14 திட்டம்
14 திட்டம்
மீனாட்சியின் புகைப்படத்தை தன் கையில் வைத்துக் கொண்டு, அவளுடைய அறையில் அமர்ந்திருந்தாள் ஐஸ்வர்யா. அந்தப் பக்கமாக சென்ற ரத்னா, அதை பார்த்து அவளுடைய அறையினுள் நுழைந்தார். ரத்னாவை பார்த்ததும் தன் கண்களை துடைத்துக் கொண்டாள் ஐஸ்வர்யா. ரத்னா அவள் கண்ணத்தை தொட்டு, அங்கு ஈரத்தை கண்டார். அவள் கையிலிருந்த புகைப்படத்தை வாங்கி பார்த்த பொழுது, அது மீனாட்சியின் புகைப்படம்.
"உங்க அம்மாவ நீ ரொம்ப மிஸ் பண்ற இல்ல?" என்றார்.
"நான் எங்க அம்மாவை, ஒரு நாள் கூட பிரிஞ்சி இருந்ததே இல்ல. இது தான் முதல் முறை, இவ்வளவு நாளா நான் அவங்களை விட்டுட்டு இருக்கிறது"
"ஒவ்வொரு பெண்ணோட வாழ்க்கையிலும் இதெல்லாம் தவிர்க்க முடியாதது. உன்னுடைய கண்ணீர் எதையுமே மாத்திட போறது இல்ல. நீ அதை புரிஞ்சுக்கணும். ஆனா, நீ அதை பத்தி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. நான் வசிகிட்ட பேசுறேன். உன்னை, உங்க அம்மா வீட்டுக்கு அனுப்ப சொல்றேன். சரியா?"
"நெஜமாவா? அவர் என்னை அனுப்ப ஒத்துக்குவாரா?"
"ஒத்துக்குவான். நான் அவனை ஒத்துக்க வைக்கிறேன்"
"தேங்க்யூ சோ மச் ஆன்ட்டி. நீங்க ஒரு ஸ்வீட் ஹார்ட்" என்றாள்.
"என் மருமக அழறதைப் பார்க்க எனக்கு பிடிக்காது. அதை நீ மறக்க கூடாது"
சரி என்று தலையசைத்தாள் ஐஸ்வர்யா சந்தோஷமாக. ரத்னா அங்கிருந்து வசீகரனை நோக்கிச் சென்றார். அவன் அரவிந்தனுடன் ஸ்டடி ரூமில் ஏதோ முக்கியமாக விவாதித்துக் கொண்டிருந்தான்.
ஐஸ்வர்யாவிற்கு தன் திட்டம் பலித்து போனதில் மிக்க சந்தோஷம். அவள் கணவனிடம் இருந்து சற்றே விலகியிருக்க வேண்டுமமென்று அவள் நினைத்தது நடக்கப் போகிறது. வசீகரன், அவன் அம்மாவின் பேச்சை தட்ட போவதில்லை. இங்கிருந்து சென்றுவிட்டால் போதும், அதன் பிறகு அங்கேயே தங்குவதற்கு ஏதாவது ஒரு சாக்கை தேடிக் கொள்ளலாம். அவள், தனது சாமர்த்தியத்தை நினைத்து, தானே பெருமைப்பட்டுக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து
அவர்களுடைய அறைக்குள் நுழைந்த வசீகரன் கலக்கத்துடன் காணப்பட்டான். அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்த பொழுது, அவனிடம் ரத்னா பேசிவிட்டார் என்பதை ஊகித்துக் கொண்டாள் ஐஸ்வர்யா. அங்கு வந்த ரத்னாவும் கலக்கத்துடன் காணப்பட்டார்.
"ஐஸ்வர்யா, ஒரு வாரத்துக்கு தேவையான உன்னுடைய துணிமணி எல்லாம் பேக் பண்ணிக்க. நாளைக்கு ஆஃபீஸ் முடிஞ்சதும், அங்கிருந்து அப்படியே நீ உங்க அம்மா வீட்டுக்கு போகலாம்" என்றார்.
ஓடிச்சென்று அவரை கட்டிக் கொண்டாள் ஐஸ்வர்யா.
"தேங்க்யூ சோ மச், ஆன்ட்டி" என்றாள் வசீகரனை பார்த்தபடி. அவன் தனது முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டான். அவன் அவளிடம் பேசவுமில்லை, அவளை பார்க்கவும் இல்லை. அது ஏதோ வித்தியாசமாக பட்டது ஐஸ்வர்யாவிற்கு.
முதன் முறையாக ஐஸ்வர்யா அந்த வீட்டில் தனிமையை உணர்ந்தாள், அதே கட்டிலில் அவள் கணவன் படுத்திருந்த போதும்...! தொனதொனவென்று, விடாமல் பேசிக்கொண்டே இருந்த ஒருவனின் மௌனம், இந்த அளவு பாதிக்குமா? ஆனால், இப்பொழுது அவள் அதைப் பற்றி கவலைப்பட தயாராக இல்லை. அவள் இங்கிருந்து போகப் போவதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்தாள்... அவள் அம்மா வீட்டிற்கு... அவள் கணவனை விட்டு பிரிந்து...!
அடுத்த நாள்
இன்றும் வசீகரனின் நடவடிக்கைகளில் எந்த வித்தியாசமும் இல்லை. அவன் இறுக்கமாக காணப்பட்டான். அவன் ரத்னாவுடன் பேச மறுத்த பொழுது ஐஸ்வர்யாவிற்கு கவலையாக இருந்தது. அவனிடம் விவாதம் செய்து தான் ரத்னா தனக்கு இந்த அனுமதியை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
"சாரி ஆன்ட்டி. என்னால தான் அவர் உங்ககிட்ட பேச மாட்டேங்கிறார்" என்றாள்.
"அதெல்லாம் சரியா போயிடும். சில நேரங்கள்ல, அவன் இப்படித் தான், சின்ன குழந்தை மாதிரி நடந்துக்குவான். ஏதோ, அவனுக்கு பிடிச்ச பொம்மைய, அவன்கிட்ட இருந்து நான் பிடுங்கிட்டா மாதிரி."
சற்றே நிறுத்தியவர்...
"நெஜமாவே, நான் அவனுக்கு பிடிச்ச பொம்மைய அவன்கிட்ட இருந்து பிடுங்கிட்டேன்னு நினைக்கிறேன்... நான் உன்னை தான் சொல்றேன்" என்று கூறி சிரித்தார்.
"அவன் உன்னை ரொம்ப நேசிக்கிறான். அதனால தான், இந்த சின்ன பிரிவை கூட அவனால தாங்க முடியல. நீ திரும்பி வரும் போது, அவன் பழையபடி சகஜமா மாறிடுவான். அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல" என்றார்.
ரத்னாவை ஏமாற்றுகிறோம் என்று எண்ணிய போது, ஐஸ்வர்யாவிற்கு உறுத்தலாக இருந்தது. அவள் ரத்னாவை கட்டி அணைத்துக் கொண்டாள். இது அவளை அமைதி படுத்துவதற்காக அல்ல. ரத்னவை நேரடியாக எதிர்கொள்ள அவளால் முடியவில்லை என்பதற்காக.
"இது என்ன, சைக்கலாஜிக்கல் ஹக்கா?" என்று சிரித்த ரத்னா,
"சந்தோஷமா இரு. எனக்கு என் மருமக அழறதை பார்க்க பிடிக்கல. வசீகரனை பத்தி நீ கவலைப்படாதே. அவனை நான் பார்த்துக்கிறேன்" என்றார்.
சட்டென்று ஒரு வினோதமான எண்ணம் ஐஸ்வர்யாவின் மனதை ஆட்கொண்டது. விவாகரத்திற்கு பிறகும் கூட, அவள் ரத்னாவுடனான தனது உறவை தொடர முடியாதா? இப்படி ஒரு சுயநலமற்ற, தாய்மை உள்ளம் கொண்ட மாமியார் கிடைப்பது நிச்சயம் குதிரைக்கொம்பு தான். மீனாட்சியும், நிலாவும் ஒரு நல்ல பிணைப்புடன் இருந்ததை அவள் பார்த்திருக்கிறாள். ஆனால், மீனாட்சிக்கு நிலாவின் மீது இருந்தது வெறும் அன்பு மட்டும் அல்ல, அது ஒரு பரிதாப உணர்ச்சி என்பதை ஐஸ்வர்யா அறிந்திருந்தாள். ஆனால், ரத்னாவின் தூய்மையான அன்பில் அப்படி எந்த ஒரு காரணமும் மறைந்திருக்கவில்லை. ரத்னாவிடம் தனக்கு உள்ள உறவை இழக்க அவள் மனம் பதைபதைத்தது. ஏனென்றால், ஐஸ்வர்யா பெண்களின் அன்பை உத்தமமாக நினைத்தவள்.
......
அலுவலகம் செல்லும் வழியில் கூட, வசீகரன் ஒரு முறை கூட ஐஸ்வர்யாவின் பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை. அது அவள் மனதிற்கு ஏதோ செய்தது. நேரடியாக தனது அறைக்குள் சென்று அவன் வழக்கம் போல சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொண்டு, தனது வேலையை தொடங்கினான்.
சிறிது நேரம் கழித்து,
தனது அறையின் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நிமிர்ந்தான் வசீகரன். அங்கு ஐஸ்வர்யா நிற்பதை பார்த்த பொழுது, அவனுக்கு ஆச்சரியமாய் போனது. ஏனெனில், அவள் அவன் அறைக்குள் நுழைய இதுவரை துணிந்ததில்லை. மற்றவர்களைப் பொருத்தவரை அவனுடைய அறை, ஒரு மேனேஜின் டைரக்டரின் அறை. ஆனால் ஐஸ்வர்யாவிற்கு, அது அனகோண்டாவின் வாயில் நுழைவதற்கு சமம். அவள் உள்ளே சென்றால், வசீகரன் அவளை நிச்சயம் விழுங்கி விடுவான். ஆனால் இன்று, அவளுக்கு வேறு வழியில்லை. அவள் உள்ளே சென்று தான் ஆக வேண்டும். வசீகரனுடைய "மூட் ஆஃப்" அவளுக்கு துணை புரியும் என்று அவள் நம்பி உள்ளே நுழைந்தாள். அவள் ஒரு மடிக்கப்பட்ட காகிதத்தை வசீகரனை நோக்கி நீட்டிய போது, அவன், முகம் சுளித்து, குழப்பத்துடன் அதை அவள் கையில் இருந்து வாங்கி பிரித்து படித்தான். அவனுடைய முகபாவம் ஒரு நொடியில் மாறிப் போனது. தனது நாற்காலியை விட்டு எழுந்தான்.
"நீ ஆஃபீஸுக்கு வர்றதைக் கூட விரும்பலயா?"
"இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம், எனக்கு மறுபடி கிடைக்குமான்னு தெரியல. அதை நான் முழுமையா அனுபவிக்க நினைக்கிறேன். அதனால எனக்கு ஒரு வாரம் லீவு கொடுங்க" என்றாள் தலையை குனிந்தவாறு.
அவள் கரத்தை பற்றி தன்னை நோக்கி இழுத்து,
"நீ என்னை மிஸ் பண்ண மாட்டியா?" என்றான் வலி நிறைந்த பார்வையுடன்.
"நான், இங்க என்னோட லீவை கேக்கத் தான் வந்தேன்" என்றாள் அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல்.
அவளைத் தன் கையிலிருந்து விடுவித்து,
"நான் லீவ் கொடுக்கலைன்னா என்ன செய்வ?" என்றான்.
"என்னுடைய வேலையை ராஜினாமா செய்வேன்" என்று கூறி, அவனுக்குள் தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிவிட்டாள் ஐஸ்வர்யா.
"அது உன்னால முடியாது. நீ இந்த கம்பெனியோட அக்ரீமெண்ட் சைன் பண்ணியிருக்க. அடுத்த ஆறு மாசம், நீ இங்க வேலை செஞ்சு தான் ஆகணும். இல்லனா இந்த கம்பெனிக்கு நீ பத்து லட்சம் குடுக்கணும்" என்றான்.
"என்னது, பத்து லட்சமா?" என்றாள் அதிர்ச்சியுடன்.
ஆமாம் என்று தலையசைத்தான் வசீகரன்.
"இங்க வேலை செய்ற எல்லாருக்கும் இது தான் ரூளா?"
"நிச்சயமா இல்ல... உனக்கு மட்டும் தான்..." என்றான் ஒரு கள்ள புன்னகையை உதிர்த்து.
"இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்ல" என்றாள்.
"கல்யாணமாகி மூணாவது நாளே விவாகரத்து வேணும்னு கேட்கிறது மட்டும் ரொம்ப நியாயமா? பத்து லட்சத்தை கொடுத்துட்டு வேலையை விட்டுட்டு நீ போகலாம். எனக்கு தெரியும், நிச்சயமா நீ உங்க அப்பாகிட்டயோ அண்ணன்கிட்டயோ அந்த பணத்தை கேட்க மாட்ட. ஒருவேளை நீ என்கிட்ட ஹெல்ப் கேட்டா, நான் வேணா செய்றேன்" என்றான்.
"அது நிச்சயம் நடக்காது" என்றாள்.
"சரி, உன்னோட "பாஸா" நீ என்கிட்ட எதுவும் கேட்க வேண்டாம். ஆனா ஹஸ்பெண்ட்டா, நிச்சயமா உனக்கு என்னால ஹெல்ப் பண்ண முடியும்"
"என்ன?" என்பது போல் அவனை ஆவலுடன் பார்த்தாள் ஐஸ்வர்யா.
"எனக்கு ஒரு முத்தம் கொடுத்தா, ஒரு வாரம் லீவு தரேன்" என்றான்.
"என்னது?" என்றாள் அதிர்ச்சியாக.
தன் உதட்டின் மீது கையை வைத்து,
"கிஸ்" என்றான்.
"கிஸ் மை ஃபுட்" என்று காலை உதைத்தாள் ஐஸ்வர்யா.
"ஷ்யூர். கண்டிப்பா உன்னுடைய காலை நான் கிஸ் பண்ணுவேன். நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து......." என்று இழுத்து அவளைப் பார்த்து சிரித்தான்.
"உங்க அசிங்கம் பிடிச்ச பேச்சை நிறுத்துங்க" என்றாள்.
"அசிங்கமா? நம்ம ரெண்டு பேரும் வீட்ல இருக்கும் போது கண்டிப்பா உன் காலை நான் முத்தம் கொடுப்பேன்னு சொல்ல வந்தேன். நீ ஏன் எப்பவுமே நான் பேசுறது எல்லாத்தையும் ஸ்பெஷல்லா எடுத்துக்கிற?" என்றான்.
"ஸ்பெஷலா? உங்கள மாதிரி மோசமான மனுஷனோட புத்தியில மோசமான விஷயம் தான் வரும்" என்றாள்.
"நான் மோசமானவன் தான். ஒத்துக்குறேன். ஆனா, நீ தான் நல்ல பொண்ணாச்சே, உனக்கு ஏன் இதெல்லாம் தோணுது?" என்றான்.
"இந்த மாதிரி என்னை தொடர்ந்து டார்ச்சர் பண்ணிகிட்டு இருந்தீங்கன்னா, உங்கள நான் நிச்சயம் ஒரு நாள் கொல்லத் தான் போறேன்" என்றாள்.
அவளை தன்னருகில் இழுத்து பிடித்துக் கொண்டவன், தனது கண்களை மூடிக்கொண்டு குரலில் ஒரு குழைவை வெளிப்படுத்தி,
"கொல்லு.... நானும் சாகுறதுகாக தான் ஆவலா காத்திருக்கிறேன்... தினம் தினம்... கட்டில் மேல... உன்னோட பெயரை சொல்லிகிட்டு சாகணும்.... ஐஷுஉஉஉ..."
அவன் வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளை கேட்டு இறுக்கமாக தனது கண்களை மூடிக்கொண்டாள் ஐஸ்வர்யா.
அவள் உடலின் ரத்த ஓட்டமே நின்று விடும் போல் இருந்தது. அவளுடைய வெளுத்துப் போன முகம் அதற்கு ஒரு அத்தாட்சியாக இருந்தது. அவன் அணிந்திருந்த கோட்டை கெட்டியாக பற்றிக் கொண்டாள், ஒரு வித நடுக்கத்துடன். அவளுடைய முகம் வியர்த்துக் கொட்டியது. வசீகரன் அவனுடைய கோட் இறுகுவதை உணர்ந்து கண்ணை திறந்தான். அவளது அருகில், அவன் வரும் போதெல்லாம், அவள் தன் விரல்களை இறுக்கமாக மூடிக் கொள்வதை தான் வழக்கமாக செய்வாள், அவனை தொட்டு விடக்கூடாது என்பதற்காக. இது தான் முதல் முறை, அவள் அவனது கோட்டை இறுகப் பற்றியிருந்தது. வலுவிழந்த தனது கால்களால் நிற்க முடியாதவளுக்கு, அது தான் ஆதாரம் என்பது போல அவனுடைய கோட்டை இறுகப் பற்றியிருந்தாள் ஐஸ்வர்யா.
அவளுடைய நிலையை கண்ட வசீகரன், தன்னைத் தானே சபித்துக் கொண்டான். என்ன இருந்தாலும் அவன் எல்லை மீறி இருக்கக் கூடாது. என்ன தான் கணவன், மனைவி உறவுக்கு எல்லைகள் இல்லை என்றாலும், இவர்களுடைய கதை வித்தியாசமானது தானே?
அவளுடைய வியர்த்திருந்த கன்னத்தை, லேசாக தட்டி, அவளை சுய நிலைக்கு கொண்டுவர முயன்றான் வசீகரன்.
"ஐஷு..."
அவனை பிடித்து தள்ளி விட்டு, அவனது அறையிலிருந்து வெளியே ஓடினாள் ஐஸ்வர்யா. அவள் அனகோண்டாவின் வாயில் இருந்து வெளியேறி விட்டாள் தான்...! ஆனால், முழுவதும் விழுங்கப்பட்டவளாய்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top