தான் நன்றி சொல்லணும். கடுகடு வசீகரனை, இந்த மாதிரி மாத்தின்னதுக்காக. சரி, நான் கீழ போறேன், அவளுக்கு ஹெல்ப் பண்றதுக்காக. நீ அவளுக்கு ஏதாவது ஒரு கிஃப்ட் வாங்கிட்டு வந்துடு"

"எதுக்கு மா?"

"இது நம்ம வீட்டு வழக்கம், புது மருமகளுக்கு, முதல் நாள் சமைக்கும் போது, ஏதாவது பரிசு கொடுக்கணும்"

"ஓகே"

"சொன்னது ஞாபகம் இருக்கட்டும். முதல் கோணல், முற்றும் கோணல். அவகிட்ட நல்ல பேர் எடுக்க பாரு. உன்னை பார்த்து, அவ பயந்து ஓடுறா மாதிரி பண்ணாத."

"நான் அப்படி எல்லாம் எதுவும் செய்யல மா. அவ என்கிட்ட பேச கூட ரொம்ப வெட்கப்படுறா. என் வைஃப் கிட்ட பேச முயற்சி பண்றது தப்பா?"

"எப்படி முயற்சி பண்ண? விட்டா போதும்னு ஓடுற அளவுக்கா...? முதல்ல அவ நம்ம கூட கலந்து பழகட்டும். அதுக்கப்புறம் எல்லாம் தானாவே சரியாயிடும்"

சரி என தலையசைத்தான் வசீகரன்.

......
மிக அருமையான கைப்பக்குவம் ஐஸ்வர்யாவிற்கு. அவளை ஒரு சம்பிரதாயத்திற்கு தான் சமைக்க சொன்னார் ரத்னா. ஆனால், ஐஸ்வர்யாவோ, அனைத்தையும், தான் ஒருத்தியாகவே சமைத்திருந்தாள். மறுபடி அவர்களின் அறைக்கு செல்லாமல் இருக்க அவள் கையாண்ட தந்திரம் தான் இது. அவளுடைய கணவனை நினைத்த போதெல்லாம் அவளுக்கு பதட்டமாக இருந்தது. மறுபடி அவள் அறைக்கு செல்ல அவளுக்கு தைரியமே வரவில்லை. அதனால், சமையலறையில் இருக்க கிடைத்த சாக்கை பயன்படுத்திக் கொண்டாள்.

உணவு மேசையில் அனைத்தையும் கொண்டு வந்து வைக்க, அவளுக்கு ரத்னா உதவிக் கொண்டிருந்தார். அவளுக்கு ஐஸ்வர்யாவின் நிதானம் மிகவும் பிடித்திருந்தது. ஐஸ்வர்யா அவள் சமைத்திருந்த பாதாம் அல்வாவை அனைவருக்கும் பரிமாறினாள்.

"வசிக்கு பாதாம் அல்வா ரொம்ப பிடிக்கும்" என்றாள் ரத்னா.

"ராமு அண்ணா சொன்னார் ஆன்ட்டி" என்று கூறிவிட்டு எதேச்சையாக வசீகரனை பார்த்தவள், அவன் சிரித்துக் கொண்டே அவளை பார்த்து கண்ணடிக்க, சட்டென்று குணிந்து கொண்டாள் ஐஸ்வர்யா.

அவனது சேட்டையை பார்த்து அரவிந்தனும், ரத்னாவும் உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டார்கள். அவர்கள் உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். தனது மகன், திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த போது, அவர்கள், அவனை நினைத்து மிகவும் கவலை அடைந்திருந்தார்கள். இன்று, அவன் தன் மனைவியிடம் காட்டும் ஈடுபாடு அவர்களுக்கும் ஒரு நம்பிக்கையைத் தந்தது.

அரவிந்தன், ஐஸ்வர்யாவிற்கு ஒரு வாட்ச்சையும், ரத்னா அவர்களுடைய குடும்ப வலையல்களையும் பரிசாக அளித்தார்கள். அவர்களின் கால்களில் விழுந்து நமஸ்கரித்து கொண்டாள் ஐஸ்வர்யா.

அவள் முன் வந்த வசீகரன், ஒரு சிறிய டப்பாவை அவள் முன் நீட்டினான்.

"அதுல என்ன இருக்கு? ஏதாவது ஸ்பெஷலா? என்றார் அரவிந்தன்.

அதை ஐஸ்வர்யா திறக்க, அதில் வி என்ற இனிஷியலுடன் ஒரு தங்க சங்கிலி இருந்தது.

"வசீகரனா, கொக்கா? பாரு, அவன் பேரை நச்சுன்னு பட்டா பண்ணிட்டான்" என்றார் அரவிந்தன் சிரித்தபடி.

"ஐஸ்வர்யாவுக்கு, அதை நீயே போட்டு விடு" என்றாள் ரத்னா.

தாய் சொல்லை தட்டாத பிள்ளை போல, அதை அழகாக ஐஸ்வர்யாவின் கழுத்தில் அணிவித்தான் வசீகரன். அவள் காதுகளில் ரகசியமாய் கூறிய படி,

"இத நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல உனக்கு கொடுக்கணும்னு நெனச்சேன்"

விழிகளை விரித்து ஐஸ்வர்யா அவனைப் பார்க்க, ஏதோ இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவன் போல, தன் இதழ்களை குவித்து முத்தமிடுவதைப் போல சமிக்ஞை செய்தான் வசிகிரன். அது அவளை மேலும் பதட்டமாக்கியது.

"வசி, ஐஸ்வர்யாவை அவங்க அம்மா வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு வா"

என ரத்னா சொல்ல. ஐஸ்வர்யாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

கடவுளே இந்த குறும்புக்கார மனுஷன் கூடவா போகணும்? என கண்களை மூடி முறையிட்டாள் ஐஸ்வர்யா.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top