15 திட்டம் தோல்வி
15 திட்டம் தோல்வி
அந்த மோசமான தாக்குதலுக்கு பிறகு, வசீகரன் ஐஸ்வர்யாவை பார்க்கவில்லை. அவள் ஸ்கெட்ச் ரூமிலேயே தவமாக கிடந்தாள். அவனால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள், அவள் இதயத்தில் ஏற்படுத்தியிருந்த மிகப்பெரிய தாக்குதல், அவன் முகத்தை பார்க்கும் தைரியத்தை அவளுக்கு அளிக்கவில்லை. அதை பற்றி நினைக்கும் போதெல்லாம், அவள் உடலில் ஆயிரம் மின்னல் பாய்வதைப் போல அவள் உணர்ந்தாள்.
அவள் அறிந்திருக்கவில்லை, தன்னுடைய பெயரே தன்னை இந்த அளவிற்கு பலவீனமடையச் செய்ய முடியும் என்பதை. அவள் இன்னொன்றையும் அறிந்திருந்தாள். இது எல்லோருக்கும் சாத்தியமில்லை, அதை உச்சரித்தவனும், உச்சரிக்கப்பட்ட விதமும் தான் காரணம். அதிலிருந்து அவள் வெளிவர எவ்வளவு முயன்றும் அவளால் அது இயலவில்லை. அவளுக்கு எந்த வேலையும் ஓடவில்லை.
அவனுடைய குழைந்த குரலும், முகபாவனையும், கூறிய விதமும், கடவுளே.... சில வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலமாக ஒருவரை இவ்வளவு பலவீனமடைய செய்ய முடியுமா? நினைத்த போதே அவளுக்கு உடல் நடுங்கியது.
அவளுடைய சூடேறிப் போன மூளையை குளிர்விக்க, அவளுக்கு ஒரு சூடான காபி தேவைப்பட்டது. கேன்டீனுக்கு சென்று, தானாகவே காபி மேக்கரில் இருந்து ஒரு குவளை காபியை எடுத்துக் கொண்டு வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு மெதுவாக அதை பருகினாள். அங்கிருந்த சிலர், அதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள். அவள் எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படுவாள், காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டிருப்பது போல. ஐஸ்வர்யாவும் அவர்களுடைய பார்வையை உணர்ந்தாள். ஆனால், அதிலெல்லாம் இப்போது அவளின் கவனம் செல்லவில்லை. அவர்கள் ஏதாவது நினைத்துக் கொண்டு போகட்டும் என்பது போல அமர்ந்திருந்தாள்.
ஆனால், அவளுக்கு தெரியவில்லை, அங்கிருந்தவர்களை தவிர, வேறு ஒருவனும் அவளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் என்பது. அவள் அமைதியாக அமர்ந்து காபி குடிப்பதை பார்த்த போது வசீகரனிற்கு நிம்மதியாக இருந்தது. திருப்தியான புன்னகை அவன் முகத்தில் தவழ்ந்தது. ஐஸ்வர்யாவை சில வார்த்தைகளாலேயே இந்த அளவிற்கு வலுவிழக்க செய்ய முடியும் என்பது, அவனும் கூட எதிர்பாராத ஒன்று தான். தன்னை நினைத்து தானே பெருமைப்பட்டுக் கொண்டான். நடப்பதை பார்க்கும் பொழுது அவளை வழிக்குக் கொண்டு வருவது ஒன்றும் பிரம்மப் பிரயத்தனமாக இருக்காது என்று நினைத்தான்.
அவனைப் பொருத்தவரை அது மிகப் பெரிய வெற்றி. ஐஸ்வர்யாவை பலவீனமாக்குவது என்பது அவ்வளவு ஒன்றும் சாதாரண விஷயமில்லை. அவளுடைய மனதில் இருக்கும் எண்ண ஓட்டங்களை, அவள் எப்பொழுதும் வெளிப்படுத்தியது கிடையாது. இன்று, முதன் முதலாக, அவளுடைய கட்டுப்பாடு கை மீறி போனதை அவன் அறிந்திருந்தான்.
இதற்கிடையில்,
ஐஸ்வர்யாவிடம் அவளுடைய, விடுப்பு கடிதத்தை பியூன் கொண்டு வந்து கொடுக்க, அதை பிடுங்கி அவசர அவசரமாக பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வசீகரன் அவளுக்கு விடுப்பு அளித்து கையொப்பமிட்டு இருந்தான்.
ஐஸ்வர்யாவால் அதை நம்பவே முடியவில்லை. ஒரு வாரத்திற்கு தனக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. ஆனால் எப்படி? அவளுடைய கணவன் அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாதவனாக இருக்கிறான். ஒருவேளை, தான் செய்த செயலுக்காக அவன் வருந்துகிறானோ? எப்படியோ, அவன் ஒருவழியாக கையொபமிட்டு விட்டான். அவள் நிம்மதி பெருமூச்சுவிட்டாள். அவள் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.
அவளுக்கு தெரியும், அவள் மனதில் அவள் வரைந்து வைத்திருந்த திட்டத்தை செயல்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஒரு மருமகளாகவும், மனைவியாகவும், அவளால் அதை செய்துவிட முடியும். ஆனால், ஏஆர்வி இல் பணிபுரியும் ஐஸ்வர்யாவாக அதை செய்வது என்பது சாத்தியமில்லை. அவளுடைய "பாஸ்" வசீகரன், அதற்கு விடமாட்டான். அதற்கு அவள் பத்து லட்சத்தை திரட்டி ஆகவேண்டும். அவளுடைய முகம் பளிச்சிட்டது. இருக்கவே இருக்கிறது அவளுடைய நகைகள். யார் அவளை கேள்வி கேட்கப் போகிறது? அதை விற்று பத்து லட்சத்தை கொடுத்து விட முடியாதா என்ன? அவள் மீண்டும் நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
மனதில் நினைத்துக் கொண்டாள், "நான் யார் என்பதை நீங்க பார்க்க போறீங்க. இப்ப நான் பார்க்கிறேன், நீங்க என்னை எப்படி தடுக்குறீங்கன்னு"
தான் அடையாத வெற்றியை நினைத்து சந்தோஷப்பட்டாள் ஐஸ்வர்யா.
மாலை
தனக்காக வசீகரன் காத்துக் கொண்டிருப்பதை பார்த்து, தனது கைப்பையை எடுத்துக்கொண்டு, அவன் முகத்தை பார்க்காமல் அவனை பின்தொடர்ந்தாள். காலையில் நடந்தவற்றை நினைத்து பார்க்க அவள் தயாராக இல்லை தான், ஆனால் அவள் கணவனை பார்த்த போது, அவள் மனதில் தோன்றிய எண்ணங்களை, அவளால் தடுத்து நிறுத்த இயலவில்லை. அவனுடைய ஒரு புன்னகையே போதும், அனைத்தையும் அவளுக்கு நினைவுபடுத்திவிட.
வசீகரனும் அவளை மேலும் எந்த தொல்லையும் செய்ய விரும்பாதவனாய், அமைதி காத்தான். இன்றைய *கோட்டா* ஏற்கனவே அதிகமாகிவிட்டது.
வரப்போகும் நாட்களை, தன் அம்மாவுடனும் அண்ணியுடனும் எப்படி ஆனந்தமாக கழிப்பது என்று அவளுடைய மனதில் பெரிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. இளவரசன் இல்லத்தை நெருங்கியவுடன், ஐஸ்வர்யாவின் பையை எடுத்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்து உள்ளே வந்தான் வசீகரன்.
அவர்களைப் பார்த்தவுடன், மீனாட்சிக்கும், நிலாவிற்கும் சந்தோஷம் பெருக்கெடுத்தது. அவர்களின் வருகையை பற்றி, ஏற்கனவே ரத்னா அவர்களுக்கு தெரிவித்திருந்தார். வழக்கமான உபசரிப்பு மீனாக்ஷியால் தேனீருடன் ஆரம்பிக்கப்பட்டது.
வசீகரன் அவர்களுடன் சகஜமாக உரையாடலைத் தொடங்கினான், எந்த ஒரு தயக்கமும் இன்றி. மீனாட்சிக்கும், நிலாவிற்கும், அவன் அவர்களுடன் அப்படி பேச தொடங்கிய போதே அவனை மிகவும் பிடித்துப் போனது. சிறிது நேரத்திலேயே அவன் அவர்களுடைய விருப்பு-வெறுப்பு அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டான். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர்கள் இருவரும் ஐஸ்வர்யாவை கண்டுகொள்ளவே இல்லை. வசீகரன் தான், அவளை வலுக்கட்டாயமாக தங்கள் பேச்சுக்குள் இழுத்து கொண்டிருந்தான்.
"ஐஸ்வர்யா, உன்னுடைய ரூமை வசீகரனுக்கு காட்டலயா?" என்று கேட்டாள் நிலா.
அதைக் கேட்ட போது ஐஸ்வர்யாவிற்கு "ஐயோ" என்றிருந்தது. இந்த மனிதன் கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, ஊடலாடி விடுவானே என்பது தான் அவளுடைய கவலை.
ஆனால், அவள் அதை எல்லாம் யோசித்து முடிப்பதற்கு முன், ஐஸ்வர்யாவின் பையை கையில் எடுத்துக் கொண்டு "போகலாமா?" என்பது போல, அவளை ஒரு பார்வை பார்த்தான் வசீகரன், தனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை நழுவ விட விரும்பாதவனாய்.
வேறு வழியின்றி முன்னே சென்றாள் ஐஸ்வர்யா. அவளுடைய பையை எடுத்துக் கொண்டு, அவளை பின் தொடர்ந்தான் வசீகரன். அவளுடைய அறைக்குள் நுழைந்த பொழுது, ஐஸ்வர்யா குழப்பத்தால் முகம் சுளித்தாள் அங்கு ஏற்கனவே வேறு ஒரு பை வைக்கப்பட்டிருப்பதை பார்த்த போது.
"இது யாருடைய பேக்?" என்றாள் ஐஸ்வர்யா.
"என்னோடது தான்" என்றான் சாதாரணமாக.
"என்ன? உங்களோடதா? ஆனா, இது எதுக்கு இங்க இருக்கு?" என்றாள்.
"என்ன கேக்குற நீ? நான் வேணா உனக்கு *ஆதாமாய்* இருக்கலாம், ஆனா, அதுக்காக வெறும் இலையும், தழையும் கட்டிக்கிட்டு என் மாமியார் வீட்ல நான் இருக்க முடியாதுல்ல?" என்றான் கிண்டலாக.
"நான் அதைப் பத்தி கேட்கல. எதுக்காக உங்க பையை இங்கே எடுத்துட்டு வந்திருக்கீங்க?"
"நான் இங்க தங்கும் போது, எனக்கு என்னோட திங்ஸ் தேவைப்படாதா?" என்றான்.
அவனை விழி விரிய அதிர்ச்சியாக பார்த்தவள்,
"என்ன? நீங்க இங்க தங்க போறிங்களா?" என்றாள்.
"ஆமா, உன் கூட நான் இங்க தான் தங்க போறேன்" என்றான்.
"என்னை ஃபாலோ பண்றத தவிர உங்களுக்கு வேற வேலையே இல்லையா?" என்றாள்.
"என் பொண்டாட்டிய ஃபாலோ பண்றதை விட, எனக்கு வேற என்ன முக்கியமான வேலை இருந்துட போகுது? நீ என்னை மிஸ் பண்ண மாட்ட, ஆனா, நான் என் ஒய்ஃபை நிச்சயமா ரொம்ப மிஸ் பண்ணுவேன். அதனால தான், இங்க வந்துட்டேன். சீதை இருக்கும் இடத்துல தானே ராமனும் இருக்கணும்?" என்றான் ஏதோ மேலே மிதப்பது போல.
"நீங்க இங்க இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்றாள்.
"ஆனா, என் மாமியாருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"
"நான் எங்க அம்மா கூட இருக்கணும்னு தான் இங்க வந்தேன்"
"உன்னை யாரு தடுக்கப் போறா? நீ உங்க அம்மா, அண்ணி கூட சந்தோஷமா இரு. நான் என் பொண்டாட்டி கூட இருக்கேன். அவ்வளவு தானே. உனக்கு என்ன தெரியும், என் மாமியார் எந்த அளவுக்கு வருந்தி வருந்தி என்னை கூப்பிட்டாங்கன்னு? அவங்க மனச நான் எப்படி கஷ்டப் படுத்த முடியும்? உங்க அம்மாவ உன்னால பிரிஞ்சு இருக்க முடியலன்னு நீ இங்க வந்த. என் பொண்டாட்டியைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாதுன்னு நான் வந்தேன். இப்ப நம்ம ரெண்டு பேருடைய பிரச்சனையும் முடிஞ்சுது" என்றான்.
"அவங்க கூப்பிடா நீங்க மறுக்க வேண்டியது தானே?"
"நான் ஏன் மறுக்கணும்? நான் உன் கூட இருக்கணும்னு தானே நினைக்கிறேன்?"
"என்னை கொஞ்ச நாள் கூட நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?
"நிச்சயமா... அது உண்மையிலேயே *கொஞ்ச நாளுக்காக* மட்டும் இருந்தா.... உன்னை தனியா இருக்கவிடுறதுல, எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல" என்று அவளை குத்திட்ட பார்வை பார்த்து நின்றான்.
மென்று விழுங்கியவள், தனது பார்வையை சட்டென்று திருப்பிக்கொண்டாள். அவளுடைய திட்டம் அவனுக்கு தெரிந்து விட்டதா என்ன?
"என்ன அமைதியாயிட்ட? நீ தான் ரொம்ப பேசுவியே? இப்ப என்ன ஆச்சு?"
அவள் கையை பற்றி தன் பக்கமாக இழுத்தான்.
"என்கிட்ட இருந்து ஓடுறது பிரச்சினைக்குத் தீர்வாகாது. ஓடுறதை நிறுத்து. எந்த அளவுக்கு நீ என்கிட்ட இருந்து விலகணும்னு நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு நான் உன்கிட்ட நெருங்கிகிட்டே இருப்பேன். அதே நேரம், என்னுடைய சைடு வலுவாகிகிட்டே போகும்னு மறந்துடாத. என்னுடைய பக்கத்தை வலுப்படுத்துறது நீ தான். உன்னுடைய இந்த குழந்தைத்தனமான நாடகத்தால என்ன நடந்துன்னு பாத்தியா? இங்க நான் தங்கினதுக்கு அப்பறம், என்னை நல்லா புரிஞ்சிகிட்டதுக்கு அப்புறம், என்னை பிரியனும்ங்குற உன்னோட முடிவை, உங்கம்மா ஏத்துக்குவாங்கன்னு நினைக்கிறியா? நிச்சயமா இல்ல. அவங்களை கவர, நான் என் கேரக்டரை மிகைப்படுத்தி காட்ட வேண்டிய அவசியமே இல்ல. நான் நானா இருந்தாலே அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சுடும். அது உனக்கும் தெரியும். அதனால, எதுவா இருந்தாலும் யோசிச்சு செய்"
அவன் சொல்வது உண்மை தான். யோசிக்காமல், அவள் அவனுக்கு தன்னை நிரூபித்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது மறுக்க முடியாத உண்மை. தன்னுடைய திட்டம் தனக்கு எதிராக திரும்பி விட்டதை நினைத்து தொப்பென கட்டில் மீது அமர்ந்தாள் ஐஸ்வர்யா.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top